மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் 06-03-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி மத்திய சிறையில் சிறைவாசி ஒருவர் இறந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்.
அரியாங்குப்பம், மணவெளியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் கடந்த 4-ஆம் தேதி மத்திய சிறையில் மாடியிலிருந்து கீழே குதித்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர் சாவில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும், அவர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கூறியுள்ளனர்.
காவல் நிலையங்கள் போலவே சிறைச்சாலைகளும் பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருவது கண்டனத்துக்குரியது. நீதிமன்ற காவலில் நிகழ்ந்த இந்த மரணம் குறித்து புதுச்சேரி அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சிறையில் இறந்தவர் கொடிய குற்றவாளி அல்ல. குடும்ப வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர் சிறையில் இருக்க நேரிட்டதையும் அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.
கடந்த ஓராண்டில் மட்டும் புதுச்சேரி மத்திய சிறையில் 5 பேர் இறந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் விஷச்சாராயம் குடித்து சிறைவாசிகள் இறந்தது பற்றி விசாரித்த நீதிபதி பி.வேணுகோபால் கமிஷன் அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2005-இல் தாக்கல் செய்த அறிக்கையைப் படித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்படுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.
சிறை சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகள் வழங்கியுள்ளது. இதுபற்றி அரசு அதிகாரிகள் கவலைப்படமால் இருப்பது சட்டத்துக்குப் புறம்பானது. சிறைச்சாலைகளை பார்வையிட்டு அரசுக்கு உரிய பரிந்துரைகளை அவ்வப்போது தெரிவிக்க மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழு ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment