Thursday, October 21, 2021

ஸ்ரீ பெரும்புதூரில் வழிப்பறி செய்த வடநாட்டு இளைஞன் என்கவுண்டர் கொலை – உண்மை அறியும் குழு அறிக்கை!

அக் 19, 2021,

சென்னை

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ பெரும்புதூர் அருகில் உள்ள பென்னலூரில் வசிக்கும் சுங்கச் சாவடி ஊழியர் இந்திரா (வயது 55, – க/பெ: ரெங்கநாதன்) என்பவரது 5 சவரன் நகையைப் பறித்துச் சென்ற இரு இளைஞர்களில் முர்துஷா ஷேக் (30) என்பவர் கடந்த அக் 11 அன்று தமிழக காவல்துறையால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. இது குறித்த உண்மைகளை அறிந்து அறிக்கை அளிக்கும் நோக்கில் கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு சென்ற வாரம் அமைக்கப்பட்டது.

குழுவில் பங்குபெற்றோர்

அ.மார்க்ஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,

செந்தில் தோழர், இளந்தமிழகம், சென்னை,

நவ்ஃபல், (NCHRO), கோவை,

வழக்குரைஞர் ஃபக்ருதீன் (NCHRO), சென்னை,

அயூப், காஞ்சிபுரம் (NCHRO),

இர்ஷாத், (NCHRO) காஞ்சிபுரம்,

காஜா மொஹிதீன், காஞ்சிபுரம்,

ஃபெரோஜ் கான், கோவை,

கி.நடராசன் (Organisation for Protection of Democratic Rights -OPDR), வழக்குரைஞர், சென்னை,

யு.சர்புதீன், சுங்குவார் சத்திரம்.

இக்குழுவினர் இது தொடர்பாகச் சந்தித்தவர்கள்:

எங்கள் குழு அக்டோபர்14 மற்றும் 16 தேதிகளில் நகையைப் பறிகொடுத்த சுங்கச்சாவடி ஊழியர் இந்திரா, மற்றும் இருங்காட்டுக் கோட்டை கிராமத்தினர், நகையைப் பறித்த வட மாநிலத்தவர் தங்கி இருந்ததாகச் சொல்லப்படும் அம்பேத்கர் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமத்தில் வசிப்போர், கொள்ளையர்கள் தங்கி இருந்ததாகச் சொல்லப்படும் வீட்டிற்கு முன்னதாக உள்ள அஞ்சல் நிலைய ஊழியர்கள், அப்பகுதியில் பல்வேறு சிறு கடைகள் வைத்துள்ளோர், மற்றும் தொழில்கள் செய்வோர், முர்துஜா ஷேக்கால் கத்தியால் வெட்டப்பட்டவராகச் சொல்லப்படும் காவலர் மோகன்ராஜ் சிகிச்சைப் பெறுவதற்காகச் சேர்கப்பட்டிருந்த ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், வட மாநிலத்தில் இருந்து வந்து இப்பகுதியில் வாழும் ஏராளமான தொழிலாளிகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிலர் ஆகியோருடன் கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளையும் சந்தித்தோம்: காஞ்சிபுரம் டி.ஐ.ஜி சத்தியப் பிரியா, ஏ.டி.எஸ்.பி வினோத் சாந்தாராம், சம்பவத்திற்குப் பின் இப்பகுதியில் உள்ள வட மாநிலத்தவர் குறித்த கணக்கெடுப்புகளை மேற்பார்வை செய்யும் காவல் ஆய்வாளர் ந.முத்துச் சாமி எனப் பலரையும் சந்தித்தோம். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் ஏரி மற்றும் காட்டுப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டோம்.

நடந்தது என்ன என பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஊர் மக்களும் சொல்வது:

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் பணி செய்யும் இந்திரா சென்ற அக்டோபர் 10 அன்று காலை சுமார் 8 மணி அளவில் சென்னை செல்லும் பொருட்டு சுங்கச் சாவடி அருகில் உள்ள EB காலனி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது இரு வடமாநிலத்தவர் இந்திராவிடம் சென்று ஏதோ வழி கேட்பவர்கள் போலத் தங்கள் மொழியில் பேசி, அவர் அணிந்திருந்த 5 சவரன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைத் அறுத்துக் கொண்டு ஓடினர். இந்திரா வாய்விட்டு அலறியதைக் கேட்ட அங்கிருந்த ஒரு சிலர் அவர்களை விரட்டிப் பிடிக்க முனைந்தபோது, அவ் இருவரும் சென்னை செல்லும் திசையில் ஓடி வெங்கடேஸ்வரா கல்லூரி பக்கமாகத் திரும்பி அங்கிருந்த காட்டுப் பகுதியுள் நுழைந்து மறைந்துள்ளனர். இதற்கிடையில் இந்திரா செல்போன் மூலம் தன் மகன் மதியிடம் நடந்ததைக் கூற அவரும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கொள்ளையர்கள் சென்ற திசையில் ஓடி, இருங்காட்டுக் கோட்டை ஏரிப்பக்கம் அமைந்துள்ள அடர்ந்த காடுகள் வழியே சிறிது நேரம் அலைந்து திரிந்து ஒன்றும் துப்புத் துலங்காமல் திரும்பியுள்ளனர் .

இதற்குள் செய்தி அறிந்து அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இந்திராவின் இன்னொரு மகன் சத்தியா நடந்ததை அறிந்து, தனது நண்பர் கலைச்செல்வன் என்பவருடன் தனது வாகனத்தில் கிங்ஸ் கல்லூரியின் பின்புறமாகச் சென்று இருங்காட்டுக் கோட்டை ஏரியை அடைந்தபோது அங்கே இரு இளைஞர்கள் உடைமாற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி ஓடியுள்ளனர். இதைக் கண்ட அந்த இருவரில் ஒருவர் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக அவர்களை மிரட்டியுள்ளார். உடனே இவர்கள் இருவரும் தரையில் படுத்துவிட்டதாகவும், அதைக் கண்ட அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடியுள்ளனர் எனவும் அறிகிறோம்.

அவர்கள் ஓடியபின் அவர்கள் நின்றிருந்த இடத்திற்குச் சென்ற சத்தியாவும், கலைச்செல்வனும், ஓடியவர்கள் நின்றிருந்த இடத்தில் கைத் துப்பாக்கி ஒன்றின் ஒரு பகுதியும் சில தோட்டாக்களும் சிதறிக் கிடந்ததைக் கண்டு அவற்றை எடுத்து வந்து காவல்துறையினரிடம் தந்துள்ளனர். ஓடிச் சென்றவர்களிடம் இருந்த கைத் துப்பாக்கியின் எஞ்சிய பகுதியால் அவர்களுக்கு இனிப் பயனில்லை எனும் நிலை ஏற்பட்டது இதன் மூலம் விளங்குகிறது.

வழிப்பறி செய்தவர்கள் பிடிக்கப்பட்டது, அதில் ஒருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது ஆகியன குறித்துக் காவல்துறையினர் சொல்வது:

சம்பவம் நடந்த ஒன்றரை மணி நேரத்திற்குள் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய ஆய்வாளர், துணைக் கண்காணிப்பாளர் மற்றும் அருகில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் பஞ்சாயத்துத் தேர்தல் வாக்குப் பெட்டிகளைக் காத்துநின்ற காவல்துறையினர் மற்றும் ஊர்மக்கள் எனப் பெரிய அளவில் ஏரிக்கரையில் திரண்டுள்ளனர். அடர்ந்த காடு என்பதால் காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மூன்று ட்ரோன்களைக் கொண்டுவந்து வழிப்பறி செய்த இருவரையும் தேடியுள்ளார். அப்படியும் ஒளிந்திருந்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் இருங்காட்டுக் கோட்டைப் பகுதியில் காவல்துறையினர் கொண்டுவந்து குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அன்று அந்தக் காட்டுப் பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்தும் முர்துஜா ஷேக்கை என்கவுண்டர் செய்து சுட்டுக் கொன்றது குறித்தும்

ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர், எஸ். கிருஷ்ணகுமார் தனது முதல் தகவல் அறிக்கையில் ((FIR No 1255, 11-10-2021, Sriperumbuddur) கூறுவது:

”செயின் வழிப்பறிச் சம்பவம் குறித்து சி1 திருப்பெரும்புதூர் காவல் நிலைய குற்ற எண் 1254/2021 பிரிவு 397 IPC யின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்தது. அக்டோபர் 11 காலை சுமார் ஏழு மணி அளவில் காரந்தாங்கல் அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தபோது சந்தேகத்துக்குரிய நபர் (ஒருவர் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடித்து) அவர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டார்.

விசாரணையில் அந்த நபர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நெயிம் அக்தர் எனத் தெரியவந்தது. (அவரை விசாரித்தபோது) தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தனது கூட்டாளியான மோர்துஜா ஷேக் என்பவர் மேவளூர்குப்பம் கிருஷ்ணா நதிநீர்க் கால்வாய் பக்கமாகப் படூர் கிராமத்திற்குச் செல்லும் சாலையின் அருகாமையில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் மறைந்திருப்பதாக் கூறினார். இந்தத் தகவலின் அடிப்படையில் நான் special team உதவி ஆய்வாளர் தர்மலிங்கம், தலைமைக் காவலர் மோகன் ராஜ் ஆகியோர் குற்றவாளியைப் பிடிக்க மதியம் சுமார் 12 மணிக்கு படூர் காட்டுப் பகுதியைச் சென்றடைந்தோம். அங்கு ரோந்து மேற்கொண்டபோது மதியம் சுமார் 1 மணி அளவில் அடர்ந்த புதரில் இருந்து ஒரு நபர் ஓடி வந்து முன்னால் நடந்து சென்ற தலைமைக் காவலர் மோகன்ராஜின் கழுத்துப் பகுதியில் கையில் இருந்த அரிவாளால் தாக்க முற்பட்டார். அவர் அந்த வெட்டுப்படாமல் கையால் தடுத்தபோது இடது கை புஜத்தில் பலமான வெட்டுப்பட்டது. மோகன்ராஜ் நிலைகுலைந்து தடுமாறி வீழ்ந்தபோது, சந்தேகப்படும் நபர் தன் துப்பாக்கியை எடுத்துச் சுட முயன்றபோது நான் அவரை தற்காப்பிற்காக இரண்டு முறை சுட்டேன்.” இது கிருஷ்ணகுமாரின் வாக்குமூலம். ஆம்புலன்சில் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு முர்துஜா ஷேக்கைக் கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டார் என ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தன் வாக்குமூலத்தை முடிக்கிறார்.

மொத்தத்தில் இது ஒரு வழக்கமான காவல்துறை என்கவுண்டர் படுகொலைதான் என்பது தெரிகிறது. அவரிடம் இருந்த துப்பாக்கியின் முன்பகுதி காணாமற் போனபின் அதைப் பயன்படுத்த முடியாது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. தவிரவும் அந்தத் துப்பாக்கியைக் காவல்துறையினர் பத்திரிகையாளர்களிடம் காட்டியபோது, அது முழுமையாக இல்லை என்பதையும் ”பீபிள்ச் வாட்ச்” அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக் காட்டுவது குறிப்பிசத் தக்கது. எனவே அந்த பயனற்ற பாதித் துப்பாக்கியைக் காட்டி சுட்டுக் கொல்லப்பட்ட நபர் மிரட்டினார், அதனால் சுட்டோம் என்பது ஏற்க இயலாத ஒன்று.

சுங்கச் சாவடி ஊழியர் இந்திராவின் சங்கிலியை அறுத்த இருவரில் மற்றொருவர் பெயர் மத்புல் ஷேக் என்றும், அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட முர்துஜா ஷேக்கின் சகோதரன் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மத்புல்ஷேக் இப்போது தீவிரமாகத் தேடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட முர்துஜா ஷேக்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஜார்கண்டில் உள்ள அவரது பெற்றோரைத் தொடர்பு கொண்டபோது அவரை இங்கேயே அடக்கம் செய்யுமாறு அவர்கள் கூறிவிட்டதாகவும். அதன்படி அவர் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் காஞ்ஜிபுரம் டி.ஐ.ஜி. சத்தியப் பிரியா நாங்கள் அவரைச் சந்தித்தபோது கூறினார்.

இது தொடர்பாக எங்கள் குழு சந்தித்த காவல்துறையினர்:

நகையைப் பறி கொடுத்த இந்திராவைச் சந்தித்தபோது அவர் சென்ற அக்டோபர் 10 காலை சுமார் 8 மணி அளவில் தான் சென்னை செல்ல பேருந்துக்காக நின்றபோது புரியாத மொழியில் பேசிய இரு வட மாநிலத்தவர் தன்னிடம் ஏதோ கேட்பது போல வந்துத் செயினை அறுத்துக் கொண்டு ஓடியதையும், அவர் சத்தம் போட்டுக் கத்தியதையும், பின் அவர்கள் கொஞ்ச தூரம் ஓடி காட்டுப் பகுதியை நோக்கி சரிவில் இறங்கி ஓடி மறைந்ததையும் சொன்னார். பின் அவரது மகன்கள் வந்து சென்று காட்டுப் பகுதிக்குள் தேடியதையும் சொன்னார். செயினைப் பறிக்கும்போதோ, இல்லை தான் தப்பி ஓடியபோது துரத்தியவர்களை மிரட்டுவதற்காகவோ கொள்ளையர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தினார்களா என நாங்கள் கேட்டபோது தன்னிடம் நகையைப் பறித்தபோது அப்படித் துப்பாக்கியைக் காட்டி எதையும் செய்யவில்லை என இந்திரா உறுதிபடக் கூறினார். செயின் அறுப்பு சம்பவம் நடந்த இடம் மற்றும் குற்றவாளிகள் தப்பிச் சென்ற வழி முதலியவற்றையும் பார்த்தோம்.

அடுத்து நாங்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் சென்று அங்கிருந்த காவலர்களிடம் முதல் தகவல் அறிக்கை விவரங்களைக் கேட்டோம். இந்த வழக்கு தொடர்பாக இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் போடப்பட்டுள்ளன. ஒன்று நகையைப் பறி கொடுத்த இந்திராவின் புகார். இந்த முதல் தகவல் அறிக்கை யாரும் தரவிரக்கம் செய்ய இயலாமல் இது முடக்கப்பட்டுள்ளது. மற்றது இந்த அறிக்கையில் நாங்கள் முன் குறிப்பிட்டுள்ள ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தான் முர்துஜா ஷேக்கை சுட்டுக் கொல்ல நேர்ந்தது குறித்த முதல் தகவல் அறிக்கை. இதைத் தரவிரக்கம் செய்ய முடிந்தது.

உயர் அதிகாரிகள் சற்று நேரத்தில் வருவதாகச் சொன்னதால் சிறிது நேரம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திலேயே காத்திருந்துவிட்டுப் பின் அங்கிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டக் காவல் நிலையத்திற்குச் சென்று மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) விடுப்பில் இருந்ததால், கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) திரு வினோத் சாந்தாராமைப் பார்த்தோம். என்கவுண்டரில் கொல்லப்பட்ட மத்புல் ஷேக்கைக் கைது செய்து விசாரித்திருக்கலாம். நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனைகள் வாங்கித் தந்திருக்கலாம். என்கவுண்டர் செய்திருப்பதற்கான அவசியம் இல்லை, அந்த நபர் நகையைப் பறித்தபோது கூட இந்திராவையோ, துரத்தியவர்களையோ துப்பாக்கியைக் காட்டி மிரட்டவுமில்லை. அவரை இப்படிச் சுட்டுக் கொன்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைச் சொன்னோம். மத்புல் ஷேக்கிடம் துப்பாக்கி இருந்தது உண்மை எனவும், தேவையானால் சுட்டுக் கொல்ல வாய்ப்பிருந்ததையும் மறுக்க முடியாது எனவும் அவர் பதிலுரைத்தார். நாங்கள் அவரிடம் பேசிக்கொண்டிருந்த அன்று அப்படி ஒரு நபர் காஞ்சியில் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியதையும் குறிப்பிட்டார். ”எனினும் உங்கள் ஐயங்களை முன்வையுங்கள். நாங்கள் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்” என்றார்.

அடுத்து நாங்கள் ஐ.ஐ.ஜி. திரு சத்தியப் பிரியா அவர்களைச் சந்தித்தோம். அவர் சம்பவம் நடந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தவர். அவரும் முர்துஜா ஷேக்கை என்கவுண்டர் செய்து கொன்றது தவிர்க்க இயலாத ஒன்று என்பதே தன் கருத்து எனக் குறிப்பிட்டார். முர்துஜாவிடம் கடைசிவரை மூன்று குண்டுகள் இருந்தன எனவும், அதை அவர் கைது செய்யச் சென்ற காவலர்கள் மீது பிரயோகிக்கக் கூடிய எல்லா வாய்ப்புகளும் இருந்ததை மறந்துவிடக் கூடாது எனவும் குறிப்பிட்டார். முர்துஜாவை என்கவுண்டர் செய்தது குறித்து I am convinced என்றார். முர்துஜாவால் கத்தியால் வெட்டப்பட்ட காவலர் மோகன்ராஜுக்குக் கடுமையான காயம் பட்டுள்ளதாகவும், அவருக்கு இன்னும் தீவிரமான சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது எனவும் கூறினார்.

அடுத்து முர்துஜா ஷேக்கைப் பிடிக்கச் சென்றபோது அந்த நபர் தன் கையிலிருந்த கத்தியால் வெட்டியதாகக் கூறப்படும் அந்தத் தலைமைக் காவலர் மோகன் ராஜ் சிகிச்சை பெறுவதாகச் சொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அவர் படுகாயமுற்று மருத்துவமனையில் இருப்பதாகக் காவல்துறையால் சொல்லப்பட்டாலும், நாங்கள் அவர் தங்கிச் சிகிச்சை பெறுவதாகச் சொல்லப்பட்ட மருத்துவமனை வார்டுக்குச் சென்றபோது அவர் அங்கில்லை. பக்கத்தில் இருந்தவர்கள் அவர் அன்று மதியம் வீட்டுக்குக் குளிக்கப் போனார், இன்னும் வரவில்லை எனக் கூறினார்கள். தினசரி அவர் வீட்டுக்குச் சென்று தன் தினசரிக் கடமைகளை முடித்து வருவது தெரிந்தது. பின் நாங்கள் அந்த வார்டுக்குப் பொறுப்பாக உள்ள செவிலியரைச் சென்று விசாரித்தோம். சிகிச்சை முடிந்து இன்று மோகன்ராஜ் ”டிஸ்சார்ஜ்” செய்யப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில் தலைமைக் காவலர் மோகன் ராஜுக்கு அப்படி ஒன்றும் பெரிய வெட்டுக் காயம் ஏதும் இல்லை என்பது விளங்கியது. இப்படியான என்கவுண்டர் கொலைகளைச் செய்யும்போது யாராவது ஒரு காவலருக்குப் பெரும் காயம் ஏற்படும் வகையில் தாக்கிய நிலையில் தற்காப்புக்காகத்தான் தாங்கள் என்கவுண்டர் செய்தோம் எனச் சொல்வது காவல்துறையில் வழக்கமாக உள்ளது. ஆனால் அவை பெரும்பாலும் உண்மை இல்லை என்பதைப் பல முறை நாங்கள் நேரில் கண்டுள்ளோம். எங்களின் அறிக்கைகளிலும் பதிவு செய்துள்ளோம்.

காரந்தாங்கல் கிராமத்தவர்கள் கருத்து

பெங்களூரு நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதையும், அவற்றில் பெரிய அளவில் வட மாநிலங்களிலிருந்து தொழிலாளிகள் வந்து தங்கி வேலை செய்வதையும் அறிவோம். இந்தச் சம்பவம் நடந்த இறுக்கமான புதர்கள் மற்றும் ஏரிகள் அமைந்துள்ள இப்பகுதியில் ஹ்யூண்டாய் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு பணி செய்யும் வடமாநிலத்தவர்கள் பெரிய அளவில் நெடுஞ்சாலை ஓரமுள்ள காரந்தாங்கல் கிராமத்தில்தான் வசிக்கின்றனர். சிலர் குடும்பமாகவும் இருக்கின்றனர்.

அக்டோபர் 16 அன்று எங்கள் குழு இரண்டாம் முறையாக இந்தக் கள ஆய்வு தொடர்பாக அங்கு சென்றபோது இந்தக் கிராமத்தில் இருந்து அங்குள்ள பலரையும் சந்தித்தோம். செயின் பறிப்பைச் செய்தவர்கள் தங்கி இருந்ததாகச் சொல்லப்படிம் வீடு, செயின் பறிக்கப்பட்ட இடம், கொள்ளையர்கள் துரத்தப்பட்டபோது ஓடி அவர்கள் ஒதுங்கிய காட்டுப்பகுதி, ஏரி முதலான பகுதிகளையும் பார்வையிட்டோம்.

இப்பகுதி மக்களைச் சந்தித்து நாங்கள் இது குறித்து விசாரித்தபோது முதலில் எதையும் சொல்வதற்குத் தயக்கம் காட்டினர். எங்கள் குழுவில் இருந்த வழக்குரைஞர் நடராசன், சர்புதீன் முதலானோர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் சற்று இலகுவாக மக்களிடம் பேசவும், கருத்துக்களைச் சேகரிக்கவும் முடிந்தது.

நாங்கள் சென்றபோது காவல்துறையினர் அங்கு தங்கியுள்ள வெளிமாநிலத்தவர் குறித்த விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். இரு குழுக்களாகப் பிரிந்து அவர்கள் ஒவ்வொரு வீட்டாரையும் வரச்சொல்லி அவர்களின் ஆதார் அட்டை முதலானவற்றைப் பதிவு செய்து கொண்டுள்ளதைப் பார்த்தோம். காவல்துறை ஆய்வாளர் ந.முத்துச்சாமி அக்குழுவிற்குப் பொறுப்பேற்றிருந்தார். அவரைச் சந்தித்து என்கவுண்டர் தொடர்பான விவரங்களைக் கேட்டபோது, அந்த வழக்குத் தொடர்பாகத் தனக்கு எதுவும் தெரியாது எனவும், இந்த விவரங்களைச் சேகரிப்பது மட்டுமே தன் பணி எனவும் குறிப்பிட்டார். தாங்கள் விசாரித்துப் பதிவு செய்வோரிடம் ஆதார் அட்டை இல்லாமலிருந்தால் வேறு முக்கியமான ஆதாரங்களைப் பதிவு செய்துகொள்வதாகவும் கூறினார். அவரது ஜீப் நின்றிருந்த இடத்திற்கு அருகாமையில்தான் கொள்ளையர்கள் இருவர் தங்கி இருந்ததாகக் சொல்லப்படும் தெருவும் இருந்தது. அது குறித்தும் அவர் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.

நாங்கள் சந்தித்துப் பேசிய அத்தனை பேர்களும் அங்கு தங்கியுள்ள வடமாநிலத்தவர்களால் எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் குறிப்பிட்டதை இங்கே பதிவு செய்வது அவசியம். பெரும்பாலும் ஜார்கண்ட், மே வங்கம், ஒடிஷா, பிஹார் முதலான மாநிலத்தவர்களான இவர்களுக்கு எந்த அடிப்படையில் வீடுகளை வாடகைக்குத் தருகிறீர்கள் எனக் கேட்டபோது ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே வீடுகளை வாடகைக்குத் தருகிறோம் என்றனர். அதில் ஒருவர் தன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் வடமாநிலத்தவரின் ஆதார் கார்டின் ஒரிஜினலையே தான் வாங்கி வைத்துள்ளதாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இப்படி இங்கு தங்கியுள்ள வடமாநிலத்தவரில் பலர் முஸ்லிம்கள் என்பதால் இங்குள்ள முஸ்லிம் ஒருவர் தன் வீட்டு மாடியில் அவர்கள் தொழ இடமளிப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க முயன்றோம். இப்போது அங்கு அப்படித் தொழுகை நடப்பதில்லை எனத் தெரிந்தது. ஊருக்குள் இருந்த ஒரு கடையின் உரிமையாளரைச் சந்தித்துப் பேசியபோது அவரும் அப்பகுதியில் வாழும் இந்த வட மாநில மக்கள் குறித்த மிகவும் நல்ல அபிப்பிராயத்தையே முன்வைத்தார். அவர்களால் இதுவரை அங்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றார்.

சாலைக்கு அருகில் உள்ள போஸ்ட் ஆபீசில் இருந்த பணியாளரைச் சந்தித்தபோது அவர் தபால்களை எடுத்துச் செல்லத் தயாராக இருந்தபோதும் நின்று அங்கிருக்கும் வட மாநிலத்தவர்கள் குறித்து மிகவும் நல்ல கருத்தையே கூறினார். போஸ்ட் ஆபீசை ஒட்டியுள்ள தெருவில்தான் கொள்ளையர்கள் இருந்ததாகக் கூறப்படுவதுபற்றிக் கேட்டபோது அதுவும் அவருக்கும் தெரியவில்லை.

கொள்ளையர்கள் வசித்ததாகச் சொல்லப்படும் அந்தத் தெருவில் ஒரு முன்னாள் கவுன்சிலரைச் சந்தித்தோம். வி.சி.க வைச் சேர்ந்த அவரும் அருகில் உள்ள ஒரு வீட்டைக் காட்டி அதற்குள்தான் இருந்தார்கள் எனச் சொல்லப்படுவதாகவும், அங்கு யார் இருந்தார்கள், எத்தனை பேர்கள் இருந்தார்கள் என்றெல்லாம் தனக்கு மட்டுமல்ல, அங்கு யாருக்கும் தெரியாது எனவும் சொன்னார். அவர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீட்டுக்குச் சென்றபோது, அது ஒரு பாழடைந்த குடிசை. எங்களைப் பார்த்துவிட்டு அந்த வீட்டுக்குள் படுத்திருந்த இரு நாய்கள் வெளியே ஓடின. அங்குதான் அவர்கள் இருந்தனர் என்பது நம்ப இயலாததாகவே இருந்தது.

மொத்தத்தில் அப்பகுதி மக்களுக்கு தங்கள் மத்தியில் வசித்த இந்த வடமாநில மக்கள் குறித்து எந்தப் புகாரும் இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முடிந்தது.

எங்கள் குழுவின் பார்வைகளும் கோரிக்கைகளும்

காரந்தாங்கல் கிராமத்தில் எங்கள் குழு விசாரித்தபோது அக்டோபர் 11 அன்று காலை10 மணிக்கு மேல் ஒரு வட மாநிலத்தவரைக் காவல்துறையினர் பிடித்துச் சென்றதாகக் கூறுகின்றனர். சிலர் இரண்டு பேர்கள் எனவும் கூறினர். அன்று காலை அப்பகுதி பரபரப்பாய் இருந்ததையும் அம் மக்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். அப்படிப் பிடிக்கப்பட்டவர் நயிம் அக்தர் எனும் ஜார்கண்ட் மாநிலத்தவர் எனவும் அவரது டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டுதான் முர்துஜா ஷேக்கின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவர் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார் என்கிற கருத்து ஒன்றும் உள்ளது. அந்த நயிம் அக்தர் தற்போது ரிமாண்ட் செய்யப்பட்டுச் சிறையில் உள்ளார்.

முர்துஜா ஷேக்கும் இன்னொருவரும் வழிப்பறி செய்து நகையைப் பறித்துச் சென்றனர் என்பது குற்றச்சாட்டு. அவர்கள் கைது செய்யப்பட்டு. வழக்குத் தொடுத்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தருவது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. சுமார் 300 ஆயுதம் தாங்கிய படையுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில் காவல்துறையினர் அவர்களை எளிதில் உயிருடன் பிடித்திருக்க முடியும். இப்படி முர்துஜா ஷேக்கைக் காவல்துறை கொன்றுதான் பிடிக்க வேண்டும் என்பதற்கு அங்கு அவசியம் இருக்கவில்லை. காவல்துறை சொல்லும் கதையில் எந்த நியாயமும் நம்பகத் தன்மையும் இல்லை. நகைப் பறிப்புச் சம்பவம் நரந்த்து அக்டோபர் 10. அடுத்த நாள் (அக்டோபர் 11) காலையே அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டார்கள் என்றெல்லாம் செய்தி பரப்பப்பட்டபோதே ஏதோ நடக்கப்போகிறது என்கிற அச்சம் ஏற்பட்டது. அப்படியே நடக்கவும் செய்த்து.

முர்துஜா ஷேக்கிடம் இருந்த துப்பாக்கி முந்திய நாளில் காட்டுக்குள் தப்பி ஓடும்போது விழுந்து உடைந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல்கள் முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. இந்த வழக்கு தொடர்பான இரு முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்றுதான் தரவிரக்கம் செய்யும் நிலையில் உள்ளது என்பது இங்கு நினைவுகூரத் தக்கது. இந்திராவிடமிருந்து செயின் அறுக்கப்பட்ட சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கையைத் தரவிறக்கம் செய்து பார்க்க இயலாதவாறு வைக்கப்பட்டுள்ளதன் காரணமும் விளங்கவில்லை.

மொத்தத்தில் இது ஒரு அப்பட்டமான போலி மோதல் படுகொலை. இது குறித்து வழக்கு விசாரணையை என்கவுண்டர் செய்த காவல்துறையினரிடமே கொடுத்தால் நீதி கிடைக்காது. சி.பி.சி.ஐ.டி. போன்ற வேறு புலனாய்வு முகமை ஒன்றிடம் இந்த விசாரணை ஒப்புவிக்கப்பட்டு உரிய முறையில் விசாரிக்கப்பட வேண்டும்.

போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட முர்துஜா ஷேக்கின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

எந்தப் பிரச்சினையையும் சாதி, மதம், இனம் என்கிற ரீதியில் பார்க்கப்படும் இன்றைய சூழலில் இந்தப் பிரச்சினை அப்படியான ஒரு கோணத்தில் இதுவரை அணுகப்படாதது ஓரளவு ஆறுதலாக இருக்கிறது. இந்நிலை தொடர வேண்டும். எனினும் கடந்த சில ஆண்டுகளாக வட மாநிலத்தவர் என்றால் வெறுப்பாகப் பார்க்கும் ஒரு நிலை இங்கு உருவாக்கப் பட்டுள்ளள்ளது வருந்தத் தக்கது. உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டதாகச் சொல்லப்படும் இந்நாளில் எல்லோரும் பல மாநிலங்களிலும், நாடுகளிலும் சென்று படிப்பதும் பணியாற்றுவதும் இயல்பாக உள்ளது. இந்நிலையில் இப்படியாகக் கட்டமைக்கப்படும் அந்நிய வெறுப்பு மிகவும் வருந்தத் தக்க, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. காவல்துறையினரும் அந்தக் கோணத்திலிருந்து வடமாநிலத்தவரை அணுகக் கூடாது. இதே சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் இப்படிக் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து வடமாநிலத்தவரை நம் காவல்துறை சுட்டுக் கொன்றது நினைவிற்குரியது. அப்போதும் அது ஒரு என்கவுண்டர் படுகொலைதான் என்பது இவ்வாறு உண்மை அறிந்து இங்கு வெளிப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலை மாற வேண்டும்.

தமிழகத்தில் புதிய ஆட்சி உருவாகியுள்ள இந்தச் சில மாதங்களில் எதிர்க்கட்சிகளாக உள்ள பா.ஜ.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகியக் கூட்டணிக் கட்சிகள் இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதும் இந்த என்கவுண்டர் படுகொலைக்குப் பின்னணியாக உள்ளது எனவும் கூறலாம். இந்த என்கவுண்டர் நடந்த அடுத்த இரண்டு நாட்களில் தூத்துக்குடியிலும் ஒரு என்கவுண்டர் கொலை நடந்துள்ளதையும் காண்கிறோம். இப்படி அரசியல் நோக்கங்கள் குடிமக்களின் உயிர் பறிப்பிற்குக் காரணமாவது வேதனைக்குரியது. கண்டிக்கத் தக்கது.

“திருப்பெரும்புதூர் என்கவுண்டர் எதிரொலி: வீடுவீடாக அதிரடி வேட்டை; சிக்கப்போகும் வடமாநிலத்தவர்கள்!” எனும் தலைப்புச் செய்தியுடன் இரண்டு நாட்கள் முன்னர் ஜனனி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று (EMIS in India, Industry Reports, Oct 17, 2021 ) ஒன்று வெளிவந்துள்ளது. வடமாநிலத்தவர் வசிக்கும் வீடொன்றில் சோதனை நடைபெறும் படத்துடன் அது வெளியிடப்பட்டுள்ளது. அருகில் வடமாநில இளைஞர்கள் நிற்கின்றனர். இவை எல்லாம் இங்கு வந்து பணிசெய்யும் பிறமொழியினர் மீது வன்முறைகள் பெருகவே வழி வகுக்கும். சில ஆண்டுகள் முன்னர் தமிழகத்தில் இப்படி வடமாநிலத்தவர்கள் சந்தேகத்தின் பேரில் ஆங்காங்கு நம் மக்களால் தாக்கப்பட்டதை நாம் மறந்துவிடக் கூடாது.

கடந்த 4 ஆம் தேதி ஓரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் ஊழியர் இருவர் தாக்கப்பட்டு, அதில் ஒருவர் மரணம் அடைந்ததும், இன்னொருவர் உடலில் துப்பாக்கிக் குண்டுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் இப்போது இந்த நகைப் பறிப்புடன் தொடர்புபடுத்தி ஒட்டு மொத்தமாக வடமாநிலத் தொழிலாளர் மீது வெறுப்பு பரப்பப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுதல் அவசியம். ஆனால் இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு “அந்நியர்” எதிர்ப்புக்கு வழிவகுக்கும் வகையில் சொல்லாடல்கள் பரப்பப்படுவது வருந்தத் தக்கது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. அரசும் காவல்துறையும், ஊடகங்களும் இதில் கவனமாக இருத்தல் வேண்டும்.

தொடர்பு முகவரி

அ.மார்க்ஸ், 1/33, G2, செல்ல பெருமாள் தெரு, லட்சுமிபுரம், திருவான்மியூர், சென்னை (600041). தொடர்பு : 9444120582

Wednesday, October 06, 2021

பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் ஊழல், முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.10.2021) விடுத்துள்ள அறிக்கை:-

பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் நடந்துள்ள ஊழல், முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக இசைத்துறை உதவிப் பேராசிரியர் போஸ் என்பவரை முதல்வராக நியமித்து கலைப் பண்பாட்டுத் துறை செயலர் நெடுஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

பாரதியார் பல்கலைக்கூடம் ஏ.ஐ.சி.டி.இ. ஏற்பும், புதுவைப் பல்கலைக்கழக அங்கீகாரமும் பெற்ற அரசு கல்லூரியாகும். இக்கல்லூரிக்கு விதிகளுக்கு மாறாக முதல்வரை நியமித்ததால் ஏ.ஐ.சி.டி.இ. ஏற்பும், பல்கலைக்கழக அங்கீகாரமும் ரத்தாகும் ஆபத்துள்ளது. இதனால், மாணவர்களின் படிப்பு செல்லாததாகிவிடும்.

உதவிப் பேராசிரியர் போஸ் மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் பாடல்களைப் பாட மறுத்ததற்காகவும், உயரதிகாரிகளுக்குக் கீழ்படியாமல் ஒழுங்கீனமாக நடந்ததற்காகவும் இரண்டு முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். அவருக்கு இரண்டு எச்சரிக்கை மெமோ வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெற்ற தகவலின்படி கொரோனா காலத்தில் அனைத்து பேராசிரியர்களும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்திய போது உதவிப் பேராசிரியர்கள் போஸ், அன்னபூர்ணா இருவர் மட்டுமே நடத்தவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை.

பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது எனப் பரவலாக செய்தி அடிபடுகிறது. கலைப் பண்பாட்டுத் துறை செயலர் டில்லியில் பணியாற்றிய போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கூட நுண்கலைத் துறை, நிகழ்கலைத் துறை இரண்டையும் பிரித்து தனித்தனி முதல்வர் நியமிக்கப்பட ஆட்சி மன்ற குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மாறாக தகுதி இல்லாத, பணிமூப்பில் இளையவரான, பல்வேறு குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒருவரை முதல்வராக நியமித்தது சட்டத்திற்குப் புறம்பானது. மேலும், ஏ.ஐ.சி.டி.இ மற்றும் யு.ஜி.சி. விதிகளுக்கு முற்றிலும் ஏதிரானது.

பல்கலைக்கூடத்திற்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். பல்கலைக்கூட நுண்கலைத் துறை, நிகழ்கலைத் துறை இரண்டையும் பிரித்து தனித்தனி முதல்வர் நியமிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து புதுச்சேரி அரசுக்கும், தலைமைச் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும் பல்வேறு மனுக்கள் அனுப்பியும் சட்டவிரோதமாக முதல்வர் நியமனம் நடந்துள்ளது. அனைத்து ஆதாரங்களையும் திரட்டி மத்திய அரசுக்கும், சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளோம்.

எனவே, பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் நடந்துள்ள ஊழல், முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.


Saturday, September 18, 2021

சுப்பிரமணியன் காவல் மரண வழக்கு: காவல் ஆய்வாளர் உட்பட இருவருக்குப் பிடியாணை

கடந்த 2015ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியத்தில் வசித்து வந்த மும்தாஜ் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மர்ம நபர்கள் அவரது வீட்டில் இருந்த நகைகளையும் திருடிச் சென்றனர்.

இவ்வழக்கில் சந்தேகத்தின் பேரில் கடந்த 29.05.2015 அன்று நள்ளிரவில் பட்டாம்பாக்கம், பி.என்.பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை நெய்வேலி நகரியப் போலீசார் பிடித்துச் சென்றனர்.

அவரை 6 நாட்கள் காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால், சுப்பிரமணியன் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 06.05.2015 அன்று சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து காவல் மரணம் என வழக்குப் பதியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூர் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்தார்.

பின்னர், இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் அப்போழுது காவல் ஆய்வாளராக இருந்த இராஜா, காவலர்கள் செந்தில்வேல், செளமியன் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் இ.த.ச. 218, 330, 343, 348, 304(ii) ஆகிய பிரிவுகளில் குற்றஞ்சாட்டி குற்ற அறிக்கைத் தாக்கல் செய்தனர். தற்போது இவ்வழக்கு சிதம்பரம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கு கடந்த 16.09.2021 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் செளமியன் மட்டும் ஆஜராகி உள்ளார். காவல் ஆய்வாளர் இராஜா, செந்தில்வேல் ஆஜராகவில்லை.

நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளர் இராஜா, செந்தில்வேல் ஆகியோருக்குப் பிணையில் வெளிவர முடியாத பிடியாணைப் பிறப்பித்து நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவிட்டார். மேலும், சிபிசிஐடி போலீசார் இருவரையும் பிடித்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கை கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் குழுவினர் நடத்தி வருகின்றனர். மேலும், இவ்வழக்கை அக்கட்சியின் மாநிலச் செயலர் தோழர் கே.பாலகிருஷ்ணன் நேரடியாகக் கவனித்து வருகிறார்.

இச்சம்பவம் நடந்த போது உண்மை அறியும் குழு அமைத்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளித்தோம்.

Monday, August 23, 2021

தமிழகத்தைப் போல் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளை செப்டம்பர் 1 அன்று திறக்க வேண்டும்!

 

தமிழகத்தைப் போல் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளை செப்டம்பர் 1 அன்று திறக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.08.2021) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு வரும் 01.09.2021 அன்று முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும் என அறிவித்துள்ளது. அதேபோல், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.

ஆனால், புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. ஏற்கனவே பள்ளிகள் திறக்கும் நாள் அறிவிக்கப்பட்டு பின்னர் அதுவும் தள்ளி வைக்கப்பட்டது.

சென்ற ஜீலை 15 முதல் அரசு ஊழியர்கள் 100 விழுக்காடு பணிக்குத் திரும்ப வேண்டுமென அரசு உத்தரவிட்டது. ஆனால், அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் ஆசிரியர்களைப் பணிக்குத் திரும்ப உத்தரவிடவில்லை. இதனால், மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குதல், மாணவர் சேர்க்கைப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகளும் முறையாக அனைத்து ஆசிரியர்களும் நடத்தவில்லை. ஏழை எளிய மாணவர்கள் போதிய வசதி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடத்தாத ஆசிரியர்கள் மீதும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாணவர்களின் கல்விப் பாதிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் புதுச்சேரி அரசு மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறையின் செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

எனவே, தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் வரும் 01.09.2021 அன்று பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’சார்பில் வலியுறுத்துகிறோம்.

Saturday, August 14, 2021

உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.08.2021) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் போலியான பயனாளிகளைக் கண்டறிந்து நீக்கி உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே அரசு உதவித் தொகை வழங்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் முதியோர், விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு சமூக நலத்துறை மூலம் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. புதுச்சேரி முழுவதும் ஒரு லட்சத்து 64 ஆயிரம் பேர் மேற்கண்ட திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

புதுச்சேரியில் ஏற்கனவே வழங்கப்பட்ட உதவித் தொகையில் ரூ. 500 உயர்த்தப்பட்டு 18 வயது முதல் 54 வயது வரை உள்ள விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2000, 55 வயது முதல் 59 வயது வரை உள்ள முதியோருக்கு ரூ.2000, 60 வயது முதல் 79 வயது வரை உள்ள முதியோருக்கு ரூ.2500, 80 வயதுக்கு மேலுள்ள முதியோருக்கு ரூ.3500 என உயர்த்தப்பட்ட உதவித் தொகை வழங்க தற்போதைய அரசு அரசாணை வெளியிட்டது. தற்போது உயர்த்தப்பட்ட உதவித் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரம் பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், புதுச்சேரியில் முதியோர் உதவித் தொகைப் பெறும் பயனாளிகளில் சுமார் 40 சதவீதம் பேர் 55 வயது முழுமையடையாத நிலையில், வயதைத் திருத்திப் போலியான ஆதார் அட்டைகளைத் தயாரித்து சட்ட விதிகளுக்கு முரணாக உதவித் தொகைப் பெற்று வருகின்றனர். அதே போன்று தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

புதுச்சேரி அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் இதுபோன்று போலியான பயனாளிகளுக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டு அரசுப் பணம் பெருமளவில் வீணடிக்கப்படுகிறது.

கடந்த கால ஆட்சிகளில் நடந்த இந்த முறைகேடுகளைத் தடுக்க முதியோர் உதவித் தொகை பெறும் அனைத்து பயனாளிகளின் வயதுச் சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய வேண்டும். போலியான ஆதார் அட்டைகள் வழங்கியவர்களைக் கண்டறிந்து குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியான பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். உதவித் தொகைப் பெறும் பயனாளிகளின் ஆதார் அட்டை எண்களை இணைத்து போலியான பயனாளிகள் உதவித் தொகைப் பெறுவதைத் தடுக்க வேண்டும்.

அதேபோல், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னிகள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைப் பெறும் பயனாளிகளையும் ஆய்வு செய்து உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சமூக நலத்துறைச் செயலர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம். 

Tuesday, July 20, 2021

சேலம் முருகேசன் காவல்துறையினரால் கொலை: வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்!

சேலம் முருகேசன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து இன்று (20.07.2021) தமிழக முதலமைச்சர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:-

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி சார்பில் கடந்த 16.07.2021 அன்று சேலம் அருகேயுள்ள இடையப்பட்டி சிற்றூருக்குச் சென்று காவல்துறையால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து வந்ததின் அடிப்படையில் இக்கோரிக்கைகளைத் தாங்கள் உடனே நிறைவேற்ற வேண்டி இம்மனுவைச் சமர்ப்பிகின்றோம்.

சேலம் மாவட்டம், இடையப்பட்டி சிற்றூரைச் சேர்ந்த முருகேசன் (வயது 47) த/பெ. ஆறுமுகம் (மறைவு) என்பவர் கடந்த 22.06.2021 அன்று ஏதாப்பூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவரால் பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையின் போது அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டு ஏதாப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றமிழைத்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குற்றமிழைத்த காவல் அதிகாரி ஏதாப்பூர் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவ்வழக்கை அக்காவல் நிலைய காவல்துறையினர் விசாரித்தால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயமும் நீதியும் கிடைக்காது. எனவே, இவ்வழக்கை உடனடியாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மேலும், இக்கொலை நடந்த போது சம்பவ இடத்தில் இருந்த மூன்று காவலர்களையும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்க வேண்டும்.

தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 10 இலட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. ஆனால், பட்டப்பகலில் சீருடை அணிந்த காவல்துறையினரால் எவ்விதக் குற்றமும் செய்யாத அப்பாவி ஒருவரைக் கொலை செய்தது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மேலும், இந்திய அரசியல் சட்டப்படி இக்கொலைக்குத் தமிழக அரசுக்கு முழுப் பொறுப்பு (Vicarious liability) உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசுக் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியான அரசு வேலை வழங்க வேண்டும். கொல்லப்பட்ட முருகேசனின் மூன்று பிள்ளைகளான கல்லூரியில் முதலாண்டு பட்டப் படிப்புப் படிக்கும் ஜெயபிரியா (18), +2 படிக்கும் ஜெயபிருந்தா (17), 8ஆம் வகுப்பு படிக்கும் கவிப்பிரியன் (13) ஆகியோரது படிப்புச் செலவையும் அரசே ஏற்க வேண்டும்.

மனித உரிமைகளைக் காக்க வேண்டி இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

Thursday, July 15, 2021

மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்!

 

‘புதுச்சேரி வரலாற்றுப் பேரவை’ சார்பில் இக்கோரிக்கை மனுவினைத் தங்களின் மேலான பார்வைக்கும் உரிய நடவடிக்கைக்கும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் ஆடித் திங்கள் திருவாதிரையில் பிறந்தான் என்பதைக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் சான்றுகளுடன் உறுதி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இராசேந்திரசோழன் ஆளுகைக்குட்பட்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய கங்கைகொண்டசோழபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட சிற்றூர்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து, சென்ற 2014ஆம் ஆண்டு இராசேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். ஊர்கூடி தேர் இழுப்பது போல் ஊர்கள் பலவற்றின் மக்கள் ஒன்றுகூடி மாமன்னன் இராசேந்திரசோழன் பெருமைகளை எடுத்துக்கூரும் வகையில் மாபெரும் விழா எடுத்து தமிழினத்திற்குப் பெருமை சேர்த்தனர்.

தற்போது எதிர்வரும் 05.08.2021 நாளன்று, ஆடித் திங்கள் திருவாதிரையில் மாமன்னன் இராசேந்திரசோழனின் பிறந்த நாள் வருகிறது. தொல்லியல், வரலாற்று உணர்வுகளை மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வளர்க்கவும் தமிழக அரசு சார்பில் “மாமன்னன் இராசேந்திரசோழனின் பிறந்த நாள் விழா” மிகச் சிறப்பாக நடத்த வேண்டுமென கங்கைகொண்டசோழபுரம் மற்றும் சுற்றியுள்ள சிற்றூர்புற மக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ள செய்தி அறிந்தோம்.

முடிகொண்டான், கங்கைகொண்டான், கடாரங்கொண்டான் போன்ற எண்ணற்ற விருதுகளைப் பெற்ற இராசேந்திரசோழனின் பெருமைகளை உலகறியும். கப்பற்படைக் கட்டி, கடல் கடந்து சென்று கடாரம் வென்றது தமிழனுக்கு ஆகச் சிறந்த வரலாற்றுப் பெருமையாகும். அறிவுக்கூர்மையுடன் ஆட்சிப் புரிந்த மாமன்னன் இராசேந்திரசோழன் புகழைப் போற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

புதுச்சேரிக்கும் சோழ ஆட்சிக்குமுள்ள தொடர்பு பாகூர் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. திருபுவனை அருகேயுள்ள குண்டாங்குழி மகாதேவர் ஆலயம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் சிறுவடிவம் (Miniature) என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். புதுச்சேரி அருகேயுள்ள மரக்காணம் சோழர் காலத்தில் துறைமுகமாக விளங்கியது. இராசேந்திரசோழனின் பிறந்த நாள் விழா நடத்துவது தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரிக்கும் பெருமையுடையதாகும்.

தமிழக முதலமைச்சராக இருந்த போது கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ் மாமன்னன் இராஜராஜசோழன் பெருமைகளைப் போற்றி விழா எடுத்து பெருமைப்படுத்தி வரலாற்றில் நிலைநிறுத்திக் கொண்டார். தாங்களும் இதேபோல் இராஜராஜசோழனின் மகனான இராசேந்திரசோழனின் பிறந்த நாள் விழா எடுத்து வரலாற்றில் இடம்பெற விழைகிறோம்.

எனவே, தாங்கள் இக்கோரிக்கையைப் பரிசீலித்து தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழனின் பிறந்த நாளைத் தமிழக அரசு சார்பில் அரசு விடுமுறை அளித்து மிகச் சிறப்பாகக் கொண்டாட உரிய நடவடிக்கை எடுத்திட ‘புதுச்சேரி வரலாற்றுப் பேரவை’ சார்பில் பேரன்புடன் வேண்டுகிறோம்.

இவண்,

கோ. சுகுமாரன், தலைவர், புதுச்சேரி வரலாற்றுப் பேரவை.

செயற்குழு உறுப்பினர்கள்:

முனைவர் நா. இளங்கோ, மேனாள் முதல்வர், தாகூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி.

பொறிஞர் இரா. தேவதாசு, தமிழ் வரலாற்று ஆர்வலர்.

ஓவியர் இராஜராஜன், மேனாள் பேராசிரியர், பாரதியார் பல்கலைக்கூடம்.

இரா. சுகுமாரன், கணினித் தமிழ் ஆர்வலர்.

சின்ன. சேகர், மேனாள் ஆசிரியர்.

புதுவைத் தமிழ்நெஞ்சன், தனித்தமிழ் ஆர்வலர்.

இரா. சுகன்யா, சமூக ஆர்வலர்.

Sunday, July 11, 2021

"கொங்கு நாடு" பிரிக்கக் கோருவதன் பின்னணி என்ன?

"கொங்கு நாடு" என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழைத் திட்டித் தீர்த்து பலரும் கோவத்தை வெளிக்காட்டி உள்ளனர். இது என்ன தினமலர் நாளிதழின் சதியா? இல்லை.

இந்திய ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் "கொங்கு நாடு" என்று குறிப்பிட்டது, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டது என்ற பின்னணியோடு இச்செய்தியைப் பார்க்க வேண்டும். அதோடு, "Pushing For Kongu Nadu — BJP Backers Needle Ruling DMK With Separate State Question" என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். இதழான "Swarajyam" ஒரு குறிப்பு எழுதியுள்ளது. 

மொழிவழி மாநிலம் என்பது மகாத்மா காந்தியின் எண்ணம் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திர குகா. 1918-இல் மொழிவழி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று காந்தி கூறியுள்ளார். ஆனால், நேரு 1950 வரையில் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. முதலில் காங்கிரஸ் கமிட்டிகளை மொழிவழியில் பிரித்து அமைக்கிறார் காந்தி. அதற்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளது.  மேலும், மொழிவழி மாநிலம் அமைய அந்தந்தப் பகுதிகளில் நடந்த போராட்டங்களும் உயிர் ஈகங்களும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இதுவொரு நீண்ட வரலாறு. 

இந்திய ஒன்றியத்தைக் கூறுபோடுவது என்பது ஆர்.எஸ்.எஸ். நீண்ட காலமாக வைத்திருக்கும் திட்டம். இந்திய ஒன்றியத்தில் 74 புதிய பிரதேசங்கள் உருவாக்க வேண்டுமென்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை. இதை நோக்கியே, இந்திய ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. ஒருபுறம் காந்தியின் கொள்கையைச் சிதைப்பது. மறுபுறம் தேசிய இன அடையாளத்திற்கு அடித்தளமாக இருக்கும் மொழிவழி மாநிலங்களைக் கூறுபோடுவது. இதன் மூலம் தேசிய இன ஓர்மையைச் சிதைத்து தன் மதவாத அரசியலை நிலைநாட்டுவது. 

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் நான்கு அல்லது ஐந்து பகுதியாக பிரித்து எல்லாவற்றுக்கும் "நாடு" என்ற பெயரைச் சூட்டுவது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட காலத் திட்டம். தற்போது, இத்திட்டத்தைக் "கொங்கு நாடு" என்றிலிருந்து தொடங்க உள்ளனர். இதற்கான கருத்தியல் மோதல் (Ideological conflict) உருவாக்கவும் செய்வார்கள். இப்போழுதே, கொங்கு நாட்டிற்கு ஆதரவாக பேசுகிறவர்கள் சென்னைக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாடு அரசியல் ரீதியாக பாஜகவிற்குச் சாதகமாக இல்லாததும், தமிழர்களிடத்தில் தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்ற உணர்வு வேரூன்றி இருப்பதும் இந்தப் பிரிவினைத் திட்டத்திற்கு மூலமான காரணம்.
ஏற்கனவே, பாமக நிறுவநர் மருத்துவர் இராமதாசு வடநாடு X தென்னாடு என்ற முரணை முன்நிறுத்தி "வட தமிழ்நாடு" தனியாக பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார். சிறியவை சிறந்தது என்று தொடர்ந்து எழுதி வருகிறார். வட தமிழ்நாடு கோரிக்கைக்கு வன்னியர்கள் மத்தியில் கணிசமான ஆதரவும் உள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். அரசியலுக்குத் துணைபுரிகிறது. 

காஷ்மீர் நிலப்பரப்பை மூன்றாக பிரித்ததுடன் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 370-இன்படி வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியையும் நீக்கப்பட்டதற்குக் காஷ்மீர் தவிர்த்து இந்திய ஒன்றியத்தில் பெரும் எதிர்ப்புக் கிளம்பவில்லை என்பதில் இதுபோன்ற மாநிலங்களைக் கூறுபோடுவதில் பாஜகவினர் ஊக்கமடைந்துள்ளனர். 

பாஜக அரசியலுக்குப் பின்னால் கார்ப்பரேட் நலன் அரசியல் இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். "கொங்கு நாடு" அரசியலுக்குப் பின்னால் கார்ப்பரேட்களின் மிகப்பெரும் வலைப்பின்னல் கொண்ட கனிம வள சுரண்டலும் உள்ளது. எட்டு வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்த முடியாமல் போனதும் இப்பிரிவினை நோக்கத்திற்கு முக்கிய காரணம். இதுகுறித்து இன்னமும் ஆய்வு செய்ய வேண்டும். 

தமிழ்நாட்டு திமுக அரசு இந்தப் பிரிவினை முயற்சியை எப்படி தடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். 

Tuesday, July 06, 2021

அரசுப் பள்ளி ஆசிரியர்களை உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.07.2021) விடுத்துள்ள அறிக்கை:

அரசுப் பள்ளி ஆசிரியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசையும் கல்வித்துறையையும் வலியுறுத்துகிறோம்.

கொரோனா தொற்று இரண்டாவது அலையின் காரணமாக அரசு ஊரடங்குப் பிறப்பித்ததால் புதுச்சேரி முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் சென்ற ஜூன் 15 முதல் அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பணிக்குத் திரும்ப வேண்டுமென அரசு உத்தரவிட்டது. ஆனால், ஆசிரியர்களைப் பணிக்குத் திரும்ப அரசு இன்னமும் உத்தரவுப் பிறப்பிக்காததால் அவர்கள் விடுமுறையிலேயே உள்ளனர்.

தற்போது தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கவும், மாணவர்கள் சேர்க்கையும் நடத்தப்பட வேண்டும். அதேபோல், மாணவர்களுக்கு வாட்சாப் மூலம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் விடுமுறையில் உள்ளதால் மேற்சொன்ன பணிகளும், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து வரும் ஏழை எளிய மாணவர்கள்தான் கல்விப் பயில்கின்றனர். இந்நிலையில், ஆசிரியர்களைத் தொடர்ந்து விடுமுறையிலேயே இருப்பது அம்மாணவர்களின் கல்விப் பெருமளவில் பாதிக்கும்.

கொரோனா தொற்றால் மாணவர்கள் முழுக் கல்வியாண்டும் கல்விப் பயில முடியாமல் போய்விட்டது. இந்நிலையில், கொரோனா தொற்றுக் குறைந்தும் பள்ளிகள் திறக்காத சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாட்சாப் மூலமாவது வகுப்புகள் எடுப்பது ஓரளவிற்கு உதவியாக இருக்கும்.

எனவே, அரசுப் பள்ளி ஆசியர்களை உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசையும், கல்வித்துறையையும் வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், கல்வித்துறைச் செயலர், இயக்குநர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

Saturday, July 03, 2021

மதுரை மேலவளவு தியாகிகளின் நினைவிடத்தில் மலரஞ்சலி!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.07.2021) விடுத்துள்ள அறிக்கை:

மதுரை மேலூர் அருகேயுள்ள மேலவளவில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தலித்துகளின் நினைவிடத்தில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1997ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள மேலவளவில் பஞ்சாயத்து தலைவராக இருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட 7 பேர் சாதி வெறியர்களால் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையிலான வழக்கறிஞர் குழு பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக இப்படுகொலை வழக்கை விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நடத்தி குற்றவாளிகள் 17 பேருக்கு ஆயுள் தண்டனைக் கிடைக்க காரணமாக இருந்தது.

வழக்கறிஞர் பொ.இரத்தினம் வழிகாட்டுதலில் செயல்படும் பெளத்த பொதுவுடைமை இயக்கம் சார்பில் மேலவளவு முருகேசன் உள்ளிட்டோர் கொல்லப்பட்ட நினைவு நாளான ஜூன் 30 அன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மேலூர் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், வட்டாட்சியர் பல்வேறு கட்சிகள், அமைப்புகளுக்கு அனுமதி அளித்தும் இந்த இயக்கத்தினருக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், வழக்கறிஞர் பொ.இரத்தினம் இந்த இயக்கத்தைச் சேர்ந்த ஜெயசேகர் மூலம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேலவளவு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்குமாறு உத்தரவிட கோரி வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆனந்து வெங்கடேஷ் கடந்த 01.07.2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் அஞ்சலி செலுத்த பெளத்த பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த 10 பேருக்கு அனுமதி அளிக்குமாறு மேலூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையில் மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 பேரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மேலவளவு, சென்னகரம்பட்டி, எட்டிமங்களம் ஊர்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரியில் இருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், புதுவைத் தமிழ்நெஞ்சன், இரா.சுகன்யா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலவளவு தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

Tuesday, June 22, 2021

இலங்கையில் சீனா துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.06.2021) விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை அம்பாந்தோட்டை பகுதியில் சீன அரசு துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்திய பெருங்கடலில் சூயஸ் கால்வாய் அருகேயுள்ள மலாக்கா நீரிணைப்புக்கு அருகில் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது. இத்துறைமுகத்தை சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு 1.12 மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. இத்துறைமுகம் 4500 எண்ணெய் கப்பல்கள் உட்பட 36 ஆயிரம் கப்பல்களைக் கையாளும் வசதி உடையது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டியுள்ள 269 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தி, அதில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக சீனாவுக்கு வழங்கிட இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் சீனா கடற்படைத்தளம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் அமையுமானால், அது இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். சீனா இலங்கைக் கடற்பகுதியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதால் தமிழகத்திற்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இறுதிப் போரின் போது ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு சீனா இராணுவ ரீதியாக பெருமளவில் உதவியது. தற்போது தமிழகம் அருகில் சீன துறைமுகம் அமைவது தமிழகத்தின் நலனுக்கு எதிரானது.

இச்சூழலில் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட தமிழ்நாட்டின் பகுதியான கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மீனவர்களின் நலனைக் காக்கவும், தமிழ்நாட்டின் மீதான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் உதவும்.

எனவே, இலங்கை அம்பாந்தோட்டை பகுதியில் சீன அரசு துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

Friday, June 18, 2021

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.06.2021) முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து அளித்த மனு:

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கடந்த 2015ஆம் ஆண்டு தாங்கள் முதலமைச்சராக இருந்த போது உருவாக்கப்பட்டது. ஆனால், அத்துறையை செயல்படுத்த உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, அத்துறைக்கான இயக்குநர் பணியிடம் உருவாக்க அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த கோப்பிற்கு இதுவரையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. எனவே, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு இயக்குநர் உள்ளிட்ட பணியாளர்களை நியமித்து அத்துறையை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்.

மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக நியமிக்கப்படாததால் ஆணையத்தின் செயல்பாடுகள் முடங்கிப் போயுள்ளன. எனவே, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குப் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனே நியமிக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கான சிறப்புக்கூறு திட்ட நிதிகள் முறையாக, ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்குச் செயல்படுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கான பின்னடைவுப் பணியிடங்கள் (Backlog) அனைத்தையும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

தமிழகத்தில் அருந்ததிய இன மக்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள்ஒதுக்கீடு சட்டப்படி செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியிலும் அருந்ததிய இன மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

பழங்குடியின மலைக்குறவன், காட்டுநாயக்கன், எருகுலா, குருமன்ஸ் ஆகிய சமூகங்களைப் பட்டியலின பழங்குடியினராக அங்கீகரித்து மத்திய அரசு அரசாணை வெளியிட ஆவன செய்ய வேண்டும். வில்லியனூர் பெருமாள்புரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பழங்குடியினர் 23 குடும்பங்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும்.

முஸ்லிம் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்படும் 2 சதவீத இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு வாரிய சொத்துக்களை மீட்டு அவற்றை முஸ்லிம் மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.

Monday, June 14, 2021

தமிழகத்தில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்!

பல்லாண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமிழக முதல் அமைச்சருக்குக் கூட்டாக எழுதிய கடிதம்:

ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள தங்களுக்கு, எங்கள் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய, இந்த கூட்டு மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கிறோம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு சிறைவாசிகளின் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை நாங்கள் அறிவோம். தங்கள் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சிக் குழுவொன்று, குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து, எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்தக் கோருகிறோம்.

75 வயதைக் கடந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் 1987ம் ஆண்டு முதல் (ஏறத்தாழ 34 ஆண்டுகளாக) சிறையில் இருந்து வருகிறார். அவரோடு ஆண்டியப்பன், பெருமாள் போன்றவர்களும் சிறையில் இருக்கிறார்கள்.

அது போல, ஹாரூன் பாஷா, யாசுதீன் உள்ளிட்ட 19 பேர், தண்டனைக் கைதிகளாக கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைகளில் உள்ளனர். கடந்த காலங்களில், மாநில அரசு வழங்கிய பொதுமன்னிப்பில் இவர்கள் முன்விடுதலை செய்யப்படவில்லை.

வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட முகமது அன்சாரி, தாஜுதீன் உள்ளிட்ட 16 பேர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

கைதிகளின் வயோதிகம், உடல்நிலை, குடும்பச் சூழல், சிறையில் கைதிகளின் நடத்தை போன்றவைகளை கணக்கில் கொண்டு இவர்கள் அனைவரையும் முன்விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு முழு உரிமை உள்ளது.

அறிவுரைக் கழகங்கள் பரிந்துரையின் அடிப்படையில் கைதிகள் முன்விடுதலை செய்யப்படுவதில் சுணக்கம் இருக்கிறது என்று கருதுகிறோம். சிறைவாசிகளை விடுவிப்பதில் இருக்கும் பாகுபாடு மற்றும் அது தொடர்பான விதிகள், பல சிறைவாசிகளின் விடுதலைக்கு தடையாக இருக்கின்றன.

குற்றவியல் நீதியின் முக்கிய நோக்கம், தண்டனைப் பெற்ற குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது. ஆனால், தங்களது வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்தவர்களை பல்வேறு காரணங்களுக்காக விடுவிக்க மறுப்பது சரியல்ல என்று கருதுகிறோம். ஆயுள் தண்டனை பெற்றவர்களை ஆயுள் முழுவதும் சிறையில் வைத்திருப்பது என்பது நீதிக்கு எதிரானது.

தங்கள் வாழ்வின் இளமையான காலத்தின் பெரும்பகுதியை சிறையில் கழித்தவர்கள், இறுதிக் காலத்திலாவது தங்கள் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஆசையாகும்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் அனைவரையும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்தக்காலத்தில், எந்தவித பாகுபாடும் காட்டாது, விடுதலை செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

மிக்க நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

(ஒ-ம்) இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

(ஒ-ம்) கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

(ஒ-ம்) கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL)-தமிழ்நாடு & புதுச்சேரி.

(ஒ-ம்) தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

(ஒ-ம்). அ.மார்க்ஸ், (மனித உரிமைகளுக்கான தேசியக் கூட்டமைப்பு-NCHRO)

(ஒ-ம்) கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு

(ஒ-ம்) அப்துல் ரஹ்மான், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்

(ஒ-ம்) எஸ்.செல்வ கோமதி, நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் பவுண்டேஷன்

(ஒ-ம்) அ.மகபூப் பாஷா, சோகோ அறக்கட்டளை

(ஒ-ம்) ஹென்றி திபேன், மக்கள் கண்காணிப்பகம்

(ஒ-ம்) வி.பி.குணசேகரன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்

(ஒ-ம்) விடுதலை இராசேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம்

(ஒ-ம்) கோவை இராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

(ஒ-ம்) U.A.அன்புராஜ், முன்னாள் ஆயுள் தண்டனை சிறைவாசி

Saturday, June 12, 2021

52 நாட்களாக நீதி வேண்டி பிணவறையில் உயிரற்ற உடல்..

 திருநெல்வேலி மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ (வயது 27). சட்டக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர். சென்ற 11.04.2021 அன்று இவர் உட்பட நான்கு பேர் மீது களக்காடு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் இவர்களைப் பாளையம்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றியுள்ளனர்.

சென்ற 22.04.2021 அன்று சிறையில் முத்துமனோ (27), சந்திரசேகர் (22), கண்ணன் (23), மாதவன் (19) ஆகியோர் மீது சிறைவாசிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் நால்வரும் படுகாயம் அடைந்தனர். அனைவரும் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முத்து மனோ திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்துபோனார்.

இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலைய போலீசார் சிறைவாசிகளான ஜேக்கப் (29), மாடசாமி (25), ராம் (எ) ராமமூர்த்தி (24), மகாராஜா (28), சந்தான மாரிமுத்து (எ) கொக்கி குமார், கந்தசாமி (22) ஆகியோர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இக்கொலைக்குப் பின்னணியாக இருந்த சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அப்போழுது 6 சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜெயிலர் பரசுராமன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைவாசிகள் சாதி அடிப்படையிலேயே அடைத்து வைத்துள்ளனர். சமூகத்தில் எப்படி சாதியப் பாகுபாடும், மோதல்களும் உள்ளது போல், சிறைச்சாலைகளிலும் இந்நிலையே உள்ளது. முத்து மனோ உள்ளிட்ட நால்வரை விசாரணை சிறைவாசிகள் பிளாக்கில் அடைத்து வைக்காமல், தண்டனை சிறைவாசிகள் உள்ள ‘ஏ’ பிளாக்கில் அடைத்துள்ளனர். இதில் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த குற்றவாளிகளை அடைத்து வைத்துள்ளனர். இதனால்தான், முத்து மனோ உள்ளிட்ட நால்வர் மீதான தாக்குதல் எளிதாகியுள்ளது. இத்தாக்குதலுக்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் சாதியமும் ஒரு காரணமாக உள்ளது. இதற்குப் பின்னால் காவல்துறையினர் சிறைத்துறையினர் என பலரின் பெரும் சதித்திட்டம் இருப்பதாகவே தெரிகிறது.

இந்நிலையில், கீழ்காணும் கேள்விகள் எழுகிறது.

1) ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் இருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றியது ஏன்?

2) பாளையங்கோட்டை சிறையில் விசாரணை சிறைவாசிகள் பிளாக்கில் அடைக்காமல், தண்டனைச் சிறைவாசிகள் ‘ஏ’ பிளாக்கில் அடைத்தது ஏன்?

3) முத்து மனோ உள்ளிட்ட நால்வர் பாளையங்கோட்டை சிறைக்கு வருவது ‘ஏ’ பிளாக்கில் இருந்த சிறைவாசிகளுக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி?

4) சிறையில் கல்லால் தாக்கிக் கொலை செய்யும் அளவுக்கு பெரிய கற்கள் இருந்தது எப்படி?

5) முத்து மனோ உடலில் 28 காயங்கள் உள்ளதால் கற்களால் தாக்கியதால் இறந்தாரா? அல்லது வேறு ஆயுதங்களால் தாக்கினார்களா?

இக்கொலை நடந்த நாள் முதல் வாகைக்குளம் மக்கள் நீதிக் கேட்டுப் போராடி வருகின்றனர். முத்து மனோ உடற்கூறாய்வு முடிந்து 52 நாட்கள் ஆகியும் உடலைப் பெற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து உறுதியாக போராடி வருகின்றனர். முத்து மனோவின் தந்தையார் பாவனாசம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் இக்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும். நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

இந்நிலையில், இக்கொலை வழக்கின் புலன்விசாரணை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் சிறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அரசுப் பணி வழங்க வேண்டும் என்பதுதான் போராடும் வாகைக்குளம் மக்கள், சமூக இயக்கங்களின் கோரிக்கைகள்.

போராடும் மக்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசும், காவல்துறையும் உடனே நிறைவேற்ற வேண்டும்.

முத்து மனோவின் உயிரற்ற உடல் 52 நாட்களாக நீதி வேண்டி பிணவறையில் காத்துக் கிடக்கிறது.

Sunday, June 06, 2021

+2 தேர்வு முற்றிலும் ரத்து: கிராமப்புற மாணவர்களுக்கு அநீதியானது!

தமிழ்நாடு அரசின் +2 தேர்வு ரத்து என்ற அறிவிப்பு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்தானது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு (NEET, JEE) மூலம் உயர்கல்விச் சேர்க்கை நடத்தாமல் இருக்கவும் முடியாது. மத்திய பாஜக அரசு இதில் உறுதியாக இருக்கிறது. கல்வி மத்திய பட்டியலில் இருப்பதால் மாநில அரசு தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது.

நீட் நுழைவுத் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீண்ட காலம் ஆகும். அதன் பின் தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையின் மீது கொள்கை முடிவெடுத்து செயல்படுத்த இன்னும் காலதாமதம் ஏற்படும். இதுவொரு வகையில் நீட்டை தடுக்க சட்ட ரீதியாக எடுக்கும் முயற்சியாக கருதினாலும், அது உடனே நடக்கக்கூடிய சாத்தியக்கூறு இல்லை.

நுழைவுத் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவித்தார் பிரதமர் மோடி என்ற கல்வியாளர்களின் கருத்தும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு +2 தேர்வை ரத்து செய்திருப்பது ஏற்புடையதல்ல. நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே சேர்க்கை நடக்குமானால் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் நிலைக் கவலைக்குரியதாகும். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு ஓரளவுக்குப் பயனளித்தாலும் அது போதுமானதல்ல.

மதிப்பெண் போடுவதில் நிறைய குளறுபடிகள், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. அரசிடம் மதிப்பெண் போடுவது பற்றி ஒரு தெளிவான கொள்கை இதுவரையில் இல்லை. இதில் அரசுக்குப் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் வரும். பள்ளிகளிடம் மதிப்பெண் போடும் பணியை ஒப்படைத்தால், அதில் சமநிலை இருக்க வாய்ப்பில்லை. இது மேலும் மாணவர்களின் கல்வியையும் மனநிலையையும் பாதிக்கக்கூடும்.

கல்வியாளர்கள் கூறுவது போல தேர்வு வைத்து, அதன் அடிப்படையில் உயர்கல்விச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். குறைந்த பாடத் திட்டத்துடனும், நேரம் குறைத்தும் தேர்வு நடத்தி இருக்கலாம். அதிக தேர்வு மையங்களை உருவாக்கி, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தி இருக்கலாம். விடைத்தாள் திருத்தம்கூட சற்று தாராளமாக திருத்தி இருக்கலாம்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டதற்கு 60% பேர் தேர்வு நடத்த வேண்டுமென கூறியுள்ளனர். அதேபோல், அகரம் அமைப்பு சார்பில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600 மாணவர்களிடம் கருத்துக் கேட்டதற்குத் தேர்வு நடத்த வேண்டுமென 67% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த 600 மாணவர்களும் அகரம் அமைப்பிடம் கல்வி நிதியுதவிக் கேட்டு விண்ணப்பித்த ஏழை, எளிய மாணவர்கள். அதோடு, இதுகுறித்து தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தேர்வு நடத்த வேண்டுமென பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

தற்போதைய முடிவு மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள கூடாது என்று தமிழ்நாடு அரசு எடுத்த முடிவாகவே தெரிகிறது. மேலும், இம்முடிவு தனியார் பள்ளிகள் போன்ற மேல்தட்டினர் பயிலும் பள்ளிகளுக்கு உவப்பாகவும் வாய்ப்பாகவும் அமையும். நுழைவுத் தேர்வு என்ற ஒற்றை இலக்கில் மாணவர்களைத் தயார்படுத்தி உயர்கல்வியைக் கைப்பற்றும் சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிகளின் நோக்கத்திற்கு வலுசேர்ப்பதாகும்.

ஏற்கனவே கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விநிலை மிகவும் பின்தங்கிய நிலையியே உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இம்முடிவு கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும் பாதகமாகவே அமையும்.

இந்தச் சூழ்நிலையில், கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியில் குறைந்தது 25% இடஒதுக்கீடு கோருவது சரியானதாக இருக்கும் எனப் பேராசிரியர் பிரபா.கல்விமணி கூறினார். இந்த இடஒதுக்கீடு நிதியுதவி பெரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றார். இத்தேர்வு ரத்து அறிவிப்பு எப்படி கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்குத் தடையாக இருக்கும் என்பதை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கவலையுடன் விளக்கினார்.

கிராமப்புற ஏழை, எளிய, அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் காக்க நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது. இதுகுறித்து அனைத்து கட்சிகளும் ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஐயா தேங்காய்த்திட்டு காளியப்பன் காலமானார்!

2007-இல் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு 2600 கோடி ரூபாய் மதிப்பிலான தனியார் துறைமுக விரிவாக்கத் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தை எதிர்த்து மிகப் பெரும் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் தேங்காய்த்திட்டு மக்களின் பங்களிப்பு அளப்பரியது. ‘தேங்காய்த்திட்டு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு’ உருவாக்கப்பட்டு அதற்குத் தலைவவராக காளியப்பன் இருந்தார். அழகிய அவ்வூரின் பெரிய மனிதர் அவர்.

தேங்காய்த்திட்டு புதுச்சேரி விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்த ஊர். பொதுவுடமைத் தலைவரும், நாடறிந்த தொழிற்சங்கத் தலைவருமான டி.கே.இராமானுஜம், திமுக தலைவர் சீத்தா வேதநாயகம், தமிழக்கனல் இராமகிருட்டினன் எனப் பல போராளிகள், சான்றோர்கள் வாழ்ந்த ஊர்.

செழிப்புமிக்க இவ்வூரைக் கையகப்படுத்தி துறைமுகம் கொண்டு வரவும், கேளிக்கைகளை அரங்கேற்றிட ஐந்து நட்சத்திர விடுதிகள் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. பழைய துறைமுகம் உள்ள 153 ஏக்கர் நிலத்தைக் குறைந்த வாடகைக்குத் தனியார் நிறுவனத்திற்குக் குத்தகைக்குக் கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இத்திட்டத்தைச் செயல்படுத்த அப்போதைய முதலமைச்சர் ரங்கசாமி, துறைமுகத் துறை அமைச்சர் வல்சராஜ் உள்ளிட்டோர் முழுவீச்சில் களமிறங்கினர்.

சமூக இயக்கங்களை ஒருங்கிணைத்து தோழர் சி.எச்.பாலமோகனன் ஒருங்கிணைப்பில் ‘புதுச்சேரி மக்கள் பாதுகாப்புக் குழு’ உருவாக்கப்பட்டது. இதற்கு அப்போது ஆண்ட காங்கிரஸ் கட்சி தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்தன. தேங்காய்த்திட்டு மக்களைத் துடிப்புமிகு இளைஞராக இருந்த பாஸ்கரன் ஒருங்கிணைத்தார். உடன் பெருந்துணையாக லோகு.அய்யப்பன் இருந்தார். அதற்கு அனைத்து வகையிலும் பக்க பலமாக இருந்தவர் ஐயா காளியப்பன்.

துறைமுக விரிவாக்கத்தத் திட்டத்தைப் பெற்ற தனியார் நிறுவனம் பழைய துறைமுக முகப்பில் வைத்த பெயர்ப் பலகை அடித்து நொறுக்கப்பட்டது. அரசின் கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்க அரங்கில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த விடாமல் தடுக்கப்பட்டது. புதுச்சேரியே குலுங்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

தேங்காய்த்திட்டு மக்கள் நடத்திய அமைச்சர் வல்சராஜ் உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் காவல்துறையின் தவறான அணுகுமுறையால் பெரும் வன்முறையில் முடிந்தது. காவல்துறையின் தடியடியால் ஏராளமான மக்களும், முன்னின்ற போராட்டக்காரர்களும் படுகாயமடைந்தனர். தேங்காய்த்திட்டு மக்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டன. இப்போராட்டத்தின் போது காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஐயா காளியப்பன், சு.பாஸ்கரன், லோகு.அய்யப்பன், கோ.சுகுமாரன் என 18 பேர் மீது இ.த.ச. 307 பிரிவின்கீழ் கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டது.

இப்போராட்டத்தின் உச்சகட்டமாக சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மேதா பட்கர் தேங்காய்த்திட்டு ஊரில் தங்கி போராடிய மக்களை வீடு வீடாக சென்று பாராட்டினார். போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு கண்டு மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார்.

இப்போராட்டத்தின் விளைவாக துறைமுக விரிவாக்கத் திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு அடிபணிந்தது. இப்போராட்டத்தில் தேங்காய்த்திட்டு மக்கள் குறிப்பாக பெண்களின் பங்கு முகாமையானது. வீரஞ்செறிந்த இப்போராட்டத்தில் துணிவுடன் பெண்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

ஐயா காளியப்பன் எங்கள் மூவரைக் கலக்காமல் எந்த முடிவும் எடுக்கமாட்டார். எங்களைப் பார்த்து ‘செல்வத்திற்கு பாஸ்கரன், வீரத்திற்கு அய்யப்பன், அறிவுக்கு சுகுமாரன்’ என்றுகூறிப் பாராட்டுவார். விருந்தோம்பல் என்றால் ஐயா காளியப்பன் குடும்பத்தைத்தான் எடுத்துக்காட்டாக கூற முடியும். அவரது துணைவியார் அஞ்சலை (எ) அஞ்சுகம் அன்பும் அரவணைப்புடனும் எங்களைக் கவனிப்பார்.

இப்போராட்டம் எத்தனையோ மகத்தான ஆளுமைகள், கட்சியினர், இயக்கத்தினர் கலந்துகொண்டனர். அவர்களின் பெயர்களை எல்லாம் இங்குக் குறிப்பிடவில்லை. தனியே ஒரு நூல் எழுத வேண்டும். அதில் விரிவாகக் குறிப்பிடுகிறேன்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் தோழர் லோகு.அய்யப்பன் போராடிய மக்கள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் அனைவர் மீதான வழக்குகளை ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

இப்போராட்டத்தின் போதுதான் ஐயா காளியப்பன் உடன் நெருங்கிப் பழகினேன். போராட்டத்தைத் திட்டமிடுவதும், அதைச் செயல்படுத்துவதும் கண்டுப் பூரிப்படைவார். இப்படியான ஒரு பெரிய மனிதரை கொரோனா விட்டு வைக்கவில்லை. ஈடு செய்ய முடியாத இழப்பு.

இறப்பிற்குச் சென்று அழுது மனதை ஆற்றுப்படுத்த முடியாத சூழல் துயரத்தைக் கூட்டுகிறது.

ஐயா காளியப்பன் இழப்பால் துயருறும் அவரது துணைவியார், பிள்ளைகள், உறவினர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Friday, May 28, 2021

கச்சநத்தம் மூவர் படுகொலை: நினைவஞ்சலி..

28.05.2018 அன்று சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவரை அகமுடையோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.

கச்சநத்தத்தில் உள்ள கறுப்பசாமி கோயில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினருடையது. 25.05.2018 அன்று நடந்த இக்கோயில் திருவிழா ஒட்டி ‘காலாஞ்சி’ அளிப்பது குறித்து அகமுடையோர், தேவேந்திரகுல வேளாளர் சமூகங்களுகிடையே முன்பகை இருந்து வந்துள்ளது. அதாவது கச்சநத்தம் ஊரைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவருக்குக் கோயிலில் இருந்து பூ, தேங்காய், பழம் கொண்டு சென்று அவரது வீட்டிற்கே அளிக்கும் முதல் மரியாதை செய்யவில்லை என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த முதல் மரியாதையைத்தான் ‘காலாஞ்சி’ என்று அழைக்கின்றனர். ‘காலாஞ்சி’ பற்றி திருமூலநாயினார் இயற்றிய “பத்தாம்திருமுறையென்னும் திருமந்திரம் மூவாயிரம்” நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்பகையால், 26.05.2018 அன்று மேற்சொன்ன சந்திரகுமார் அவரது மகன் சுமன் ஆகியோர் தங்களுக்கு முதல் மரியாதை அளிக்காதது குறித்து தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அருவாளை எடுத்துவந்து வெட்ட முயன்றுள்ளனர். அப்போது ஊர்காரர்கள் தடுத்ததால் பிரச்சனை அத்தோடு முடிந்தது.

இதுகுறித்து தேவேந்திரகுல வேளாளர் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அன்று இரவு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சண்முகநாதன், தேவேந்திரன் ஆகியோரிடம் மேற்சொன்ன சந்திரகுமார் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ‘எங்களுக்கு மரியாதை செய்யாமல் கறி விருந்து சாப்பிடுகிறீர்களா’ எனச் சாதியைக் குறிப்பிட்டுத் திட்டியுள்ளார். அப்போது அவ்வழியே வந்த திருப்பாச்சேத்தி போலீசார் சந்திரகுமாரை காவல்நிலையம் அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்துள்ளனர்.

மறுநாள் 27.05.2018 அன்று, கோயிலில் உச்சகால பூசை முடிந்தவுடன் தேவேந்திரகுல வேளாளர்கள் கூட்டம் போட்டு, சந்திரகுமாரை போலீசார் பிடித்துச் சென்றதால் பெரிய பிரச்சனை வரும் என்று கருதி பழையனூர் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளனர். போலீசாரும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

மறுநாள் 28.05.2018 அன்று இரவு சுமார் 9 மணியளவில், ஏற்கனவே முதல் மரியாதை தரவில்லை என்ற முன்பகையோடு இருந்தவர்கள் கத்தி, அருவாள் போன்ற ஆயுதங்களோடு கச்சநத்தம் தேவேந்திரகுல வேளாளர் பகுதிக்குள் நுழைந்து மேற்சொன்ன சண்முகநாதன் உள்ளிட்டவர்களை வெட்டிச் சாய்த்தனர். இதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகரன் ஆகியோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். போலீசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படுகொலை சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.

இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்த பழையனூர் காவல்நிலையப் போலீசார் 3 பெண்கள் உட்பட 33 பேர் மற்றும் 4 சிறார்கள் மீது வழக்குப் பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர். அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கச்சநத்தம் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் செல்வாக்கு இருந்ததால், பாதிக்கப்பட்ட மக்களை மூத்த தோழர் இரா.நல்லக்கண்ணு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். முற்போக்குச் சிந்தனையுடைய இயக்கங்களைச் சேர்ந்தோரும் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

இவ்வழக்கில் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி பாதிக்கப்பட்டோர் தேர்வின்படி மூத்த வழக்கறிஞர் சின்னராசு அரசு சிறப்பு வழக்கறிஞராக (Special Public Prosecutor) நியமிக்கப்பட்டார். அவருக்குத் துணையாக மனித உரிமை ஆர்வலரும், உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அயராது போராடி வருபவருமான தோழர் வழக்கறிஞர் பகத்சிங் உடன் இருந்து பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கப் பாடுபட்டு வருகிறார்.

2019 நவம்பர் மாதம் தொடக்கத்தில் மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வருவது குறித்து கூறினார். விசாரணையின் முதல் நாள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும், நீங்களும் வாருங்கள் என்று கூறினார். நானும் சரியென்று கூறினேன். வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற இருந்தது.

சென்ற 06.11.2019 அன்று வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், சோகோ பாட்சா, அழகுமணி ஆகியோர் மதுரையில் இருந்து வந்தனர். நானும் சிவகங்கை சென்றேன். சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த உடனேயே ஒரு மூத்த வழக்கறிஞர் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுக்குக் கைக் கொடுத்து “You are a legend sir” என்று கூறிச் சென்றார். அவர் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராகும் மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன்.

வழக்கு விசாரணை நடைபெற இருந்த நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் சின்னராசு, வழக்கறிஞர் பகத்சிங்குடன் வந்தார். 24 ஆண்டுகள் கழித்து அந்த மீசையின் கம்பீரம் குறையாத வழக்கறிஞர் சின்னராசு அவர்களைக் கண்டேன். கொடைக்கானல் தொலைக்காட்சி வெடிகுண்டு வழக்கில் தோழர் பொழிலன் உள்ளிட்ட சிலருக்கு வழக்கறிஞர் அவர். 1997-இல் திண்டுக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பு நாளன்று அவரைப் பார்த்த பின்னர், அப்போதுதான் பார்த்தேன்.

வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. நாங்கள் அனைவரும் நீதிமன்றத்தில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தோம். சாட்சிகள் நடந்த கொடூரமான மூன்று படுகொலைச் சம்பவங்களை வாக்குமூலமாக அளித்தனர். மதுரையின் அனைத்து மூத்த வழக்கறிஞர்களும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராயினர். நாங்கள் நீதிமன்றத்தில் இருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பின்னர், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றப் பொறுப்பு அப்போது மகளிர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி ப.உ.செம்மல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இவ்வழக்கின் விசாரணையை நாள்தோறும் நடத்தினார். வழக்கு இறுதிக் கட்ட விசாரணை நிலைக்கு எட்டிய நிலையில் நீதிபதி ப.உ.செம்மல் கடலூர் மாவட்ட நிரந்திர மக்கள் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். வழக்கு விசாரணை அவர் விட்டுச் சென்ற நிலையிலேயே இன்றும் உள்ளது.

உடற்கூறாய்வு அறிக்கையின்படி இறந்துப் போன ஒவ்வொருவர் உடலிலும் 50க்கும் மேற்பட்ட ஆழமான காயங்கள். அவ்வளவுக் கொடூரமான படுகொலைகள்.

இன்று கச்சநத்தம் சாதிய படுகொலையில் உயிரிழந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகியோரின் நினைவு நாள். இப்பதிவை எழுதும் இந்நேரத்தில்தான் அந்த மூவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

என் நெஞ்சார்ந்த நினைவஞ்சலி..

Thursday, May 27, 2021

மூத்த ஓவியர் தேசிய விருதாளர் பெ.மாணிக்கம் காலமானார்!

புதுச்சேரியின் மூத்த ஓவியரும், தேசிய விருது பெற்றவருமான ஓவியர் பெ.மாணிக்கம் இன்று காலமானார்.

புதுச்சேரி பால்பவனில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஓவியக் கலையைப் பயிற்றுவித்தார்.

புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் சில ஆண்டுகள் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி தற்கால ஓவியக் கலைத்தளத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.

1942-இல் பழனி அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் பிறந்தார். 1960களில் சென்னை ஓவியக் கல்லூரியில், புகழ்பெற்ற கே.சி.எஸ்.பணிக்கரின் கீழ் மாணவராகப் பயிற்சிப் பெற்றார்.

ஓவியரும் நடிகருமான சிவக்குமார், ஓவியர் ஆதிமூலம், சிற்பி தட்சிணாமூர்த்தி ஆகியோருடன் இணைந்து ஓவியக் கலையின் பல்வேறு பரிணாமங்களைப் பயிற்சியாக பெற்றறிந்தார். ஆறு ஆண்டுகள் சென்னையில் ஓவியப் பட்டயம் பெற்றபின், புதுச்சேரி அரசின் பால்பவனில் ஓவிய ஆசிரியராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

இந்திய அளவில் பல்வேறு ஓவியக் கண்காட்சிகள், கலை முகாம்களில் பங்கேற்று தனது ஓவியத்திறனைக் கூர்மைப்படுத்திக்கொண்டார். பாரம்பரியக் கலைகளான தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை, ஆடல் கலைகள் உள்ளிட்ட தொண்மைக் கலைகளை நவீன ஓவியங்களாக்கி தனித்தன்மையோடு விளங்கினார்.

டெல்லி லலித்கலா அகாடமியின் புதுச்சேரி பிரதிநிதியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியபோது, புதுச்சேரியைச் சேர்ந்த பல ஆசிரியர்கள், இளம் கலைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பல்வேறு ஓவிய முகாம்களிலும், கலைக் கண்காட்சிகளிலும் பங்கேற்கும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார்.

ஓவியம் தவிர இலக்கியம், இசை, நாடகம் போன்ற துறைகளிலும் அதீத ஈடுபாடு கொண்டவர். பல ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் உள்ளிட்ட பலரோடு தொடர்பிலும், புதுச்சேரி கலைத்தளத்தின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றினார். இவரது கலைத்திறனைப் பாராட்டி புதுச்சேரி அரசு கலைமாமணி விருதும், டெல்லி லலித்கலா அகாடமியின் தேசிய விருதும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

‘ஓவியக்கலை நுட்பங்கள்’ எனும் நூலும், எண்ணற்ற கட்டுரைகளும், பாரதியார் பல்கலைக்கூடத்தில் 2002ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஓவியப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை சிறு நூலாகவும் எழுதியுள்ளார்.

அவருடைய துணைவியாரின் இறப்புக்குப் பிறகு தூத்துக்குடியில் மகள் வீட்டில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வந்தார். இந்நிலையில், இன்று 26.05.2021 காலை காலமானார்.

ஓவியர் பெ.மாணிக்கம் அவர்களின் இழப்பு புதுச்சேரிக்குப் பேரிழப்பு என்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஓவியர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, May 10, 2021

நீதிநாயகம் டி.கே.பாசு காலமானார்: ஆழ்ந்த அஞ்சலியும் இரங்கலும்..

சென்ற 08.05.2021 அன்று கொல்கத்தா உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டி.கே.பாசு காலமானார். மனித உரிமையில் ஆர்வமுள்ளவர்கள் இவரது பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது.

காவல் மரணங்களைத் தடுக்க உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பின் மனுதாரர் இவர். D.K.Basu Vs State of West Bengal (AIR 1997 SC 610). புகழ்ப் பெற்ற இவ்வழக்கு “டி.கே.பாசு வழக்கு” என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

கடந்த 26.08.1986 அன்று, மேற்குவங்க சட்ட உதவிகள் அரசு சாரா அமைப்பின் செயல் தலைவர் என்ற முறையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை டி.கே.பாசு எழுதுகிறார். அதில் கொல்கத்தாவில் அதிக அளவில் காவல் மரணங்கள் நிகழ்வது குறித்து ‘தி டெலிகிராப்’ இதழ் வெளியிட்ட செய்திகளைக் குறிப்பிட்டு, இக்கடிதத்தையே ரிட் மனுவாக (பொதுநல வழக்கு) ஏற்று விசாரிக்க வேண்டுமெனக் கோருகிறார்.

மேலும், காவல் மரண வழக்குகள் முறையாக நடத்தப்படுவதில்லை, இவ்வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், இக்குற்றங்கள் “செழிக்கின்றன” எனவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். அதோடு காவல் மரணங்கள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து “custodial jurisprudence” உருவாக்கவும் கோரியிருந்தார்.

கடந்த 09.02.1987 அன்று இக்கடிதத்தை ரிட் மனுவாக ஏற்று உச்சநீதிமன்ற அபோதைய தலைமை நீதிபதி பி.என்.பகவதி அவர்கள் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதேபோல், கடந்த 29.07.1987 அன்று அலிகார் வழக்கறிஞர் அசோக்குமார் ஜொகிரி பில்கானா என்ற ஊரில் காவல் நிலையத்தில் மரணமடைந்த மகேஷ் பிகாரி என்பவர் கொல்லப்பட்டதை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதனையும் மேற்சொன்ன டி.கே.பாசு வழக்கோடு சேர்த்து விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் கடந்த 14.08.1987 அன்று கீழ்க்காணும் உத்தரவைப் பிறப்பிக்கிறது:

“ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. தற்போது இக்குற்றச்சாட்டுகளான காவல் மரணங்கள், அதாவது செய்தித்தாள்கள் குறிப்பிடுவது போல லாக்-அப் மரணங்களின் அலைவரிசையும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அணுகுவதற்கு தற்போது போதிய கட்டுமானங்கள் (machinery) இல்லை. இக்கேள்வி பல்வேறு மாநிலங்கள் உள்ளடக்கிய அகில இந்திய அளவிலானது என்பதால், இதில் பல்வேறு மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் என்ன சொல்ல விரும்புகின்றனர் என்பதையும் பார்ப்போம். அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பவும், அதேபோல், இந்திய சட்ட ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி, இதுகுறித்து உரிய ஆலோசனைகளை இன்றைய நாளில் இருந்து இரண்டு மாதத்திற்குள் அளிக்க வேண்டுவோம்.”

இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கம், ஒரிசா, அசாம், இமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா, தமிழ்நாடு, மேகாலயா, மகாராஷ்ட்ரா, மணிப்பூர், யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகியவைத் தங்களது கருத்துக்களை உறுதிமொழிப் பத்திரமாக தாக்கல் செய்தன. இந்திய சட்ட ஆணையமும் தனது ஆலோசனைகளைத் தாக்கல் செய்தன. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.எம்.சிங்கி நீதிமன்றத்திற்கு உதவ நடுநிலை அறிவுரையாளராக (Amicus Curiae) நியமிக்கப்பட்டார்.

இவ்வழக்கில், கடந்த 18.12.1997 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குல்தீப் சிங், ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான இருநீதிபதிகள் அமர்வு வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை நீதிநாயகம் ஏ.எஸ்.ஆனந்த் எழுதினார். அத்தீர்ப்பில், ஒருவரைக் கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய 10 கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. இக்கட்டளைகளைக் காவல்நிலையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், இக்கட்டளைகளைப் பின்பற்றாத காவல் அதிகாரிகள் மீது அந்தந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து தண்டனைப் பெற்றுத் தரவும் உத்தரவிடப்பட்டது.

உச்சநீதிமன்றக் கட்டளைகளில் முகாமையானவை:

1) கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2) கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

3) கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4) கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5) தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்.

6) கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7) கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைச் செய்ய வேண்டும்.

8) கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

பின்னாளில் இந்தக் கட்டளைகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலேயே சேர்க்கப்பட்டன.

இந்தத் தீர்ப்பினால் காவல் மரணங்கள் முற்றிலும் ஒழியவில்லை என்றாலும், பெருமளவில் குறைந்தன. இதற்கு வித்திட்டவர்தான் “டி.கே.பாசு வழக்குப் புகழ்” நீதிநாயகம் டி.கே.பாசு அவர்கள். நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு சிறைவாசியின் கடித்தத்தையே வழக்காக ஏற்று சிறைவாசிகளுக்கு உரிமைகள் வழங்கி தீர்ப்பு வழங்கினார். அதே போல ஒரு நீதிபதியின் கடிதத்தை வழக்காக ஏற்றவர் உச்சநீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி நீதிநாயகம் பி.என்.பகவதி.

நீதிநாயகம் டி.கே.பாசு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கொல்கத்தா மற்றும் தேசிய சட்ட உதவிகள் அமைப்பின் தலைவராக இருந்தவர். 2006-இல் இலங்கையில் ஆசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை நீதிமன்றத்தின் பார்வையாளராக இருந்து செயல்பட்டவர். ‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்’ நிதியுதவியுடன் நடந்த இந்திய அளவிலான கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான பயிற்சித் திட்டத்தின் ஆலோசகராகவும் இருந்தார். ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமைப்பின் நிறுவுநர். அனைத்துலக அளவில் பல்வேறு கருத்தரங்களில் கலந்துகொண்டு சட்டத்தின் பல்வேறு அணுகுமுறைகள் குறித்து உரையாற்றிய சட்ட வல்லநர்.

2004-இல் தில்லியில் பொடா சட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கான ‘பொது விசாரணை’ நடைபெற்றது. இதில் நீதிபதியாக (Jury) கலந்துகொள்ள வந்தார் டி.கே.பாசு. அவரை ‘தோழமை’ தேவநேயன், கோ.சுகுமாரன் ஆகிய இருவரும் விமான நிலையத்தில் வரவேற்று தங்குடத்திற்கு அனுப்பி வைத்தோம். அமைதியான குணமுடையவராக இருந்தார்.

ஒரு ஆளுமை நிறைந்த சட்ட வல்லுநரை இழந்துள்ளோம். என் ஆழ்ந்த அஞ்சலியும் இரங்கலும்.. 

Sunday, May 09, 2021

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமனம்: வாழ்த்துகள்!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக (Advocate General) மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

1995-இல் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு எதிராக குற்றப் புகார் ஒன்றைத் தயாரித்தற்காக ரவுடிகளால் தாக்கப்பட்டார்.

2002-இல் திமுகவின் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் தமிழக அரசின் அரசு வழக்கறிஞராக (State Public Prosecutor) பணியாற்றி உள்ளார்.

கற்றுத் தேர்ந்த திறமையான வழக்கறிஞர். மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் அவர்களின் ஜீனியர். பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி உள்ளார். நீதித்துறை அகாடமியில் (Judicial Academy) புதுதாக பணியில் சேரும் நீதிபதிகளுக்குச் சட்ட வகுப்புகள் எடுக்கும் நிபுணர்களில் ஒருவர். மேலும், அனைத்துலக அளவிலும் பல்வேறு கருத்தரங்களில் கலந்துகொண்டு உரையாற்றி உள்ளார்.

2000-இல் இவருடன் நேரடியாக பழக்கம் ஏற்பட்டது. சந்தன வீரப்பன் கன்னட நடிகர் இராஜ்குமாரை கடத்தி வைத்திக் கொண்டு வைத்த கோரிக்கைகள் பல. அதில் மைசூர் நடுவண் சிறையில் ஒன்பதரை ஆண்டுகளுக்கும் மேலாக தடா சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த 12 பெண்கள் உட்பட 124 தமிழர்களின் விடுதலைக் கோரிக்கை முக்கியமானது. வீரப்பனுக்கு உதவியதாக போடப்பட்ட பொய் வழக்கில் விசாரணை இன்றி சிறையில் வாடினர்.

வீரப்பன் கோரிக்கையை ஏற்று 124 தடா சிறைவாசிகளைப் பிணையில் விடுதலை செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து வீரப்பனால் கொல்லப்பட்ட அதிரடிப்படை காவல் உதவி ஆய்வாளர் ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தடா சிறைவாசிகள் 124 பேர், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த சிறைவாசிகள் 5 பேர் என யாரையும் விடுதலை செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சிக்கலான இச்சூழலில் மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் அவர்களிடத்தில் அய்யா பழ.நெடுமாறன் உடன் சென்று விவாதித்தோம். வழக்கு விசாரணையை நடத்தி அனைவரையும் விடுதலை செய்ய யாரும் தடை செய்ய முடியாது எனக் கூறினார். அதோடு, தனி நீதிமன்றம் அமைத்து விரைந்து வழக்கை முடிக்கலாம் (Speedy trial) எனக் கூறி உச்சநீதிமன்றத்தின் 8 தீர்ப்புகளை நகலெடுத்துக் கொடுத்தார்.

இந்த முடிவோடு பழ.நெடுமாறன், கல்யாணி, கோ.சுகுமாரன் ஆகிய நாங்கள் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களைக் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். முன்னதாக எத்தனை மாதத்தில் மைசூர் தடா வழக்கை முடிக்கக் கேட்கலாம் என பழ.நெடுமாறன் அய்யா கேட்ட போது ஒரு மாதத்தில் முடிக்கக் கேட்போம் என்று சொன்னேன். அதேபோல், முதலமைச்சரிடம் கேட்டோம். அவர் சரியென ஒப்புக் கொண்டார். ‘நான் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களிடம் பேசுகிறேன். நீங்களும் அவரிடம் சொல்லுங்கள்’ என்றார். அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக முதலமைச்சர். பின்னர், நான் பெங்களூர் சென்று முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களைச் சந்த்திதேன். அவரும் இம்முடிவுக்கு ஒப்புக் கொண்டார்.

இதுபோன்று வீரப்பன் வைத்த கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வுக் கண்டு, அதை இரு மாநில முதலமைச்சர்களிடம் எடுத்துக் கூறி உறுதிமொழிப் பெற்றோம். வீரப்பனிடம் இத்தீர்வுகளை எடுத்துக்கூறி, அவற்றை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று உறுதியளித்தோம். இதனை ஏற்றுதான் வீரப்பன் கன்னட நடிகர் இராஜ்குமாரை விடுவித்தார்.

ஏற்கனவே தடா வழக்குகளைத் தமிழ்நாடு பழங்குடிகள் மக்கள் சங்கம், மக்கள் கண்காணிப்பகம், சோகோ அறக்கட்டளை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் வழக்கறிஞர்கள் நடத்தி வந்தனர். எங்களது கோரிக்கையை ஏற்று கர்நாடக அரசு தடா வழக்கை விரைந்து முடிக்க அமர்வு நீதிபதி கிருஷ்ணப்பா (இவருக்கு Conviction Krishnappa என்ற அடைமொழி உண்டு) தலைமையில் தனி நீதிமன்றம் ஒன்றை (Special Court) மைசூரில் அமைத்தது. அதாவது இவர் தண்டனை அளிக்கும் மனநிலையுள்ள நீதிபதி.

மேற்சொன்ன அமைப்புகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் (ஆந்திரா), வேணுகோபால் (மைசூர்), வின்சென்ட் (மதுரை) உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வழக்கை நடத்தினர். பழ.நெடுமாறன் கூடுதலாக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இவ்வழக்கில் ஆஜராகி நடத்தினால் நல்லது என்று முடிவெடுத்தார். அதன் அடிப்படையில், இவ்வழக்கில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார்.

சென்னையில் இருந்து மைசூருக்கு அழைத்துச் சென்று வரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் சென்னையில் அதிகாலை சதாப்தி அதிவிரைவு தொடர் வண்டியில் புறப்படுவோம். சென்னை – மைசூர் 7 மணிநேரம் பயணம். மூத்த வழக்கறிஞர் என்று பாராமல் அவரிடம் வழக்குக் குறித்து கேள்விகள் கேட்பேன். அவர் நிதானமாக எல்லாவற்றுக்கும் பதில் சொல்வார்.

தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு இரண்டே மாதத்தில் வழக்கு முடிந்தது. தடா வழக்கில் இருந்து 108 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 4 பேருக்கு வாழ்நாள் சிறை. மீதமுள்ளவர்களுக்குக் குறைந்த ஆண்டுகள் தண்டனை. அவர்கள் ஒன்பதரை ஆண்டுகள் சிறையில் கழித்ததால் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்தில் இருந்ததும், தடா சிறைவாசிகள் விடுதலையாகி எங்களுக்கு நன்றி சொன்னதும் மறக்க முடியாத தருணம்.

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான், ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள் மிகுந்த துயரத்துடன் சிறையில் வாடிய அப்பாவி தமிழர்களின் விடுதலைக்கு வித்திட்டது.

இந்நினைவுகளுடன் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Sunday, April 25, 2021

தமிழறிஞர் பிரான்சுவா குரோ மறைந்தார்: தமிழுக்குப் பேரிழப்பு!

நாங்கள் எல்லாம் செல்லமாக “தாத்தா” என்று அழைக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் பிரான்சுவா குரோ (Francois Gros) தனது 88ஆவது அகவையில் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் இந்தியவியல் துறையின் ஆய்வாளரான கண்ணன்.எம். மூலம் அறிமுகமானவர். கற்றுத் தேர்ந்த, அறிவார்ந்தத் தமிழறிஞர். பழகுவதற்கு எளிய மனிதர். அவருடன் தேநீர் கடையில் தேநீர் பருகியபடி உரையாடிய நாட்களை நினைத்தால் கண்கள் கலங்குகின்றன. நிறை குடம் அவர். என்றும் தளும்பியது கிடையாது.

1960களின் தொடக்கத்திலிருந்து தமிழில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த பிரான்சுவா குரோ (1933 – 2021) பாரீசில், பாரீஸ் பல்கலைக்கழகத்தின் Ecole Pratique Des Hautes Etudes என்ற உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான (Philology) பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியைத் துவக்கிய பிரான்சுவா குரோ 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ்வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளைப் பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது. பரிபாடல் (1968) திருக்குறள் காமத்துப்பால் (1993) இரண்டும் பிரெஞ்சில் நூல் வடிவம் பெற்றுள்ளன. காரைக்கால் அம்மையார் குறித்த நூலையும் பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளார். தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பும்  வெளிவந்துள்ளது.

அவர் இடைக்காலத் தென்னிந்திய வரலாறு மற்றும் தொல்லியல் குறித்த நூல்களும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக உத்திரமேரூர், திருவண்ணாமலை  உள்ளிட்ட கோயில் நகரங்களின் வரலாறு  பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.

பிரான்சுவா குரோ, கண்ணன்.எம். ஆகியோர் இணைந்து பாரதியார் தொடங்கி ஆத்மாநாம், பிரமிள், வில்வரத்னம் (இலங்கை) போன்றோரது கவிதைகள் உள்ளடக்கிய 200 கவிதைகளைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளனர். அதேபோல், தேர்த்ந்டுக்கப்பட்ட 20 சிறுகதைகளையும் பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளனர்.  

தென்னிந்திய வரலாற்று அட்லஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் கி.பி. 1600  வரலாற்றுக்கு முந்தைய தென்னிந்திய வரலாற்றை வரைபடங்களாகச் சித்தரித்துள்ளார்.  இது உலகிலேயே சிறந்த, அரிய தொகுப்பு என்கிறார் கண்ணன்.எம்.

இலக்கியம் மட்டுமன்றி வரலாறு, பண்பாடு, தொல்லியல் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். புகழ்ப் பெற்ற வரலாற்றிஞர் ரொமீலா தாப்பரின் சகோதரர்  ரோமேஷ் தாப்பருடன் நட்பாக இருந்துள்ளார். அதேபோல், பிபின் சந்திரா, லோகேஷ் சந்திரா போன்றோருடன் நட்புடன் இருந்துள்ளார்.  கலை வரலாற்றறிஞர் கபில வட்சாயயன் உடனும் நட்புடன் இருந்தார். அவருடனான நட்பு பயன் தரக் கூடியது என்று பிரான்சுவா குரோ கூறியுள்ளார்.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்டசோழபுரம் கோயில் குறித்த நூல்கள் வெளிவர காரணமாக இருந்துள்ளார்.

பிரெஞ்சு, சமற்கிருதம், லத்தீன, கிரேக்க மொழிகள் மட்டுமின்றி தமிழிலும் புலமைப் பெற்ற அறிஞராக இருந்துள்ளார். 1994-இல் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடந்த மாநாடு தவிர்த்து, 1996-இல் கோலாலம்பூர் தொடங்கி 1995-இல் தஞ்சாவூரில் நடந்தது வரையில் அனைத்து உலகத் தமிழ் மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். இம்மாநாடுகளில் கல்விக் கற்பிக்கும் முறைக் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டிருந்ததாகவும்  கூறியுள்ளார்.

பிரான்சுவா குரோவிற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் செயல்படும் மத்திய செம்மொழி உயராய்வு நிறுவனத்தால் வழங்கப்படும் 2008 – 2009 ஆண்டிற்கான குறள்பீட விருதும், ரூ. 5 லட்சம் தொகையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.  

பிரான்சுவா குரோ பிரான்சின் தென்கிழக்கில் உள்ள லியோன் நகரத்தில் வாழ்ந்துவந்தார்.  ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதக் காலத்தைப் புதுச்சேரியில் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகச் செலவிட்டு வந்தார். அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் புதுச்சேரிக்கு வராமல் பிரான்ஸ் நாட்டிலேயே தங்கியிருந்தார். பிரான்சுவா குரோ தன்னிடமிருந்த ஆயிரக்கணக்கான அரிய நூல்களைக் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்துக்கு வழங்கியுள்ளார்.

“தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதி அறிவித்தது மட்டும் போதாது. அருங்காட்சியகத்தில் உள்ள செவ்வியல் கலைப்பொருட்கள் இறந்துப் போய்விடுகின்றன. அவற்றை அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். அவற்றை வெகுமக்களின் பொது பண்பாட்டிற்குள் எடுத்துச் செல்ல வேண்டும். இதைச் செய்வதற்கான ஆய்வு, சிறந்த கல்வி கற்பிக்கும் முறைகள், தமிழில் கல்விச் சார்ந்த மொழிநுட்பங்கள் (Education tools in Tamil) உருவாக்க வேண்டும். இது தமிழ்நாடு மேலைநாடுகளுக்குத் தமிழைக் கற்றுத் தர ஏதுவாக இருக்கும்” என்று பிரான்சுவா குரோ கூறியுள்ளார்.

ஒரே மகனான இவருக்கு, பொறிஞரான அவரது தந்தையார் இலக்கிய நூல்களைக் கொடுத்து ஊக்கப்படுத்தி உள்ளார். தந்தையின் ஊக்கத்தால் உலகப் புகழ்ப் பெற்ற அறிஞராக மிளிர்ந்துள்ளார் பிரான்சுவா குரோ.

பிரான்சுவா குரோவின் மறைவு தமிழ் செவ்வியல் இலக்கியத்திற்கு மட்டுமின்றி, நவீனத் தமிழ் இலக்கியத்திற்கும் பேரிழப்பாகும். மொத்தத்தில், தமிழ் மொழிக்குப் பேரிழப்பாகும்.

துயரமான இத்தருணத்தில் அவருடனான உறவை எண்ணிப் பெருமை அடைகிறேன்..

அவருக்கு என் ஆழ்ந்த அஞ்சலி..

கோ.சுகுமாரன்