Wednesday, November 21, 2007

கொலை செய்ததாக பொய் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

பொய் வழக்கில் சித்ரவதைக்குள்ளாகி 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலைந்த இளைஞர்கள் 2 பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் இழப்பீடாக தமிழக அரசின் உள்துறை செயலர் வழங்கவும், சித்ரவதை செய்த போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் உப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சேவுகன். இவரது மகள் சுஜாதா. ஓரியூர் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்தார். பள்ளி சென்ற சுஜாதா வீடு திரும்பவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதே ஊரைச் சேர்ந்த கார்மேகம் என்பவர் கடத்தியதாக தெரியவந்தது.

வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக கார்மேகம், புதுக்கோட்டை திருகோணத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தொண்டமான் நகரைச் சேர்ந்த பழனி ஆகியோரை கைது செய்யப்பட்டனர். இவர்கள் சுஜாதாவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு சித்திரதை செய்து வாக்குமூலம் பெற்று மதுரை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட சுஜாதா, அவரது கணவர் கணேசன் ஆகியோர் கடந்த ஆண்டு மதுரை நீதிமன்றத்தில் ஆஜராயினர். வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, கணேசன் ஆகியோர் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தங்களை துன்புறுத்தியதற்கு இழப்பீடு வழங்க வேண்டும், அப்போதைய இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன், திருவாடனை துணைக் காவல் கண்கானிப்பாளர் இராஜகோபால், தொண்டி காவல் ஆய்வாளர் மாதவன் மற்றும் போலீசார் மீது மனித உரிமை மீறல் வழக்கு தொடர வேண்டும் எனக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்.

வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, ஆஜரானவர் சுஜாதா தானா என கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார். இச்சோதனையில் சுஜாதா தான் என உறுதி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி செல்வம் 20-11-2007 அன்று பிறப்பித்த உத்தரவு:

இவ்வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்படுகிறது. மனுதாரர்கள் 2 பேருக்கும் தலா ரூ. ஒரு லட்சத்தை இழப்பீடாக தமிழக உள்துறை செயலர் அளிக்க வேண்டும். மனித உரிமையை மீறி நடந்த போலீசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக விசாரணையின் போது ஒருவர் மீது போலீசார் மூன்றாம் தர சித்திரவதைகளை மேற்கொள்வதை சட்டம் அனுமதிக்கவில்லை. குற்றத்தைக் கண்டுபிடிக்கவே மூன்றாம் தர சித்தரவதைகளை கடைப்பிடிப்பதாக கூறி நியாயப்படுத்த முடியாது.

குற்றம் பற்றிய விசாரணையும், புலனாய்வும் குற்றத்தை சீரிய முறையில் கண்டுபிடிக்க உண்மையில் பயனளிக்க வேண்டும். குற்றத்தைக் கண்டுபிடிக்க ஒருவரை மூன்றாம் தர சித்தரவதை மேற்கொள்வது என்பது போலீசார் சட்டத்தை மதிக்காமல் தங்கள் கதவுகளை அடைத்துக் கொண்டு சட்டதை மீறுவதாகும்.

மனுதாரர்கள் அளவற்ற துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். போலீசார் பொய் வழக்கு போட்டு தேவை இல்லாமல் அலைக்கழித்தும், விசாரணை அதிகாரிகளால் உச்சகட்ட துன்பத்திற்கும் ஆளாகியுள்ளனர். இது போலீசாரின் மாபெரும் தவறுக்கு வழி வகுத்துள்ளது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித உரிமைக்காக பாடுபட்டு வரும் வழக்கறிஞர்கள் பொ.இரத்தனம், சகாய பிலோமின்ராஜ், பகத்சிங் உள்ளிடோர் இவ்வழக்கில் ஆஜராகி நீதியைப் பெற்று தந்துள்ளனர். இவ்வழக்கிற்காக மதுரை சென்று வழக்கறிஞர் பொ.இரத்தினம், சகாய பிலோமின்ராஜ் ஆகியோரோடு இருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உதவியது குறிப்பிடத்தக்கது.

வழக்கு முழு விவரம்

ஒரு கைதியின் கடிதம் - (3)


ஒரு கைதியின் கடிதம் - முதல் பகுதி

ஒரு கைதியின் கடிதம் - இரண்டாவது பகுதி்

எனக்கேன்று சொந்தங்கள் என்று சொல்ல என் தாயை தவிர யாரும் இல்லை. ஆனால், நான் சிறைக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. இவ்வளவு நாட்களும் என் தாய் வேலை (கூலி) செய்து தான் ஜீவனம் செய்கிறார்கள். இருக்க வீடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இப்போது எனக்கான காலி மனையில் வீடு கட்ட முடிவு செய்து ( சட்டம் அளிக்கிற வீடு கட்ட) ஒரு மாதம் ஆட்னரி பரோல் கேட்டு விண்ணப்பம் செய்தேன். அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் கொடுத்துள்ளேன். இங்கிருந்து பி.ஓ. ஆபிசர் சென்று எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு உண்மைதான் என்று இரண்டு மாதத்திற்கு முன்பு கண்காணிப்பாளர் அவர்களிடம் எனது பரோல் சம்பந்தமான ரிப்போர்ட்டை கொடுத்துவிட்டார். ஆனல், இதுநாள் வரை அந்த கோப்புகளில் கண்காணிப்பாளர் கையெழுத்துப் போடவில்லை. என்னைப் பழிவாங்கும் நோக்கோடு செயல்படுகிறார்.

போன வாரம் நான் சென்று இது சம்பந்தமாக கண்காணிப்பாளரை கேட்டதற்கு உனக்கு நன்னடத்தை சரியில்லை, அதனால் பரோல் தர முடியாது என்று கூறிவிட்டார். இதே வருடத்தில் இரண்டு முறை அவசரகால பரோல் விடுப்பில் சென்று வந்த எனக்கு இப்போது மட்டும் என்ன நன்னடத்தை குறை. அப்போது ஏன் இதை கூறவில்லை என்று கேட்டதற்கு, அவர் சொன்ன காரணம் எனக்கு சிரிப்பாக இருந்தது. நான் சிறையில் சமையல் கூடத்தில் வேலைப் பார்த்து வந்தேன். (தற்போது அந்த வேலையும் இல்லை). அப்போது ஒரு நாள் மாலை 6.30 மணி அளவில் நான் லாக்கப்பில் இருந்த போது சமையல் கூடத்தில் செல்போனுக்கு சார்ஜ் செய்யும் சார்ஜர் ஒன்றை கண்டு எடுத்ததாகவும் அதற்கு பொறுப்பு நான் தான் என்றும் கூறினார். எப்படி இதற்கு நன் பொறுப்பாவேன். என்னுடன் சேர்ந்து மொத்தம் 12 நபர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களை யாரையும் கேட்காமல் என்னை மட்டும் கேட்டால் இதில் நியாயம் என்ன?

பிறகு நான் விசாரித்ததில் அந்த சார்ஜரின் விலை வெறும் 55 ரூபாய் மட்டுமே என்றார்கள். ஏன் இவரே அங்கு வைத்து எடுத்து என் வாழ்வை நாசமாக்க கூடாது. மேலும் 30 சிறைக் காவலர்கள், 20 வெளியில் உள்ள நாள் காவலர்கள், 10 ஐ.ஆர்.பி., கண்காணிப்பாளர், உதவி -கண்காணிப்பாளர், தலைமைக் காவலர் என இவ்வளவு பேர் இங்கு காவல் இருக்கும் போது சார்ஜர் எப்படி என கைக்கு கிடைக்கும். அப்படி சமையல் கூடத்தில் எடுத்தால் அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர், காவலர் என இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார். இதுவரை 10-க்கும் மேல் செல் போன்கள் எடுத்ததாக சொல்கிறார்கள். இங்குள்ள அதிகாரிகள் துணணயில்லாமல் இவைகள் எப்படி உள்ளே வரும். எங்களை லாக்கப் செய்துவிட்டு இவர்களே, எங்காவது இவைகளை வைத்து எடுத்து, என்னைப் போன்ற அப்பாவிகளை பழிவாங்குகிறார்கள்.

சிறைவாசிகளாக வரும் ஒரு புது நபர் தான் வரும் போது கொண்டு வந்த பணம் போகும் போது அவருக்கு கிடைக்காது. காரணம் கையாடல். ஒருவர் வெளியே சென்று சிறையில் எனது பி.சி.பி-யில் கட்டிய பணத்தைத் தரவில்லை என்று கண்காணிப்பாளர் மீது புதுவை நீதிமன்றத்தில் முறையிட்டார். புகார் கூறப்பட்ட கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் அவர்களை கோர்ட் கண்டித்துள்ளது. அதன் பிறகு பணம் எல்லாவற்றையும் பேங்கில் வைக்கும் பழக்கம் உருவானது.

இதேபோல், பழனி என்ற சின்னபையன் என்ற சிறைவாசியை கண்காணிப்பாளரின் ஒழுங்கற்ற கண்காணிப்பால் 48 நாட்கள் தாமதமாக விடுதலை செய்த அவலமும் இங்கு நடந்துள்ளது. தண்டனைக் காலம் முடிந்து மேலும் 48 நாட்கள் சிறை தண்டனைக் கொடுத்த நீதிபதி தான் இந்த கண்காணிப்பாளர் திரு. ஜெயகாந்தன்.

தொடரும்...

Saturday, November 17, 2007

ஒரு கைதியின் கடிதம் - (2)

ஒரு கைதியின் கடிதம் - முதல் பகுதி

2

ஒரு ஆயுள் தண்டனை சிறைவாசிக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சட்டம் வகுத்த பரோல் விடுப்பு தான். அதையும் கண்காணிப்பாளர் திரு. ஜெயகாந்தன் அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட விசயங்களுக்காக அதிகாரி என்ற ஆயுதம் கொண்டு தடுக்க நினைக்கிறார். இது எந்த வகையில் நியாயம்?

திரு. ஜெயகாந்தன் என்னை பழிவாங்க துடிப்பதின் நோக்கங்கள் பல. அதில் முக்கியமானவை கீழே எழுதுகிறேன்.

(1) 3-5-2005 அன்று விசாரணை சிறைவாசிகள் மூன்று நபர்கள் விஷம் கலந்த மதுவை அருந்தி மரணமடைந்தார்கள். அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதில் நான் முக்கிய சாட்சியாக நீதிபதி ஐயா முன்பு சாட்சி சொன்னேன். அதில், இறந்து போன மூன்று நபரில் ஜெகன் என்ற சிறைவாசி சில நாட்கள் தண்டனை பெற்று தண்டனை பிரிவில் இருந்தான். அப்போது சிறையைப் பார்வையிட வரும் உய்ர் அதிகாரிகளிடம் குறைகளையும் மற்றும் சிறையில் நடக்கும் அநியாயங்களையும் அவர்களிடம் கூறுவான். ஒரு நாள் சிறையில் விசிட் செய்த நீதிபதியிடம் சிறையில் உள்ள அடிப்படை வசதிகளையும், திரு. ஜெயகாந்தன் அவர்களைப் பற்றியும் கூறினான். அது நாளிலிருந்து ஜெகனை கண்டாலே அவருக்குப் பிடிக்காது. பிறகு அவன் தண்டனை முடிந்து வேறு வழக்கிற்காக விசாரணை பிரிவிற்கு சென்றுவிட்டான்.

சம்பவத்தன்று ஜெகன் தான் முதலில் விஷ மதுவை அருந்தி தலைமைக் காவலர் இருக்கும் இடமான டவருக்கு தூக்கி வரப்பட்டான். அப்போது மணி 4.35. அதன் பிறகு செய்தி அறிந்து அங்கு வந்த கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன், ஜெகனைப் பார்த்துவிட்டு எந்த பதிலும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றுவிட்டார். ஜெகனை தனது விருப்பு வெறுப்பு காரணமாக கொஞ்ச நேரமாவது அவன் வெதனையில் துடிக்க வேண்டும் என்றே தாமதப்படுத்தி 5.25 மணி அளவில் அவனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவன் இறப்பதற்கு முழு காரணம் இவரின் பழிவாங்கும் நோக்கமே என்று நான் நீதி விசாரணையில் சொன்னேன். இதற்காக என்னை சமயம் பார்த்து பழிதீர்க்க பரோல் விடுப்பை ஆயுதமாக கையாள்கிறார்.

(2) மேலும், இராமமூர்த்தி என்ற தண்டனை சிறைவாசி தற்கொலை செய்து கொண்டான் என்று செய்தித்தாள்களில் செய்தி வந்தது. அனால், உண்மையில் அவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. தற்கொலை செய்து கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டது என்பதுதான் உண்மை. அவன் ஒரு மனநோயாளி என்று தெரிந்தும் அவனை தனி அறையிலோ அல்லது மருத்துவமனையிலோ பாதுகாப்போடு வைக்க வேண்டியவனை இரண்டு மாடி கொண்ட இடத்தில் வைத்தது தவறு. அத்தவறை செய்தவர் திரு. ஜெயகாந்தன் அவர்கள். இதற்கு முன்பு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஐயா திரு. சின்னபாண்டி அவர்கள் சிறைக்கு விசிட் செய்தார். அப்போது இறந்துபோன இராமமூர்த்தி அவரிடம் ஐயா, என்னை தனியாக ஒரு அறையில் போட சொல்லுங்கள். என் மனநிலை ஒரே மாதிரியாக இல்லை. அதனால், தனி அறையில் போட உத்தரவு செய்யுங்கள் என்று கூறினான். இதை நான் உட்பட அனைவரும் நேரில் பார்த்தோம். அடுத்த இரண்டு நாளில் அவன் இறந்துவிட்டான். இதில் வேதனையான விஷயம் அவன் விடுதலை ஆவதற்கு 10 நாட்கள்தான் இருந்தது.

கண்காணிப்பாளரின் அலட்சியப் போக்கால் இறந்த உயிர்களின் எண்ணிக்கை அன்றோடு நான்காக உயர்ந்தது. இதையும் ஆர்.டி.ஓ. விசாரணையில் நடந்த விவரங்களை துணை கலெக்டரிடம் கூறினேன். மேலும் மேலும் அவரின் பார்வைக்கு நான் கோழிக் குஞ்சாக மாறினேன். இதுவரை ஏராளமான நபர்கள் தற்கொலை முயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், கண்காணிப்பாளரின் கண்காணிப்பு சரியில்லை என்றே கூறுவேன். வெறும் 250 கைதிகளை கொண்ட இந்த சிறையிலே இப்படி நடந்தால், மற்ற மாநிலங்களில் உள்ள சிறைக்கூடங்களில் எந்த நிலை உள்ளது என்று திரு. ஜெயகாந்தன் அவர்கள் சென்று பார்ப்பாரா? திகார் சிறையில் அதிகாரியாக இருந்த கிரண்பேடி அவர்கள் பற்றி இவர் கேள்வியாவதுப்பட்டு இருப்பாரா?

தொடரும்...

தேங்காய்த்திட்டு சம்பவம்: தவறிழைத்த போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத ஐ.ஜி.யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகரி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, புதுச்சேரி யூனியன் பிரதேச உள்ளாட்சி அமைப்புகள் தலைவர் கோ.அ.ஜெகநாதன் ஆகியோர் 16-11-2007 அன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை :

புதுச்சேரி, தேங்காய்த்திட்டு இளைஞர் கொலை வழக்கை மூடிமறைத்த முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய போலீஸ் ஐ.ஜி.யை வன்மையாக கண்டிக்கிறோம்.

தேங்காய்த்திட்டை சேர்ந்த இளைஞர் பாலா (எ) தெய்வசிகாமணி கொலை செய்யப்பட்டு, கடந்த 30-09-2007 அன்று உப்பனாற்றில் அவரது உடல் கண்டெடுக்கப் பட்டது. உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த அவரது உடலை முதலியார்பேட்டை போலீசார் கைப்பற்றி முறையாக விசாரணை மேற்கொள்ளாமல் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அனாதை பிணம் என அவரது உடலை சந்நியாசித் தோப்புச் சுடுகாட்டில் புதைத்துவிட்டனர்.

இதனிடையே, தேங்காய்த்திட்டைச் சேர்ந்த கொலையாளிகள் மூன்று பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதன்பின்னர், போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர். கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடையாவிட்டால் பாலா கொலை செய்யப்பட்டது வெளியே தெரியாமல் போயிருக்கும்.

இச்சம்பவம் பற்றி தலைமைச் செயலர், ஆட்சியர், போலீஸ் ஐ.ஜி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பப்பட்டது. அதில், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கொலையை மூடிமறைத்த முதலியார்பேட்டை காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசு துணை ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உள்ளிட்டவர்களிடம் துணை ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே, கொலை செய்யப்பட்டது பாலா தானா என்பதை அடையாளம் காண அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அவரது மண்டை ஓடு தடய அறிவியல் சோதனைக்காக ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது.

புதுச்சேரி, தேங்காய்த்திட்டு இளைஞர் கொலை வழக்கை மூடிமறைத்த முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய போலீஸ் ஐ.ஜி.யை வன்மையாக கண்டிக்கிறோம்.

தேங்காய்த்திட்டை சேர்ந்த இளைஞர் பாலா (எ) தெய்வசிகாமணி கொலை செய்யப்பட்டு, கடந்த 30-09-2007 அன்று உப்பனாற்றில் அவரது உடல் கண்டெடுக்கப் பட்டது. உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த அவரது உடலை முதலியார்பேட்டை போலீசார் கைப்பற்றி முறையாக விசாரணை மேற்கொள்ளாமல் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அனாதை பிணம் என அவரது உடலை சந்நியாசித் தோப்புச் சுடுகாட்டில் புதைத்துவிட்டனர்.

இதனிடையே, தேங்காய்த்திட்டைச் சேர்ந்த கொலையாளிகள் மூன்று பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதன்பின்னர், போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர். கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடையாவிட்டால் பாலா கொலை செய்யப்பட்டது வெளியே தெரியாமல் போயிருக்கும்.

இச்சம்பவம் பற்றி தலைமைச் செயலர், ஆட்சியர், போலீஸ் ஐ.ஜி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பப்பட்டது. அதில், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கொலையை மூடிமறைத்த முதலியார்பேட்டை காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசு துணை ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உள்ளிட்டவர்களிடம் துணை ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே, கொலை செய்யப்பட்டது பாலா தானா என்பதை அடையாளம் காண அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அவரது மண்டை ஓடு தடய அறிவியல் சோதனைக்காக ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது.

இதன்பின்னரும், கொலையை மூடிமறைத்த முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் கந்தநாதன் தவறு செய்த முதலியார்பேட்டை போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தனது அரசியல் செல்வாக்கு மூலம் காப்பாற்றி வருகிறார்.

இதுபோன்று சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் ஐ.ஜி. செயலற்று இருப்பது சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதற்கு வழிவகுக்கிறது.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக முதலியார்பேட்டை போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறிழைத்த போலீஸ் அதிகாரிகளுக்குத் துணைப் போகும் போலீஸ் ஐ.ஜி.க்கு எதிராக எதிர்வரும் 22-11-2007 வியாழனன்று, காலை 10 மணிக்கு, சுதேசி பஞ்சாலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய இயக்கத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துக் கொள்கின்றனர்.

Friday, November 16, 2007

ஒரு கைதியின் கடிதம்...

கடும் அடக்குமுறை ஏவப்படும் புதுச்சேரி மத்திய சிறை நிர்வாகத்தை எதிர்த்து கடந்த 12-11-2007 முதல் சிறைவாசிகள் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆயுள் தண்டனை சிறைவாசி சு.மணிகண்டன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் இது. தற்போது இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

வெளி உலகம் அறிய முடியாத சிறைச்சாலைப் பற்றி இந்த சிறைவாசி எழுதியுள்ள கடிதம் அதிகாரத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்துகிறது...

சட்டம் அனைவருக்கும் சமம் எனில், இந்தப் புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையான கண்ணீர் மனு.

ஐயா,

நான் புதுவை மத்திய சிறையில் மிகவும் நல்ல முறையில் இருந்து வருகிறேன். நீதிமன்றம் ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதின் முக்கிய நோக்கமே சம்பந்தப்பட்ட குற்றவாளி, தான் செய்த தவறை நினைத்து வருந்தி திருந்த வேண்டும் என்பதற்காக தான் என்று தங்களைப் போன்ற சட்டம் படித்த பெரியவர்கள் சொல்கிறார்கள். அதன்பின் அந்த குற்றவாளி திருந்தினானா என்று எந்த நீதிபதிகளும், நீதிமன்றங்களும் பார்ப்பதில்லை. அதற்கு காரணம் சிறை அதிகாரிகள் மேல் உள்ள நம்பிக்கைதான். ஆனால், புதுவை மத்திய சிறையில் நிலைமை தலைகீழ். குற்றவாளியை திருத்த வேண்டிய அதிகாரியே குற்றவாளியாக இருந்தால் நாங்கள் எப்படி எங்கள் தவறை உணர்ந்து திருந்துவது?

இ.பி.கோ. சட்டப் பிரிவில் ஒரு பகுதியில் சொல்வது என்னவென்றால், உயர் பொறுப்பில் உள்ள அதிகரிகள், தான் பணிபுரியும் இடத்தில் இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்க கூடாது என்று சட்டப் பிரிவு சொல்கிறது. அதன் நோக்கம், உயர் அதிகாரிகள் தனக்கு கீழ் உள்ளவர்களைக் காழ்ப்புணர்ச்சி காரணமாக நசுக்குவதற்கும், பழிவாங்குவதற்கும் தனது பதவியை பயன்படுத்தலாம் என்பதற்காகத்தான். அது எவ்வளவு உண்மை என்பது இங்கு நடக்கும் பழிவாங்கும் நடவடிக்கையில் இருந்து நன்றாக தெரிகிறது. சிறையில் உள்ள வேறு குற்றவாளி எனக்கு தொல்லை கொடுத்தால் சிறை உயர் அதிகாரியிடம் புகார் கூறுவேன். ஆனால், புகாரே சிறை அதிகாரி மீதுதான் எனும் போது நான் உங்களிடம் புகார் செய்கிறேன்.

பிச்சை புகினும் கற்கை நன்றே! என்று பெரியவர்கள் கூறுவார்கள். மேலும் படித்தவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல இடம் உண்டு. அது வெளியில் உள்ளவர்களுக்கே பொருந்தும். சிறையில் அது செல்லுபடியாகாது. அதுவும் எனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்குப் பிடிக்காத பட்சத்தில் சொல்லவே வேண்டாம். நான் திருந்திவிட்டேன் என்று வாய் மொழியாக சொன்னால் நீங்களும் நம்பமாட்டீர்கள். சமுதாயம் ஏற்காது. இதற்காகவே என் நிலையை மாற்றிக் கொள்ள நினைத்து, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழி மூலம் பி.பி.ஏ. படித்து பட்டம் பெற்றுள்ளேன். மேலும் எனக்கான தகுதியை வளர்த்துக் கொள்ள திரைப்பட கல்லூரி மூலமாக டி.எப்.டி. படித்து பட்டம் வாங்கினேன். ஒரு நல்ல இதயம் உள்ள அதிகாரியாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். ஆனால், இங்குள்ள கண்காணிப்பாளர் திரு.ஜெயகாந்தன் அவர்கள் என்னை தேசத் துரோகி போல் பார்க்கிறார். நானென்ன இவர்கள் சம்பள பணத்திலா என்னை படிக்க வைக்க வேண்டும் என் சொல்கிறேன்.

மேலும், சிறையில் உள்ள அடிப்படை வசதி குறைகளை மற்றும் அடக்குமுறைகளை இதுநாள்வரை வெளியில் சொன்னது கிடையாது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருந்தேன். ஆனால், பழிவாங்கும் படலம் உச்சத்திற்குச் சென்றுவிட்டதால் தங்களிடம் என் மன குமுறல்களை இறக்கி வைக்க விரும்பி இதை எழுதுகிறேன்.

தொடரும்...

Wednesday, November 14, 2007

தென்காசி இன்னொரு கோவை அகக்கூடாது...உண்மை அறியும் குழு அறிக்கை!

தொகுப்பு: பேராசிரியர் அ. மார்க்ஸ்

தென்காசியில் சமீபகாலமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்கள், கொலைகள் சார்பாக ஆய்வு செய்ய மனித உரிமை இயக்கங்கள் பலவும் இணைந்த உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. புதுவை கோ.சுகுமாரன் தவிர இளம் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த் (சென்னை), சீனி சுல்தான் (சென்னை), மனோகரன் (சென்னை), தமயந்தி (சேலம்), செங்கொடி (சென்னை), பொற்கொடி (மதுரை) ஆகியோர் தவிர, கோவை வெடிகுண்டு வழக்கில் வாதிட அரசுத் தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் அப்துர் ரஹ்மான் அகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.

சென்ற செப்டம்பர் 7ஆம் தேதியன்று தென்காசி சென்றிருந்த இக்குழு இருதரப்பிலும் பலரையும் சந்தித்துப் பேசியது. கொலையுண்ட நாகூர் மீரானின் மனைவி பிர்தவ்ஸ் (18), பஷீரின் மனைவி மும்தாஜ் (19), கொலையுண்ட குமார் பாண்டியன், செந்தில் முதலானோரின் சகோதரர்கள் சீனிவாசன், மகாதேவன் ஆகியோரையும் நேரில் சந்தித்துப் பேசினோம். தென்காசி நகர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களையும் சந்தித்தோம். முன்னதாக வழக்கறிஞர் தமயந்தியும் அவரது உதவியாளர்களும் சேலம் சிறையில் நீதிமன்றக் காவல் உள்ளவர்களைச் சந்தித்துத் தகவல்களை சேகரித்திருந்தனர்.

தென்காசி முழுவதும் போலீஸ் கெடுபிடி இருந்ததை எங்களால் பார்க்க முடிந்தது. கூடியவரை ஒவ்வொரு தெருவிலும் இரு காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. காவல்துறை ஒரளவு முன்எச்சரிக்கையுடன் இருப்பது தெரிந்தது.

1982-ல் நடைபெற்ற மதமாற்றத்தின் மூலம் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த மீனாட்சிபுரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் தென்காசி. அன்று முதல் இந்துத்துவ சக்திகளின் கவனம் பெற்ற ஊராகவும் இது உள்ளது. இந்த அறிக்கையை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட எல்.கே.அத்வானி திருநெல்வேலிக்கு வருகை புரிந்துள்ளார்.

பொதிகை மலை அடிவாரத்தில் குற்றால அருவிக்குச் சில கல் தொலைவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இவ்வூரில் நெடுங்காலமாக இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். மக்கள் தொகையில் சுமார் 40 சதம் பேர் முஸ்லீம்கள். இங்குள்ள 13 ஜும்மா மசூதிகளில் ஒவ்வொன்றிலும் சுமார் 3,000 பேர் என கொண்டாலும் தென்காசியிலுள்ள மொத்த முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் 40,000 இருக்கலாம். பெரும்பாலும் சிறு, நடுத்தர வியாபாரிகளாக உள்ளனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிருவரே பெரு வணிகர்களாகவும், சிறு தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.

1967-ல் நடைபெற்ற மொகரம் ஊர்வலம் ஒன்றின்போது முதன்முதலில் சிறு கலவரம் ஒன்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதிலிருந்து தென்காசியில் அந்த ஊர்வலம் நடப்பதில்லை.1974-ல் நகர் நடுவில் கடைத்தெருவில் கோயிலருகில் உள்ள பொதுத் திடல் ஒன்றில் திடீரென ஒரு பிள்ளையார் சிலை நிறுவப்பட்டுள்ளது. சில நாட்களில் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த கீற்றுப் பந்தல் ஒன்று கொளுத்தப்பட்டிருக்கிறது. சிலையை வைத்தவர்களே அதைக் கொளுத்தியதாகவும் ஒரு தரப்பினர் கூறினர். இந்தச் சந்தர்ப்பத்திலும் கலவரம் மூண்டுள்ளது. பின்னர் சிலை அகற்றப்பட்டுள்ளது. தற்போது கொலையுண்ட இந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவருக்கு இச்சம்பவம் ஒன்றில் தொடர்பு இருந்துள்ளது. ஊர்வலத்தில் வந்தவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டைத் தாக்க முயன்றதாகவும், தமது தந்தை அதைத் தடுக்க முனைந்தபோது கலவரம் மூண்டதாகவும் சொர்ணத் தேவரின் பிள்ளைகள் குறிப்பிட்டனர். அனால் அவரே ஊர்வலத்தைத் தடுத்து கலவரம் புரிந்ததாக மற்றவர்கள் கூறினர்.

இதுதவிர கடைத்தெருவில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிராக அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்று தொடர்பாகவும் பிரச்சினை ஒன்று இருந்து வந்துள்ளது. காசி விசுவநாதர் ஆலயத்திலிருந்து சுமார் 200 அடிகள் தள்ளி அமைந்துள்ள இந்த "பஜார் பள்ளிக்கும் ஆலயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடைகளுக்கு மத்தியில் உள்ளடங்கிய கூரையும், ஒடும் வேய்ந்த அந்தச் சிறு கட்டடம் சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கடைத்தெருவில் வணிகம் புரியும் முஸ்லீம்கள் மற்றும் அருகிலுள்ள ஊர்களிருந்து பொருட்கள் வாங்க வருவோர் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை செய்வதற்கான ஒரு முக்கியப் புள்ளியாக உள்ளது. மினாராக்கள், அலங்காரங்கள் ஏதுவுமின்றி சிறிய அளவில் இப்பள்ளியைச் சீர்திருத்த சில அண்டுகள் முன்பு முஸ்லீம்கள் முனைந்துள்ள போது இந்து முன்னணி சார்பில் குமார் பாண்டியன் அதை எதிர்த்துள்ளார். கூரையை மாற்றி கான்க்ரீட் தளம் அமைக்க மட்டுமே முனைந்த முஸ்லீம்கள் மாவட்ட அட்சியர் நிரஞ்சன் மார்டினிடம் அதற்கான அனுமதியைப் பெற்றிருந்த போதிலும் இந்து முன்னணியின் ஆட்சேபனையால் இன்றுவரை அப்பணி நடைபெறவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் (1992) இந்தியாவெங்கிலும் முஸ்லீம்கள் டிசம்பர் 6-ஐ துக்க தினமாக நினைவு கூர்வதை நாம் அறிவோம். இங்கும் அந்த வழக்கம் இருந்துள்ளது. சென்ற ஆண்டில் இதுதொடர்பாக முஸ்லீம்கள் தட்டிகள் வைத்தபோது அப்போதிருந்த காவல்துறை அய்வாளர் சக்ரவர்த்தி அதை நீக்குமாறும் தட்டிகளுக்கு ஏதும் அபத்து வந்தால் தான் பொறுப்பில்லை எனவும் கூறியுள்ளார். அடுத்தநாள் தட்டிகள் எரிக்கப்பட்டுள்ளன. தவிரவும் குமார் பாண்டியனும் இந்து முன்னணியினரும் டிசம்பர் 6 அன்று எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர். முஸ்லீம்களுக்கும் இனிப்புகள் கொடுக்கப்பட்டு ஆத்திரம் மூட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்ற டிசம்பர் 17, 2006-ல் குமார் பாண்டியன் கொல்லப்- படுகிறார். இதுதொடர்பாக அனீபா, முருகேசன் (எ) அப்துல்லா, சுலைமான் என்கிற சிறுவன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். அரசு துரித நடவடிக்கைகள் எடுத்தபோதும் கலவரமும் இருந்தது. ஒரளவு அமைதி திரும்பிய நிலையில் திருநெல்வேலி மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கான் மீது கொலைவெறித் தாக்குதல் ஒன்று மார்ச் 2-ம் தேதி (2007) நடைபெற்றது. கடும் தாக்குதலின் போதும் அவர் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். செந்தில், சுரேந்திரன், கபிலன் என மூவர் கைது செய்யப்பட்டனர். இருதரப்பிலும் கைது செய்யப்பட்டவர்களில் சிறுவர் சுலைமான் தவிர மற்றவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் போடப்பட்டு பின் நீதிமன்றத்தில் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பிணையில் வந்தனர்.

அனீபா, அப்துல்லா இருவரும் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினமும் மும்முறை கையெழுத்திட வேண்டும். கபிலன், சுரேந்திரன், செந்தில் மூவரும் அருகிலுள்ள உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பின் விளைவுகளைத் தடுக்க தொலைத் தூரங்களில் தங்கிக் கையெழுத்திடச் சொல்வதே வழக்கம். ஆனால் இங்கோ ஒரே ஊரில் அருகருகே கையெழுத்திடச் செய்ததோடன்றி இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்து நிபந்தனையை மாற்றிக்கொள்ள ஆணை பெற்றும் தென்காசி குற்றவியல் நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவில்லை.

கையெழுத்திட வரும் இருதரப்பினரும் பாதுகாப்பு கருதி ஆயுதங்களுடன் வருவது என்கிற நிலையில் செந்தில் முதலானோருக்கு நிபந்தனை ஜாமீன் ரத்தாகிறது. சென்ற அகஸ்டு 13 அன்று கையெழுத்திட வந்த முஸ்லீம்களைச் சோதனை செய்து, வீடியோ படம் எடுத்து இனி துணை ஆட்கள் வரக் கூடாது , ஆயுதங்கள் எதுவும் கொண்டு வரக் கூடாது எனக் காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். அடுத்த நாள் அவர்கள் கையெழுத்திட வரும்போது வேண்டுமென்றே அவர்கள் தாமதிக்கப்பட்டு, பின் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாக பரவலாக முஸ்லீம்கள் தரப்பில் குற்றம்- சாட்டப்பட்டது. அனீபாவும் மற்றவர்களும் திரும்பி வரும்போது அம்பாசிடர் கார் ஒன்றில் வந்த குமார் பாண்டியனின் சகோதரர்கள் நாட்டு வெடிகுண்டு உட்பட பயங்கர அயுதங்களால் தாக்கியுள்ளனர். அனீபா தரப்பினரும் திருப்பித் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திலும், சிகிச்சைக்குக் கொண்டு செல்லும்போதும், மருத்துவமனையில் மொத்தம் அறு பேர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொலையுண்டவர்களில் சேகர், சுரேஷ், செந்தில் அகிய மூவரும் குமார் பாண்டியனின் சகோதரர்கள். ஆக ஒரே குடும்பத்தில் நால்வர் கொல்லப்- பட்டுள்ளது பரிதாபமானது. கொல்லப்பட்ட இதரர்கள்: பஷீர், அசன் கனி, நாகூர் மீரான்.

உடனடியாக காவல்துறையினர் விரைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இம்முறை கலவரம் ஏதும் நடக்கவில்லை. இதற்கு முன் நடைபெற்ற கலவரங்கள் அனைத்திலும் முஸ்லீம்கள் தரப்பில் கடும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. அவர்களது கடைகளும் சூறையாடப்பட்டுள்ளன. கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜயகுமார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளையும், வெளியிட்ட அறிக்கையையும் நடுநிலையாளர்கள் பாராட்டுகின்றனர். "தாக்க வந்தவர்களே தாக்கப்பட்டார்கள்'' எனவும், இது குமார் பாண்டியன் குடும்பத்திற்கும் அனீபாவிற்குமுள்ள தனிப்பட்ட தகராறு, மதப் பிரச்சினை அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆம். இந்து முஸ்லீம் என்கிற பிரச்சினை நீண்ட நாட்களாக குமைந்து கொண்டிருந்த போதும், அதற்குப் பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்த போதும் குமார் பாண்டியன் கொலைக்கும் இவைகளுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. குமார் பாண்டியனும் அவரைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனீபாவும் மிக நெருங்கிய நண்பர்களாகவும், ஒன்றாக கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். ஏ.டி.ஜி.பி. சொன்னது போல, எதோ தனிப்பட்ட பகையே இதற்குக் காரணம் என்பதை எங்களால் அனுமானிக்க முடிந்தது. இருந்தபோதிலும் இது ஏதோ பள்ளிவாசல் தொடர்பான தகராறு என்பது போலப் பிற காவல்துறை அதிகாரிகளால் சொல்லப்பட்டதும், ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டதும் தவறானது. இந்து முன்னணியின் நோக்கத்திற்கே இது பயன்படக் கூடியது.

அதேபோல முன் குறிப்பிட்ட காவல் துறை ஆய்வாளர் இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இரு தரப்பைச் சேர்ந்தவர்களுமே இதைக் குறிப்பிட்டனர். குமார் பாண்டியன் கொலையை ஒட்டி உடனடியாக அவர் மாற்றப்- பட்டுள்ளார். எனவே காவல்துறைக்கே அவரது செயற்பாடுகளில் பிரச்சினை இருந்தது விளங்குகிறது. கையெழுத்திட வரும்போதுள்ள ஆபத்தான சூழலைப் பற்றி முஸ்லீம் தரப்பில் எழுத்து மூலமாகவே புகார் அளிக்கப்பட்டும் தற்போதுள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததும், நிபந்தனையை மாற்றுவதற்கு இன்னும் தீவிர முயற்சிகள் எடுக்காததும் ஆறு பேர் கொலையுண்டதற்கு காரணமாக இருந்துள்ளது. நடவடிக்கை எடுக்காததோடு புகார் கொடுத்தவர்களையே அதிகாரிகள் திட்டியுள்ளனர். கொலை நடந்த நாளன்று காவல் நிலையத்தில் அனீபாவும் மற்றவர்களும் வேண்டுமென்றே காக்க வைத்து அனுப்பப்பட்டதாக முஸ்லீம்கள் தரப்பில் பரவலாக கருதப்படுகிறது. காவல்துறை இந்த ஐயத்தைப் போக்க உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எங்கள் குழு கருதுகிறது.

தற்போதுள்ள துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஓர் இளைஞர். பொதுவாக இளம் அதிகாரிகள் ஊழலற்றவர்களாகவும், நடுநிலையாளர்- களாகவும் இருப்பது வழக்கம். நாங்கள் அவருடன் பேசியபோது எங்களுக்கும் அந்த நம்பிக்கை ஏற்பட்டது. எனினும் தேவையில்லாமல் அப்பாவி முஸ்லீம்கள் பலர் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதும், குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்படுவதும் நிகழ்கிறது. நாங்கள் சென்றிருந்த அன்று கூட ஊனமுற்ற ஒருவர் அவ்வாறு கொண்டு செல்லப்பட்டிருந்தார். ஆறு பேர் கொலை வழக்கில் முஸ்லீம்கள் மீது மட்டும் சதி செய்ததாக (120பி) குற்றம்சாட்டப்பட்டுள்ளதே இது எப்படி என எங்கள் குழுவிலிருந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் வினவியபோது, "இதுவே இறுதி அல்ல, விசாரணையின் போது மற்றவர்கள் மீதும் புதிய பிரிவுகள் தேவை எனில் சேர்க்கப்படலாம்'' என்றார் துணைக் கண்காணிப்பாளர்.

இந்த பதில் எங்களுக்குத் திருப்திகரமாகவோ, ஏற்கக் கூடியதாகவோ இல்லை. அப்பாவிகள் வழக்கில் சிக்க வைக்கப்படுவது பற்றிக் கேட்டபோது, "இது சாதாரணப் பிரச்சினையல்ல. இதெல்லாம் தவிர்க்க இயலாது. நீதிமன்றம் இருக்கிறது தானே. அதில் தங்கள் குற்றமின்மையை நிறுவி அவர்கள் வெளியே வந்து கொள்ளட்டும்'' என அவர் கூறியதையும் எங்களால் ஏற்க இயலவில்லை.

ஒன்பதரை ஆண்டுக்காலம் சிறையிலிருந்த அப்துல் நாசர் மதானி இன்று குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த ஒன்பதாண்டு காலம் அவரும் அவரது குடும்பமும் சந்தித்த துயர்களை யார் ஈடுகட்ட இயலும்?

"பயங்கரவாதம்' எனச் சொல்லி குடிமக்களின் வாழ்வுரிமைகளைப் பறிப்பதை எப்படி அனுமதிப்பது? அதிகாரிகள் மத்தியக் குடிமக்களின் சட்ட உரிமைகள் குறித்த உணர்வூட்டப்படுதல் அவசியம்.

முஸ்லீம்களுக்கெதிரான இப்படியான ஒரு அணுகு முறை ஒரு காலத்தில் கோட்டைமேட்டில் கடைப்பிடிக்கப்பட்டதன் விளைவை அடுத்த சில ஆண்டுகளில் கோவையில் சந்திக்கவில்லையா? தென்காசியும் கோவை அக வேண்டுமா? அரசும் காவல்துறையும் மிகவும் கவனம் எடுத்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.

சிறப்புக் காவல்படையை தென்காசியில் நிறுத்துவதற்கு ஒரு முயற்சி இருந்ததாகவும் சிலர் கூறினர். இது தேவையில்லை. அத்துமீறல்களுக்கே இது வழிவகுக்கும். சிறப்புப் படை இல்லாமலேயே அங்கு அமைதியை நிலைநாட்ட இயலும்.

இரு தரப்பிலும் தவறுகள் இருந்த போதிலும், இதை ஒரு மதப் பிரச்சினையாக மாற்ற முயல்வதும், மதவெறியைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசுவதும் இந்து முன்னணித் தரப்பிலிருந்துதான். முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில் தற்காப்பு நிலையிலேயே உள்ளனர். முஸ்லீம் அமைப்புகள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுவதில்லை.

மதவெறியைத் தூண்டும் பேச்சுக்கள் தடை செய்யப்படுவதோடு இருதரப்பு சார்ந்த மத ஊர்வலங்களும் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசும் காவல்துறையும் தவிர அரசியல் கட்சிகளும் கவனம் எடுத்து மக்கள் பிளவுறுதலைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும். முஸ்லீம்களின் பஜார் பள்ளி வாசல் திருத்தப்படுதல் என்பது மிகவும் நியாயமான ஒரு கோரிக்கை. அரசும் அரசியல் கட்சிகளும் முயற்சித்து இரு தரப்பினரையும் கூட்டிப் பேசி பள்ளிக் கட்டிடத்தை கான்கிரீட்டாக மாற்ற அனுமதி அளிக்க வேண்டும். வெட்டுக் காயங்களுடன் சிறையில் இருப்போருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதற்கு ஆவன செய்ய வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தென்காசி சரக காவல் நிலையங்களிலும், ரெவின்யூ அலுவலகங்களிலும் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கினர் எல்லா மட்டங்களிலும் முஸ்லீம்களாக அமைதல் வேண்டும். முஸ்லீம்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும். மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து இதை வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சென்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து நின்ற பாஜக இத்தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றதாகத் தெரிகிறது. நாகர்கோயிலுக்கு அடுத்தபடியாக தென்காசியை இந்துத்துவக் கோட்டையாக மாற்றும் நோக்கில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சிகளை நாம் அனுமதிக்கக் கூடாது. இன்று கொலையுண்டுள்ள இரு தரப்பினரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் - இளைஞர்கள். இவர்களில் சிலரின் மனைவியர் 20 வயதுக்கும் குறைந்தவர்கள். சிலர் கர்ப்பிணிகள்.

தென்காசி இன்னொரு கோவை ஆகக் கூடாது.

நன்றி: மக்கள் உரிமை

Tuesday, November 13, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பத்திரிகை செய்திகள்

தினமணி


தினகரன்


தினமலர்


தி இந்து


டெக்கான் கிரானிக்கல்

Monday, November 12, 2007

திசம்பர் 9 : புதுச்சேரியில் "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை!

தமிழ் மொழி அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. அறிவியல் துறையில் தமிழ்ப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிற மொழியில் உள்ள கலைச் சொற்கள் தமிழில் ஆக்கம் செய்யப்பட்டு தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் வழிக் கல்வி சாத்தியம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் வளர்ச்சியின் உச்சம் இன்றைக்கு கணினியின் பயன்பாட்டை தீவிரப்படுத்தி உள்ளது. ஆனால், கணினியில் தமிழ்ப் பயன்பாடு போதிய அளவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். முறையாக கணினிப் பயின்றவர்கள்கூட கணினியில் தமிழைப் பயன்படுத்துவதில்லை. தமிழில் தட்டச்சு செய்ய மட்டுமே தெரிந்திருப்பதால் தமிழில் கணினி தொழில் நுட்பங்களை அறிந்திருக்கிறார்கள் என்றோ, பயன்படுத்துகிறார்கள் என்றோ கூறிவிட முடியாது.

தமிழ்க் கணினி என்பது முதலில் நம் கணினியைத் தமிழ்க் கணினியாக்குவது. அதாவது, கணினியின் இயங்குதளங்களைத் (Operating Systems) தமிழில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது, பரவலாக்குவது. அதைப் பயன்படுத்த ஊக்கப்படுத்துவது. இரண்டாவது, கணினியில் அனைத்து நிலைகளிலும் தமிழைப் பயன்படுத்துவது.

ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், டச்சு போன்ற பிற மொழிகளை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கணினியில் படிக்க முடியும். தமிழை அவ்வாறு படிக்க முடியாத நிலை இருந்தது. ‘ஒருங்குறி’ எழுத்து (Unicode Font) வந்த பின் இந்த நிலை மாறி உலகம் முழுவதும் தமிழில் படிக்க முடியும், எழுத முடியும் நிலை உருவானது.

தற்போது, தமிழ் ஒருங்குறி எழுத்து வடிவம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஒருங்குறி தமிழ் எழுத்தைப் பயன்படுத்திட போதிய தொழில் நுட்ப அறிமுகமோ, பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வோ தமிழர்களிடம் போதுமானதாக இல்லை. எத்தனைத் தொழில் நுட்பங்கள் வந்தாலும் அதைப் பயன்படுத்தாமல் விடுவோமனால் அனைத்து நிலைகளிலும் தமிழ் என்ற நோக்கம் நிறைவேறாது.

இணைய உலகில் வலைப்பதிவுகள் (Blogs) எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கணினியும் இணைய இணைப்பும் மட்டும் இருந்தால், வேறு செலவு ஏதுமின்றி, ஒருவர் தன்னுடைய கருத்துக்களை, எண்ணங்களை உலக மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இன்று வலைப்பூக்கள் மாற்று ஊடகத்திற்கு வலு சேர்த்து வருகிறது. இதில் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அலசப்படுகிறது. கதை, கவிதை, குறும்படம், திரைப்பட விமர்சனம் என இலக்கியப் படைப்பும், விவாதங்களும் நிகழ்த்தப்படுகின்றன.

இதுபோன்று கணினியில் தமிழ்ப் பயன்பாட்டிற்குப் போதிய பயிற்சி இன்றியமையாதது. இந்நோக்கத்தை நிறைவேற்றவே “தமிழ்க் கணினி” வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை. இதில் காலை அமர்வுகள் தமிழ்க் கணினி குறித்ததாகும். அதாவது, நமது கணினியை முழுக்க முழுக்க தமிழில் இயங்கச் செய்வது.

மதியம் அமர்வுகள் கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றியதாகும். குறிப்பாக தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, இணைய தளங்களில், வலைப்பூக்களில் தமிழில் எழுதுவது போன்றவற்றை எளிமையாக செய்திட தேவையான மென்பொருட்களை அறிமுகம் செய்து பயிற்சி அளிப்பது.

மாலை நிறைவு விழாவோடு பயிற்சிப் பட்டறை நிறைவடைகிறது.

மாலை நிறைவு விழாவில் புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.ரங்கசாமி அவர்கள் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.

இப்பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைக்கும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தமிழ் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கணினித் தமிழை முன்னேடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்குத் தேவையான தமிழ் மென்பொருட்கள், அதன் பயன்பாடு குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய மலர் இலவசமாக வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சிப் பட்டறையில் 100 மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கணினிப் பயன்படுத்தும் புதியவர்களுக்கு முன்னுரிமைக் கொடுக்க தீர்மானித்துள்ளோம்.

எனவே, பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விரும்புவோர்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - பதிவகம்

இணையப் பக்கத்திற்குச் சென்று முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்.

பதிவுக் கட்டணம் ரூ.50. மாணவர்களுக்கு ரூ.25. பதிவுக் கட்டணம் அரங்கத்தில் செலுத்தினால் போதும்.

பயிற்சிப் பட்டறை குறித்த தகவல்கள் உடனுக்குடன் கீழ்க்காணும் தளத்தில் வெளியிடப்படும்:

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

அனைத்து தொடர்புகளுக்கும்:

இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்,
புதுச்சேரி வலைபதிவர் சிறகம்.

உலாபேசி: + 91 94431 05825
மின்ன்ஞ்சல்: rajasugumaran@gmail.com

Sunday, November 11, 2007

நந்திகிராம மக்கள் அமைதியாக வாழ வழி வகுக்க வேண்டும் - மேதா பட்கர்


நந்திகிராமத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர் என மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி துணிச்சலாக தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது என சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.

நந்திகிராமத்திற்கு மீண்டும் திரும்பும் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர் என்று கோல்கத்தாவில் 48 மணி நேரம் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மேதா பட்கர், 10-11-2007 சனிக்கிழமை செய்தியாளர்களிடம் குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது:

"நந்திகிராமம் சூழ்நிலைக் குறித்துப் பல்வேறு தரப்பில் கேட்டறிந்த பிறகுதான் மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி இப்படியொருக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்து எவ்விதத்திலும் உண்மைக்குப் புறம்பானது அல்ல. மேற்கு வங்கத்தில் நிலவும் உண்மை சூழ்நிலையைத் தான் யாருக்கும் அஞ்சாமல் அவர் துணிச்சலாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆளுநரின் இந்த ஆதங்கத்தின் மூலம் பொது மக்களுக்கு எதிராக ஆளுங்கட்சி செயல்படுகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. எனவே, நந்திகிராம விவகாரத்தை மத்திய அரசு அலட்சியப்படுத்தக் கூடாது.

அங்கு அமைதியை நிலைநாட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் நந்திகிராமத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவரும் தங்களது கட்சித் தொண்டர்களைத் திரும்ப அழைக்க வேண்டும்.

அங்கு மக்கள் அமைதியாக வாழ வழி வகுத்துக் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார் மேதா பட்கர்.

Friday, November 09, 2007

நந்திகிராமம் சென்ற மேதா பட்கர் மீது தாக்குதல் - கண்டனம்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 09-11-2007 அன்று விடுத்துள்ள அறிக்கை:

மேற்கு வங்கத்திலுள்ள நந்திகிராமத்திற்குச் சென்ற சமூக ஆர்வலர் மேதா பட்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

மேற்குவங்கத்திலுள்ள நந்திகிராமத்தில் உள்ள பூர்வீகக்குடி மக்கள் தங்கள் நிலம் பறிபோவதை எதிர்த்து தீவிரமாகப் போராடி வருகின்றனர். இதற்கு இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

நந்திகிராமத்தில் தொடர்ந்து நிலவிவரும் பதட்டத்தைத் தணிக்க பல்வேறு தரப்பினர் முயன்று வருகின்றனர். இந்நிலையில், 08-11-2007 அன்று அமைதி ஏற்படுத்தும் நோக்கத்தோடு நந்திகிராமத்திற்குச் சென்ற சமூக ஆர்வலர் மேதா பட்கர் தாக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பாதுகாப்பிற்காக சென்ற போலீசார் முன்னிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

இத்தாக்குதலை நடத்தியவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்று மேதா பட்கருடன் பயணம் செய்த போலன் கங்கோபத்யாய புகார் கூறியுள்ளார். மெற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சகிப்புத்தன்மையை இழந்தும், ஜனநாகத்தை முற்றிலும் புறந்தள்ளும் கட்சியாக மாறி வருவது வேதனை அளிக்கிறது.

இத்தாக்குதலுக்குப் பின் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேதா பட்கர் “ஜானநாயகத்தின் மீதான தாக்குதல்“ என கூறியுள்ளதை வழிமொழிகிறேன்.

மேதா பட்கரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday, November 08, 2007

வாச்சாத்தி சம்பவம்: பாதிக்கப்பட்ட 349 பழங்குடியினருக்கு இழப்பீடு

தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள வாச்சாத்தியில் காவல்துறை மற்றும் வனத்துறையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் 349 பேருக்கு இழப்பீட்டுத் தொகை 34 இலட்சம் 43 ஆயிரத்து 750 ரூபாய் 07-11-2007 புதன்கிழமை வழங்கப்பட்டது.

தருமபுரி ஆட்சியராக பொறுப்பேற்ற பி. அமுதா, தனது முதல் பணியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

வாச்சாத்தியில் கடந்த 1992-ஆம் ஆண்டு காவல்துறை மற்றும் வனத்துறையினரால் 18 பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கப் பொதுச்செயலர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுத் தொகை வழங்கக் கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் இழப்பீடு வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, எஸ்.தமிழ்வாணன் முன்னிலையில் 05-11-2007 திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் முத்துக்குமாரசாமி 06-11-2007 செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்டத்திற்குச் சென்றார்.

வாச்சாத்தியில் காவல்துறை மற்றும் வனத்துறையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு முதல்கட்டமாக ரூ.1.80 லட்சம், இரண்டாம் கட்டமாக 76 பேருக்கு ரூ.26.53 லட்சம், முன்றாம் கட்டமாக 17 பேருக்கு ரூ.3.40 லட்சம் இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மேலும் 349 பேருக்கு 34 இலட்சம் 43 ஆயிரத்து 750 ரூபாய் 07-11-2007 அன்று மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

காலம் கடந்த நீதி!

Tuesday, November 06, 2007

தேங்காய்த்திட்டு இளைஞர் கொலை வழக்கு: அடையாளம் காண பிணம் தோண்டியெடுப்பு


புதுச்சேரி, தேங்காய்த்திட்டில் கொலை செய்யப்பட்ட இளைஞர் பாலா (எ) தெய்வசிகாமணியின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு, கொல்லப்பட்டது அவர்தானா என்பதை அடையாளம் காண அவரது மண்டை ஓடு தடயவியல் சோதனைக்காக 05-11-2007 திங்களன்று வட்டாட்சியர் முன்னிலையில் எடுக்கப்பட்டு ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது.

புதுச்சேரி தேங்காய்திட்டு பால்நிலையம் வீதியைச் சேர்ந்தவர் பாலா (எ) தெய்வசிகாமணி (29). கார் ஓட்டுநரான இவர் கடந்த மாதம் தேங்காய்திட்டு மீன்பண்ணை எதிரே உள்ள புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து முதலியார்பேட்டை ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சந்தேக மரணம் எனக் கூறி வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரது பிணத்தை அனாதை பிணம் என சந்நியாசித்தோப்பு இடுகாட்டில் புதைத்துவிட்டனர்.

இந்நிலையில் பாலாவை கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் (23), ஜான்பால் (23), சுரேஷ் (23) ஆகிய மூவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதன்பின்னர் தான் பாலா கொலை செய்யப்பட்டது போலீசாருக்குத் தெரிய வந்த்து. உடனடியாக போலீசார் சந்தேக மரணம் என போட்ட வழக்கை அவசர அவசரமாக கொலை வழக்காக மாற்றுகின்றனர்.

இந்நிலையில், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து கொலையை மூடிமறைத்து குறித்து தலைமைச் செயாலாளர், ஐ.ஜி. உள்ளிட்டவர்களுக்கு மனு ஒன்றை அனுப்பினார். அதில் கொலையை மூடிமறைத்த முதலியார்பேட்டை போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணக்கு உத்திரவிட வேண்டும், பிணத்தைத் தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி ஆட்சியர் தேவநீதிதாஸ் இச்சம்பவம் குறித்து துணை ஆட்சியர் விசாரணைக்கு உத்திரவிட்டார். துணை ஆட்சியர் விஜய் குமார் பித்ரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் வாங்கினார்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்டவர் பாலா தான் என்பதை உறுதிப்படுத்துவதில் போலீசுக்குத் தொடர்ந்து சிக்கல் இருந்து வந்தது. இதனால் தடயவியல் சோதனைக்கு பாலாவின் மண்டை ஓட்டை அனுப்ப துணை ஆட்சியர் உத்திரவிட்டார். இதற்கான ஏற்பாடுகளை முதலியார்பேட்டை போலீசார் மேற்கொண்டனர்.

இந்நிலையில் 05-11-2007 திங்களன்று திப்புராயப்பேட்டையில் உள்ள சந்நியாசித்தோப்பு இடுகாட்டில் புதைக்கப்பட்ட பாலாவின் உடல் வட்டாட்சியர் யஷ்வந்தய்யா, தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் கந்தநாதன், முதலியார்பேட்டை ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது தேங்காய்த்திட்டு கவுன்சிலர் பாஸ்கரன் மற்றும் ஊர்ப் பஞ்சாயத்தார், பாலாவின் உறவினர்கள் உடனிருந்தனர்.

புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனை மருத்துவர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவக் குழுவைனர் பிணத்திலிருந்து மண்டைஓட்டை பிரித்தெடுத்தனர். பின்னர் ஐதராபாத்தில் இருந்து வந்திருந்த தடவியல் அதிகாரிகளிடம் மண்டை ஓட்டையும், பாலாவின் புகைப்படத்தையும் ஒப்படைத்தனர். அவர்கள் இதனை ஐதராபாத் எடுத்துச் சென்று முறைப்படி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன்பின்னரே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெறும்.

கொலை செய்யப்பட்ட பாலாவின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, November 03, 2007

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை: புதுச்சேரியில் வீரவணக்க மலரஞ்சலி நிகழ்வு





இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் குண்டு வீச்சில் வீரமரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு புதுச்சேரியில் நடைபெற்றது.

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 03-11-2007 சனியன்று காலை 10 மணிக்கு, அரியாங்குப்பம்-வீராம்பட்டினம் சாலை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் இர.தந்தைபிரியன் முன்னிலை வகித்தார். செயலாளர் சு.விஜயசங்கர், பொருளாளர் வீரமோகன் உட்பட அவ்வமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு அனைவரும் ஒரு நிமிடம் மவுனமாக இருந்து அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரியைச் சேர்ந்த ஏராளமான தமிழர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய சுப.தமிழ்ச்செல்வன் அவர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசைக் கண்டித்தும், தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி உட்பட இராணுவ உதவிகள் செய்யக் கூடாது என வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

"விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள், தழைத்தோங்கும் மரமாய் எழுவோம்; வீரவணக்கம்...வீரவணக்கம்...உலகத் தமிழர் நெஞ்சில் வாழும் சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம்...; ஆதரிப்போம்... ஆதரிப்போம்... தமிழீழத்தை ஆதரிப்போம்..." என வீர முழக்கமிட்டனர்.

இந்நிகழ்வில், சதீஷ், மணி, சுந்தர்,ஞானம் (பாட்டாளி மக்கள் கட்சி), சு.பாவணன், பா.அமுதவன், பொன்முடிபால் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), சடகோபன், செல்வராஜ் (மறுமலர்ச்சி தி.மு.க.), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ), இரா.அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), சி.மூர்த்தி (புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை), பா.சக்திவேல், பா.தினகர்ராஜ், கிருட்டினமூர்த்தி (மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம்), நா.மு.தமிழ்மணி (செந்தமிழர் இயக்கம்), கு.இராம்மூர்த்தி (செம்படுகை நன்னீரகம்), பொ.தாமோதரன் (புரட்சிப்பாவலர் இலக்கியப் பாசறை), பாவல் (வெள்ளையணுக்கள் இயக்கம்) உட்பட அனைத்துக் கட்சி, இயக்கத் தலைவர்கள் கலந்துக் கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.