Saturday, December 29, 2007

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குண்டுவீச்சில் காயம் அடைந்தது உண்மையல்ல - பழ.நெடுமாறன்


பழ.நெடுமாறன் (கோப்புப் படம்)

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் 29-12-2007 சனியன்று காலை 11.30 மணிக்கு, விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குண்டுவீச்சில் காயம் அடைந்தது உண்மையல்ல. வெறும் வதந்திதான். இதனை விடுதலைப் புலிகளே மறுத்துள்ளனர். ஏற்கனவே நான்கு முறை இதுபோன்ற செய்திகள் வெளிவந்துள்ளன. சில சமையங்களில் அவர் இறந்துவிட்டதாகக் கூட செய்தி வந்தது. அவையெல்லாம் உண்மையல்ல என்பது நிரூபனமானது. பிரபாகரன் ஈழப் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்.

1948 பிப்ரவரி 4 அன்று இலங்கை விடுதலை பெற்றதிலிருந்து தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் சிங்கள் ஆட்சியாளர்களால் தொடரப்பட்டன. இலங்கையில் தோட்டத் தொழிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஐந்து தலைமுறைக்கும் மேலாக உழைத்து அந்நாட்டை வலமாக்கிய இந்திய வம்சாவழித் தமிழர்கள் எனப்படும் மலையகத் தமிழர்கள், குடியுரிமைப் பறிக்கப்பட்டு, அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.

ஈழத் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கப்பட்டார்கள். அவர்களின் கல்வி, நில, மொழி உரிமைகள் பறிக்கப்பட்டன. இலங்கை வாழ் தமிழர்களை உரிமையற்றவர்களாக மாற்றிய இலங்கை விடுதலை நாளை துக்க நாளாக தமிழர்கள் கடந்த 60 ஆண்டு காலமாக தமிழர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலைமைகளையும் சிங்கள் இனப் பேரினவாத அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்திவரும் இனப் படுகொலைகளையும் கவனத்தில் கொள்ளாமல், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை விடுதலைநாள் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தனது இலங்கைச் சுற்றுப் பயணத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 18-12-2007 அன்று இந்தியப் பாதுகாப்புச் செயலர் தலைமையிலான உயர்மட்டக் குழுவும், இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகர தலைமையிலான சிங்கள உயர்மட்ட குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கைக்கு ராடார் சாதனங்கள் மற்றும் இராணுவ தளவாடங்கள் அளிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்தியா வழங்கும் இந்த ஆயுதங்கள் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கப் பயன்படுத்தப்படும் என நன்கு தெரிந்தும் இந்திய அரசு, சிங்கள அரசுக்கு உதவுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இராணுவ ரீதியான உதவிகளை உடனடியாக நிறுத்தும்படி வலியுறுத்துகிறேன்.

சிங்கள இராணுவ விமானங்களை ஓட்டுவதற்கு பாகிஸ்தான் விமானிகளைப் பயன்படுத்தி, தமிழர் பகுதிகளில் குண்டுவீசி அப்பாவி தமிழர்களை சிங்கள அரசு கொன்றுக் குவித்து வருகிறது. இந்நிலையில், இந்திய - இலங்கை விமானப் படைகள் கூட்டாக ரோந்துப் பணியாற்ற முடிவு செய்துள்ளனர். அதனைக் கைவிட வேண்டும்.

ஈழத்தில் பட்டினியால் வாடும் மக்களுக்காக செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அனுப்ப இந்திய அரசு அனுமதிக்கவில்லை.

இதற்காக உண்ணாவிரதம் இருந்தபோது, அதை முடித்துக் கொள்ளும்படியும், மத்திய அரசிடம் பேசி அனுமதி பெற்றுத் தருவதாகவும் முதல்வர் கருணாநிதி உறுதிமொழி கடிதம் கொடுத்தார்.

டாக்டர் இராமதாஸ், வைகோ, நல்லக்கண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்டோரும் வேண்டுகோள் விடுத்தனர். இச் சம்பவம் முடிந்து 100 நாள்கள் ஆகின்றன.

இதற்கு அனுமதி அளிக்காதைக் கண்டித்துக் கூட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படும்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்றோர் தாங்கள் அரசியலில் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவே தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக அடிக்கடி கூறி வருகின்றனர்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

4 comments:

Anonymous said...

சுகுமாரன்...

காலை 11 மணிக்கு கொடுத்தப் பேட்டியை கொஞ்சம் முன்னதாக வெளிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே.

முக்கியமானப் பேட்டி அல்லவா?

பிரபாகரன் காயம்பட்டதாக வந்த பொய்ச் செய்தியை தமிழ்நாட்டில் யாருமே மறுக்க்கவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்தேன்.

பழ.நெடுமாறன் போற்றுதலுக்குரியவர்.

ஜாஸ்மின், இலண்டன்.

நண்பன் said...

இதற்கு முன்னரும் இது மாதிரி செய்திகள் வந்து, பின்னர் பிரபாகரன் அன்றைய தினசரி செய்தித் தாளை வாசிப்பதைப் புகைப்படம் எடுத்துப் போட்டு நிரூபணம் செய்தனர் - அவருக்கு எதுவும் நிகழவில்லை என்று.

எப்படி ஒரு அரசால், இவ்வாறு அப்பட்டமாக ஒரு பொய்யைப் புனைந்து பரப்ப மனம் வருகிறது என்று தெரியவில்லை. இந்த விஷயத்திலே நேர்மையற்றவர்கள், எப்படி பேச்சுவார்த்தைகளின் போது நியாயமுடையவர்களாக நடந்து கொள்வார்கள்?

இலங்கை அரசு ஈனப்புத்தியுடன் செயல்படுகிறது என்பதே இந்தச் செய்தியின் சாரம். உளவியல் ரீதியாக தாக்குகிறோம் என்று எண்ணிக் கொண்டு, தன் நம்பகத் தன்மையை ஏன் இவர்கள் இப்படி கெடுத்துக் கொள்கிறார்கள்?

manjoorraja said...

உண்மையை வெளிப்படுத்தியதற்கு நன்றி நண்பரே

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

நண்பர் மாசிலா அவர்களுக்கு,

தங்கள் பின்னூட்டத்தை மறுபடியும் அனுப்பி உதவவும்...