Tuesday, November 06, 2007

தேங்காய்த்திட்டு இளைஞர் கொலை வழக்கு: அடையாளம் காண பிணம் தோண்டியெடுப்பு


புதுச்சேரி, தேங்காய்த்திட்டில் கொலை செய்யப்பட்ட இளைஞர் பாலா (எ) தெய்வசிகாமணியின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு, கொல்லப்பட்டது அவர்தானா என்பதை அடையாளம் காண அவரது மண்டை ஓடு தடயவியல் சோதனைக்காக 05-11-2007 திங்களன்று வட்டாட்சியர் முன்னிலையில் எடுக்கப்பட்டு ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது.

புதுச்சேரி தேங்காய்திட்டு பால்நிலையம் வீதியைச் சேர்ந்தவர் பாலா (எ) தெய்வசிகாமணி (29). கார் ஓட்டுநரான இவர் கடந்த மாதம் தேங்காய்திட்டு மீன்பண்ணை எதிரே உள்ள புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து முதலியார்பேட்டை ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சந்தேக மரணம் எனக் கூறி வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரது பிணத்தை அனாதை பிணம் என சந்நியாசித்தோப்பு இடுகாட்டில் புதைத்துவிட்டனர்.

இந்நிலையில் பாலாவை கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் (23), ஜான்பால் (23), சுரேஷ் (23) ஆகிய மூவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதன்பின்னர் தான் பாலா கொலை செய்யப்பட்டது போலீசாருக்குத் தெரிய வந்த்து. உடனடியாக போலீசார் சந்தேக மரணம் என போட்ட வழக்கை அவசர அவசரமாக கொலை வழக்காக மாற்றுகின்றனர்.

இந்நிலையில், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து கொலையை மூடிமறைத்து குறித்து தலைமைச் செயாலாளர், ஐ.ஜி. உள்ளிட்டவர்களுக்கு மனு ஒன்றை அனுப்பினார். அதில் கொலையை மூடிமறைத்த முதலியார்பேட்டை போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணக்கு உத்திரவிட வேண்டும், பிணத்தைத் தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி ஆட்சியர் தேவநீதிதாஸ் இச்சம்பவம் குறித்து துணை ஆட்சியர் விசாரணைக்கு உத்திரவிட்டார். துணை ஆட்சியர் விஜய் குமார் பித்ரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் வாங்கினார்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்டவர் பாலா தான் என்பதை உறுதிப்படுத்துவதில் போலீசுக்குத் தொடர்ந்து சிக்கல் இருந்து வந்தது. இதனால் தடயவியல் சோதனைக்கு பாலாவின் மண்டை ஓட்டை அனுப்ப துணை ஆட்சியர் உத்திரவிட்டார். இதற்கான ஏற்பாடுகளை முதலியார்பேட்டை போலீசார் மேற்கொண்டனர்.

இந்நிலையில் 05-11-2007 திங்களன்று திப்புராயப்பேட்டையில் உள்ள சந்நியாசித்தோப்பு இடுகாட்டில் புதைக்கப்பட்ட பாலாவின் உடல் வட்டாட்சியர் யஷ்வந்தய்யா, தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் கந்தநாதன், முதலியார்பேட்டை ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது தேங்காய்த்திட்டு கவுன்சிலர் பாஸ்கரன் மற்றும் ஊர்ப் பஞ்சாயத்தார், பாலாவின் உறவினர்கள் உடனிருந்தனர்.

புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனை மருத்துவர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவக் குழுவைனர் பிணத்திலிருந்து மண்டைஓட்டை பிரித்தெடுத்தனர். பின்னர் ஐதராபாத்தில் இருந்து வந்திருந்த தடவியல் அதிகாரிகளிடம் மண்டை ஓட்டையும், பாலாவின் புகைப்படத்தையும் ஒப்படைத்தனர். அவர்கள் இதனை ஐதராபாத் எடுத்துச் சென்று முறைப்படி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன்பின்னரே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெறும்.

கொலை செய்யப்பட்ட பாலாவின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: