பொய் வழக்கில் சித்ரவதைக்குள்ளாகி 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலைந்த இளைஞர்கள் 2 பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் இழப்பீடாக தமிழக அரசின் உள்துறை செயலர் வழங்கவும், சித்ரவதை செய்த போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் உப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சேவுகன். இவரது மகள் சுஜாதா. ஓரியூர் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்தார். பள்ளி சென்ற சுஜாதா வீடு திரும்பவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதே ஊரைச் சேர்ந்த கார்மேகம் என்பவர் கடத்தியதாக தெரியவந்தது.
வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக கார்மேகம், புதுக்கோட்டை திருகோணத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தொண்டமான் நகரைச் சேர்ந்த பழனி ஆகியோரை கைது செய்யப்பட்டனர். இவர்கள் சுஜாதாவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு சித்திரதை செய்து வாக்குமூலம் பெற்று மதுரை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட சுஜாதா, அவரது கணவர் கணேசன் ஆகியோர் கடந்த ஆண்டு மதுரை நீதிமன்றத்தில் ஆஜராயினர். வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, கணேசன் ஆகியோர் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தங்களை துன்புறுத்தியதற்கு இழப்பீடு வழங்க வேண்டும், அப்போதைய இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன், திருவாடனை துணைக் காவல் கண்கானிப்பாளர் இராஜகோபால், தொண்டி காவல் ஆய்வாளர் மாதவன் மற்றும் போலீசார் மீது மனித உரிமை மீறல் வழக்கு தொடர வேண்டும் எனக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, ஆஜரானவர் சுஜாதா தானா என கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார். இச்சோதனையில் சுஜாதா தான் என உறுதி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி செல்வம் 20-11-2007 அன்று பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்படுகிறது. மனுதாரர்கள் 2 பேருக்கும் தலா ரூ. ஒரு லட்சத்தை இழப்பீடாக தமிழக உள்துறை செயலர் அளிக்க வேண்டும். மனித உரிமையை மீறி நடந்த போலீசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக விசாரணையின் போது ஒருவர் மீது போலீசார் மூன்றாம் தர சித்திரவதைகளை மேற்கொள்வதை சட்டம் அனுமதிக்கவில்லை. குற்றத்தைக் கண்டுபிடிக்கவே மூன்றாம் தர சித்தரவதைகளை கடைப்பிடிப்பதாக கூறி நியாயப்படுத்த முடியாது.
குற்றம் பற்றிய விசாரணையும், புலனாய்வும் குற்றத்தை சீரிய முறையில் கண்டுபிடிக்க உண்மையில் பயனளிக்க வேண்டும். குற்றத்தைக் கண்டுபிடிக்க ஒருவரை மூன்றாம் தர சித்தரவதை மேற்கொள்வது என்பது போலீசார் சட்டத்தை மதிக்காமல் தங்கள் கதவுகளை அடைத்துக் கொண்டு சட்டதை மீறுவதாகும்.
மனுதாரர்கள் அளவற்ற துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். போலீசார் பொய் வழக்கு போட்டு தேவை இல்லாமல் அலைக்கழித்தும், விசாரணை அதிகாரிகளால் உச்சகட்ட துன்பத்திற்கும் ஆளாகியுள்ளனர். இது போலீசாரின் மாபெரும் தவறுக்கு வழி வகுத்துள்ளது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித உரிமைக்காக பாடுபட்டு வரும் வழக்கறிஞர்கள் பொ.இரத்தனம், சகாய பிலோமின்ராஜ், பகத்சிங் உள்ளிடோர் இவ்வழக்கில் ஆஜராகி நீதியைப் பெற்று தந்துள்ளனர். இவ்வழக்கிற்காக மதுரை சென்று வழக்கறிஞர் பொ.இரத்தினம், சகாய பிலோமின்ராஜ் ஆகியோரோடு இருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உதவியது குறிப்பிடத்தக்கது.
வழக்கு முழு விவரம்
5 comments:
மிக நல்ல செய்தி.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஊக்கம் தரும் ஒரு நல்ல செய்தி. எதற்கும் மனம் தளரவிடாமல், விடாபிடியாக இருந்து அநீதிகளுக்கு முடிவுகட்ட அனைத்து மக்களுக்கும் தைரியம் கொடுக்க உதவும் நற்செயல்.
வெற்றி விடுதலைக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
அன்புத் தோழர் மாசிலா அவர்களுக்கு,
மிக்க நன்றி.
காலம் கடந்தாவது நீதி கிடைப்பது ஓரளவாவது ஆறுதல் அளிக்கிறது.
இது போன்ற சம்பவங்கள் தினமும் காவல்துறையினரால் அரங்கேற்றப்படுகின்றன.
காவல்துறையினர் இதுபோல் நீதிமன்றங்களால் தண்டிக்கப்படும் பொழுது அவை ஊடகங்களால் பெரிய அளவில் விளம்பரப்படுத்தபடவேண்டும்.
மிகப் பெரிய அளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவேண்டும். இவ்வாறான செயல்கள் மூலமே அவர்களை கட்டுப்படுத்தலாம்.
இன்றைய சூழ்நிலையில் காவல்துறை சீருடை அணிந்த குண்டர்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
செய்திக்கு நன்றி.
இந்த வழக்கில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளுக்கு மனித உரிமை மீறலுக்காக மட்டுமல்லாமல், நீதிமன்றத்திற்கு பொய்யான தகவலை வேண்டுமென்றே அளித்த குற்றத்திற்காகவும் தண்டனை அளிக்க வேண்டும்.
அப்போது தான் பொய் வழக்கு போடுவதையே முழுநேர பணியாக கொண்ட காவல்துறையை சற்றேனும் திருத்த முடியும்.
-சுந்தரராஜன்
http://nesamudan.blogspot.com/
நண்பர் எழில் தஸ்லிமா பற்றி ஒரு பதிவு இட்டு அதில் கோ.சுகுமாரன் போன்ற மனித உரிமை ஆர்வலர்களை கிண்டலடித்திருந்தார் (கீழே பதிவைத் தந்துள்ளேன்).
உண்மையில் சொல்லப்போனால், எனக்கு கிண்டல் செய்ய முடியவில்லை. தஸ்லிமா விவகாரத்தில் அனைவர் மீதும் கோபமும் வருத்தமும் ஏற்படுகிறது - மனித உரிமை ஆர்வலர்களாக தங்களை முன்னிறுத்திக் கொள்பவர்கள், அறிவு ஜீவிகளாக தம்மை முன்னிறுத்திக் கொள்பவர்கள், மதவாதத்துக்கு எதிரானவர்களாக தம்மை காட்டிக் கொள்பவர்கள், இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரானவர்களாக தங்களை காட்டிக் கொள்ளும் இந்துத்துவ அமைப்புகள் - இந்த அனைவர்கள் மீதும் கோபமும் எரிச்சலும், எனது இயலாமை மீது எனக்கு கோபமும் ஏற்படுகிறது.
சல்மான் ருஷ்டி விவகாரம் - ஷபானு வழக்கு இந்த காலகட்டத்தில் தான் நான் உன்னிப்பாக கவனித்தேன், இந்தியாவின் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஏற்படும் பிளவை. ஆனால், அச்சமயத்தில் இது நகர நடுத்தர வர்க்கம் + அறிவுஜீவி வர்க்கம் + மேல் வர்க்கம் ஆகிய பிரிவுகளை மட்டுமே தொட்டது. ஆனால், தற்சமயத்தில் தொடர்ந்து நிகழும் குண்டு வெடிப்புகள்(இன்று இந்தியாவில் மூன்று இடங்களில் குண்டு வெடித்துள்ளது), இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் பகிரங்க செயல்பாடுகள்(உலகம் + இந்தியா) ஆகியவற்றால், அனைத்து மட்டத்திலும் இந்த பிளவு வியாபித்து இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஏற்கெனவே, தஸ்லிமா ஹைதராபாத்தில் தாக்கப்பட்டபோது பொதுமக்களின் ரியாக்ஷனைப் பார்த்தேன் - கிட்டத்தட்ட ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்துக்கெதிராகவும் ஏனையோர் கோபப்பட்டது கொஞ்சம் ஆச்சர்யமாகக் கூட இருந்தது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கெதிராக குரல் கொடுக்க மறுப்பவர்கள், ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்துக்கே துரோகம் செய்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய செயல்களின் போது அமைதி காப்பது பல குஜராத்களுக்கு நாடெங்கும் வித்திடுகிறது என்பதை உணர வேண்டும்.
கோ.சுகுமாரனிடம் நான் சிறிது காலத்துக்கு முன்பு பேசும்போது, மத அடிப்படைவாதம் - அது எங்கிருந்தாலும் கண்டியுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். 'அதில் இரு கருத்து கிடையாது' என்று அதை ஏற்றுக் கொண்டார். அதை இத்தருணத்தில் மீண்டும் நினைவுபடுத்த விழைகிறேன். தஸ்லிமாவுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள். இந்து அடிப்படைவாதத்துக்கெதிராக குரல் கொடுக்கும்போது இஸ்லாமிய அடிப்படைவாதிகளாயிருந்தாலும் பரவாயில்லை என்று கைகோர்த்து செயல்படுகிறீர்களே, அதே அடிப்படையை இந்த விஷயத்தில் கடைப்பிடியுங்கள். தஸ்லிமா நஸ் ரீனுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் - அது இந்து, கிறித்துவ அடிப்படைவாதிகளாயிருந்தாலும் கைகோர்த்து செயல்படுங்கள்.
***
http://ezhila.blogspot.com/2007/11/blog-post_4790.html
Post a Comment