Sunday, June 03, 2007

புதுச்சேரி தேங்காய்த்திட்டில் அய்யா வே.ஆனைமுத்து






துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் தேங்காய்த்திட்டு மக்களை மார்க்சிய-பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் அய்யா வே.ஆனைமுத்து 26-05-2007 அன்று சந்தித்தார். முன்னதாக ஊர்பெரியவர்கள் திரண்டு அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்காக அரசு கையகப்படுத்தப்பட உள்ள பசுமையான விளைநிலங்களைப் பார்வையிட்டார். பிறகு பழைய மீன்பிடி துறைமுகத்தை சுற்றிப் பார்த்தார். உடன் இருந்த தேங்காய்த்திட்டு கவுன்சிலர் பாஸ்கரன் ஊர் பற்றிய விவரங்களை எடுத்துக் கூறினார். அனைத்துத் தகவல்களையும் தான் கொண்டுவந்த சுவடியில் குறித்துக் கொண்டார்.

போராடும் மக்களுக்கு ஆதரவு அளித்ததோடு அம்மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களின் முன்னோர்கள் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். அவருடைய உறவினர்கள் பலரது வீடுகளுக்கும் சென்று பழைய நினைவுகளை அசை போட்டார்.

தேங்காய்த்திட்டு சுயமரியாதைப் பாவலர் ’புதுவை முரசு’ இதழ் ஆசிரியர் இராமகிருட்டினர் இல்லத்திற்குச் சென்று அவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடைய நூற்றாண்டு விரைவில் வர உள்ளதால், அவ்விழாவைச் சிறப்பாக கொண்டாட வலியுறுத்தினார்.

பின்னர், முதுபெரும் தியாகி டி.கே.இராமாநுஜம் இல்லத்திற்குச் சென்றார். அவருடைய படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினார். தியாகி டி.கே.இராமாநுஜம் தீவிரக் பொதுவுடைமைவாதி். தலை சிறந்த தொழிற்சங்கவாதி. உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றில், நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் இவரை ’குறிப்பிடத் தகுந்த போராளி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

’துறைமுக விரிவாக்கத் திட்டம் மக்களுக்குத் தேவையற்றது, இது குறித்து முதல்வர் ந.ரங்கசாமியிடம் பேசுகிறேன், சிந்தனையாளன் இதழில் எழுதுகிறேன்’ என்று போராடும் மக்களுக்கு உறுதி கூறினார் அய்யா வே.ஆனைமுத்து.

மதிமுக பொறுப்பாளர் சடகோபன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, புதுவைக் குயில் பாசறை ச.ஆனந்தகுமார், த.செயமூர்த்தி, சிவகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

2 comments:

Unknown said...

தாத்தா ஆனைமுத்து அவர்கள் பற்றிய தங்கள் பதிவும் புகைப்படங்களும் மிக நன்று , அவர் எனது உறவினர் என்பதில் எனக்குப் பெருமை. எனது வீட்டின் எல்லா விழாக்களுக்கும் அவரே தலைமை வகிப்பார்

thamizharima said...

all ur works r good............ all d best......... can u add me in ur team......