Friday, November 09, 2012

புதுச்சேரியின் நீர் ஆதாரத்தைப் பாழாக்கிய செம்மண் கொள்ளை


முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் மற்றும் பலர் கைதாகி வழக்கை எதிர்க்கொண்டது இந்த செம்மண் பூமியால்தான். இது புதுச்சேரியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள தமிழகப் பகுதி. இந்த வளம் நிறைந்த செம்மண் பூமியை அதிகாரத்தைப் பயன்படுத்தி, சுரண்டி விற்று லாபமடைந்ததுதான் இவர்கள் மீதான குற்றச்சாட்டு. மேலோட்டமாகப் பார்த்தால் வெறுமனே ஒரு ஊழல் என்றே இதை எண்ணத் தோன்றும். ஆனால், இந்த மண் சுரண்டலால் புதுச்சேரியின் ஒட்டு மொத்த நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது என்பது மிகப் பெரும் சோகம். மேலே சொன்ன செம்மண் பூமி விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், நடுமேடு கிராமம் ஆகும்.

புதுச்சேரிக்கு முழுவதுக்கும் குடிநீர் வழங்கிய பகுதி முத்தரையர்பாளையம். இது இந்த செம்மண் பூமிக்கு மிக அருகிலிருக்கும் சிறிய ஊர். நான் சிறுவனாக இருந்த போது இங்கிருந்து தான் நகரத்திற்கு குடிநீர் வரும். அவ்வளவு இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த நீரைப் பருகியவர்கள் வெளியூர் சென்றாலும் கையில் ஒருபுட்டியில் இந்த நீரை எடுத்துச் சென்று அருந்துவர். புதுச்சேரியில் தண்ணீர் நன்றாக இருக்கும் என்றால் அது முத்தரையர்பாளையம் தண்ணீரைத்தான் குறிக்கும்.

மழை பெய்யும் காலங்களில் உபரி நீர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையில் தேக்கி வைக்கப்படும். இந்த நீர் செஞ்சி ஆற்றில் தேங்கி, சுத்துக்கேணி வாய்க்கால் வழியாக புதுச்சேரியின் நீர் ஆதாரமான உசுட்டேரிக்கு வந்து சேரும். உசுட்டேரி புதுச்சேரியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள 12 சதுர கி.மீ. அளவுள்ள ஏரி. இந்த ஏரியின் வட கிழக்குப் பகுதி தமிழகப் பகுதி. இந்த ஏரியில் தேங்கி நிற்கும் நீர் புதுச்சேரிக்கு மிகப் பெரிய நீர் ஆதாரம். இப்படி தேக்கி வைக்கப்படும் இந்த நீர் நிலத்தடி நீராக வடிந்து இந்த செண்மண் பூமிக்கு அடியில் ஓடி வந்து முத்தரையர்பாளையத்தைச் சேரும். உசுட்டேரி விஜயநகரத்து ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இந்த ஏரியைப் பாதுகாக்க ஒரு ‘உசுட்டேரி பாதுகாப்பு இயக்கம்’ ஒன்றை உருவாக்கி வைத்துள்ளோம். அது தனிக் கதை.

முத்தரையர்பாளையம் புதுச்சேரி நகரத்திற்கே குடி நீர் வழங்கிய மிகப் பழமையான நீர்தேக்க அமைப்பு கொண்ட பகுதி. இப்போதெல்லாம் நீரை உயரமான நீர்தேக்க தொட்டியில் சேமித்து மக்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால், முத்தரையர்பாளையத்தில் நீரை நிலத்திற்கு கிழே 50 X 50 அடி அளவுள்ள 12 அடி ஆழமுள்ள பெரிய தொட்டிக் கட்டி அதில் சேமித்து வைப்பார்கள். அங்கிருந்து தொடக்கத்தில் நீராவி என்ஜின், பிறகு டீசல் என்ஜின் மூலமும் நீரை இறைத்து குழாய் வழியாக வழங்கி வந்தார்கள். இப்பகுதி கடல் மட்டத்தைவிட 70 அடி உயரமான பகுதி என்பதால் இயற்கையாகவே நீரோட்டம் புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடையும். இந்த நீர் பகிர்வுத் திட்டம் 1863ல் செயல்பாட்டிற்கு வந்தது. தற்போது முத்தரையர்பாளையம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டும் இங்கிருந்து குடிநீர் வழங்கி வருகிறார்கள். முத்தரையர்பாளையம் நிலத்தடி நீர் மட்டம் தற்போது 250 அடிக்கு கீழே போய்விட்டது. துவக்கத்தில் 30 - 40 அடி ஆழத்தில் நீர் கிடைத்தது என்பது பழங்கதை. இந்த இயற்கை சார்ந்த அறிவியல்பூர்வமான குடிநீர் வழங்கு முறை பிரெஞ்சுக் காலத்தில் உருவாக்கப்பட்டது.

புதுச்சேரியில் 70களில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக் கட்டி குடிநீர் வழங்கும் முறை வந்தது. மக்கள் தொகை பெருக்கம், அண்டை மாநிலத்திலிருந்து குடியேற்றம் என புதுச்சேரியின் மக்கள் தொகை பல்கிப் பெருகிவிட்டது. இதனால், குடிந்நிர் தேவை அதிகமானதால் இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் முறை வந்தது. முதன் முதலின் நீர்தேக்கத் தொட்டி பட்டாணிக் கடை ஜங்ஷனில் கட்டப்பட்டது. பின்னர் ரயில் நிலையம், முத்தியால்பேட்டை என பல இடங்களில் இந்நீர் தேக்கத் தொட்டிகள் உள்ளன. இன்று நிலத்தடி நீரை மட்டுமே நம்பி குடிநீர் விநியோகம் உள்ளது.

இவ்வாறு புதுச்சேரியின் நீர் ஆதாரமான முத்தரையர்பாளையத்திற்கு நீர் வரத்து தடுக்கப்பட்டதற்கும், நீர் மாசுப்பட்டதற்கும் மேலே சொன்ன செம்மண் கொள்ளை மிகப் பெரும் காரணம். முதல் 3 அடியில் இருக்கும் மணல், அதற்குக் கீழே இருக்கும் செம்மண், அதற்கும் கீழே கூழாங்கற்கள் என அனைத்து வகை இயற்கை வளங்களையும் சுரண்டினார்கள். இந்த கூழாங்கற்களுக்கு கீழேதான் சுவையான, தூய்மையான நீர் ஓடும். செழுமையான செம்மண்ணை வாரிச் சென்று காசாக்கிய இந்த அரசியல்வாதிகள் புதுச்சேரியின் நீர் ஆதாரத்தை கெடுத்தார்கள். நீர் ஆதாரம் எப்படி சீர்குலைந்தது என்பதை மட்டுமே இங்கு எழுதியுள்ளேன். அதனால் ஏற்படும் மற்ற அழிவுகள் ஏராளம். இதனால், சுற்றுச்சூழல் சமத்தன்மை முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என்பது சோகத்திலும் சோகம்.

இந்தப் புகைப்படத்தில் உள்ளதைப் பார்த்தால் இந்த செம்மண் கொள்ளை எத்தகையது என்பது முழுமையாக புரியாது. நேரில் பார்த்தால்தான் அதன் கொடூரம் புரியும். வாருங்கள் ஒருமுறை…

Tuesday, November 06, 2012

இடிந்தகரை லூர்துசாமி மீது குண்டர் சட்டம்: சில கேள்விகள்..


கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு அங்கமாக நடந்த கடல் வழி அணுவுலை முற்றுகைப் போராட்டம் சென்ற செப்டம்பர் 10 அன்று நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அரசு ஆவணப்படியே 5000 பேர் கலந்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட இடிந்தகரையை சேர்ந்த சிலுவை கித்தேரியான் மகன் லூர்துசாமி (வயது 68) என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடல் பாசிகளை சேகரித்து விற்று, அதன் மூலம் வாழ்ந்து வருபவர். சென்ற 02.11.2012 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர் மீது குண்டர் சட்டம் பதிந்து உத்தரவுப் பிறப்பித்துள்ளார் (T.P.D.A. No. 6122 dated 2.11.2012). அந்த உத்தரவினைக் காண நேர்ந்தது.

இந்த உத்தரவு சட்டப்படி செல்லுமா, அந்த உத்தரவிலுள்ள நுணுக்கமான ஓட்டைகள் குறித்து எதையும் நான் எழுத விரும்பவில்லை. ஏனென்றால், அவர் மீது போடப்பட்டுள்ள இந்த குண்டர் சட்டம் ‘போர்டில்’ வைத்து உறுதி செய்யப்பட வேண்டும். நாம் அதை எழுதினால் போலீசார் அவற்றை சரிசெய்ய குறுக்கு வழியில் வேறு ஏதாவது செய்வார்கள்.

அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள சில பகுதிகளைத் தங்களின் பார்வைக்கு அப்படியே தருகிறேன்:

பாரா 3-ல் ஒரு பகுதி: திரு. லூர்துசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களான கம்பு, கல் மற்றும் அருவாள் ஆகியவற்றால் காவலர்களை தாக்கி காயம் ஏற்படுத்தினார்கள். வாதி மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் சிறப்பு நிர்வாகத்துறை நடுவர் ஆகியோரை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தார்கள். இதனால் காவல் அதிகாரிகளுக்கும், ஆளிநர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டது. பயங்கரமான ஆயுதங்களால் திரு. லூர்துசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மீதும் “இந்த போலீஸ்கார புண்டமகன்களா கொல்லுங்கடா” என்று சொல்லி தொடர்ந்து தாக்கி திட்டமிட்டபடி கொலை செய்ய முயற்சித்தார்கள். இந்த கொலைவெறி தாக்குதல் காரணமாக காவல்துறையை சேர்ந்த பலருக்கு காயங்கள் மற்றும் கொடுங்காயங்கள் ஏற்பட்டன.

பாரா 4-ல் ஒரு பகுதி: திரு. லூர்துசாமி என்பவரின் செய்கை அந்த பகுதி வாழ் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பெரும் அமைதியின்மையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பொதுமக்களின் பொது அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது.

பாரா 6-ல் ஒரு பகுதி: ஆவணங்களை பரீசிலனை செய்ததிலிருந்து திரு. லூர்துசாமி என்பவர் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வருகிற காரணத்தால் அவர் தமிழ்நாடு சட்டம் 14/1982 பிரிவு 2 (எப்)ல் குறிப்பிட்டுள்ளபடி ஒரு குண்டர் ஆவார் என்பதை நான் மனதார அறிகிறேன்.

இதைக் கவனமாக படித்தால் ஒன்று மட்டும் நமக்குத் தெளிவாகிறது. தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் ‘ரைட்டர்களை’ நாம் பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஆவணமே பொய்கள் கலந்த ஒரு நல்ல புனைக் கதைப் போல் விரிகிறது.

68 வயதான ஒருவருக்கு மன பலம் கூட இருக்கலாம். ஆனால், இவர்கள் சொல்வது போல் தாக்குதலில் ஈடுபடும் அளவுக்கு உடல் பலம் இருக்காது. இன்னொன்று இவர்கள் குறிப்பிட்டுள்ள பயங்கர ஆயுதங்கள் எவை தெரியுமா? கம்பு, கல் மற்றும் அருவாள்.

பொதுமக்களின் பொது அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துவிட்டதாக கூறுகிறது இந்த ஆவணம். ஆனால், இவர் மீது எந்த பொதுமக்களும் புகார் அளிக்கவில்லை. அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்துதான் வழக்குப் போடப்பட்டுள்ளது.

இவர்கள் லூர்துசாமி மற்றும் மேலும் ஒருவர் மீது போட்டுள்ள குண்டர் சட்டம் எதற்கு கொண்டு வரப்பட்டது என்பதை அதன் பெயரை அறிந்துக் கொண்டாலே தெளிவாக தெரியும்.

அந்த சட்டத்தின் முழுப் பெயர்: 1982 ஆண்டு கள்ள சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சார தொழில் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் காணொளி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 14/1982.

இதைப் படிக்கும் போது இன்று அதிகாரத்தில் இருக்கும் பலரும் இந்தச் சட்டப்படி உள்ளே தள்ள வேண்டியவர்கள் என்று நீங்கள் எண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்த சட்டப் பெயரில் உள்ள எந்தக் குற்றத்தை செய்துவிட்டு, 68 வயதில் லூர்துசாமி வேலூர் சிறையில் உள்ளார் என்பதை உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம் என அனைத்து அடக்குமுறை சட்டங்களும் போராட்டம் நடத்தும் மக்கள் மீது ஏவுவதை அரசாங்கங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இந்தச் சட்டங்களை நீக்க வலியுறுத்தி தொடர்ந்துப் போராடுவதே இதுபோன்ற கடும் அடக்குமுறையை முறியடிப்பதாகும்.

Wednesday, October 31, 2012

டிவிட்டரில் விமர்சித்தவர் மீதான புகாரை கார்த்திக் சிதம்பரம் திரும்பப் பெற வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 30.10.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:

டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் விமர்சித்தற்காக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் மீதான புகாரை கார்த்திக் சிதம்பரம் திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

டிவிட்டர் வலைத்தளத்தில் வதேராவைவிட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து குவித்துள்ளதாக பதிவிடப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் அளித்த புகாரின் பேரில் சி.ஐ.டி. போலீசார் குறிஞ்சி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவி என்பவரை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008 பிரிவு 66 ஏ-இன் படி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
கார்த்திக் சிதம்பரத்தின் இந்த செயல் கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கை என்பதை சுட்டிக் காட்டுகிறோம். பொது வாழ்விலுள்ள அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு அவர் உரிய பதிலளிப்பதன் மூலம் எதிர்க்கொண்டு இருந்தால் அதுவே முதிர்ச்சியான நடவடிக்கை ஆகும். அதைவிடுத்து, அவர் போலீசை நாடியிருப்பது கண்டனத்திற்குரியது.
   
இதுபோன்ற சூழ்நிலையில் போலீசாரும் புகார் கொடுத்தவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மெற்கொண்டது தேவையற்ற (Unwanted), அளவுக்கு அதிகமான (Disproportionate) நடவடிக்கை ஆகும். புதுச்சேரி போலீசாரின் இந்த நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.
   
இதுபோன்று வழக்குப் போடுவது சுதந்திரமாக கருத்து கூற வாய்ப்புள்ள டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றை கட்டுப்படுத்தும் முயற்சி என்பதோடு, இணையத் தளங்களில் எழுதி வருபவர்களை அச்சுறுத்தும் போக்காகும்.
   
கருத்துச் சுதந்திரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ‘கருத்து’ என்ற அமைப்பை நடத்தி வந்த கார்த்திக் சிதம்பரம் தொழிலதிபர் மீதான புகாரை திருப்பப் பெற்று கருத்துரிமைக்கு வலுசேர்க்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Friday, October 26, 2012

தந்தை பெரியார் தி.க.வினர் கைதைக் கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்!


திருச்சி சீறிரங்கத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தலைமையில் கடந்த 20 அன்று ‘பிராமணாள் கபே’ பெயர் அழிப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கோவை இராமகிருட்டிணன் உட்பட 112 தோழர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, அனைவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் புதுச்சேரி தந்தை பெரியார் தி.க.வைச் சேர்ந்த வீரமோகன், ம.இளங்கோ, சுரேஷ், தீனதயாளன் மற்றும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் உட்பட 19 பேர் அடங்குவர்,

தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து தந்தை பெரியார் தி.க. சார்பில் சுதேசி பஞ்சாலை அருகில் இன்று (26.10.2012) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியர் தி.க. பொருளாளர்  பாலமுருகன் தலைமைத் தாங்கினார்.  இரா.அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), கோ.சுகுமாரன்  (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), ஜெகன்நாதன்  (மக்கள் வாழ்வுரிமை இயக்கம்), இரா.முருகானந்தம்  (மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்), பா.சக்திவேல் (மனித உரிமை கவுன்சில்), கோ.செ.சந்திரன் (சிங்காரவேலர் முன்னேற்ற கழகம்), எம்.ஏ.அஷ்ரப் (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்), ச.சத்தியவேல் (இந்திய ஜனநாயக கட்சி), கோ.பிரகாஷ் (தமிழர் களம்), அபுபக்கர் (இந்திய தவ்ஹுத் ஜமாத்), கே.சத்தியானந்தம் (புதுச்சேரி மக்கள் நல முன்னணி), மு.ப.நடராஜன் (தமிழர் தி.க.), கோகுல்காந்திநாத் (பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம்), தந்தை பெரியார் தி.க. இளைஞர் அணிச் செயலாளர் ரவி, துணைச் செயலாளர் ராஜசேகர், மாணவரணித் தலைவர் சக்திவேல், அரியாங்குப்பம் தொகுதித் தலைவர் பாஸ்கரன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Wednesday, October 24, 2012

இந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்

வளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதானது, இன்னும் சிலர் தேடப்படுவது முதலியன குறித்து முகநூல் பக்கங்களில் நடை பெறும் விவாதம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கருத்துச் சுதந்திரம், அதன் எல்லை ஆகியன குறித்துக் காலங்காலமாக நடந்து வருகிற ஒரு விவாதத்தின் தொடர்ச்சியே இது. ஒரு இருபதாண்டுகளுக்கு முன் கற்பனை செய்து கூடப் பார்த்திராத அளவிற்குத் தொழில் நுட்ப வளர்ச்சியும் அதன் விளைவான கருத்து வெளிப்பாட்டு முறையும் பெரிய அளவு வளர்ந்துள்ள சூழலில் இன்றைய விவாதம் இன்னும் சற்று விரிந்த தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியதாக மாறியுள்ளது.

அச்சு மற்றும் இதழிய வளர்ச்சி என்பது மிகப்பெரிய ஜனநாயக மாற்றங்களில் ஒன்று என்பது யாரும் மறுக்க இயலாத ஒன்று. அதே நேரத்தில் இந்த ‘ஜனநாயக’ ஊடகங்கள் பெரு முதலாளிகளின் பிடியில் இருந்ததன் விளைவாக, இப்படி உருவான கருத்துச் சுதந்திரம் அதன் வெளிப்பாட்டிற்கு முன்னதாகவே ஒரு தணிக்கையை எதிர் கொள்ள வேண்டியதாக இருந்தது. அரசுகளின் கருத்திற்கும் பெரு முதலாளிகளின் கருத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை என்பதால் இந்தத் தணிக்கை மிகவும் சக்தி வாய்ந்ததாக செயல்பட்டு வந்தது. சமயத்தில் இத்துடன் கூடுதலாக அரசுத் தணிக்கையும் சேர்ந்து கொண்டது.

இருபத்தோராம் நூற்றாண்டின் அடையாளமாக முளைத்துள்ள சமூக வலைத் தளங்கள் இந்த முன் தணிக்கையை இன்று சாத்தியமில்லாமல் செய்துள்ளன. இந்த வலைத் தளங்களும் கூட உலகின் மிகப் பெரிய கார்பொரேட் நிறுவனங்களால் செயல்படுத்தப்படுபவைதான் என்ற போதிலும் இந்தப் புதிய தொழில் நுட்பம் முன்தணிக்கையைச் சாத்தியமில்லாமல் செய்துள்ளது. இது மிகப் பெரிய கருத்துச் சுதந்திர விகசிப்பிற்கு இன்று காரணமாகியுள்ளது. இதுகாறும் எழுதுவதற்குக் களம் கிடைக்காமற் போயிருந்த பலரும் தங்கள் எழுத்து முயற்சிகளை, அரசியல் வெளிப்பாடுகளை எல்லையற்ற சுதந்திரத்துடன் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய தர வர்க்கத்தின் வளர்ச்சி, இத் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் மலிவாகிப் பரவலாதல் என்பதெல்லாம் இந்தக் கருத்து விசாலிப்பில் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளன. இரண்டாண்டுகட்கு முன் அரபுலகில் ஏற்பட்ட புரட்சிகளில் இந்தப் புதிய ஊடகங்கள் வகித்த பங்கைக் கண்டபின்பு அரசுகள் விழித்துக் கொண்டன. இந்த ஊடகங்களைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளிலும் இவற்றைக் கடும் கண்காணிப்பிற்குள் கொண்டு வரும் முயற்சியிலும் இறங்கின. சமூக வலைத் தளங்களைச் செயல்படுத்துகிற கார்பொரேட்டுகள் என்ன இருந்தாலும் கார்பொரேட்கள் தானே. அவை ஒரு குறிப்பிட்ட அளவு எதிர்ப்புக் காட்டியபோதும் ஒரு கட்டத்திற்குப் பின் அரசு கெடுபிடிகளுக்கு வளைந்து கொடுக்க ஆரம்பித்தன.

கூடங்குளம் போராட்டத்தை ஒட்டி இன்று இந்தச் சமூக வலைத் தளங்கள் தமிழகத்தில் கடுமையாகக் கண்காணிக்கப் படுகின்றன. புதிய நபர்கள் யாரேனும் அணு உலைகளுக்கு எதிராக ஒரு பதிவை இட்டால், உடன் அவர்கள் வீட்டிற்கு உளவுத் துறையினர் படை எடுக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

சின்மயி விவகாரத்திற்குத் திரும்புவோம். இது தொடர்பான ஷோபாசக்தியின் முக நூல் பதிவு, அதில் தரப்பட்டுள்ள இணைப்புகள், ‘சவுக்கு’ இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கட்டுரை, சின்மயி வெளியிட்டுள்ள அறிக்கை, தொடர்புடைய சில ட்வீட்டர் பதிவுகள், சில தொலைக் காட்சி விவாதங்கள் ஆகியவற்றைக் காண நேரிட்டது. ஓரளவு பொறுப்புடனும் நடு நிலையுடனும் தத்தம் விவாதங்களை எல்லோரும் முன்வைத்துள்ளனர். 

சென்ற தலைமுறையைச் சேர்ந்த திரை உலக ‘செலிப்ரிட்டிகள்’ போல் பிரச்சினைக்குரிய விஷயங்களில் தலையிடுவதைக் கவனமாகத் தவிர்த்து ஒதுங்கியிராமல், இவர் வளர்ந்து வரும்போதே பல பிரச்சினைகளில் தலையிட்டுக் கருத்துச் சொல்லும் ஆர்வமிக்கவராகத் தெரிகிறது. இதுவும் கூட இந்தத் தலைமுறை உருவாகிவரும் சூழலின் விளை பொருளாக இருக்கலாம். எனினும் இவர் முன்வைக்கும் கருத்துக்கள் பெரும்பாலும் அவரது உயர் சாதி, உயர் மத்திய தர வர்க்கப் பின்னணியின் எல்லைகுட்பட்டதாகவே இருந்துள்ளது. மதவாதம், இட ஒதுக்கீடு முதலிய பிரச்சினைகளில் அவரது கருத்துக்கள் அடித்தள மற்றும் இடது சாரி மனநிலை உடையோரால் ஏற்க முடியாதவையாகவே இருந்துள்ளன. அந்த வகையில் மீனவர் பிரச்சினையில் அவர் நிலைபாடு என்னவாக இருந்திருக்கும் என்பதையும் நம்மால் ஊகிக்க முடிகிறது.

சவுக்கு இணையத் தளம் சரியாகவே சுட்டிக் காட்டியிருப்பதுபோல சின்மயியை ‘வென்றெடுக்கக்’ களம் இறங்கியவர்களின் நோக்கம் அரசியலாக வெளியில் தோற்றமளித்தாலும், ஒரு செலிப்ரிடி, அதுவும் பெண் செலிப்ரிடியுடனான நெருக்கம் என்பதே அவர்களின் முக்கிய லட்சியமாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் சின்மயா தன் கருத்துக்களில் பிடிவாதமாக இருந்தபோது அவர்கள், வழக்கமாக ஒரு பெண் இப்படியான சந்தர்ப்பங்களில் எப்படி எதிர் கொள்ளப் படுவாளோ, அப்படியே எதிர் கொண்டுள்ளனர். அவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட ட்வீட்கள் நமக்குக் காணக் கிடைக்கின்றன. சின்மயி சொன்னதாகச் சொல்லப்படும் விவாதத்திற்கு உரிய கருத்துக்களுக்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. சில இட்டுக் கட்டப்பட்டவையாக உள்ளன.

தன் தரப்புக் கருத்தை சின்மயி வெளிப்படுத்திய பின்பாவது அவர்கள் விட்டிருக்கலாம். அல்லது அவரும் அவரது தாயாரும் தொலை பேசி மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் வேண்டிக் கொண்ட போதிலாவது நிறுத்தியிருக்கலாம். அவர்கள் தமது சீண்டல்களைத் தொடர்ந்துள்ளனர். ஆக, சின்மயி தரப்பினர் காவல்துறையை நாடுவதற்கு எதிர்த் தரப்பினர் ஒரு நியாயத்தை வழங்கியுள்ளனர். காவல்துறை படு தீவிரமாகக் களம் இறங்கியதற்குப் பல காரணங்களை ஊகிக்க முடிகிறது. சின்மயியைக் குற்றம் சாட்டுபவர்கள் சொல்வதுபோல அவர் தரப்பில் செய்யப்பட்ட ‘லாபி’, அவரது செலிப்ரிடி அந்தஸ்து, சின்மயியுடன் சேர்த்து முதலமைச்சர் ஜெயலலிதாவையும் ட்வீட்டியவர்கள் அசிங்கமாக எழுதியது…

பொது வெளிக்கு வரக்கூடிய பெண்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் சமூக வலைத் தளங்களில் பங்கேற்கும் பெண்களும் சந்தித்துக் கொண்டிருப்பதை இவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்போர் உணர முடியும். பாதிக்கப்படும் சிலர் இதை வெளிப்படையாகச் சொல்லி விடுகின்றனர். பலர் இதைச் சொல்வதில்லை. வெளிப்படையான பாலியல் வக்கிரங்களோடு துன்புறுத்துவோர், தமது அரசியல் கறார்த் தன்மை அல்லது ‘புரட்சி’த் தன்மையில் ஒளிந்து கொண்டு துன்புறுத்துவோர் என இவர்களில் குறைந்தபட்சம் இரு ரகங்கள் உண்டு. இன்றைய பிரச்சினையில் சின்மயிக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளவர்கள் பெண்களுக்கு எதிரான இந்தச் சூழலைக் கவனத்தில் இருத்தத் தவறக்கூடாது. 

சின்மயிக்கு எதிராக இன்று முன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்று, அவர் ஆபாச நடனக் காட்சிகளுக்குப் பாட்டிசைக்கவில்லையா? அவர் ஆபாசப் பாடல் வரிகளைப் பாடவில்லையா என்பது. இது மிகவும் மோசமான ஒரு விவாதம். தாம் வன்புணர்ச்சி செய்யப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டும்போது நமது ஆணாதிக்கக் கலாச்சாரம் வழக்கமாகச் சொல்லும், ”அவள் என்ன யோக்கியம்? அவள் நடத்தை தவறியவள் தானே?” என்கிற எதிர்க் குற்றச் சாட்டுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? அவள் மீனவர் பிரச்சினையில் தவறாகப் பேசினாள், விளம்பரத்திற்காகப் புகார் கொடுத்தாள் என்றெல்லாம் சொல்வதும் இத்தகையதே. அவரது தவறான கருத்துக்களை எதிர்த்து நாம் கருத்துப் போராட்டம்தான் செய்திருக்க வேண்டுமே ஒழிய அதற்காக மிரட்டுவது, அசிங்கமாக எழுதுவது என்பதெல்லாம் எப்படிச் சரியாகும்?

முன்தணிக்கை சாத்தியமில்லாத இந்த ஊடகத்தில் பங்கு பெறும் நமக்கு அதிகப் பொறுப்புணர்ச்சி வேண்டும். என்ன வேண்டுமானலும் அவதூறுகளை அள்ளி வீசுவது, பொய்க் குற்றச்சாட்டுகளைக் கக்குவது, பெண்களாயின் அவர்களின் ஒழுக்கத்தைப் பொது வெளியில் கேள்விக்குள்ளாக்குவது, இவற்றை எப்படி நியாயப்படுத்த இயலும்?

புகார் கொடுப்பதன் மூலம் கருத்துச் சுதந்திரதிற்கு ஆப்பு வைக்கப் படுகிறது என்பது சின்மயி எதிர்ப்பாளர்களின் இன்னொரு விவாதம். ஒரு பெண்ணை இப்படித் தாக்கி அவளை வாய்மூட வைப்பதும். சமூக வலைத் தளத்திலிருந்து ஓடவைப்பதும் மட்டும் கருத்துச் சுதந்திரப் பறிப்பு இல்லையா? சுப்பிரமணிய சாமி ட்வீட்டரில் சோனியாகாந்தியை ‘விஷக் கன்னி’ எனச் சொல்வதை சோனியா தாங்கிக் கொள்ளவில்லையா, பொது வெளிக்கு வந்த நீயும் ஏன் சும்மா இருக்கக் கூடாது? என்பது இன்னொரு விவாதம். ஒரு முழு நேர அரசியல்வாதியைப் பார்த்து ‘விஷக் கன்னி’ அல்லது ‘அமெரிக்க அடிவருடி’ எனச் சொல்வதற்கும் வலைத் தளத்தில் எழுதத் தொடங்கியுள்ள ஒரு பெண்ணைப்பார்த்து, “நீ வேசி” எனச் சொல்வதற்கும் வேறுபாடுகள் உண்டு. ஒருவரது நேர்மை குறித்துப் பொய்க் குற்றச் சாட்டுகள் வைப்பது, அவரது அனுமதியின்றி அவரது படங்களை இழிவு செய்யும் நோக்குடன் வெளியிடுவது எல்லாமும் இத்தகையதே. இணையத் தளத்தில் எழுத வந்தவர்களுக்கு அற உணர்வு சார்ந்த சுய தணிக்கை தேவை. அரசியல் கறார்த் தன்மை, கொள்கை உறுதிப்பாடு முதலான எதன் பெயராலும் இந்த அற உணர்வை இழக்கலாகாது.

எள்ளளவும் இது குறித்துக் கவலைப்படாமல் எதை வேண்டுமானலும் எழுதுவது, பின் இதுபோலப் பிரச்சினையை எதிர் கொள்ள நேர்ந்தால் பம்மிப் பின் வாங்குவது என்பது வழக்கமாகிவிட்டது.

சின்மயிக்கு ஒரு வார்த்தை. பொதுக் களத்திற்கு வரும்போது பல மாதிரியானவர்களையும் சந்திக்க நேரும். இன்று இந்தப் பிரச்சினை பெரிய அளவில் பேசப்பட்டுவிட்டது. உங்களைத் துன்புறுத்தியவர்களுக்கு இதுவே போதிய தண்டனை. உங்கள் புகாரை இந்தக் கணத்தில் நீங்கள் திரும்பப் பெறுவது ஒரு நல்ல முடிவாக இருக்கும்.

இந்தப் புகாரின் அடிப்படையில் இந்தப் பிரச்சினையில் அவ்வளவாகத் தொடர்பில்லாத சிலரை சின்மயி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தொல்லை செய்வதாக நேற்று காலை ஒரு நண்பர் கூறினார். அது உண்மையாயின் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று இது. ஏற்கனவே பெண்கள் கொடுத்துள்ள 19 புகார்களில் ஒன்றும் நடவடிக்கை இல்லாதபோது, இதில் மட்டும் ஏன் இந்தத் தீவிரம் என்கிற கேள்விக்கே பதிலளிக்க இயலாத காவல்துறை இத்தகைய அத்துமீறல்களை, அவை உண்மையாயின் கைவிட வேண்டும்.

பார்க்க:

1. சின்மயியிடம் சில கேள்விகள்

 2. சின்மயி செய்தது சரியா? – பி.பி.சி. தமிழ்

3. ஷோபா சக்தி

4. ட்விட்டர்ஸ் கைது (ராஜன் லீக்ஸ்) - சொல்லும் பாடம் என்ன?

5. சின்மயி - சவுக்கு

6. இணையத் தளத் தணிக்கை சரியா? சாத்தியமா? ஒரு குறிப்பு - அ.மார்க்ஸ்

Tuesday, October 23, 2012

குறைந்த மதிப்பெண் எடுத்ததைக் காரணம் காட்டி கல்விக் கடன் மறுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!


வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, கர்நாடகா, கோலார் மாவட்டத்திலுள்ள நூரி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ரூ. 3.15 லட்சம் கல்விக் கடன் வேண்டி பஞ்சாப் நேஷனல் வங்கியில் விண்ணப்பம் செய்துள்ளார். அந்த வங்கி அவர் பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளதைக் காரணம் காட்டி அவருக்கு கல்விக் கடன் வழங்காமல் மறுத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் 'பள்ளிக்கூடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளதைக் காரணம் காட்டி வங்கி கல்விக்கடன் வழங்க மறுக்கக் கூடாது. இதுகுறித்த வங்கியின் சுற்றறிக்கையில் எங்கும் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கடன் வழங்கக் கூடாது எனக் குறிப்பிடப்படவில்லை.

மத்திய அரசு பொருளாதாரத்தில் பலவீனமானவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ரூ. 4 லட்சம் வரை வழங்கப்படும் கடன்களுக்கு முன்றாவது நபரின் கேரன்டி தேவையில்லை. எனவே, அந்த வங்கி கல்விக் கடனை நான்கு வாரத்திற்குள் வழங்க வேண்டும்' எனத் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால், நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் 'அம்பேத்கர் மெட்ரிகுலேஷன் தேர்வில் 750க்கு 287 மதிப்பெண் தான் எடுத்துள்ளார். அதனால்தான் அவருடைய படிப்பிற்கு பரோடா மன்னர் பொறுப்பேற்றுக் கொண்டார்' எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு!

Monday, October 15, 2012

சிறையிலுள்ள மாவோயிஸ்டுகள் இனி “அரசியல் கைதிகள்” - கோ.சுகுமாரன்


ஆயுதம் தயாரித்த வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு கொல்கத்தா சிறையில் இருக்கும் 9 மாவோயிஸ்டுகளை அரசியல் கைதிகள் என வரையறுத்து, அவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்க கொல்கத்தா அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தெரிவித்த எதிர்ப்பை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 8 அன்று வழங்கிய தீர்ப்பொன்றில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்களில் ஒருவரான சத்திரதார் மகதோ மற்றும் 7 மாவோயிஸ்டுகளை அரசியல் கைதிகள் எனக் கூறியுள்ளதை அமர்வு நீதிமன்றம் சுட்டிக்காட்டி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

இதன்படி சிறையில் அரசியல் கைதிகளுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் இவர்களுக்கு வழங்கப்படும். அதாவது தனி அறை, வீட்டுச் சாப்பாடு, செய்தித்தாள்கள், புத்தகங்கள், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை முன்பைவிட சுதந்திரமாக சந்தித்தல் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். 

West Bengal Correctional Services Act 1992 என்ற சட்டப்படி அரசியல் கைதிகள் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் குற்றங்கள் செய்தவர்கள் குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூட அரசியல் கைதிகள் என இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிறையிலுள்ள மாவோயிஸ்டுகள் தங்களை அரசியல் கைதிகளாக கருத வேண்டி நீண்ட காலமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மனித உரிமை ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இது, கொல்கத்தா நீதிமன்ற தீர்ப்பால் நடைமுறைக்கு வந்துள்ளது. 

மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளைத் தீவிரவாதம், பயங்கரவாதம் என முத்திரை குத்தும் போக்கிற்கு இந்த தீர்ப்பு பெருத்த அடியாக அமைந்துள்ளது எனக் கூறி மாவோயிஸ்டுகள் தங்களுக்குக் கிடைத்த வெற்றி என இத்தீர்ப்பை வரவேற்றுள்ளனர். 

இத்தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இந்தியாவெங்கும் மாவோயிஸ்டுகள் சலுகைகளை கேட்பார்கள் என இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக தேசிய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.

Wednesday, September 19, 2012

அப்துல் நாசர் மதானியுடன் இரண்டு மணி நேரம் - அ.மார்க்ஸ் கோ.சுகுமாரன்


கோவை தொடர் வெடிகுண்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஒன்பதரை ஆண்டு காலம் கோவை சிறையில் பிணையின்றி அடைக்கப்பட்டு  இறுதியில் குற்றமற்றவர் என சென்ற ஆகஸ்ட் 1, 2007ல் விடுதலையான கேரள ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’த் தலைவர் அப்துல் நாசர் மதானி அவர்கள் மீண்டும் ஆக்ஸ்ட் 17, 2012ல் பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கர்நாடக அரசால் கைது செய்யப்பட்டது ஒரு சிலருக்கு நினைவு இருக்கக்கூடும். கடும் நோய்வாய்ப்பட்டிருக்கும் அவரைப் பிணையின்றி கர்நாடக அரசும் கடந்த மூன்றாண்டுகளாகச் சிறையில் அடைத்துள்ளது. பெங்களூரு பராப்பன அக்ரகாரத்தில் புதிதாகக் கட்டபட்டுள்ள உயர் பாதுகாப்புச் சிறையில் இருக்கும் அவரை இன்று (17.09.2012) சந்தித்தோம். எங்கள் இருவரைத் தவிர நகரி பாபையா, ஆர்.ரமேஷ், ஷோயப், முகம்மது காக்கின்ஜே (பெங்களூரு), ரெனி அய்லின், ‘தேஜஸ்’ நாளிதழ் ஆசிரியர் முகமது ஷெரீப் (கேரளா) ஆகியோரும் வந்திருந்தனர்.

கர்நாடகச் சிறைகளில் கைதிகளைப் பார்ப்பதற்கான சடங்குகளும், கெடுபிடிகளும் அதிகம். ஏற்கனவே இருமுறை மைசூர் சிறையில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியைச் சந்தித்த அனுபவம் எங்களுக்கு உண்டு. எல்லாச் சடங்குகளும் முடிந்து சிறையின் முதன்மை வாயிலுள் நுழையும் போது ஒரு கணம் நிறுத்தி நம் கை ஒன்றில் ஒரு முத்திரை பதிப்பார்கள். அனேகமாக வேறெந்த மாநிலச் சிறைகளிலும் இப்படி ஒரு பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த முத்திரையைக்  கைதியைப் பார்த்துவிட்டு வரும் வரையில் நாம் அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். சிறைக்குள் நுழையும் போது போடப்படும் இந்த முத்திரை நமக்கு சோழர் காலத்தில் கட்டாயமாகப் பிடித்து வரப்பட்டு தேவதாசிகள் ஆக்கப்பட்டவர்களுக்கும்,  நாசி சித்திரவதைக் கூடங்களில் யூதர்களுக்கும் இடப்பட்ட முத்திரைகளை நினைவூட்டுவது தவிர்க்க இயலாது.

மைசூர் சிறையைக் காட்டிலும் பராப்பன அக்ரகாரச் சிறையில் கெடுபிடிகள் அதிகம். சிறைகள் நவீனப்படுத்தப்பட படுத்தப்பட கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் (surveillances) அதிகமாகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி, நம்மூர் புழல் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சிறைகள் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள். பராப்பன அக்ரகாரச் சிறையில் கைதிகளைப் பார்ப்பதற்கு முன்பான சடங்குகளை முடிக்க சுமார் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும். பரப்பான அக்ரகாரச் சிறையின் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணகுமார் நமது பேராசிரியர் பாபையாவின் மாணவராக இருந்ததால், சற்றுக் கூடுதல் சலுகை அளிக்கப்பட்டும் கூட, எங்களுக்கும் சடங்குகளை முடிக்க மூன்று மணி நேரமானது. க்யூவில் நின்று மனுக் கொடுத்து நமது இடது பெருவிரல் ரேகை, முகம் அனைத்தையும் நுண்ணிய கேமரா ஒன்றின் முன் அமர்ந்து பதிவு செய்துகொள்ள வேண்டும், நமது தொலைபேசி எண் உட்பட முக்கிய விவரங்களையும் அத்துடன் பதிந்து ‘ப்ரின்ட் அவுட்’ ஒன்றைத் தருவார்கள். இதற்கான இடத்தில் க்யூவில் காத்திருந்தவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பதைதைக் கண்டோம். 2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி நமது நாட்டிலுள்ள மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.4 சதம். ஆனால், சிறைச்சாலைகளில் அவர்களின் பங்கு 50 சதத்திற்கும் மேல் என்பது நினைவுக்கு வந்தது. விரல் ரேகை, முகப்பதிவு கொண்ட தாள்களை சிறை வாசலில் கொடுத்து விட்டு மீண்டும் காத்திருந்தால்  வெகு நேரம் கழித்துச் சிறை அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பின் நமக்கு அழைப்பு வரும். கண்காணிப்பாளர், பாபையாவின் மாணவர் என்பதால் நாங்கள் சற்று விரைவாக அழைக்கப்பட்டதோடு, கண்காணிப்பாளரின் அறையிலேயே ஒருபுறம் அமர்ந்து சற்று ஆறஅமரப் பேச முடிந்தது.

நாங்கள் உள்ளே நுழைந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் அப்துல் நாசர் மதானியைச் சக்கர நாற்காலியில் தள்ளி வந்தனர். ஆர்.எஸ்.எஸ்.காரன் ஒருவன் வீசிய குண்டு வீச்சில் வலது காலை இழந்தவர் மதானி. வழக்கு நடந்துக்கொண்டிருந்த போது குண்டு வீசியவன் வந்து அவாரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளான். அவனை மன்னித்ததோடு அவன் மீதான தனது குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்று வழக்கு தள்ளுபடி ஆவதற்குக் காரணமாக இருந்தவர் மதானி.

தூய வெள்ளுடையில் மலர்ந்த முகத்துடன் அருகில் நெருங்கிய மதானியைக் கண்டவுடன் அனைவரும் எழுந்து நின்றோம். துரும்பாய் இளைத்து இருந்தாலும் அவரது கண்களில் ஒளி குன்றவில்லை. ஒவ்வொருவராக அருகில் சென்று அவரது கைகளைப் பற்றி அறிமுகம் செய்துக் கொண்டோம். கண்காணிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்த பாபையா எழுந்தோடி வந்தார். மதானியின் அருகில் வந்தவுடன் அவருடைய கண்கள் கலங்கின. கன்னங்கள் துடித்தன. அப்படியே அவரை மார்புறத் தழுவிக் கொண்டார். பார்த்திருந்த அனைவருக்கும் நெஞ்சு இரும்பாய் கனத்தது. மனித உரிமைப் பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் சிறை அனுபவித்தவர் பேராசிரியர் பாப்பையா.

மார்க்ஸ், சுகுமாரன் என்று நாங்கள் பெயர்களைச் சொன்னவுடன் மதானி உடனடியாக எங்களை நினைவுகூர்ந்தார்.  கோவைச் சிறையில் இருந்த போது சுகுமாரன் அவரைச் சந்தித்துள்ளார். கோவைச் சிறையில் இருந்த அவரை உடல் நலம் கருதி பிணையில் விடுவிக்க வேண்டுமென நாங்கள் முன்னின்று தமிழ் எழுத்தாளர்களிடம் கையொப்பம் பெற்று வெளியிட்ட அறிக்கையை மதானி இருமுறை நினைவுக்கூர்ந்தார். அறிக்கையில் கலைஞரின் மகள் கனிமொழியும் அதில் கையெழுத்திட்டிருந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னார். பிரபஞ்சன், சாரு நிவேதிதா, வெளி ரங்கராஜன், சுகிர்த ராணி உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர்.

அடுத்த ஒன்றைரை மணி நேரமும் மெல்லிய குரலில் மதானி பேசிக் கொண்டிருந்தார். மதானி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். சுற்றிலும் நாற்காலிகளை நெருக்கமாகப் போட்டு நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். தற்போது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து மிக விரிவாக சொன்னார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை அவர் விரிவாக விளக்கினார். பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 32 பேர்களில் 31வது குற்றவாளியாக அவர் இணைக்கப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட முக்கியமானவர்களில் ஓரிருவரை முன்னதாகத் தனக்குத் தெரியும் என்பதைத் தவிர இந்தக் குற்றச் செயலில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும், இப்படியான ஒரு செயல் நடக்கப்போகிறது என்பது தனக்குத் தெரியாது என்பதையும் விரிவாக விளக்கிச் சொன்னார்.

விசாரணையில் இருக்கும் வழக்கு என்பதால் எல்லாவற்றையும் இங்கு எழுத முடியவில்லை. எனினும் ஒன்றை மட்டும் இங்கு சொல்லியாக வெண்டும். முக்கிய குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தடியண்டவீடு நசீர் தங்களுடைய சதி குறித்து மதானிக்குத் தெரியுமெனக் கூறியுள்ளதாதாக விசாரணையின் போது மதானியிடம் திரும்பத் திரும்பக் கேட்டுள்ளனர். “நசீரை ஒருமுறை என்னிடம் அழைத்து வாருங்கள். உங்கள் முன் நான் அவரைக் கேட்கிறேன்” என மதானி வற்புறுத்தியுள்ளார். தயங்கிய புலனய்வுத்துறையினர் இறுதியாக வேறொரு சிறையில் இருந்த நசீரை முகமூடியிட்டு அழைத்து வந்து நிறுத்தியுள்ளனர். புனாய்வுத்துறையினர் முன்னிலையில் மதானி கேட்ட போது தான் அப்படிச் சொல்லவில்லை என நசீர் பதிலளித்ததோடு, “உங்களை அரசியலில் இருந்து விலகச் சொல்லிப் பலமுறை எச்சரித்தேனே நான்” என்றும் கூறியுள்ளார்.

குற்றமற்ற என்னை ஏன் இப்படித் திரும்பத் திரும்பக் கொடுமைப் படுத்துகிறீர்கள் என மதானி கேட்டபோது விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒரு கணம் அமைதியாய் இருந்தபின் இப்படிச் சொல்லியுள்ளார். “இந்தப் பிறவியில் நீர் ஏதும் குற்றம் செய்யாதிருக்கலாம். போன பிறவியில் செய்திருப்பீர். அந்தப் ‘பூர்வ கர்மா’வின் பலனை இப்போது அனுபவிக்கிறீர்.”
வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டால் கோவை வெடிகுண்டு வழக்கில் அவர் எப்படிக் குற்றமற்றவர் என்று விடுதலைச் செயப்பட்டாரோ அதேபோல் இதிலும் விடுதலை செய்யப்படுவது உறுதி. ஆனால், பராப்பன அக்ரகாரச் சிறை வளாகத்தில் இருந்து செயல்படும் தனிநீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிக்கத் தயாராக இல்லை.  குற்றம்சட்டப்பட்ட பலரும் வெவ்வேறு சிறைகளில் இருப்பதைக் காரணம் காட்டி விசாரணையை இழுத்தடிக்கிறார்கள்.

அதேநேரத்தில் படிப்படியாக மோசமாகிக் கொண்டிருக்கும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரைப் பிணையில் விடுதலைச் செய்ய அரசும், நீதிமன்றமும் தயாராக இல்லை. கடும் இருதய நோய், முற்றிய நீரிழிவு நோய், நீரிழிவினால் ஏற்பட்ட சிறுநீரகப் பாதிப்பு, முதுகுத்தண்டுத் தேய்வு என்பவற்றோடு, எல்லாவற்றுக்கும் மேலாகப் பெங்களூருச் சிறைவாசம் இன்று அவர் கண் பார்வையைப் பறித்துள்ளது. வலது கண் பார்வை முற்றிலும் பறிபோவிட்டு, இடது கண்ணில் 20 சதப் பார்வைதான் எஞ்சியிருக்கிறது. நீரிழிவுனால் ஏற்பட்ட இந்த பார்வைக் குறைவுக்கு உரிய நேரத்தில் லேசர் சிகிச்சை அளித்திருந்தால இன்று அவர் பார்வை காப்பாற்றப்பட்டிருக்கும். துண்டாடப்பட்டு முழங்காலுக்கு மேல்  எஞ்சியிருக்கும் அவரது வலது காலின் மேல்புறம் உணர்ச்சியற்றுப் போயுள்ளது. உள்ளே கடுமையான வலி. கேரளம் சென்று ஆயுர்வேத சிகிச்சை செய்தால் நிச்சயம் பலனிருக்கும் என அவர் நம்புகிறார். ஆனால், கர்நாடக அரசும், நீதிமன்றமும் அனுமதி அளிக்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று வேண்டிய போது பெங்களூரிலேயே ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உத்தரவு கிடைத்தது. 70 ஆயிரம் ரூபாய் அளவில் முடிய வேண்டிய சிகிச்சைக்கு அங்குள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவ மனை எட்டரை லட்ச ரூபாய் ‘பில்’ கொடுத்தது ஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டுமெனவும், ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை முழு சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த வைத்தியசாலை வலியுறுத்தியும் சிறை அதிகாரிகள் ஒருமுறை கூட அவரைப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை. உள்ளூர் மருத்துவமனை ஒன்றிற்குக் கண் மருத்துவத்திற்காக அனுப்பப்பட்ட போது, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அடுத்த நாள் அவரது வலது கண் பார்வை முற்றிலும் அழிந்து போனது.

இப்படி அவரது உடல் அவயவங்களை ஒவ்வொன்றாகச் சிறை வாழ்க்கை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து மிக விரிவாக அவர் சொன்னார். மிக மிகச் சுருக்கமாகவே நாங்கள் இங்குக் குறிப்பிட்டுள்ளோம். கடைசியாக அவர் சொன்னது எங்கள் எல்லோரது கண்களையும் கசிய வைத்தது.

“எல்லாவற்றையும் நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த முறை நோன்பு நாட்களில் குனிந்து தொழவும் என்னால் முடியவில்லை. ஆனால், அல்லாஹ்வின் அருளால்  மன உறுதியை மட்டும் நான் இழக்கவில்லை. என் மனம் தளர்ந்துவிடவில்லை.  உடல் உபாதைகளையும் கூடத் தாங்கிக் கொள்கிறேன். ஆனால் கண் பார்வை இழந்ததைவிடவும் என்னால் தாள முடியாத வேதனையாக இருப்பது எனக்குள்ள மலச் சிக்கல்தான். சாப்பிட்டு இரண்டு நாளானாலும் மலம் கழிவதில்லை. திடீரென இரவு நேரங்களில் என்னை அறியமலேயே மலம் கழிந்துவிடுகிறது. அந்த நேரத்தில் என்னையும் என் படுக்கையும் என்னால் சுத்தம் செய்துக் கொள்ள முடிவதில்லை. இரவு நேரத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் என்னால் அதைச் செய்ய முடியாது. நகர வேண்டுமானால் எனது வலது செயற்கைக் காலைப் பொருத்திக் கொள்ள வேண்டும். தண்ணீரை எடுப்பது, கழுவுவது எதையும் தனியாகச் செய்ய முடியாது. இரவு முழுக்க அப்படியே கிடக்கவும் முடியவில்லை. இந்தக் கொடுமையைதான் என்னால் தாங்க முடியவில்லை.”  

அந்த அறையில் ஒரு கணம் இறுக்கமான அமைதி நிலவியது. நாங்கள் என்ன ஆறுதல் அவருக்குச் சொல்ல முடியும். நேரமாகிவிட்டது என்பதைத் தெரிவிப்பதற்காகக் கண்காணிப்பாளர்  ஒருமுறை அங்கு வந்து எங்களைப் பார்த்துப் புன்முறுவலித்துச் சென்றார். நாங்கள் புறப்படத் தயாரானோம்.

“நான் ஒன்பதரை ஆண்டுக் காலம் கோவைச் சிறையிலிருந்தேன். சிறையில் இருந்தது என்பதைத் தவிர எனக்கு வேறெந்தப் பிரச்சினையும் இல்லை. அதிகாரிகள் என்னிடம் அக்கறையுடன் நடந்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டு ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் என்னிடம் அக்கறையாக நடந்துக் கொணடார்கள். சிறையில் நான் எதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. இங்கே எல்லாம் தலைக்கீழ். என்னுடைய ‘செல்’ அருகில் ஒரு பூனைக்குட்டி இருக்கிறது. அதுவொன்றுதான் இங்கே காசு கேட்பதில்லை. இங்குள்ள ஊடகங்களும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் என்னைப்பற்றி மோசமாக எழுதுகின்றன.”

மெல்லிய குரலில் எல்லாவற்றையும் எளிய ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் மதானி.  நாங்கள் எழுந்து நின்றோம். குனிந்து ஒவ்வொருவராக அவரைத் தழுவிக் கொண்டோம். நகர மன்மின்றி நகரத் தொடங்கிய போது அவர் குரல் எங்களை அழைத்தது “நீங்கள் வந்து சென்றது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் நாளை நடத்த உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லப் போகிறவை எனது சிகிசைக்கும், நான் பிணையில் விடுதலைப் பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒருவேளை அந்தப் பயன் எனக்குக் கிடைக்காமலும் போகலாம். ஆனால் நீங்கள் வந்ததே எனக்குப் பெரும் பயன்தான். அல்லாஹ்வின் அருளால் நான் விடுதலையாகி வெளியே வந்தால், என்னுடைய எஞ்சிய வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் செலவிடுவேன். அவர்களோடு வாழ்ந்து மடிவேன்.”

மதானியின் ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’, தலித், முஸ்லிம் ஒற்றுமையை முன்னெடுத்துப் பேசுகிற ஒன்று. அவரது நிறுவனங்களின் மூலம் பெரிய அளவில் தலித்கள் பயனடைகின்றனர்.

நாங்கள் படிகளில் இறங்கிக் கீழுள்ள பேரேட்டில் கையெழுத்திட்டோம். எங்களது செல்போன்களைப் பெற்றுக் கொண்டோம். கையிலுள்ள முத்திரை அடையாளத்தைக் கத்தி பொருத்திய துப்பாக்கியுடன் இருந்த காவலரிடம் காட்டிய பின் கதவு திறந்தது..
ஏதோவொரு கொண்டாட்டத்திற்காக ஒளி அலங்காரம் செய்வதற்கென சீரியல் விளக்குகள் சிறை வாசலில் வந்து இறங்கி இருந்தன. எதற்காக இருக்கும் என நாங்கள் சற்று வியப்புடன் நோக்கிய போது ஒரு மிகப் பெரிய அலங்கரிக்கப்பட்ட ஒரு வண்ண விநாயகர் சிலையை சுமார் 10 கைதி வார்டர்கள் சுமந்து வந்து கொண்டிருந்தனர்.

ஓ! நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி அல்லவா?

Saturday, September 08, 2012

இதயத்தின் ஆழத்தில் சூல்கொள்ளூம் மாயவிதை

சென்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) வெளியிட்டுள்ள மூன்று ரஷ்ய நாவல் புத்தகங்களை வாங்கி வந்தேன். அவை விளாதிமிர் கொரலென்கோ எழுதிய கண் தெரியாத இசைஞன், சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய ஜமீலா, அன்னை வயல். கண் தெரியாத இசைஞன் 2003ல் படித்ததாக ஞாபகம். பழைய பதிப்பு ஒன்று கிடைத்தது படித்தேன். மதுரைக்குச் சென்று திரும்பியவுடன் சற்று உடல் நிலை சரியில்லாமல் போனது. அதற்கு மன நிலையும் ஒரு காரணம். அப்போது இந்த நாவல்களைப் படித்தேன்.

கண் தெரியாத இசைஞனின் நுட்பமான, துல்லியமான வாழ்க்கை எழுத்தில் பதிவு செய்யப்பட்ட விதம் மிக அழகு. இரு கண்கள் தெரியவில்லை என்றாலும் உடலின் ஒவ்வொரு உறுப்பும் உணர்ச்சியையும், உணர்வையும் உள்வாங்கி அவனை அவை இயக்குவதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது. அன்னை வயல் போராட்டக் களத்தில் ஒரு தாய் எவ்வாறு தன் வாழ்வுக்காகப் போராடுகிறாள் என்ற சோகம் அழுத்தமாக விவரிக்கப்பட்டுள்ளது. தாயின் போராட்டத்தின் ஊடாகவே வீரஞ்செரிந்த மக்கள் போராட்டம் கண்முன் நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஜமீலா ஒரு அழகு தேவதையின் காதல் பற்றிய ரசனை நிறைந்த சித்தரிப்பு. கணவனைப் போருக்கு அனுப்பிவிட்டு, இளம் வயதின் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அவள் படும்பாடு, அதன் ஊடாக அவளுக்குள் நுழையும் காதல், அதை எதிர்க் கொள்ளூம் சிக்கலான மனநிலை, இறுதியில் அவள் துணிந்து எடுக்கும் முடிவு என கண்களில் கனவுகளை நிழலாட செய்யும் நாவல்.

ஜமீலா புத்தகத்திற்கு எழுதப்பட்டுள்ள பதிப்புரை நூல் வெளியீட்டாளர்களை இந்நாவல் எந்தளவிற்கு உலுக்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. அதன் ஒரு பகுதி இது.

“காதல் எந்த இரும்பு இதயத்தையும் பலமிழக்க வைத்துவிடும். மனித இதயத்தின் ஆழத்தில் சூல்கொள்ளூம் மாயவிதை அது. ஆண் பெண் நட்பிற்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் ஆச்சரியக் குறியீடு!

காதல் யாருக்கும் எப்போதும் வரலாம். அது அவரவர் சூழலைப் பொறுத்தது.

இக்குறுநாவலின் மீது மெல்ல செவி சாய்த்து ஒட்டுக் கேட்டால் ரயில் ஓடும் ‘தடக் தடக்’ சப்தமும், பச்சைப் பசேலென நீளும் புல்வெளிகளும், வயல்வர்ப்புகளும், கணவாய் அடுத்து பாறைகளினூடே ஒரு ரட்சஷனின் நீள நாக்கைப் போல் நீண்டுகொண்டே போகும் ஒற்றையடி செம்மண் பாதையும், அதிலே ஓரிரண்டு குதிரை வண்டிகளின் சப்தமும், இருமருங்கே ஒன்றையொன்று பிடித்துத் தள்ளிக்கொண்டு முந்தியபடி குதித்தோடும் சிற்றோடைகளின் அழகும் கண்முன்னே விரியும்.

கதையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றால்…’ஜமீலா’ எனும் ஒரு அழகு தேவதை முன்னிற்பாள்.”

Wednesday, September 05, 2012

கோவை சிறையும், வ.உ.சி. இழுத்த செக்கும்

1992 என்று நினைக்கிறேன். கோவை இராமகிருட்டினன் தடா சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தடாவில் சிறையில் உள்ளவர்களை அவரது ரத்த உறவுடைய உறவினர்கள் மட்டுமே சந்திக்க முடியும் என்று தமிழக அரசு உத்தரவு ஒன்றை போட்டிருந்தது. திமுகவைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் மீது தடா வழக்குப் போடப்பட்டு அவர் வேறொரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை நேர்காண வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக் கேட்டதற்கு மேற்சொன்ன காரணத்தைக் கூறி அனுமதி மறுத்தது அப்போதைய ஜெயலலிதா அரசு. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் கருணாநிதி. ரத்த உறவுகள் மட்டுமே நேர்காண முடியும் என்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இந்த உத்தரவு நகலை எடுத்துக் கொண்டு வழக்கறிஞர் சிராஜீதினும் நானும் கோவை மத்திய சிறைக்கு இராமகிருட்டினன் அவர்களைச் சந்திக்க சென்றோம். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரைச் சந்தித்தோம். உறவினர்கள் தவிர நண்பர்கள் என்ற அடிப்படையில் முதன் முதலில் அவரைச் சந்தித்தவர்கள் நாங்கள்தான்.  

சிறையின் முதன்மை வாசல் அருகே கைதிகளை நேர்காண வருபவர்கள் மனு அளித்து விட்டு காத்திருக்கும் பகுதியில் ஒரு செக்கு போன்ற ஒன்றின் மீது மக்கள் உட்கார்ந்துக் கொண்டு கதைப் பேசிக் கொண்டு இருந்தார்கள். சிலர் அதன் மீது உட்கார்ந்துக் கொண்டு டீ குடித்தார்கள், வெற்றிலைப் பாக்குப் போட்டு எச்சிலை அங்கேயே துப்பினார்கள், சிறுவர்கள் மலம், ஜலம் கூட கழித்தர்கள். என்னதான் அது என்ற ஆர்வ மிகுதியில் அங்கு சென்று பார்த்த போது எனக்கு பெரும் அதிர்ச்சி. ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று அனைவராலும் பெருமையுடன் அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் சுதந்திரப் போரில் ஈடுபட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்ட போது இழுத்த செக்குதான் அது. தன் குருதியை வியர்வையாய் சிந்தி இழுத்து இழுத்து தேய்ந்த அவரது உடல் போல, தேய்ந்துக் கிடந்த வரலாற்று சிறப்பு மிக்க செக்கு என்று எண்ணிய போது என் மனது கனத்தது. வரலாற்று உணர்வு எந்தளவுக்கு மங்கிப் போயுள்ளதற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு கூற முடியும் என்று எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டேன்.

அப்போது உடனடியாக கோவையில் எனக்குத் தெரிந்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்தேன். ஜீனியர் விகடன் பத்திரிகை விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. விழித்துக் கொண்ட தமிழக அரசு அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது. அதனைச் சுற்றி இரும்பு வேலி அமைத்து மேல் கூரை எல்லாம் போட்டுப் பாதுகாத்தது. இன்றைக்கும் அந்த ‘வரலாற்று செக்கு’ பாதுகாப்பாக உள்ளது.

இன்று (செப்டம்பர் 5) வ.உ.சி.யின் 141வது பிறந்த நாள். அவரை நினைத்த போது மேற்சொன்ன நிகழ்வுகள் என் நினைவுக்கு வந்தன. வ.உ.சி. என்றாலே சிவாஜி கணேசன்தான் நினைவுக்கு வரும் இத்தமிழ்ச் சமூகத்தில் வ.உ.சி. யாருடைய நினைவில் இருக்கப் போகிறார்.

Friday, August 31, 2012

சிறைப் பறவை பூமணி!


நான் 1988-ல் மதுரை அரசரடியிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த  போது எனக்கு மிகவும் இளைய வயது. அந்த வயதிற்கே உரிய துடிப்பு இருந்தளவிற்கு போதிய அரசியல் தெளிவு இருந்ததாக சொல்ல முடியாது.  இன்றைக்கு அரவாணிகள், திருநங்கைகள் மதிப்புடன் அழைக்கப்படவும், நடத்தப்படவும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு அன்றைக்கு கிடையாது. அலிகள், ஒன்பதுகள், நேப்கள் (பிரெஞ்சு மொழியில் ஒன்பது) என்று கேவலமாக அழைக்கப்பட்ட காலமிது. நானும் இந்த மாதிரியான பார்வையில் இருந்து தப்பவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

நான், பொழிலன், தமிழ் முகிலன் மூவரும் நள்ளிரவு சிறையில் அடைக்கப்பட்டோம். விடியற்காலை எழுந்தவுடன் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தவர் பூமணி. அவர் முகத்தில்தான் முழித்தோம்.  சிறிய கூந்தல் வைத்து அதில் கொஞ்சம் பூ வைத்து இருந்தார். அதனால்தான் பூமணி என்ற பெயரோ என்று தெரியவில்லை. எதுவுமில்லாமல் இருந்த எங்களுக்கு பல் துலக்க பற்பொடி கொடுத்து உதவினார். உங்களுடையை இன்னொரு ஆள் அங்கே இருக்கார். லாக் அப் திறந்தவுடன் சந்திக்கலாம் என்று கூறி நம்பிக்கை ஊட்டினார். அதிலிருந்து நாங்கள் சிறையை விட்டு வெளியே வரும் வரையில் அவர் மிகவும் அன்புடனும், நட்புடனும் பழகியது என் வாழ்நாளில் மறக்க முடியாதது.

ஒரு சிறிய வழக்கொன்றில் சிக்கிச் சிறைக்கு வந்த அவருக்கு இந்த சிறைதான் சொந்த வீடானது. அதிலிருந்து வெளியே செல்ல மனமில்லாமல் சிறைக்குள்ளேயே வாழ்ந்தார். தண்டனைக் காலம் முடிந்து விடுதலைச் செய்யப்பட்டாலும், நேரே காவல்நிலையம் சென்று ஏதாவது ஒரு வழக்கில் அவரை சேர்க்க சொல்லி உள்ளே வந்து விடுவார். எங்கோ பிறந்த பூமணிக்கு மதுரை சிறைதான் புகுந்த வீடு.

இளம் வயதுடையவர்களாக நாங்கள் இருந்ததும், சராசரி குற்றம் செய்துவிட்டு வந்தவர்களைக் காட்டிலும், ஒரு தீவிர அரசியல் வழக்கில் சிறை புகுந்ததாலும் பூமணிக்கு எங்கள் மீது அதிகப் பிரியம்.

நாங்கள் நீதிமன்றங்களுக்கு செல்வதற்காக எங்களின் துணிமணிகளைத் துவைத்துக் காய வைப்போம். அவை திடீரென காணாமல் போகும். அந்த உடைகளை எங்களைக் கேட்காமல் எடுத்துச் சென்று, தன் வசமிருக்கும் ஒருசில பீடிகளைக் கூலியாக கொடுத்து, சிறைக்குள் இருக்கும் சலவையகத்தில் தேய்த்து மடிப்பு மாறாமல் கொண்டு வந்து தருவதில் பூமணி அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. அவரின் முகத்தில் அந்த மகிழ்ச்சி வழிந்தோடும். படித்தவர்களாக இருக்கும் நாங்கள் அழுக்காக உடையுடுத்தி அதனால் எங்களுக்கு நீதிமன்றத்திலோ வெளியிலோ அவமரியாதை வந்துவிடக் கூடாது என்ற அவரது நல்லெண்ணத்திற்கு ஈடு ஏதுமில்லை. இப்படி எத்தனையோ நிகழ்ந்த கதைகளைக் கூற முடியும்.

24 ஆண்டுகள் கழிந்த பின்னரும் அந்த முகம் இன்றைக்கும் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு அற்புதமான மனிதர்கள் மத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதற்குப் பூமணியே சான்று.  

பூமணி இப்போது என்ன ஆனார். உயிரோடு இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த சிறைப் பறை இன்னும் என்னுள் சுழன்றுக் கொண்டுதான் இருக்கிறது. நான் சுழலும் வரை அந்த நினைவு இருக்கும்.

Sunday, August 19, 2012

புத்தர் சிலையை திரும்பவும் ஒப்படைக்க கண்டிரமாணிக்கம் கிராம சபையில் தீர்மானம்!


சென்ற ஜூலை 23 அன்று, திருவாரூர் அருகேயுள்ள கண்டிரமாணிக்கம் என்ற கிராமத்தில் ஐந்தரை அடி உயரமுள்ள 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை ஒன்று நிலத்திற்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த கிராம மக்கள் அந்த புத்தர் சிலையை ஊருக்கு நடுவே வைத்து சுத்தம் செய்து, எண்ணெய் பூசி, விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதை அறிந்த வருவாய் துறையினர் உடனடியாக அங்கு வந்து புத்தர் சிலையை எடுத்துச் செல்ல முற்பட்டனர். அதற்கு அந்த கிராம மக்கள் திரண்டு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே நீண்ட போராட்டத்திற்குப்பின் அச்சிலையை எடுத்துச் சென்றனர். தற்போது அந்த சிலை திருவாரூர் தியாகராஜ சாமி கோயில் வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த நாங்கள் (நான், .மார்க்ஸ், சிவகுருநாதன், அமானுஷன், காளிதாஸ்), சென்ற ஜூலை 28 அன்று, திருவாரூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த புத்தர் சிலையை காணச் சென்றோம். அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். கோயில் நுழைவு வாயிலுக்கு நேரெதிரே அருங்காட்சியகத்திற்கு அருகேயுள்ள மேடையில் சிலை தெரியாமல் இருக்க முன்புறம் தட்டி ஒன்றை வைத்து மறைத்தும், சிலையை சிவப்புத் துணிப் போட்டு மூடியும் வைத்திருந்தனர். அதுபற்றி அங்கிருந்த அருங்காட்சியக பொறுப்பாளரிடம் கேட்டதற்கு, அவர்கோயில் நிர்வாகத்தினர் சிலையை இங்கு வைக்க எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அதனால் மூடி வைத்திருக்கிறோம்என்று கூறினார். பின்னர் ஓரிரு தினங்களில் அப்பகுதி காலைக்கதிர், தினமலர் நாளேடுகளில் இதுகுறித்து செய்தி வெளியானவுடன் தட்டியை அகற்றியும், துணியை நீக்கி புத்தர் சிலையை சுத்தப்படுத்தியும் வைத்துள்ளனர்.

இதுவொரு புறமிருக்க சென்ற ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று, கண்டிரமாணிக்கம் கிராம சபைக் கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் காளிமுத்து அவர்கள் தலைமையில் நடந்துள்ளது. அக்கூட்டத்தில் புத்தர் சிலையை திரும்பவும் ஊருக்குக் கொண்டு வந்து வழிபட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளனர்.

கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 25வது தீர்மானம்:

நமது ஊரில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அது தற்போது திருவாரூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை ஊருக்குக் கொண்டு வந்து தியான மண்டபம் கட்டி, அரசு விதிகளின்படி வழிபாடு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்களை அனுகி கேட்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.”
இத்தீர்மானத்தின் நகலை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அளித்து நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளனர்.

கண்டிரமாணிக்கத்தின் மக்களின் உணர்வு பெரிதும் போற்றப்பட வேண்டியது. அவ்வூரில் தற்போது யாரும் பெளத்த மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்றாலும், தங்கள் ஊரில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையைக் கோயில் கட்டி வழிபட தீர்மானித்துள்ளது நெகிழ்ச்சி அளிக்கிறது.      

Friday, August 10, 2012

பொன்விழா காணும் எங்கள் தாகூர் கலைக் கல்லூரி – கோ.சுகுமாரன்

நேற்றைய முன்தினம் (08.08.2012) புதுச்சேரி லாசுப்பேட்டையில் அமைந்துள்ள தாகூர் கலைக் கல்லூரியின் பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. அவ்விழாவில் கலந்துக் கொண்ட முதல்வர் ரங்கசாமி அவர்கள் இக்கல்லூரி வளாகத்தில் மாநிலப் பல்கலைக்கழகம் ஒன்று துவங்கப்படும் என அறிவித்துள்ளார். நான் பயின்ற, அதாவது எங்கள் இளமைக்கால அத்தனைக் குறும்புகளையும் அரங்கேற்றிய எங்கள் கல்லூரி வளாகம் பல்கலைக்கழகமாக மாறப்போகிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறம். இந்திய ஆளுமையின் பிம்பமாக திகழும் இரபீந்திரநாத் தாகூர் பெயரில் அமைந்துள்ள எங்கள் கல்லூரி துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது என்கிற மகிழ்ச்சி மறுபுறம்.

நான் இக்கல்லூரியில் 1986 முதல் 1989 வரை இளம் அறிவியல் கணிதவியல் பயின்றேன். பயின்றேன் என்பதைவிட படிப்பை மறந்துப் போராட்டங்களில் ஈடுபட்டேன் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். எங்களின் கல்லூரி அனுபவங்கள் பற்றி அடுத்தப் பதிவுகளில் எழுத உள்ளேன். தற்போது எங்கள் கல்லூரி தொடங்கப்பட்ட வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

பொன்விழாவை முன்னிட்டு கல்லூரி சார்பில் விழா மலர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் இராஜா அவர்கள் இம்மலரைத் தொகுத்துள்ளார். இதில் அரிய பல தகவல்கள் அடங்கியுள்ளன. ஆசிரியர்கள் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களின் சுத்திகரிக்கப்படாத படைப்புகள் இடம்பெற்றுள்ளன. எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டுமென்ற தேடல் நிறைந்த எனக்கே தெரியாத பல தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.

1961, ஜூன் 30ல் தற்போது மிஷன் வீதியில் அமைந்துள்ள ‘கல்வே காலேஜ்’ (அப்போது அரசு உயர்நிலைப் பள்ளி) கட்டிடத்தில் ‘அரசுக் கலைக் கல்லூரி (Government Arts College)’ என்ற பெயருடன் இக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.  அப்போதைய பிரஞ்சு இந்திய தலைமை ஆணையர் எஸ்.கே. தத்தா இக்கல்லூரியை முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் செயல்பட்டுள்ளது. முதலில் பி.யூ.சி. (Pre University Course) வகுப்புகள் மட்டுமே தொடங்கப்பட்டன. 1961–1962 கல்வியாண்டில் மொத்தம் 160 மாணவர்கள் பயின்றுள்ளனர். இதில் 35 மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துள்ளனர். இக்கல்லூரிக்கு முறையான கட்டிடம் கட்ட அப்போது 1 லட்சத்து 96 ஆயிரத்து 553 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தனியார் வசம் கட்டிடப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1961-1962ல் இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டை முன்னிட்டு (1861-1941) இக்கல்லூரிக்கு ‘தாகூர் கலைக் கல்லூரி” என பெயர் சூட்டப்பட்டது. இக்கல்லூரியின் முதல் முதல்வராக சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வராக இருந்த டி. பாலகிருஷ்ணன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். கணிதவியல் துறை பேராசிரியராக வி. பாலக்கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

1962, மே 21ல், இளங்கலை பொருளாதாரம், பிரஞ்சு மற்றும் இளம் அறிவியல் கணிதவியல், தாவரவியல் ஆகிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கென அரசிதழில் அறிவிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது (No. F. 25.96/62-EDM, General Administration Department, Government of Pondicherry. Dated 21st May 1962). இதற்கென விண்ணபிக்க விரும்புவோர் 50 நயா பைசா மணியார்டர் செய்து விண்ணப்பம் மற்றும் கையேடு பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையை அப்போதைய அரசுத் துறை செயலர் சுர்ஜித் சிங் மமக் வெளியிட்டுள்ளார். 1970ல் இக்கல்லூரியில் முதுகலை, முதுஅறிவியல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

1963, ஜூன் 13ல், அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு தற்போது கல்லூரி அமைந்துள்ள இலாசுப்பேட்டையில் இக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டியுள்ளார். பின்னர் கட்டிடப் பணிகள் அனைத்தும் முடிந்து புதிய கட்டிடத்தை அப்போதைய இந்திய கல்வி அமைச்சர் ஶ்ரீமாலி திறந்து வைத்துள்ளார். இதன் முதல் ஆண்டு விழாவில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்க்காடு லட்சுமணசாமி முதலியார் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளார்.        

நீண்ட வரலாறு கொண்ட தாகூர் கலைக் கல்லூரி இன்று பல்வேறு துறைகளாக பல்கிப் பெருகியும், முதுகலை மற்றும் முதுஅறிவியல் வகுப்புகளுக்கென ‘பட்ட மேற்படிப்பு மையம்’ தனியே துவங்கப்பட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழுக்குப் பங்களிப்பு செய்து வரும் மா.இல.தங்கப்பா, க.பஞ்சாங்கம், ராஜ் கெளதமன், பசுபதி, நா.இளங்கோ என பலரும் இங்கு பணியாற்றி உள்ளனர், பணியாற்றியும் வருகின்றனர்.

பரந்து விரிந்த, மரங்கள் நிறைந்த வளாகத்தில் அமைந்துள்ள எங்கள் கல்லூரியின் கம்பீரம் இன்றைக்கும் என்னை ஈர்த்த ஒன்று. பொன்விழா காணும் எங்கள் கல்லூரியின் இனிமை நிறைந்த அந்த நாட்கள் என் கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

Tuesday, August 07, 2012

கடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை


கடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை:

குள்ளஞ்சாவடி முகாம் நிலைமையை விளக்கும் தலைவர்
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு ஈழ அகதிகள் முகாம்கள் மற்றும் புதுச்சேரியை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முகாம் ஆக ஐந்து முகாம்களின் நிலையையும், அங்குள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் ஆய்வு செய்யும் நோக்குடன் கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

1. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி
3. சத்யா சிவராமன், பத்திரிகையாளர், டெல்லி
4. இரா. பாபு, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, கடலூர்
5. சு. காளிதாஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி

டெல்லி பத்திரிக்கையாளர் சத்யா சிவராமன், அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், காளிதாஸ் ஆகிய நால்வரும் மூன்று ஈழ அகதிகள் முகாம்களுக்கு  ஆகஸ்ட் 3 அன்று சென்று வந்தோம். புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்புத்துப்பட்டு, குள்ளஞ்சாவடிக்கு அருகில் உள்ள அம்பலவாணன்பேட்டை, குறிஞ்சிப்பாடி ஆகிய ஊர்களில் உள்ள முகாம்கள் இவை. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் 452 குடும்பங்கள் (சுமார் 1500 பேர்கள்) உள்ளன. குள்ளஞ்சாவடியில் 125 குடும்பங்கள் (414 பேர்கள்) உள்ளன. குறிஞ்சிப்பாடியில் 167 குடும்பங்கள் (530 பேர்கள்) உள்ளன.

எங்கள் அமைப்புகள் சார்பாக ஈழ அகதிகள் முகாம்களுக்கு நாங்கள் சென்று வருவது இது நான்காவது முறை. இம்முறை எங்களுடன் குழுவில் பங்கேற்ற சத்யா சிவராமன் உலக அளவில் அகதிகள் பிரச்சினையில் அக்கறை உள்ளவர். பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு இன மக்களுக்கான முகாம்களுக்கும் சென்று வந்தவர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த முகாம்கள் நான்கு. மற்ற இரண்டும் விருதாசலத்திலும் காட்டுமன்னார்குடியிலும் உள்ளன. இவை இரண்டிற்கும் ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் எங்கள் குழுவைச் சேர்ந்த கடலூர் பாபு சென்று வந்தார். விருத்தாசலம் முகாமில் 65 குடும்பங்கள் (239 பேர்கள்) உள்ளன. காட்டுமன்னார்குடியில் 74 குடும்பங்கள் (246 பேர்கள்) உள்ளன.

தமிழக அளவிலுள்ள ஈழ அகதிகள் முகாம்களின் நிலைமை, இங்குள்ள மக்களின் அவல நிலை ஆகியன குறித்து எங்களின் முந்தைய அறிக்கைகளில் விரிவாகப் பேசியுள்ளோம். தி.மு.க, அடுத்து வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளில் ஈழ அகதிகளுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை முதலியன அதிகரிக்கப்பட்டதன் பின்னணியில் எங்களின் அறிக்கைகளுக்கும் ஒரு பங்குண்டு.

அகதிகள் முகாம் நிலைமைகளைத் திருத்துவதற்கான கோரிக்கைகள் குறைந்தபட்சம் மூன்று மட்டங்களில் வைக்கப்பட வேண்டும். இந்திய அளவில், தமிழக அளவில் மற்றும் மாவட்ட அளவில் இக்கோரிக்கைகள் அமைகின்றன. இவை தவிர குறிப்பான அந்த கிராம அளவிலும் கூட கோரிக்கைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக தேசிய அளவில் ஒரு அகதிகள் கொள்கையை (National Policy on Refugees) உருவாக்குதல், ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை (Dual Citizenship) வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை நாம் மத்திய அரசை நோக்கி வைக்க வேண்டும். உதவித் தொகைகளை உயர்த்துதல், இடஒதுக்கீடு அளித்தல் ஆகியவற்றிற்கு நாம் மாநில அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும். உதவிகளை வினியோகிப்பதில் உள்ள குறைபாடுகள் முதலானவற்றிற்கு மாவட்ட நிர்வாகத்தை அணுகவேண்டும்.

மைய அரசை நோக்கி வைக்கிற கோரிக்கைகள் அப்படியே இருக்கின்றன. அகதி உரிமைகளை அங்கீகரிப்பதில் மைய அரசு இம்மியும் முன்னே நகரவில்லை. ஈழ அகதிகளுக்கு மாநில அளவில் அளிக்கும் உதவிகள் முதலானவற்றை முந்திய அரசும் இந்த அரசும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன. முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாநில அரசு அளிக்கும் உதவித் தொகையை ஈழ அகதிகளுக்கும் நீட்டித்து ஜெயலலிதா அரசு ஆணை வழங்கியுள்ளது. உயர் கல்வியில் இடஒதுக்கீடு குறித்தும் இப்போது ஒரு ஆணை இடப்பட்டுள்ளது. இவை வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்க முடியாது.

ஆனால் இவை யாவும் யானைப் பசிக்குச் சோளப் பொறி போடுவது போலத்தான் என்பதை எங்களின் முந்தைய அறிக்கைகளைப் படிப்போர் விளங்கிக் கொள்ளலாம். பத்தடிக்குப் பத்தடி (10’*10’) என்கிற அளவில் தார்ப்பாய்க் கூரைகளுடன் அமைத்துத் தரப்பட்ட வீடுகள் இன்று தகர அல்லது ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளுடன் காட்சியளிக்கின்றன. வெயில் நேரத்தில் ஐந்து நிமிடங்கள் கூட உள்ளே யாரும் இருக்க இயலாது. ஆனால்  இவற்றில்தான் இந்த ஏதிலியர் கடந்த பல ஆண்டுகளாக வசிக்கின்றனர்.

பாதுகாப்பற்ற வீட்டில் ஈழத்தமிழ் மூதாட்டி
100 சதுர அடியில் ஒரு குடும்பம் வசிப்பது என்பது சாத்தியமில்லை என்பதால் ஒவ்வொரு குடும்பமும் சொந்தச் செலவில் தங்கள் வீட்டைச் சற்று முன்னே பின்னே இழுத்துக் கட்டியுள்ளனர். தீ விபத்து, சுனாமி, தாணே புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு கூரைகளை இவ்வீடுகள் இழந்தபோது அரசு புதிய கூரைகளை வழங்கியுள்ளது. அரசு கட்டிக் கொடுத்த 100 சதுர அடிக்கு மட்டுமே இக்கூரைகள் வழங்கப்பட்டுள்ளன. நீட்டிக் கட்டிய பகுதிகள் கூரை இல்லமலும், அல்லது கீற்றுக்கள், தார்பாலின்கள் ஆகியவற்றால் மூடப்பட்டும் கிடக்கின்றன.

ஆஃபர் (OFFER), அட்ரா (ADRA), ஜே.ஆர்.எஸ் (JRS) முதலான தொண்டு நிறுவனங்கள் சில முகம்களில் கூரை வேய்வதற்கு உதவியுள்ளன. காட்டுமன்னார்குடியில் மட்டும் தொண்டு நிறுவன உதவிகளுடன் 100 சதுர அடிக்கு கான்கிரீட் கூரை போடப்பட்டுள்ளது. குள்ளஞ்சாவடி முகாமைத் தத்து எடுத்துள்ள ஜூனியர் விகடன் இதழ் குழந்தைகளுக்கான பாலவாடியைக் கட்டிக் கொடுத்துள்ளது. மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் செலுத்தப் போகிறார்களாம். இப்படிப் பத்திரிகைகள், வங்கிகள், அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் முதலியன தமிழகத்தில் உள்ள 110 முகாம்களையும் தத்து எடுத்துக் கொண்டால் கூட ஓரளவு நிலைமை சீராகும் எனத் தோன்றியது.

பயன்படாத கழிவறைகள்
சென்ற முறை நாங்கள் சென்று வந்தபோது பார்த்ததை விட இம்முறை ஓரளவு தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கழிப்பறைகள் பல உடைந்தும் தண்ணீர் இல்லாமலும் காட்சி அளிக்கின்றன. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் உள்ள பால்வாடியில் இருக்கும் குழந்தைகள் சுற்றியுள்ள திறந்த வெளியைத்தான் கழிப்பறையாகப் பயன்படுத்துகிறார்கள். குடிநீர் வசதியும் இல்லை.

பால்வாடி அருகில் திறந்த வெளியில் சுடுகாடு
குடும்பத் தலைவருக்கு மாதம் 1000 ரூபாயும், அடுத்துள்ள பெரியவர்களுக்குத் தலா 750 ரூபாயும், பன்னிரண்டு வயதுக்கு உட்பட்டோருக்குத் தலா 400 ரூபாயும் தற்போது வழங்கப்படுகிறது. குள்ளஞ்சாவடி முகாமில் கடந்த சில மாதங்களாக இருபது தேதிக்கு மேல்தான் இந்தத் தொகை வழங்கப்படுகிறதாம். இது குறித்துப் புகார் செய்தபோது போதிய அலுவலர்கள் இல்லாததே தாமதத்திற்குக் காரணம் எனப் பதில் வந்துள்ளது. இப்படியான ஒரு தாமதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதில் ஏற்படுமா? ஏற்பட்டால் எத்தகைய எதிர்வினைகள் ஏற்படும்? ஆனால் இந்த ஏதிலியர்கள் தமது உரிமைகளுக்காக எந்தத் தீவிர எதிர்வினைகளையும் காட்ட இயலாது. அவர்களால் முடிந்தது மேலதிகாரிகளிடம் முறையிடுவது மட்டுமே. அப்படிப் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை.

நான்கு மாதங்களாக முதியோர், விதவைத் தொகை கிடைக்கவில்லை என புகார்
குள்ளஞ்சாவடி மற்றும் குறிஞ்சிப்பாடி முகாம்களில் இன்னொரு பரிதாபமான நிலையையும் கண்டோம். முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை முதலானவை கடந்த மூன்று மாதங்களாகக் கொடுக்கப்படவில்லையாம். குள்ளஞ்சாவடி முகாமில் மட்டும் சுமார் 38 பேர்கள் இப்படிப் பாதிக்கப்பட்டுள்ளனர். “போய்க் கேட்டால் கந்தோர் கந்தோராக அலைய வைக்கிறார்கள். எங்களைப் போன்ற கிழவிகளுக்குக் கடனும் யாரும் தரமாட்டாங்க. நாங்க எப்டி அய்யா சாப்பிடறது?” என்று புலம்பினார் ஒரு மூதாட்டி.

இந்த முகாம்கள் தொடங்கப்பட்டபோது போடப்பட்ட மின் இணைப்புகள் புதுப்பிக்கப்படவே இல்லை. முறையாகக் கம்பம் நட்டு மின் கம்பிகள் வழியாக மின்சாரம் வீடுகளுக்கு வினியோகிக்கப்படாமல் வெறுமனே கம்பங்கள் இல்லாமல் ஒயர்கள் மூலம் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை குறிஞ்சிப்பாடியில் பார்த்தோம். தாணே புயலுக்குப் பின் தார்பாய்களும், கூரைகளும் அகற்றப்பட்டு தகரக் கூரைகள் போடப்பட்டுள்ளன. இதில் மின் கசிவு ஏற்பட்டால் என்ன ஆகும் என்பது குறித்த கவலையை மக்கள் வெளிப்படுத்தினர்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு முகாமும் ஒரு கிராமம் அளவு மக்கள் தொகையைக் கொண்ட போதிலும் முறையான சாலை வசதிகள் எந்த முகாம்களிலும் கிடையாது. கழிவு நீர் வெளியேறும் வசதியும் கிடையாது. குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி முதலிய முகாம்கள் சரியான களிமண் தரையில் அமைந்துள்ளன. மழைக்காலத்தில் உள்ளே நடக்க இயலாது. அதேபோல பல இடங்களில் முகாம்களை ஒட்டித் தனியார் சாகுபடி நிலங்கள் அமைந்துள்ளன. இது பாதுகாப்பின்மைக்கும் பாம்பு முதலியன முகாம்களுக்குள் வருவதற்கும் காரணமாகிறது.

கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் இருந்த சுடுகாட்டுப் பிரச்சினை குறித்துச் சென்ற அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். தற்போது அது ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள அந்த முகாமில் இறக்கும் கிறிஸ்தவர்களைப் புதைக்க அங்குள்ள பாதிரியார் தங்களுக்கான கல்லறைத் தோட்டத்தில் இடம் தருகிறாராம். மற்றவர்களைப் புதைக்க குழந்தைகள் பயிலும் பால்வாடிக்கருகில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முகாமுக்கு மத்தியில் இப்படியான ஒரு சிறு இடத்தை ஒதுக்க நமது அதிகாரிகளுக்கு எப்படித்தான் மனம் வந்ததெனத் தெரியவில்லை. சிறிய இடமாகையால் குழி தோண்டும்போது பழைய உடல்களின் சிதைந்த எலும்புகளை அப்புறப்படுத்திவிட்டுத்தான் புதைக்க வேண்டியுள்ளதாம்.

முந்தைய அறிக்கைகளில் நாங்கள் குறிப்பிட்டிருந்த ஒரு முக்கிய பிரச்சினை இன்னும் தொடர்கிறது. முப்பதாண்டுகளாக முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் சில இப்போது இரண்டு குடும்பங்களாகியுள்ளன. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் மட்டும் இவ்வாறு 125 புதிய குடும்பங்கள் உருவாகியுள்ளன. இவர்களுக்கு வீடுகள் இல்லை. வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால், இந்த தாலுக்காவிலேயே இடம் கிடையாது, நீங்களே ஏதாவது இடம் பார்த்துச் சொல்லுங்கள் என்கிறார்களாம். அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற பதிலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. எந்த அடிப்படையில் இந்த ஏதிலியர் புதிய இடத்தைக் தேடிக் கண்டுபிடிக்க இயலும்? உரிய ஆவணங்களைக் கையில் வைத்துள்ள  வருவாய்த் துறையின் பொறுப்பு அது, நமது கிராமங்களில் இந்த ஏதிலி மக்களுக்கு அளிக்க இடமே இல்லை என்பது எத்தனை பெரிய பொய்?

இன்னொரு புதிய பிரச்சினையும் தற்போது எழுந்துள்ளது. போர் முடிந்ததனால் முகாம்களில் உள்ளவர்கள் திரும்பிப் போக ஐ.நா. அகதிகள் ஆணையம் சில உதவிகளைச் செய்கிறது. விமான டிக்கட், சிறு உதவித் தொகை முதலியவற்றைத் தருகிறார்கள். மிகச் சில குடும்பங்கள் அவ்வாறு போயுள்ளன. இந்த முகாம் வாழ்வைக் காட்டிலும் அங்கே நிலமை மோசம் என்பதால் பெரிய அளவில் யாரும் போவதில்லை. ஒரு சில குடும்பங்களில் குடும்பத் தலைவர் அல்லது யாரேனும் ஒருவர் நிலைமையைப் பார்த்து வருவதற்கோ, விட்டுச் சென்ற வீடு முதலியவற்றின் கதி என்னாயிற்று என்று பார்ப்பதற்கோ நாடு திரும்புகின்றனர். போர்ச் சூழலில் முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள் இவர்கள். திரும்பிச் செல்ல பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமானால். இங்கே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அகதிகள் அட்டையிலிருந்து அவர்களின் பெயரை நீக்குவதை ஒரு விதியாக வைத்துள்ளது இந்திய அரசு. இப்படிச் சென்றவர்கள் வேலை முடிந்த பின்போ, அல்லது அங்கு இருக்க முடியாமலோ, அல்லது இங்கே படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்ப்பதற்கோ திரும்பி வந்தால் அவர்களுக்கு மீண்டும் அகதி அட்டையில் இடம் கொடுப்பதில்லை. இதனால் அவர்களுக்கு அளிக்கப்படும் அகதி உரிமைகள், உதவித் தொகைகள் எல்லாம் ரத்தாவதை விடப் பெரிய கொடுமை என்னவெனில் அவர்களை முகாம்களில் உள்ள தம் குடும்பத்தோடு வாழ்வதற்கும் நமது ‘கியூ’ பிரிவு போலீசார் அனுமதிப்பதில்லை. குள்ளஞ்சாவடியில் உள்ள இப்படியான குடும்பங்களைச் சேர்ந்த சில பெண்கள் பரிதாபகரமாக இது குறித்து முறையிட்டனர்.

ஒரே ஒரு அம்சத்தில் மட்டுமே கொஞ்சம் முன்னேற்றத்தைக் காண முடிந்தது. ‘கியூ’ பிரிவுப் போலீசின் கண்காணிப்பும் கெடுபிடிகளும் கொஞ்சம் குறைந்துள்ளன. போர் முடிந்துள்ளது இதற்கொரு காரணம். ஆனால் அதே காரணத்தை முன்வைத்துச் செங்கல்பட்டுச் சிறப்பு முகாமை மட்டும் கலைப்பதற்கு தமிழக அரசு தயாராக இல்லை. முகாம்களை விட்டு வெளியே செல்லும்போது அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து விட்டுப் போனால் போதும் என்கிற நிலையே தற்போது நிலவுகிறது. ஆனாலும் பிரதமர் போன்ற முக்கிய தலைவர்கள் அருகிலுள்ள ஊர்களுக்கு வரும்போது அந்த நாட்களில் யாரும் முகாமை விட்டு வெளியே செல்ல வேண்டாமென ‘கியூ’ பிரிவுப் போலீஸ் வந்து எச்சரித்துச் செல்வது தொடர்கிறது.

வேறென்ன பிரச்சினை என்று கேட்ட பொழுது குறிஞ்சிப்பாடி முகாம் தலைவர் குணரட்ணம் சிரித்துக் கொண்டே சொன்னார்: “எங்கள் இளைஞர்களுக்குத்தான் இந்த வாழ்க்கை பெரிய பிரச்சினையாக உள்ளது. வயதானவர்கள் எப்படியோ இந்த வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆகி விட்டார்கள். குறைந்தபட்சம் குடியுரிமை கூட இல்லாமல் இங்கே வாழ்வதை இளைஞர்கள் வெறுக்கிறார்கள். வெளி நாட்டில் மூன்றாண்டுகளில் ஈழ அகதிகளுக்குக் குடியுரிமை கொடுக்கிறார்கள். ஆஸ்திரேலியா போகலாம் என்கிற ஆசை வார்த்தைகளில் மயங்கி எங்கள் இளைஞர்கள் நிறையப் பணத்தையும் இழந்து பிடிபடவும் செய்கிறார்கள்” என்றார்.

எங்களை மிகவும் உறுத்திய விஷயம் என்னவெனில் நாங்கள் சென்று பார்த்த அத்தனை முகாம்களிலும் அவ்வளவு பேர்களும் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, இந்திய அரசு நன்றாக வைத்துள்ளது என்று சொன்னதுதான். ஆனால் ஒவ்வொன்றையும் கேட்கக் கேட்கவும், பார்க்கப் பார்க்கவும்தான் எத்தனை அவல வாழ்வை அவர்கள் வாழ்கிறார்க்ள் என்பது நமக்குத் தெரிகிறது. முன்னால் இருந்த தார்ப்பாய்க் கூரையை விட தற்போதுள்ள தகரக் கூரையை அவர்கள் பெரிதென நம்பும் மனநிலையில் உள்ளனர். என்ன இருந்தாலும் நாம் அகதிகள். எந்த உரிமையும் இல்லாதவர்கள். நமக்கு இதுவே அதிகம் என்பது போன்ற மன நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

ஒரு வேளை பிரச்சினை இல்லாமலிருந்து நீங்கள் உங்கள் ஊரிலேயே இருந்திருந்தால் இதைவிட நன்றாக இருந்திருக்கலாம் என நினைக்கிறீர்களா என்று கீழ்ப்புத்துப்பட்டு முகாமிலிருந்த வீரேந்திராவைக் கேட்டார் சத்யா. அதற்கான பதில் எதையும் வீரேந்திராவால் முறையாகச் சொல்ல இயலவில்லை. இப்படியான ஒரு hypothetical question-ஐ அவர் எதிர் கொள்ளத் தயாராக இல்லாததை நாங்கள் புரிந்து கொண்டோம்.

அகதி வாழ்வை அனுபவிக்கும் அவலம் நேராதிருந்தால் இவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டே நாங்கள் கீழ்ப்புத்துப்பட்டு முகாமை விட்டு நகரத் தொடங்கியபோது, ஒரு பெண் ஓடி வந்து அவசரமாக எங்களை வீட்டுக்குள் அழைத்தார். எட்டிப் பார்த்தோம். கட்டிலில் படுத்த படுக்கையாய் ‘கோமா’ நிலையில் கிடந்தார் ஒருவர். அவர் விஜயசேகரன், 43 வயது. எட்டு மாதத்திற்கு முன் ஒரு நாள் மாலையில் கடைக்குச் சென்றபோது இரு சக்கர வாகனம் ஒன்று மோதித் தலையில் அடிபட்டு வீழ்ந்துள்ளார். கோமா நிலைக்குச் சென்றுவிட்ட அவரை மருத்துவமனையிலிருந்து கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

ஆஃபர் தொண்டு நிறுவனம் ஒரு கட்டிலையும் மெத்தையையும் வாங்கித் தந்துள்ளது. அவரைக் கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி ராஜேஸ்வரியும் வேலைக்குப் போவதில்லை. ஆக இப்போது வீட்டில் இருவருக்கு வேலை இல்லை. 16 வயது மகன் விஜயராஜைக் கூலி வேலைக்கு அனுப்புகிறார் ராஜேஸ்வரி. விஜயராஜ் கூலி வேலை செய்து சம்பாதித்து வரும் கொஞ்சக் காசு + அரசு அக்குடும்பத்துக்கு அளிக்கும் 2500 ரூபாய், இதை வைத்துக் கொண்டுதான்  ராஜேஸ்வரி, கோமாவில் கிடக்கும் கணவருக்கு வைத்தியம் செய்தாக வேண்டும், எல்லோரும் சாப்பிட்டாக வேண்டும். கண்களில் நீர் வழிய ஒரு பையிலிருந்த காகிதங்களைக் கொட்டி, உதவிக்காக அவர் யார் யாருக்கோ எழுதிய கடிதங்களை அள்ளி எங்கள் முன் காட்டினார். அகதி வாழ்வின் கொடுமை இதுதான். மோதிவிட்டுப் போனவரிடமும் நீதி கேட்க முடியாது. மருத்துவமனையில் வைத்துச் சிகிச்சை அளிக்க வேன்டும் என வற்புறுத்தவும் முடியாது.

கோரிக்கைகள்:

  1.   அரசு அளிக்கும் மாதாந்திர உதவித் தொகைகள் மற்றும் விதவைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அளிக்கப்படும் உதவித் தொகைகள் ஒவ்வொரு மாதமும் சரியான தேதிகளில் வினியோகிக்கப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடலூர் மாவட்டத்தில் இப்பிரச்சினை அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடி முகாம்களில் உள்ள இக்குறை உடனடியாகப் போக்கப்பட வேண்டும். கடலூர் மாவட்ட ஆட்சியர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 2.   அகதி முகாம்களில் அளிக்கப்படும் மாதாந்திர ரேஷன் அரிசியின் தரம் மோசமாக உள்ளது என்கிற புகாரையும் மக்கள் முன்வைத்தனர். குறிப்பாக விருதாசலம் முகாமில் இக்குறைபாடு உள்ளது. மாவட்ட நிர்வாகம் இக்குறையைப் போக்க ஆவன செய்ய வேண்டும்.

 3.   புதிதாக உருவாகியுள்ள குடும்பங்களுக்கு உடனடியாக வீடு கட்ட இடம் ஒதுக்க வேண்டும். எல்லா முகாம்களிலும் இப்பிரச்சினை உள்ளது. குறிப்பாகக் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கீழ்ப் புத்துப்பட்டு முகாமில் இவ்வாறு 125 குடும்பங்கள் கண்டறியப்பட்டும் அவர்களுக்கு வீடு கொடுக்கப்படவில்லை. நீங்களே இடம் பார்த்துச் சொல்லுங்கள் என வருவாய்த்துறை அதிகாரிகள் சொல்வது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியாளர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தற்போதுள்ள முகாம்களுக்கு அருகிலேயே இவர்களுக்குப் புதிய குடியிருப்பு மனைகளையும் கட்டுமானப் பொருள்களையும் அளிக்க வேண்டும்.

 4.   பால்வாடிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுப்பதோடு பிள்ளைகள் விளையாடுவதற்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள்  முதலானவற்றையும் அளிக்க வேண்டும்.

 5.   கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் சடலங்களைப் புதைப்பதற்காக அளிக்கப்பட்டுள்ள இடுகாட்டின் பரப்பு அதிகரிக்கப்படுவதோடு அந்த இடம் சுத்தமாக்கப்பட்டுச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட வேண்டும்.

 6.   குள்ளஞ்சாவடி முகாம் தனியார் கரும்புத் தோட்டம் ஒன்றை ஒட்டி அமைந்துள்ளது. காம்பவுண்ட் சுவர் ஒன்று அங்கு உடனடித் தேவையாக உள்ளது. எல்லா முகாம்களுக்கும் காம்பவுண்ட் சுவர் கட்டித் தருவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். காட்டுமன்னார்குடி முகாமுக்கென கட்டப்பட்டுள்ள தண்ணீர்த் தொட்டியை உள்ளடக்கிக் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட வேண்டும்.

 7.   எல்லா முகாம்களிலும் உள்ள பழைய மின் இணைப்புகள் நீக்கப்பட்டு, முறையாக மின் கம்பங்கள் நட்டு மின்சார இணைப்பை வழங்க வேண்டும். மின் கசிவால் பெரிய விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இப்பணி மேற்கொள்ளப்படுதல் அவசியம்.

 8.   முகாம்களுக்குள் கான்க்ரீட் நடைபாதைகள், கழிவு நீர் வெளியேற்று வசதிகள் ஆகியவை செய்யப்படுதல் வேண்டும். குறிப்பாகக் குள்ளஞ்சாவடி மற்றும் குறிஞ்சிப்பாடி முகாம்களில் இது உடனடித் தேவையாக உள்ளது.

 9.   போர் முடிந்ததை ஒட்டி நாடு திரும்புபவர்களுக்கு அளிக்கப்படும் உதவிகள் மாவட்டந்தோறும் ஒரே சீராக இல்லை என்கிற குறையையும் காட்டுமன்னர்குடி முகாமில் தெரிவித்தனர். இந்தக் குறைகள் சீராக்கப்பட வேன்டும். நாடு திரும்பியவர்கள், அங்கிருக்க இயலாமல் மீண்டும் இங்கு வர நேரும்போது அவர்கள் முறையாக விசாரிக்கப்பட்டு மீண்டும் அவர்களுக்கு அகதி அட்டைகளை வழங்கி அவர்கள் தம் குடும்பத்துடன் வாழ வழிசெய்ய வேண்டும். குள்ளஞ்சாவடி முகாமில் அவ்வாறு திரும்பி வந்த சிலர் ‘கியூ” பிரிவு போலிசாரால் குற்றவாளிகள்போல நடத்தப்பட்டு அவர்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். காவல்துறை இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை நிறுத்த வேண்டும்.

 10.  கீழ்ப்புதுப்பட்டு முகாமில் 47ம் குடியிருப்பில் வசிக்கும் விஜயசேகர் விபத்தொன்றின் விளைவாக இன்று கோமா நிலையில் உள்ளார். அவரைக் கட்டாயமாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றிய இரக்கமற்ற செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து உரிய மருத்துவ உதவி அளிக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

11.  விபத்துக்களால் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு 100 சதுர அடிக்கு மட்டுமே கூரைகள் தருவது என்கிற நிலையைக் கைவிட்டு அவர்களின் முழு வீட்டிற்கும் கூரை வேய மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும். உடைந்துபோன கழிப்பறைகள் முதலியன சீர்திருத்தப்படுதல் வேண்டும்.

நாங்கள் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல மாவட்ட அளவில் நடவடிக்கை மேற்கொண்டு சீர்திருத்தப்படக் கூடிய கோரிக்கைகளை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளோம். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகங்கள் இக்குறைபாடுகளை உடனடியாக நீக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்.

Sunday, July 29, 2012

ஜெயலலிதாவின் அறிவிப்புகளும், குற்றமிழைத்தப் போலீசார் தப்பித்தலும்

நேற்றைய தினம் (28.7.2012) தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, நாங்குனேரி அருகே மறுகால்குறிச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டரால் சுட்டுக் கொல்லப்பட்ட வானமாமலை குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியும், இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தோடு தொடர்புடைய இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த நடவடிக்கை போதாது என்பதுதான் மனித உரிமையில் அக்கறை உடையோரின் கருத்து. மேலும், இந்த அறிவிப்பு எந்தப் பின்னணியில் வந்தது என்பதைப் பார்க்க வேண்டும். வழக்கமாக என்கவுன்டர் நடக்கும் போது, அதற்கு மக்களிடம் ஆதரவு இருக்கும். ஆனால், இந்த முறை வானமாமலை சுட்டுக் கொல்லப்பட்ட போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாகர்கோவில் - நெல்லை நான்கு  வழிச்சாலையில் பொதுமக்கள் நான்கு மணி நேரம் சாலை மறியல் செய்தனர். பின்னர் பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் வானமாமலை உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினர். மேலும்,  வானமாமலை சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தல், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு, வானமாமலையின் மனைவி மஞ்சுவிற்கு அரசு வேலை என நியாயமான கோரிக்கைகளை வைத்துப் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த சம்பவத்தைக் கண்டித்ததோடு, சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரினர். வைகோ பாதிக்கப்பட்ட மக்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை கொடுத்ததோடு, அப்போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். இந்தச் சூழலில்தான் தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதலமைச்சரின் அறிவிப்பில் குற்றமிழைத்தப் போலீசார் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. வெறுமனே பணியிடை நீக்கம், துறை சார்ந்த விசாரணை என கூறப்பட்டுள்ளது. இதெல்லாம், வெறும் கண்துடைப்பு என்பதை அனைவரும் அறிவோம்.

ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் தமிழகத்தில் 6 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். 5 பெண்கள் போலீசாரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சி தற்போது “போலீஸ்” ஆட்சியாகவே நடக்கிறது.

போலீஸ் அத்துமீறலுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமாகும் போது அதை மழுங்கடிக்க முதலமைச்சர் மேற்சொன்னபடி அறிவிப்புகள் மூலம் அதை திசைத் திருப்பி விடுவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார். இதற்கு போலீஸ் உயரதிகாரிகள் அவருக்கு துணைநின்று அறிவுரை வழங்குகின்றனர்.

பரமக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 தேவேந்திரர்கள் கொல்லப்பட்ட போது உடனடியாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதி அளித்தார்கள். திருக்கோவிலூர் போலீசாரால் இருளர் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 4 லட்சம் நிதி வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபோது, வேறு வழியில்லாமல் பரமக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் கூடுதலாக ரூ. 3 லட்சம் நிதி அறிவித்தார். ஆனால், துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான போலீசார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. போலீசாரை பணியிடை நீக்கம்கூட செய்யாமல், வெறுமனே இடமாற்றம்தான் செய்துள்ளனர்.

திருக்கோவிலூரில் 4 இருளர் பெண்கள் போலீசாரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நிலைமை இன்னமும் மோசம். இந்த சம்பவம் ஊடகங்களில் பெரிதாக்கப்பட்ட பின்னர் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 4 லட்சம் நிதி அளித்து அறிவித்தார். உடனடியாக குற்றமிழைத்தப் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், இதுவரையில், போலீசார் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ‘போலீசாரை ஏன் கைது செய்யவில்லை’ என தமிழக அரசைப் பலமுறை கண்டித்தும் இதுவரையில் போலீசார் கைது செய்யப்படவில்லை. குற்றமிழைத்தப் போலீசாரை கைது செய்ய உத்தரவிடாமல், அரசைக் கண்டித்துக் கொண்டே இருக்கும் உயர்நீதிமன்றத்தின் போக்குக் கொடுமையிலும் கொடுமை. அதிகாரத்தின் கரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகளை நீதிமன்றங்கள் அணுகும் போக்குக் குறித்துப் பிறகுப் பார்ப்போம்.

சேலம் அருகே நெய்க்காரப்பட்டியில் ஆண்டுதோறும் நடக்கும் எருதாட்டத்தைத் தடை செய்ததன் விளைவாக நடந்த மோதலில், கிராம மக்கள் மீது போலீசார் நடத்திய கொடிய தடியடித் தாக்குதல் பற்றி அறிவோம். போலீசாரை தாக்கியதாக கூறிப் போடப்பட்ட வழக்கில் தற்போது பொதுமக்கள் 79 பேர் சிறையில் உள்ளனர். இந்த சம்பவத்தை முழுவதையும் நியாயப்படுத்தி போலீஸ் உயரதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் மக்களைத் தாக்கிய போலீசார் மீது எந்தவித சிறிய நடவடிக்கையும்கூட எடுக்கப்படவில்லை.

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், கிருஷ்ணகிரியில் பெரியார் தி.க. பிரமுகர் பழனி என பல கொலை வழக்குகளில் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. தமிழகம் முழுவதும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வர உருப்படியான திட்டம் தமிழக அரசிடம் இருப்பதாக தெரியவில்லை.

இந்நிலையில், போலீசாரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கைக் கீற்று தென்படுவதாக தெரியவில்லை. மனித உரிமை ஆர்வலர்கள் ஆகிய நாங்கள் தொடர்ந்துப் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உண்மை நிலைமைகளை அறிந்து வெளிப்படுத்தி வருகிறோம். வெற்று அறிவிப்புகளால் அரசு இவற்றை எதிர்க்கொண்டு வருகிறது. நாங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதாவது செய்ய முடியாதா என்ற நம்பிக்கையில் ‘விடாது கறுப்பு’ போல செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.

‘சலிப்பு, ஓய்வு இவை இரண்டும் தற்கொலைக்குச் சமம்’ என்ற தந்தை பெரியாரின் வாசகத்துடன் நாட்காட்டி என் அறையில், கண்முன்னே தொங்கிக் கொண்டிருக்கிறது.

Thursday, July 19, 2012

தமிழர்களிடையே தமிழ்க் கணினி குறித்து விழிப்புணர்வு செய்ய பல்வேறு நூல்களை எழுதியவரான ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு புதுச்சேரியில் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 22-07-2012 அன்று காலை 10 மணியளவில் வணிக அவை சிறிய அரங்கத்தில் 'புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்' சார்பில்நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரியின் பல்வேறு தமிழறிஞர்களும் தமிழ்க் கணினி ஆர்வலர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

தமிழ்க் கணினி குறித்த விழிப்புணர்வைத் தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர்களில் ஆண்டோ பீட்டரும் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தார். கணினி, இணையம், அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆண்டோ பீட்டர். மென்பொருள் தயாரிப்பு, இணையப் பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர்.

தமிழகத்தில் முதன்முதலாகப் பல்லூடகக் கல்வியை அறிமுகப்படுத்திய இவர் இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக 500க்கும் மேற்பட்ட இலவச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

கணினி, தமிழ் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டிருப்பதுடன் 26 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்துவிதமான படைப்புகளையும் இணைய தளங்களில் அச்சு இதழ்களைப் போன்று பகுதிகளாகவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும் படிக்கவும் உருவாக்கப்பட்ட இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழான "தமிழ் சினிமா" எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர்.

கணினித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சில குழுக்களில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். ‘தமிழும் கணிப்பொறியும்’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு - 2004. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளருக்கான விருது 2007. ஸ்ரீராம் நிறுவனத்தின் ‘பாரதி இலக்கியச் செல்வர் விருது’, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் ‘பெரியார் விருது’ ஆகிய விருதுகளை பெற்றவர்.

கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின்  நிறுவனரும், கணித்தமிழ்ச் சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பல கணினி நூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் 12.07.2012 வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

இவரின் மறைவு தமிழ் இணையத் துறைக்குப் பேரிழப்பாகும்.