Sunday, February 04, 2007

போலி சாமியார் பிரேமானந்தா கட்டுப்பாட்டில் கடலூர் சிறை

கடலூர் நடுவண் சிறைச்சாலை, போலி சாமியார் பிரேமானந்தா கட்டுப்பாட்டில் உள்ளது குறித்து தமிழக முதல்வர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி.), சிறைத் துறை இயக்குநர் (ஐ.ஜி.), கடலூர் மாவட்ட ஆட்சியர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் உள்ளிட்டவர்களுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன், 23-01-2007 அன்று அனுப்பியுள்ள மனு:

கடலூர் மத்திய சிறையில் சட்டத்திற்குப் புறம்பான பல்வேறு செயல்கள் நடைபெற்று வருவது குறித்து அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் வெங்கடேசன், சுதர்சனம் ஆகியோர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டபோது, பத்திரிகையாளர்கள் மத்தியில் புகார் கூறியுள்ளனர்.

கடலூர் நடுவண் சிறை ஆயுள் தண்டனை சிறைவாசியான பிரேமானந்தா சாமியாரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் குளிக்க, தூங்க, பார்வையாளர்களைச் சந்தித்துப் பேச, பூஜை செய்ய என தனித்தனியே நான்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு விதிக்கப்பட்ட எந்தவித கட்டுப்பாடுகளையும் அவர் மதிக்காமல் சுதந்திரமாக இருந்து வருவதற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கிறது.

சிறைச்சாலையில் ஏராளமான செல்போன்கள் புழக்கத்தில் உள்ளன. இதனால், சிறைவாசிகள் வெளியில் உள்ளவர்களோடு தொடர்புகொண்டு பல்வேறு குற்றங்களை நிகழ்த்துவதாக தெரிகிறது.

சிறைச்சாலையில் உள்ள அறைகளில் 4.50 அடி நீளம் கொண்ட அரிவாள்கள், பட்டாக் கத்திகள், கடப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால் ஏராளமான உயிர் இழப்புகள் ஏற்படும் ஆபத்துள்ளது. சிறைச்சாலை காவலர்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றி வருகின்றனர். சிறைச்சாலைக்குள் முறையான சோதனைகள் நடத்தப்படுவதில்லை.

சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களில் பெரும்பகுதியை வெளியே விற்றுவிடுகின்றனர். இதனால், போதிய உணவு கிடைக்காமல் சிறைவாசிகள் பட்டினி கிடக்கும் சூழ்நிலையில் உள்ளனர்.

குற்றம்புரிந்தவர்கள் திருந்த வேண்டுமென்பதற்காகத்தான் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். ஆனால், கடலூர் சிறையில் அடைக்கப்படும் சிறைவாசிகள் மேலும் கொடூரமானவர்களாக மாறுகின்ற நிலை உள்ளது.

ஆயுள்தண்டனை சிறைவாசிகள் இவ்வாறு கூறியுள்ள புகாரைப் பார்த்தால், கடலூர் நடுவண் சிறையில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் மலிந்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், வெளி உலகுக்குத் தெரியாமல் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.

சிறை நிர்வாகம் பல்வேறு ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவதால் இதுபோன்ற சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்களைத் தடுக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே, கடலூர் மத்திய சிறையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களைத் தடுத்திடவும், ஊழல் - முறைகேடுகளைக் களைந்திடவும், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து, விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

2 comments:

மஞ்சூர் ராசா said...

முக்கியமான செய்தியை பதிந்துள்ளீர்கள்.
அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

செய்வார்களா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//கடலூர் நடுவண் சிறை ஆயுள் தண்டனை சிறைவாசியான பிரேமானந்தா சாமியாரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் குளிக்க, தூங்க, பார்வையாளர்களைச் சந்தித்துப் பேச, பூஜை செய்ய என தனித்தனியே நான்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு விதிக்கப்பட்ட எந்தவித கட்டுப்பாடுகளையும் அவர் மதிக்காமல் சுதந்திரமாக இருந்து வருவதற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கிறது//

இவற்றைப் படிக்கும் போது; "மரண தண்டனை" எவ்வளவு ; நல்லது போன்ற எண்ணமே ஏற்படுகிறது.
செய்யும் பாவம் எல்லாம் செய்து விட்டு சாமியார் காலில் விழுந்தால்; மாற்றலாமென்பவர்கள் இருக்கும் வரை இந்தத் தொல்லைகள் இருக்கவே செய்யும். அதிகாரிகளுக்கு முதல் அறிவுத் தெளிவு வேண்டும்.
இவை நடக்குமா?? அதுவரை பிரேமானந்தா; மற்றும் அத்தனை சமூக விரோதிகள் காட்டிலும் மழையே!
யோகன் பாரிஸ்