Monday, February 04, 2008

தமிழ்மணத்திற்கு நன்றி: நிகழ்வுகளை நாள்தோறும் எழுதுவோம்...

தமிழ்மணம் என்னை “நட்சத்திர” பதிவராக தேர்வு செய்து, அதற்கான வாய்ப்பை அளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்மணம் என்னை எதற்காக “நட்சத்திர” பதிவராக தேர்வு செய்தது என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் வலைப்பதிவர்களையும், வலைப்பக்கங்களைப் படிப்பவர்களையும் நான் மிகவும் மதிப்பவன் என்ற அடிப்படையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நான் சார்ந்த மனித உரிமைத் தளத்தில் பெற்ற பட்டறிவை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற நினைக்கின்றேன். அதற்காகவே இந்த வாய்ப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.

களத்தில் பணியாற்றுபவர்கள் எழுதுவது என்பது மிகவும் குறைவு. விதிவிலக்காக ஓரிருவர் இருக்கலாம். குறிப்பாக சொல்லப்போனால், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களைச் சொல்லலாம். அவர் கொள்கைச் சார்ந்து நிறைய எழுதி இருந்தாலும், அவர் எழுத வேண்டியவை நிறைய உள்ளன. பெருந்தலைவர் காமராசர் அவர்களோடு அவருக்கு இருந்த உறவு பற்றி அவர் எழுத வேண்டிய செய்திகள் ஏராளம் உள்ளன. அவரோடு நான் பயணம் செய்யும் போது அவர் கூறும் பல்வேறு தகவல்கள் பலரும் அறிந்து கொள்ள வேண்டியவை. களத்தில் உடனுக்குடன் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் அவரால் நிறைய எழுத முடியாமல் உள்ளது. நல்ல எழுத்தாற்றல் உள்ள பழ.நெடுமாறன் அவர்கள் (அவரது உரைநடை பாணி மிகவும் கவனத்திற்குரியது. இதுபற்றி யாராவது ஆய்வு செய்யலாம். இதுபற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்) நிறைய எழுத வேண்டுமென அவரிடம் பல முறை முறையிட்டுள்ளோம்.

அடுத்து, மார்க்க்சிய-பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் வே.ஆனைமுத்து அவர்கள். தன் கட்சி சார்ந்தும், அவர் நடத்தும் இதழ்களிலும் நிறைய அறிவுப்பூர்வமாக எழுதிக் கொண்டிருப்பவர். அவர் தொகுத்த பெரியார் சிந்தனைகள் மூன்று தொகுதி நூல்கள் தான் இன்றைக்கும் தந்தை பெரியாரை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் ஆதாரமாக உள்ளன. தந்தை பெரியார் பேசியவை, எழுதியவை இன்னமும் முழுமையாக தொகுக்கப்படவில்லை. தற்போது ஆனைமுத்து அவர்கள் இதுவரை தொகுக்கப்படாதவற்றை தொகுப்பதாக தகவல். அதோடு பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. தந்தை பெரியார் எழுத்துக்களை தொகுக்கும் பணியே பெரிய பணியாக உள்ள போது பெரியார் பற்றி அவருடைய கருத்துக்களையும், பார்வையையும் எப்போது அவர் எழுதப் போகிறார் என்று தெரியவில்லை.

புலவர் கலியபெருமாள் வாழ்க்கை வரலாறான “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” புத்தகம் வந்த போது, பலரும் முன்வைத்த விமர்சனம். அது முழுமையான வரலாறாக வரவில்லை என்பதுதான். காரணம் அவர் முதுமை அடைந்து, போதிய நினைவு இல்லாத போது அவர் சொல்லச் சொல்ல தொகுத்தவை. அதில் பல செய்திகள் விடுபட்டுள்ளன. பல நிகழ்வுகள் இன்றைக்கும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எழுத முடியாதவையாக இருந்துள்ளன.

தினசரி பத்திரிகைகளில் எழுத வாய்ப்பிருந்தவர்கள் நிறைய எழுதியுள்ளனர். எடுத்துக்காட்டாக தந்தை பெரியார் விடுதலை, குடியரசு ஆகியவற்றிலும், கலைஞர் கருணாநிதி முரசொலியிலும் ஏராளமாக எழுதியுள்ளனர். அதனால்தான், பெரியார் எழுத்துக்களைத் தொகுக்க முடிந்தது, முடிகிறது. கருணாநிதியின் வரலாறு “நெஞ்சுக்கு நீதி” பல பாகங்களாக வெளிவந்துள்ளது.

புதுச்சேரியை ஆண்ட பிரஞ்சு அரசிடம் “துபாஷியாக” மொழிபெயர்ப்பாளராக இருந்த ஆனந்த ரங்கப்பிள்ளை எழுதிய நாட்குறிப்புதான், புதுச்சேரியின் வரலாற்றை எழுத உதவியாக உள்ளது. நாள்தோறும் எழுதுவது மிக மிக அவசியம்.

நாளேடு நடத்த வசதி இல்லாதவர்கள் எழுதியவை குறைவுதான். வேகமான அரசியல், சமூக மாற்றங்கள் நிகழும் இக்காலக் கட்டத்தில் உடனுக்குடன் நிகழ்வுகளை எழுதுவது அவசியம்.

இதற்கு நமக்கு போதிய வசதி வாய்ப்பு வேண்டும். ஆனால், தற்போது இணையம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக நான் கருதுகிறேன். குறிப்பாக, வலைப்பூக்கள் அதற்கான சூழலை விரிவுபடுத்தி உள்ளன.

அன்றாட நிகழ்வுகளை கணினி, இணைய இணைப்பு இருந்தால் போதும் உடனுக்குடன் பதிவு செய்துக் கொள்ளலாம். நாட்குறிப்பு போல் வலைப் பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பலர் அவ்வாறு பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

சிலர் கொள்கை அடிப்படையில் தளத்தைத் தொடங்கிவிட்டு தற்போது எங்கோ, எதற்கோ தேவையில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்மணத்தைத் தொடர்ந்து கூர்ந்துக் கவனித்தால் அது யாரென்று புரியும்.

இதையெல்லாம் தாண்டி வலைப்பூக்களை முழுமையாக பயன்படுத்துவது பற்றி வலைப்பதிவர்கள் சிந்திக்க வேண்டும். இதுகுறித்து வாய்ப்புள்ள இடத்தில் வலைப்பதிவர்கள் ஒன்றுகூடிப் பேசினால் நல்லது.

மேலே நான் குறிப்பிட்டவை ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. நாமும் நமது பட்டறிவுகளை உடனுக்குடன் பதிய முயலுவோம். நான் சொல்வது அனைவருக்கும் பொருந்தாது என்றாலும், என்னைப் போன்ற களப்பணியாளர்கள் பலருக்கும் பொருந்தும். ஏனென்றால், தமிழ்மணம் “நட்சத்திர” பதிவராக பிப்ரவரி 4 முதல் தொடங்கும் என்று முன்னரே எனக்கு தகவல் தெரிவித்தும், என்னால் உடனடியாக பதிவிட முடியாமல் போய்விட்டது. காரணம் எந்த நேரத்திலும் நான் கைது செய்யப்படலாம் என்ற நிலை. இதற்கான காரணத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன்...

30 comments:

இரா.சுகுமாரன் said...

தங்கள் பதிவிற்கு நன்றி!

தங்கள் நட்சத்திர தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதால் தங்களின் அனுபவங்களை எழுதுங்கள்.

இரா.சுகுமாரன் said...

தங்கள் பதிவிற்கு நன்றி!

தங்கள் நட்சத்திர தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதால் தங்களின் அனுபவங்களை எழுதுங்கள்.

╬அதி. அழகு╬ said...

நடித்து ஸ்டார் ஆவது சினிமாவில் (அரசியலையும் சேர்த்துக் கொள்ளலாம்).

வலை எழுதி ஸ்டார் ஆவது தமிழ்மணத்தில்.

சேவை செய்து ஸ்டார் ஆவது பாமரர்களிடத்தில்.

நீங்கள் ஒரு வாரத்துக்கல்ல, எப்பவுமே ஸ்டார்தான் - மூன்றாவது ஸ்டார்; எழுதுங்கள்.

க.அருணபாரதி said...

நட்சத்திர பதிவாளர் தோழர் சுகுமாரன் அவர்களுக்கு
மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..!

தாங்கள் மேற்கொண்ட/மேற்கொண்டுள்ள மனித உரிமை காப்புப் பணிகள் குறித்த செய்திகளை நிறைய எழுத வேண்டுமென் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். தங்களை போன்றவர்களின் பணிகள் பதிவு செய்யப்பட்டால் அது இனிவரும் இளைஞர் சமுதாயத்திற்கானன பாடமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்.

தோழமையுடன்,
க.அருணபாரதி

Kasi Arumugam - காசி said...

வாழ்த்துகள் கோ. சுகுமாரன் அவர்களே.

//காரணம் எந்த நேரத்திலும் நான் கைது செய்யப்படலாம் என்ற நிலை. இதற்கான காரணத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன்...//

ஆவலைத் தூண்டுகிறீர்கள்:-)

கோ.சுகுமாரன் said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...

நண்பர் காசி ஆறுமுகம் அவர்களுக்கு,


//காரணம் எந்த நேரத்திலும் நான் கைது செய்யப்படலாம் என்ற நிலை. இதற்கான காரணத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன்...//

ஆவலைத் தூண்டுகிறீர்கள்:-)


ஆவலைத் தூண்டுவதற்காகவோ, பரபரப்புக்காக அப்படி எழுதவில்லை. தகவலுக்காக எழுதினேன்.

தற்போதுகூட வழக்கறிஞரைப் பார்க்கப் போகிறேன்.

நன்றி.

oru Eelath thamilan said...

வாழ்த்துக்கள்! தொடருங்கள், உங்கள் சமூகப்பணி தொடர்பான அனுபவங்களை எதிர்பார்க்கின்றேன்.

ஒரு ஈழத் தமிழன்

இன்பருட்டி said...

தோழர் சுகுமாரன் அவர்களுக்கு வாழ்த்துகளும் வந்தனங்களும்..!

ஈழ விடுதலையின் பால் ஆர்வம் மீதூரப்பெற்று தமிழ் நாட்டில் போராடிக்கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான தமிழ் விடுதலையாளர்களை உதிக்கப்போகும் சுதந்திர தமிழீழத்தில் செங்கம்பள விரிப்புடன் வரவேற்க நாங்கள் தயாராகவிருக்கின்றோம்.

எமது போராட்டத்தில் தோளோடு தோள் கொடுத்து உணர்வோடு உணர்வாகக் கலந்து போராடிக் கொண்டிருக்கும் நீங்களும் மாமனிதர்கள் தான். உங்கள் பங்களிப்பும் நம் தமிழீழ வரலாற்றில் பதியப்படும்.

நன்றி ...நன்றி...நன்றி..

கோவை சிபி said...

வாழ்த்துகள்.

-/சுடலை மாடன்/- said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் அவ்வப்பொழுது அனுபவித்து வரும் இன்னல்கள் மற்றும் காவல் துறையின் தொந்தரவுகள் எதிர்பார்க்கக் கூடியதே. காவல் துறையின் வரம்பு மீறிய அதிகாரமும், அதற்கான அரசியல் அங்கீகாரமும், வழக்குகளை இழுத்தடிக்கும் நீதித்துறையும் இருக்கும் வரை உங்களைப் போன்ற சமூக-அரசியல்-மனித உரிமைப் போராளிகளைத் தான் அவர்கள் முதல் எதிரியாகப் பாவிப்பர்.

உங்கள் களப் பணிகள் தொடர்பான செய்திகள் மட்டுமல்லாமல், பல்வித இன்னல்களுக்கிடையே உங்களுக்கு மனநிறைவையும், நம்பிக்கையையும் தரும் விசயங்களையும் நேரமிருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

குழலி / Kuzhali said...

வணக்கம் சுகுமாரன்,
நட்சத்திர வாழ்த்துகள்....

//களத்தில் பணியாற்றுபவர்கள் எழுதுவது என்பது மிகவும் குறைவு. விதிவிலக்காக ஓரிருவர் இருக்கலாம். //
களப்போராளிகள் எழுதுவதன் மதிப்பு மிக மிக அதிகம்.....

நட்சத்திர வாரம் முழுக்க உங்கள் எழுத்திற்கு காத்திருக்கிறேன்...

நன்றி

வந்தியத்தேவன் said...

இன்னொரு ஈழத்தமிழனின் வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களைப் போன்ற பலரால்தான் இன்னமும் நம் தொப்புள் கொடி உறவுகள் அறவில்லை.

டிசே தமிழன் said...

வாழ்த்துக்கள் சுகுமாரன்.
...
/களப்போராளிகள் எழுதுவதன் மதிப்பு மிக மிக அதிகம்...../
குழலி சொன்னதையே நானும் சொல்ல விரும்புகின்றேன். நன்றி.

-/பெயரிலி. said...

//உங்கள் களப் பணிகள் தொடர்பான செய்திகள் மட்டுமல்லாமல், பல்வித இன்னல்களுக்கிடையே உங்களுக்கு மனநிறைவையும், நம்பிக்கையையும் தரும் விசயங்களையும் நேரமிருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள்.//

அதே

கோ.சுகுமாரன் said...

அன்புத் தோழர்களுக்கு,

தங்கள் வாழ்த்துக்களுக்கும், எதிர்ப்பார்ப்புக்கும் மிக்க நன்றி.

முடிந்தவரை எழுதுகிறேன்.

Chandravathanaa said...

வாழ்த்துக்கள்! தொடருங்கள்

செல்வநாயகி said...

ஒரு மிகச் சிறந்த பாதையை வகுத்துக்கொண்டு பயணித்துவரும் நீங்கள் வலைப்பதிவிலும் அவ்வப்போது எழுதிவருவது என் போன்றவர்களுக்குப் புதிய செய்திகளை, புரிதல்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது. அமைதியாக வெற்றுக்கூச்சல்களற்று, செய்திகளைச் சொல்லியும், நிரூபித்தும் எழுதும் உங்களைப் போன்றவர்களும் இங்கு மிகமிகச் சிலரே.

காவல்துறை தேடிக்கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான நிலையிலிருந்து இப்போது எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது வருத்தமாகவும் உள்ளது.

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் தோழரே, உங்கள் சிறப்புப் பதிவுகளைக் காணக் காத்திருக்கின்றேன்.

தென்றல் said...

வணக்கம் ஐயா! வாழ்த்துக்கள்....

பேரரசன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்....

வவ்வால் said...

கோ.சுகுமாரன்,

உங்களைபோன்றவர்கள் வலைப்பதிவில் ஆழமான கருத்துக்களை வழங்க வேண்டும், உங்கள் பணி, மற்றும் சமூக பொறுப்புகள் தெரிந்ததே என்றப்போதிலும்,பரவலாக கருத்துக்களை கொண்டு செல்ல வலைப்பதிவும் ஒரு ஊடகம் என்பதால் அதிகம் எழுதவும்.

வாழ்த்துகள்!

லக்கிலுக் said...

தமிழ்மண நட்சத்திர வாரத்தில் மனிதநேயக் குரல் ஓங்கி ஒலிப்பது மெத்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!!!

SurveySan said...

Vazhthukkal.

திரு/Thiru said...

வாழ்த்துக்கள்!

கள அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களது அனுபவத்தால் இன்னும் பலர் களத்தில் தூண்டப்படலாம்.

மனித உரிமைகளை பேணவும், அடையவும் நீங்கள் முன்னெடுக்கிற போராட்டங்களுக்கு என் வணக்கங்கள்!

கோ.சுகுமாரன் said...

அன்புத் தோழர்கள், தோழியர்கள் ஆகியோருக்கு,

என்னை ஊக்கப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி...

துளசி கோபால் said...

நட்சத்திரப் பதிவருக்கு வாழ்த்து(க்)கள்.


உங்கள் அறிமுகம் பிரமிப்பைத் தருகிறது.

PRINCENRSAMA said...

தோழர் சுகுமாரனின் நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்!
தந்தை பெரியாரின் எழுத்துகளும் பேச்சுகளும் தொகுக்கப்படவில்லை என்ற பழைய செய்தியை மீண்டும் மீண்டும் தங்களைப் போன்றவர்கள் கவலைப் பட்டுக் கொண்டிருப்பது குறித்து மிக்க வருத்தம் அடைகிறேன்.
ஏனெனில் முழுமையான தொகுப்புப் பணி அய்யா ஆசிரியர் வீரமணி அவர்காளால் தொடங்கப்பட்டு, தலைப்பு வரிசைப்படியும், கால வரிசைப்படியும், பெரியார் களஞ்சியங்களாக சுமார் 30 புத்தகங்களுக்கு மேல் தலா 320 பக்கங்களுடன் சுமார் 10000 பக்கங்களை நெருக்கி வெளிவந்துவிட்டது. மேலும் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன என்ற செய்தியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன். இதுவரை கவலை கொண்டிருப்போர்க்கு இது மகிழ்ச்சிச் செய்தியல்லவா? இதை மறைக்கவோ, மறக்கவோ வேண்டாமே!

பிரேம்குமார் said...

நட்சத்திர வாரத்தில் மின்னும் அய்யாவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

நட்சத்திர வாரத்தில் மேலும் ஒரு சிறப்பான செய்தி. இந்த வாரம் ஆனந்த விகடன் 'விகடன் வரவேற்பறை'யிலும் உங்கள் வலைப்பூ பற்றி செய்தி வந்துள்ளது!

மீண்டும் வாழ்த்துக்கள்!

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் தோழரே இந்த வாரம் உங்களுக்கு இரட்டிப்புச் சந்தோசம் இந்தவார விகடன் வரவேற்பறையிலும் உங்கள் வலையைப் பற்றி எழுதியுள்ளார்கள்.

தென்றல் said...

//இந்த வாரம் ஆனந்த விகடன் 'விகடன் வரவேற்பறை'யிலும் உங்கள் வலைப்பூ பற்றி செய்தி வந்துள்ளது!//

வாழ்த்துக்கள்!! :)