Monday, February 05, 2007

+2 மாணவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் 02-02-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:

புதுவையிலுள்ள அரசுப் பள்ளி விரிவுரையாளர்களின் தொடர் போராட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களைக் காப்பாற்ற, புதுவை அரசு உடனடியாக மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி விரிவுரையாளர்கள் பதவி உயர்வுக் கேட்டு கடந்த பல நாட்களாக போராடி வருகின்றனர். பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 5-ந் தேதி முதல் செய்முறை தேர்வும், மார்ச் 1 முதல் எழுத்துத் தேர்வும் நடைபெறும் என தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்த வேண்டிய விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகள் அனைத்தும் மாணவர்களைத் தயார்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுத ஆயத்தமாக உள்ளனர். அரசுப் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள்தான் பயில்கின்றனர். இப்போராட்டத்தினால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளது.

புதுவை அரசின் “மேனா மிணுக்கி“கல்வி அமைச்சர், கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோர் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்துக் கவலைப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

அரசுப் பள்ளி விரிவுரையாளர்களின் இப்போராட்டம் பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. புதுவை அரசு உடனடியாக, போராட்டம் நடத்தும் விரிவுரையாளர்களை அழைத்துப் பேசி தீர்வு காணவேண்டும் அல்லது மாணவர்களின் நலன் காக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

No comments: