Wednesday, September 29, 2010

தோழர் அருணபாரதி - சத்யா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!



அன்புத் தோழர் அருணபாரதி - சத்யா ஆகியோர் திடீரென 23.09.2010 அன்று திருமணம் செய்துக் கொண்டனர். அருணபாரதி கூறியுள்ளது போல் 'பெற்றோர் எதிர்ப்புகளை மீறி, புரோகித முறை மறுத்து, தாலி மறுத்து சுயமரியாதை திருமண முறையில், எளிமையாக நடந்த' இத்திருமண வரவேற்பு நிகழ்வில் என்னால் கலந்துக் கொள்ள முடியாமல் போனது வருத்தம் தான்.

இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ள அருணபாரதி - சத்யா ஆகியோருக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!

Friday, September 17, 2010

சென்னையில் "இந்தியாவும் மதசார்பின்மையும் - கருத்தரங்கம்"


மதசார்பற்றோர் மாமன்றம் மற்றும் பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையம் இணைந்து 18.09.2010 சனியன்று, மாலை 4.30 மணியளவில், சென்னை லயோலா கல்லூரியிலுள்ள லாரன்ஸ் சுந்தரம் அரங்கில் "இந்தியாவும் மரசார்பின்மையும் - கருத்தரங்கம்" நடைபெற உள்ளது.

மதசார்பற்றோர் மாமன்றத்தின் நிறுவுநர் வீரபாண்டியன் வரவேற்புரையும், இணைப்புரையும் ஆற்றுகிறார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமைத் தாங்குகிறார்.

'உலகப் பார்வையில் இந்திய மதசார்பின்மை' என்ற தலைப்பில் பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மைய செயல் இயக்குநரும், லயோலா கல்லூரி செயலர் - தாளாளருமான  முனைவர் ஜோ.ஆருண் தொடக்கவுரை ஆற்றுகிறார்.

'குஜராத் - என்ன நடக்கிறது' என்ற தலைப்பில் புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன், 'காவிமயமும் கோட்சேக்களும்' என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் அருணன், 'இந்திய மதசார்பின்மையும், நமது கடமையும்' என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

தோழமையின் இயக்குநர் தேவநேயன் நன்றியுரை ஆற்றுகிறார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பெண் தற்கொலை: நீதி விசாரணை நடத்த கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 17.09.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பானுமதி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

 புதுச்சேரி ஞானப்பிரகாசம் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் விஜயகுமார் என்பவர் பெத்துச்செட்டிப்பேட்டையை சேர்ந்த மோகன்ராஜின் மகள் சுகன்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவே இருவரும் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதுகுறித்து நேற்று (16.09.2010) லாஸ்பேட்டை போலீசார் இருவீட்டாரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சமரசம் செய்துள்ளனர்.

அப்போது தன் மகன் விஜயகுமாரின் மீது கோபம் கொண்ட பானுமதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன் மகனைத் தாக்க முயன்றுள்ளார். அப்போது போலீசார் அவரை தடுத்துள்ளனர். அதன்பின்னர் அவர் அந்த கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டு காவல்நிலையத்திற்கு உள்ளேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை போலீசார் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவுடன் அவர் இறந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தைப் போலீசார் மூடிமறைக்கும் விதமாக பானுமதி காவல்நிலையத்திற்கு வெளியே சென்று தற்கொலை செய்துக் கொண்டதாக வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். எங்களது விசாரணையில் பானுமதி காவல்நிலையத்தில் தான் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது உறுதியாகிறது. சம்பவம் நடந்த பின்னர் உயர்அதிகாரிகளின் நேரடி ஆலோசனைப்படி காவல்நிலையத்தில் படிந்திருந்த ரத்தக் கறைகளைப் கழுவி போலீசார் தடயங்களை அழித்துள்ளனர். இதனைப் பொதுமக்களும், சம்பவத்தைக் கேள்விப்பட்டு அங்கு சென்ற சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும் பார்த்துள்ளனர்.

 காவல்நிலையத்தின் உள்ளே நடந்த சம்பவம் என்பதால் இது சந்தேகத்திற்கு இடமின்றி காவல்நிலைய மரணம் தான். உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் சுட்டிகாட்டியுள்ளது போல் காவல்நிலையத்திற்கு உள்ளே போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட பின்னால் எந்த சம்பவம் நடந்தாலும் அதற்குப் போலீசார்தான் முழுப் பொறுப்பு. ஆனால், பட்டப்பகலில் பலர் முன்னிலையில் நடந்த சம்பவத்தைப் போலீசார் மூடிமறைப்பது தவறிழைத்த போலீசாரை காப்பாற்றும் நோக்கம் கொண்டதாகும்.


 திருமணம் போன்ற பெண்கள் தொடர்புடைய விவாகரங்களை விசாரிக்க அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் இருக்கும்போது லாஸ்பேட்டை போலீசார் இந்த காதல் திருமணப் பிரச்சனையை விசாரித்ததே அடிப்படையில் தவறானது.

 நடந்த உண்மைச் சம்பவத்தை வெளியே சொல்லக் கூடாது என இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ள இறந்தவரின் குடும்பத்தினரையும், பெண் வீட்டுக் குடுமபத்தினரையும் போலீசார் மிரட்டுள்ளதாகவும் தெரிகிறது.         

எனவே, இதுகுறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 174-ன் படி சந்தேக மரணம் எனப் போடப்பட்டுள்ள வழக்கைப் பிரிவு 176 (1-A)-ன் படி காவல்நிலைய மரணம் என மாற்றி பதிவு செய்ய வேண்டும். மேலும், மேற்சொன்ன சட்டப் பிரிவில் கூறியுள்ளது போல் நீதித்துறை நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பிரேத பரிசோதனையை மருத்துவர்கள் அடங்கிய குழு மூலமும், வீடியோவில் பதிவுச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இதுகுறித்து, துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் (சட்டம்–ஒழுங்கு) உள்ளிட்டவர்களுக்கு விரிவான அறிக்கை ஒன்றை அனுப்ப உள்ளோம்.

Wednesday, September 08, 2010

ஊழல் அதிகாரி அரிகரனைப் பாதுகாக்கும் தலைமைச் செயலக அதிகாரிகளுக்குக் கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 08.09.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

லலித் கலா அகாடமியின் அதிகாரி அரிகரனை பணி நீக்கம் செய்து அமைச்சர் கோப்பில் கையெழுத்திட்ட பின்பும், அவருக்கு பதவி நீக்க ஆணையை வழங்காமல் அவரை பாதுகாக்கும்  நோக்கோடு செயல்படும் தலைமைச் செயலக அதிகாரிகளின் போக்கை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிகிறோம்.

லலித் கலா அகாடமியின் அதிகாரி அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதல்வராக இருந்த போது செய்த ஊழல், முறைகேடு, அரசு அனுமதியின்றி வெளிநாடு சென்றது குறித்து  விசாரிக்க அரசு உயர் அதிகாரிகளான தேவநீதிதாஸ், ராகேஷ் சந்திரா மற்றும் ஏ.எப்.டி. மேலாண் இயக்குநர் எஸ்.டி. சுந்தரேசன் ஆகியோர் தலைமையில் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த விசாரணைக் குழுக்கள் முன்பு அரிகரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பலவும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

 இதனைத் தொடர்ந்து ஊழல் அதிகாரி அரிகரனை பணிநீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில், கடந்த மார்ச் 23 அன்று மாணவர்களைத் திரட்டி சட்டசபை முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். தற்போது அவரை பணிநீக்கம் செய்து கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் ஷாஜகான் உத்தரவிட்டுள்ளார். 

ஆனால், அரிகரனை பணிநீக்கம் செய்துள்ள கோப்பு தற்போது கலைப் பண்பாட்டுத் துறை செயலர் வசம் உள்ளது. அரிகரனுக்கு பணிநீக்க ஆணை வழங்குவதைத் தடுத்து, அவரை பாதுகாக்கும் வகையில் தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் செயல்படுவதாக தகவல் வந்துள்ளது. தவறு செய்த அதிகாரியைப் பாதுகாப்பது அரசு நிர்வாகத்தையே சீர்குலைத்து விடும் என அரசுக்குச் சுட்டிக்காட்டுகிறோம்.

 மேலும், அரிகரன் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லும் வகையில் அவருக்கு வெளிநாடு செல்ல தலைமைச் செயலக அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளதாகவும் தெரிகிறது. துறை நடவடிக்கையை எதிர்நோக்கி இருக்கும் அதிகாரியை வெளிநாட்டிற்குச் செல்ல அனுமதிப்பது ஊழல், முறைகேட்டிற்குத் துணைப் போவதாகும்.  

 எனவே, இதில் துணைநிலை ஆளுநர் அவர்கள் தலையிட்டு ஊழல் அதிகாரி அரிகரனுக்கு உடனடியாக பணிநீக்க ஆணையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வெளிநாடு செல்ல வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

Friday, September 03, 2010

கடலூர் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் குறவர் இன இளைஞர் அடித்துக் கொலை: போலீசாரை கைது செய்ய கோரிக்கை!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம். நிஜாமுதீன்,  தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் பெ. கிருஷ்ணமூர்த்தி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கடலூர் பொறுப்பாளர் இரா. பாபு, மக்கள் கண்காணிப்பகம் பொறுப்பாளர் ஆ. ஜெயராமன் ஆகியோர் 03.09.2010 அன்று கட்லூரில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் குறவர் வகுப்பைச் சேர்ந்த ரவி என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு, சம்பவத்தோடு தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவுச் செய்து, உடனடியாக அனைவரையும் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.

நடந்த சம்பவத்தின் சுருக்கம்:

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், தாண்டவன்குப்பம் கிராமத்தில் வசித்து வந்த குறவர் வகுப்பைச் சேர்ந்த ரவி (வயது: 38), த/பெ. கலியன் என்பவரை, கடந்த 16.08.2010 அன்று இரவு 1.00 மணியளவில், கடலூர் மாவட்ட போலீசார் சுமார் 7 பேர், அவரை அடித்து உதைத்து, ஒரு டாடா சுமோ காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த அவருடைய மனைவி கஸ்தூரி (வயது: 30) எதற்காக என் கணவரை இழுத்துச் செல்கிறீர்கள் எனக் போலீசாரிடம் கேட்டதற்கு அவரை தகாத வார்த்தைகள் கூறி மிரட்டியதோடு, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கலியையும், மேலும் பீரோவில் இருந்த நகைகள், பன்றி விற்று வைத்திருந்த ரூ. 40 ஆயிரத்தையும் திருடிச் சென்றுள்ளனர். போலீசார் அனைவரும் சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்துள்ளனர். மேலும், மேற்சொன்ன ரவியை எங்குக் கொண்டு செல்கிறோம் என்பதைப் பற்றிய தகவல் எதையும் போலீசார் தெரிவிக்கவில்லை.     

 இந்நிலையில், 17.08.2010 அன்று இரவு சுமார் 1.00 மணியளவில், தாண்டவன்குப்பத்தில் உள்ள ரவியின் வீட்டிற்கு சுமார் 7 போலீசார் சென்றுள்ளனர். அதில் ஒரு போலீஸ்காரர் தவிர அனைவரும் சீருடை இல்லாமல் இருந்துள்ளனர். அங்கு இருந்த ரவியின் மனைவி கஸ்தூரியிடம் உன் வீட்டுக்காரரை ஒப்படைக்க வேண்டும், இந்த தாளில் கையெழுத்துப் போடு என்று கேட்டு மிரட்டுயுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவரை தகாத வார்த்தைகள் கூறி முதுகில் குத்தியுள்ளனர். போலீசுக்குப் பயந்துக் கொண்டு கஸ்தூரி அந்த தாளில் கையெழுத்துப் போட்டுள்ளார். மேலும், அந்த போலீசார் கஸ்தூரியிடம் மறுநாள் காலை கடலூருக்கு வந்து அவரது கணவர் பாடியைப் பெற்றுக் கொள்ளவும் எனத் தெரிவித்துள்ளனர். பின்னர், கஸ்தூரி 19.08.2010 அன்று சென்னை சென்று தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத்தினர் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட ஆலோசனை செய்துவிட்டு கடலூர் திரும்பியுள்ளார். 

 20.08.2010 அன்று கடலூர் அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, தன் கணவரது உடல் ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்து முடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்வதற்கு முன்னர் தன் கணவரது உடலைப் பார்ப்பதற்குக்கூட போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர், அன்றைய தினம் மாலையே தனது கணவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பரிந்தல் என்ற கிராமத்தில் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

 இதனிடையே, 18.08.2010 அன்று மாலை 3.30 மணியளவில், சாத்திப்பட்டு கிராமத்தில் உள்ள முந்திரிதோப்பில் போலீஸ் காவலில் இருந்து மேற்சொன்ன ரவி தப்பி ஓடும் போது தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார் என காடாம்புலியூர் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்றை போலீசார் பதிவுச் செய்துள்ளனர். குற்ற எண். 351/10 குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 176 (1-A). பாதிக்கப்பட்ட ரவியின் மனைவி தன் கணவரைப் போலீசார் அடித்துக் கொலை செய்துவிட்டனர் எனப் புகார் அளித்துள்ளார். தற்போது பண்ரூட்டி நீதித்துறை நடுவர் எண். 2-ன் நீதிபதி ஈஸ்வரன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

எமது விசாரணையில் தெரிய வந்த உண்மைகள் / பார்வைகள்:

விழுப்புரம் மாவட்டம், திருநாவலூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விழுப்புரம் – கடலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தலைமையில் ஒரு போலீஸ் விசாரணைக் குழு ஒன்றை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மாசானமுத்து அமைத்துள்ளார். இக்குழுவில் கடலூர் மாவட்டத்தில் இருந்து பண்ரூட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் உள்ளிட்ட பல போலீசார் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவில் உள்ள மேற்சொன்ன போலீசார் தான் மேற்சொன்ன ரவியை அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்று நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்கிச் சித்த்ரவதைச் செய்துள்ளனர். சித்தரவதைத் தாங்க முடியாமல் மேற்சொன்ன ரவி காவல் நிலையத்திலேயே இறந்துப் போய் உள்ளார். மேலும், ரவியின் உடம்பில் பல் இடங்களில் காயம் இருந்துள்ளதை அவரது உறவினர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் பார்த்துள்ளனர்.

மேற்சொன்ன கொள்ளை சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ரவியின் தம்பி 1) கெடிலத்தைச் சேர்ந்த ரமேஷ் (32), த/பெ. கலியன், அவரது உறவினர்களான 2) சுந்தரமூர்த்தி (30), த/பெ. கலியபெருமாள், 3) வடக்கு இருப்பைச் சேர்ந்த ஜெயராமன் (35) த/பெ. முனுசாமி, 4) பாலா (25) த/பெ. முனுசாமி, 5) காட்டுக்கூடலூரைச் சேர்ந்த கொளஞ்சி (30) த/பெ. மாயவன், 6) நெய்வேலி 1-ஆம் பிளாக்கைச் சேர்ந்த விஜயக்குமார் (23), த/பெ. ராமலிங்கம், 7) ராமலிங்கம் (60) த/பெ. குப்பன், 8) புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த ஆனந்தஓளி (24) த/பெ. மாயவன் ஆகியோரையும் மேற்சொன்ன போலீசார் பிடித்துச் சென்று நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வைத்திருந்துள்ளனர். ரவியை போலீஸ் காவல் வைத்து அடித்துச் சித்தரவதைச் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்சொன்ன அனைவருமே நேரடியாக பார்த்துள்ளனர். இந்த காவல்நிலைய மரணத்திற்கு மேற்சொன்ன இவர்கள் அனைவருமே கண்ணுற்ற சாட்சிகள் ஆவர். தற்போது இந்த 8 பேர் மீதும் போலீசார் பொய் வழக்குப் போட்டு அனைவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

ரவியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய டி. கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 11 கட்டளைகளில் ஒன்றைக்கூட போலீசார் பின்பற்றவில்லை. 

மேற்சொன்னவற்றின் அடிப்படையில் பார்த்தால் பண்ரூட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம்  உள்ளிட்ட 10 போலீசார் தான் இந்த காவல் நிலைய கொலைக்குக் காரணமானவர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது.

குற்றமிழைத்த போலீசார் தங்கள் மீதான சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த 22.08.2010 அன்று இளவனாசூர் கோட்டையைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவி திலகவதியின் கணவர் சேனாதிபதி மூலம் போலீசார் பரிந்தலில் உள்ள கொல்லப்பட்ட ரவியின் அண்ணன் தண்டபாணியிடம் ரூ. 2 லட்சம் கொடுத்துவிடுகிறோம், இத்தோடு இந்த பிரச்சனையை விட்டுவிடுங்கள் எனக் கூறி பேரம் பேசியுள்ளனர். இதுகுறித்து, பண்ரூட்டி நீதித்துறை நடுவர் விசாரணையின் போது தண்டபாணி புகார் கூறியுள்ளார். 

அதோடு மட்டுமல்லாது, பண்ரூட்டி நீதித்துறை நடுவர் விசாரணையை சீர்குலைக்கும் வேலையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொல்லப்பட்ட ரவியின் மனைவி கஸ்தூரிக்கு பண்ரூட்டி நீதித்துறை நடுவரிடம் இருந்து 25.08.2010 அன்று மதியம் 3.00 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பாணை வந்துள்ளது. இந்நிலையில், 24.08.2010 அன்று இரவு காடாம்புலியூர் போலீசார் ஒருவர் மேற்சொன்ன கஸ்தூரியை தொலைபேசியில் அழைத்து பண்ரூட்டி நீதிமன்றத்திற்கு விடுமுறை. விசாரணை வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணைக்கு வர வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

அதேபோல், 28.08.2010 அன்று மேற்சொன்ன இளவனாசூர் கோட்டையை சேர்ந்த சேனாதிபதியுடன் இரண்டு போலீசார் பரிந்தலில் உள்ள ரவியின் அண்ணன் தண்டபாணியின் வீட்டிற்குச் சென்று ரூ. 2 லட்சம் தருவதாக மீண்டும் அவரிடம் பேரம் பேசியுள்ளனர்.

மேலும், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் இந்த வழக்கின் கண்ணுற்ற சாட்சிகளில் ஒருவரான கொல்லப்பட்ட ரவியின் தம்பி ரமேஷை போலீசார் சிறையில் மனு எதுவும் போடாமல் சட்டவிரோதமாக சந்தித்து, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது, நீதிபதி முன்பு சாட்சியம் அளிக்கக் கூடாது என  மிரட்டியுள்ளனர்.

ரவியை காவல்நிலையத்தில் அடித்து சித்தரவதை செய்துக் கொலை செய்த போலீசார் மீது எந்த ஒரு சிறு நடவடிக்கையும் இதுநாள் வரையில் எடுக்காததுதான் குற்றமிழைத்த போலீசார் இதுபோன்று சாட்சியங்களை அழிப்பதும், சாட்சிகளை மிரட்டுவதும் என தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்படுவதற்குக் காரணம்.  
      

எமது கோரிக்கைகள்:

1)    ரவியை அடித்துச் சித்தரவதை செய்து கொலை செய்த பண்ரூட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் உள்ளிட்ட 10 போலீசார் மீதும் கொலை வழக்குப் பதிவுச் செய்து கைது செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவுக்கு உடனடியாக மாற்ற வேண்டும். 

2)    குற்றமிழைத்த போலீசார் தங்கள் பதவியைப் பயன்படுத்தி சாட்சியங்களை அழிப்பதும், சாட்சிகளை மிரட்டுவதும் தடுக்கப்பட உடனடியாக மேற்சொன்ன போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் மீது துறை விசாரணைக்கு உத்தரவிட்டு அனைவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

3)    பாதிக்கப்பட்ட ரவியின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது பிள்ளகளின் படிப்புச் செலவை அரசு ஏற்க வேண்டும்.

4)    ரவி கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சிகள் அனைவருக்கும் உரிய பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். பொய் வழக்கில் சிறையில் உள்ள ரவியின் உறவினர்களான இந்த வழக்கின் கண்ணுற்ற சாட்சிகள் 8 பேர் மீதான வழக்கைத் திரும்ப்ப் பெற்று, அனைவரையும் உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும்.

5)    குற்றவாளிகளை அடையாளம் காணும் பொருட்டு சிறையிலிருக்கும் கண்ணுற்ற சாட்சிகளைக் கொண்டு உடனடியாக அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும்.

6)    திருட்டு வழக்குகளில் போலீசார் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இருளர், குறவர் போன்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக பாவித்து விசாரணைக்கு அழைத்துச் செல்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சமூகத்தையே குற்றவாளியாக கருதுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

7)    ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய டி. கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 11 கட்டளைகளைப் போலீசார் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளர் சந்திப்பின் போது, கொலை செய்யப்பட்ட ரவியின் மனைவி கஸ்தூரி மற்றும் அவரது நான்கு பிள்ளைகளும் உடன் இருந்தனர். 

Saturday, August 28, 2010

அரசாணைப்படி பிராந்திய இடஒதுக்கீடு அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 28.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்ட நிலையில் பிராந்திய இடஒதுக்கீடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி அரசுக் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே காரைக்கால், மாகே, ஏனாம் பகுதி மாணவர்களுக்குப் பிராந்திய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு கடந்த 2006-ஆம் ஆண்டு அரசுக் கல்லூரிகளில் நடக்கும் உயர் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் காரைக்காலுக்கு 18 சதம், மாகேவிற்கு 4 சதம், ஏனாமிற்கு 3 சதம் என பிராந்திய இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது.

“…it has been decided that the special allocation in admission to various professional degree courses offered by Government sponsored colleges, for the candidates of Karaikal, Mahe and Yanam regions shall respectively be 18%, 4% and 3% of seats earmarked to the candidates of Puducherry Union Territory.

- G.O. Ms. No. 99, Chief Secretariat (Education), dated 10.08.2006.

இதன்படி, புதுச்சேரி அரசுப் பொறியியல் கல்லூரியிலும், அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத காரணத்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் காரைக்கால், மாகே, ஏனாம் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பிராந்திய இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அரசு கல்லூரிகளுக்கு மட்டுமே இந்த பிராந்திய இடஒதுக்கீடு என மேற்சொன்ன அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால், அரசுப் பொறியியல் கல்லூரியில் மட்டுமே பிராந்திய இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிராந்திய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்களைச் சேர்க்க அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துவிட்ட நிலையில், அராசணையில் கூறியுள்ளபடி அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே பிராந்திய இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிராந்திய இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை.

ஆனால், புதுச்சேரி அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் சேர்த்து பிராந்திய இடஒதுக்கீடு வழங்க முடிவுச் செய்துள்ளது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும். மேலும், அரசாணையில் “அரசுக் கல்லூரிகளுக்கு” (Government sponsored colleges) மட்டுமே பிராந்திய இடஒதுக்கீடு என தெளிவாக குறிப்பிட்டுவிட்டு, தற்போது அரசே அதை மீறுவது தவறான போக்காகும்.

பிராந்திய இடஒதுக்கீடு குறித்து அரசு போட்ட மேற்சொன்ன அரசாணை சரியானது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், அந்த அரசாணையை மீறி தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடஒதுக்கீடு வழங்குவது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.

ஒட்டுமொத்தமாக பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாகும். இருந்தாலும், அரசு தான் போட்ட அரசாணையை தானே மீறுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு இதனை எடுத்துக் கூறுகிறோம்.  

எனவே, புதுச்சேரி அரசு மேற்சொன்ன அரசாணையை மதித்து அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே பிராந்திய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிராந்திய இடஒதுக்கீடு வழங்குக் கூடாது.

இதுகுறித்து, துணைநிலை ஆளுநர், முதல்வர், உயர்கல்வி அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித் துறை செயலர், சென்டாக் அமைப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு மனு அனுப்ப உள்ளோம்.

Monday, August 23, 2010

புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' ஆதரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 23.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் நாளை (24.08.2010) எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் எங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் பெற்று, இந்த கல்வி ஆண்டு முதலே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும், அரசியல் சட்டத்திற்கு எதிரான பிராந்திய இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிகைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நடைபெறும் இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆதரவுத் தெரிவித்துக் கொள்கிறோம். முழு அடைப்புப் போராட்டம் வெற்றிப் பெற அனைத்து தரப்புப் மக்களும், மாணவர்களும் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டுமென வேண்டுகிறோம்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத் தீர்மானங்கள்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் 22.08.2010 ஞாயிறன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 1.00 மணி வரையில் வணிக அவையில் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் புதுச்சேரி நகரம் மற்றும் கிராம அளவில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு தலைவர் கோ. அ. ஜெகன்நாதன் கலந்துக் கொண்டார். 

கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1)     இந்திய அரசியல் சாசனத்திற்கும், மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பிற்கும் எதிராக உள்ள பிராந்திய இடஒதுக்கீட்டை முற்றிலுமாக ரத்து செய்ய புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், மாணவர்களையும், பொதுமக்களையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிவரும் என புதுச்சேரி அரசுக்கு எச்சரிக்கிறோம்.  

2)     புதுச்சேரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்று, இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கையை நடத்த புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3)     புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கும், மீனவர்களுக்கும் தலா 2 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துள்ள புதுச்சேரி அரசுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், முஸ்லிம்களும், மீனவர்களும் இந்த கல்வி ஆண்டிலேயே இடஒதுக்கீட்டின் பயனை அடையும் வகையில் உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.

4)     துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில் புதுச்சேரி அரசு துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், இத்திட்டத்தை எதிர்த்து அனுப்பப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த சிறப்புத் தணிக்கைக் குழுவின் விசாரணை அறிக்கையை உள்துறை அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தில் நடந்த ஏராளமான குறைபாடுகள், முறைகேடுகள், ஊழல்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

5)     புதுச்சேரியில் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு உரிய நிதி, அலுவலகம், பணியாள், நலத் திட்ட விண்ணப்பங்கள் உள்ளிட்ட அதிகாரங்கள் கேட்டு நீண்ட காலமாகப் போராடும் பஞ்சாயத்துத் தலைவர்களின் கோரிக்கையை தொடர்ந்துப் புறக்கணித்து வரும் புதுச்சேரி அரசைக் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரி அரசு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.   

6)     புதுச்சேரி கல்வித் துறை சார்பில் தேர்வுச் செய்யப்பட்ட ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தப்பட்டு ஊழல் நடந்துள்ளது பற்றி ஆதாரத்துடன் புகார் செய்தும், பல்வேறு கட்டப் போராட்டம் நடத்தியும் புதுச்சேரி அரசு இதுவரையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சுந்தரவடிவேலு உள்ளிட்ட அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரி அரசு இதுகுறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

7)     புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்படும் புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, புகார் கூறப்படும் அதிகாரிகளுக்கே அப்புகாரை அனுப்பி வைத்து கருத்து கேட்பது முற்றிலும் தவறான போக்காகும். எனவே, புதுச்சேரி மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட துணை நிலை ஆளுநர் தவறு செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஊழல், முறைகேடற்ற நிர்வாகத்தை உருவாக்க வேண்டும்.

8)     1989-ஆம் ஆண்டு முதல் மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டு வரும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாடு வரும் 2011 ஜனவரி மாதம் புதுச்சேரியில் நடத்தப்படும். இம்மாநாட்டில், அகில இந்திய அளவிலான மனித உரிமை ஆர்வலர்கள், முன்னாள் நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்துறை அறிஞர்களை அழைப்பது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

9)     மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயல்பாடுகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல “குரல்” என்ற பெயரில் ஒரு செய்தி மடலைத் தொடர்ந்து நடத்துவது எனக் இக்கூட்டம் முடிவுச் செய்கிறது.

10)    மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து ஆதரவுத் தந்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியத் தெரிவித்துக் கொள்கிறது. 

Wednesday, August 11, 2010

புதுச்சேரி பிராந்திய இடஒதுக்கீடு ரத்து: அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 11.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பிராந்திய இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசு சார்பில் உரிய ஆதாரங்களை முன் வைத்து வாதாடாததால் புதுச்சேரி பகுதிக்கான 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதன் மூலம் புதுச்சேரி அரசு மக்களுக்கு மிகப் பெரும் துரோகம் இழைத்துள்ளதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.

புதுச்சேரி அரசு உயர் கல்வியில் காரைக்காலுக்கு 18 சதம், மாகேவிற்கு 4 சதம், யேனாமிற்கு 3 சதம் என  மொத்தம் 25 சதவீத இடஒதுக்கீட்டை பிராந்திய அளவில் வழங்கி கடந்த 2006-ல் உத்தரவிட்டது. இதனால், புதுச்சேரி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீதமுள்ள 75 சதவீத இடஒதுக்கீட்டை புதுச்சேரி பகுதிக்கு ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து அரசு புதுச்சேரி பகுதி மாணவர்களுக்கு 75 சதவீத இடங்களை ஒதுக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், பிராந்திய இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கடந்த 6.8.2010 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், புதுச்சேரிக்கான பிராந்திய இடஒதுக்கீட்டை நியாயப்படுத்தியும், அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தின் முன் வைக்காததாலும் தான் புதுச்சேரிக்கான பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இதன் மூலம் புதுச்சேரி பகுதிக்கான 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு வருவதற்கு புதுச்சேரி அரசுதான் முழுக் காரணம் என்பது தெளிவாகிறது.

(Judgment Para: 34. Thus, in the absence of any material placed before this court, to justify the reservation of 75% of the seats for the Puducherry region, we are inclined to hold that such reservation is bad in law. Accordingly, the reservation in respect of 75% of seats for the Puducherry region requires to be set aside.)

மேலும், இவ்வழக்கில் புதுச்சேரி அரசு சார்பில் ஆஜராகிய கூடுதல் சோலிட்டர் ஜெனரல், புதுச்சேரி பிராந்திய இடஒதுக்கீட்டை தொடர முடியாது என்றும், வரும் 2011 – 2012 கல்வி ஆண்டில் இந்த இடஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு அறிவுரை கூறியுள்ளதாக கூறியதை நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். கூடுதல் சோலிட்டர் ஜெனரல் கூறிய அறிவுரையை அடுத்து அரசு புதுச்சேரி பிராந்திய இடஒதுகீட்டை பாதுகாக்க எநதவித நடவடிக்கையும் எடுக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், இவ்வழக்கில்

கூடுதல் சோலிட்டர் ஜெனரலுக்கு அரசு சார்பில் எதாவது அறிவுரை வழங்கப்பட்டுள்ளதா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.   

(Judgment Para: 28. … It is relevant to mention at this juncture that the learned Additional Solicitor General appearing for the Government of Puducherry had submitted that he has advised the Government of Puducherry that such reservation for the Puducherry region cannot be sustained and that steps would be taken to delete such reservation from the next academic session i.e. 2011 – 2012.)

புதுச்சேரி பிராந்திய இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் 3 ஆண்டுகள் புதுச்சேரியில் தொடர்ந்துப் படித்த மாணவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்ற அரசின் உத்தரவும் செல்லாததாகிவிட்டது. இதனால், 3 ஆண்டுகள் தொடர்ந்து புதுச்சேரியில் படிக்காத மாணவர்களும் இடஒதுக்கீடு பெற முடியும் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

அரசின் இந்த உத்தரவால் 3 ஆண்டுகள் தொடர்ந்து புதுச்சேரியில் படிக்காத மாணவர்கள் சென்டாக்கிற்கு விண்ணப்பம் செய்யாமல் விட்டுவிட்டனர். தற்போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, இந்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மீண்டும் அவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் தகுதிப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, பின்னர் சென்டாக் கவுன்சிலிங் தொடங்கப்பட வேண்டும். 

புதுச்சேரி அரசு சார்பில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து புதுச்சேரி பிராந்திய இடஒதுகீட்டைப் பாதுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

Sunday, August 01, 2010

சமூக சேகவர் பாலாவை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 01.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

சென்டாக் கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு உதவி செய்துக் கொண்டிருந்த பெற்றோர் மாணவர் நலச் சங்கத்தின் தலைவர் பாலாவை தாக்கிய காலாப்பட்டு உதவி ஆய்வாளர் வேலையன் மற்றும் போலீசார் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி காலாப்பட்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்றைய தினம் தனியார் மருத்துவ கல்லூரிகளின் சேர்கைக்கான சென்டாக் கவுன்சிலிங் காலை முதல் தொடங்கி நடந்துக் கொண்டிருந்தது. அப்போது பெற்றோர் மாணவர் நலச் சங்கத்தின் தலைவர் பாலா மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கவுன்சிங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு உதவி செய்துக் கொண்டிருந்தனர். கவுன்சிங்கில் பங்கேற்ற அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பிள்ளைகளுக்கும் இவர்கள் உதவி செய்துள்ளனர்.

இந்நிலையில் மதியம் 3.00 மணியளவில் அங்கு வந்த காலாப்பட்டு உதவி ஆய்வாளர் வேலையன் மற்றும் போலீசார் மேற்சொன்ன பாலாவை சட்டையின் காலரை பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்கியுள்ளனர். அப்போது அங்கு கூடியிருந்த பெற்றோர்கள் போலீசாரிடமிருந்து பாலாவை காப்பாற்றி உள்ளனர்.

மாணவர் நலனுக்காக பாடுபடுவது மட்டுமல்லாது காவல்துறை உயர் அதிகாரிகளோடு நெருக்கமாக இருந்து அவர்களுக்குப் பல்வேறு வகையில் உதவி வரும் பாலாவை போலீசார் தாக்கியது ஆச்சரியத்தை அளிக்கிறது. எந்தவித காரணாமும் இல்லாமல் பாலாவை தாக்கிய போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும், வெளியே இருந்து பாதுகாப்புத் தர வேண்டிய போலீசாரை பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதித்தது யார் என்பதை அரசு விளக்க வேண்டும். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற எந்தவித உருப்படியான நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை இதுபோன்று சமூக சேவை செய்பவர்களைத் தாக்குவது ஏற்புடையதல்ல.

எனவே, பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொதுமக்கள் முன்னிலையில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ள காலாப்பட்டு உதவி ஆய்வாளர் வேலையன் மற்றும் போலீசார் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.