Thursday, November 08, 2007

வாச்சாத்தி சம்பவம்: பாதிக்கப்பட்ட 349 பழங்குடியினருக்கு இழப்பீடு

தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள வாச்சாத்தியில் காவல்துறை மற்றும் வனத்துறையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் 349 பேருக்கு இழப்பீட்டுத் தொகை 34 இலட்சம் 43 ஆயிரத்து 750 ரூபாய் 07-11-2007 புதன்கிழமை வழங்கப்பட்டது.

தருமபுரி ஆட்சியராக பொறுப்பேற்ற பி. அமுதா, தனது முதல் பணியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

வாச்சாத்தியில் கடந்த 1992-ஆம் ஆண்டு காவல்துறை மற்றும் வனத்துறையினரால் 18 பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கப் பொதுச்செயலர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுத் தொகை வழங்கக் கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் இழப்பீடு வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, எஸ்.தமிழ்வாணன் முன்னிலையில் 05-11-2007 திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் முத்துக்குமாரசாமி 06-11-2007 செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்டத்திற்குச் சென்றார்.

வாச்சாத்தியில் காவல்துறை மற்றும் வனத்துறையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு முதல்கட்டமாக ரூ.1.80 லட்சம், இரண்டாம் கட்டமாக 76 பேருக்கு ரூ.26.53 லட்சம், முன்றாம் கட்டமாக 17 பேருக்கு ரூ.3.40 லட்சம் இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மேலும் 349 பேருக்கு 34 இலட்சம் 43 ஆயிரத்து 750 ரூபாய் 07-11-2007 அன்று மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

காலம் கடந்த நீதி!

3 comments:

NINANINA said...

this is a beautiful script... greetings from Nina in Texas, USA

NINANINA said...

this is a beautiful script... greetings from Nina in Texas, USA

Anonymous said...

சுகுமாரன் ஐயா!
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கயவர்கள் சட்டஒழுங்கை நிலைநாட்டவேண்டியவர்கள். சண்டாளர்கள் வேலியே பயிரை மேய்ந்தது என்னும் பழமொழிக்கு ஒப்பாகி யிட்ட இழிபிறவிகள். இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அதிகபட்ச கடுமையான தண்டயை அளிக்கப்பட்டார்களா?

இழப்பீடு தொகை என்பது தீர்வல்ல சகோதரரே! பாதிக்கப்பட்ட அந்த சகோதரிகளுக்கு இவ்வுலக முழுமையையும் இழப்பீடாக கொடுத்தாலும் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு ஆறுதலை தநதுவிட போவதில்லை. இதே கொடுமை பிற சகோதரிகளுக்கு மீண்டும் நிகழந்து விட கூடாது என்பதே குறைந்தபட்ச தேவையாகும். அதனை எவ்வாறு உருவாக்குவது என்றால், இக்கயவர்கள் அதிகபட்ச தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு அது எல்லோருக்கும் ஒருபாடமாக அமையும் வகையில் தண்டனையிருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட சகோதரிகள் அந்த கொடுமையான நினைவுகளிலிருந்து வெளியேற வேண்டும். சராசரி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதே எனது பிராத்தனை.