
4-3-2007 ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரிக்கு வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தேங்காய்த்திட்டுப் பகுதி மக்களைச் சந்தித்து பேசினார்.
புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தேங்காய்த்திட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வருகின்றனர்.
இந் நிலையில் புதுச்சேரி வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தேங்காய்த்திட்டு பகுதிக்குச் சென்றார். அவருக்கு மரப்பாலம் அருகே நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுவின் தலைவர் காளியப்பன் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தேங்காய்த்திட்டு மக்களைச் சந்தித்து அவர் பேசினார். அப்போது "துறைமுக விரிவாக்கத்துக்காக தேங்காய்த்திட்டு பகுதிகளில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளதாகவும், இதனால் தங்கள் கிராமத்தை காலி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், "உலக மயமாக்கலின் தொடர்ச்சியாக தொழிற்பேட்டை மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க விளை நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. விளை நிலங்களை இதுபோன்ற காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
இது உலக அளவில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆதரவான செயலாகும். இதை மக்கள் போராட்டத்தின் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்.
துறைமுக விரிவாக்கத் திட்டம் தொடர்பாக தேங்காய்த்திட்டு மக்களின் போராட்டத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு மக்களுக்கு எதிராக விளைநிலங்களை ஆர்ஜிதம் செய்து அளிக்கக் கூடாது. இதனை தடுக்க இயக்கம் நடத்தி, போராடவும் தயாராக வேண்டும்' என்றார்.
புதுவை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், செம்படுகை நன்னீரகம் கு.இராமமூர்த்தி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
1 comment:
aribol prabu
fron chile
Post a Comment