
இது குறித்து, சிறுபான்மை உதவி அறக்கட்டளை வெளியிட்ட துண்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை சிறையில் உள்ள 166 முஸ்லீம்கள் உட்பட தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட முஸ்லீம் சிறைவாசிகளின் தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் 9 ஆண்டுக் கால சிறை இருப்பை, 21-ஆம் நூற்றாண்டு முஸ்லீம் சமூகத்தின் பேரழிவாகவும், இழிவாகவும் வரலாறு பதிவு செய்யவிருக்கிறது.
நீதி, நியாயம், ஜனநாயகம், சட்டத்தின் முன் அனைவரும் சமம், மதச்சார்பற்ற அரசமைப்பில் இருந்து நீண்ட நெடுங்காலமாக நீதி, நியாய, சட்ட, மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, விசாரணை என்ற பெயரில் வரலாறு காணாத சிறை இருப்பிலுள்ள முஸ்லீம்களுக்கு நம்மால் உரிய நீதி பெற்றுத்தர முடியவில்லை என்றால், அதனினும் ஒரு சமூக இழிவு, பேரிழிவு வேறொன்று இருந்திடுமோ?

இந்தியாவில் இதுவரை நடந்த வகுப்புக் கலவரங்களின் சூத்திரதாரர்கள், மூலகர்த்தர்கள் யாரென்று ஆய்வு செய்யப்பட்டதில் அதில் முழுவதுமாக சங்க்பரிவாரங்களே இருந்துள்ளனர். ஆனால், அக்கலவரங்களின் தொடர்ச்சியை ஆய்வு செய்ததில் பொருளாதார, உயிர், உடைமை இழப்புகள், கைது நடவடிக்கைகள், வழக்குகள் என பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் முஸ்லீம்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
அதுபோலவே, கோவையில் பல்வேறு காலங்களில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களின் சூத்திரதாரிகளான சங்க்பரிவார் பாசிஸ்டுகள் மீது எவ்வித உருப்படியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முஸ்லீம்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் சூறையாடிச் சேதப்படுத்தியவர்களும், முஸ்லீம்களைப் படுகொலைச் செய்தவர்களும் என ஒருவர் கூட இன்று சிறைச்சாலையில் இல்லை. அவர்களின் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளின் நிலை என்னவென்ற செய்தியைக் கூட அறிய முடியவில்லை. அவர்கள் கூட்டம் கூட்டமாய் பெரும் சதித்திட்டத்தோடு கோவை முழுவதையும் கலவரக்காடாய் ஆக்கியபோதும் அவர்ககளை யாரும் சொல்லவில்லை சங்க்பரிவார தீவிரவாதிகள் என்று. அவர்களுக்கு அமைக்கப்படவில்லை தனி நீதிமன்றங்கள். அவர்கள் எல்லாம் வைக்கப்படவில்லை தனி கண்காணிப்புச் சிறைகளில். ஆனால், பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் வெறும் விசாரணைக் கைதிகளாய் குற்றம் நிருபிக்கப்படாமலேயே தீவிரவாதிகள் என்ற அவப்பெயரோடு, 166 முஸ்லீம்களையும் ஒரே வழக்கில் சதித்திட்டம் தீட்டினார்கள் என்று கூறி, பிரமாண்ட வழக்கைத் தொடுத்து, அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி உள்ளனர்.
இந்த நீண்டகால சிறைவாசத்தால் நோயுற்ற முதியவர் ஒருவருக்கு மரணமே விடுதலையைப் பெற்றுத் தந்தது. விடுதலையாக வேண்டிய நாட்களை எண்ண வேண்டிய மற்றொருவர் மரணத்தின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். இன்னும் பலர் நோயாளிகளாய் சிகிச்சையிலேயே சிறைவாசம் கழித்து வருகின்றனர். இதனினும் கொடுமை சிலர் விடுதலை வெளிச்சம்கூட தெரியாத நிலையில் தன் குடும்பத்தவர்கள் அனைவரையும் இழந்துவிட்ட அனாதைகளாக உள்ளனர். இவர்கள் விடுதலை பெற்றால் எங்கே யாரிடம் போய்த் தஞ்சம் அடைவர்.
அன்று, பிரிட்டிஷாரின் ஆட்சியின்கீழ் இருந்த அடிமை இந்தியாவில், 17-02-1922-இல் ஆலி முஸ்லியார் என்ற முஸ்லீம் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த கோவை சிறையில், இன்று, 166 முஸ்லீம் சிறைவாசிகள் 9 ஆண்டுகளாய் நீதி மறுக்கப்பட்டு, சுதந்திர தேசத்தில், அடிமைச் சிறை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
காஞ்சி சங்கராச்சாரியார் படுபாதக கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது, சில மணித்துளிகளில் சங்க்பரிவாரங்கள் வீதியில் இறங்கி குற்றம்சாட்டப்பட்டால் மட்டும் ஒருவர் குற்வாளி அல்ல என்ற சட்ட வியாக்கியானம் கூறி சங்கராச்சாரியாரை விடுவிக்க பல்வேறு சண்டித்தனங்களைச் செய்தது. அதேசமயம், 166 முஸ்லீம்கள் ஒரு நாளோ, மாதமோ, ஆண்டோ என்றில்லாமல் 9 ஆண்டுகளாக வெறும் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் நிரபராதிகளாய் சிறைவாசம் புரிந்து வருகின்றனர். சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கோட்பாட்டினைக் கொண்ட இந்நாட்டில், சங்கராச்சாரியாருக்கு ஒரு நீதி, சாமானியர்களான சிறுபான்மை முஸ்லீம்களுக்கு ஒரு நீதியா?
இந்த இழி நிலையை, பேரழிவை நாம் மறுக்கவோ, மறைக்கவோ கண்டும் காணாதது போல் இருந்திடவோ நினைக்கலாம். ஆனால், அறிந்து கொள்ளுங்கள் வரலாறு நம் மனசாட்சியைவிட நேர்மையாக இயங்குகிறது என்பதனை.
நிகழ்ச்சி நிரல்:
எம்.எஸ்.எம் அபுதாகீர் வரவேற்புரை நிகழ்த்துகிறார். எஸ்.யூ.அன்வர்கான் தலைமை ஏற்கிறார்.
எச்.சுரேஷ் (மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி), மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் (அகில இந்தியத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்-PUCL), எம்.எச்.ஜவாகிருல்லா (முசுலீம் முன்னேற்றக் கழகம்), எம்.குலாம் முகமது (மனித நீதிப் பாசறை), வீரேந்திரகுமார் (நாடாளுமன்ற உறுப்பினர், கேரளா), பி.எம்.ஏ.சலாம் (சட்டமன்ற உறுப்பினர், கேரளா), செபாஸ்டியன் பவுல் (நாடாளுமன்ற உறுப்பினர், கேரளா), மெளவி டி.ஜெ.எம். சலாவுதீன் ரியாஜி (ஜமாத்துல் உலமா), பலராம் (முன்னாள் தலைவர், மனித உரிமைகள் ஆணையம், கேரளா), அமீத் வனிமீல் (ஜமாத்தே இஸ்லாமிய இந்த், கேரளா), இமாம் உசேன் (JAQH), பூந்துறை சிராஜ் (மக்கள் ஜனநாயக் கட்சி, கேரளா), அக்பர் அலி (மக்கள் ஜனநாயக் கட்சி, கேரளா), எஸ்.ஜெ. இனாயத்துல்லா (அகில இந்திய மில்லி கவுன்சில்), எம்.ஆமித் பக்ரி மன்பஈ (ஐக்கிய சமாதானப் பேரவை), ஜி.எம்.என்.சலீம் (முஸ்லீம் லீக் இளைஞர் அணி), நக்கீரன் கோபால், கோவை.கு.இராமக்கிருட்டினன் (தந்தை பெரியார் தி.க.), பேராசிரியர் அ.மார்க்ஸ் (மனித உரிமைக்கான மக்கள் இயக்கம்), பி. திருமலைராஜன் (மூத்த வழக்கறிஞர்), புதுவை கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), விருத்தாசலம் ராஜு (மனித உரிமைப் பாதுகாப்பு நடுவம்), வழக்கறிஞர் ப.பா.மோகன் (சட்ட ஆலோசகர், சிறுபான்மை உதவி அறக்கட்டளை), அக்னி சுப்பிரமணியம் (மனிதம்), வழக்கறிஞர் எம்.முகமது அபுபக்கர் (மக்கள் சிவில் உரிமைக் கழகம்-PUCL) ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.
முடிவில் கோவை தங்கப்பா நன்றி கூறுகிறார்.
தொடர்புக்கு: 0422-2307673, 94436 54473.
மின்னஞ்சல்: mdsafair@ gmail.com