Sunday, May 06, 2007

அது ஒரு பொடா காலம் (பகுதி-4) சுப.வீரபாண்டியன்

‘சிறை மொழி’ என்றே ஓர் அகராதி தயாரிக்கலாம். விதவிதமான சொல்லாடல்கள். உள்ளே போய்ச் சில நாள்களில் நமக்கும் புரிந்துவிடும். மனு, ஆல்டி, டர்க்கி, ரைட்டன், படி என்று பல சொற்கள் அங்கு புழங்கும். நண்பர்களோ, உறவினர்களோ நம்மைப் பார்க்க வந்துள்ளனர் என்பதை ‘மனு வந்திருக்கு’ என்றுதான் சொல்வார்கள். முதல் வகுப்பில் கைதிகளாக உள்ளவர்களுக்கு உதவி செய்ய அனுப்பப்படும் இன்னொரு கைதியின் பெயர் ‘ஆல்டி’. (ஆர்டர்லி என்னும் ஆங்கிலச் சொல்லே அப்படித் திரிந்துவிட்டதாகப் பிறகு அறிந்தேன்.)

எப்போதும் போதையிலேயே இருப்பவன், ‘டர்க்கி’; ஒரு தொகுதியில் எத்தனை கைதிகள் இருக்கின்றனர் என்பதைக் கணக்கெடுப்பதில் காவலர்களுக்கு உதவுகிற கைதியின் பெயர் ‘ரைட்டன்’; உணவின் மறு பெயர் ‘படி’. வேளாவேளைக்குப் படி அளப்பார்கள்.

அன்று காலை, எனக்கு மனு வந்தது. மகிழ்வோடும், கூடவே ஒருவித அச்சத்தோடும் நடந்தேன்.

30.08.02 இரவே பேரன் பிறந்துவிட்ட செய்தியையும், மகள் நலமுடன் உள்ள செய்தியையும் ‘மனு’வில் அறிந்து மகிழ்ந்தேன். ஏற்கெனவே மகன் வழியில் ஒரு பேத்தி ஓவியா; இப்போது மகள் வழியில் ஒரு பேரன்.

‘பிள்ளைகள், பேரன், பேத்தி பெறற்கரும் அரிய பேறும் அள்ளவே குறைந்திடாத அன்பையும் உலகில் பெற்ற’ மகிழ்வோடு மறுபடியும் என் தொகுதிக்குத் திரும்பினேன்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, ஒரு மாலையில், எங்கள் தொகுதியில் காலியாக உள்ள மற்ற அறைகளையும் சுத்தப்படுத்தினர். யாரோ வருகிறார்கள் என்று பொருள். யாரென்று கேட்டேன். காவலர்களுக்குத் தெரியவில்லை. அதிகாரிகள் சொல்லவில்லை. வழக்கம் போல, மாலை 6 மணிக்கு அறையில் வைத்து எங்களைப் பூட்டிவிட்டார்கள்.

இரவு 8 மணியளவில், வெள்ளைச் சட்டை, கட்சிக் கரை வேட்டியுடன் இருவரைக் காவலர்கள் அழைத்து வந்தனர். அருகில் வந்தவுடன் முகம் தெரிந்தது. எங்களுக்கு முன்பே பொடாவில் கைதாகி, வெவ்வேறு சிறைகளில் உள்ள ம.தி.மு.க. நண்பர்களே அவர்கள்! ஈரோடு கணேசமூர்த்தியும், புலவர் செவந்தியப்பனும், மதுரைச் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறிது நேரத்தில் திருச்சி சிறையிலிருந்து சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.மணியம், வழக்குரைஞர் அழகுசுந்தரம், மதுரை கணேசன், திருமங்கலம் நாகராஜன் ஆகியோர் வந்தனர். இறுதியாக சேலம் சிறையிலிருந்து வீர.இளவரசன், பூமிநாதன் வந்து சேர்ந்தார்கள்.

பதினைந்து நாள்களுக்குப் பிறகு, இரவில் மனித நடமாட்டத்தைப் பார்த்த மகிழ்ச்சி. கம்பிகளுக்கிடையில் கை நீட்டி அவர்களை வரவேற்றேன். சிறை மறந்து எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஒருவரையருவர் விசாரித்துக் கொண்டோம். எப்படித் தெரியுமா... ‘‘ஒங்க சிறை எப்பிடியிருக்கு?’’, ‘‘திருச்சியைவிட மதுரை ஜெயில் பரவாயில்லையா?’’ இப்படி!

அடுத்த நாள், அவர்களுக்குப் பூவிருந்தவல்லி பொடா நீதிமன்றத்தில் வழக்கு. அதற்காக முதல் நாள் இரவு இங்கு கொண்டுவந்துள்ளனர். இது வெறும் இரவுத் தங்கல். பொழுது விடிந்தால் வேடந்தாங்கல் கலைந்து விடும் என்று தெரிந்ததும், என் மகிழ்ச்சி வடிந்துவிட்டது. மீண்டும் அவர்களைச் சந்திக்க ஒரு மாதம் ஆகலாம்!

பொதுவாக எந்த ஒரு கைதியையும், 15 நாள்களுக்கு ஒருமுறை நீதிமன்றம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதி. அப்படி அழைத்துச் செல்லப்படும்போது ஊரை, உலகைப் பார்க்கலாம் என்பதோடு, நீதிமன்றத்தில் உறவினர்களையும் பார்க்கலாம்.

வழிக்காவல் (escorts) வருகிறவர் அனுமதியோடு வீட்டு உணவையும் ஒரு வேளை சுவை பார்க்கலாம். வழக்கிலும் சில முன் நகர்வுகள் ஏற்படலாம். இப்படிப் பல நன்மைகள் உள்ளதால், நீதிமன்றம் செல்லும் நாளை விசாரணைக் கைதிகள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.

பொடா கைதிகளுக்கு அதிலும் ஒரு மாற்றம். ஒரு மாதத்துக்கு ஒருமுறை நீதிமன்றம் அழைத்துச் சென்றால் போதும் என்கிறது பொடா சட்டம்.

பொடா (POTA-Prevention of Terrorist Act 2002) போன்ற சட்டங்கள் இந்தியாவுக்குப் புதியவை அல்ல. ஏறத்தாழ 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டபோது, இதுபோன்ற பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்தது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, ரௌலட் சட்டம்.

வெள்ளைக்கார நீதிபதி ரௌலட்டும், சென்னையில் நீதிபதியாக இருந்த சி.வி.குப்புசாமி சாஸ்திரியும் சேர்ந்து அந்தக் கொடுமையான சட்ட முன் வடிவை அரசுக்கு அளித்தனர். அதனை அப்போது சென்னை, திலகர் பவனில் (இப்போது ‘சோழா’ ஓட்டல் இருக்குமிடம்) தங்கியிருந்த காந்தியடிகள் கடுமையாக எதிர்த்தார். அன்னி பெசன்ட், வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, எஸ்.சுப்பிரமணிய அய்யர், ஜி.ஏ.நடேசன் ஆகியோர் ஆதரித்தனர்.

இறுதியில் 1919-ம் ஆண்டு அச்சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. அதனை எதிர்த்து பஞ்சாப், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் 1919 ஏப்ரல் 13 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். அவர்களைக் கலைக்க ஆங்கில அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் (1650 ரவுண்டுகள்) 800-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

விடுதலை பெற்ற இந்தியாவிலும் ரௌலட்-சாஸ்திரி சட்டத்தின் மறுபதிப்புகள் வந்துகொண்டே இருந்தன. ‘டி.ஐ.ஆர்’ (D.I.R- Defence of Indian Rules) சட்டத்தின் கீழ்தான் 1965-ல் கலைஞர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

1971-ம் ஆண்டு ‘மிசா’ (Maintenance of Internal security Act-MISA) சட்டமும், 1985-ம் ஆண்டு ‘தடா’ (TADA- The Terrorist and Disruptive Activities prevention Act) சட்டமும் நடைமுறைக்கு வந்தன. அந்தச் சட்டங்களின் மறு பதிப்பும் மலிவுப் பதிப்பும்தான் பொடா!

ஆகவே, மற்ற சட்டங்களின் கீழ் பெறக்கூடிய இயல்பான உரிமைகளைக்கூட, நாங்கள் இழக்க வேண்டியதாயிற்று. அச்சட்டத்தின் பெயரால், எத்தனை விதமான ஒடுக்குமுறைகள் அரங்கேற்றப்படுகின்றன என்பதை 13.09.2002 அன்று நான் நேரடியாகவே உணர்ந்தேன்.

அன்றுதான், நான் கைது செய்யப்பட்ட பிறகு முதன்முறையாகச் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறேன். மற்ற கைதிகளைப் போல, எனக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி இருந்தது. காலை 10 மணிக்குச் சிறையைத் தாண்டிக் காலடி எடுத்து வைத்த நான் அதிர்ச்சிக்குள்ளானேன்.

(தொடரும்)

நன்றி : ஆனந்த விகடன்.

2 comments:

Anonymous said...

சுபவீ-யின் பொடா காலம் சுகுமாரன் பக்கத்தில் ஏன்? subavee.blogspot.com இருக்கிறதே.. சுகுமாரன் ஒரு சாதாரண வலை மேய்பவராக இருந்து.. தான் படித்ததை பிறரும் படிக்கத் தருவது குற்றமல்ல.. ஆனால்.. சுகுமாரனையும் ஒரு களப்பணியாளராக பார்க்கும் என்னைப் போன்றவர்கள்.. அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.. அவருடைய நேரடியான அனுபவங்களையும் கருத்துக்களையும் இன்னும் நிறைய அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.. இம்மாதிரி ஏற்கெனவே இதழ்களில் அல்லது பிற வலைப் பக்கங்களில் வெளி வந்த செய்திகளை அல்ல.. இதே பாணியில் உங்கள் பக்கம் தொடர்ந்தால்.. வெகு விரைவில் அதற்கு வரவேற்பு குறைந்துவிடும்.. அதனால் நண்பர் சுகுமாரன் அவர்களே.. குற்றம் சாட்டுவதாக எண்ணாது.. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். விரைவில் புதிய பொலிவோடு உங்கள் தளத்தை காண விரும்புகிறேன்.

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

என் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ள அனானி நண்பரே! மிக்க நன்றி.

பொடா சட்டம், அது சட்ட முன்வரைவாக இருந்த போதே, யாரும் எதிர்த்து ஒன்றும் செய்யாத அக்கால கட்டத்திலேயே, அதை எதிர்த்து புதுச்சேரியில் மிகப் பெரும் பேரணி-மாநாடு நடத்தியவன் என்ற முறையில் பொடா குறித்து எந்த செய்தி வந்தாலும், அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவது என் கடமை என்று நினைக்கிறேன்.

சுபவீ-யின் வலை தளத்தைப் பார்ப்பவர்கள் அனைவரும் என் தளத்தையும் பார்ப்பார்கள் என்பதும், என் தளத்தைப் பார்ப்பவர்கள் சுபவீ-யின் தளத்தைப் பார்ப்பார்கள் என்பதும் தவறானது. உங்களைப் போன்ற வலை தளத்தில் உட்புகுந்து வருபவர்களுக்கு திரும்ப திரும்ப படிப்பது ஒரு வேலை ’போர்’ அடிக்கலாம். ஆனால், குறிப்பிட்ட தளங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்குச் சென்றடைய வேண்டுமென்பதால் அவ்வாறு மறுபதிப்பு செய்கிறேன்.

’தான் படித்ததை பிறரும் படிக்கத் தருவது குற்றமல்ல..’ - அனானி.

இன்னொன்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நான் களப்பணிக்கு முன்னுரிமைக் கொடுப்பவன். இதனால் பல சந்தர்ப்பங்களில் எழுத நிறைய இருந்தும் எழுத முடியாமல் போய்விடுவது உண்மைதான்.

நான் முன்னெடுக்கும் சிக்கல்கள், அது தொடர்பாக விடுக்கும் அறிக்கைகள், போராட்ட செய்திகள், கருத்துகள், புகைப்படங்கள்... என ஒரு பன்முகப்பட்ட கருத்துப் பெட்டகமாகத்தான் என் தளத்தை உருவாக்கி வருகிறேன். இதில் குறைந்த அளவே மற்றவர்களின் செய்திகளைப் பதிகிறேன். இதற்கே இப்படியா?

எனினும் தங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிகிறேன். மீணடும் நன்றி.