Wednesday, November 21, 2007

ஒரு கைதியின் கடிதம் - (3)


ஒரு கைதியின் கடிதம் - முதல் பகுதி

ஒரு கைதியின் கடிதம் - இரண்டாவது பகுதி்

எனக்கேன்று சொந்தங்கள் என்று சொல்ல என் தாயை தவிர யாரும் இல்லை. ஆனால், நான் சிறைக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. இவ்வளவு நாட்களும் என் தாய் வேலை (கூலி) செய்து தான் ஜீவனம் செய்கிறார்கள். இருக்க வீடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இப்போது எனக்கான காலி மனையில் வீடு கட்ட முடிவு செய்து ( சட்டம் அளிக்கிற வீடு கட்ட) ஒரு மாதம் ஆட்னரி பரோல் கேட்டு விண்ணப்பம் செய்தேன். அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் கொடுத்துள்ளேன். இங்கிருந்து பி.ஓ. ஆபிசர் சென்று எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு உண்மைதான் என்று இரண்டு மாதத்திற்கு முன்பு கண்காணிப்பாளர் அவர்களிடம் எனது பரோல் சம்பந்தமான ரிப்போர்ட்டை கொடுத்துவிட்டார். ஆனல், இதுநாள் வரை அந்த கோப்புகளில் கண்காணிப்பாளர் கையெழுத்துப் போடவில்லை. என்னைப் பழிவாங்கும் நோக்கோடு செயல்படுகிறார்.

போன வாரம் நான் சென்று இது சம்பந்தமாக கண்காணிப்பாளரை கேட்டதற்கு உனக்கு நன்னடத்தை சரியில்லை, அதனால் பரோல் தர முடியாது என்று கூறிவிட்டார். இதே வருடத்தில் இரண்டு முறை அவசரகால பரோல் விடுப்பில் சென்று வந்த எனக்கு இப்போது மட்டும் என்ன நன்னடத்தை குறை. அப்போது ஏன் இதை கூறவில்லை என்று கேட்டதற்கு, அவர் சொன்ன காரணம் எனக்கு சிரிப்பாக இருந்தது. நான் சிறையில் சமையல் கூடத்தில் வேலைப் பார்த்து வந்தேன். (தற்போது அந்த வேலையும் இல்லை). அப்போது ஒரு நாள் மாலை 6.30 மணி அளவில் நான் லாக்கப்பில் இருந்த போது சமையல் கூடத்தில் செல்போனுக்கு சார்ஜ் செய்யும் சார்ஜர் ஒன்றை கண்டு எடுத்ததாகவும் அதற்கு பொறுப்பு நான் தான் என்றும் கூறினார். எப்படி இதற்கு நன் பொறுப்பாவேன். என்னுடன் சேர்ந்து மொத்தம் 12 நபர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களை யாரையும் கேட்காமல் என்னை மட்டும் கேட்டால் இதில் நியாயம் என்ன?

பிறகு நான் விசாரித்ததில் அந்த சார்ஜரின் விலை வெறும் 55 ரூபாய் மட்டுமே என்றார்கள். ஏன் இவரே அங்கு வைத்து எடுத்து என் வாழ்வை நாசமாக்க கூடாது. மேலும் 30 சிறைக் காவலர்கள், 20 வெளியில் உள்ள நாள் காவலர்கள், 10 ஐ.ஆர்.பி., கண்காணிப்பாளர், உதவி -கண்காணிப்பாளர், தலைமைக் காவலர் என இவ்வளவு பேர் இங்கு காவல் இருக்கும் போது சார்ஜர் எப்படி என கைக்கு கிடைக்கும். அப்படி சமையல் கூடத்தில் எடுத்தால் அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர், காவலர் என இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார். இதுவரை 10-க்கும் மேல் செல் போன்கள் எடுத்ததாக சொல்கிறார்கள். இங்குள்ள அதிகாரிகள் துணணயில்லாமல் இவைகள் எப்படி உள்ளே வரும். எங்களை லாக்கப் செய்துவிட்டு இவர்களே, எங்காவது இவைகளை வைத்து எடுத்து, என்னைப் போன்ற அப்பாவிகளை பழிவாங்குகிறார்கள்.

சிறைவாசிகளாக வரும் ஒரு புது நபர் தான் வரும் போது கொண்டு வந்த பணம் போகும் போது அவருக்கு கிடைக்காது. காரணம் கையாடல். ஒருவர் வெளியே சென்று சிறையில் எனது பி.சி.பி-யில் கட்டிய பணத்தைத் தரவில்லை என்று கண்காணிப்பாளர் மீது புதுவை நீதிமன்றத்தில் முறையிட்டார். புகார் கூறப்பட்ட கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் அவர்களை கோர்ட் கண்டித்துள்ளது. அதன் பிறகு பணம் எல்லாவற்றையும் பேங்கில் வைக்கும் பழக்கம் உருவானது.

இதேபோல், பழனி என்ற சின்னபையன் என்ற சிறைவாசியை கண்காணிப்பாளரின் ஒழுங்கற்ற கண்காணிப்பால் 48 நாட்கள் தாமதமாக விடுதலை செய்த அவலமும் இங்கு நடந்துள்ளது. தண்டனைக் காலம் முடிந்து மேலும் 48 நாட்கள் சிறை தண்டனைக் கொடுத்த நீதிபதி தான் இந்த கண்காணிப்பாளர் திரு. ஜெயகாந்தன்.

தொடரும்...

No comments: