ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU)
நூலகம்
ஜனநாயக மாணவர் சங்கம்..
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
பகுஜன் சமாஜ் கட்சி மாணவர் அமைப்பு
பெரியார் பிறந்த நாளுக்கு...
போலி மோதல் கொலை தொடர்பாக...
மதவாத ஏ.பி.வி.பி.
பாலியல் தொந்தரவுக்கு எதிராக...
மக்கள் இடம்பெயர்வது பற்றி...
ஜே.என்.யூ-வில் படித்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த
சந்திரசேகர். சி.பி.ஐ.(மா-லெ) கட்சியில்
இருந்ததால் கொல்லப்பட்டார். அவருக்கு அஞ்சலி.
உலக வங்கியின் தாக்கங்கள் பற்றி புதுதில்லியில் நடந்த மக்கள் தீர்ப்பாயத்தில் கலந்து கொள்ள நானும், நண்பர் தேவநேயன் அவர்களும் தில்லி சென்றோம். சென்ற 2007, செப்டம்பர் 21 முதல் 24 வரை, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழத்தில் (ஜே.என்.யூ) நடைபெற்ற இத்தீர்ப்பாயத்தில் இந்தியா முழுவதும் இருந்தும், உலக அளவிலும் ஏராளமான அறிஞர்கள் கலந்துக் கொண்டு கட்டுரை படித்தனர். மிகவும் பயனளிக்க கூடிய வகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நிறைய நண்பர்கள் எனக்கு அறிமுகமாயினர்.
எல்லாவற்றையும்விட ஜே.என்.யூ. சூழல் என்னை மிகவும் கவர்ந்தது. ஜே.என்.யூ. பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தும் நேரில் பார்த்த போது அதன் பரிமாணத்தைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.
ஜே.என்.யூ. கல்வி நிலையில் முன்னணியில் இருக்கும் பல்கலைக்கழகம் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு இந்தியா முழுவதும் மற்றும் உலகமெங்கும் இருந்து ஏறக்குறைய 4000 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 50 சதவீதத்திற்கு மேல் மாணவிகள். தமிழ்நாட்டிலிருந்து 130 பேர் படிக்கின்றனர். மற்ற மாநிலத்தைக் காட்டிலும் இது ஒப்பீட்டளவில் மிக மிக குறைவு. கேராளாவிலிருந்து 400 பேர் படிக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
ஜே.என்.யூ.வில் பணியாற்றும் பேராசிரியர்கள் அறிவுநிலையில் கற்றுத் தேர்ந்தவர்களாக உள்ளனர். பேராசிரியர்களில் 90 சதவீதத்தினர் ‘பார்ப்பன’, ‘மேல்சாதிக்காரர்கள்’ என்பது உற்று கவனிக்க வேண்டியது.
இங்கு பயின்றவர்களில் ஆண்டுக்கு 30 முதல் 35 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். இங்குள்ள சமூக அறிவியல், அரசியல் துறைகள் மிகப் பிரபலம். இங்கு பயின்ற பலர் இன்றும் இந்திய அரசியலில், அரசில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.
மாணவர்கள் பயிலுவதற்கு நல்ல சூழல் நிலவுகிறது. படிப்பதற்கேன்றே தனியே படிப்பறைகள் உள்ளன. இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கனவுகளோடு மாணவர்கள் இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.
ஒவ்வொரு துறையிலும் குளிர்வசதி செய்யப்பட்ட கருத்தரங்க அறைகள் உள்ளன. நாள்தோறும் கல்வி சார்ந்து கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. ஜே.என்.யூ. பேராசிரியர்களும், வெளியிலிருந்து வரும் அறிஞர்களும் படிப்பு, அரசியல் சார்ந்தும் உரை நிகழ்த்துகின்றனர். மாணவர்கள் மட்டுமல்லாது, வெளியிலிருந்தும் நிறைய பேர் இக்கருத்தரங்க உரைகளைக் கேட்க வருகின்றனர்.
இங்குள்ள நூலகம் மிகப் பிரபலம். வானுயர்ந்து நிற்கும் 9 மாடிக் கட்டடம். இதில் 5 லட்சம் அளவில் நூல்கள், பத்திரிகைகள், ஆவணங்கள், குறுந்தகடுகள் உள்ளன. படிப்பதற்கென்று அனைத்து வசதிகளுடன் அரங்குகள் உள்ளன. இங்கு கிடைக்காத நூல்கள் இந்தியாலுள்ள வேறு நூலகங்களில் இருக்கிறதா என்பதை இணையம் மூலம் கண்டறிகின்றனர். அவ்வாறு வெளி நூலகத்திலுள்ள நூல்களைப் பெற்றுத் தரும் வசதி இங்கு உள்ளது. மாணவர்கள் அல்லாதவர்களும் இந்நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நூலகத்திற்கு வருவது மிக மிக குறைவு என்றும், தமிழ்நாட்டிலிருந்து வே.ஆனைமுத்து அவர்கள் இந்நூலகத்திற்கு வருவதுண்டு என்றனர் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்.
ஜே.என்.யூ-வில் நல்ல புத்தகக் கடைகள் உள்ளன. பல துறை பாட புத்தகங்கள் தவிர மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் நூல்கள், முற்போக்கு இலக்கிய, அரசியல் நூல்கள் இங்கு கிடைக்கின்றன.
மாணவ-மாணவிகள் தங்கிப் படிக்கும் பல்கலைக்கழக விடுதிகள் நிறைய உள்ளன. இந்த விடுதிகளுக்கு இந்தியாலுள்ள நதிகளின் பெயர்களைச் சூட்டியுள்ளனர். ஒவ்வொரு விடுதியின் அருகேயும் ‘கேன்டீன்கள்’ உள்ளன. இங்கு உணவுப் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.
மாணவர்கள் விடுதிக்குள் மாணவிகள் செல்ல தடையில்லை. மாணவிகளை ஈவ் டீசிங் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். இதற்கென மாணவ–மாணவிகள் அடங்கிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் தாண்டி, என்னை மிகவும் கவர்ந்தது அங்கு அரசியல் செயல்பாடுகளுக்கு சுதந்திரம் உள்ளதுதான்.
மாணவர் அமைப்புகள் வலுவாக உள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் முதல் மாவோயிஸ்ட் வரையிலான கட்சி சார்ந்த மாணவர் அமைப்புகள் உள்ளன. அந்தந்த மாணவர் அமைப்பு சார்பில் அன்றன்றைக்கு என்ன பிரச்சனை அரசியலில் களத்தில் உள்ளதோ அதுபற்றி ஒரு கருத்தரங்கம் நடக்கிறது. அதில் கலந்துக் கொள்ளும் பேராசிரியர்கள் குறிப்பாக ஜே.என்.யூ-வில் பணிபுரியும் பேராசிரியர்கள் அரசை விமர்சித்தும், பிரதமர் போன்ற அதிகாரத்தின் உயர்பொறுப்பில் இருப்பவர்களையும் கடுமையாக, வெளிப்படையாக விமர்சித்தும் பேசுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.
நான் அங்கு இருந்த போது, அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.என்.யூ மாணவர் பேரவை சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங், சி.பி.எம். பிரகாஷ் காரத் மற்றும் ஜே.என்.யூ பேராசிரியர்கள் பலர் கலந்துக் கொள்வதாக அறிவிக்கபட்டிருந்தது. வி.பி.சிங் ‘டையாலிசிஸ்’ செய்துக் கொள்ள வேண்டியிருந்ததால் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை. அவரைப் பார்க்க வேண்டுமென்பதற்காக கூட்டத்திற்குச் சென்றோம். அக்கூட்டத்தில், ஜே.என்.யூ பொருளாதார துறை பேராசிரியை ஒருவர் பிரதமரையும், அவரது பொருளாதார கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்தார். இக்கூட்டத்தைக் கண்டித்து மாணவ காங்கிரஸ் அமைப்பினர் பிரகாஷ் காரத் உருவ பொம்மையை அரங்கத்தின் வெளியே எரித்தனர்.
இடதுசாரி இயக்க மாணவர் அமைப்புகள் வலுவாக உள்ளன. குறிப்பாக மாவோயிஸ்ட், சி.பி.ஐ. (எம்.எல்.), சி.பி.எம்., சி.பி.ஐ. போன்றவற்றை சொல்லலாம். தற்போது கூட மாணவர் பேரவைத் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சியின் ‘ஜனநாயக மாணவர் சங்கத்தை’ சார்ந்த மாணவர் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணவ-மாணவியர் தங்கள் கருத்துக்களை எளிய சுவரொட்டிகள் மூலம் தெரியப்படுத்துகின்றனர். அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது என்று மாணவர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு முடிவு செய்து, அதைக் கடைபிடிக்கின்றனர். வசதி வாய்ப்புள்ள அமைப்புகள் பெரிய பெரிய சுவரொட்டிகளை ஒட்டுவார்கள். போதிய நிதி இல்லாத அமைப்புகள் அந்தளவுக்கு ஒட்ட முடியாது என்று இந்த முடிவுக்கு வந்ததாக மாணவர் ஒருவர் கூறினார்.
சமற்கிருத துறைப் பேராசிரியர் ஒருவர் 9 மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவிகள் சுவரொட்டி ஒட்டியிருந்தனர்.
கேன்டீன்கள்’ அரசியல் தலைவர்களைக் கிண்டலடித்து கையால் வரையப்பட்ட சுவரொட்டிகள் நிறைந்துக் காணப்படுகின்றன. குறிப்பாக மதவாத பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி ஆகியவற்றை எதிர்த்து நிறைய சுவரொட்டிகளைக் காண முடிந்தது.
சிறப்புப் பொருளாதார மணடலங்களுக்கு எதிராக மேற்குவங்க சி.பி.எம். கட்சியைக் கடுமையாக விமர்சித்து ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலையரசன், வீரமணி, பிரியா போன்றவர்கள் பெரியார் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். பெரியார் பிறந்த நாள் விழா நடத்தியுள்ளனர். வே.ஆனைமுத்து அவர்கள் ஒருமுறை இங்கு மாணவர்களிடம் நிறைய நேரம் உரையாடியுள்ளதை கூறினர்.
இரவு 10 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை விடுதிக் ‘கேன்டீன்களில்’ அரசியல் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இது மாணவர்களின் அரசியல் களமாகத் திகழ்கிறது.
ஜே.என்.யூ-வில் மாணவர்கள் உரிமைக்காகத் தீரமாகப் போராடுகின்றனர். சில எடுத்துக்காட்டுக்களை மட்டும் சொல்கிறேன்.
ஜே.என்.யூ-வில் நேரு சிலை ஒன்று அமைக்கப்பட்டு அதனை பிரதமர் மன்மோகன்சிங் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. மன்மோகன்சிங் ஜே.என்.யூ-விற்கு வருவதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிலை திறப்பு விழாவன்று கறுப்புக் கொடி காட்டுவோம் என மாணவர்கள் அறிவித்தனர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது. விழாவன்று சிலையைத் திறந்து வைத்து மன்மோகன்சிங் பேசும் போது மாணவிகள் தங்கள் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த கறுப்புக் கொடியை எடுத்துக் காட்டி அவரை வெளியேறுமாறு முழக்கமிட்டுள்ளனர். தொடர்ந்து பேச முடியாமல் மன்மோகன்சிங் கூட்டத்தைவிட்டு வெளியேறியுள்ளார்.
அதேபோல், மகாராஷ்டிரா மாநிலம், கயர்லாஞ்சியில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உயிரோடு தீ வைத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதை யாராலும் எளிதில் மறக்க முடியாது. இச்சம்பவம் நடந்த பின்பு அம்மாநிலத்தின் முதலமைச்சர் விலாசராவ் தேஷ்முக் ஒரு கூட்டத்தில் பேச ஜே.என்.யூ வந்துள்ளார். அப்போது, மாணவர்கள் ‘தலித் விரோதிக்கு ஜே.என்.யூ-வில் இடமில்லை’ என்று கூறி அவரை எதிர்த்துப் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர் போலீஸ் பாதுகாப்போடு வெளியே தப்பியோடியதை மாணவர்கள் கூறினர்.
அண்மையில், பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ஜே.என்.யூ-விற்குச் சென்றுள்ளார். அவரை முற்றுகையிட்டு அவரை வெளியேற சொல்லி மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். நந்திகிராம், சிங்கூர் பிரச்சனைகளுக்காக இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
அதோடுமட்டுமல்லாமல், ஊழியர்களின் பிரச்சனைகளுக்காகவும் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். குறிப்பாக கடைநிலை ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமைக் கொடுத்துப் போராடுகின்றனர்.
ஜே.என்.யூ. கல்வி வழங்குவதில் மேம்பட்டும், அரசியல், ஜனநாயக களமாக திகழ்வதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.
அண்மையில் பேராசிரியர் மார்க்ஸ், நானும் இந்திய அளவில் அரசியல் சிறைவாசிகள் விடுதலை குறித்து நடந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தில்லி சென்று வந்தோம். அப்போது ஜே.என்.யூ-வில் இரண்டு கூட்டங்கள் நடந்தன. ஒன்று தமிழகத்திலிருந்து பயிலும் மாணவர்களோடு கலந்துரையாடல். இரவு 10.30 மணிக்குத் தொடங்கி 12.30-க்கு முடிந்தது. பெரியார், மார்க்சியம் சார்ந்த செய்திகளை மார்க்ஸ் முன்வைத்துப் பேசினார். அதன்பின், இரவு 1.00 மணிக்குத் தொடங்கி 2.30 வரை ஜனநாயக மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியரோடு கலந்துரையாடல். மார்க்சியம், அரசியல், இந்திய அளவில் நடக்கும் போராட்டங்கள், தமிழகச் சூழல் என பலவற்றைக் குறித்து விவாதம் நடந்தது.
இவ்வாறு ஜே.என்.யூ-வோடு என் உறவு தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. நல்ல கல்வி பெற்று உயர்நிலை அடைய வேண்டும் என்பவர்களுக்கும், என் போன்ற சமூக ஆர்வலர்களுக்கும் ஜே.என்.யூ-வில் படிக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்புதான். இதைப் படிக்கும் உங்களுக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன்...
13 comments:
//ஜே.என்.யூ-வில் படிக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்புதான். இதைப் படிக்கும் உங்களுக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன்...//
உண்மையிலேயே ஏற்படுகிறது தோழர்.
ஜெ.என்.யுவிற்கு அரசு பணத்தைக் கொட்டுகிறது.இதில் பத்தில் ஒரு பங்கு கூட மாநிலங்களில் உள்ள பல்கலைகழகங்களுக்கு தரப்படுவதில்லை.இத்தகைய
வசதிகள் ஏன் தில்லியில் மட்டும்
இருக்க வேண்டும் என்று எப்போதேனும் யோசித்ததுண்டா?.
மேலும் இங்கு படிக்கும் போது புரட்சி பேசும் பலர் இறுதியில் அதிகார வர்க்கத்தின் பகுதியாக மாறுகின்றனர்.ஐ.ஏ.எஸ் போன்றவற்றிற்கான தேர்வு பரிட்சைகளுக்கு இங்கு இருப்பது வசதி.இதனால் ஆண்டுதோறும் 40/50
பேர் இங்கிருந்து படிப்பினை விட்டு விட்டு அவற்றில் சேர்கின்றனர்.
இங்கு என்னதான் புரட்சிகர அரசியல்,இடதுசாரி அரசியல் பேசப்பட்டாலும் தலித்களுக்கான
இட ஒதுக்கீடு ஆசிரியர் தேர்வில்
முழு அளவில் நடைமுறைப்படுத்தப்
படுகிறதா என்று அங்குள்ள உங்கள்
இடதுசாரி நண்பர்களைக் கேளுங்கள்.
நல்ல அருமையான தொகுப்பு சுகுமாரன். தமிழக மாணவர்கள் பிரபலமாக இருப்பது மிக்க மகிழ்ச்சி.
இப்படி ஓர் பல்கலைகழகம் நம் தமிழகத்தில் இல்லையே என்ற ஏக்கம் உள்ளது?!
நன்றி
மயிலாடுதுறை சிவா..
வாசிங்டன்
ஆகா என்ன ஒரு எண்ணம்
தன்னை போல அனைவரும்
உருப்படாமல் ஊரை ஏமாற்றி
பிழைக்க நினைக்கும் உங்கள்
எண்ணம் புல்லரிக்குது
அன்புத் தோழர்கள் அருண்பாரதி, மயிலாடுதுறை சிவா ஆகியோருக்கு நன்றி.
அனானி அவர்களுக்கு,
//இங்கு என்னதான் புரட்சிகர அரசியல்,இடதுசாரி அரசியல் பேசப்பட்டாலும் தலித்களுக்கான
இட ஒதுக்கீடு ஆசிரியர் தேர்வில்
முழு அளவில் நடைமுறைப்படுத்தப்
படுகிறதா என்று அங்குள்ள உங்கள்
இடதுசாரி நண்பர்களைக் கேளுங்கள்.//
தாங்கள் என் பதிவை முழுமையாக படிக்கவில்லை என்றே தோன்றுகிறது.
நான் எழுதியுள்ளதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
//பேராசிரியர்களில் 90 சதவீதத்தினர் ‘பார்ப்பன’, ‘மேல்சாதிக்காரர்கள்’ என்பது உற்று கவனிக்க வேண்டியது.//
இதன் பொருள் என்ன?
தலித்துக்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அங்கு போதிய பங்களிப்பு இல்லை.
உயர் கல்வியில் இடஒதுக்கீடு பிரச்சனை எழுந்த போது ஜே.என்.யூ. இரண்டாக பிரிந்தது. ஒன்று இடஒதுக்கீடு ஆதரவு அணி, மற்றொன்று எதிர்ப்பு அணி. அப்போது இடதுசாரிகள்தான் ஆதரவு அணியில் இருந்து ஆதிக்கச் சக்திகளை எதிர்கொண்டனர்.
//ஜெ.என்.யுவிற்கு அரசு பணத்தைக் கொட்டுகிறது.இதில் பத்தில் ஒரு பங்கு கூட மாநிலங்களில் உள்ள பல்கலைகழகங்களுக்கு தரப்படுவதில்லை. இத்தகைய வசதிகள் ஏன் தில்லியில் மட்டும் இருக்க வேண்டும் என்று எப்போதேனும் யோசித்ததுண்டா?.//
நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், அப்பிரச்சனையை அப்படி அணுகக்கூடாது. இங்குள்ள பல்கலைக்கழகங்களை விட கிராமப்புறங்களில் நிலைமை மோசம். ஆகையால் பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்குவது தவறா? உயர் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதிபோல மற்றவைக்கும் ஒதுக்க வேண்டும் என்றுதான் கேட்க வேண்டும்.
//மேலும் இங்கு படிக்கும் போது புரட்சி பேசும் பலர் இறுதியில் அதிகார வர்க்கத்தின் பகுதியாக மாறுகின்றனர்.ஐ.ஏ.எஸ் போன்றவற்றிற்கான தேர்வு பரிட்சைகளுக்கு இங்கு இருப்பது வசதி.இதனால் ஆண்டுதோறும் 40/50
பேர் இங்கிருந்து படிப்பினை விட்டு விட்டு அவற்றில் சேர்கின்றனர்.//
எல்லோரும் அதிகார வர்க்கத்தின் பகுதியாக மாறுவதில்லை. பலர் புரட்சிகர இயங்கங்களில் ஈடுபாடு கொண்டுள்ளனர். நான் குறிப்பிடுள்ள பீகார் சந்திரசேகர் அவர்களே சிறந்த எடுத்துக்காட்டு. அவர் தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காகவே கொல்லப்பட்டார்.
மற்றொரு அனானி அவர்களுக்கு,
//ஆகா என்ன ஒரு எண்ணம்
தன்னை போல அனைவரும்
உருப்படாமல் ஊரை ஏமாற்றி
பிழைக்க நினைக்கும் உங்கள்
எண்ணம் புல்லரிக்குது//
சமூக அக்கறையுடையவர்களை இப்படி கூறுவது தவறு. கண்டனத்திற்குரியது. அடிப்படையே தெரியாமல் இப்படி எழுதுவது கோளாறானது. எங்களைப் போன்றவர்கள் யாரையும் ஏமாற்றிப் பிழைக்கவில்லை. அதற்கான அவசியம் இல்லை.
தாங்கள் வேண்டுமானால் ஜே.என்.யூ-வில் சேர்ந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.ஏஸ். ஆகி உருப்பட வாழ்த்துக்கள்.
அதற்கான தகவலும் என் பதிவில் உள்ளது...
ஐயா,
ஜே.என்.யூவைப் பற்றி கேள்விபட்டிருந்தாலும் நீங்கள் பகிர்ந்து கொண்டவைகள் முற்றிலும் கேள்விப்பாடத புதிய செய்திகள்.
நம் இந்தியாவிலும் அதிலும் பல்கலைகழகத்தில் ஆரோக்கியமான மாணவ அமைப்புகள் அவர்களின்
அரசியல் செயல்பாடுகளுக்கான சுதந்திரம்... மிகுந்த ஆச்சியத்தையும் "ஒரு சின்ன" நம்பிக்கையும் அளிக்கிறது.
தொடந்து பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!
நிறையத் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி.
நாட்டின் பிரதமருக்கும், சபா நாயகருக்கும்,எதிர்ப்பு தெரிவிக்கும் அளவு... நம் நாட்டில் கருத்து சுதந்திரம் உள்ளதை எண்ணி....
பெருமைபடுக்கின்றேன்...
ஆனால் சென்ற பதிவில் தாங்கள், கூறியுள்ள சம்பவத்தை கண்டு
வெட்கமடைகின்றேன்...
இதுதானா இந்தியா...?
முரண்பாடுகளின் மொத்த உருவம்..
sir, i am sorry that i am unable to type in tamizh.
i am happy and proud to read about my university.ethai jnu patriya sethi thamizh naatu makkalidam ungal moolaam sendradaithathil magizhchy.
problems are every where, even jnu has its problems political and academic.But one should also know that though the university is in delhi there are only 1% or even less of delhi students here.
and there are a lot of students from very backward areas.You can have problems with the rehtorics of left evn i do, but if not for the left these people would not have a place here. if not for the progresssive forces you will not find a place where a girl can be walking without fear at 2a.m in the rape capital of the nation
Dear Sugumaran,
Sorry,
I don't have tamil software installled and don't know to type in tamil.
The JNU blog was really a informatic one. The reply to the anonymous expression is apt and 'nethiadi'.
While travelling to places your view and work is being rightly put forward on the website which is worth to others.
My applauds!.
K.Ilangovan,
Poovulagin Nambargal,
Puducherry
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படிக்க வில்லையே என்கிற ஏக்கம் உங்களுக்கு மட்டுமா தோழர்?
அன்பு நண்பர்களுக்கு,
ஜே.என்.யூ. பற்றி தங்கள் கருத்துக்களைப் பகிர்துள்ளமைக்கு மிக்க நன்றி.....
ந்ண்பரே,
ஜே.என்.யூ-வில் படித்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த
சந்திரசேகர். சி.பி.ஐ.(மா-லெ) கட்சியில்
இருந்ததால் கொல்லப்பட்டார்...
என குறிப்பிட்டுள்ளீர்கள்,ஏன் இந்த விஷமதனம். அவர் சி.பி.ஐ.(மா-லெ) கட்சியில் இருந்ததால் கொல்லப்படவில்லை, சாமானிய உழைக்கும் மக்க்ளுக்காக போராடியதால் ஆதிக்க சக்கதியினரால் கொல்லப்பட்டார். எனவே தான் பிகார் உழைக்கும் ம்க்கள் தங்கள் அன்பு தலைவனுக்காக சிவான் பகுதியில் சிலை நிறுவி அவரின் தியாகத்தை போற்றுகின்றனர்.
Post a Comment