Wednesday, March 28, 2007

துறைமுகத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் : 3000 பேர் கைது


புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து 27-03-2007 செவ்வாய்க்கிழமை சட்டசபை முற்றுகைப் போராட்டம் மற்றும் ரேசன் அட்டை நகல்கள் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், தேங்காய்த்திட்டு பகுதி மக்களை வெளியேற்றும் சூழல் ஏற்படும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இத் திட்டத்தை எதிர்த்துப் போராட தேங்காய்த்திட்டு பகுதி மக்கள் நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கி போராடி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு தரப்பு மக்களை ஒன்றிணைத்து குழு ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இக் குழு சார்பில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப்பேரவை கூடும் நாளன்று ரேசன் அட்டை நகல்களை ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

சட்டப்பேரவை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் தடுப்பு வேலிகள் கட்டப்பட்டன. ஊழியர்கள்கூட தீவிர சோதனைக்குப் பிறகே சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த மொத்த போலீசாரும் சட்டப்பேரவை அருகேயும், மக்கள் ஊர்வலம் செல்லும் பகுதிகளிலும் குவிக்கப்பட்டனர்.

நகல் எரிப்புப் போராட்டம் நடத்த இருந்த பொதுமக்கள், பழைய பேருந்து நிலையம் அருகே கூடி, ஊர்வலமாக சட்டப்பேரவையை நோக்கி வந்தனர்.

இந்த ஊர்வலத்தில் தேங்காய்த்திட்டு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் க.லட்சுமிநாராயணன், புஸ்சி ஆனந்து, வி.கே.கணபதி, பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன், அரசு ஊழியர் சம்மேளனப் பொதுச்செயலாளர் பாலமோகனன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தங்க.கலைமாறன், விடுதலைச் சிறுத்தைகள் அரசு.வணங்காமுடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பாலாஜி, மா.இளங்கோ, வீராம்பட்டினம் கவுன்சிலர் பா.சக்திவேல், தலைவர் காங்கேயன், முன்னாள் தலைவர் விசுவநாதன், இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் சஞ்சீவி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, முதலியார்பேட்டை வியாபாரிகள் சங்க வி.இராஜசேகரன் உள்ளிட்ட 3000 பேர் பங்கேற்றனர்.

ரேசன் அட்டை நகல் எரிப்பு


அண்ணாசாலை வழியாக ஊர்வலம் வந்த இவர்கள் துறைமுகத்துறை அமைச்சர் வல்சராஜுக்கு எதிராக கடுமையான முழக்கங்களை எழுப்பினர். இவர்கள் காமராஜர் சிலை அருகே வரும்போது போலீசார் இவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சட்டப்பேரவையில் ஒப்படைக்க கொண்டு வந்த ரேசன் அட்டை நகல்களை சாலையின் நடுவில் போட்டு தீ வைத்து எரித்தனர். அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதையடுத்து 1000 பெண்கள் உள்பட 3000 பேரை போலீசார் கைது செய்தனர்.

முதலியார்பேட்டையில் கடையடைப்பு

முதலியார்பேட்டை வியாபாரிகள் சங்கத்தினர் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியிலுள்ள கடைகள் அனைத்தையும் மூடியிருந்தனர்.



போராட்டத்தை முன்னிட்டு, புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சாயா சர்மா தலைமையில் தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் கந்தநாதன், ஆயுதப்படை காவல் கண்காணிப்பாளர் சிவதாசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

No comments: