Friday, November 09, 2007

நந்திகிராமம் சென்ற மேதா பட்கர் மீது தாக்குதல் - கண்டனம்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 09-11-2007 அன்று விடுத்துள்ள அறிக்கை:

மேற்கு வங்கத்திலுள்ள நந்திகிராமத்திற்குச் சென்ற சமூக ஆர்வலர் மேதா பட்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

மேற்குவங்கத்திலுள்ள நந்திகிராமத்தில் உள்ள பூர்வீகக்குடி மக்கள் தங்கள் நிலம் பறிபோவதை எதிர்த்து தீவிரமாகப் போராடி வருகின்றனர். இதற்கு இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

நந்திகிராமத்தில் தொடர்ந்து நிலவிவரும் பதட்டத்தைத் தணிக்க பல்வேறு தரப்பினர் முயன்று வருகின்றனர். இந்நிலையில், 08-11-2007 அன்று அமைதி ஏற்படுத்தும் நோக்கத்தோடு நந்திகிராமத்திற்குச் சென்ற சமூக ஆர்வலர் மேதா பட்கர் தாக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பாதுகாப்பிற்காக சென்ற போலீசார் முன்னிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

இத்தாக்குதலை நடத்தியவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்று மேதா பட்கருடன் பயணம் செய்த போலன் கங்கோபத்யாய புகார் கூறியுள்ளார். மெற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சகிப்புத்தன்மையை இழந்தும், ஜனநாகத்தை முற்றிலும் புறந்தள்ளும் கட்சியாக மாறி வருவது வேதனை அளிக்கிறது.

இத்தாக்குதலுக்குப் பின் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேதா பட்கர் “ஜானநாயகத்தின் மீதான தாக்குதல்“ என கூறியுள்ளதை வழிமொழிகிறேன்.

மேதா பட்கரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1 comment:

மாசிலா said...

மிகவும் கீழ்த்தரமான இச்செயலுக்கு நானும் எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

நன்றி.