Thursday, July 15, 2021

மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்!

 

‘புதுச்சேரி வரலாற்றுப் பேரவை’ சார்பில் இக்கோரிக்கை மனுவினைத் தங்களின் மேலான பார்வைக்கும் உரிய நடவடிக்கைக்கும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் ஆடித் திங்கள் திருவாதிரையில் பிறந்தான் என்பதைக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் சான்றுகளுடன் உறுதி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இராசேந்திரசோழன் ஆளுகைக்குட்பட்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய கங்கைகொண்டசோழபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட சிற்றூர்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து, சென்ற 2014ஆம் ஆண்டு இராசேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். ஊர்கூடி தேர் இழுப்பது போல் ஊர்கள் பலவற்றின் மக்கள் ஒன்றுகூடி மாமன்னன் இராசேந்திரசோழன் பெருமைகளை எடுத்துக்கூரும் வகையில் மாபெரும் விழா எடுத்து தமிழினத்திற்குப் பெருமை சேர்த்தனர்.

தற்போது எதிர்வரும் 05.08.2021 நாளன்று, ஆடித் திங்கள் திருவாதிரையில் மாமன்னன் இராசேந்திரசோழனின் பிறந்த நாள் வருகிறது. தொல்லியல், வரலாற்று உணர்வுகளை மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வளர்க்கவும் தமிழக அரசு சார்பில் “மாமன்னன் இராசேந்திரசோழனின் பிறந்த நாள் விழா” மிகச் சிறப்பாக நடத்த வேண்டுமென கங்கைகொண்டசோழபுரம் மற்றும் சுற்றியுள்ள சிற்றூர்புற மக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ள செய்தி அறிந்தோம்.

முடிகொண்டான், கங்கைகொண்டான், கடாரங்கொண்டான் போன்ற எண்ணற்ற விருதுகளைப் பெற்ற இராசேந்திரசோழனின் பெருமைகளை உலகறியும். கப்பற்படைக் கட்டி, கடல் கடந்து சென்று கடாரம் வென்றது தமிழனுக்கு ஆகச் சிறந்த வரலாற்றுப் பெருமையாகும். அறிவுக்கூர்மையுடன் ஆட்சிப் புரிந்த மாமன்னன் இராசேந்திரசோழன் புகழைப் போற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

புதுச்சேரிக்கும் சோழ ஆட்சிக்குமுள்ள தொடர்பு பாகூர் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. திருபுவனை அருகேயுள்ள குண்டாங்குழி மகாதேவர் ஆலயம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் சிறுவடிவம் (Miniature) என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். புதுச்சேரி அருகேயுள்ள மரக்காணம் சோழர் காலத்தில் துறைமுகமாக விளங்கியது. இராசேந்திரசோழனின் பிறந்த நாள் விழா நடத்துவது தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரிக்கும் பெருமையுடையதாகும்.

தமிழக முதலமைச்சராக இருந்த போது கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ் மாமன்னன் இராஜராஜசோழன் பெருமைகளைப் போற்றி விழா எடுத்து பெருமைப்படுத்தி வரலாற்றில் நிலைநிறுத்திக் கொண்டார். தாங்களும் இதேபோல் இராஜராஜசோழனின் மகனான இராசேந்திரசோழனின் பிறந்த நாள் விழா எடுத்து வரலாற்றில் இடம்பெற விழைகிறோம்.

எனவே, தாங்கள் இக்கோரிக்கையைப் பரிசீலித்து தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழனின் பிறந்த நாளைத் தமிழக அரசு சார்பில் அரசு விடுமுறை அளித்து மிகச் சிறப்பாகக் கொண்டாட உரிய நடவடிக்கை எடுத்திட ‘புதுச்சேரி வரலாற்றுப் பேரவை’ சார்பில் பேரன்புடன் வேண்டுகிறோம்.

இவண்,

கோ. சுகுமாரன், தலைவர், புதுச்சேரி வரலாற்றுப் பேரவை.

செயற்குழு உறுப்பினர்கள்:

முனைவர் நா. இளங்கோ, மேனாள் முதல்வர், தாகூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி.

பொறிஞர் இரா. தேவதாசு, தமிழ் வரலாற்று ஆர்வலர்.

ஓவியர் இராஜராஜன், மேனாள் பேராசிரியர், பாரதியார் பல்கலைக்கூடம்.

இரா. சுகுமாரன், கணினித் தமிழ் ஆர்வலர்.

சின்ன. சேகர், மேனாள் ஆசிரியர்.

புதுவைத் தமிழ்நெஞ்சன், தனித்தமிழ் ஆர்வலர்.

இரா. சுகன்யா, சமூக ஆர்வலர்.

No comments: