Tuesday, October 23, 2007

புதுச்சேரியில் கொலையை மூடிமறைத்த போலீசைக் கண்டித்து சுவரொட்டி


புதுச்சேரி தேங்காய்த்திட்டு இளைஞர் பாலா (எ) தெய்வசிகாமணி கொலை செய்யப்பட்ட வழக்கை மூடிமறைத்து கொலையாளிகளைக் காப்பற்றிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, பெரியார் திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம், இராவணன் பகுத்தறிவு இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ள செய்தியை தினகரன், மாலை மலர் ஆகிய பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

விரிவான தகவல்:

போலீஸ் மீது அளிக்கப்பட்ட புகார்

Wednesday, October 17, 2007

தில்லி போலிமோதல் வழக்கு: உதவி காவல் ஆணையர் உட்பட 10 பொலிசார் குற்றவாளிகள் - நீதிமன்றம் அறிவிப்பு

தில்லியில் 1997ம் ஆண்டு அப்பாவி வணிகர்கள் இரண்டு பேரை போலி மோதலில் சுட்டுக் கொன்ற வழக்கில் உதவி காவல் ஆணையர் உட்பட 10 போலீசாரும் குற்றவாளிகள் என அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உதவி காவல் ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் மீதான தண்டனை வரும் 24ம் நாளன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

தில்லியில் 1997ம் ஆண்டு மார்ச் 31ம் நாளன்று கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஸ்டேட்ஸ்மேன் ஹவுஸ் என்ற கட்டடத்தின் அருகே ஒரு போலி மோதல் (என்கவுன்டர்) சம்பவம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்கள் உதவி காவல் ஆணையர் ரதி, காவல் ஆய்வாளர் அனில் குமார், உதவி ஆய்வாளர் அசோக் ராணா, தலைமைக் காவலர்கள் சிவ்குமார், தேஜ்பால் சிங், மகாவீர் சிங், காவலர்கள் சுமேர் சிங், சுபாஷ் சந்த், சுனில் குமார் மற்றும் கோத்தாரி ராம்.

அன்றைய தினம் மாலை செய்தியாளர்களை அழைத்து பிரபலமான தாதாக்கள் இருவரை சுட்டுக் கொன்று விட்டதாக இந்த போலீஸ் குழுவினர் பரபரப்பு பேட்டியும் அளித்தனர்.

ஆனால், நடந்த விவகாரமே வேறு. போலீஸ் போலி மோதலில் இறந்தது அப்பாவி வணிகர்கள் பிரதீப் கோயல் மற்றும் ஜக்ஜித் சிங் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இருவரும் தில்லியின் கிழக்குப் பகுதியில் இருந்து கன்னாட் பிளேஸ் பகுதிக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது தான் இந்த கொடூர சம்பவம் நடந்து முடிந்தது.

கொல்லப்பட்டவர்கள் தாதாக்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இறந்தவர்களின் உறவினர்களும், போலி மோதல் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பத்திரிகையாளரும் உண்மையை வெளிக் கொண்டு வந்தனர்.

இந்தியா முழுவதுமுள்ள மனித உரிமை அமைப்புகள் இச்சம்பவத்தைக் கண்டித்தன. மேலும், ஒரு சுயேட்சையான அமைப்பு மூலம் விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கோரின. பல்வேறு போராட்டங்கள் நடத்தின.

பின்னர் இந்த சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை - சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு உதவி காவல் ஆணையர் ரதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 1997ம் ஆண்டு ஜூலையில் குற்றமிழைத்த 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக அப்போதைய தில்லி காவல் ஆணையர் நிகில் குமார் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது பிகாரில் உள்ள அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

குற்றமிழைத்த போலிசார் தரப்பில் `த்திரப்பிரதேச தாதா யாசீனும், அவது உதவியாளரும் காரில் வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து செயல்பட்டு அந்த காரை சுற்றி வளைத்தோம். ஆனால், காரில் இருப்பவர்கள் எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால், தற்காப்புக்காக நாங்கள் திருப்பிச் சுட நேரிட்டது. அதில் இருவர் இறந்து விட்டனர்' என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தோதாக, ணிகர்கள் இருவர் வந்த காரில் ஒரு துப்பாக்கியும், சில தோட்டாக்களும் அவர்களால் போடப்பட்டு இருந்தன. ஆனால், இந்த தகவல் பொய் என்பதை சி.பி.ஐ., நிரூபித்தது. அந்த துப்பாக்கியால் யாரும் சுடவேயில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பதவி உயர்வு வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் அவசரத்தில் செயல்பட்டு அப்பாவிகள் இருவரை சுட்டுக் கொன்று விட்டனர் என்று சி.பி.ஐ., தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த பரபரப்பான வழக்கின் விசாரணை தில்லி அமர்வு நீதீமன்றத்தில் நடைபெற்றது. கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் குமார் விசாரணை செய்தார். இரு தரப்பு வாதங்கள் முடிந்து இந்த வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 8ம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

16-10-2007 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்ரத்தி குற்றமிழைத்த போலிசார் ஆஜராகி இருந்தனர். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 10 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி வினோத் குமார் அறிவித்தார். `உங்கள் மீதான குற்றச்சாட்டு அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன' என்று 10 பேரையும் பார்த்து நீதிபதி அறிவித்தார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவு (கொலை), 307 (கொலை முயற்சி), 201 ( தடயங்களை அழித்தல்), 193 (தவறான சாட்சியங்களை அளித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் 10 போலீசாரும் குற்றம் புரிந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மிக அதிகபட்ச தண்டனை கூட அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி காவல் ஆணையர் ரதி, காவல் ஆய்வாளர் அனில் குமார் ஆகியோருக்கு வரும் 24ம் நாளன்று தண்டனை அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி வினோத் குமார் தெரிவித்தார்.

மேலும், துப்பாக்கி தோட்டா குறித்து தவறான தகவலை தந்த தடய அறிவியல் துறை நிபுணர் ரூப் சிங் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தார்.

பத்து ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது தில்லி போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பை பாதிக்கப்பட்ட ணிகர்களின் உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

Monday, October 15, 2007

புதுச்சேரியில் கொலையை மூடிமறைத்த போலீசார்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

புதுச்சேரி, தேங்காய்த்திட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கை, மத்திய புலனாய்வுத் துறை - சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், 15-10-2007 அன்று, தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர், ஐ.ஜி., முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் (சட்டம்-ஒழுங்கு), காவல் கண்காணிப்பாளர் (தெற்கு) ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி, தேங்காய்த்திட்டு பால்நிலைய வீதியைச் சேர்ந்த பாலா (எ) தெய்வசிகாமணி, வயது: 29, த/பெ. கண்ணன் என்ற இளைஞர் கடந்த 26-09-2007 அன்று தேங்காய்த்திட்டில், கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். பின்னர் கொலையாளிகள் அவரது பிணத்தை தேங்காய்த்திட்டு அருகேயுள்ள ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனிடையே, கடந்த 30-09-2007 அன்று அவரது பிணம் தேங்காய்த்திட்டு ஆற்றோரம் கரை ஒதுங்கியுள்ளது. அப்போது கொலை செய்யப்பட்டவரின் வயிற்று பகுதியில் குடல் வெளியே சரிந்து கிடந்துள்ளது. மேலும் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன. குறிப்பாக முகத்தில் கத்தியால் குத்தியதால் ஏராளமான காயங்கள் இருந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடனடியாக முதல் தகவல் அறிக்கைப் (குற்ற எண்.308/07. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174.)பதிவு செய்தனர். அதாவது, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174-இன்படி சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர், பிரேதத்தை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன்பின்னர், அனாதை பிணம் என்று கூறி பிரேதத்தை சந்நியாசித் தோப்புச் சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.

இதனிடையே, மேற்சொன்ன பாலா (எ) தெய்வசிகாமணியைக் கொலை செய்த கொலையாளிகளாக கருதப்படும் தேங்காய்த்திடைச் சேர்ந்த (1) ஜான்பால் த/பெ. அருளானந்து, (2) முருகேசன், த/பெ. மாரிமுத்து, (3) சுரேஷ் த/பெ. எட்டியான் ஆகியோர் கடந்த 10-10-2007 அன்று, ஒரு வழக்கறிஞர் மூலம் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைய முயற்சி செய்துள்ளனர்.

அப்போதுதான், முதலியார்பேட்டை போலீசாருக்கு கொலைக் குற்றவாளிகள் உண்மையை வெளியே சொன்னது தெரிய வந்துள்ளது. இனிமேல் தாமதித்தால் தாங்கள் சட்டத்தின்பிடியில் மாட்டிக்கொள்வோம் என்று கருதிய முதலியார்பேட்டை போலீசார் உடனடியாக வழக்கை கடந்த 11-10-2007 அன்று அவசர அவசரமாக கொலை வழக்காக மாற்றியுள்ளனர். ஆனால், இவ்வளவு நடந்த பின்பும் போலீசார் கொலையாளிகள் யாரென்று தெரிந்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவில்லை. தலைமறைவாக இருந்த கொலையாளிகள் கடந்த 12-10-2007 அன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

சாதாரண மனிதன் ஒருவன் பார்த்தாலே கொலை என்று தெரியக் கூடிய ஒரு வழக்கை முதலியார்பேட்டை போலீசார் சந்தேக மரணம் என்று கூறி வழக்குப் போட்டுள்ளனர். முதலியார்பேட்டை போலீசார் குற்றவாளியைக் காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டுள்ளனர். இது இந்திய தண்டனைச் சட்டப்படி கடும் குற்றமாகும்.

கொலை செய்யப்பட்டவர், கொலையாளிகள் என அனைவரும் தேங்காய்த்திட்டைச் சேர்ந்தவர்களகாக இருந்தும் போலீசார் சரியாக விசாரணை மேற்கொள்ளாமல், அனாதை பிணம் எனக் கூறி பிரேதத்தைப் புதைத்துள்ளானர். போலீசார் பிரேதத்தோடு சேர்த்து உண்மைகளையும் புதைத்துவிட்டனர்.

அனாதை பிணம் என்றாலும் அதனை அடக்கம் செய்வதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அதனைக்கூட போலீசார் பின்பற்றவில்லை. குறைந்தபட்சம் பத்திரிகைளில் புகைப்படம்கூட வெளியிடவில்லை. இதனால், மகனை இழந்த குடும்பத்தினர் தங்கள் மகன் உயிரோடு இருப்பதாகவே எண்ணி இருந்துள்ளனர்.

போலீசார் அனாதை பிணம் என்று கூறியதால் அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் முறையாக பிரேத பரிசோதனை செய்திருக்க வாய்ப்பில்லை. மேலும், கொலைக்கான ஆதாரங்களை சரியாக பதிவு செய்திருக்கவும் வாய்ப்பில்லை. இதனால், சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளவார்கள்.

முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள தேங்காய்த்திட்டு நிலைமையே இதுவென்றால், இன்னும் தூரமாக இருக்கும் கிராமங்களில் என்ன நடந்தாலும் போலீசார் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. இது முதலியார்பேட்டை காவல் வட்டத்தில் சட்டமற்ற தன்மை (Lawlessness) நிலவுவதையே உணர்த்துகிறது.

கொலை போன்ற வழக்குகளை காவல் ஆய்வாளர்கள் தான் விசாரிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரையில் முதலியார்பேட்டை ஆய்வாளர் திரு.ரவிக்குமார் சம்பவ இடத்திற்கே செல்லவில்லை. இதன்மூலம் அவர்
சட்டப்படி செய்ய வேண்டிய தன் கடமையிலிருந்து தவறியுள்ளார். மேலும் தன் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் வழக்கை உரிய வகையில் விசாரிக்க தடை போட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், அண்மைக் காலமாக புதுச்சேரியில் கொலைகள் பெருகி வருவது பெரும் சர்ச்சையாகி வருகிறது. இதனால், தங்கள் எல்லைக்குள் கொலை நடந்தால் உயர் அதிகாரிகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதால், முதலியார்பேட்டை போலீசார் இக்கொலையை மூடிமறைத்துள்ளனர் என்பது கூடுதல் காரணம் என்று கருதுகிறோம்.

எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் இக்கோரிக்கைளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுகிறோம்.


(அ) மேற்சொன்ன பாலா (எ) தெய்வசிகாமணி கொலை வழக்கை உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.

(ஆ) புதைக்கப்பட்ட பிணத்தைத் தோண்டி எடுத்து ஜிப்மர் மருத்துவர்கள் குழு மூலம் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

(இ) கொலையை முறையாக விசாரிக்காமல் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, கொலையை மூடிமறைத்து, கொலையாளிகளைக் காப்பாற்ற முயற்சி செய்த முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ரவிக்குமார் மற்றும் போலீசார் மீது உரிய வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அனைவரையும் காலதாமதமின்றி உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

(ஈ) தங்கள் மகன் கொலை செய்யப்பட்ட தகவல்கூட தெரியாமல், இறுதி சடங்குகள்கூட செய்ய முடியாமல், அனாதையாக புதைக்கப்பட்டதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

(உ) முதலியார்பேட்டை போலீசார் வழக்கு ஆவணங்களை அழிக்கவும், திருத்தவும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இந்த வழக்கு ஆவணங்களை ஐ.ஜி. அவர்கள் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பாதுகாக்க வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Thursday, October 11, 2007

ஈழத் தமிழர்களுக்கு மதத்தின் அடிப்படையில் உதவுவதை ஏற்க மாட்டோம் - தொல்.திருமாவளவன்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் 11-10-2007 அன்று, காலை 11.00 மணிக்கு புதுச்சேரியில், "யாத்ரி நிவாஸ்" விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஈழத் தமிழர்களுக்காக பழ.நெடுமாறன் தலைமையில் ஏற்கனவே சேகரித்த நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்றன. சேகரிக்கப்பட்ட பொருட்களைச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் கொண்டு செல்வதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

மனிதாபிமான அடிப்படையில் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வதற்கு யார் முன்வந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கும். மதத்தின் அடிப்படையில் நாங்களும் இந்து, நீங்களும் இந்து என்ற அடிப்படையில் உதவி செய்ய வருவதை ஏற்க முடியாது. இதை இங்குள்ள தமிழர்களும் ஏற்கமாட்டார்கள். ஈழத்தில் பட்டினி கிடக்கும் தமிழர்களும் எற்கமாட்டார்கள்.

(அண்மையில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் இல.கணேசன் ஈழத் தமிழர்களுகாக உணவுப் பொருட்கள், மருந்துகள் சேகரிக்கப் போவதாக அறிவித்தது இங்கு நினைவு கூரத்தக்கது).

திண்ணியத்தில் மனிதர்களை மலம் தின்ன வைத்த கொடுமையில் யூகங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது வேதனைக்குரியது. மேல்முறையீடு செய்ய வேண்டுமென்று தமிழக அரசிடம் வலியுறுத்துவோம்.

சேலம் அருகேயுள்ள கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோயிலில் தலித்துகள் நுழைவதற்கு ஜாதி இந்துக்கள் தடை விதித்துள்ளனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். வரும் 24-ஆம் நாளன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. தமிழக அரசு இதில் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்.

மரக்காணம் அருகே அனல் மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் பிரச்சினையில் தமிழக அரசு ஓர் ஆய்வுக் குழு அமைத்து மக்கள் கருத்தை அறிந்து முடிவு எடுத்தது. அதேபோல அனல் மின் நிலைய விவகாரத்திலும் ஆய்வுக் குழு அமைத்து மக்கள் கருத்தறிந்து முடிவு எடுக்க வேண்டும்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவில் எடுக்கும் முடிவுகளைப் பின்பற்றி அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அணுசக்தி ஒப்பந்தமானது இந்திய அரசைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாக இருக்க கூடாது. இந்திய இறையாண்மையைப் பாதிக்காத வகையில் ஒப்பந்தம் இருக்க வேண்டும். அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளை இந்தியா ஏற்க கூடாது. இதில் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பு சரிதான். நாடாளுமன்றத்திற்கு தீடீர் தேர்தல் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

பாண்டிச்சேரி மாநிலத்தைப் புதுச்சேரி மாநிலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதில் நகரத்தை மட்டும் பாண்டிச்சேரி என மீண்டும் அழைப்பது, புதுச்சேரி மாநிலத்தை மீண்டும் பாண்டிச்சேரி மாநிலம் என அழைக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும்.

கவிஞர் தமிழ்ஒளி நூல்களை அரசுடமையாக்க வேண்டும். அவருக்கு அரசு சிலை நிறுவ வேண்டும். தமிழ்ஒளி பிறந்த நாள் விழாவை சென்னை, புதுச்சேரி பகுதிகளில் கொண்டாட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

வாச்சாத்தி வழக்கு: தருமபுரி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு


தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தியில் போலீஸ் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு இழப்பீடு தராவிட்டால் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

1992-ஆம் ஆண்டு வாச்சாத்தி கிராமத்தில் போலீசாரும், வனத்துறையினரும் பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தினர்.

பழங்குடியினரின் வீடுகள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. பலர் படுகாயம் அடைந்தனர். பழங்குடியினப் பெண்கள் 18 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.

இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சிகள், சமுதாய இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் இதைக் கண்டித்ததோடு அத்துமீறிய போலிசார், வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரினர்.

இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிடப்பட்டது. இச்சம்பத்தை விசாரித்த சி.பி.ஐ., 155 வனத்துறையினர், 108 போலீசார், 6 வருவாய் துறையினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட 475 பேருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் இழப்பீடு ஏதும் வழங்கப்படவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி பழங்குடியினர் சங்கத்தின் தலைவர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யா, என்.பால் வசந்தகுமார் ஆகியோர் இவ்வழக்கை விசாரித்தனர். பலமுறை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, 10-10-2007 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட 75 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பலமுறை நாங்கள் சொன்னபிறகும், இழப்பீடு தொகை பழங்குடியின மக்களுக்குத் தரப்படவில்லை. இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் செயல்படும்விதம் திருப்திகரமாக இல்லை.

இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு உதவ, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் வரும் நவம்பர் 5-ஆம் நாளன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இழப்பீடு தராததற்கு சரியான காரணத்தை அவர்கள் சொல்லாவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் பட்டியலை ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும்

என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tuesday, October 09, 2007

பிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு




















மாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் "கிளிக்" செய்யவும்.


பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்பில் “முதலாவது தலித் மாநாடு” வரும் அக்டோபர் 20, 21 ஆகிய இரு நாள்கள் பிரான்சில் நடைபெற உள்ளது.

20-10-2007 முதல் நாளன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 வரை நடைபெறும் கருத்தரங்கில், வரவேற்புரையும் அறிமுகமும் தேவதாசன்.

ஜோவே போல் அரங்கில் ‘தீண்டாமை ஒடுக்குமுறையும் எதிர்ப்புப் போராட்டங்களும்’ - யோகரட்ணம், பரராஜசிங்கம் (ஜெர்மனி), எம்.சி.சுப்பிரமணியம் அரங்கில் ‘தமிழ்த் தேசியமும் தலித்தியமும்’ – அருந்ததி, இராகவன் (இலண்டன்), ‘சர்வதேசப் பார்வையில் சாதியம்’ – அசுரா, புதிய மாதவி (இந்தியா), அரவிந்து, ‘இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தலித்தியம்’ – கற்சுறா (கனடா), தேவா (ஜெர்மனி), புதுமைலோலன் (சுவிஸ்) ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

21-10-2007 இரண்டாம் நாளன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கி மதியம் 2.30 வரை நடைபெறும் கருத்தரங்கில் முதல் நாள் அமர்வுகள் பற்றிய விமர்சனங்கள், தலித் அரசியலின் எதிர்காலம் குறித்துக் கலந்துரையாடல். இவ்வரங்கை நெறிப்படுத்துதல் விஜி.

எஸ்.ரி.என். நாகரட்ணம் அரங்கில் ‘தலித்துகளின் பொருளாதார மேம்பாடு’ – பகவத்சிங் (ஜெர்மனி), சோமசுந்தரம் (ஜெர்மனி), நடராஜா (ஆஸ்திரேலியா), டேனியல் அரங்கு: இலங்கை அரசியல் தீர்வுத் திட்டமும் தலித்துகளும் – எம்.ஆர்.ஸ்டாலின், சிவகுருநாதன் (கனடா), பஷீர் (இலண்டன்) ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

மதியம் 2.00 மணிக்கு கலை நிகழ்ச்சி. முடிவில் சுந்தரலிங்கம் நன்றியுரையாற்ற மாநாடு நிறைவு பெறுகிறது.

உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இம்மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாநாட்டிற்கு பிரான்சில் செயல்பட்டு வரும்
அய்ரோப்பா பெரியார் விழிப்புணர்வு இயக்கம் தனது வாழ்த்துக்களையும், தார்மீக ஆதரவையும் தெரிவித்துள்ளது.

நிகழிடம்:
SALLE RENCONTRE, Rue Jean Froncois Chalgrin, 95140 Garges Les Gonesse, France.

தொடர்புகளுக்கு:
E-mail: vadu.world@hotmail.fr
Telephone: 0661803690, 0660368804.

Sunday, September 30, 2007

இந்து மதவெறி பிடித்த வேதாந்தி உருவ பொம்மை எரிப்பு - 150 பேர் கைது - படங்கள்









புதுச்சேரியில், 28-09-2007 அன்று, பெரியார் தி.க. முன்முயற்சியில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து, இராமர் பாலம் என்ற பெயரில் தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான பார்ப்பன, இந்து மதவெறி சக்திகளுக்கு எதிராக சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் முடிவில் இந்து மத வெறிபிடித்த வேதாந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

உத்திரபிரதேசம் விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த ராம் விலாஸ் வேதாந்தி, தமிழக முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் துண்டிக்க வேண்டுமென "பட்வா" கட்டளை பிறபித்தார். இதற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைக் கண்டித்தும், மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் பெரியார் தி.க. தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மீனவர் விடுதலை வேங்கைகள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, பகுஜன் சமாஜ் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், புரட்சியாளர் அம்பேத்க்ர் தொண்டர் படை, செந்தமிழர் இயக்கம், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை, செம்படுகை நன்னீரகம், சமூக நீதிப் போராட்டக் குழு, வெள்ளையணுக்கள் இயக்கம் ஆகியவை இணைந்து இப்போராட்டத்தை நடத்தின.

ஊர்வலத்திற்கு பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் அரசு.வணங்காமுடி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் பா.சக்திவேல், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகரி, புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை தலைவர் பொ.தாமோதரன், சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில் அ.மஞ்சினி, வெள்ளையணுக்கள் இயக்கம் சார்பில் பாவல், செம்படுகை நன்னீரகம் செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

பெரியார் தி.க. அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செயலாளர் சு.விசயசங்கர், பொருளாளர் வீரமோகன், துணைத் தலைவர் இரா.வீராசாமி, இளைஞர் அணித் தலைவர் சா.சார்லசு, செயலாளர் செ.சுரேசு, செய்தி தொடர்பாளர் ம.இளங்கோ உட்பட ஏராளமான தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வேதாந்தியை கடுமையான சட்டத்தில் கைது செய், இந்துமத-பார்ப்பன அமைப்புகளான பா.ஜ.க., இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள், சிவசேனா போன்ற அமைப்புகளைத் தடை செய் என்று முழக்கமிட்டனர்.

ஊர்வலத்தைத் தடுத்த காவல்துறையினரோடு மோதல் ஏற்பட்டது. காவல்துறை தடுத்தையும் தாண்டி ஊர்வலத்தினர் முன்னேறி வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Thursday, September 20, 2007

புதுதில்லியில், உலக வங்கியின் தாக்கங்கள் குறித்து மக்கள் தீர்ப்பாயம்

புதுதில்லியில் 2007, செப்டம்பர், 21 முதல் 24 வரை 4 நாட்கள் உலக வங்கி குறித்து மக்கள் தீர்ப்பாயம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகள் மீது வளர்ச்சி என்ற பேரில், உலக வங்கியின் திட்டங்களால் எவ்வாறு நமது வளங்கள் சுரண்டப்படுகின்றன என்பதை வெளிக் கொண்டு வருவதற்கான முன்முயற்சியே இந்த மக்கள் தீர்ப்பாயம்.

உலக வங்கி, அடித்தட்டில் உழலும் பாதிக்கப்பட்ட சமூகத்தினரிடையே ஏற்படுத்திய தாக்கங்கள்:
குறிப்பாக -

1)பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், ஆதிவாசிகள், விவசாயிகள்.

2)சுற்றுச் சூழல், மனித உரிமைகள்.

3)மிகப் பெரிய மூலதனம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக உலக வங்கியின் திட்டங்கள்.

4)சமூக வளர்ச்சிக்கானத் திட்டங்களாகிய வறுமை ஒழிப்பு, ஏற்றதாழ்வைக் குறைத்தல், உணவு, கல்வி, மருத்துவம் போன்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தலையிடுதல் (எடுத்துக்காட்டாக மானியம் வெட்டு).

5)அரசு, தனியார் துறையிலும் ஒளிவுமறைவின்மை, ஊழல், பதிலளிக்கும் கடமை ஆகியவற்றால் ஏற்பட்ட தாக்கங்கள்.

6)நாட்டின் ஆளுகை, இறையாண்மை, ஜனநாயக மதிப்பீடுகள் மீதான தாக்கம்.

7)சமூகத்தில் உண்டாக்கப்படும் மோதல்கள், இராணுவமயமாக்கல்.

ஆகியவை குறித்து இத்தீர்ப்பாயத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

இதில், உலக வங்கித் திட்ட்த்தால் பாதிக்கப்பட்டோர், இவற்றை எதிர்த்துப் போராடும் இயக்கத்தினர், அரசுத் தரப்பினர், உலக வங்கிப் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

இத்தீர்ப்பாயத்தில், எழுத்தாளர்கள் அருந்த்திராய், மகேஸ்வதா தேவி, முன்னாள் நீதிபதிகள் பி.பி.சாவந்த், எச்.சுரேஷ், உஷா, சமூக ஆர்வலர்கள் மெகர் இஞ்சினியர், அருணா ராய், பேராசிரியர் அமித் பதூரி உள்ளிட்டவர்கள் நடுவர்களாக இருந்து வழிநடத்த உள்ளனர்.
சமூக ஆர்வலர் மேதா பட்கர், பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய், மனித உரிமை ஆர்வலர், மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான், பிரசாந்த் பூஷன், அர்ஷ் மந்தர் உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்க உள்ளனர்.

இந்தியா முழுவதும், உலக அளவிலும் செயல்படும் 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இத்தீர்ப்பாயத்தை நடத்துகின்றன. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம், மாணவர் சங்கம் ஆகியவையும் இவ்வமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன.
இத்தீர்ப்பாயத்தில் தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பலர் கலந்துக் கொள்கின்றனர். புதுச்சேரியிலிருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், சென்னயிலிருந்து தோழமை அமைப்பு சார்பில் அ.தேவநேயன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு:

உலக வங்கி தீர்ப்பாயம்

Sunday, September 16, 2007

முதல்வர் கருணாநிதி மீது பழ.நெடுமாறன் நம்பிக்கை

ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்பும் நடவடிக்கையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மீது பழ.நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்காததைக் கண்டித்து, பழ.நெடுமாறன் 12-09-2007 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.

முதல்வர் கருணாநி்தியின் உறுதிமொழியோடு பழ.நெடுமாறன் அவர்களைச் சந்தித்த பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வலியுறுத்தினார். அதனை ஏற்று பழ.நெடுமாறன் 15-09-2007 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பழ.நெடுமாறன் கூறியதாவது:

"இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி பெற்று விட்டோம். ஆனால், இந்திய அரசு 7 மாதங்களாக அதை அனுப்ப மறுப்பு தெரிவித்து வந்தது. அதை எதிர்த்துதான் எனது உண்ணாவிரதம்.

நான் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது தமிழக அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்கள் எனது போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் என் அருகிலேயே அமர்ந்திருந்தனர்.

பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு முதல்வரிடம் பேசும்போது, இந்த பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என்று அவர் உறுதிமொழி அளித்துள்ளார். அதை நிறைவேற்ற தானும் முயற்சி எடுப்பதாக மருத்துவர் இராமதாசு கூறியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்புவதில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி வலியுறுத்துவார்."

இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட பழ.நெடுமாறன் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சி்கிச்சைப் பெற்று வருகிறார். சி்கிச்சை முடிந்து நாளை (17-09-2007) வீடு திரும்புவார் என்று தெரிகிறது. பழ.நெடுமாறன் அவர்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தன் காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நாட்களாக நடந்த போராட்டத்தினால் ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப மத்திய அரசு இன்னும் சில நாட்களில் அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Saturday, September 15, 2007

பழ.நெடுமாறன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து கொண்டார்.

பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு உறுதிமொழியை ஏற்று பழ.நெடுமாறன் இன்று (15-07-2007) மதியம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் போர் நடந்து வருவதைத் தொடர்ந்து, அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் உணவு, மருந்து கிடைக்காமல் பட்டினியால் வாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் செயல்படும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு தமிழகமெங்கும் ரூ.1 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள் திரட்டினர். அதனை யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பி வைக்க அனுமதி கோரினர். ஆனால், அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இதனிடையே, பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் உணவு, மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தினர். அதன்பின்னும், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நாகப்பட்டினம், இராமேசுவரம் ஆகிய பகுதிகளின் கடல் வழியாக படகு மூலம் சேகரித்த உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல தியாகப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இதன்படி, இரண்டு குழுவினர் 07-09-2007 முதல் 11-09-2007 வரை பரப்புரை மேற்கொண்டனர். திருச்சியிலிருந்து நாகை வரையிலும், மதுரையிலிருந்து இராமேசுவரம் வரையிலும் வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் ஏராளமான வாகனங்களில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

இதன்படி, 12-09-2007 அன்று காலை 10 மணியளவில் பழ.நெடுமாறன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு இயக்கத்தினர் உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுடன் நாகப்பட்டினம் கடற்கரை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது தமிழகப் போலிசார் நாகைக் கடலோர மீனவர்களிடம் படகுகள் தரக் கூடாது என்று மிரட்டியது தெரிய வந்துள்ளது. இதனைக் கண்டித்து, பழ.நெடுமாறன் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். போலிசார் பின்னர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுதலைச் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பழ.நெடுமாறன் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். தமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுக்கும் நோக்கத்தோடு 13-09-2007 உண்ணாவிரதப் பந்தலைப் பிரித்துப் போட்டு, அத்துமீறி நடந்துள்ளனர். இதனைப் படம்பிடித்த ஒரு தனியார் தொலைக்காட்சி புகைப்படக்காரரை தாக்கியுள்ளனர்.

இதனிடையே, தமிழக முதல்வர் கருணாநிதி 14-09-2007 அன்று இரவு பழ.நெடுமாறன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அக்கடித விவரம்:

பேரன்புடைய நெடுமாறன் அவர்களுக்கு,
வணக்கம்.

ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நான் ரயிலில் அமர்ந்து இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த உண்ணாநிலைப் போராட்டம், உங்கள் உடல்நலத்துக்கு ஏற்றதல்ல. தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணாநோன்பினை உடன் நிறுத்த வேண்டிக் கொள்கிறேன்.

ஈரோட்டிலிருந்து இரண்டு நாளில் திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
மு. கருணாநிதி.


இக்கடிதத்தை ஏற்காத பழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 14-07-2007 அன்று பதில் கடிதம் எழுதினார். அதன் விவரம்:

முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

13.09.2007 நாளிட்ட தங்கள் மடல் கிடைக்கப்பெற்றேன்.

என் உடல்நிலை குறித்த அக்கறையுடனும் என் கோரிக்கை குறித்த பரிவுடனும் தாங்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளுக்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்கள அரசின் அறிவிக்கப்படாத பொருளாதார முற்றுகைக்கு உள்ளாகி பட்டினியிலும் நோயிலும் அல்லற்படும் 5 லட்சம் யாழ்ப்பாண தமிழர்களுக்கு வழங்கிட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரட்டப்பட்ட சற்று ஏறக்குறைய 1 கோடிரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதில் தராமல் இந்திய அரசு 7 மாத காலமாக இழுத்தடித்து வருவதனை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.

தாங்கள் சேலம், ஈரோடு சுற்றுப்பயணத்தை முடித்து தலைநகரம் திரும்பிய பின்னர் இது குறித்து ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.

இந்த அணுகுமுறை அடிப்படையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தங்களை சந்தித்து பேச அணியமாக உள்ளது.

எனவே இந்நிலையில் என் கால வரம்பற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடர வேண்டிய தேவை உள்ளது என்பதனை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள
பழ. நெடுமாறன்.


இச்சூழலில், தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சியினரும் (அ.தி.மு.க., காங்கிரஸ், தி.மு.க. தவிர), இயக்கத்தினரும் பழ.நெடுமாறன் உடல்நிலையைக் கணக்கில் கொண்டு, அவரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தினர்.

இன்று (15-09-2007) மதியம் பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு, உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்குச் சென்று பழ.நெடுமாறன் அவர்களைச் சந்தித்தார். பா.ம.க. தலைவர் கோ.க.மணி உடனிருந்தார்.

அப்போது அவர் முதல்வர் கருணாநி்தி அளித்த உறுதிமொழியைத் தெரிவித்து, உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள கேட்டுக் கொண்டார். அவரிடம் சில விளக்கங்களைக் கேட்டறிந்த பழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். உடனே, மருத்துவர் இராமதாசு அளித்த பழச்சாறை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். கடந்த 4 நாட்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

அப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடனிருந்தார். தமிழக அளவில் ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் திரண்டிருந்தனர்.