Tuesday, January 15, 2008

ஜல்லிக்கட்டுக்குத் தடை நீக்கம் - உச்சநீதிமன்றம் உத்தரவு


தமிழ்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கி இன்று (15-01-2008) உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்டு இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகக் கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி காளைகளை விரட்டுப் பிடிக்கும் ஜல்லிக்கட்டு பல காலமாக நடைபெற்று வருகிறது.

மிருக வதை எதிர்ப்புச் சங்கம் சார்பில் தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் 'விலங்குகளைத் துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது' எனக் கூறி கடந்த 11-01-2008 அன்று ஜல்லிக்கட்டிற்குத் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவாட்டம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு, பதட்டம் ஏற்பட்டது. அலங்காநல்லூர், பாலமேடு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடக்கும் என அறிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் மக்கள் ஜல்லிக்கட்டை நடத்தும் விதமாக தங்கள் காளைகளை அவிழ்த்து விட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இத்தடையை நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு உடனடியாக சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்நிலையில், முதல்வர் கருணாநிதி தடையை நீக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பொதுத்துறைச் செயலாளர் ஜோதிஜெகராஜன், உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட், மதுரை ஆட்சியர் ஜவகர், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தில்லிக்குச் சென்றனர்.

நேற்று (14-01-2008) விடுமுறை நாள் என்பதால், உச்சநீதிமன்ற பதிவாளர் நிராஜ் பரத்வாஜை அவரது இல்லத்தில் சந்தித்தனர். 'தமிழகம் முழுவதும் 15-ஆம் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மறுநாள் ஜல்லிக்கட்டு நடத்த பாலமேட்டிலும், அடுத்த நாளில் நடத்த அலங்காநல்லூரிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. விழாவுக்கு ஓரிரு நாளே இருப்பதால் மறுஆய்வு மனுவை உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும்' என்று பதிவாளரிடம் குழுவினர் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, மறு ஆய்வு மனுவை ஏற்றுக் கொண்ட பதிவாளர் அதனை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். இம்மனு மீதான விசாரணை 15-01-2008 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இம்மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இன்று நண்பகலில் தொடங்கிய இந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் கோபாலசுப்பிரமணியம் வாதிட்டார். அப்போது ஜல்லிக்கட்டு நடப்பதை தமிழக அரசு கண்காணிக்கும் என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.

இதனை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக கடந்த சில நாட்களாக நிலவிய பதற்றம் தணிந்தது. அலங்காநல்லூர், பாலமேடு கிராமம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Sunday, January 13, 2008

புதுச்சேரி அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் நிர்வாகத்தைக் கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம்



புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து 11-01-2008 வெள்ளியன்று மாலை 4.00 மணியளவில் தொழிற்சாலை முன்பு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்புடன் இணைந்த அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் ம.சந்திரகுமார் தலைமை தாங்கினார். தலைவர் சூ.சின்னப்பா வரவேற்றுப் பேசினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் போராட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், அமைப்பாளர் தந்தைபிரியன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் பார்த்திபன், சமூக நீதிப் போராட்டக் குழு அ.மஞ்சினி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். முடிவில் சங்க இணைச் செயலாளர் சு.முருகன் நன்றி கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தொழிலாளர்களில் ஒரு பகுதியினருக்கு மீண்டும் வேலை அளித்த நிர்வாகம், தற்போது பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறி தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்ய முயற்சித்து வருகிறது.

தொழிலாளர்களைப் பழிவாங்கும் போக்கைக் கைவிட வலியுறுத்தி 10-01-2008 முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொடர் முழக்கப் போராட்டத்தில் பல்வேறு இயக்கத்தினர் பங்கேற்றனர்.

Thursday, January 10, 2008

புதுச்சேரி அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்


புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டும், தொழிலாளர் விரோதப் போக்கைக் கடைபிடித்தும் வருவதைக் கண்டித்து, 10-01-2008 வியாழனன்று காலை 6.00 மணி முதல் தொழிலாளர்கள் அனைவரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் உரி்மைக் கூட்டமைப்புடன் இணைந்த அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கம் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது.

போராட்டத்தை அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கோ.சுகுமாரன் தொடக்கி வைத்தார். சங்கத் தலைவர் சூ.சின்னப்பா, துணைத் தலைவர் மு.பொன்னுசாமி, செயலாளர் ம.சந்திரகுமார், இணைச் செயலாளர் சு.முருகன், துணைச் செயலாளர் லோ.இராஜேந்திரன், பொருளாளர் கி.கண்ணன், இணைப் பொருளாளர் கி.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் பார்த்திபன் ஆகியோர் போரட்டத்தில் கலந்துக் கொண்டவர்களை வாழ்த்தினர்.

தொழிலாளர்கள் அனைவரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

'வெல்க, வெல்க, வெல்கவே...
அத்தியப்பா.. தொழிலாளர் நலச் சங்கம்
வெல்க, வெல்க, வெல்கவே...

பழிவாங்காதே...பழிவாங்காதே...
தொழிலாளர்களைப்
பழிவாங்காதே...

வெளியேற்று...வெளியேற்று...
வெளியாட்களை
வெளியேற்று...

விடமாட்டோம்...விடமாட்டோம்...
வெற்றி கிட்டும்வரை
விடமாட்டோம்...

ஒன்றுப்பட்டு நிற்கின்றோம்...
உரிமைக்காக நிற்கின்றோம்...

தொழிலாளர் ஒற்றுமை...
ஓங்குக...

என்று போராட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவரும் ஒருமித்து முழக்கமிட்டனர்.

போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரியிலுள்ள கட்சிகள், சமுதாய இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம் 11-01-2008 வெள்ளிகிழமை மாலை 4.00 மணியளவில் தொழிற்சாலை முன்பு நடைபெற உள்ளது.

Sunday, January 06, 2008

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து

1948 பிப்ரவரி 4 அன்று இலங்கை விடுதலை அடைந்தது. வரும் பிப்ரவரி 4-ஆம் நாளன்று இலங்கையின் 60-ஆவது விடுதலை நாள் விழா கொழும்பில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமை விருந்தினராக கலந்துக் கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பிரதமர் இலங்கைச் செல்வதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.

பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைச் செல்வதைக் கைவிட வேண்டுமென தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சியில், இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன. கடந்த 31-12-2007 அன்று சென்னையில் தி.க. சார்பில் அவ்வமைப்பின் தலைவர் கி.வீரமணி தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், திராவிடத் தமிழர் கழகத் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரும் இதனை வலியுறுத்தினர்.

இதனிடையே, பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று (06-01-2008) செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்றைய தினம் முக்கிய பணி இருப்பதால் இலங்கை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளமாட்டார் என்று தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு, தமிழகக் கட்சிகள் எதிர்ப்பு ஆகிய காரணங்களால் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், இந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெற உள்ள 'சார்க்' மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொள்வார் என்று தெரிய வருகிறது.

Sunday, December 30, 2007

இலங்கைச் சுதந்திர நாள் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துக் கொள்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – கி.வீரமணி

திராவிடர் கழகம் சார்பில் வரும் 31.12.2007 திங்களன்று, காலை 11 மணிக்கு, சென்னை - மெமோரியல் அரங்கம் அருகில், இலங்கையின் சுதந்திர நாள் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.க. தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர நாள் (4.2.2008) விழாவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொள்ளவிருக்கும் நிலையில், அவ்விழாவில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்து இந்த அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து கி.வீரமணி 28-12-2007 அன்று விடுத்துள்ள அறிக்கை:

ஏதோ தமிழர்கள் அத்தீவில் கொன்று குவிக்கப்படுகிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல; தமிழர்களே படுகொலை செய்யப்படாமல் வேறு மக்கள் அப்படிப் படுகொலை செய்யப்பட்டாலும்கூட மனிதாபிமான அடிப்படையில் நமது எதிர்ப்பை, வெறுப்பைக் காட்டும் வகையில்தான் இத்தகைய ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈராக்கிலும், வியட்நாமிலும் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது இந்தியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதே - அதே கண்ணோட்டம் இதற்கும் பொருந்தும்தானே?

சொந்த நாட்டு மக்கள்மீது விமானத் தாக்குதல் என்பது உலகில் எங்கும் கேள்விப்பட்டிராத ஒன்று! சொந்த நாட்டிலேயே இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இருக்கின்றனர் என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

படுகொலை செய்யப்பட்ட போராளிகளை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துவது என்பது அய்.நா.வின் மனித உரிமை சாசனத்துக்கு எதிரானது அல்லவா? படுகொலை செய்யப்பட்ட பெண்களையே கூட இதற்குமுன் இவ்வாறு இலங்கை இராணுவம் நடத்தியதுண்டு.

ஒரு நாட்டின் எல்லைக்குள் அந்த நாட்டு குடிமக்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்பது உலகெங்கும் உள்ள நடை முறை. இலங்கையிலோ தமிழர்கள் அந்த நாட்டில் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது. அதுவும் தலைநகருக்குச் செல்லவே முடியாது. கொழும்பு நகரில் தங்கி இருந்த 376 தமிழர்களை இரவோடு இரவாகக் குண்டுகட்டாகத் தூக்கித் தமிழர்கள் வாழும் பகுதிக்கு விரட்டப்பட்டனர். இந்தியாவும் கண்டித்ததே! இந்த நிலையில் அந்த நாட்டுச் சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியப் பிரதமர் எப்படி செல்லலாம்?

தமிழர்களை மட்டுமல்ல; பன்னாட்டு உதவிக் குழுவினர் 17 பேர்களை இலங்கை இராணுவம் சுட்டுப் பொசுக்கியதே! பிரேதப் பரிசோதனையில் அந்தக் குண்டுகள் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவைதான் என்று நிரூபிக்கப்பட்டதே!

இலங்கை அரசு இராணுவத்துக்காக மட்டும் 2008 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கிய தொகை 16,600 கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டைவிட ரூ.2,700 கோடி அதிகமாகும்.

இராணுவத்தை வலுப்படுத்தவேண்டிய அவசியம் என்ன? இலங்கையைச் சுற்றியுள்ள நாடுகளால் அந்நாட்டுக்குத் தொல் லையா? பிற நாட்டுப் படையெடுப்பா? இல்லையே! இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களைப் பூண்டோடு அழித்து முடிக்கத்தானே இந்த வன்மம்?

அப்படிப் படுகொலை செய்யப்படும் மக்கள் யார்? தமிழர்கள் தானே! அந்தத் தமிழர்களுக்கும், இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கும் உள்ளது தொப்புள்கொடி உறவு அல்லவா!

இந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுகினால் இந்திய அரசின் முடிவு வேறு மாதிரியாகத்தானே இருக்க முடியும்!

உலகில் எந்த நாட்டிலும் உள்ள சீனக்காரரை அந்த நாடு தாக்க முடியுமா? அப்படி தாக்கினால் சீன அரசு சும்மா இருக்குமா? இலண்டனில் சீக்கியர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், இந்தியா அப்பொழுது மட்டும் குரல் கொடுக்கிறதே - தமிழர்களுக்கு இடர்ப்பாடு என்கிறபோது மட்டும் ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மை? இதுதான் இப்பொழுது எழுந்துள்ள கேள்வி.

தமிழ்நாட்டு மக்களின் இந்த உணர்வை பிரதமர் மன் மோகன்சிங் மதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

எந்த நிலையிலும் இந்தியப் பிரதமர் இலங்கையில் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கக் கூடாது என்ற வேண்டுகோளை முன்னிறுத்தி திராவிடர் கழகம் நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சிகளை மறந்து தமிழர்கள், மனிதாபிமானிகள் கலந்துகொள்ள அழைக்கிறோம் - அழைக்கிறோம்!

நன்றி: விடுதலை.

Saturday, December 29, 2007

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குண்டுவீச்சில் காயம் அடைந்தது உண்மையல்ல - பழ.நெடுமாறன்


பழ.நெடுமாறன் (கோப்புப் படம்)

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் 29-12-2007 சனியன்று காலை 11.30 மணிக்கு, விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குண்டுவீச்சில் காயம் அடைந்தது உண்மையல்ல. வெறும் வதந்திதான். இதனை விடுதலைப் புலிகளே மறுத்துள்ளனர். ஏற்கனவே நான்கு முறை இதுபோன்ற செய்திகள் வெளிவந்துள்ளன. சில சமையங்களில் அவர் இறந்துவிட்டதாகக் கூட செய்தி வந்தது. அவையெல்லாம் உண்மையல்ல என்பது நிரூபனமானது. பிரபாகரன் ஈழப் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்.

1948 பிப்ரவரி 4 அன்று இலங்கை விடுதலை பெற்றதிலிருந்து தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் சிங்கள் ஆட்சியாளர்களால் தொடரப்பட்டன. இலங்கையில் தோட்டத் தொழிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஐந்து தலைமுறைக்கும் மேலாக உழைத்து அந்நாட்டை வலமாக்கிய இந்திய வம்சாவழித் தமிழர்கள் எனப்படும் மலையகத் தமிழர்கள், குடியுரிமைப் பறிக்கப்பட்டு, அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.

ஈழத் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கப்பட்டார்கள். அவர்களின் கல்வி, நில, மொழி உரிமைகள் பறிக்கப்பட்டன. இலங்கை வாழ் தமிழர்களை உரிமையற்றவர்களாக மாற்றிய இலங்கை விடுதலை நாளை துக்க நாளாக தமிழர்கள் கடந்த 60 ஆண்டு காலமாக தமிழர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலைமைகளையும் சிங்கள் இனப் பேரினவாத அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்திவரும் இனப் படுகொலைகளையும் கவனத்தில் கொள்ளாமல், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை விடுதலைநாள் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தனது இலங்கைச் சுற்றுப் பயணத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 18-12-2007 அன்று இந்தியப் பாதுகாப்புச் செயலர் தலைமையிலான உயர்மட்டக் குழுவும், இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகர தலைமையிலான சிங்கள உயர்மட்ட குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கைக்கு ராடார் சாதனங்கள் மற்றும் இராணுவ தளவாடங்கள் அளிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்தியா வழங்கும் இந்த ஆயுதங்கள் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கப் பயன்படுத்தப்படும் என நன்கு தெரிந்தும் இந்திய அரசு, சிங்கள அரசுக்கு உதவுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இராணுவ ரீதியான உதவிகளை உடனடியாக நிறுத்தும்படி வலியுறுத்துகிறேன்.

சிங்கள இராணுவ விமானங்களை ஓட்டுவதற்கு பாகிஸ்தான் விமானிகளைப் பயன்படுத்தி, தமிழர் பகுதிகளில் குண்டுவீசி அப்பாவி தமிழர்களை சிங்கள அரசு கொன்றுக் குவித்து வருகிறது. இந்நிலையில், இந்திய - இலங்கை விமானப் படைகள் கூட்டாக ரோந்துப் பணியாற்ற முடிவு செய்துள்ளனர். அதனைக் கைவிட வேண்டும்.

ஈழத்தில் பட்டினியால் வாடும் மக்களுக்காக செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அனுப்ப இந்திய அரசு அனுமதிக்கவில்லை.

இதற்காக உண்ணாவிரதம் இருந்தபோது, அதை முடித்துக் கொள்ளும்படியும், மத்திய அரசிடம் பேசி அனுமதி பெற்றுத் தருவதாகவும் முதல்வர் கருணாநிதி உறுதிமொழி கடிதம் கொடுத்தார்.

டாக்டர் இராமதாஸ், வைகோ, நல்லக்கண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்டோரும் வேண்டுகோள் விடுத்தனர். இச் சம்பவம் முடிந்து 100 நாள்கள் ஆகின்றன.

இதற்கு அனுமதி அளிக்காதைக் கண்டித்துக் கூட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படும்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்றோர் தாங்கள் அரசியலில் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவே தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக அடிக்கடி கூறி வருகின்றனர்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Sunday, December 16, 2007

புதுச்சேரி காவல் ஆய்வாளர் ரவிக்குமார் குற்றச் செயல்கள் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் சு.பாவாணன், ப.அமுதவன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் பா.சக்திவேல், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படையின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பாவாடைராயன் ஆகியோர் 14-12-2007 அன்று புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

கடந்த 12-12-2007 அன்று மாலை 6.30 மணியளவில், அரியாங்குப்பம் இராவணன் படிப்பகத்தில் அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் சு.பாவாணன், ப.அமுதவன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், இரா.சு.வெங்கடேசபெருமாள், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, கொள்கைப் பரப்புச் செயலாளர் பாவாடைராயன், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் இர.அபிமன்னன், இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் சு.கந்தவேலு, புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை பெ.பாலமுருகன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மனங்கள்:

1) முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிக்குமார் சட்டத்திற்கு புறம்பாகவும், குற்ற செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறித்து, புதுச்சேரி அரசு பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

2) சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டு வரும் போலீஸ் அதிகாரிகளைக் காப்பாற்றும் நோக்கோடு புதுச்சேரி அரசு செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். தவறு செய்யும் அதிகாரிகள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்து, மக்கள் அச்சமின்றி வாழ ஆவன செய்ய வேண்டும்.


3) வில்லியனூர், கணுவாப்பேட்டையைச் சேர்ந்த முரளிதரன் (எ) கணபதி என்பவரின் டாடா சுமோ வண்டியை அச்சுறுத்தி, மிரட்டி பறித்த முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மீது வழக்குப் பதிய வேண்டுமென தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்ந்தீமன்றம் கடந்த 16-11-2007 அன்று உத்தரவிட்டுள்ளது. உயர்நிதீமன்ற உத்தரவை மதித்து உடனடியாக காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும்.

4) மேற்சொன்ன வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில், முதல் தகவல் அறிக்கைகூட பதியாமல் புகார் கொடுத்தவரை அச்சுறுத்தி, புகார் மீது எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கமாட்டேன் என்று தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் கந்தநாதன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் எழுதி வாங்கியுள்ளனர். இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டுள்ள தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் கந்தநாதன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5) துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய தேங்காய்த்திட்டு பெண்கள் உட்பட பொதுமக்கள் மீது தடியடி நடத்தி அடக்குமுறை ஏவிய போலீஸ் அதிகாரிகள் மீது புதுச்சேரி அரசு உடனடியாக வழக்குப் பதிய வேண்டும். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளைத் தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும்.

6) தேங்காய்த்திட்டு இளைஞர் பாலா (எ) தெவசிகாமணி கொலையை மூடி மறைத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மற்று போலீசார் மீது புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவம் குறித்து விசாரித்த துணை ஆட்சியர் விஜய்குமார் பித்ரி அரசுக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.

7) புதுச்சேரியில் சட்டத்திற்குப் புறம்பாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள போலீஸ் அதிகரிகாரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும். இது குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை வெளியிட வேண்டும்.

8) மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 20-12-2007 வியாழனன்று, காலை 10 மணிக்கு, புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆட்சியரிடம் மனு அளிப்பது. மேலும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.) உள்ளிடவர்களுக்கும் மனு அளிப்பது.

இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Wednesday, December 05, 2007

தந்தை பெரியாருக்கு 95 அடி உயர சிலை - தமிழக முதல்வருக்குப் பாராட்டு!

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 04-12-2007 அன்று அனுப்பியுள்ள கடிதம்:

சென்னையில் தந்தை பெரியாருக்கு 95 அடி உயர சிலை அமைக்கப்படும் என திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களின் 75-ஆவது பிறந்த நாள் விழாவில் தாங்கள் அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு என் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் 95 வயது வரை தன் மூத்திர சட்டியைச் சுமந்து தமிழ்ச் சமுதாயம் தன்மானத்துடன் வாழ வேண்டுமென உழைத்தவர். மூட நம்பிக்கைகளை களைந்து பகுத்தறிவு வளர்த்தல், சாதி, மத, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதி என அனைத்து தளங்களிலும் அயராது பணியாற்றி சமூகத்தில் ஆழமாக வேரூன்றியவர்.

மதவாத சக்திகள் கையில் எடுக்க முடியாத தலைவர் தந்தை பெரியார் என்பதும், இன்றைக்கும் அவர் எழுதிய இராமயண புரட்டு என்ற நூல் உத்தரபிரதேசத்தை உலுக்கிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மொழிப் போர் தியாகிகளுக்கு உதவிகள் வழங்குவது போல சாதி ஒழிப்பு போராளிகளுக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என தாங்கள் அறிவித்துள்ளதையும் மனதார பாராட்டுகிறேன்.

இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.

"டாடா சுமோ" திருடிய காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிய வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி வில்லியனூர் கனுவாப்பேட்டையைச் சேர்ந்த முரளிதரன் (எ) கணபதி தொடர்ந்த வழக்கில் ரெட்டியார்பாளையம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் பால் வியாபாரம் செய்து வருகிறேன். சமூக பணிகளிலும் ஈடுபாடு உடையவன். கடந்த 3-2-2007 அன்று சண்முகாபுரத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவரிடம் PY OI x 5767 என்ற எண்ணுடைய டாடா சுமோ கார் ஒன்றை வாங்கினேன். இது தொடர்பாக இருவரும் பத்திரம் தயார் செய்து, அதில் 2 சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்திட்டோம். ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் விலை பேசி ரூ. 50 ஆயிரம் முன் பணம் கொடுத்தேன். முழுப் பணமும் செலுத்தும் வரை டாடா சுமோவை முன்னாள் அமைச்சர் தேனி ஜெயக்குமார் வசம் இருக்கட்டும் என இருவரும் முடிவு செய்து, வண்டியை அவரது வீட்டில் நிறுத்தினேன்.

இதனிடையே, ரெட்டியார்பாளையம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் அன்றைய தினமே தேனி ஜெயகுமாரை தொடர்பு கொண்டு வண்டியை விற்ற நந்தகுமாருக்கும், டாடா நிதியகத்திற்கும் ஏதோ பிரச்சனை இருக்கிறது, உடனடியாக டாடா சுமோவை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென கூறியுள்ளார். இதனை அறிந்த நான் உடனடியாக காவல் ஆய்வாளர் ரவிக்குமாரை தொடர்பு கொண்டேன். அப்போது அவர் 'பைனான்ஸ்' பிரச்சனை உள்ள வண்டியை வாங்கியுள்ளதாகவும், உடனடியாக வண்டியை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும், இல்லையென்றால் வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டினார். அதற்கு பயந்து நான் உடனடியாக டாடா சுமோவை ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்திற்கு முன் நிறுத்திவிட்டு, அதன் சாவியை அவரிடம் ஒப்படைத்தேன்.

இந்நிலையில், அடுத்த நாள் பல்வேறு பத்திரிகைகளில் நான் வாங்கிய டாடா சுமோ கார் திருடு போனதாக ஒரு செய்தி வெளிவந்தது. இதைப் பார்த்த நான் என் மீது டாடா சுமோ திருடியதாக பொய் வழக்குப் போட்டு விடுவார் என பயந்து காவல் ஆய்வாளர் ரவிக்குமாரை தொடர்பு கொண்டேன். அப்போது அவர் இது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்றும், பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொண்டு, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆவணங்களை பெயர் மாற்றம் செய்து கொண்டு பிறகு வண்டியை காவல்நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லவும் என்று கூறினார்.

நான் உடனடியாக என்னுடைய உறவினர்களிடம் பணம் கடனாக பெற்று நந்தகுமாருக்கு பைசல் செய்தேன். மேலும், பணம் கட்டி வண்டி மேல் டாடா பைனான்சிடம் இருந்த அடமானத்தையும் ரத்து செய்தேன். பிறகு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆவணங்களை பெயர் மாற்றம் செய்து கொண்டேன்.

பிறகு, காவல் ஆய்வாளர் ரவிக்குமார் வழக்குப் போடுவேன் என்று என்னை மிரட்டியதால், என் மீது வழக்கு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தில் தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளருக்கு மனு அனுப்பினேன். அதற்கு அவர் வழக்கு எதுவும் இல்லை என்று கடந்த 6-6-2007 அன்று பதிலளித்தார்.

அதன் பின்னர் ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்திற்கு சென்று காவல் ஆய்வாளர் ரவிக்குமாரை சந்தித்து என்னுடைய டாடா சுமோ வண்டியை கேட்டேன். அதற்கு அவர் மிரட்டும் வகையில் வண்டி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், இனிமேல் இது சம்பந்தமாக வர வேண்டாம் என்று கூறி காவல்நிலையத்தை விட்டு அனுப்பிவிட்டார்.

எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பலமுறை அவரை தொடர்பு கொண்டு வண்டி பற்றி கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லாமல், என் மீது அரசு ஊழியரை வேலை செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப் போடுவேன் என்று மிரட்டினார்.

நான் நடந்த சம்பவங்களை விரிவாக எழுதி டாடா சுமோ வண்டியை மீட்டுத் தருமாறு தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளருக்கு கடந்த 4-8-2007 அன்று பதிவு தபாலில் புகார் அனுப்பினேன். ஆனால், அவர் என்னுடைய புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி திருட்டு (Theft), அசையும் பொருளை திருட்டு எண்ணத்தோடு தனதாக்கிக் கொள்ளுதல் (Misappropriation), அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் (Misuse of power), அச்சுறுத்தி பறித்தல் (Extortion) மற்றும் பல பிரிவுகளில் வழக்குப் பதிய தெற்குப் பகுதி எஸ்.பி.க்கு உத்தரவிட வேண்டும். என்னுடைய டாடா சுமோ வண்டியை திருப்பித் தர உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.மோகன் ராம் கடந்த 16-11-2007 அன்று உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மனுதாரர் இந்த நீதிமன்ற உத்தரவோடு 4-8-2007 நாளிட்ட புகார் மனுவின் நகலை இணைத்து, நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த ஒரு வார காலத்திற்குள் தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதனை பெற்றுக் கொண்டு அவர் புகாரை பரிசீலித்து அதன்மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154-ன்படி உடனடியாக வழக்குப் பதிய வேண்டும். மேலும், வழக்குப் புலன் விசாரணையை விரைவாக முடித்து, 6 மாத காலத்திற்குள் எவ்வளவு விரைவாக முடியுமோ அதற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வி.சுரேஷ், நாகசைலா, அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர் எம்.ஆர்.தங்கவேல் ஆகியோர் ஆஜரானார்கள்.

Sunday, December 02, 2007

புதுச்சேரி "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - நிதி தாரீர்!

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 அன்று, ஒரு நாள் முழுவதும், "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது.

காலை முதல் மாலை வரை கணினி துறையில் நன்கு பட்டறிவு உடைய இளம் அறிஞர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

மாலை நிறைவு விழாவில் புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி, பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.

கணினியில் தமிழ் மொழி கோலோச்சிட இதுபோன்ற பயிற்சிப் பட்டறை அவசியம் என்பதை அறிவீர்கள்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் ஒழுங்கமைக்கும் இப்பயிற்சிப் பட்டறைக்கு தாங்கள் தங்களால் முடிந்தளவு நிதி அளித்து உதவ வேண்டுகிறேன்.

செலவு பட்டியல் உட்பட தகவல்களுக்கும், நிதி அளிக்கவும்:

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்