
மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 01-03-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:
ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக அந்த இடத்தில் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம்.
கரூர்-கோயம்புத்தூர் இடையே நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் போது மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக கிராம விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் நடராஜன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் நீதிபதிகள் ஏ.பி.ஷா, கே.சந்துரு ஆகியோர் ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக அந்த இடத்தில் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டு வரும் இக்காலத்தில் இத்தீர்ப்பு வந்துள்ளது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.
மரங்கள் வெட்டப்படுவதுதான் போதிய மழை இல்லாமல் போனதற்குக் காரணம். மேலும், நச்சு ரசாயன தொழிற்சாலைகளாலும், நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாததாலும் நிலத்தடி நீர் மாசுப்படுதல் அன்றாடம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி அரசு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு நகலைப் பெற்று அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். புதுச்சேரியில் மரங்கள் நிறைய வெட்டப்படுவதால் இத்தீர்ப்பை செயல்படுவத்துவது சுற்றுச்சூழலை ஓரளவாவது பாதுகாக்க உதவும்.
இந்த தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டக்கூடாது. தவிர்க்கவே முடியாத சூழலில்தான் மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வோடு அரசு செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment