Friday, February 02, 2007

புதுவையில் மீண்டும் நில அபகரிப்பு

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 11-01-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:

புதுவை கிருஷ்ணா நகரில் உள்ள நிலத்தினை அபகரிக்க முயற்சித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரது நிலத்தினைப் போலிப் பத்திரம் தயாரித்து அபகரிக்க சிலர் முயற்சித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 24-11-2006 அன்று ஆளுநர், முதல்வர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினருக்கும் புகார் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த காலங்களில் வீடு, நிலம் அபகரிக்கப்பட்டபோது புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தடுத்தது போல், குற்றமிழைத்தவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

வீடு, நிலம் அபகரிப்பதைத் தடுக்கும் வகையில் பத்திரப் பதிவில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த பின்பும் வீடு, நிலம் அபகரிக்கப்பவர்களுக்கு உடந்தையாக போலி பத்திரங்களைப் பதிவு செய்யும் பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது நடந்துள்ள ஆக்கிரமிப்பு முயற்சிக்கு அதிகாரத்தில் உள்ள ஒருவர் துணைபுரிவதாக அறிகிறோம். இது கண்டனத்திற்குரியது. மீண்டும் தலைதூக்கும் வீடு, நிலம் அபகரிப்பைத் தடுக்க புதுச்சேரி அரசு குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

இது குறித்து ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், ஐ.ஜி. உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம்.

No comments: