Sunday, November 08, 2009

டாக்டர் கே. பாலகோபால் எழுதிய "வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்" நூல் வெளியீடு!



மனித உரிமைப் போராளி டாக்டர் கே. பாலகோபால் மறைவையொட்டி மனித உரிமைக்கான மக்கள் கழகம் மற்றும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் "வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்" என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 30.10.2009 அன்று, புக்பாயிண்டில், மாலை 7 முதல் 9.30 மணிவரை நடந்த பாலகோபால் நினைவஞ்சலி கூட்டத்தில் இந்நூல் வெளியிடப்பட்டது. இந்நூலினை பேராசிரியர் அ.மார்க்ஸ் தொகுத்தும், மொழியாக்கமும் செய்துள்ளார்.

பாலகோபால் நேர்காணல் ஒன்றும், அவர் எக்னாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லியில் எழுதிய வன்முறை குறித்த கட்டுரை மொழியாக்கமும் நூலில் இடம்பெற்றுள்ளன.

நூலினை வழக்கம் போல் "புலம்" அமைப்பினர் நேர்த்தியாக தயாரித்துள்ளனர். 48 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ. 18/-

மனித உரிமைத் தளத்தில் ஆழமான தடம் பதித்த பாலகோபால் வன்முறை பற்றி கொண்டிருந்த கருத்து முழுமையாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது. வன்முறையற்ற அவரது கருத்தும் செயல்பாடுகளும் மனித உரிமை ஆர்வலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையற்ற வழிமுறைகளையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுவதோடு, வன்முறை குறித்த ஆழமான பார்வை முன்வைக்கிறார் பாலகோபால். தற்போது அவரின் வன்முறை பற்றிய கருத்து இந்திய அளவில் மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

நூல் கிடைக்குமிடம்:

புலம்,
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
பேசி: 97898 64555.
மின்னஞ்சல்: pulam2008@gmail.com

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு,
179-அ, (மாடி), மகாத்மா காந்தி வீதி,
புதுச்சேரி - 605 001.
பேச: 98940 54640.
மின்னஞ்சல்: peoples_rights@hotmail.com

மனித உரிமைக்கான மக்கள் கழகம்,
3/5, முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர், அடையாறு,
சென்னை - 600 020.
பேசி: 94441 20582.

Saturday, October 31, 2009

இலங்கையில் முகாமிற்குள் சிறைப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழுக் கூட்டம், 27.10.2009 அன்று மாலை 7 மணியளவில், கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் சூ.சின்னப்பா, சு.சாமிநாதன், பா.மார்கண்டன், கி.கண்ணன், மு.பொன்னுசாமி, ச.கோவிந்தசாமி, சு.காளிதாஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1) இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் முள் வேளி முகாமிற்குள் 3 லட்சம் தமிழர்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைக்கு எதிரான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய - தமிழக அரசுகள் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து சிறைப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை விடுவிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

2) கிராம பஞ்சாயத்துகளுக்கு அண்டை மாநிலங்களில் உள்ளது போல் அனைத்து அதிகாரங்களையும் உடனே வழங்கி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்த ஆவன செய்ய புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.

3) தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளின் போது 7 ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யபடுகின்றனர். அதே போல், வரும் டிசம்பர் 8, சோனியா காந்தி பிறந்த நாளன்று, புதுச்சேரி சிறைகளில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால், நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர் புலவர் கலியபெருமாள் மனைவி வாளாம்பாள், தனித் தமிழ்க் கழகத்தின் காப்பாளர் தேசிகன் (எ) திருநாவுக்கரசு ஆகியோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday, October 22, 2009

மேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

மதுரை, மேலூர் அருகேயுள்ள மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த 30.06.1996 அன்று ஆதிக்கச் சாதி வெறியர்களால் பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டனர். தலித் ஒருவர் தங்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவராக வருவதா என்ற ஆதிக்க எண்ணத்தில் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றினர் ஆதிக்கச் சாதியினர். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர் போராட்டத்தின் விளைவாக குற்றவாளிகள் 17 பேருக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

இத்தீர்ப்பை எதிர்த்து, குற்றாவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம், என்.பால் வசந்தகுமார் ஆகியோர் கடந்த 19.04.2006 அன்று குற்றவாளிகளுக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டதையும் உறுதி செய்தனர்.

குற்றவாளிகள் இத்தீர்ப்பையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் வி.எஸ்.சிர்புக்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இவ்வழக்கில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கனகராஜ் ஆஜரானார். வழக்கு விசாரணை கடந்த 23.09.2009 அன்று முடிவு பெற்று தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வி.எஸ்.சிர்புக்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் 17 பேருக்கும் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமையில் அக்கறையுடைய அனைவர் மத்தியிலும் இந்த தீர்ப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதி வெறிக்கு இந்த தீர்ப்பு சம்மட்டி அடிக் கொடுத்துள்ளது.

தொடக்கம் முதல் இந்த வழக்கில் சட்ட ரீதியாகவும், தொடர் இயக்கம் மூலம் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிக் கிடைக்க போராடிய வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களையும், அவரோடு துணை நின்ற அனைவரையும் பாராட்ட வேண்டும். இந்த வழக்கில் அவருக்கு துணையாக இருந்து பங்களித்தமைக்கு நான் பெரிதும் மகிழ்கிறேன்.

இவ்வழக்கை வைத்து அரசியல் செய்த தலித் கட்சி, ஒரு கட்டத்தில் இவ்வழக்கு பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல் போன நிலையிலும், வழக்கறிஞர் பொ.இரத்தினம் போன்றவர்கள் விடாது போராடி நீதியை நிலை நிறுத்தியதை மனதார பாராட்டுகிறேன்.

Friday, October 09, 2009

மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்!

வாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10.2009), ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு மனைவி (வசந்தாலஷ்மி), ஒரு மகன் (பிரகதா) உள்ளனர். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஈடு செய்ய முடியாத இழப்பு இது. மனித உரிமைத் தளத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டி.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் பிறந்த பாலகோபால், கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.வாராங்கலிலுள்ள கக்காடியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவர். நக்சல்பாரி அரசியல் மீது ஏற்பட்ட ஈர்ப்புக் காரணமாக அவர் தன் வேலையை உதறிவிட்டு, மனித உரிமைக் களத்தில் இறங்கியவர்.

காவல் மரணங்கள், போலி மோதல், மரண தணடனை ஒழிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்திப் போராடியவர். 'ஆந்திரபிரதேச சிவில் உரிமைக் குழு' என்ற அமைப்பில் பணியாற்றியவர். நக்சலைட் அமைப்புடன் முரண்பாடு ஏற்பட்டு, தனியாக 'மனித உரிமை அமைப்பு' நிறுவி செயல்பட்டவர்.

80-களில் ஆந்திர போலீசார் முன்னின்று நடத்திய 'பிரஜா பந்து' என்று அமைப்பினரால் கடத்தப்பட்டவர். இவரைக் கடத்தி வைத்துக் கொண்டு நக்சலைட் அமைப்பினர் பிடியில் இருந்த இரண்டு போலீசாரை விடுவிக்க 'பிரஜா பந்து' அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். பின்னர் நக்சலைட்கள் இரண்டு போலீசாரையும் விடுவித்த பின்னர் விடுவிக்கப்பட்டவர்.

போலி மோதல் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வாதாடி, போலி மோதல் நடந்தால் இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்கீழ் போலீசார் மீது வழக்குப் பதிய வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பெற்றுத் தந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர்.

தலை சிறந்த எழுத்தாளர். தொடர்ந்து EPW போன்ற இதழ்களில் எழுதி வந்தவர். அவரது எழுத்தில் நேர்மையும், கறாரான பார்வையும் வெளிப்படும். சில ஆண்டுகளுக்கு முன் அவரை நேர்காணல் கண்டது நெகிழ்வான அனுபவம்.

1992 முதல் அவரோடு நான் நெருக்கமான உறவுக் கொண்டவன். 1996-இல் போலீசாரின் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் அந்திராவின் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த நான்கு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, போலி மோதல் குறித்து ஆய்வு மேற்கொண்டது மறக்க முடியாதது. 1998-இல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட போது, அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர்.

ஒரிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கிறித்துவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்த உண்மை அறியும் குழுவில் இடம்பெற்று அவ்ரோடு பணியாற்றினேன். அதுதான் அவரை கடைசியாக பார்த்தது. கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி முஸ்லீம் இடஒதுக்கீடு குறித்து அவரிடம் விரிவாக தொலைபேசியில் உரையாடியதுதான் கடைசி பேச்சு.

அவரது உடல் இன்று (09.10.2009) மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது. அவரது இறப்பிற்கு இந்தியா முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். இன்னும் விரிவாக பாலகோபால் பற்றி எழுத உள்ளேன். இந்தப் பதிவையும் கூட அழுகையை அடக்கிக் கொண்டுதான் எழுதினேன்.

பழங்குடி இருளர் தாக்கப்பட்ட வழக்கு: குற்றவாளிகளை விடுவிக்க காரணமாக இருந்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி (கல்யாணி) ஆகியோர் 08.10.2009, காலை 11 மணிக்கு, புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது:

பழங்குடி இருளர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில், எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியை விடுவிக்க காரணமாக இருந்த மத்திய இணை அமைச்சர் வே.நாராயணசாமி, ஏம்பலம் எம்.எல்.ஏ. ஆர்.ராஜாராமன் மற்றும் கண்டமங்கலம் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளோம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்தவர்களிடம் முன்பணமாக ஒரு தொகை கொடுத்துவிட்டு, செங்கல் சூளைகளில் அவர்களை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குவது வழக்கம். விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மனைவி சகுந்தலா ஆகியோர் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் செங்கல் சூளையில் ரூபாய் 36 ஆயிரம் முன் பணம் பெற்றுக் கொண்டு கொத்தடிமையாக வேலைப் பார்த்து வந்தனர். அங்கு மேற்சொன்ன வெங்கடேஷ் இருவரையும் அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால், இருவரும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறி சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், மேற்சொன்ன வெங்கடேஷ் இந்த இருவரையும் தேடி அவர்களது சொந்த ஊரான ரெட்டணைக்கு இரண்டு முறை சென்றுள்ளார். அவர்கள் அங்கு இல்லாத காரணத்தால் கடந்த 24.09.2009 அன்று மேற்சொன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாட்கள் மூன்று பேர், விக்கிரவாண்டி அருகேயுள்ள தக்காமேடு இருளர் குடியிருப்பில் உள்ள அவர்களது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு ஏழுமலை மற்றும் சகுந்தலா ஆகியோரின் மகள் தனம் (வயது: 25) மற்றும் அவரது கணவர் விஜி (வயது: 28) ஆகியோர் இருந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த தனத்திடம் ‘எங்கே உன் அப்பா, அம்மா’ என்று கேட்டு விசாரித்துள்ளனர். அதற்கு தனம் ‘எங்கள் அப்பா, அம்மா செங்கல் சூளையில் வேலை செய்ய வெளியூர் சென்றுள்ளனர்’ என்று பதில் கூறியுள்ளார். அப்போது மேற்சொன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாட்கள் மூவரும் தனத்தின் கணவர் விஜியை கடுமையாக அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக தாங்கள் கொண்டு வந்த காரில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளனர். அதைத் தடுக்கச் சென்ற தனத்தையும் தாக்கியுள்ளனர்.

பின்னர் அவரை கரிக்கலாம்பாக்கத்திலுள்ள ஒரு பழைய வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர், தனம் தன் கணவர் செல் போனிற்குப் பல முறை தொடர்புக் கொண்டு கேட்டதற்கு ‘உன் அப்பா பெற்ற பணத்தைக் கொடுத்துவிட்டு உன் கணவரை அழைத்துச் செல்’ என்று வெங்கடேஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து, தனம், கடத்தப்பட்ட தன் கணவரை மீட்கக் கோரியும், கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட மேற்சொன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாட்கள் மூவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் நடவடிக்கை எடுக்கும்படியும் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் 25.09.2009 அன்று பிற்பகல் தன் உறவினர்களோடு சென்று புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட விக்கிரவாண்டி போலீசார் புகார் மனு ஏற்புச் சான்றிதழ் வழங்கியுள்ளனர். பின்னர் அங்குப் பணியில் இருந்த விக்கிரவாண்டி காவல்நிலைய எஸ்.ஐ. ராஜாராம் கடத்தலில் ஈடுபட்ட வெங்கடேசை தொடர்புக் கொண்டுப் பேசியுள்ளார். அதன் பின்னர், அன்றைய தினம் மாலை 7 மணியளவில் மேற்சொன்ன வெங்கடேஷ் கடத்தப்பட்ட விஜியுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். பிறகு எஸ்.ஐ. ராஜாராம் புகார் அளித்த தனம் மற்றும் அவரது உறவினர்களை மறுநாள் காலை வந்து முதல் தகவல் அறிக்கை பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

அதன் பின்னர், மறுநாள் (26.09.2009) காலை மேற்சொன்ன தனத்தின் குடியிருப்புக்கு அருகிலுள்ள ரைஸ் மில் உரிமையாளரும், அதிமுக பிரமுகர்களுமான ரமேஷ், சேகர் ஆகியோர் புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டியுள்ளனர். பிறகு தனம் மற்றும் அவர்களது உறவினர்கள் விக்கிரவாண்டி காவல்நிலையம் சென்று முதல் தகவல் அறிக்கை கேட்டுள்ளனர். அப்போது, பணியிலிருந்த எஸ்.ஐ. ராஜாராம் ‘உங்கள் புகாரை டி.எஸ்.பி-க்கு அனுப்பி வைத்துவிட்டோம். செங்கல் சூளை உரிமையாளரையும் டி.எஸ்.பி.யிடம் அனுப்பி வைத்துள்ளோம். அங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தன் கணவரை கடத்தியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி. மற்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு மேற்சொன்ன தனம் விரிவான புகார் மனு ஒன்றை கடந்த 26.09.2009 அன்று அனுப்பி வைத்துள்ளார்.

இதனிடையே, விக்கிரவாண்டி போலீசார் மேற்சொன்ன தனம் அளித்த புகார் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். (FIR No. 425/09 U/s 352, 363 IPC r/w 3 (I) (X) SC ST (Prevention of Atrocities) Act). ஆனால், காவல்நிலையத்தில் சரணடைந்த குற்றாவாளி வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாள் ஒருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, குற்றவாளிகளைக் காவல்நிலையத்தில் இருந்து விடுவித்துள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்குப் போட்டால், குற்றவாளிகள் முன் ஜாமீன் பெற முடியாது. இந்த சட்டப் பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விசாரித்ததில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வே.நாராயணசாமி, தி.மு.க. ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.ராஜாராமன் மற்றும் கண்டமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் இவ்வழக்கில் தலையிட்டு, மேற்சொன்ன குற்றவாளிகள் சிறைக்கு செல்லாமல் இருக்க போலீசாருக்கு நிர்பந்தம் கொடுத்துள்ளது தெரிய வந்தது. இது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கடந்த 28.09.2009 அன்று விழுப்புரம் எஸ்.பி.யிடம் நாங்கள் இருவரும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளோம்.

மேலும், பழங்குடியின இருளர் வகுப்பை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட வழக்கில், அதாவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி பதியப்பட்ட வழக்கில் அரசியல்வாதிகள் தலையிட்டு குற்றவாளைகளை விடுவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும், இச்செயல் சட்டத்திற்குப் புறம்பானது என்பதோடு, பழங்குடியின மக்களின் உரிமையில் தேவையில்லாமல் தலையிட்டு அவர்களுக்கு அநீதி இழைப்பதாகும்.

இதற்கு காரணமான மத்திய இணை அமைச்சர் வே.நாராயணசாமி, ஏம்பலம் எம்.எல்.ஏ. ஆர்.ராஜாராமன் மற்றும் கண்டமங்கலம் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கடந்த 06.10.2009 அன்று விரிவான மனு அனுப்பியுள்ளோம்.

Wednesday, September 30, 2009

கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் மீது பொய் வழக்கு, கைது, சிறை - கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 29.09.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆட்சியாளர்களின் தூண்டுதலின் பேரில் பொய் வழக்குப் போட்டு, கைது செய்து சிறையில் அடைத்துள்ள புதுச்சேரி காவல்துறையை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

கரிக்கலாம்பாக்கத்தில் நேற்றைய தினம் (28.09.2009) இந்தரஜித் என்பவர் கொத்தனார் வேலைப் பார்க்கும் சண்முகம் எனபவரை கடுமையாக தாக்கி அவருக்கு தலையில் பலத்த காயம்பட்டு மூன்று தையல் போடப்பட்டுள்ளன. இச்சம்பவம் நடந்தவுடன் மதியம் 2 மணியளவில் பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், இரவு 9.30 மணி வரையில் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. குற்றவாளியை கைது செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போலீசாரின் இந்த மெத்தனப் போக்கால் மாலை 5.30 மணியளவில் மேற்சொன்ன குற்றாவாளி இந்திரஜித் மீண்டும் கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்று, அங்கு இருந்தவர்களை தாக்கியுள்ளார். பின்னர், தேவையில்லாமல் பொதுமக்களுக்குத் தொல்லைக் கொடுக்கும் வகையில் சாலை மறியல் நடத்தி பேரூந்துகளின் கண்ணாடிகளை உடைத்துள்ளார். இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவங்களோடு எவ்வகையிலும் தொடர்பு இல்லாத ஜெகந்நாதன் மற்றும் அவரது தம்பி, மகன் உள்ளிட்டோர் மீது போலீசார் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கேட்டு சமரசம் இல்லாமல் போராடி வருவதால் ஆட்சியாளர்கள் தூண்டுதலின் பேரில் அவர்மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கு கரிக்கலாம்பாக்கம் போலீசார் மற்றும் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பைரவசாமி ஆகியோர் தான் காரணம். மதியம் நடந்த சம்பவம் பற்றி இரவு வரை இன்ஸ்பெக்டர் பைரவசாமி தகவல் தெரியாமல் இருந்துள்ளார். போலீசார் உடனடியாக செயல்பட்டு இருந்தால் இந்த சம்பவங்களை தடுத்திருக்க முடியும்.

அரசின் இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளால் சமூக ஆர்வலர்களின் நடவடிக்கைகளை தடுத்துவிட முடியாது என்பதை அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம். உடனடியாக ஜெகன்நாதன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்ப பெற்று, அவரை விடுதலை செய்ய வேண்டும்.

இதுகுறித்து, உரிய விசாரணைக்கு உத்தரவிட கோரி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.) மற்றும் சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி. அகியோருக்கு விரிவான மனு அளித்துள்ளோம்.

Thursday, August 27, 2009

ஆட்சியாளர்களின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் நேர்மையாக செயல்பட்ட அதிகாரி மாற்றம் - கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 26.08.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

ஆட்சியாளர்களின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் நேர்மையாக செயல்பட்ட காரணத்தினால், துணை ஆட்சியர் விஜயகுமார் பித்ரியை மிசோரோம் மாநிலத்திற்கு மாற்றம் செய்து, உடனடியாக அவரை பணியிலிருந்து விடுவிக்க கட்டாயப்படுத்தும் அரசின் பழிவாங்கும் போக்கை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

புதுச்சேரி வடக்குப் பகுதியின் துணை ஆட்சியராக இருப்பவர் விஜயகுமார் பித்ரி. கடந்த 2 ஆண்டு காலமாக இவர் புதுச்சேரியில் நேர்மையாகவும், மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தும் பணியாற்றி வந்துள்ளார்.

1973-ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள உபரி நிலங்களில் 125 ஏக்கர் நிலத்தை 36 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது துணிச்சலான, உறுதியான நடவடிக்கையால் கையகப்படுத்தியுள்ளார். இவரின் முயற்சியால் டி.என்.பாளையம், கிருமாம்பாக்கம், தவளகுப்பம், மணவெளி, அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் போன்ற வருவாய் கிராமங்களில் உள்ள 82 இடங்கள் அரசுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் நிலம் கையகப்படுத்தப்படுவதை கைவிட வேண்டும் என ஆட்சியாளர்களின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் சட்டப்படி செயல்பட்ட காரணத்தினால் இப்போது அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விஜயகுமார் பித்ரி பதவியேற்ற 2 ஆண்டு காலத்திற்குள் கடந்த 1977-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள சட்டம்–ஒழுங்கு சம்பந்தப்பட்ட சுமார் 700 வழக்குகளை விசாரித்து முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

இவர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறைக்கு கூடுதல் பொறுப்பேற்ற 6 மாத காலத்திற்குள் ரூ. 5000 மதிப்பீட்டில் பல்வேறு கிராமங்களுக்கு சுமார் 419 வீடுகளுக்கு கழிவறைகள் கட்டித் தந்துள்ளார்.

இவ்வாறு மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முழு கவனம் செலுத்தி செயல்பட்ட விஜயகுமார் பித்ரியின் மாற்றல் உத்தரவை ரத்து செய்து அவரை புதுச்சேரியிலேயே பணியாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களின் நலன் கருதி அரசை வலியுறுத்துகிறோம்.

Saturday, August 15, 2009

அரசு கட்டணத்தை ஏற்காத தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 13.08.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களிடம் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதற்கு அரசுதான் பொறுப்பு என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.

புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகள், 3 சுயநிதி மருத்துவ கல்லூரிகள் ஆகும். இந்த கல்வி ஆண்டில் 7 தனியார் மருத்துவ கல்லுரிகளும் அரசு ஒதுக்கீடாக மொத்தம் 261 இடங்கள் கொடுத்துள்ளன.

இதன்படி சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் எவ்வளவு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு இதுவரையில் கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை. இருந்தாலும் அரசு வாய் வழியாக ரூபாய் 1 லட்சத்து 75 ஆயிரம் கட்ட வேண்டும் என கூறியுள்ளது.

இதன்படி மாணவர்கள் தங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சென்று சேரும் போது குறிப்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் அரசு கூறிய கட்டணத்திற்கு பதிலாக ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரம் கேட்டு மாணவர்களை சேர்க்க மறுத்துள்ளனர். மேலும், அரசு கூறியுள்ள கட்டணத்தை ஏற்காமல் கல்விக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தனியார் மருத்துவ கல்லூரி கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி சம்பத்குமார் தலைமையில் அரசு அமைத்த குழுவும் இரண்டு முறை கூடியுள்ளது. ஆனால், இந்த குழுவும் இதுவரையில் கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை.

இந்நிலையில், நேற்று அறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடு கிடைத்து சேர சென்ற மாணவர் ஒருவரிடம் ரூ 4 லட்சத்து 50 ஆயிரம் கேட்டு கல்லூரி நிர்வாகம் மிரட்டியதால் அந்த மாணவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கு அரசின் மெத்தன போக்குதான் காரணம்.

தனியார் மருத்துவ கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை அரசு உடனடியாக நிர்ணயம் செய்து அதை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். அதன் பின்னும் தனியார் மருத்துவ கல்லூரிகள் கட்டணத்தை ஏற்கவில்லை என்றால் அக்கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்த அரசு நடந்து வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஒரு சட்டம் இயற்றி அதை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Friday, August 07, 2009

முஸ்லீம் இடஒதுக்கீட்டை நிறைவேற முடியாத சூழலை காங்கிரஸ் அரசு ஏற்படுத்தி விட்டது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 07.08.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

முஸ்லீம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து பட்ஜெட்டில் அறிவித்ததில் பல்வேறு குளறுபடிகள் செய்திருப்பதன் மூலம் முஸ்லீம் இடஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த முடியாத சூழலை ஏற்படுத்தி, அம்மக்களை ஏமாற்றும் புதுச்சேரி காங்கிரஸ் அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

முதல்வர் வைத்திலிங்கம் பட்ஜெட்டில் முஸ்லீம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் 1 சதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் 1.5 சதமும் எடுத்து அளிக்கப் போவதாக தெரிகிறது.

ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளித்ததை ரத்து செய்து ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, அம்மாநில அரசு பிற்படுத்தப்பட்டோரில் உள்ள மூஸ்லீம்களை கண்டறிந்து அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 4 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது.

தமிழக அரசும் நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, அதன் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோரில் உள்ள முஸ்லீம்களை தனியாக பிரித்து அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 3.5 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது.

புதுச்சேரி அரசு இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த மாதிரி முஸ்லீம் இடஒதுக்கீட்டில் குளறுபடிகளை செய்து அம்மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. முஸ்லீம் மக்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள போது அவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 1.5 சதவீதம் எடுத்து இடஒதுக்கீடு அளிப்பது சட்டவிரோதமானது. சமூக நீதிக் கொள்கைக்கே வேட்டு வைக்கும் செயலாகும்.

கடந்த ஆண்டு முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், முஸ்லீகளுக்கு சட்டரீதியாக முறைப்படி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து எடுத்துக் கூறினோம். ஆனால், அவர் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு செயல்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரைப்படி அரசு இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. தற்போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் உறுப்பினராக உள்ளவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் இடஒதுக்கீடு பற்றி எந்தவித அடிப்படையும் அறியாதவர்கள். காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டிகளை திருப்திபடுத்த வேண்டும் என்று கோஷ்டிக்கு ஒருவர் என உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களாக சமூக நீதியில் அக்கறையுள்ள, தெளிவு உள்ளவர்களை நியமிக்க வேண்டும்.

முஸ்லீம் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அரசின் முடிவை வரவேற்கிறோம். ஆனால், அதனை சட்ட ரீதியாகவும், சமூக நீதி அடிப்படையிலும் செய்ய வேண்டியது அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். புதுச்சேரி அரசு இது குறித்து உடனடியாக அனைத்து கட்சி மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டத்தை கூட்டி முடிவு செய்ய வேண்டும்.

பிந்தங்கியுள்ள முஸ்லீம் மக்களுக்கு நீதியரசர் சச்சார் குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும், பிரதமர் அறிவித்துள்ள 15 அம்ச திட்டங்களையும் நிறைவேற்ற புதுச்சேரி அரசு ஆவன செய்ய வேண்டும்.

Sunday, July 26, 2009

புதுச்சேரியின் புதிய ஆளுநர் பதவி ஏற்பதில் மரபு மீறப்பட்டுள்ளது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 25.07.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியின் புதிய ஆளுநர் பதவியேற்பின் போது புதுச்சேரி தலைமை நீதிபதிக்கு பதிலாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளது சட்டவிரோதமானது என்பதோடு, பிரெஞ்சு காலம் தொட்டு இருந்துவரும் மரபை மீறும் செயலாகும் என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.

புதுச்சேரியின் புதிய ஆளுநராக இக்பால்சிங் வரும் 27-ந் தேதி திங்களன்று பதவியேற்க உள்ளார். அவருக்கு புதுச்சேரியின் தலைமை நீதிபதி மேன்மைமிகு டி.கிருஷ்ணராஜா அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என செய்தி வெளியானது.

ஆனால், தற்போது புதுச்சேரி தலைமை நீதிபதிக்கு பதிலாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேன்மைமிகு எச்.எல்.கோகுலே அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பிரெஞ்சுக் காலம் முதல் ஆளுநர் பதவியேற்பின் போது புதுச்சேரி தலைமை நீதிபதியே பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற மரபை மீறியுள்ளது ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களை அவமதிப்பதாகும். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்த அவப்பெயர் வந்துவிட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

இந்திய அரசியல் சட்டத்தில் நேரடியாக சொல்லப்படாவிட்டாலும், நீண்ட காலமாக இருந்து வரும் மரபை சட்டமாகவே மதித்து செயல்படுவது நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். அதன் அடிப்படையில் பார்த்தால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி புதிய ஆளுநருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது சட்டவிரோதமானது.

எனவே, சட்ட நடைமுறையையும், மரபையும் காக்கும் பொருட்டு, புதிய ஆளுநர் பதிவியேற்பின் போது புதுச்சேரி தலைமை நீதிபதி அவர்களே பதவி பிரமாணம் செய்து வைக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய உள்துறை செயலர், மத்திய சட்டத் துறை செயலர், புதுச்சேரி தலைமைச் செயலர், சட்டத் துறை செயலர் ஆகியோருக்கு மனு அளிக்க உள்ளோம்.

Wednesday, July 22, 2009

"சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு" நூல் (1250 பக்கங்கள்): வல்லினம் வெளியிட்டுள்ளது!

என் இனிய நண்பர் வல்லினம் மகரந்தன் நேற்று முன் தினம் நான் புதிதாக குடியேறிய வீட்டிற்கு வந்தார். கையில் ஒரு பெரிய புத்தகத்தோடு வந்தார். அவர் எந்த புத்தகம் வெளியிட்டாலும் உடனடியாக எனக்கு ஒரு பிரதியைக் கொடுத்து அதன் மூலம் மகிழ்ச்சி அடைவார்.

அதேபோல் தான் அன்றைக்கும் அவர் புதிதாக ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். மிகவும் பிரமிக்க வைக்கும் வகையில் "சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு" என்ற 1250 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. வல்லினம் வெளியீடாக வந்த அந்த புத்தகத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் வீ.அரசு அவர்கள் தொகுத்துள்ளார். அரிய முயற்சி இது. இதற்காக பேராசிரியர் வீ.அரசு, வல்லினம் மகரந்தன் ஆகியோரை அனைவரும் பாராட்ட வேண்டும்.

நான் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் போது சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள் பற்றி அறிந்துக் கொள்ள முடிந்தது. தமிழ் ஆசிரியர் இராதா அவர்கள் ஆண்டுதோறும் கம்பன் கலையரங்கில் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களை நடத்துவார். அவர் மரபு சார்ந்த நாடக கலைஞர். மிகவும் சிரமப்பட்டு நாடகங்களை நடத்துவார்.

சங்கரதாஸ் சுவாமிகள் பற்றி புதுச்சேரியில் பிறந்தவர்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. அவரது நினைவிடம் புதுச்சேரி கருவடிக்குப்பம் சுடுகாட்டில் இருக்கிறது. எப்போழுது சாவு விழுந்தாலும் எரியூட்ட அங்கு செல்லும் போதெல்லாம் அந்த நினைவிடத்தைப் பார்க்காமல் வரமாட்டேன். எளிமையாகவும் எப்போது ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தும் நினைவிடம் அது. ஆண்டுதோறும் நாடக கலைஞர்களும், கலை இலக்கிய பெருமன்றமும் அவரது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செய்து, நிகழ்ச்சிகள் நடத்துவது உண்டு. புதுச்சேரி அரசும் ஆண்டுதோறும் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.

வீ.அரசு குறிப்பிடுவது போல 'புதுச்சேரியைச் சேர்ந்த இவர்கள் சுவாமிகள் பற்றிய ஆவணத்தைக் கொண்டு வருவதின் மூலம், சுவாமிகள் பற்றிய புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். சுவாமிகளுக்கும் புதுவைக்கும் நெருக்கமான உறவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.'

புதுச்சேரியின் மூத்த பத்திரிகையாளரான தணிகைத்தம்பி அவர்கள் எடுத்த ஆவணப் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள் பற்றி குறிப்பிடும் போது வெளிப்பட்ட பக்தி கவனிக்கதக்கது. சங்கரதாஸ் சுவாமிகளின் தோற்றம் எவரையும் வணங்கத் தோன்றும் தோற்றம்.

1867-இல் பிறந்து 1922-இல் மறைந்த சங்கரதாஸ் சுவாமிகள் படைத்த பதினெட்டுப் பனுவல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவை: ஞான செளந்தரி சரித்திரம், ஸதி அநுசூயா, கர்வி பார்ஸ், பிரஹலாதன் சரித்திரம், சாரங்கதரன், அல்லி சரித்திரம், சீமந்தனி நாடகம், சுலோசனா ஸதி, அபிமன்யு சுந்தரி, அரிச்சந்திரா, பவளக்கொடி சரித்திரம், நல்லதங்காள், வள்ளித் திருமணம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், லலிதாங்கி நாடகம், லவகுச நாடகம், பாதுபாபட்டாபிஷேகம்.

தொகுப்பாக பெரிய நூலாக வரும் போது படிப்பதில் சற்று மலைப்பு இருப்பது இயல்பான ஒன்றுதான். ஒருவருடைய படைப்பை முழுமையாக ஒருசேர படிப்பதன் மூலம் அவருடைய பன்முகப்பட்ட பார்வையை, முரண்பாட்டை, தொடர்ச்சியை நாம் உணர முடியும். அந்த வகையில் இந்த நூல் சங்கரதாஸ் சுவாமிகள் பற்றிய மதிப்பீட்டை அறிய பெரிதும் உதவும்.

நூலிற்கான அட்டைப் படத்தை ஓவியர் மருது மிகச் சிறப்பகாக வரைந்துள்ளார். சுவாமிகளின் உருவம் கோடுகளுக்குள் சிதையாமல் பதிவாகியுள்ளது.

முழுமையாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. காலத்தை ஒதுக்கிப் படித்து விட்டு அதிகம் எழுத முயல்கிறேன். நூலைப் பார்த்தவுடன் ஒரு ஆவலில் இதை எழுதியுள்ளேன்.

நூல் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள:

வல்லினம், எண். 9, செந்தமிழர் வீதி, நைனார்மண்டபம், புதுச்சேரி - 605 004. தொலைபெசி: 0413-2354115. மின்னஞ்சல்: vallinam@sifi.com.

விலை: ரூ. 700/-

Monday, July 13, 2009

சிந்தாநதி மரணம்: ஆழ்ந்த இரங்கல்!

சிந்தாநதி மரணச் செய்தி மிகவும் காலதாமதமாக வந்தடைந்தது. வீடு மாறியதால் இணைய இணைப்பு கிடைக்க ஏற்பட்ட காலதாமதம், ஒரு நல்ல பதிவரின் மரணத்திற்காக கூட அழ முடியாமல் செய்துவிட்டது.

சிந்தாநதி படைப்புகளை ஓரளவுக்கு படித்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், அவர் பரந்துப் பட்டு எல்லாவற்றையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவலுடையவர். அதை நோக்கியே எழுதினார்.

அவரது இழப்பு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக வலைப்பதிவர்கள் என அனைவருக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோ.சுகுமாரன், புதுச்சேரி.

புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம்: வரவேற்கிறோம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.07.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வரவேற்கிறோம்.

பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் திருத்திய மோசடியை வெளிக் கொண்டுவந்த காரணத்திற்காக ஊழியர் ஜெயராமன் கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் குற்றவாளிகளை புதுச்சேரி போலீசார் கைது செய்யவில்லை.

கடந்த 18.02.2008 அன்று ஜெயராமன் தற்கொலைக்கு முயன்று பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மருத்துவர் முன்னிலையில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது மதிப்பெண் திருத்தியதை ஏற்றுக் கொள்ளும்படி பல்கலைக்கழக உயரதிகாரிகள் தன்னை கட்டாயப்படுத்தியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். அதன் பின்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், இக்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி, கடந்த 03.07.2009 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு விரிவான மனு ஒன்றை அனுப்பினோம்.

கொலையுண்ட ஜெயராமனின் தாய் மற்றும் அவரது அண்ணன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இக்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம்.

கொலைக் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதிக் கிடைக்க சி.பி.ஐ. உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

Sunday, July 12, 2009

அ.மார்க்ஸ் எழுதியுள்ள "காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே?" நூல் வெளிவந்துவிட்டது
























பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள "காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே?" நூல் வெளிவந்துவிட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி சார்பில் வெளிவந்துள்ள இந்நூல் மொத்தம் 200 பக்கங்கள். விலை ரூ. 100.

அகில இந்திய அளவிலான உண்மை அறியும் குழுவில் காஷ்மீர் சென்று அங்குள்ள நிலைமைகளை கண்டறிந்து அவற்றை தொகுத்து அளித்துள்ளார் அ.மார்க்ஸ்.

'எல்லை தாண்டிய பயங்கரவாதம்' தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால் என இந்திய அரசியல்வாதிகள் முன்வைக்கின்றனர். இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் வேர் காஷ்மீர் பிரச்சினையில் பதிந்துள்ளதை நாம் அறிவோம்.

'காஷ்மீர் பிரச்சினை' என்பது உண்மையில் "காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு ஜம்மு காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினை" என்பதன் சுருக்கமே.

காஷ்மீர் பிரச்சினையின் வரலாற்றை, அங்கு தீவிரவாதம் உருப்பெற்றதில் இந்திய அரசின் பங்கை, தன் நேரடிக் கள அனுபவங்களுடன் இணைத்து ஒரு புனைவுக்குரிய விறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறார் அ.மார்க்ஸ்.

2009 தேர்தல் வரை காஷ்மீர் வரலாற்றை சொல்லும் நூலாசிரியர் புதிய சூழலில் மேலெழும் பல புதிய கேள்விகளை வழக்கம் போல் முன்வைக்கிறார். இக்கேள்விகள் காஷ்மீருக்கு மட்டுமல்ல தென் ஆசியாவில் நடைபெற்று வரும் இதர விடுதலைப் போராட்டங்களுக்கும் பொறுத்தமானவையே.

நூல் கிடைக்குமிடம்:

புலம்,
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
செல்: 97898 64555, 98406 03499.
மின்னஞ்சல்: pulam2008@gmail.com

Saturday, July 11, 2009

தொடரும் மரணங்கள் - பாதுகாப்பற்ற சிறை: கைதி எனும் மனிதனைப் பாதுகாப்போம்!

புதுச்சேரி மத்திய சிறையில் தொடரும் மரணங்களால் அங்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அண்மையில் நடந்த பழங்குடியின இளைஞர் மரணம் சாட்சியாக விளங்குகிறது.

திண்டிவனத்தைச் சேர்ந்த பழங்குடியின குறவர் வகுப்பைச் சேர்ந்த சரவணன் கடந்த 23-ந் தேதியன்று சந்தேக வழக்கில் ஒதியஞ்சாலை போலீசாரால் கைது செய்யப்பட்டு காலாபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு வலிப்பு நோய் வந்ததாக கூறி சிறைக் காவலர்கள் 25-ந் தேதியன்று காலை 8.30 மணிக்கு அவரை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அன்றைய தினம் இரவு 10.55 மணிக்கு சரவணன் இறந்து போனார்.

சரவணன் மரணம் சந்தேகத்திற்குரியது என்று அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் 27-ந் தேதியன்று மருத்துவமனை சவக் கிடங்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவுக்கு காரணமான சிறைத்துறையினர், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். இப்போராட்டத்திற்குப் பல்வேறு அமைப்புகள் ஆதரவுத் தெரிவித்தன.

சரவணன் மரணம் குறித்த சந்தேகங்கள், மர்மங்கள் குறித்து பார்ப்பதற்கு முன், கடந்த சில அண்டுகளாக சிறையில் நடந்த தற்கொலைகள், மரணங்கள் பற்றி குறிப்பிடுவது அவசியம். 3.5.2005: சிறைச்சாலை நகரத்தின் மையப் பகுதியான நேரு வீதியிலிருந்த போது வெளியிலிருந்து வீசப்பட்ட பாக்கெட்டில் இருந்த விஷச் சாராயத்தை அருந்திய கைதிகள் அலி, ஜெகன், பெரியய்யா அகியோர் மரணமடைந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து அப்போது எதிர்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் போராடின. சிறையில் இருந்த வேறு கைதிகளைக் கொல்ல நடந்த சதி என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையொட்டி அரசு உடனடியாக ஓய்வுப் பெற்ற மாவட்ட நீதிபதி வேணுகோபால் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தது.

இக்கமிஷன் அறிக்கை தாக்கல் செய்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. அறிக்கை சட்டமன்றத்தின் முன் விவாதத்திற்கு வைக்கப்பட்டு அதன்மீது நடவடிக்கை எதுவும் எடுக்க அரசு முயலவில்லை. குற்றவாளிகளைக் காப்பாற்றவே அரசு இவ்வழக்கை மூடிமறைத்துள்ளது. சிறையில் இறந்த கைதிகள் குடும்பத்தினருக்கு இதுவரையில் குறைந்தபட்ச நிவாரணம்கூட வழங்கப்படவில்லை.

புதுச்சேரி அரசு கண்துடைப்பிற்காக சிறைக்கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட சில சிறை வார்டர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது. ஆனால், ஒரு சில நாட்களிலேயே பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். இன்றைய நாள் வரை இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

4.5.2007: ராம்மூர்த்தி (வயது: 31), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவர், மனைவியை விவாகரத்து செய்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவின்படி மனைவிக்கு வழங்க வேண்டிய தொகை ரூ. 20 ஆயிரத்தை வழங்கததால் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஓரிரு தினங்களிலேயே சிறையின் இரண்டாவது மாடியில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த வழக்கு தற்கொலை வழக்காகப் பதியப்பட்டு முடிக்கப்பட்டது.

21.4.2008: 1999-இல் தன் அண்ணன் மனைவியான பார்வதி என்ற இளம் பெண்ணை பாலியியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி கொலை செய்த கமல் ஷா ஆயுள் தண்டனைப் பெற்று காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு மிகவும் பிரபலமான வழக்கு என்பதை அறிவோம்.

கைதி கமல் ஷா திடீரென ஸ்பூனால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார் என சிறைத் துறை கூறியது. ஆனால், இதை யாரும் நம்ப தயாராக இல்லை. கமல் ஷா கொல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதுவும் புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகேயுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது விட்டை அபகரிக்கும் நோக்கத்தோடு இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற பேச்சு அடிப்பட்டது. ஆனால், இந்த கோணத்தில் வழக்கை போலீசார் விசாரிக்கவில்லை.

6.6.2009: கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனைப் பெற்று காலாப்பட்டு புதிய சிறையில் இருந்த அரியாங்குப்பத்தைச் சேர்ந்த முருகன் (வயது: 31) உயர்நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்படும் என யாரோ சொன்னதை நம்பி, மனமுடைந்து சிறையிலுள்ள கண்காணிப்பு டவரில் ஏறி துண்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.

நேரு வீதியிலிருந்த பழைய சிறை போதிய இடவசதி இல்லாததால் இதுபோன்ற சம்பங்கள் நடக்கின்றன என்று அப்போதைய சிறைத் துறை ஐ.ஜி. வாசுதேவ ராவ் கூறியதை பொய்யாக்கியது இச்சம்பவம். இதிலும் இரண்டு வார்டர்களை தற்காலிக பணிநிக்கம் செய்ததோடு நடவடிக்கை முடிக்கப்பட்டது. வார்டர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு ஒரு அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது தனிக்கதை.

கைதிகள் கமல் ஷா முருகன், ஆகியோரின் மரணம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுப் பெற்ற மாவட்ட நீதிபதி வீரநாத் ராவ் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அரசு அமைத்தது. கமல் ஷா தற்கொலை பற்றிய விசாரணை அறிக்கை கடந்த 23.1.2009 அன்று தாக்கல் செய்யப்பட்டும், இதுவரையில் அதன்மீது நடவடிக்கை இல்லை.

இதெல்லாம், புதுச்சேரி சிறையில் கடந்த காலங்களில் நடந்த அவலங்களின் தொகுப்பு. மேலே குறிப்பிட்ட எந்த வழக்கிலும் இதுநாள் வரையில் சிறைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட கைதிகளின் குடும்பத்தினருக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

கடந்த கால நிலையே இதுவென்றால் அண்மையில் பழங்குடியின இளைஞர் மரணத்திற்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொதுமகளிடம் துளியும் இல்லை என்பதை அரசு உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சரவணனின் உடலைப் பார்த்த போது, அவரது காது, மூக்கு, வாய் வழியாக ரத்தம் கசிந்திருந்தது. உடல் எங்கும் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. ஒரு பல் உடைந்திருந்தது. இவற்றை எல்லாம் பார்க்கும் போது சரவணன் வலிப்பு வந்து இறந்த்தாக கூறுவது நம்பும்படி இல்லை. அவர் கடுமையான சித்தரவதையை அனுபவித்து இறந்ததாகவே கருத வேண்டியுள்ளது.

மேலும், அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா? ஒன்றுமில்லை. அவர் மீது ஒதியஞ்சாலை போலீசார் சந்தேக வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளனர். அவரைப் பார்க்கும் போது சந்தேகப்படும்படி இருந்ததால் இந்த வழக்குப் போட்டதாக போலீசார் கூறுகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே அவரது மரணம். மிகவும் வறுமை நிலையில் உள்ள பழங்குடியின குறவர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பார்ப்பதற்கு சந்தேகப்படும்படி இருக்கிறார் என்று போலீசார் சொல்வது அவர்களது சமூக பார்வையில் உள்ள குறைப்பாட்டையே காட்டுகிறது.

ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 11 கட்டளைகள் இவரைக் கைது செய்யும் போதும் பின்பற்றப்படவில்லை. கைது செய்த போது தகவல் தராத போலீசார் இறந்த போது வீடு தேடி வந்து தகவல் சொன்னதாக அவரது மனைவி தெரிவித்தார்.

இதுபோன்ற மரணங்கள் நிகழும் போது சிறைத் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை. இதனாலேயே இதுபோன்ற சம்பங்கள் தொடர்கின்றன. கைதி ஒருவர் சிறையில் இருப்பது என்பது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தான் என்பதால் அது ‘நீதிமன்ற காவல்’ ஆகும். அதாவது சிறைக் கைதிகளின் உயிருக்கு முழுப் பொறுப்பு நிதிமன்றமாகும். ஆனால், நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. இது தொடருமானால், மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதே நம்பிக்கை போய்விடும் ஆபத்துள்ளது.

தற்போது அமைந்துள்ள காலாப்பட்டு சிறை பல ஏக்கர் அளவுக் கொண்ட பெரிய சிறை. இதனை நிர்வகிக்க தற்போதைய ஊழியர் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போதைய ஊழியர் எண்ணிக்கையில் ஒரு சிறைத் துணைக் கண்காணிப்பாளர், இரண்டு உதவி சிறைக் கண்காணிப்பாளர், 10 வார்டர்கள் பதவிகள் நிரப்பபடாமல் உள்ளன. இதனால், கைதிகளை கண்காணிப்பதில் மிகுந்த சிரமம் இருப்பதாக கூறுகின்றனர் வார்டர்கள்.

‘குற்றத்தை வெறு குற்றவாளிகளை வெறுக்காதே’ என்று காந்தி கூறியதை இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்கோ, குற்றவாளிக்கோ இவ்வாறு அநீதி இழைக்கப்படும்போது அனைவரும் அமைதியாக இருப்பது மிகப் பெரும் மனித உரிமை மீறலுக்கு மறைமுகமாக துணைப் போவதாகும். மெளனத்தைக் கலைந்து, உயர்ந்து நிற்கும் மதில் சுவற்றுக்குள் இருக்கும் சிறைக் கம்பிகளுக்குள் அடைப்பட்டிருக்கும் ‘கைதி’ எனும் மனிதனுக்கும் எதிராக குரல் கொடுப்போம் வாருங்கள்.

1934-இல் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களால் தொடங்கப்பட்டு தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரிவினரால் நடத்தப்படும் "சுதந்தரம்" இதழில் வெளியானது.

Saturday, July 04, 2009

குற்றவாளிகளை ஜாமீனில் விட நீதிபதியை நிர்பந்தம் செய்த மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ம்ற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு 03.07.2009 அன்று அனுப்பியுள்ள மனு:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் திருத்திய மோசடி குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரையில் இருவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தலைமறைவாக உள்ள டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் அவரது மகன் கிருபா ஸ்ரீதர் ஆகியோரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், மேற்சொன்ன டாக்டர் மற்றும் அவரது மகனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீது கடந்த 30.06.2009 அன்று நடந்த விசாரணையின் போது நீதிபதி ஆர்.ரகுபதி அவர்கள், ‘மனுதாரர்களுக்கு சாதகமாக உத்தரவிட மத்திய அமைச்சர் ஒருவர் தன்னை நிர்பந்தித்தார்’ என கூறியுள்ளார். இந்த செய்தி பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ள அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நீதித்துறையின் செயல்பாட்டில் இந்த தலையீடு குறித்து நீதிமன்றத்தில் வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் தகவல் தெரிவித்த நீதிபதிக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மேற்சொன்ன நீதிபதி அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரின் பெயரை வெளியிட ஆவன செய்ய வேண்டுகிறேன்.

இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடப்பேன் என பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மத்திய அமைச்சர் ஒருவரால் நீதித்துறைக்கு விடப்பட்டுள்ள சவாலுக்கு இந்திய அளவில் பல்வேறு சட்ட வல்லுநர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அமைச்சரின் இந்த செயல் தண்டனைக்குரிய நீதிமன்ற அவமதிப்பு எனக் கருத்து தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.வர்மா அவர்கள் ‘இதுபோன்ற அதிகாரம்மிக்க, உயர் பொறுப்பிலுள்ள பலமிக்கவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சிறு குற்றங்கள் செய்தவர்களைத் தண்டிப்பதில் பொருளில்லை’ எனக் கூறியுள்ளதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

நீதிபதிகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யவும், நீதித்துறையின் மாண்பைக் காக்கவும் இச்சம்பவம் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். புதுச்சேரி பல்கலைகழகத்தில் நடந்த மதிப்பெண் திருத்திய மோசடியில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பணம் படைத்தவர்கள் கூட்டாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மோசடியை அம்பலப்படுத்திய பல்கலைக்கழக தேர்வுக் கட்டுபாட்டுத் துறை ஊழியர் ஜெயராமன் கடந்த 20.05.2008 அன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரையில் குற்றவாளிகள் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், இறந்து போனவரின் அண்ணன் துரைராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தன் தம்பி கொலையில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சம்பத், மற்றும் கெளரிபாய் உட்பட பலருக்குத் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இவ்வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளது.

மேலும், மேற்சொன்ன ஜெயராமன் 18.02.2008 அன்று தற்கொலைக்கு முயன்று பிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது அவரிடம் காலாபட்டு போலீசார் ஒரு மருத்துவர் முன்னிலையில் வாக்குமூலம் பெற்றனர். அதில், மேற்சொன்ன இருவரும் மதிப்பெண் மோசடி குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி தன்னை வற்புறுத்தியாதாக கூறுயுள்ளார். அவரின் வாக்குமூலம் இன்றைக்கும் குற்றாவாளிகளை வெளிப்படுத்தும் மரண வாக்குமூலமாக திகழ்கிறது.

எனவே, புதுச்சேரி பல்கலைகழகத்தில் நடந்த மதிப்பெண் மோசடியில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும், இம்மோசடியை அமபலப்படுத்திய பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவும் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

Friday, June 12, 2009

ரூ. 10 கோடி மதிப்புள்ள வீட்டை அபகரிக்க கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 12.06.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி நகரத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அபகரிக்கும் நோக்கத்தோடு மெக்கானிக் ஒருவரை கொலை செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென அரசை வற்புறுத்துகிறோம்.

புதுச்சேரியில் கடந்த 98-ம் ஆண்டு வீடு, நிலம் அபகரிக்கும் செயல் வெளிச்சத்திற்கு வந்தது. வீடு, நிலம் அபகரிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து போராடியதன் விளைவாக இச்செயல் தற்காலிகமாக நின்று போனது.

ஆனால், தற்போது மீண்டும் வீடு, நிலம் அபகரிக்கும் குற்றம் தலைத் தூக்கியுள்ளது. வீடு, நிலம் அபகரிக்கும் கும்பல் கொலை செய்யும் அளவிற்கு துணிந்ததற்குப் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்காததே காரணம்.

தற்போது இக்கொலை வழக்கில் முக்கிய குற்றாவாளிகளைக் காப்பாற்றும் நோக்கத்தோடு அப்பாவிகள் சிலரை போலீசார் பிடித்து வைத்துள்ளதாக தெரிகிறது. இக்கொலைக்குப் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, இக்கொலை வழக்கை சி.பிஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம். அண்மைக் காலமாக சி.பி.ஐ. பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது புதுச்சேரி மக்களிடையே சி.பி.ஐ. மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், வீடு, நிலம் அபகரிக்கும் திட்டத்தோடு நடந்த இக்கொலை குறித்து ஆதாரங்களைத் திரட்டி மத்திய உள்துறைக்கும், சி.பி.ஐ. உயர் அதிகாரிகளுக்கும் மனு அளிக்க உள்ளோம்.

Sunday, April 26, 2009

வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை விடுதலை செய்ய வேண்டும்: உண்மை அறியும் குழு

அதிரடிப்படையால் கொல்லப்பட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கடந்த 4 மாதங்களாக கர்நாடக மாநில மைசூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும் நோக்கத்துடன் கீழ்க்கண்டவாறு ஓர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த 9 பேர் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் வருமாறு:

1) அ.மார்க்ஸ், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.

2) மு.சிவகுருநாதன், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.

3) கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.

4) பேராசிரியர் சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), தமிழ்நாடு.

5) ஜி.சி.ஜெகதீஷ், சோஷலிசத்திற்கான புதிய மாற்று, பெங்களூரூ.

6) டாக்டர் லக்ஷ்மிநாராயணா, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), பெங்களுரூ.

7) மரிதண்டியா (எ) புத்தா, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), மைசூரூ.

8) ஆர்.மனோகரன், சிக்ரம், கர்நாடகா.

9) பிரசன்னா, மாவட்ட மனித உரிமை ஒருங்கிணைப்பாளர், மைசூரூ.

இக்குழு, நேற்று (22.4.2009) மாலை மைசூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்துலட்சுமியை சந்தித்தது. மேட்டுரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சென்ற டிசம்பர் 25 நள்ளிரவில் கர்நாடக போலீஸ் அவரைக் கைது செய்துள்ளது. சாம்ராஜ் நகர் முதன்மை அமர்வு நீதிபதி அளித்துள்ள வாரண்ட் அடிப்படையில் அவரையும் மேலும் நால்வரையும் (சீனிவாசன், பொன்னுசாமி, பசுவா மற்றும் டைலர் மணி) போலீஸ் அடுத்தடுத்து கைது செய்தது.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், ஆயுத மற்றும் வெடிமருந்துச் சட்டம் மற்றும் தடா சட்டப் பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த 4 வழக்குகளும் வனத் துறை அதிகாரி சீனிவாசன் கொலை வழக்கு (1991), ஷகீல் அகமது கொலை வழக்கு (1992), போலீஸ் எஸ்.பி. கோபால் ஒசூர் மீது தாக்குதல் வழக்கு (1993), பாலாறு வெடிகுண்டு வழக்கு (1993) என அழைக்கப்படுகின்றன.

முத்துலட்சுமியுடன் பேசிய அடிப்படையில் இந்த கைதுகள் குறித்த எங்கள் பார்வைகள் வருமாறு:

1) இந்த 4 வ்ழக்குகளிலும் தொடர்புடைய சம்பவங்கள் 1991-க்கும் 1993-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நிகழ்ந்தவை. இவ்வழக்குகளில் 8 பெண்கள் உள்ளிட்ட 126 பேர் கைது செய்யப்பட்டனர். தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட்ட இவ்வழக்குகளின் இறுதியில் 109 பேர் குற்றமற்றவர்கள் என 9 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டனர். வெறும் 8 பேர் மட்டுமெ தண்டிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை பின்னர் உச்சநீதிமன்றத்தில் மரண தணடனையாக மாற்றபட்டது. இந்த நால்வரும் இன்றளவும் சிறையில் வாடுகின்றனர். இவர்களின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன.

2) இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதே அன்று தேடப்பட்டுக் கொண்டிருந்த வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமியை பிடித்துச் சென்ற அதிரடிப்படையினர் அவரை 2 ஆண்டுக் காலம் தமது பண்ணாரி முகாமில் சட்டவிரோத காவலில் வைத்திருந்தனர். பின்னர் அவர் இம்முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும், அவர் கணவர் கொல்லபடும் வரை கடும் கண்காணிப்பின்கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். நீதிபதி சதாசிவா விசாரணை ஆணையத்தின் முன்னும் அவர் தனது பாதிப்புகளைச் சொல்ல அனுமதிக்கப்படவில்லை.

3) கடந்த 18 ஆண்டுகளாக அவர் மீது வாரண்ட் ஒன்று நிலுவையில் இருப்பதாக அதிரடிப்படையினர் சொல்லி வந்த போதும், இந்த வழக்குகள் தொடங்கி முடியும் வரை அவரை இவற்றில் வழக்குகளில் தொடர்புபடுத்தி விசாரிக்கவில்லை. 18 ஆண்டுகள் ஆனபின் இப்போது திடீரென அவரும் மற்ற நால்வரும் தற்போது நடைமுறையில் இல்லாத தடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4) இவ்வழக்குகள் நான்கும் 2001-ம் ஆண்டிலேயே விசாரிக்கப்பட்டு தீர்ப்புகளும் வழங்கப்பட்டுவிட்டன. இவ்வழக்குகளில் முக்கிய குற்றவாளியான வீரப்பன் 2004-ம் ஆண்டில் கொல்லப்பட்டும் விட்டார். ஒரு வழக்கு இவ்வாறு தன் தர்க்கபூர்வமான முடிவை எட்டிய பின்னர் மீண்டும் அதை தோண்டியெடுத்து புதுப்பித்துள்ளதை திட்டமிட்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக எமது குழு கருதுகிறது.

5) வீரப்பன் கொல்லப்பட்ட பின்னர் அவரது மனைவியான முத்துலட்சுமி அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை ஒன்றுதிரட்டி அதிரடிப்படையால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நியாயம் கேட்டுப் போராடியுள்ளார். ஆண்டு தோறும் அவர் கணவர் கொல்லபட்ட தினத்தில் நட்த்தப்பட்ட மாநாடுகள் குறைந்தபட்சம் மூன்று. மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பலரும் அதில் கலந்துக் கொண்டுள்ளனர். இம்மாநாடுகளில் இரண்டு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
அ) அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட அத்துணை பேருக்கும் இழப்பீடு வ்ழங்குவது.
ஆ) மனித உரிமை மீறலுக்கு காரணமான போலீஸ் அதிகாரிகளைத் தண்டிப்பது.

6) நீதிபதி சதாசிவா ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்பு தேசிய மனித உரிமை ஆணையம் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட 83 பேருக்கு இழப்பீடு வழங்க ஆணையிட்டது. இன்றைய தேதியில் 80 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இரு மாநில அரசுகளும் இதற்கென 2.8 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன. இன்னும் மூவருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

7) இங்கொன்றை குறிப்பிட வேண்டியுள்ளது. பொறுப்பு மிக்க மனித உரிமை அமைப்புகளின் கணக்கீட்டின்படி கூட்டு அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 100; வன்புணர்ச்சி செய்யப்பட்ட பெண்கள் 60; முடமாக்கப்பட்டோர் 300. எனவே, இன்னும் பல பாதிக்கப்பட்டவர்களுக்கும், கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை.

8) இந்நிலையில், முத்துலட்சுமி இவ்வாறு பதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுப்பியது முற்றிலும் நியாயமானதே. இது மிகவும் அடிப்படையான மனித உரிமைக் கோரிக்கையே.

9) முத்துலட்சுமி மற்றும் நால்வரையும் இவ்வாறு சிறையில் அடைத்திருப்பதையும் வழக்கை விரைவாக நடத்தாமல் வேண்டுமென்றே தாமதிப்பதையும் இக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பருவமடைந்த இரண்டு பெண்களுக்குத் தாயான இந்த ஏழை விதவைக்குப் பிணை அளிக்க்க் கூடாது என கர்நாடக போலீஸ் மறுப்புத் தெரிவிப்பதை இக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

10) மனித உரிமை அமைப்புகளாலும், பல்வேறு அரசியல் கட்சிகளாலும் கடுமையாக கண்டிக்கபட்டு, இன்று நீக்கப்பட்டுள்ள கறுப்புச் சட்டமான தடாவை கர்நாடக அரசு ஒரு ஏழை அபலைக்கு எதிராக பயன்படுத்தி இருப்பதையும் இக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

11) முத்துலட்சுமியும், மற்றவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென இக்குழு கோருகிறது. அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

12) கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது நடந்த பேச்சுவார்த்தைகளில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க இரு மாநில அரசுகளும் ஒத்துக் கொண்டன. ஒவ்வொரு மாநில அரசும் இதற்கென 5 கோடி ரூபாய் ஒதுக்கின. இந்நிதி இதுவரையில் பயன்படுத்தப்படவில்லை. அதிரடிப்படையால் பாதிக்கபட்டுள்ள எஞ்சியுள்ள பலருக்கும் இறந்துப் போனவர்களின் வாரிசுகளுக்கும் இத்தொகை பிரித்தளிக்கப்பட வேண்டுமென இக்குழு கோருகிறது.

13) பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தயக்கம் காட்டும் இந்த அரசுகள் தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக பாதிக்கப்பட்டவர்களால் குற்றம்சாட்டப்பட்ட பல போலீஸ் அத்காரிகளுக்கு பல கோடி ரூபாய் வீரப்பரிசுகளும், பதவி உயர்வுகளும் வழங்கியுள்ளதை இக்குழு வன்மையாக கண்டிக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட அதிரடிப்படையினர் சட்டத்தின்முன் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் நிரூப்பிக்கப்படுகிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

14) வழக்கு விசாரணை வேகமாக நடத்தப்பட வேண்டும். தந்தையை இழந்து தாயின் அரவணைப்பும் இல்லாமல் படித்துக் கொண்டிருக்கும் இரு பெண்களை மனதில் கொண்டு முத்துலட்சுமியை உடனடியாக பிணையில் விடுவதற்கு போலீஸ் மறுப்பு தெரிவிக்க கூடாது என இக்குழு கோருகிறது. ஏற்கனவே தமிழக போலீஸ் தொடுத்துள்ள வழக்கில் கைது செய்யாமல், சம்மன் அளித்து அழைத்த போது ஆஜராகி வழக்கு விசாரணையில் முத்துலட்சுமி ஒத்துழைத்து உள்ளதைக் இக்குழு சுட்டிக்காட்டுகிறது.

Sunday, April 05, 2009

ஏப்ரல் 8, சென்னையில்: இலங்கையில் போரை நிறுத்த கோரி "கண்டன ஆர்ப்பாட்டம்"

‘இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டும் குழு’ சார்பில் வரும் 8.4.2009 புதனன்று மதியம் 3 முதல் 6 மணி வரையில், சென்னை மெமோரியல் அரங்கம் எதிரில், இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தக் கோரியும், தமிழ்ப் பகுதிகளிலிருந்து படைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் "கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற உள்ளது.

இக்குழு இந்த நோக்கங்களுக்காக வரும் 8.04.2009 அன்று உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் சாத்தியமான அளவிற்கு ஆர்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் போரை நிறுத்துவதற்கும், தமிழர்களைப் படுகொலை செய்வதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இந்தியா உள்ளிட்ட ‘உலக நாடுகள்’ இலங்கைக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பங்கு பெறுமாறு வேண்டுகிறோம்.

ஈழப் பிரச்சனையில் அக்கறை உள்ள இயக்கப் பிரதிநிதிகள் பலரும் பங்கு பெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் பங்குபெறுவீர்!

கண்டன உரைகள்:

பேரா.அ.மார்க்ஸ், ஒருங்கிணைப்பாளர், அணிதிரட்டும் குழு.

கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.

பாவேந்தன், செயலர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்.

முனைவர் ப. சிவக்குமார், முன்னாள் அரசுக் கல்லூரி முதல்வர்.

துரைசிங்கவேல், புதிய போராளி இதழ்.

அருள் எழிலன், பத்திரிகையாளர், சென்னை.

மோகன்,பொதுச்செயலாளர், சென்னை பத்திரிகையாளர் சங்கம்.

உதயம் மனோகரன், மக்கள் வழக்குறைஞர் சங்கம், சென்னை.

மோகன் குமார், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், கோவை.

இசையரசன், ‘தண்டோரா’ அமைப்பு.

கென்னடி, மக்கள் போராட்ட மையம்,கொள்ளிடம்.

கீதா, அமைப்பு சாரா தொழிலாளர் தேசீய இயக்கம்.

காதர் ஷெரீப், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்,காஞ்சிபுரம்.

ஜெயக்குமார், வழக்குறைஞர், சென்னை.

வெங்கட், புதிய சோசலிச மாற்று.

ஜென்னி, அணி திரட்டும் குழு.

Saturday, March 07, 2009

சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்முறை: நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கை (ஆங்கில வடிவம்)

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 19-ஆம் நாளன்று வழக்கறிஞர்கள் மீது தமிழகப் போலீசார் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சென்னை வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு விசாரணை மேற்கொண்டு கடந்த 4-ஆம் நாளன்று விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்திற்குத் தாக்கல் செய்தது. இந்நிலையில், மேற்சொன்ன வழக்கு விசாரணை 6-ஆம் நாளன்று விசாரணக்கு வந்தது. அப்போது, நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கை முழு விவரம் தெரிய வந்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையை வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக நிரகரித்துள்ளனர்.

நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கையைப் படிக்க கீழே கண்ட சுட்டியைச் சொடுக்கவும்.


நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கை (ஆங்கில வடிவம்).

Monday, March 02, 2009

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மீது போலீசு தாக்குதல் - உண்மை அறியும் குழு அறிக்கை!

சில ஆண்டுகட்கு முன்னர் இன்றைய முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என்றார். ஈரல் மட்டுமல்ல இதயமும் சேர்ந்து அழுகிவிட்டது என்று சொல்லத்தக்க அளவில் சமீப காலத்தில் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சில மாதங்களுக்கு முன் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து நின்றது விமர்சனத்திற்கு உள்ளானது. இன்று யாருடைய ஆணையும் இன்றி உள்ள நுழைந்து தலைமை நீதிபதி (பொறுப்பு) வேண்டிக்கொண்டும் வெளியேறாமல் இரக்கமற்ற கொடுந் தாக்குதல் ஒன்றை வரலாறு காணாத வகையில் வழக்குரைஞர்கள் மீது மேற்கொண்டுள்ளது. காவல்துறையினரே பொதுச் சொத்துக்களையும் வழக்குரைஞர்களின் உடமைகளையும் கொடூரமாக அழித்துள்ளனர். இந்திய அளவில் இன்று பரப்பரபாகியுள்ள இச்சம்பவம் குறித்த உண்மைகளை அறிய தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்:

1. பேரா. என். பாபையா, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.
2. பேரா. ஜி.கே. இராமசாமி, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.
3. திரு. வி.எஸ்.கிருஷ்ணா, மனித உரிமைக் கழகம் (HRF), ஆந்திரா.
4. திரு. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.
5. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.
6. முனைவர். ப. சிவக்குமார், கல்வியாளர், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை.
7. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி.
8. திரு. அயன்புரம் இராஜேந்திரன், பொறியாளர், தென்னிந்திய இரயில்வே, சென்னை.
9. திரு. சிவகுருநாதன், மனித உரிமைளுக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.
10. திரு. நடராசன், மனித உரிமை ஆர்வலர், சென்னை.

இக்குழு உறுப்பினர்கள் சென்ற பிப்ரவரி 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தையும் அழிக்கப்பட்டுள்ள பொது சொத்துக்களையும் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்களைச் சந்தித்தனர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், சிகிச்சைக்குப் பின் வெளியே அனுப்பப்பட்டுள்ள வழக்குரைஞர்களையும் சந்தித்தனர். சென்னைஉயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் திரு. பால் கனகராஜ், முன்னாள் தலைவர் திரு. கருப்பன், சென்னை சட்டக் கழகத் தலைவர் திரு.டி.வி.கிருஷ்ணகுமார், நீதிமன்றப் பதிவாளர் (மேலாண்மை) திரு.விஜயன், பாதிக்கப்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோரையும் சந்தித்தனர். பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான பதர் சயீத் அவர்களுடனும் உரையாடியுள்ளார். தலைமைப் பதிவாளர் திருமதி.மாலா பதிவாளர் (நிர்வாகம்) ஆகியோர் பார்க்க மறுத்துவிட்டனர். பதிவாளர் விஜயன் எங்களைச் சந்தித்த போதும் பிரச்சினை விசாரணையில் உள்ளது எனச் சொல்-எந்தத் தகவலையும் அளிக்க மறுத்துவிட்டார். தாக்குதல் மற்றும் பொருள் அழிவு குறித்து புகார்கள் ஏதும் தரப்பட்டுள்ளதா என்பது போன்ற சாதாரணத் தகவல்களையும் கூட, பொது நல நோக்கில் ஆய்வுக்கு வந்துள்ள சிவில் சமூக உறுப்பினர்களுக்குத் தருவதற்கு விசாரணை எந்த வகையில் தடையாக உள்ளது என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அதேபோல் நகர காவல்துறை ஆணையர் திரு. ராதாகிருஷ்ணனை எமது குழு பிப்ரவரி 27 மாலை தொடர்பு கொண்டபோது, குழு உறுப்பினர்களின் பெயர்களை எல்லாம் விளக்கமாகக் கேட்டுக் கொண்ட அவர், அரசு பேச அனுமதி அளித்தால்தான் பேச முடியும் என்றார். அவர் கூறியபடி இரவு 8 மணிக்குத் தொடர்பு கொண்டபோது தொலைபேசியை எடுக்கவே மறுத்துவிட்டார்.

இக் குழு உறுப்பினர் அ.மார்க்ஸ் சென்ற பிப்ரவரி 26 அன்று மதுரையில் சில வழக்குரைஞர்களையும் மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் திரு.ஏ.கே.ராமசாமி அவர்களையும் சந்தித்துப் பேசினார். சுப்பிரமணிய சாமியைச் சந்திக்க நாங்கள் முயற்சித்தபோது அவர் டெல்-யில் உள்ளதாகப் பதிலளித்தார்.

பின்னணி:

ஈழத்தில் இன்று இனவாத இலங்கை அரசு மேற்கொண்டுள்ள போர், அதனால் தமிழ் மக்கள் பெரிய அளவில் அழிக்கப்படுதல், இந்திய அரசு அதற்கு இராணுவ ரீதியான உதவிகளைச் செய்தல் ஆகியவற்றை எதிர்த்து தமிழக வழக்குரைஞர்கள் பெரிய அளவில் கடந்த ஜனவரி, 29 முதல் வேலை நிறுத்தம் செய்து போராடி விடுகின்றனர். மனித உரிமை நோக்கிலும், மனிதாபிமான அடிப்படையிலும் தமிழகம் தழுவி நடைபெறுகிற இன்றைய போர் எதிர்ப்புப் போராட்டங்களில் வழக்குரைஞர்களும், மாணவர்களும் முன்னணியில் இருப்பது அரசுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்து வந்தது. கல்லூரி மற்றும் விடுதிகளை மூடி மாணவர் போராட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்தியது போல வழக்குரைஞர்கள் போராட்டத்தை அரசால் முடிவுக்குக் கொண்டுவர இயலவில்லை. இந்நிலையில் அவர்களின் போராட்டத்தை கடுமையாக ஒடுக்குவது என்கிற முடிவை அரசு மேற்கொண்டது.

அரசின் இந்நிலைப்பாட்டின் முதல் வெளிப்பாடாக சென்ற பிப்ரவரி 4 நிகழ்ச்சிகள் அமைந்தன. அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்னும் கூட்டமைப்பு தமிழ்நாடு தழுவிய பந்த்தை அறிவித்திருந்தது. அன்று கடைகளை அடைக்க வற்புறுத்தியதாக மூன்று வழக்குரைஞர் குழுக்களைக் காவல்துறையினர் தனித்தனியே கைது செய்தனர். இரு குழுக்களை மாலையில் விடுதலை செய்த காவல்துறையினர் போராட்டத்தில் முன்னணியிலுள்ள இளம் வழக்குரைஞர்கள் அடங்கிய ஒரு குழுவை மட்டும் ‘ரிமாண்ட்’ செய்வதற்காக அன்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். அதை அறிந்த பிற வழக்குரைஞர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் பிணை கோரவும் பெருந்திரளாக, முழக்கங்களுடன் அவர்கள் சென்ற போலீஸ் வேனைப் பின்தொடர்ந்தபோது எவ்விதத் தூண்டலும் இன்றி காவல்துறையினர் மேற்கொண்ட தடியடிப் பிரயோகத்தில் வழக்கறிஞர் புகழேந்தியின் தலை உடைந்தது. வேறு சில வழக்குரைஞர்களும் அடிபட்டனர். தலையில் 5 தையல்களுடன் புகழேந்தி சென்னை பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது. ‘ரிமாண்ட்’ செய்ய வேண்டியவர்களை ராஜராத்தினம் ஸ்டேடியத்திற்குக் கொண்டு சென்று இரவு வெகு நேரம் கழித்து நீதிபதி ஒருவரை அழைத்து வந்து ரிமாண்ட் செய்ய முயற்சித்துள்ளனர்.

தொடர்ந்து ஈழ ஆதரவுகுற்ற நடைமுறைச் சட்டத் திருத்த எதிர்ப்பு ஆகியவற்றை முன்னிருத்தி வழக்குரைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டம் தீவிரமாக செல்வதையும், கொடும்பாவி எதிப்பு முதலான வடிவங்கள் எடுப்பதையும் அரசும் காவல்துறையும் ஆத்திரத்துடன் கவனித்து வந்தன. இங்கொன்றைக் குறிப்பிடுவது முக்கியம். வழக்குரைஞர் தொழி-ல் இன்று இளம் வழக்குரைஞர்களின் வீதம் அதிகம். தவிரவும் ஒரு காலத்தில் வழக்குரைஞர்கள் தொழில் சமூகத்தின் மேற்தட்டுகளி-ருந்து வந்தவர்களாலேயே நிரப்பப்பட்ட நிலை இன்று மாறி அடித்தளச் சமூகத்தினர் பெரிய அளவில் பங்கேற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. முற்றிலும் மனித உரிமைகள் சார்ந்த இன்றைய பிரச்சினையில் போர் நிறுத்தம் கோரியும் இந்திய அரசு போருக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடத்திய இப்போராட்டத்தில் இத்தகைய இளம் வழக்குரைஞர்கள் முன்னணியில் நிற்பது யாரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் அரசும், காவல்துறையும், பொதுவான மத்தியதர வர்க்க மனப்பாங்கும் இதைப் புரிந்து கொள்ள மறுத்தன.

இந்நிலையில்தான் சென்ற 17ந் தேதி நடைபெற்ற ஒரு சிறு சம்வத்தை வழக்குரைஞர்களுக்கு எதிராகக் காவல்துறை பயன்படுத்தியது. வழக்கம்போல அன்றும் வேலை நிறுத்தத்தில் உள்ள வழக்குரைஞர்கள், வேலை நடைபெறக்கூடிய நீதிமன்றங்களுக்கு எதிரில் முழக்கங்கள் இட்டுச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நீதிமன்ற வளாகம் ஒன்றில் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றம் கே.சந்துரு முன்னிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை எடுத்துக் கொள்வதற்கு எதிரான ‘ரிட் அப்பீல்’ வழக்கு ஒன்று விசாரிக்கப்பட இருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சாமி அங்கு வந்து வழக்குரைஞர்கள் அமரும் மேடையில் (Dias) அமர்ந்தார். அவருடன் அவரது வழக்குரைஞர் ராதா மோகனும் இருந்துள்ளார். ஈழப் போராட்டத்தில் மட்டுமின்றி இது போன்ற வழக்குகளில் இடையீடு செய்வதை வழக்கமாக கொண்ட அவரைக் கண்டதும் வழக்குரைஞர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.

அவர்களின் கோபத்தைத் தூண்டும் வண்ணம் அவர் தனது வழக்குரைஞரிடம் இவர்களைப் பற்றி இழிவாகப் பேசியும் உள்ளார். முழங்கங்கள் தீவிரமானபோது யாரோ சிலர் சாமி மீது முட்டைகளை வீசியுள்ளனர். நீதிபதி சந்துரு கண்டித்த பின் வழக்குரைஞர்கள் கலைந்துள்ளனர். சுப்பிரமணியசாமியும் புகர் ஏதும் தராமல் வீடு சென்றுள்ளார். எனினும் பத்திரிகைகளில் இது செய்தியாகியது. நீதிபதி சந்துரு, நடந்த நிகழ்ச்சி குறித்து தலைமை நீதிபதிக்கு (பொறுப்பு) அறிக்கை ஒன்று அளித்துள்ளார். எனினும் அதில் எந்த வழக்குரைஞர்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை. நடந்த நிகழ்ச்சி வருந்தத்தக்கதுதான். தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதுதான். எனினும் இந்தச் சிறிய நிகழ்வை அதற்குரிய சட்டப்படி சந்திக்காமல் இதை முன்னிட்டு வழக்குரைஞர்களை வழிக்குக் கொண்டுவர அரசும் காவல்துறையும் முடிவு செய்தது தொடர்ந்த நிகழ்ச்சிகள் மூலம் உறுதியாகிறது.

பாதிப்படைந்த நபர் எந்தப் புகாரும் அளிக்காதபோதும் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த், விஜேந்திரன், கினி இமானுவேல், புகழேந்தி, ஜெய்குமார், மனோகர், சிவசங்கரன், வடிவாம்பாள், செங்கொடி, கயல் (எ) அங்கயற்கண்ணி, ரவிக்குமார், பார்த்தசாரதி மற்றும் 6 பேர்கள் மீது இ.பி.கோ 147, 451, 355, 353, 333, 506(II), 294(B), 153(A), 307 மற்றும் 3(1) TNPPD சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 18-ந் தேதி அன்று இவர்களில் கினி இமானுவேலைக் கைதும் செய்தனர். மற்றவர்களையும் கைது செய்வதற்குக் கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில் சென்ற 19 முதல் வேலைநிறுத்தத்தை முடிந்துக்கொண்டு நீதிமன்றங்களுக்குச் செல்வது என்கிற முடிவை வழக்குரைஞர்கள் எடுத்தனர். அன்று நீதிமன்றம் இயங்கியது. மேற்கண்ட 20 பேரையும் கைது செய்ய காவல்துறை மும்முரமாக உள்ளதை அறிந்த தொடர்புடைய வழக்குரைஞர்கள் அதற்குத் தயாராக வந்தனர். எனினும் 17-ந் தேதி நிகழ்வின்போது தம்மை இழிவு செய்யும் வகையில் பேசிய சுப்பிமணிசாமியை விட்டுவிட்டு தம்மீது மட்டுமே இத்தகைய மோசமான பிரிவுகளில் வழக்கு மேற்கொள்ளபட்டுள்ளதைக் கணக்கில் கொண்டு, மேற்படி வழக்கில் ஏ1 ஆக உள்ள ரஜினிகாந்த், சுப்பிரமணியசாமி மீது புகாரளிப்பது என முடிவு செய்து, முன்னாள் தலைவர் கருப்பன் உள்ளிட்ட சுமார் 200 வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள பி4 காவல் நிலையத்திற்குச் சென்றனர். கடும் விவாதத்திற்குப் பின்னர் சுப்பிரமணியசாமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீங்கள் கேட்டபடி அறிக்கை பதிவு செய்தாகிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேனில் ஏறுங்கள் என காவல்துறையினர் கெடுபிடி செய்தனர்.

இதற்கிடையில் சுமார் 200 லத்தி ஏந்திய போலீசார் பி4 காவல்நிலையம் அருகே கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 20 பேரும் அந்த இடத்தில் இல்லை. ஒரு சில வழக்குரைஞர்கள் தமது சங்கக் கட்டிடத்திற்குச் சென்று 20 பேரில் கைதானவர் ஒருவர் தவிர மீதியுள்ளவர்களைத் திரட்டிக் கொண்டு வந்து முழக்கமிட்ட வண்ணம் கைதாகலாம் என்கிற முடிவுடன் சங்க அலுவலகத்திற்குச் சென்றனர்.

இந்நிலையில் உதவி ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் இராமசுப்பிரமணி ஆகியோர் அங்கிருந்த சுமார் 15 வழக்குரைஞர்களை “ரவுண்ட் அப்” செய்து வேனில் ஏற்றினார். இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆத்திரமடைந்த வழக்குரைஞர்கள் முழக்கமிட்டு முன்னேறிவர காவல்துறையினரின் வரலாறு காணாத கொடுந்தாக்குதல் தொடங்கியது. அப்போது நேரம் சுமார் மாலை 3.30 மணி.

தாக்குதல்

உயர்நீதி மன்றத்தின் வாயில்களை அடைத்த காவல்துறையினர் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினர். மேலும் அதிக அளவில் தாக்குதல் படை (SAF) கொண்டு வந்து குவித்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வளாகத்திற்குள் நின்றிருந்த
வழக்குரைஞர்கள் மற்றும் எல்லோரது வாகனங்களும் மூர்க்கத்தனமாக தாக்கி அழிக்கப்பட்டன. காவல்துறையினர் தமது வேன்களில் கற்கள் கொண்டு வந்ததை நேரில் பார்த்ததாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மூவர் எங்களிடம் கூறினர். நகர சிவில் நீதிமன்றம், குடும்பநீதி மன்றம், ஆகிவற்றிற்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் பெரிய அளவில் அழிக்கப்பட்டன.

காயமடைந்த வழக்குரைஞர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட வளாகங்களுக்குள் ஒடி ஒளிந்து கொண்டனர். நடப்பதை அறிந்த தலைமை நீதிபதி (பொறுப்பு), காவல்துறைஆணையரைத் தொடர்புகொண்டு படைகளை வெளியே அனுப்புமாறு கேட்டுக்கொண்டும் பயனில்லை. 4மணி சுமாருக்கு நீதிபதி சுதாகர் வெளியே வந்து தாக்குதலை நிறுத்த முனைந்தார். பின் தலைமை நீதிபதியும் வெளிவந்தார். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ரத்தம் ஒழுகும் சுமார் 10 வழக்குரைஞர்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டனர். நீதிபதிகள் திரும்பியவுடன் காவல்துறையின் வெறியாட்டம் மீண்டும் தொடங்கியது. இம்முறை சுமார் 1மணி நேரம் மாலை 5.30 வரை தாக்குதல் நடந்தது. 5.30 மணி சுமாருக்கு நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தன் உள்பட 5 நீதிபதிகள் வெளியே வந்தனர். சமாதானம் செய்வதும் தாக்குதலை நிறுத்துவதும் மட்டுமே அவர்களின் நோக்கம். ஆனால் இம்முறை நீதிபதிகளையும் விட்டுவைக்க காவல் துறையினர் தயாராக இல்லை. அவர்களும் தாக்கப்பட்டனர். நீதிபதி ஆதித்தன் அவர்கள் லத்தியால் தாக்கப்பட்டார். தலையிலும் காயம் அடைந்தார். மற்ற நீதிபதிகளும் தாக்கப்பட்டனர்.
ஆதித்தன் அவர்களைத் தாக்கும் போது “அவர் நீதிபதி அவரை அடிக்காதீர்கள்” எனக் கூவி பாதுகாப்புக்கு வந்த இளம் வழக்குரைஞர்கள் ஏழு பேர் கடுமையாகத் தாக்கப்பட்டு, ஒரு சிலர் மண்டை உடைந்து அப்போலோ மருத்துவமனையில் இருந்ததை குழு உறுப்பினர்கள் கண்டனர். நீதிபதி என்ற போது, “எந்த தேவடியா மகனா இருந்த என்னடா” என்று அடித்ததை அவர்கள் குறிப்பிட்டனர். பெண் நீதிபதி ஒருவரை, “நீதிபதியா இவ, ஆயா மாதிரி இருக்கா” எனச் சொல்லி அடித்துள்ளனர்.

நீதிமன்ற வளாகங்களுக்குள் புகுந்து கண்ணாடிக் கதவுகள், கணினிகள், நூலகங்கள், வழக்குரைஞர் அறைகள், வழக்கு மன்றங்கள் அனைத்தும் தாக்கித் தகர்த்து நொறுக்கப்பட்டன. கண்ணில்பட்ட கருப்பு வெள்ளை சட்டை அணிந்த வழக்குரைஞர்கள் ஒவ்வொருவரும் அடித்து நொறுக்கப்பட்டனர்.
மாலை 6.30 மணி வாக்கில் எப்படியோ தப்பி வெளியே என்.எஸ்.சி. போஸ் சாலைக்கு வந்தவர்கள் எல்லாம் அடித்து தாக்கப்பட்டனர். சாலையில் துரத்தித் துரத்தி வழக்குரைஞர்கள் அடிக்கப்பட்டனர். பெண் வழக்குரைஞர்களை “தேவடியாச் சிறுக்கிகளா” எனக் கத்தி தாக்கியதாக ஒரு பெண் வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

சாலையில் தங்களை விரட்டி விரட்டி அடித்ததைச் சொல்லும் போது வழக்குரைஞர் சுதாவின் கண்கள் கலங்கின. கயல் என்னும் பெண் வழக்குரைஞர் கடும் காயம்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுள்ளார். வழக்குரைஞர் அலுவலகங்கள் அதிகம் உள்ள தம்பு செட்டித் தெருவிலும் புகுந்து தாக்கியுள்ளனர்.

வழக்குரைஞர்களுக்கு சீருடை தைக்கும் கடை, செராக்ஸ் செய்து கொடுக்கும் டால்பின் செராக்ஸ் முதலிய கடைகளும் கூட உடைக்கப்பட்டன. அங்கிருந்தவர்களும் தாக்கப்பட்டனர். இரவு 7.00 மணிவரை வெறியாட்டம் தொடர்ந்தது.

எந்த அளவுக்கு காவல் துறையினர் வெறியோடு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளைச் சொல்லாம். பெண் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது தவிர, நீதிபதிகளும் பெண்களும் தம் வாழ் நாளில் கேட்டிராத வசவுகளால் இழிவுசெய்யப்பட்டது தவிர, குடும்ப நீதிமன்றம், வழக்குரைஞர் ஒய்வு பகுதியில் உள்ள குழந்தை காப்பகங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை சட்டக் கழகம் மற்றும் வழக்குரைஞர் சங்க அலுவலகளிலுள்ள நூலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலை இனப்படுகொலைகளின் போது நூலகங்கள் எரியூட்டப்படுவதை நினைவுறுத்துகிறது.

சென்னை சட்டக் கழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சோனி தொலைக்காட்சி, இரு செராக்ஸ் எந்திரங்கள், நூலக அரங்கம், சலவைக்கல் மேஜைகள் ஆகியவை அழிக்கப்பட்டதோடு 60 வயதான அதன் மேலாளர் ராஜகுருவும் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்துள்ளார். மூன்று ஊழியர்களும் கூட தாக்கப்பட்டுள்ளனர். வழக்குரைஞர்கள் தவிர நீதிமன்ற ஊழியர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். தமது அலுவலகத்தி-ருந்து சில ஆவணங்களைக் காவல்துறையினர் தூக்கிச் சென்றதாகவும் ஒரு பெண் ஊழியர் எங்களிடம் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர். ‘தமிழ் ஓசை’யைச் சேர்ந்த கார்த்திக் பாபு, ‘மக்கள் தொலைக்காட்சி’ யைச் சேர்ந்த ஜோதிமணி, சேதுராமன் மற்றும் ‘நக்கீரன்’ இதழைச் சேர்ந்த ஒருவர், ‘தமிழ்ச்சுடர்’ புகைப்படகாரர் எனப் பலரும் தாக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் (கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்) அடித்து நொறுக்கி நாசமாக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் வழக்குரைஞர்கள், பெண்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சம் உறைந்துள்ளது. பொருள் இழப்புகளை விட இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அச்சம் கவலைக்குரியதாக உள்ளது. பல ஊழியர்கள் பேச மறுக்கின்றனர். சுதாகர் என்னம் இளம் வழக்குரைஞர் மாடியிலிருந்து சன்ஷேட் ஒன்றில் குதித்து இரு கரங்களும் கூப்பி நிற்கும் காட்சி யாரையும் கலங்க அடிக்கும். கைது செய்யப்பட்டு 6 நாட்கள் வரை காவ-ல் இருந்து விடுதலையாகியுள்ள வழக்குரைஞர் கினி எங்ளிடம் பேசியபோது காவல்நிலையத்தில் “கோட்டா” வழக்குரைஞர்கள் எனப் போராடுகிறவர்களை இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்கள் எனக் கேலி செய்ததைக் குறிப்பிட்டார். சுமார் 83 வழக்குரைஞர்கள் முதல் அரசு மருத்துவமனையிலும் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் மருத்துமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர சொந்தப் பொறுப்பில் தனியார் மருத்துவமனைகளில் தங்கிச் சிகிச்சை பெற்றவர்கள், வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றவர்கள் ஏராளம்.

ஊடகங்களில் ஏதோ வழக்குரைஞர்களும் காவல்துறையினரும் சம அளவில் ஒருவரை ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டதாகக் காட்டப்பட்டது. முதற் கட்டத்தில் வழக்குரைஞர்களும் கூட சிறிது நேரம் கல்வீசியிருக்கலாம். ஆனால், கொடுந்தாக்குதலுக்குப் பின் அவர்கள் எல்லோரும் தம்மைத் தற்காத்துக் கொள்வதிலும், ஓடி ஒளிந்து கொள்வதிலும், அச்சத்தில் திகைத்துத் தப்புவதிலும்தான் குறியாய் இருந்துள்ளனர். இடையில் பி4 காவல் நிலையம் எரிக்கப்பட்டது. மேல் தோற்றத்தில் இது வழக்குரைஞர்கள் செய்தது போலத் தோன்றினாலும் அப்போது அங்கிருந்த சூழல், காவல் நிலையத்திற்கு முன்னதாகப் பெரிய அளவில் போலீஸ் மற்றம் தாக்குதல் படை குவிக்கப்பட்டிருந்தது. எனவே வழக்குரைஞர்கள் இதைச் செய்திருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. தலைமை நீதிபதி (பொறுப்பு), நீதிபதி தனபாலன், நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தமது ஆணையில் பதிவு செய்துள்ளபடி சம்பவத்தின் போதே பெண் வழக்குரைஞர்கள் பலரும் இதை மறுத்துள்ளனர். காவல்துறையே நிலையத்திற்குத் தீ வைத்திருக்க வேண்டும் என்கிற ஐயமும் இன்று முன்வைக்கப்படுகிறது. இது தனியே விசாரிக்கப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பாகச் சில இளைஞர்களை அரசும் காவல்துறையும் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி அடையாளம் காட்டுவதை எமது குழு மிகக் கவலையுடன் நோக்குகிறது. மிகவும் அடிப்படையான மனிதாபிமான நோக்கிலிருந்து நடத்தப்படுகிற ஒரு போராட்டத்தில் முன்னணியாக இருந்தார்கள் என்கிற ஒரே நோக்கிற்காகவும், மனித உரிமைகளுக்காகப் போராடக்கூடிய சில வழக்குரைஞர் அமைப்புகளில் இருக்கிறார்கள் என்பதற்காகவும் பழைய வழக்குகளை எல்லாம் தேடிப்பிடித்து எடுத்து தாதாக்களைப் போல காவல் துறையினர் இவர்களைச் சித்திரிக்கின்றனர்.
காவல்துறையினர் சொல்வதை அப்படியே ஏற்று “Gang of 20” என்பது போன்ற மொழியில் ஒரு சில பத்திரிகைகள் எழுதுவதும், படங்களை வெளியிடுவதும் வருத்தத்தை அளிக்கின்றன. அடிப்படை பத்திரிக்கை தருமங்களுக்கு இது முரணானது என்பதை எமது குழு வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறது.

எமது பார்வைகளும் பரிந்துரைகளும்

1. சட்டத்தின் காவலாளர்களான, தமது உரிமைகளையும் சட்டங்களையும் நன்கறிந்த வழக்குரைஞர்களே இவ்வாறு சென்னை போன்ற ஒரு பெரு நகரில் வைத்துத் தாக்கப்படுவார்களேயானால், ஏழை, எளிய பாமர மக்களின் கதி என்ன என்கிற கவலை உருவாகிறது. ஜனநாயக அரசு ஒன்றில் காவல்துறை இப்படி மேலும் மேலும் அதிகாரம் பெறுவதும், அரசு மட்டுமின்றி ஏனைய அரசியற் கட்சிகளும் அதைக் கண்டு கொள்ளாததும் கவலையளிக்கிறது. மதுரையில் உயர் போலீஸ் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கையில் துப்பாக்கியை நீட்டி வழக்குரைஞர்களை நோக்கி வரும் புகைப்படம் எல்லா இதழ்களிலும் வெளிவந்துள்ளது. காவல்துறையின் ஈரலும் இதயமும் அழுகியிருப்பதற்கு இது ஒரு சான்று.

2. அமைதியாகப் போராடிக் கொண்டுள்ள வழக்குரைஞர்களைக் கைது செய்வதற்கு பெருங் கலவரங்களை ஒடுக்குவதற்காகப் பயிற்சி பெற்ற தாக்குதல் படை (SAF), அதுவும் இந்த அளவில் ஏன் குவிக்கப்பட்டது? இந்தப் படைக் குவிப்பிற்கு உத்தரவிட்டது யார்? தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார்? நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் அரசு பதிலளிக்கவில்லை? நீதிமன்றமும் ஏன் இதைக் கண்டுக்கொள்ளவில்லை? வெறும் 147 காவல்துறையினரே அன்று குவிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 122 பேர் காயமடைந்துள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு அரசு தன் வழக்கறிஞர் மூலம் தகவல் அளிப்பது எத்தனை அபத்தமானது. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய பொய்யுரை இது.

3. முட்டை வீசியதாக குற்றம் சாட்டி கடும் பிரிவுகளின் கீழ் வழக்குரைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அரசு, சுப்பிரமணிய சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதா? அவர் மீது நடவடிக்கை எடுக்க இத்தனை அவசரம் ஏன் காட்டப்படவில்லை?

4. நேர்மையாளராகப் பெயர் பெற்றுள்ள நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதையும், அதற்கு வழக்குரைஞர்கள் முழுமையாக ஒத்துழைக்க முடிவெடுத்துள்ளதையும், இக்குழு வரவேற்கிறது .
5. அரசு ஆணைப்படியும், நீதிமன்ற உத்தரவின்படியும், ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலை போதாது. தாக்குதலுக்கு காரணமானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ள கீழ்கண்ட அதிகாரிகள்

1. கே. ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆணையர்,
2. டி. ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஓழுங்கு),
3. ஏ.கே. விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்,
4. இராமசுப்பிரமணி, இணை ஆணையர்,
5. சந்தீப் ராய் ராத்தோர், இணை ஆணையர்,
6. சாரங்கன், துணை ஆணையர்,
7. பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர்,
8. பன்னீர்செல்வம், துணை ஆணையர்

ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்படவேண்டும்.

5. வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலகர்கள் மத்தியில் உறைந்துள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கை ஏற்படுத்துவது அவசியம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது தவிர இழப்புகள் ஈடு செய்யப்படுவது அவசியம். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த காவல்துறையினர் அனைவர் மீதும் தமிழ்நாடு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் மீது நடவடிக்கை (TNPPD Act) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படவேண்டும். சட்ட அமைச்சரும் முதலமைச்சரும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் யாரும் வந்து பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6. ஒரு சில இளம் வழக்குரைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தாதாக்கள் போல சித்திரிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் எடுத்த முடிவின் அடிப்படையில் செயல்பட்ட ஒரு சிலரை மட்டும் இப்படித் தனித்துப் பழிவாங்க அரசும், காவல்துறையும் முயற்சிக்கக்கூடாது.

Tuesday, February 03, 2009

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்றது!



சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் செயல் அதிகாரியை அரசு நியமித்தது சரிதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (02.02.2009) உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரவோடு இரவாக கோயில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது.

புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு ஊழல், முறைகேடு, சட்டவிரோத செயல்கள் நடந்ததையொட்டி, கடந்த 1987ஆம் ஆண்டு தமிழக அரசு அக்கோயிலை அரசுக் கட்டுபாட்டில் கொண்டுவர செயல் அதிகாரி ஒருவரை நியமித்தது. இதை எதிர்த்து, கோயில் நிர்வாக செயலாளர் பொன் தீட்சிதர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதிகாரி நியமனத்திற்குத் தடை உத்தரவு பெற்றார்.

இந்த தடையை நீக்கக் கோரி அரசு தரப்பிலும், நெடும் போராட்டத்தை நடத்தி நடராஜர் கோயிலில் தேவாரம் பாடி வரும் சிவனடியார் ஆறுமுகசாமி தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை நீதிபதி பானுமதி முன் கடந்த 22.01.2009 அன்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் குமார், அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமசாமி, அரசு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன், சிவனடியார் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, வழக்கறிஞர் சிவப்பிரகாசம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இந்த வழக்கில் நீதிபதி ஆர்.பானுமதி நேற்று உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில் நீதிபதி கூறி இருப்பதாவது:

'சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் சரியாக வைக்கப்படவில்லை என்பதும், கோயில் நகைகள் நிறைய காணாமல் போய் உள்ளது எனவும் தெரிகிறது.

இந்து அறநிலையத் துறை சட்டப்படி ஒரு கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக அரசுக்கு தகவல் வந்தால், செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதன்படி, செயல் அதிகாரியை அரசு நியமித்துள்ளது.
தீட்சிதர்கள் கணக்கு வழக்குகளை முறையாக கவனிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளின்படி, கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடந்தால் செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, செயல் அதிகாரியை நியமித்த அரசு உத்தரவு சரிதான். மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இந்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் தாக்கல் செய்த மனுவை இந்து அறநிலையத்துறை ஆணையர் விசாரித்து தள்ளுபடி செய்தது சரியானதுதான். கோயிலில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இதை முறையாக நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அரசு கருதுவது சரியானது. எனவே, கோயிலை நிர்வகிக்க இந்து அறநிலையத் துறை ஆணையர் ஒரு வாரத்தில் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் கோயிலை நிர்வாகம் செய்ய தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி பானுமதி உத்தரவில் கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, விழுப்புரம் இணை ஆணையர் திருமகளுக்கு பேக்ஸ் மூலம் நேற்று இரவு நடராஜர் கோயிலை அரசு ஏற்பது குறித்து கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட இணை ஆணையர் திருமகள் கடலூர் உதவி ஆணையர் ஜெகன்நாதன், செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், சிதம்பரம் ஏஎஸ்பி நரேந்திர நாயர் ஆகியோருடன் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயிலில் ஆலோசனை நடத்தினார். அப்போது சிதம்பரம் கோட்டாட்சியர் ராமலிங்கம், வட்டாச்சியர் தனவந்த கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சுமார் 15 நிமிடம் நடந்த ஆலோனைக்குப் பிறகு அனைவரும் நடராஜர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்த தீட்சிதர்களிடம் கடித நகலை கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்களின் வழக்கறிஞர் சிவக்குமார், “நீதிமன்ற உத்தரவு வேண்டும். இணை ஆணையரின் கடிதத்தை ஏற்க முடியாது” என்று கூறினார். தீட்சீதர்களும் வாக்குவாதம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து “நாங்கள் தீர்ப்பு நகலை வழங்கவில்லை. கடிதத்தின் நகலைத்தான் கொடுக்கிறோம்” என்று அதிகாரிகள் கையெழுத்திட்டு கடிதத்தை கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் திருமகள் கூறுகையில், “நடராஜர் கோயில் செயல் அலுவலராக தில்லை காளியம்மன் கோயில் பொறுப்பை வகிக்கும் கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கம் போல் பூஜை நடைபெறும். தேவாரம், திருவாசகம் தொடர்ந்து பாடப்படும். அரசு என்ன உத்தரவிட்டுள்ளதோ அதன்படி எல்லாம் நடைபெறும்” என்றார்.

செயல் அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டது குறித்த அறிவிப்பு நோட்டீசை பொது தீட்சிதர்கள் செயலக அலுவலக நோட்டீசை போர்டில் அதிகாரிகள் நேற்று இரவு ஒட்டினர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததன் மூலம், பல ஆண்டுக் கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது தமிழ் ஆர்வலர்களுக்கும், பொது மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் லீலைகள் – சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை!

Thursday, January 29, 2009

ஈழத் தமிழர் படுகொலை: தீக்குளித்து மரணமடைந்த முத்துக்குமார் - படங்கள் - வீடியோ!


தற்கொலை செய்துக் கொண்டு
மாண்ட முத்துக்குமார்.



எரிந்த நிலையில் முத்துக்குமார்.


சம்பவம் நடந்த சாஸ்திரி பவன்.


மருத்துவமனையில் மருத்துவர் இராமதாசு, வைகோ,
தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர்...



முத்துக்குமாரின் மரண வாக்குமூலத்தைப்
படிக்கிறார் வைகோ.




தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று (29.01.2009) வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் "பெண்ணே நீ" மாத இதழில் நிருபராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார் . அதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த இவருக்கு வயது 30.

தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் எப்போதும் தமிழர்கள் குறித்து ஆர்வமாக பேசுவார். கடந்த சில மாதங்களாக இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவது முத்துக்குமாரின் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்துக்கு இன்று காலை 10:30 மணியளவிற்கு வந்த அவர், தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது, ஈழத் தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களை காப்பாற்றக் கோரியும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்து முழக்கமிட்டபடி சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார். இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமார் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார்.

அங்கு வந்த காவல்துறையினர் கரிக்கட்டையாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துக்குமாரை மீட்டனர். அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, ஈழத் தமிழர் நலன் காக்க 14 அம்ச கோரிக்கை அடங்கிய ஒரு துண்டுப் பிரசுரத்தை முத்துக்குமார் வைத்திருப்பது தெரிந்தது. அது தொடர்பான விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் முத்துக்குமார் உடல்நிலை மோசமானது. பின்னர் அவர் இறந்துப் போனார்.

முன்னதாக காவல்துறையினர் முத்துக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் கூறியதாவது:

எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும். எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன். இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும்.
மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.

இவ்வாறு முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழருக்காக இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகமே இந்த சம்பவம் அறிந்து பதற்றம் அடைந்துள்ளது.

தீக்குளிப்பு போன்றவற்றை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்து உணர்வு வயப்பட வேண்டும். மனித நேயமுள்ளவர்கள் அனைவரின் அன்பு வேண்டுகோள் இது!

Tuesday, January 20, 2009

ஜனவரி 25-இல் மேலவளவில் "ஆதிக்க ஒழிப்பு சமத்துவ விழா"










சமத்துவப் போராளிகள் அமைப்பு சார்பில் மதுரை அருகேயுள்ள மேலவளவில் "ஆதிக்க ஒழிப்பு சமத்துவ விழா" நடைபெற உள்ளது. இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

வரும் 25.01.2009 ஞாயிறன்று, காலை 10 மணி முதல் மதியம் 3.30 வரை, மேலவளவு தலித் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நடைபெறும் விழாவிற்கு வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமை தாங்குகிறார்.

மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த 30.06.1996 அன்று ஆதிக்கச் சாதி வெறியர்களால் பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டனர். தலித் ஒருவர் தங்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவராக வருவதா என்ற ஆதிக்க எண்ணத்தில் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றினர் ஆதிக்கச் சாதியினர். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர் போராட்டத்தின் விளைவாக குற்றவாளிகள் 17 பேருக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதனை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தற்போது இவ்வழக்கு குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாதி ஆதிக்க வெறிக்குப் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவரது குடும்பத்தினர், சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராடி வருபவர்கள் என பல்தரப்பினரும் ஒன்று திரளும் விழா நடைபெற உள்ளது.

காலையில், புரட்சியாளர் அம்பேத்கர் பெயர்ப் பலகையைத் தோழர் ப.பாரதி திறந்து வைக்கின்றார்.

மேலவளவு படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விடுதலைப் போராளிகளின் உருவப் படங்கள் வழங்கப்பட உள்ளன. கார்ல் மார்க்ஸ் படத்தினைத் தோழர் லெனின் (தமிழ்நாடு இளைஞர் பெருமன்றம்), அம்பேத்கர் படத்தினை வழக்கறிஞர் பானுமதி, தந்தை பெரியார் படத்தினை வழக்கறிஞர் தஞ்சை இராமமூர்த்தி ஆகியோர் வழங்குகின்றனர்.

தன் மகனுக்கு அம்பேத்கர் என பெயரிட்டுள்ள தலித் அல்லாத குடுபத்தினரை தோழர் தி.மு.உமர்பாரூக் (நீலப் புலிகள் இயக்கம்), கீழ்வெண்மனியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தோழர்களைத் தோழர் பி.சம்பத் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), ஈரோட்டிலுள்ள சாதி மறுப்பு திருமணப் பாதுகாப்பு இயக்கத்தினை வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் அறிமுகப்படுத்துகின்றனர்.

மேலவளவு மக்களுக்கானப் பொது நூலகத்திற்குப் புத்தகங்களை பேராசிரியர் அ.மார்க்ஸ், எழுத்தாளர் யாக்கன், வழக்கறிஞர்கள் ஜெகதீஸ், லஜபதிராய், ஜெயசீலன் ஆகியோர் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் ப.மலைச்சாமியிடம் வழங்குகின்றனர்.

விழாவில் பங்கேற்போருக்கு தியாகி இமானுவேல் பேரவை தலைவர் பூ.சந்திரபோசு, தோழர் தமிழரசி, வழக்கறிஞர்கள் சு.க.மணி, பாலமுருகன், தங்கவேல், வனஜா, விஜயேந்திரன், திலகேஸ்வரன், அழகுமணி, கதிர்வேல், சத்தியசந்திரன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்கின்றனர்.

தமிழக அளவில் சாதி மறுப்புத் திருமணம் செய்து சவால்களைச் சந்திப்போரை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோ.சுகுமாரன் அறிமுகம் செய்து வைக்கிறார்.

விழாவில் அருட்திரு பாக்கியநாதன், தோழர்கள் ஜேம்ஸ், புதுவை சுப்பையா ஆகியோர் எழுச்சிப் பாடல்களைப் பாடுகிறார்கள்.

விழா முடிவில் மாட்டுக்கறி உணவை இழிவுப்படுத்தியுள்ள சதியை உடைக்கும் விதமாக அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு விருந்து அளிக்கப்படும் என விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

சாதி ஆதிக்கத்திற்கு எதிரான இந்த விழாவில் பங்கேற்க அனைவரையும் அழைக்கின்றோம்.

தொடர்புக்கு:

வழக்கறிஞர் பொ.இரத்தினம் - 94434 58118.
வழக்கறிஞர் கு.ஞா.பகத்சிங் - 94439 17588.

Sunday, January 18, 2009

புதுச்சேரியில் எழுச்சியாக நடந்த அ.மார்க்ஸ் எழுதிய "கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்" நூல் வெளியீட்டு விழா!



பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள ‘கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் ஒரிசா – கர்நாடகம்’ நூல் வெளியீட்டு விழா புதுச்சேரியில் 12.01.2009 திங்களன்று, மாலை 6.00 மணி முதல் 9.00 மணிவரையில், லப்போர்த் வீதியிலுள்ள பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சே.சாதிக் இந்நூலை வெளியிட்டு கருத்துரை வழங்கினார். புதுச்சேரி – கடலூர் மறை மாவட்ட முதன்மைக் குரு மேன்மைமிகு பொன்.அந்தோணிசாமி அடிகள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு பேசினார். இந்நூலை தொகுத்து எழுதியுள்ள பேராசிரியர் அ.மார்க்ஸ் ஏற்புரை வழங்கினார். முடிவில் அமைப்புக் குழு உறுப்பினர் உளவாய்க்கால் பெ.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி – கடலூர் மறை மாவட்ட முதன்மைக் குரு மேன்மைமிகு பொன்.அந்தோணிசாமி அடிகள் 'அமைதியாக வாழும் சமூகங்களிடையே வெறுப்பை உண்டாக்கி பிளவு ஏற்படுத்தும் சக்திகளிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற சமயத்தில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

டாக்டர் சே.சாதிக் 'மதவாதிற்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தப் பிரச்சனையை அனுகும் போது உணர்ச்சிக்கு இடமளிக்க கூடாது. உணர்வுபூர்வமாக அனுக வேண்டும். மதவதிற்கு எதிரான இந்த நூலை எழுதிய அ.மார்க்ஸ், வெளியிட்ட மக்கள் உரிமைக் கூட்டமைப்பு நண்பர்களுக்கு என் பாராட்டுக்கள்' என்றார்.

மேலும், இந்த நூல் வெளியீட்டிற்கு ரூ.5000/- அன்பளிப்பாக அளித்தார். மேலும், நூல் வெளியீட்டு அரங்கில் கலந்துக் கொண்டவர்களில் நூல் வாங்க வசதி இல்லாதவர்களுக்கு நூல் வழங்கும்படியும், அதற்கான தொகையை அளிப்பதாகவும் உறுதியளித்தார். அரங்கத்தில் இருந்தவர்கள் இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைத்தட்டி வரவேற்றனர்.

நிகழ்ச்சியின் முடிவில், கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது காவல் (காவி) துறை நடத்திய தாக்குதல் குறித்து 13 நிமிடங்கள் கொண்ட காட்சிகள் திரையிடப்பட்டன. அதைப் பார்த்த பல கன்னியஸ்திரிகள் கண்கலங்கினர். அமைதியை நேசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மீளாத அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது.

நிகழ்ச்சிக்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் வண்ண சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தன. வண்ண பதாகைகள் நகரெங்கும் வைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சி குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, தினகரன், மாலை மலர் உள்ளிட்ட தமிழ், ஆங்கில நாளேடுகளும், உள்ளூர் தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டிருந்தன.

வண்ண சுவரொட்டி...