Monday, April 30, 2007

அது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்


கூவம் நதியால் சூழப்பட்டு இருந்த சென்னை நடுவண் சிறையின், உயர் பாதுகாப்புத் தொகுதி 1-ல் அடைக்கப்பட்டேன். ஒருவனைப் பயங்கரவாதியாகச் சித்திரிப்பதற்கு அரசு மேற் கொள்ளும் உத்திகளில் ஒன்று, உயர் பாதுகாப்புத் தொகுதியில் சிறைவைப்பது. அந்தத் தொகுதியில் அடைக்கப்படுபவர்கள், பகல் நேரத்தில்கூட, அதனைவிட்டு வெளியில் வந்து பிற கைதிகளுடன் பேசவோ, பழகவோ இயலாது. கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் உள்ளே வந்திருப்போருக்கு இருக்கும் பகல் நேரச் சுதந்திரம்கூட என் போன்ற ‘பயங்கரவாதி’களுக்குக் கிடையாது.

அந்தத் தொகுதியில் கீழே நான்கும், மாடியில் நான்குமாக எட்டு அறைகள். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு கழிப்பறை உண்டு. வெளியில் இரண்டு பொதுக் கழிப்பறைகளும், ஒரு நீர்த் தொட்டியும், கொஞ்சம் திறந்தவெளி இடமும் இருந்தன. மொத்த உலகம் இவ்வளவுதான்!

சிறையதிகாரி என்னை அங்கே அழைத்துக்கொண்டு போனபோது, எட்டு அறைகளுக்குமாகச் சேர்த்து இரண்டே இரண்டு பேர்தான் இருந்தார்கள். நான் மூன்றாவது ஆள். அவர்களில் ஒருவர் பெயர் மோகன். இன்னொருவர் செல்வராஜ்.

உள்ளே நுழைந்ததுமே மோகன் என்னிடம் அன்பாகப் பேசினார். ‘என்னைத் தெரிகிறதா?’ என்று கேட்டார். ‘பார்த்த மாதிரி இருக்கிறது’ என்றேன். அவர் விளக்கம் சொன்னபின், அந்தப் பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, 1996-ம் ஆண்டு இறுதியில் நான் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். ஒரு நள்ளிரவில் அங்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ஏற்கெனவே 53 பேர் அடைக்கப்பட்டு இருந்த, அந்த நீள் அறையில் 54-வதாக என்னை உள்ளே அனுப்பினார்கள்.

குறுக்கும் நெடுக்குமாகவும், தாறுமாறாகவும் எல்லோரும் படுத்திருக்க, நான் ஒரு ஓரமாகப் படுக்க இடம் தேடியபடி நின்றிருந்த போது, ஒரு ஆள் எழுந்து, என்னைப் பற்றி விசாரித்து, எனக்கு மரியாதை கொடுத்து, படுப்பதற்கு ஓர் இடத்தையும் ஒதுக்கித் தந்தார். அவர்தான் மோகன்.

மோகனைப் பற்றிய இன்னொரு செய்தி, அவர் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் தம்பி. அதே வழக்கில் கைதாகி உள்ளே இருக்கும் இன்னொருவர்தான் செல்வராஜ். வழக்குக் காரணமாக ‘ஆட்டோ’ செல்வராஜ். அவர்கள் இருவரும் மாடியில் உள்ள அறைகளில் இருக்க, நான் மட்டும் கீழ் அறை ஒன்றில், மாலை ஆறு மணிக்குப் பூட்டப்பட்டேன்.

ஆளரவமற்ற அன்றைய இரவின் நிசப்தம், வாழ்க்கை என்னை எப்படிப் புரட்டிப் போட்டுள்ளது என்பதை எனக்கு உணர்த்திற்று. வீட்டிலும் உறுப்பினர்கள் அதிகம்; வெளியிலும் நண்பர்கள் அதிகம். கலகலப்பாகவே வாழ்ந்து பழகிய நான் தனிமையில், வராந்தாவில் எரியும் ஒரு சின்ன விளக்கின் வெளிச்சத்தில் கம்பிகளைப் பிடித்தபடி நின்றிருந்தேன்.

ஈழ மக்களின் விடுதலைக்காகப் போராடும் புலிகளின் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துரைப்பதில் எப்போதும் நான் தயங்கியதில்லை. ஒருமுறை, ‘உங்கள் மீது விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதே?’ என்னும் வினாவுக்கு, ‘அது முத்திரையன்று, என் முகவரி!’ என விடை எழுதியிருந்தேன்.

நாங்கள் கைது செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த கூட்டத்தில் பேசும்போது, ‘எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்க முடியாது. கருத்து வேறுபாடுகளுக்குரிய களமாக அமைவதுதான் ஜனநாயகம். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கருதுவோர், தங்கள் கருத்தை ஊடகங்களிலும், மேடைகளிலும் வெளிப்படுத்த உரிமை இருக்கும்போது அவர்களைப் போராளிகள் என்று கருதும் எங்கள் கருத்தை வெளியிடுவது மட்டும் எப்படிப் பயங்கரவாதமாகும்?’ என்று நான் வினா எழுப்பினேன்.

எல்லாவற்றுக்கும் உலகில் ஒரு விலை உள்ளது. இது கருத்து உரிமைக்காக நாம் கொடுக்கும் விலை என்று எண்ணிக்கொண்டு இருந்தபோது, என்னையும் மறந்து உறங்கிவிட்டேன்.

அடுத்த நாள் காலைச் செய்தித்தாள்களில், நான் கைது செய்யப்பட்ட செய்தியோடு, என் வீட்டில் சோதனை (ரெய்டு) நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வீட்டில் சோதனை என்றால், மீண்டும் ஒரு பரபரப்பு அரங்கேற்றப்பட்டு இருக்கும். ஏன் இத்தனை பரபரப்பு? எதற்காக இவ்வளவு உருட்டலும், மிரட்டலும்?

ஜெயலலிதா அரசின் சர்வாதிகாரம் குறித்து, வைகோ தன் அறிக்கை ஒன்றில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தார். ‘தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும், எதிர்க் கட்சிகளை அச்சுறுத்தவும், தமிழகத்தின் கோடானுகோடி மக்களைப் பாதிக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து திசை திருப்பவும், அ.தி.மு.க. அரசு பொடா சட்டத்தைப் பயன்படுத்துகிறது’ என்று வைகோ சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை!

இரண்டு நாள்களுக்குப் பின்னர், சிறையில் என்னைச் சந்திக்க என் குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப் பட்டது. காரைக்குடியில் படித்துக் கொண்டு இருந்த என் இளைய மகன் பாரதிதாசன் கண் கலங்குவதைக் கம்பி வலைகளைத் தாண்டி என்னால் காண முடிந்தது.

‘சிறைச்சாலையைப் பூஞ்சோலை என்று பாடியவரின் பெயரை அல்லவா உனக்கு வைத்திருக்கிறேன். இப்படிக் கலங்கலாமா?’ என்று ஆறுதல் சொன்னேன்.

மனைவியிடம், வீட்டில் நடந்த சோதனை பற்றிக் கேட்டறிந்தேன். சில புத்தகங்களை மட்டும் எடுத்துச் சென்றார்களாம். ‘நீங்கள் வைத்திருந்த பிரபாகரன் படத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள்’ என்று மனைவி கூற, ‘படமே வெடிகுண்டாய் அவர்களைப் பயமுறுத்தியிருக்கும், விடு!’ என்றேன்.

25.08.02-ம் நாள் நாளேடுகளில், ஒரு வியப்பான செய்தி வெளியாகி இருந்தது. சிறீலங்காவின் மறு வாழ்வுத் துறை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தன, ‘செப்டம்பர் 16 அன்று, தாய்லாந்தில் தொடங்க விருக்கும் பேச்சுவார்த்தைக்கு வசதியாக, விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடை செப்டம்பர் 6 அன்று விலக்கிக்கொள்ளப்பட உள்ளது’ என்று அறிவித்திருந்தார்.

எந்த நாட்டில் சிக்கலோ, அந்த நாட்டிலேயே தடை நீக்கப்படும்போது, இந்த நாட்டில் தடை இருப்பதும், தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றிப் பேசி விட்டோம் என்று சொல்லி எங்களைப் பொடாவில் கைது செய்வதும் வேடிக்கையான செய்தி அன்று; வேதனையான முரண்!

சிறையில் காலை நேரம் செய்தித்தாள்களில் கழியும். பிறகு, நான் கொண்டு சென்றிருந்த நூல்களைப் படிப்பேன். இருப்பினும் எவ்வளவு நேரம் படிக்க முடியும்! பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும் போலிருக்கும். மோகன் அதிகம் பேசமாட்டார். செல்வராஜ், பேசுவதை நிறுத்தமாட்டார். அவருடைய கதையை அவர் சொல்லச் சொல்ல, நானும் சுவைத்துக் கேட்கத் தொடங்கினேன். பின்னாளில் அதுவே, என்னால் எழுதப்பட்ட ‘இடைவேளை’ என்னும் தொடர்கதை ஆனது.

26-ம் தேதி காலை. ‘ஐயா! பாத்தீங்களா?’ என்று செய்தித்தாளை எடுத்துக் கொண்டு செல்வராஜ் ஓடி வந்தார். கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திவிட்ட செய்தி பெரிதாக வந்திருந்தது.

எனக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. என் கவலை நாகப்பா பற்றியது மில்லை; வீரப்பன் பற்றியதுமில்லை. அப்போது, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு, கர்நாடகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஏதேனும் கலவரம் ஏற்பட்டு, அவருக்கு ஆபத்து ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்று எண்ணி, மனம் கலங்கினேன். ஆனால், நல்லவேளையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

அதே செய்தித்தாளின் பின் பக்கத்தில் ‘நெடுமாறன் கட்சி அலுவலகத்துக்குச் சீல் வைப்பு’ என்று இன்னொரு செய்தி வந்திருந்தது.

தமிழனத்தின் மீதும், தமிழின உணர்வாளர்களின் மீதும் ஜெயலலிதா வுக்கு ஏன் இத்தனை கோபம் என்று கேள்வி எழுந்தது. பரம்பரை யுத்தம் போன்று அவர் நடந்துகொண்டார்.

நாள்கள் நகர்ந்தன. உறவினர்களும் நண்பர்களும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களிலும் வந்து பார்த்துச் சென்றனர். அந்தச் சந்திப்புகள், விதவிதமான உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருந்தன.

நாள் தவறாமல் சிறைக்கு வந்து கொண்டு இருந்த இலெனின், 30.08.02 அன்று விரவில்லை. என் அண்ணன் செல்வமணியும், நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர்.

‘இந்துவுக்குக் காலையிலிருந்து இடுப்பு வலியாக இருக்கிறதாம். அதனால்தான் இலெனின் வரவில்லை’ என்று அண்ணன் சொன்னார். ‘தலைப் பிரசவம்... எல்லோருமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.

மீண்டும் சிறையில் அறைக்குத் திரும்பிய பின், மகளின் நினைவு மனத்தை வாட்டியது. ‘வந்தது, வந்தது ஞாபகம் 'மகளே, வாடாத பூப்போன்ற உன் முகம்’ என்னும் அறிவுமதியின் பாடல் வரிகளை வாய் முணு முணுத்தது.

அன்று வெள்ளிக்கிழமை. அடுத்து இரண்டு நாள்களுக்கு எதையும் தெரிந்துகொள்ள முடியாது. திங்கள்கிழமை வரை நெஞ்சம் அதையே நினைத்துக்கொண்டு இருந்தது. நல்ல செய்திக்காகக் காத்திருந்தேன்!

(தொடரும்)

நன்றி : ஆனந்த விகடன்.

Thursday, April 26, 2007

பிற்படுத்தப்பட்ட மாணவர்களை தீர்ப்புக்குப் பிறகு சேர்க்க முடிவு - அர்ஜுன் சிங்

மத்திய அரசின் உயர் கல்விக்கூடமான ஐ.ஐ.எம்.களில் (இந்திய மேலாண்மையியல் கல்வி நிறுவனம்) பொதுப்பிரிவு இடங்களை வழக்கம்போல நிரப்புவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு சேர்ப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த மனித வளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் தில்லியில் செய்தியாளர்களை 25-04-2007 புதன்கிழமை சந்தித்தபோது இதைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு 27% இடங்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்குவது என்ற தங்கள் முடிவில் மத்திய அரசு உறுதியாக இருந்ததால், இந்த வழக்கு விசாரணையை மே 8-ஆம் நாளே எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் 24-04-2007 செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

எனவே, பொதுப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களை மேலும் காக்க வைக்காமல் அவர்களுக்கான சேர்க்கையை முடித்துவிட்டு, தீர்ப்பு வந்ததும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களைச் சேர்க்கலாம் என்று மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது.


பிரதமர் மன்மோகன்சிங் கருத்து:


27% இட ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு வராதவரை, பொதுப்பிரிவு சேர்க்கையை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கூட்டு முடிவை மத்திய அமைச்சரவை ஏற்கெனவே எடுத்ததால், சேர்க்கையைத் தொடரலாம் என்ற முடிவையும் அங்கேயே எடுத்துவிடலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அர்ஜுன் சிங் அதை ஏற்றார். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் (சி.சி.பி.ஏ.) இருப்பதால் முடிவை அங்கே எடுப்பது சரியாக இருக்கும் என்ற கருத்து ஏற்கப்பட்டது என்றார் அர்ஜுன் சிங்.

மனிதவளத் துறைக்கும் சட்ட அமைச்சகத்துக்கும் இடஒதுக்கீட்டு வழக்கு குறித்துக் கருத்து வேறுபாடு ஏதும் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இல்லவே இல்லை, உச்ச நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்த மனுவை இரு அமைச்சகங்களும் கலந்துப் பேசித்தான் தயாரித்தன என்று அவர் பதில் அளித்தார்.

27% ஒதுக்கீடு குறித்து மே 8-ஆம் நாள்தான் விசாரணை நடைபெறப் போகிறது என்னும்போது பொதுப்பிரிவு மாணவர்கள் சேர்க்கைக் குறித்து இப்போது ஏன் முடிவெடுக்கப் பார்க்கிறீர்கள் என்று கேட்டனர்.

மாணவர்கள் நலன் கருதித்தான் இந்த முடிவை எடுக்கிறோம் என்று பதில் அளித்தார் அர்ஜுன் சிங்.

பொருளாதார அளவுகோள் (கிரீமிலேயர்):

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உயர் வருவாய்ப் பிரிவினரை விலக்கிவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முன்னர் கூறியிருந்த யோசனை மீண்டும் பரிசீலிக்கப்படுமா என்று கேட்டதற்கு, இதை உயர் நிலையில் விவாதித்தோம்; இம்முறை இதில் இந்த விஷயத்தைச் சேர்க்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம் என்று பதில் அளித்தார் அர்ஜுன் சிங்.


தோழமைக் கட்சிகள் நெருக்குதலா?


இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் மே 8-இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்வரை ஐ.ஐ.எம்.களில் மாணவர்களைச் சேர்க்கக்கூடாது என்று தோழமைக் கட்சிகளிடமிருந்து நெருக்குதல் ஏதேனும் வந்ததா என்று கேட்டனர். இல்லை என்று அர்ஜுன் சிங் பதில் அளித்தார்.

Wednesday, April 25, 2007

பிற்படுத்தப்பட்டோர் 27% இடஒதுக்கீட்டிற்குத் தடை: மே 8-இல் விசாரணை

மத்திய அரசின் ஐஐஎம், ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக் காலத் தடை மீதான விசாரணை மே 8-ஆம் நாள் நடைபெறும். இதற்கான ஆணையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பிறப்பித்தார்.

இந்த மனு மீதான விசாரணையை முன்னதாகவே நடத்துமாறு 24-04-2007 செவ்வாய்க்கிழமை மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், அரசு வழக்கறிஞர் மிலன் குமார் பானர்ஜி ஆஜராகி மனு மீதான விசாரணையை முன்னதாகவே நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் 8-ஆம் நாளன்று நடைபெறும் என்று பெஞ்ச் உத்தரவிட்டது.

இதற்கு முன்னதாக இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 3-ஆம் வாரத்தில் நடைபெறும் என்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சத இடஒதுக்கீடு தொடர்பாக ஓராண்டுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் மற்றொரு பெஞ்ச் இடைக் காலத் தடை விதித்தது.

இதையடுத்து உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு விதித்துள்ள தடையை விலக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் அரிஜித் பசாயத், எல்.எஸ். பான்டா அடங்கிய பெஞ்ச் 23-04-2007 திங்கள்கிழமை நிராகரித்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அரசு சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஏற்கப்பட்டது.

"இந்தியாவின் தலைமை நீதிபதி என்ற முறையில் இந்த மனு மீதான விசாரணையை முன்னதாகவே நடத்துமாறு உத்தரவிடவும் அதற்கான நாளைக் குறிப்பிடவும் தனக்கு சிறப்புரிமை உள்ளது என்றும் இது நீதிமன்றத்தின் கண்ணியத்தை மீறிய செயலாகாது’’ என்றும் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இந்திய நிறுவனம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் வகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 9 பேருக்கு அந்நிறுவனத்தில் சேர்வதற்கான அனுமதிக் கடிதத்தை அனுப்பியுள்ளதையும் மத்திய அரசு எடுத்துக்காட்டியது.

இதனிடையே சென்னை, தில்லியில் உள்ள ஐஐடி, இரண்டு ஆண்டுக்கான எம்.பி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதையும் மத்திய அரசு தெரிவித்தது.

Tuesday, April 24, 2007

பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு : தடை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு விதித்துள்ள தடையை விலக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் 23-04-2007 திங்கள்கிழமை நிராகரித்தது. இதனால், 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டில் செயல்படுத்துவது என மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் கோரிக்கை மீது நீதிபதிகள் அரிஜித் பசாயத், எல்.எஸ்.பான்டா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது. எனினும், இந்த பிரச்சினையை அரசமைப்புச் சட்ட பெஞ்சின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வேறொரு நாளில் பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒன்றரை மணி நேரம் வாக்குவாதம் நடந்தது. மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் ஜி.இ.வாகனவதி ஆஜரானார்.

’இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும். இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதால் பொதுப்பிரிவில் உள்ள மாணவர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகாது' என்றார்.

’மார்ச் 29-ஆம் நாள் உத்தரவை மாற்றும்படி விடுத்துள்ளது கோரிக்கைதான் மறு ஆய்வு மனு அல்ல. உச்ச நீதிமன்றத்தின் சட்டப்பிரிவு 145-ன் படி இந்த விசயத்தில் உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தை அரசமைப்புச் சட்ட பெஞ்சுக்கு அனுப்பவேண்டும்'என்றும் வாகனவதி குறிப்பிட்டார்.

இது தொடர்பாக நீதிபதிகள் குறிப்பிடுகையில், ’இந்த விவகாரத்தை அரசமைப்புச் சட்ட பெஞ்ச் பரிசீலனைக்கு அனுப்புவது பற்றி பிறகு பரிசீலிக்கப்படும். இந்த ஆண்டை பொருத்தமட்டில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இறுதியானதுதான். இது இடைக்கால தீர்ப்பு என மத்திய அரசு விளக்கம் தருவது சரியானதல்ல'என்றனர்.

’இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் உள்ள துணைப் பிரிவின்படி ஏதோ ஒரு காரணத்துக்காக எந்தவொரு மத்திய கல்வி நிறுவனத்திலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் விதிவிலக்கு அளிக்க வழி உள்ளது. இப்படி மத்திய அரசே இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு தர அதிகாரம் எடுத்துக் கொண்டுள்ளபோது நீதிமன்றம் மட்டும் தடை விதிக்கக்கூடாது என்பது ஏன்?

57 ஆண்டுகளாக பொறுமை காத்தீர்கள். இன்னும் ஒரு ஆண்டு காலத்துக்கு ஏன் பொறுமையாக இருக்க முடியாது'என்றார் நீதிபதி பசாயத்.

ஒரு சந்தர்ப்பத்தில் இந்திரா சகானி மற்றும் நாகராஜ் வழக்கைக் குறிப்பிட்டுப் பேசிய வாகனவதி, ’இந்த வழக்குகளில் இடஒதுக்கீட்டுச் சலுகைக்கு ஆதரவாக தீர்ப்பு தரப்பட்டுள்ளது' என்றார்.

அது பற்றிக் குறிப்பிட்ட நீதிபதிகள், ’தேவைப்படும்போது மட்டும் தமக்கு பொருத்தமான சில தீர்ப்புகளை முன்வைப்பது கூடாது. இந்த இரு வழக்குகளிலும் வசதி படைத்தோருக்கு ஒதுக்கீடு சலுகை வழங்குவது கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதை அமல்படுத்த மத்திய அரசு விரும்பவில்லையே' என்று தெரிவித்தனர்.

இதுபற்றி வாதிட்ட வாகனவதி, ’வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு சலுகைகள் தொடர்பாகத்தான் வசதி படைத்தோர் என்ற கொள்கையை அரசமைப்புச் சட்ட பெஞ்ச் உருவாக்கியுள்ளது. கல்வி தொடர்பாக இது பொருந்தாது' என்றார்.

இந்த வாதத்தில் திருப்தி அடையாத நீதிபதிகள், ’பின்தங்கியவர்களுக்கு சலுகை தரவேண்டும் என்று உண்மையில் கருதினால் அவர்களுக்குத்தான் முன்னுரிமை தரவேண்டும். சமூக ரீதியில் பின்தங்கியவர்களைவிட பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு தருவதுதான் தேவையானது'என்றும் தெரிவித்தனர்.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுதாரர்களில் ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரீஷ் சால்வே வாதிடுகையில், ’அரசு நிர்ணயித்துள்ள 27 சதவீத இட ஒதுக்கீடு, அரசமைப்புச் சட்டத்தின் 29-ஆவது பிரிவை மீறுவதாகும். இந்தப் பிரிவு, இனம், மதம், ஆண், பெண் என்ற பாலின அடிப்படையில் பொதுமக்களைப் பேதப்படுத்தி பார்க்க அனுமதிக்கவில்லை'என்றார்.

நாட்டின் 60 கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையில் உச்சநீதிமன்றம் தொடர்ந்து தலையிடுவது நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும். சமூக நீதியில் அக்கறை உள்ளோர் இந்த அநீதியைக் கண்டிக்க வேண்டும்.

மத்திய அரசு உடனடியாக பாராளுமன்ற இரு அவைகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Monday, April 23, 2007

இலங்கைப் பிரச்சனையில் இந்தியா அரசியல் ரீதியாக தலையிட வேண்டும்


இலங்கை இராணுவத்தின் துணையுடன் தமிழர்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க, இந்திய அரசு, அரசியல் ரீதியாக தலையிட வேண்டும் என்று இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

புதுச்சேரி வந்த இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி 22-04-2007 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ்ப் பாண்பாட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இயக்கத் தலைவர் வீரமதுரகவி தலைமை தாங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்:

இலங்கையில் பத்திரி்கை சுதந்திரம் முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் படும் கஷ்டங்கள் வெளியே தெரிவதில்லை. தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் இலங்கைக் காடுகள் இரப்பர் தோட்டங்களாகவும், பசுஞ்சோலைகளாகவும் மாறி, இலங்கைக்கு அன்னிய செலாவணியைப் பரிசாக தந்துள்ளது.

இன்று தலைநகர் கொழும்பு மட்டுமின்றி இலங்கையின் பிரத்யேக பகுதிகளிலும் இலங்கை அரசின் அடக்குமுறை மேலோங்கியிருக்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்து 1948-இல் இருந்து 6 மாதத்திற்குள்ளாகவே மலைப்பகுதியின் தமிழர் குடியுரிமைப் பறிக்கப்பட்டது. இதனால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். தொடர் போராட்டம் காரணமாக 2002-ஆம் ஆண்டு மீண்டும் குடியுரிமை அளிக்கப்பட்டது.

போராட்டங்களின் இறுதிக் கட்டத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறியுள்ளது. உச்சக்கட்டத்தை எட்டிய அடக்குமுறையால் யாழ்ப்பாணத்தில் பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது. இப்படி நெருக்கடி நிலையில் புலிகளை அழிப்பதாக கூறி அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் கொன்று குவிக்கின்றனர்.

இந்தியா தலையிட்டால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதுவும் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை தான். இராஜீவ்காந்தி ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதை இந்தியாவும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இலங்கை இராணுவத்தால் தமிழர்கள் மீது மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழப் பெண்களின் கற்பும், தமிழர்களின் பொருள்களும் சூறையாடப்படுகின்றன. விடுதலைப்புலிகளை ஒடுக்குவதாக கூறிக் கொண்டு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆயுத உதவியுடன் அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் குண்டுமழைப் பொழிகிறது. இந்த நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நிச்சயமாக அமெரிக்கா, பாகிஸ்தான் சதியை அறுத்து சுமூகமான வாழ்வு தமிழர்களுக்கு கிடைக்கும்.

இந்தியா அரசியல் ரீதியாக தலையிட்டு தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும். இனப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இல்லையேல் தமிழீழம் உருவாவது என்பது தவிர்க்க முடியாதது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா:

ஒரு கோடி 80 லட்சம் பேர் இலங்கையில் உள்ளனர். அதில் 25 சதவீதம் பேர் தமிழர்கள் இருந்தனர்.

தற்போது அவர்கள் அகதிகளாவும், பல்வேறு காரணங்களாலும் இடம்பெயர்ந்ததன் விளைவாக 20 சதவீதத்துக்கும் குறைவாகவே தமிழர்கள் உள்ளனர்.

ஜெர்மன், சுவீடன், கனடா நாட்டின் குரல்கள் இலங்கை தமிழர்களுக்காக ஒலிக்கும் போது இந்தியாவிலும் அதை எதிர்பார்க்கிறோம். இராஜீவ்காந்தி ஏற்படுத்திய ஒப்பந்தம் அடிப்படையில் நாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தோம். இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க இந்திய அரசு, அரசியல் ரீதியாக நேரடியாக தலையிட வேண்டும்.

இந்தியா, இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையின் வடகிழக்கு இணைப்பு ஒப்பந்தத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். இதை 7 கோடி தமிழர்களும் உணர வேண்டும். இந்தியாவின் குரல் ஓங்கி ஒலித்தால் இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.

இந்நிகழ்ச்சியில் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கச் செயலர் ந.மு.தமிழ்மணி, பொருளர் லூ.அமலன், தமிழ்ஈழ விடுதலை இயக்கப் பொதுச்செயலர் பிரசன்ன இந்திரகுமார், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Sunday, April 22, 2007

பிரான்சில் ஈழத்தமிழர்கள் 17 பேர் கைது: புதுச்சேரியில் கண்டனப் பேரணி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 17 பேரை பயங்கரவாதிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 22-04-2007 ஞாயிறு, காலை 10.30 மணிக்கு, புதுச்சேரி மீட்பரின் அன்னை இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் தி.க. ஒருங்கிணைத்திருந்த இக்கூட்டத்திற்கு அதன் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.

பாட்டாளி மக்கள் கட்சி சா.து.அரிமாவளவன், ஆசிரியர் வேணுகோபால், விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், ப.அமுதவன், ம.தி.மு.க சந்திரசேகரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோ.சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் இரா.மங்கையர்செல்வன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை சி.மூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சி தங்க.கலைமாறன், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம் - வீராம்பட்டினம் கவுன்சிலர் பா.சக்திவேல், தமிழர் தேசிய இயக்கம் இரா.அழகிரி, தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகம் அபுபக்கர், நெய்தல் அரசு ஊழியர் சங்கம் மு.கங்காதரன், தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா, செந்தமிழர் இயக்கம் ந.மு.தமிழ்மணி, தனித் தமிழ்க் கழகம சீனு.அரிமாப்பாண்டியன், இலக்கியப் பொழில் பராங்குசம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை பொ.தாமோதரன், சமூக நீதிப் போராட்டக் குழு அ.மஞ்சினி, ஜோதிப் பிரகாசம், பூவுலகின் நண்பர்கள் சீனு.தமிழ்மணி, தனித் தமிழ் இயக்கம் தமிழமல்லன், விடுதலை வீரர் சீனுவாசனார் இயக்கம் புதுவை தமிழ்நெஞ்சன், புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை சிவ.இளங்கோ, இளங்கோ மன்றம் பொன்னுசாமி, நண்பர்கள் தோட்டம் யுகபாரதி, வெள்ளையணுக்கள் இயக்கம் பாவல், தந்தை பெரியார் தி.க. விசயசங்கர், தந்தைப்பிரியன், மா.இளங்கோ, வீரமோகன், வீரசுப்பு, பரமகுரு உட்பட 100 பேர் கலந்துக் கொண்டனர்.

தீர்மானங்கள்:

1. பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 17 பேரை பயங்கரவாதிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மே மாதம் தொடக்கத்தில் புதுச்சேரி, சிங்காரவேலர் சிலை அருகில் இருந்து மாபெரும் பேரணியாகப் புறப்பட்டு பிரெஞ்சுத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. இதற்குப் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைத் திரட்டுவது.

2. பேரணி முடிவில் பிரெஞ்சுத் தூதரகத் துணைத் தூதரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது.

3. பேரணியை ஒழுங்கமைப்பதற்காக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. இதில் அனைத்துக் கட்சி, அமைப்புகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

வாச்சாத்தி : பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இழப்பீடு - உயர்நீதிமன்றம்

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில், 1992-ஆம் ஆண்டு வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த 18 மலைவாழ் பெண்களை, வனத்துறை அதிகாரிகளும், போலீசாரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். மலைவாழ் மக்களின் வீடுகளையும் சூறையாடினர்.

இச்சம்பவம் தொடர்பாக, சுமார் 269 போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி, கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில், 1996-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும், 425 மலைவாழ் மக்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, மலைவாழ் மக்கள் நலச் சங்கத் தலைவர் சண்முகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, சி.பி.ஐ.யும் அரசும் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் முகோபாத்யா, தனபாலன் ஆகியோர் முன்பு 20-04-2007 சனியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் உதவி சொலிசிடர் ஜெனரல் பி.வில்சன் ஆஜரானார். மலைவாழ் மக்கள் சார்பாக வழக்கறிஞர் வைகை ஆஜராகி, “சட்டப்படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பே, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், இதுவரை அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இழப்பீடு தொகையை வழங்க, அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், “கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை, விரைவாக முடிக்க உத்தரவிடுகிறோம். பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு, இழப்பீடு எவ்வளவு தர வேண்டும் என்று, அரசு ஒரு வாரத்தில் கணக்கிட்டு, அதை 6 வாரத்துக்குள் தர வேண்டும். வழக்கு விசாரணையை, ஜூன் 8-ஆம் நாளுக்கு தள்ளி வைக்கிறோம். அன்று, இழப்பீடு வழங்கியதற்கான அறிக்கையை, அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

Saturday, April 21, 2007

"அது ஒரு பொடா காலம்''- 2 சுப.வீரபாண்டியன்

(பகுதி - 2)

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான் சென்னை ஐஸ் அவுஸ், நடேசன் தெருவில் உள்ள க்யூ பிரிவு காவல்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

அங்கே துணைக் கண்காணிப்பாளர் சில கேள்விகளைக் கேட்டார். அங்க அடையாளங்களைக் குறித்துக்கொண்டார். பேச்சுவாக்கில், ‘‘நீங்கள் சிறைக்குப் போவது, இதுதான் முதல் முறையா?’’ என்று கேட்டார்.

‘‘இது முதல் முறை இல்லை’’ என்ற நான், சிறிய இடைவெளி விட்டு, ‘‘கடைசி முறையும் இல்லை’’ என்றேன். இந்த ‘அதிகப்பிரசங்கித்தனம்’ அவரிடமிருந்து ஒரு சிரிப்பை வரவழைத்தது. ‘திருத்த முடியாத ஆள் போலிருக்கிறது’ என்று நினைத்திருக்கக்கூடும். வேறு எதுவும் கேட்கவில்லை.

காவலர்களையும் ஆய்வாளரையும் பார்த்து, ‘‘உடனே புறப்படுங்க. கொஞ்ச நேரம் ஆச்சுன்னா விஷயம் தெரிஞ்சு பத்திரிகைக்காரங்க வந்துடுவாங்க’’ என்றார் துணைக் கண்காணிப்பாளர்.

மடமடவென்று வேலைகள் நடந்தன. என்னை அழைத்துக்கொண்டு எல்லோரும் புறப்பட்டனர். மாடிப்படிகளைவிட்டுக் கீழிறங்கி வந்தவுடன், அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி!

வாயில் கதவுகளுக்கு வெளியே புகைப்படக் கருவிகளுடன், ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி நண்பர்கள் தயாராக எங்களை எதிர்பார்த்து நின்றிருந்தனர்.

இதனைச் சற்றும் எதிர்பாராத காவலர்கள், எப்படி செய்தி கசிந்தது என்று விளங்காமல், என்னை அழைத்துக்கொண்டு பின்புறமாகச் சென்றனர். காவல் ஊர்தி பின்புறம் வரவழைக்கப்பட்டது. என்னை அதில் ஏற்றியதும், வாயில் கதவுகளைத் திறந்தார்கள். மின்னல் வேகத்தில், ஊர்தி அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டது.

பூவிருந்தவல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தை நோக்கி எங்கள் வாகனம் சென்றது.

இந்தப் பயணம் எங்கே தொடங்கியது என்று நான் நினைத்துப் பார்த்தேன்.

2002 ஏப்ரல் 7 அல்லது 8-ம் தேதியாக இருக்க வேண்டும். நானும், ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீதும், கோடம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்தில் அமர்ந்திருந்தபோதுதான், இதற்கான தொடக்கம் ஏற்பட்டது.

நண்பர் சாகுலுடன் அவ்வப்போது இப்படி உரையாடுவது வழக்கம். கவிஞர் அறிவுமதி, இயக்குநர் சீமான், அன்புத் தென்னரசன் ஆகியோரும் சில வேளைகளில் இணைந்துகொள் வார்கள். பல நிகழ்ச்சிகள், அடுத்த கூட்டங்கள் முதலானவை அங்கு முடிவு செய்யப்படுவதுண்டு. குறிப்பிட்ட அந்த நாளில், நாங்கள் இருவர் மட்டுமே!

‘தமிழ் முழக்கம்’ சார்பில், ஒவ்வொரு மாதமும் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை சாகுல் நடத்திக்கொண்டு இருந்தார். அந்தக் கூட்டம், வடபழனியில் உள்ள ஒரு சிறிய திருமண மண்டபத்தில் நடக்கும். திருமண நாளாக இருந்தால் மண்டபம் கிடைக்காது என்பதால், ஒவ்வொரு மாதமும் ‘அஷ்டமி’யன்று கூட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்தோம். பகுத்தறிவாளனாகிய நான், பஞ்சாங்கம் பார்த்து அஷ்டமி நாளை அவருக்குக் குறித்துக் கொடுப்பேன். அன்று, அடுத்த மாத ‘அஷ்டமிக் கூட்ட’த்தை எப்படி நடத்தலாம் என்று பேசிக்கொண்டு இருந்தோம்.

முதலில், நூல்களுக்கான திறனாய்வுக் கூட்டமாகத்தான் அது நடந்தது. பிறகு, நல்ல திரைப்படங்களையும் திறனாய்வு செய்தால் என்ன என்று தோன்றியது. ‘அழகி’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

ஏப்ரல் 8-ம் தேதி, எனக்குப் புதிய சிந்தனை ஒன்று தோன்றியது. 2002 பிப்ரவரி 22 அன்று, ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ‘புரிதல் ஒப்பந்தம்’ ஏற்பட்ட பிறகு, ஏப்ரல் 10-ம் தேதியன்று, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், உலகச் செய்தியாளர்களுக்கு, வன்னியில் பேட்டி அளிக்கப்போகிறார் என்னும் செய்தி, அன்று பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று ஆகும்.

‘அந்தப் பேட்டியை ஏன் இந்த முறை நாம் திறனாய்வு செய்யக் கூடாது’ என்று நான் சாகுலிடம் கேட்டதும், துள்ளிக்குதித்து விட்டார். அவருக்கு ஒன்று பிடித்து விட்டால், பிறகு வேறு எது குறித்தும் அவர் சிந்திக்க மாட்டார். அதைச் செய்து முடிக்கும் வரை, காரியமே கண்ணாயிருப்பார்.

அஷ்டமி, இடம் எல்லாம் மாறிப் போய்விட்டது. ஏப்ரல் 13-ம் தேதி, சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஆனந்த் திரையரங்கைப் பதிவுசெய்து விட்டார். நெடுமாறன் ஐயா, தேனிசை செல்லப்பா, புதுக்கோட்டைப் பாவாணன், கவிஞர் அறிவுமதி, வழக்குரைஞர் அருள்மொழி, மருத்துவர் தாயப்பன் அனைவரிடமும் அன்று மேடையில் பேசுவதற்கு ஒப்புதல் வாங்கிவிட்டார்.

நான்கே நாள்கள் இடைவெளியில் நண்பர் சாகுல் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். அந்தப் பரபரப்பு, காவல்துறையிடம் ஓர் எச்சரிகை உணர்வை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அதனால், நெடுமாறன் ஐயா எழுதியுள்ள ‘தமிழீழம் சிவக்கிறது’ என்னும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாகச் சொல்லி, ஏப்ரல் 12-ம் தேதி மாலையே, சாகுலைக் காவல் துறையினர் கைது செய்து விட்டனர். ஏறத்தாழ 1,000 புத்தகங்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்ட நூல் அன்று. ஏற்றுமதி, இறக்குமதிக்கு சாகுலிடம் முறையான உரிமமும் உள்ளது. ஆனால், அது பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல், அவரைக் கைது செய்துவிட்டனர்.

அவரைக் கைது செய்துவிட்டால், விழா நடக்காது என்று அவர்கள் கருதியிருக்கலாம். விளைவு எதிர்மாறாக ஆகிவிட்டது.

மாலை 4 மணிக்கே, அரங்குக்குக் கூட்டம் வரத் தொடங்கிவிட்டது. ஆறு மணியளவில் கூட்டம் தொடங்கிய போது, அந்த இடமே உணர்ச்சிப் பிழம்பாக இருந்தது.

அன்று காலைதான், ‘விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால், பொடா சட்டம் பாயும்’ என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஏறத்தாழ மூன்று மணி நேரம் மிகச் சிறப்பாகக் கூட்டம் நடந்தது. அன்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதற்காகவே நெடுமாறன் ஐயாவும், நானும் கைது செய்யப்பட்டுள்ளோம்.

ஏப்ரல் 8-ம் தேதி, ஒரு உணவகத்தில் விழுந்த விதை, ஆகஸ்ட் மாதம் மரமாக வளர்ந்துவிட்டது. அதே நேரம், அந்தக் கூட்டம் ஒருவேளை நடக்காமல் இருந் திருப்பினும், வேறு ஒரு கூட்டத்தைக் காட்டி எங்களை அந்த அம்மையார் கைது செய்திருப்பார் என்பதே உண்மை.!

இவ்வாறு பல்வேறு வகையான சிந்தனைகளில் மூழ்கியிருந்த நான், காவல் ஊர்தி பூந்தமல்லி நீதி மன்றம் வந்துவிட்டதை உணர்ந்து, எண்ணங்களிலிருந்து விடுபட்டேன்.

நீதிமன்ற வாயிலில் என்னை எதிர்பார்த்து பரந்தாமன், திருச்சி சௌந்தரராசன், பத்மநாபன் முதலான இயக்கத் தோழர்கள் பலரும், என் அண்ணன் சுவாமிநாதன், என் மகன் இலெனின் ஆகியோரும் காத்திருந்தனர். எவரும் என்னை நெருங்குவதற்குக் காவல்துறை அனுமதிக்கவில்லை.

ஏ.கே-47 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என்னைச் சூழ்ந்து வர, நான் நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டேன். அந்தக் காட்சியைப் பார்ப்பவர்களுக்கு, ஏதோ கார்கில் போரி லிருந்து, அந்நிய நாட்டுப் படை வீரனை அழைத்து வருவது போலிருக்கும்.

வழக்கைக் கேட்ட நீதிபதி, என்னை செப்டம்பர் 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி ஆணையிட்டார். எங்கள் வழக்கறிஞர் புருசோத்தமன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மகனை மட்டும் அருகில் வந்து பேச அனுமதிக்குமாறு நீதிபதி கூறினார். விடைபெற்றேன். பெரியப்பா மூவரிடமும், அத்தையிடமும், தம்பி பாரதிதாசனிடமும் செய்தியைக் கூறச் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

‘க்யூ’ பிரிவு அலுவலகத்தில் ஏமாற்றமடைந்த இதழியலாளர்கள், இங்கு சரியாக வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். ‘‘சொல்லுங்கள், என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று தொடர்ந்து கேட்டனர்.

ஓரிரு நிமிடங்களில் நிதானமாக நான் எண்ணியதைச் சொல்லி முடித்தேன்.

‘‘அங்கும் போர் நடக்கவில்லை. இங்கும் கலவரம் ஏதுமில்லை. பிறகு ஏன் பொடா என்று தெரியவில்லை. இங்கே நடப்பது ஜெயலலிதா ஆட்சியா, சந்திரிகா ஆட்சியா என்றே சந்தேகம் வருகிறது. தமிழ் இங்கு கெட்ட வார்த்தையாகிவிட்டது. தமிழ் உணர்வாளர்களெல்லாம் இந்த அரசுக்குத் தீவிரவாதியாகத் தெரிகின்றனர். இந்நிலைமைகள் மாறியே தீரும். வரலாறு எங்களை விடுதலை செய்யும்’’ என்றேன்.

என்னை ஏற்றிக்கொண்டு ஊர்தி நகர்ந்தது. இயக்கத் தோழர்கள் முழக்கம் எழுப்பினர்.

எந்தச் சிறைக்குக் கொண்டு செல்கின்றனர் என்று தெரியவில்லை. அப்போது வைகோ வேலூரிலும், நெடுமாறன் ஐயா கடலூரிலும், கணேசமூர்த்தி மதுரையிலும், பாவாணன் கோவையிலுமாகப் பல்வேறு சிறைகளில் இருந்தனர். ‘நமக்குப் பாளையங்கோட்டையோ என்னவோ?’ என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.

என் எண்ணத்துக்கு மாறாக, சென்னை நடுவண் சிறைக்கே என்னை அழைத்துச் சென்றனர்.

மதியம் 12.15 மணிக்கு நான் சிறைக்குள் நுழைந்தேன். நான் உள்ளே சென்றபின், அந்தப் பெரிய கதவுகள் அடித்து மூடப்பட்டன.

அவை மீண்டும் திறக்க, ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்பது, எனக்கு அப்போது தெரியாது!

(தொடரும்)

நன்றி: ஆனந்த விகடன், 24-04-2007.

ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம் : அரவானிகள் சிறை பிடிப்பு-கண்டனம்


ஐஸ்வர்யா-அபிஷேக் ஆகியோரின் திருமணத்தையொட்டி நூற்றுக்கணக்கான அரவானிகளை மும்பை போலீசார் 20-04-2007 வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனர். மனித உரிமையில் அக்கறையுள்ள அனைவரும் இதைக் கண்டிக்க வேண்டும்.

வட இந்திய கலாச்சாரப்படி பொதுவாக பண்டிகை, விழா, திருமண நிகழ்ச்சி போன்றவற்றில் அரவானிகள் கலந்துகொண்டு ஆடிப் பாடி, பணம் பெறுவது வழக்கம். அவ்வாறு வரும் அரவானிகளுக்கு உரிய மரியாதை தந்து உபசரிக்கும் வழக்கமும் வட மாநிலங்களில் உண்டு.

ஆனால், மிகுந்த கெடுபிடியுடன் நடைபெற்ற ஐஸ்வர்யா-அபிஷேக் பச்சன் திருமண விழாவில் அரவானிகள் எவரையும் உள்ளே விடக்கூடாது என்பதில் மும்பை போலீசார் உறுதியாக இருந்தனர். மும்பையிலுள்ள நூற்றுக்கணக்கான அரவானிகள் திருமணம் நடைபெறும் அமிதாப் பச்சன் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று ஆடிப்பாடி தங்கள் அன்பை வெளிப்படுத்த நினைத்திருந்தனர்.

மிக முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இத்திருமண நிகழ்ச்சிக்கு அரவானிகள் பெருமளவில் குவிந்துவிட்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறி வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே மும்பை நகரில் உள்ள நூற்றுக்கணக்கான அரவானிகளை போலீசார் பிடித்து சிறைக்காவலில் வைத்தனர்.

இப்பணியில் பெண் போலீசார் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைபிடிக்கப்பட்ட அரவானிகள் அனைவரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் விடுவிக்கப்படுவார்கள் என்று மும்பை போலீசார் தெரிவித்தனர்.

அரவானிகள் தங்களையும் சக மனிதர்களாக பாவிக்க வேண்டும் என்று பல காலமாக கோரி வருகின்றனர். இதற்கென அவர்களிடையே பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இச்சூழலில் ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணத்தையொட்டி மும்பைப் போலீசார் இதுபோன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். அரவானிகளை பாகுபாடின்றி நடத்துவதும், அவர்களை இச்சமூகத்தின் அங்கமாக பார்ப்பதும் அவசியம். அது தான் மனிதர்களுக்கு அழகு.

ஐஐஎம் : மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க இந்திய அரசு உத்தரவு


மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும்படி ஆறு இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐஎம்) இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் 20-042007 வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழக்கு விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை. உச்ச நீதிமன்றம் வரும் 23-04-2007 திங்கள்கிழமையன்று விசாரிக்க உள்ளது. அதுவரை நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை நிறுத்தி வைப்பதே நியாயமானதாக இருக்கும். மாணவர் சேர்க்கையை அரசு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்.

இந்த கல்வி நிறுவனங்களை நடத்துவது அரசுதான். எனவே அவற்றை நிர்வகிப்பவர்களுக்கு எப்படி நடந்துகொள்வது என்பது தெரியாமல் போகாது.

இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அவசர சட்டம் கொண்டுவர முடியாது. இது அரசமைப்புச் சட்டத் திருத்தம். இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எல்லாவித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

இப்போது புதிய நிலைமை உருவாகியுள்ளது. நீதிமன்றம் என்ன முடிவு செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய அரசுக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இடையே எந்தவித மோதல் போக்கும் இல்லை. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தே இரண்டும் செயல்படுகின்றன.

ஐஐஎம் இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்றார் அர்ஜுன் சிங்.

இதனிடையே, மத்திய அரசு அனுப்பிய புதிய கடிதத்தை அடுத்து மாணவர் சேர்க்கை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய ஐஐஎம் இயக்குநர்கள் 20-04-2007 வெள்ளிக்கிழமை நடத்த இருந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக ஐஐஎம் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு 27 சதவீத ஒதுக்கீடு அனுமதித்துச் சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து இந்த தடை உத்தரவை விலக்குவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின்கீழ் இந்த ஆண்டில் மாணவர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள போதிலும், பொது மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களின் இறுதிப்பட்டியல் ஏப்ரல் 21ஆம் நாளன்று வெளியிடப்படும் என்று ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் அறிவித்திருந்தன.

“பிரச்சினை தீர்ந்தபின் மாணவர் சேர்க்கை’’

இட ஒதுக்கீட்டு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்ட பிறகு மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று ஆமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

Thursday, April 19, 2007

மகளை 17 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்த இலங்கைப் பெண்


மண்டபம் அகதிகள் முகாமில் ஒரு வயதில் விட்டுச்சென்ற மகளை 17 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த இலங்கைத் தமிழ்ப் பெண்.

அகதிகள் வருகை

இலங்கையில் இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நடந்து வருவதால் உயிருக்குப் பயந்து அப்பாவித் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். தற்போது அங்கு பதட்டம் அதிகரித்து உள்ளதால் தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் இராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் அகதி முகாமுக்கு வந்தார். அவர் விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து மண்டபம் வந்தார். தனது பெயரைப் பதிவு செய்த பினனர் முகாமுக்குள் நுழைந்த அந்த பெண் தரிஷினி எங்கே? தரிஷினி எங்கே? என்று தேடினார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு..

அங்கு இருந்த உறவினர் ஒருவர் அந்த இளம் பெண்ணை லட்சுமி முன் கொண்டு வந்து நிறுத்தினார். அவர்கள் இருவரும் கட்டித்தழுவிக் கொண்டனர். ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அவர்கள் யாரும் அல்ல 17 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த தாய்-மகள் தான். ஒரு வயதில் பிரிந்த தன் மகளை 17 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்த லட்சுமி எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தார்.

அவர் தன் மகளை ஏன் பிரிந்தார்?

"இலங்கையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு நான் என் மகள் தர்ஷினி (வயது 18)யுடன் அகதியாக மண்டபம் வந்தேன். அப்போது அவளுக்கு ஒரு வயது தான்.

குடும்ப வறுமை

குடும்ப வறுமை காரணமாக கடந்த 1995ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைக்குச் செல்ல திட்டமிட்டேன். இதற்காக குழந்தையை மண்டபம் முகாமில் இருந்த உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் இலங்கை சென்றேன். அங்கு ஒரு முகவாண்மை மூலம் சவுதி அரேபியா நாட்டில் பணிப்பெண் வேலையில் சேர்ந்தேன்.

எனது மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவளின் எதிர்காலத்துக்குப் பணம் சேர்க்க வேண்டும் என்ற அக்கறையால் நான் சவுதி அரேபியாவில் இருந்து இங்கு வரவில்லை. தற்போது என் விசா முடிந்து விட்டதால் அந்த நாட்டில் இருந்து மும்பை வழியாக சென்னை வந்தேன். எனது மகளை 17 ஆண்டுகள் கழித்துச் சந்தித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

தாயும் மகளும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கண்ணீர் சிந்தியது காண்பவர் கண்களை கலங்கச் செய்தது.

பாலியல் வன்கொடுமை செய்துக் கொலை

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராஜ்குமார், தன் மனைவி மேனகா, தாய் சாந்தகுணதேவி ஆகியோருடன் விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கள் பெயரைப் பதிவு செய்ய வந்தனர்.

அவர்கள் இலங்கையில் சிங்கள இராணுவத்தினரின் அடாவடித்தனம் பற்றிக் கூறினார்கள்.

தன் கண் முன்னால் தனது சகோதரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மேனகா கண்ணீர் மல்க கூறினார்:

“எனது கணவர் ராஜ்குமார். நாங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இலங்கையில் சிங்கள இராணுவத்தின் அடாவடித்தனம் சொல்லி முடியாது. எல்லா தமிழர்களையும் எதிரியாகவே கருதுகின்றனர். தமிழ்ப் பெண்களைக் காமக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்.

எனக்கு சாந்தி என்ற அக்காள் இருந்தாள். அவளை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு என் கண் எதிரிலேயே சிங்கள இராணுவத்தினர் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதோடு அவர்கள் வெறியாட்டம் நின்றுவிடவில்லை. கற்பை இழந்த அவளைக் கொன்று பிணத்தையும் தீ வைத்துக் கொளுத்தி விட்டார்கள். இந்த சம்பவம் என் மனதை கடுமையாகப் பாதித்தது. அதன்பின் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை. மன நிம்மதிக்காகவே நாங்கள் குடும்பத்தோடு இங்கு வந்துள்ளோம்“ என்று தேம்பி தேம்பி அழுதார்.

மேனகாவின் கணவர் ராஜ்குமார்

“நான் மேனகாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவளது சகோதரி சிங்கள இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்த சம்பவத்தை நேரில் பார்த்த பின்னர் அவள் பிரம்மை பிடித்தவள் போல் காணப்பட்டாள். வாழ்க்கையில் ஒரு பிடிதரம் இல்லாமல் காணப்பட்டாள். இதனால் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. மனைவியின் மன அமைதிக்காக இங்கு வந்து விட்டோம். என் வயதான தாயையும் உடன் அழைத்து வந்துள்ளேன் என்றார்.

ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இவையே சாட்சி.

Wednesday, April 18, 2007

"அது ஒரு பொடா காலம்" சுப.வீரபாண்டியன்



1

இரவு 11.30 மணிக்கு விளக்கை அணைத்துவிட்டுக் கண்ணயரத் தொடங்கிய வேளையில், தொலைபேசி மணி ஒலித்தது.

இரவில் காலந்தாழ்ந்து தொடர்புகொள்வதற்காக வருத்தம் தெரிவித்த அவர், சன் தொலைக்காட்சியின் நிருபர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

‘‘சொல்லுங்க... என்ன செய்தி?’’ என்று கேட்டேன்.

‘‘ஒண்ணுமில்லே... ஒரு சின்ன கறுப்புக் கம்பி கேட்ல 28-ன்னு நம்பர் எழுதியிருக்கே, அதுதானே உங்க வீடு?’’ என்றார்.

எனக்குள் ஒரு சின்ன வியப்பு. ‘‘நீங்க இப்போ எங்கேர்ந்து பேசுறீங்க?’’ என்றேன்.

‘‘இதுதான் உங்க வீடுன்னா, உங்க வீட்டு வாசல்லயிருந்துதான்’’ என்றார்.

என் வீடு வரை வந்தவர் உள்ளே வரவோ, என்னுடன் பேசவோ முயற்சிக்காமல், என் வீடு எது என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது அதுவும் இந்த நள்ளிரவில் ஏன் என்னும் வினா எனக்குள் எழுந்தது.

அவரே அதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தினார்... ‘‘நாளைக்கு அதிகாலையில் உங்களை பொடாவுல கைது செய்யப்போறாங்கன்னு ஒரு தகவல் கிடைச்சுது. அப்பிடி நடந்தா, அதை உடனே படமாக்குறதுக்குத் தான், இப்பவே உங்க வீட்டைப் பார்த்து வெச்சுக்கலாம்னு வந்தோம்’’ என்று விளக்கினார்.

நான் அப்போது தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தேன். அவ்வியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் பத்துப் பன்னிரண்டு நாள்களுக்கு முன்பு (2002 ஆகஸ்ட் 1) பொடாவில் கைது செய்யப்பட்டதிலிருந்து, நானும் இயக்கத்தைச் சார்ந்த வேறு பொறுப்பாளர்கள் சிலரும் கைது செய்யப்படலாம் என்ற ஐயம் எல்லோருக்கும் இருந்தது. எனவே, தொலைக்காட்சி நண்பர் சொன்ன செய்தி, எனக்குள் பெரிய அதிர்ச்சி எதையும் ஏற்படுத்திவிடவில்லை.

ஏற்கெனவே ஏழு முறை சிறை சென்ற அனுபவமும் இருக்கிறது. இருந்தாலும், ஒவ்வொரு சிறை வாழ்வும் ஒரு புதிய அனுபவம்!

சற்றுப் புரண்டு படுத்த நான், மீண்டும் தொலைபேசியை எடுத்து, என் மூத்த மகன் இலெனினுக்குப் பேசினேன்.

‘‘தம்பி, நாளைக்கு அதிகாலையில கொஞ்சம் வீட்டுக்கு வாப்பா!’’

‘‘ஏம்ப்பா, என்ன விஷயம்?’’

மெல்லிய குரலில், சற்று முன் வந்த தொலைபேசிச் செய்தியைச் சொல்லி முடித்தேன். ‘கிசுகிசு’ என்று மெதுவாகப் பேசும்போதுதான், அருகில் உள்ளவர்களுக்குச் சத்தமாகக் கேட்கும் என்பார்கள். முதலில் உரத்துப் பேசியபோது, நன்றாக உறங்கிக் கொண்டு இருந்த என் மனைவியும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த என் மகள் இந்துவும் இப்போது விழித்துக் கொண்டனர்.

‘‘என்ன.. என்ன..?’’ அவர்கள் குரலில் பதற்றம்! இனி மறைத்துப் பயனில்லை என்று கருதி, செய்தியை மெள்ள மெள்ள எடுத்துச் சொன்னேன்.

‘‘என்னங்க இது... அமெரிக்காவில் இருந்து பொண்ணைப் பிரசவத்துக்குக் கூட்டிட்டு வந்திட்டு, இப்ப நீங்கபாட்டுக்கு ஜெயிலுக்குப் போயிட்டா, நான் ஒருத்தியா என்ன செய்யமுடியும்?’’ மனைவியின் குரல் உடைந்து வெளிப்பட்டது.

‘‘பெரியவனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்கலே. சின்னவனுக்குப் படிப்பு, ஹாஸ்டலுக்குப் பணம் அனுப்பணும். இருந்த வேலையையும் விட்டுட்டீங்க. பென்ஷனை மட்டும் வெச்சுக் கிட்டு எப்படிச் சமாளிக்கிறது?’’ என்று பொருளாதாரச் சிக்கல்களும் வெளிப்பட்டன.

‘‘தைரியமா இரு! நண்பர்கள் இருக்காங்க... அண்ணன்லாம் இருக்காங்க... பார்த்துக்குவாங்க!’’ என்று ஆறுதல் சொன்னேன். பிறகு பல செய்திகள் குறித்தும் பேசி முடித்து, நாங்கள் தூங்கியபோது, இரவு மணி இரண்டைத் தாண்டிவிட்டது.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம். அழைப்பு மணி எழுப்பியது. காவல் துறையினர்தான் என்று எண்ணிக் கதவைத் திறந்தபோது, மகன் இலெனின் நின்றிருந்தான்.

‘‘நம்ம தெரு முனையில கல்யாணி மண்டபத்துக்கிட்ட ரெண்டு டி.வி. வேன் மட்டும் நிக்குதப்பா!’’ என்றான்.

விரைந்து இயங்கி, குளித்து முடித்து, ஒரு பெட்டியில் தேவையான துணிகளையும், சில புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, சிறைப் பயணத்துக்குத் தயாரானேன்.

ஆறு, ஏழு, எட்டு மணியாகிவிட்டது. ஒருவரும் வரவில்லை. ‘‘நேத்து ராத்திரி வந்த செய்தி வதந்தியா இருக்குமோ?’’ என்றாள் இந்து. வதந்தியாக இருந்து விட வேண்டும் என்பது அவள் விருப்பம். மெள்ளச் சிரித்தபடி, ‘‘உண்மையா இருக்கத்தான் வாய்ப்பு அதிகம், பாக்கலாம்’’ என்றேன். இறுதியில் அது வதந்தியாகத்தான் போய்விட்டது. ஒன்பது மணி வரை காத்திருந்துவிட்டு தொலைக்காட்சி நண்பர்களும் ‘ஒருவிதமான விரக்தி யோடு’ விடைபெற்றுச் சென்றுவிட்டனர்.

நானும் மயிலாப்பூர் ‘தென் செய்தி’ அலுவலகத்துக்குப் புறப்பட்டேன்.

நானும் நெடுமாறன் ஐயாவின் மகள் உமாவும் சேர்ந்து, செய்தித் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டோம். கைது, அது குறித்த கண்டனங்கள், இயக்கம் நடத்தவிருக்கும் எதிர்வினைகள் என எல்லாவற்றையும் தொகுத்துக் கொண்டு இருந்தோம்.

ஐயா கைது செய்யப்பட்ட சில தினங்களிலேயே, மாநிலம் முழுவதும் உள்ள பொறுப்பாளர்களைச் சென்னைக்கு வரவழைத்துக் கூட்டத்தை நடத்தினோம். கூட்ட முடிவில், ‘‘உங்கள் தலைவரைப் பொடாவில் கைது செய்துவிட்ட இன்றைய நிலையில், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?’’ என்று இதழாளர்கள் கேட்டபோது, ‘‘அவர்கள் அம்மண்ணின், மக்களின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை நாங்கள் எப்போதும் ஆதரிப் போம்’’ என்று உறுதிப்படக் கூறினோம். ஏறத்தாழ அப்போதே எங்கள் சிறைப் பயணம் முடிவாகிவிட்டது.

ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து, ‘‘தொலைக்காட்சியைப் பாருங்கள், ஒரு அதிர்ச்சியான செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது’’ என்றார். ‘தமிழர் தேசிய இயக்கத்தைத் தமிழக அரசு தடை செய்துள்ளது’ என்பதே அச்செய்தி!

அடுத்து என்ன நடக்கும், யார் யாரெல்லாம் கைது செய்யப்படுவார்கள், அலுவலகம் இயங்க அனுமதிப் பார்களா என ஆயிரம் வினாக்கள் எழுந்தன. எங்கள் வழக்குரைஞர் சந்துருவைத் தொடர்புகொண்டு, பல செய்திகளைத் தெரிந்துகொண்டேன். தடையைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டேன்.

தமிழர் தேசிய இயக்கம், 1908-ம் ஆண்டுக் குற்றவியல் திருத்தச் சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டிருந்தது. காந்தியடிகள் எதிர்த்துப் போராடிய சட்டங்களில் ஒன்று அது. அதன்கீழ் 1950-ம் ஆண்டு மக்கள் கல்வி இயக்கம் எனும் ஓர் அமைப்பு மட்டுமே தடை செய்யப்பட்டது. அந்தத் தடையை எதிர்த்து, அவ்வமைப்பின் நிறுவனர் வி.ஜி.ராவ் நீதிமன்றம் சென்றார். தடை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அதற்குப் பிறகு, கடந்த 50 ஆண்டுகளில் அல்உம்மாவும், தமிழ்த் தேசிய இயக்கமும்தான் தடை செய்யப்பட்டுள்ளன. மேற்காணும் விவரங்களையெல்லாம் என் அறிக்கையில் கூறியிருந்ததோடு, தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்றும் அறிவித்திருந்தேன்.

அடுத்த நாள், இந்திய விடுதலை நாளையொட்டிக் கோட்டையில் கொடி ஏற்றிய முதல்வர், தமிழின உணர்வாளர்களுக்கு மறைமுகமாகச் சில எச்சரிக்கைகளை விடுத்தார். அவர் உரையில், ‘‘மொழி, இன, வட்டார உணர்வு என்ற போர்வையில், சில சக்திகள் தலைதூக்க முற்பட்டுள்ளன. அந்தப் பிற்போக்குச் சக்திகளுக்குப் பாடம் புகட்ட, இங்கே தடந்தோள்கள் உண்டு’’ என்று குறிப்பிட்டிருந்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் விடுதலை நாள் உரை, அடுத்தடுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்பதையே உணர்த்தியது.

தென்செய்தி வேலையை முடித்து விட்டு தியாகராய நகரில் அறை எடுத்துத் தங்கியிருந்த, இயக்கத்தின் இன்னொரு பொதுச் செயலாளர் பரந்தாமனைச் சந்தித்தேன். அடுத்து இயக்கத்தை எப்படிக் கொண்டு செல்வது என்று குறித்து உரையாடினோம்.

‘‘நாளை காலையில் கடலூருக்குப் போய், சிறையில் தலைவரைச் சந்திச்சு அவருடைய யோசனைகளைக் கேட்டுக்கிட்டுப் பிறகு எல்லாத்தையும் முடிவு செய்யலாம்’’ என்றார் பரந்தாமன். எனக்கும் அதுவே சரி என்றுபட்டது.

அடுத்த நாள் (16.08.02) அதிகாலையிலேயே எழுந்து, கடலூர் புறப்படத் தயாரானேன். ‘‘தேநீராவது குடிச்சுட்டுப் போங்க’’ என்று மனைவி சொல்ல, ‘சரி’ என்று சொல்லிக் காத்திருந்தேன்.

சரியாகக் காலை 6.10-க்கு அழைப்பு மணி ஒலித்தது.

கதவைத் திறந்தால்...

காக்கிச் சட்டைப் பட்டாளமே காத்திருந்தது.

துப்பாக்கி ஏந்திய, துப்பாக்கி ஏந்தாத, சீருடை அணிந்த, சீருடை அணியாத, ஆண், பெண் காவலர்கள் பலரும் நின்றிருந்தனர். என்னைக் கைது செய்வதற்கான நீதிமன்ற ஆணையோடு காவல்துறை அதிகாரியும் பிறரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.

பொடாவின் அழைப்பைப் புன்னகையோடு வரவேற்றேன்!

நன்றி: ஆனந்த விகடன் - ஏப்ரல் 18, 2007.

Tuesday, April 17, 2007

27% இடஒதுக்கீடு : தடையை நீக்க உச்சநீதிமன்றத்தில் அரசு மனு

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரும் மனுவை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரியுள்ளது.

ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். உட்பட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு வரும் கல்வியாண்டு முதல் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள்,1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் எத்தனை சதவீதம் என்பதை தீர்மானிக்க முடியாது. அதை முடிவு செய்யாதவரை 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, அனைத்து கட்சிகளுடனும் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மனிதவள மேம்பாடு, சட்டம் ஆகிய அமைச்சகங்களின் ஆலோசனையை பெற்று, இடஒதுக்கீடு தடையை நீக்க கோரும் மனுவை மத்திய அரசு தயாரித்தது.

இந்நிலையில், மாணவர் சேர்க்கையை இந்த மாதம் 21ஆம் நாளன்று இறுதி செய்யப் போவதாக ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் அறிவித்தன. இதனால், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடையை உடனே நீக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது.

இந்த நிலையில், தடையை நீக்க கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.இ.வாகன்வதி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஆகியோர், நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையிலான பெஞ்ச் முன் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எல்லாவற்றையும் ஆலோசித்த பின்தான் அரசு முடிவு செய்தது. சமூக ரீதியாக மட்டுமின்றி பொருளாதாரம், கல்வி ஆகியவற்றிலும் பின்தங்கியுள்ள மக்கள், பொதுப் பிரிவினரை போல் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த அரசு முடிவு செய்தது.

இடஒதுக்கீட்டிலிருந்து கிரீமிலேயரை நீக்க வேண்டும் என்ற ஆலோசனையையும் ஏற்க முடியாது. இந்திய சமூக வாழ்க்கை, சாதி அடிப்படையில் அமைந்துள்ளதை மறுக்க முடியாது. அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், சமூகத்தின் மேல்தட்டு மக்களால் கடும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கும், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கும் வேறுபாடு உள்ளது. கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர்களை நீக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. கடந்த 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க எடுக்கப்பட்ட முடிவிலும் தவறில்லை.

மேலும், இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளளன.

இடஒதுக்கீடு தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்த மண்டல் கமிஷன், நாட்டில் 52 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது. மண்டல் கமிஷன் அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் எந்த தவறும் இல்லை.

கடந்த மாதம் 29ஆம் நாளன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவால், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தடையை நீக்கவிட்டால், நாட்டில் சாதிப் பிரிவினை, ஆதிக்கச் சக்திகள் ஆகியவற்றால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விடும். அதனால், கடந்த 29ஆம் நாளன்று விதிக்கப்பட்ட தடையை உத்தரவு என்று கூறாமல் அரசுக்கு அறிவுரை என்று கூறப்பட்டால் சரியாக இருக்கும்.

மேலும், ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இந்த மாதம் 21ஆம் நாளுக்குள் மாணவர் சேர்க்கையை முடிவு செய்ய இருப்பதால் இந்த மனு மீதான விசாரணையை உடன் நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமாக பல கேள்விகள் அடங்கியுள்ளது. அதனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி அரிஜித் பசாயத் கூறுகையில், கடந்த மாதம் 29ஆம் நாளன்று இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் கொண்ட பெஞ்சிடம்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
இடஒதுக்கீட்டுக்கு கடந்த மாதம் 29ஆம் நாளன்று நீதிபதிகள் அரிஜித் பசாயத், லோகேஸ்வர் சிங் பாந்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச்தான் தடை விதித்தது. ஆனால், பசாயத்தும் பாந்தாவும் சேர்ந்து உடனடியாக எந்த வழக்கையும் விசாரிக்கப் போவதில்லை. அதனால், மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கால தாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கில் இந்த பிரச்னையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

--

துறைமுகத் திட்டத்தைக் கைவிட தொடர் முழக்கப் போராட்டம்




புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராடிய தேங்காய்த்திட்டு பொதுமக்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் பாதுகாப்புக் குழு சார்பில் 16-04-2007 திங்கள்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்துக்கு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுத் தலைவர் எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.இளங்கோ போராட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் க.லட்சுமிநாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பாலாஜி, மக்கள் பாதுகாப்புக் குழு அமைப்பாளர் சி.எச்.பாலமோகன், பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அபிசேகம், சலீம், ஆனந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தங்க.கலைமாறன், விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், வீராம்பட்டினம் கவுன்சிலர் பா.சக்திவேல், கிராம பஞ்சாயத்துத் தலைவர் காங்கேயன், மத சார்ப்பற்ற ஜனதா தளத் தலைவர் கணேசன், சி.பி.ஐ. எம்-எல் சோ.பாலசுப்ரமனியன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் இர.அபிமன்னன், செம்படுகை நன்னீரகம் கு.இராம்மூர்த்தி, அரசு ஊழியர் சம்மேளனம் ஆனந்தராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முடிவில் மககள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் நன்றி கூறி போராட்டததை முடித்து வைத்தார்.

இப் போராட்டத்தையொட்டி தேங்காய்திட்டு பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 1000 பேர் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவையை சுற்றியும், துறைமுக துறை அமைச்சர் இ.வல்சராஜ் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதுச்சேரி துறைமுகப் பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மக்கள் போராட்டத்தின் போது துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும், பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Monday, April 16, 2007

போலீஸ் தடியடி : உண்மை அறியும் குழு விசாரணை


தேங்காய்த்திட்டில் போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையில் உண்மை கண்டறியும் குழு புதுச்சேரியில் 15-04-2007 ஞாயிறன்று தனது விசாரணையத் தொடங்கியது.

புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை தேங்காய்த்திட்டு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்த்துப் போராடி வருகின்றன. இந்தப் பிரச்னைக்காக சில தினங்களுக்கு முன்பு தேங்காய்த்திட்டு கிராமத்தில் அமைச்சர் வல்சராஜின் கொடும்பாவி எரிப்புச் சம்பவம் நடந்தது. அதைத் தடுக்க முயன்ற போலீசாருக்கும் தேங்காய்த்திட்டு மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். தேங்காய்த்திட்டு கிராம மக்கள் 257 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தடியடி சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் கூட்டம் நடத்தி போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தன. கவுன்சிலர் பாஸ்கரன் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து புதுச்சேரி நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் போலீஸ் சீனியர் எஸ்.பி. ஸ்ரீகாந்தை சந்தித்துப் புகார் கொடுத்தனர். கவுன்சிலர் மற்றும் பொது மக்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தேங்காய்த்திட்டு கிராமத்தில் நடந்த தடியடி சம்பவத்தின் உண்மை நிலையைக் கண்டறிந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அறிக்கை தர குழு ஒன்று 15-04-2007 ஞாயிறன்று புதுச்சேரி வந்தது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், விருத்தாசலம் வழக்கறிஞர் ராஜி, விழுப்புரம் வழக்கறிஞர் லூசி ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் தேங்காய்த்திட்டு பகுதிக்குச் சென்று தடியடி சம்பவத்தில் காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். தேங்காய்திட்டு கவுன்சிலர் பாஸ்கரன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் கள் உட்பட ஏராளமானவர்கள் போலீசார் மீது புகார் கூறினர்.

இந்தக் குழுவினர் வருகை குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் கூறும் போது, உண்மை அறியும் குழுவானது தேங்காய்த்திட்டு பகுதியில் சென்று விசாரணை நடத்தியது.

தடியடி சம்பவத்தில் உள்ள உண்மை நிலைகளை அவர்கள் விரைவில் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைப்பார்கள். அதன் பேரில் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மக்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கபட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்றார்.

நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு அமைப்பளர் எஸ்.காளியப்பன்,மககள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், கிராம பஞ்சாயத்து ஒருங்கிணைப்பு துணைத் தலைவர் ஜெகநாதன், தமிழ்நாடு மார்க்சிய-லெனினிய கட்சி இரா.சுகுமாரன், மனித உரிமை ஆர்வலர் இரா.முருகப்பன் ஆகியோர் உடன்ருந்தனர்.

போலீசார் அத்துமீறல் : நீதி விசாரணை நடத்த வேண்டும்

புதுச்சேரியில் போலீசார் நடத்திய தடியடி சம்பவம் தொடர்பாக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர்.

போராட்டக் குழுவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் க.லட்சுமிநாராயணன் செய்தியாளர்களிடம் 13-04-2007 வெள்ளிக்கிழமை கூறியது:

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து இதுவரை அமைதியான முறையில்தான் போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தின்போது அரசு திட்டமிட்டு தடியடி நடத்தியுள்ளது. இப்போராட்ட இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை, 3 போலீஸ் கண்காணிப்பாளர்கள் உள்பட அதிக அளவில் போலசார் குவிக்கப்பட்டதே இதற்கு ஆதாரம். போலீஸ் அதிகாரிகள் தகாத வார்த்தைகளைக் கூறியது அவமானமாக இருந்தது.

இத்தாக்குதலை நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்.

போராட்டம் நடத்தும் தேங்காய்த்திட்டு மக்களை ஒடுக்கிவிடலாம் என்று அரசு நினைப்பது தவறு.

தடியடி சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும். இப் பிரச்சினையில் மேற்கொண்டு என்ன நடவடிக்கையில் இறங்குவது என்பது தொடர்பாக 14-04-2007 சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்றனர்.

போலீஸ் தாக்குதலில் காயபட்டவர்கள் செய்தியாளர்களிடம் போலீஸ் அத்துமீறல் குறித்து விளக்கினர். தங்கள் உடம்பில் பட்ட காயங்களைக் காட்டினர்.

இப் பேட்டியின்போது போராட்டக் குழு அமைப்பாளர் பாலமோகனன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு : போலீஸ் அத்துமீறல்





புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சரின் உருவ பொம்மையுடன் 13-04-2007 வெள்ளிக்கிழமை சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. இதில் போலீசாருக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலசார் தடியடி நடத்தினர்.

இதில் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர். அரசு பேருந்து கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதுடன், போலீஸ் ஜீப்பின் முகப்பு விளக்கும் உடைக்கப்பட்டது.

புதுச்சேரியில் தனியார் பங்கேற்புடன் ரூ. 2700 கோடி மதிப்பில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அமல் செய்ய புதுச்சேரி அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இத் திட்டத்துக்கு தேங்காய்த்திட்டு பகுதி மக்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேங்காய்த்திட்டு மக்கள் 13-04-2007 வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ஒன்றாகத் திரண்டனர். சுகாதாரம் மற்றும் துறைமுகத் துறை அமைச்சர் இ.வல்சராஜின் உருவ பொம்மையைத் தயார் செய்தனர். அதை தென்னை ஓலையில் பின்னப்பட்ட பாடையில் வைத்து அலங்கரித்து, சவ ஊர்வலம் போன்று பொரி வீசிக் கொண்டு ஆட்டம்-பாட்டம் மேளதாளத்துடன் கடலூர் சாலையை நோக்கி புறப்பட்டனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

இப்போராட்டத்திற்கு போராட்டக் குழு அமைப்பாளர் எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதையறிந்த போலீசார், வசந்த நகர் அருகே போராட்டக் குழுவினரை தடுத்து நிறுத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண், இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் போலீசார் பாடையைப் பிடுங்கினர். ஆனால், உருவப்பொம்மை போராட்டக் குழுவினரின் கையில் இருந்தது. போலீசாரின் வளையத்தைத் தாண்டி அதை எடுத்துச் சென்று மரப்பாலம் சந்திப்பு அருகே எரித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர்.

அப்போது திரண்டிருந்த மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு பஸ்சின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.

இந்நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டக் குழுவினர் சிதறி ஓடினர். இதில் கவுன்சிலர் பாஸ்கரன் உள்ளிட்ட 12 பேர் பலத்தக் காயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் ஜிப்பர் மருத்துவமனையில் சி்கிச்சைப் பெற்றனர்.


போலீஸ் தாக்குதலில் இருந்து தப்பி ஓடியவர்கள் போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், புதுச்சேரியில் செயல்படும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் சக்திவேல், புஷ்பதியாகு, இளஞ்செழியன் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, அப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே அடையாளம் கண்டறியப்பட்டுள்ள 20 பேர் உள்பட 250 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Friday, April 13, 2007

பொடா வழக்கு தள்ளுபடி : த.தே.இயக்கத் தடை நீக்கப்படுமா?

பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த பொடா வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்து பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13-ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது பொடா வழக்கு போடப்பட்டது.

அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பிணையில் வெளிவந்த பிறகும், பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது, ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கக் கூடாது, தடை செய்யப்பட்ட இயக்கங்களை பற்றி பேசக் கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என பல விதத் தடைகள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்ததன் அடிப்படையில், தமிழக அரசு, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறும் மனுவை அளித்தது.

அம்மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த பொடா சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கில் சான்றுகள் உள்ளன என்ற அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த நிலையில் வழக்கை திரும்பப் பெற இயலாதெனக் கூறியது.

பின்னர், தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொடா மறு ஆய்வுக் குழு இவ்வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் வழக்கை அரசு திரும்பப் பெறலாம் என வாதிட்டார்.

அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட பொடா சிறப்பு நீதிமன்றம், 03-4-2007 அன்று, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய அனைவரையும் இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், இவ்வழக்கைக் காரணம் காட்டி முந்தைய அதிமுக அரசு தமிழர் தேசிய இயக்கத்தைத் தடை செய்தது. தற்போதிய திமுக அரசும் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இத்தடையை நீட்டிக்கச் செய்வது தவறான போக்காகும். எனவே, தமிழக அரசு உடனடியாக தமிழர் தேசிய இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்.

Thursday, April 12, 2007

செண்டூர் வெடி விபத்து : அரசு அதிகாரி பரூக்கி விசாரணை


திண்டிவனத்தை அடுத்த செண்டூரில் கடந்த 7-4-2007 அன்று வெடிமருந்து ஏற்றி சென்ற வாகனம் வெடித்துச் சிதறியது. இதில் 16 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் ஏராளமான வீடுகள், கடைகள் சேதமடைந்தன. இந்த வெடிவிபத்து தொடர்பாக தமிழக அரசு, விசாரணை அதிகாரியாக வருவாய் நிர்வாக இயக்குநர் எஸ்.எம்.பரூக்கி இ.ஆ.ப.வை நியமித்தது்.

அவர் தனது விசாரணையை 11-04-2007 மதியம் திண்டிவனத்தில் தொடங்கினார். வெடிவிபத்தில் சிக்கி திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் உள்ளிருப்பு நோயாளிகளாக இருக்கும் 8 பேர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். பின்னர் தலைமை மருத்துவ அலுவலர் தர்மலிங்கத்திடம், ‘சம்பவம் நடந்த அன்று எவ்வளவு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்‘ என்பது போன்ற விபரங்களைக் கேட்டறிந்தார்.

இதற்கிடையே மருத்துவமனைக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பிரஜேந்திர நவ்நீத் வந்தார். அவரிடமும் பரூக்கி தனது விசாரணையை மேற்கொண்டார். பின்னர் அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பெரியய்யாவிடமும் இந்த வெடி விபத்து சம்பந்தமான விவரங்களை பரூக்கி கேட்டறிந்தார்.

இதையடுத்து விபத்து நடந்த இடமான செண்டூருக்கு சென்று விபத்து நடந்த இடத்தை அதிகாரி பார்வையிட்டார். பின்னர் விபத்தில் காயமடைந்த பாண்டுரங்கனின் உறவினர் வள்ளியிடம் விபத்து பற்றிக் கேட்டார். பின்னர் விபத்தில் இறந்த அண்ணன்-தம்பிகளான முத்து (ரெட்டியார்), சுந்தரராமன் (ரெட்டியார்) ஆகியோர் வீட்டுக்கு அதிகாரி பரூக்கி சென்றார். அதிகாரி தனது விசாரணையின் போது அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வெடி விபத்தில் கட்டிடங்களில் விரிசல் அடைந்து இருப்பது பற்றியும், சேதமடைந்த கட்டிடங்கள் பற்றியும் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து அதிகாரி அங்கிருந்து புறப்பட்டு செல்லும் போது 20க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.

பாதிராபுலியூரில் மணலிப்பட்டு சேகருக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கையும் அதிகாரி பரூக்கி பார்வையிட்டார்.

பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் பார்த்து விபத்து நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டார்.

திண்டிவனத்தில் அதிகாரி பரூக்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது: செண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொருவர் மீதும் தனிக்கவனம் செலுத்தி அவர்கள் வாழ்க்கை முன்னேற அரசு உதவியாக இருக்கும். மேலும் வெடி விபத்து சம்பந்தமாக உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உதவிகள் போன்றவற்றை விசாரணை மேற்கொண்டு ஒரு மாதத்தில் இது சம்பந்தமான அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்வேன் என்றார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை முடிந்தது


கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை 10-04-2007 செவ்வாய்க்கிழமை முடிந்தது. தீர்ப்பை தனி நீதிமன்ற நீதிபதி கே.ருத்ராபதி நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார். இதையடுத்து, கோவை குண்டு வெடிப்பு நடந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கு தீர்ப்பை நெருங்கியுள்ளது.

கோவை மாநகரில் 1998 பிப்.14 அன்று 12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அடுத்த, ஐந்து நாள்களில் 19-ஆம் நாள் வரை மேலும் 7 குண்டு வெடிப்புகள் நடந்தன.

இது தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குண்டு வெடிப்பு மற்றும் தொடர் சம்பவங்கள் தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதில், 181 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். 167 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் தஸ்தகீர் என்பவர் இறந்து விட்டார். போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். யசூர் ரகுமான் என்பவர் அப்ரூவராக மாறிவிட்டார். 5 பேர் தலைமறைவாக உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 2001 செப். 23 அன்று குற்றப்பத்திரிகை நகல் கொடுக்கப்பட்டது. சாட்சிகள் விசாரணை 2002 மார்ச் 7 அன்று தொடங்கியது.

வழக்கின் சாட்சிகளான 1330 பேரிடம் 2006 ஜூன் 27-இல் அரசு தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணையை முடித்தனர். இதையடுத்து, 2006 ஜூலை 7 அன்று அரசுத் தரப்பு வாதம் தொடங்கியது.

ஆயிரத்து 731 ஆவணங்கள் தாக்கல்:

அரசுத் தரப்பில் 1300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. ஆயிரத்து 731 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 480 சான்று பொருள்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அரசுத் தரப்பின் 1300 சாட்சிகளில் முக்கிய சாட்சிகள் 210. குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தோர் மற்றும் சொத்துகள் பாதிக்கப்பட்டோர் என 423 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

நான்கு கட்டங்களாக நடந்த வாதம்:

வழக்கின் முதல் கட்ட வாதத்தை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தொடங்கினர். குண்டு வெடிப்புக்கான நோக்கம், கூட்டுச் சதி, சதித் திட்டம் தயாரிப்பு, திட்டம் நிறைவேற்றம் என நான்கு கட்டங்களாக வாதங்களை முன் வைத்தனர்.

எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் 2006 ஆகஸ்ட் 21 அன்று வாதத்தைத் தொடங்கினர். 2007 மார்ச் 30 அன்று வாதத்தை முடித்தனர்.

எதிர்த்தரப்பு வாதங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் 100 தீர்ப்புகளை ஆதாரம் காட்டி அரசுத் தரப்பு பதிலுரை அளித்தது.பதிலுரை அளிக்க அரசுத்தரப்பு நான்கு நாள்கள் எடுத்துக் கொண்டது.

இதையடுத்து, அரசுத் தரப்பு கூறும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆதாரங்கள் இந்த வழக்குக்கு பொருந்தாது என எதிர்த் தரப்பு வாதத்தைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை 10-04-2007 செவ்வாய்க்கிழமை முடிந்தது.

நாள் குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி கே.ருத்ராபதி ஒத்திவைத்தார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான், பி.திருமலைராஜன், ப.பா.மோகன் உள்ளிட்ட 23 வழக்கறி்ஞர்கள் வாதிட்டனர். மதானி உள்ளிட்ட கேரளத்தைச் சேர்ந்தவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் விருத்தாசலம் (ரெட்டியார்) ஆஜராகி வாதிட்டார்.

Wednesday, April 11, 2007

சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து முழுஅடைப்பு

புதுச்சேரியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேதராப்பட்டு, கரசூர் கிராம மக்கள் 11-04-2007 புதனன்று முழுஅடைப்புப் போராட்டம் நடத்தினர். இதனால் சேதராப்பட்டு, கரசூர் பகுதியில் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேதராப்பட்டு, கரசூர் கிராம மக்கள் புதுச்சேரி-மயிலம் சாலையில் 10-04-2007 செவ்வாய் மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்த அனுமதி அளித்தது. இதையட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்த புதுச்சேரி அரசு அனுமதியளித்தது. புதுச்சேரி அரசு சேதராப்பட்டு, கரசூர் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்த முடிவு செய்தது. அதற்காக 800 ஏக்கர் நிலத்தினை கையகப்படுத்த திட்டமிட்டு அரசு புறப்போக்கு நிலம், ஏரி, குளம் மற்றும் சேதராப்பட்டு, கரசூர் பகுதி விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. இதற்கு சேதராப்பட்டு, கரசூர் பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் அம்மக்கள் 09-04-2997 திங்களன்று புதுச்சேரி-மயிலம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் சேதராப்பட்டு, கரசூர் மக்களிடம் குறைகளை கேட்டறிவார் என்று அறிவித்ததையட்டி சாலை மறியலை கைவிட்டனர். இந்நிலையில் 10-04-2007 செவ்வாயன்று மதியம் மாவட்ட ஆட்சியர் வருவதாக கூறியதைத் தொடர்ந்து, அவருக்காக பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால், துணை ஆட்சியர் வின்சென்ட்ராயர், வட்டாட்சியர் சுப்ரமணியன், காவல் ஆய்வாளர் வீரவல்லன் மற்றும் வருவாய் துறை, பொதுப்பணித் துறை, நீர் பாசனத் துறை அதிகாரிகள் மட்டும் வந்தனர்.


மாவட்ட ஆட்சியர் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றுதிரண்டு புதுச்சேரி-மயிலம் சாலையில் உள்ள கடைகளை அடைத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நீர் நிலைகளைக் கையகப்படுத்தி நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாதே, சுற்றுச் சுவர் கட்டி மக்களை சிறைப்படுத்தாதே என்று முழக்கங்கள் எழுப்பினர். புதுச்சேரி அரசுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். பின்னர் சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து 11-04-2007 புதனன்று, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழுஅடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்து கலைந்து சென்றனர்.

இதையொட்டி, 11-04-2007 புதனன்று சேதராப்பட்டு, கரசூர் பகுதியில் முழுஅடைப்புப் போராட்டம் நடைப்பெற்றது. 10-ஆம் வகுப்புக்கான கடைசி தேர்வு என்பதால் மாணவ மாணவியர்களுக்கு மட்டும் பேருந்து மற்றும் வாகனங்களில செல்ல அனுமதி அளித்தனர். கடைகள் திறக்கப்படவில்லை. பேருந்துகள் பிற வாகனங்கள் இயங்கவில்லை. தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

Tuesday, April 10, 2007

சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து சாலை மறியல் - கைது

புதுச்சேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி அரசு 800 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொதுமக்கள் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக பெரிய சுற்றுச்சுவர் எழுப்பப்பட உள்ளது. இதனால் எங்கள் கிராமங்கள் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் வயல்வெளிகளில் இருந்து துண்டிக்கப்படும் என்று கூறுகின்றனர். மேலும், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் அழிக்கப்பட உள்ளது. ஊருக்குள் வாழும் பொதுமக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதனால் ஒட்டுமொத்த எங்கள் கிராமமே அழியும் ஆபத்துள்ளது என்று கூறுகின்றனர்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதைக் கண்டித்து புதுச்சேரி, சேதராப்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 09-04-2007 அன்று, புதுச்சேரி - மயிலம் சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரம் இச்சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் போலீசார் அவர்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை அவர்கள் ஏற்கவில்லை. இதனையடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் வருவாய்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கையை எங்களிடம் கூறுங்கள். இது குறித்து முறையாக அரசுக்கு தெரிவிக்கிறோம் என்றனர். பின்னர் பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதனையொட்டி 10-04-2007 அன்று மாலை 3 மணியளவில் சேதராப்பட்டு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

அப்போது சேதராப்பட்டு பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.

Monday, April 09, 2007

செண்டூர் வெடிவிபத்து குறித்து நீதி விசாரணை : பழ.நெடுமாறன்

திண்டிவனம் வெடிவிபத்து தொடர்பாக முழுமையான நீதி விசராணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் திண்டிவனம் வெடி விபத்தில் காயமடைந்தவர்களை 08-04-2007 ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.எவ்வாறு சம்பவம் நடைபெற்றது என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். ஜிப்மர் மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்கப்படுவது குறித்துக் கேட்டறிந்தார். மேலும் உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திண்டிவனம் அருகே செண்டூரில் நடந்த வெடி விபத்து மிகவும் துயரமானது. இதில் 16-பேருக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

உயிரிழந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். வெடிபொருள்களை கொண்டு செல்பவர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கையாளாமல் கொண்டு சென்றுள்ளனர். இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழுமையான நீதிவிசாரணை நடத்தி உண்மைச் சம்பவங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.

அவருடன் புதுச்சேரி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, விழுப்புரம் மாவட்டத் தலைவர் கா.பாலமுருகன், செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி இரா.சுகுமாரன் உட்பட பலர் இருந்தனர்.

துறைமுகத் திட்டம் : சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை

புதுச்சேரி, தேங்காய்த்திட்டு வீடு, மனை, நிலம் ஆர்ஜீத எதிர்ப்புக் குழு சார்பில் கட்சிகள், இயக்கங்கள் ஆலோசனைக் கூட்டம் 6-4-2007 அன்று மாலை 6 மணியளவில் தேங்காய்த்திட்டு ஜெயராம் நாயக்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பாளர் எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் விஸ்வேஸ்வரன், பாரதிய ஜனதா கட்சி, மா.இளங்கோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அபிசேகம், சலீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சு.பாவாணன், விடுதலைச் சிறுத்தைகள், குமாரவேல், தேமுதிக., கணேசன், மதசார்பற்ற ஜனதாதளம், சடகோபன், மறுமலர்ச்சி தி.மு.க., சி.எச். பாலமோகனன், அமைப்பாளர், மக்கள் பாதுகாப்புக் குழு, கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, லோகு.அய்யப்பன், பெரியார் திராவிடர் கழகம்,ஆனந்தராஜ், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம், இரா. அழகிரி, தமிழர் தேசிய இயக்கம், பா.சக்திவேல், கவுன்சிலர், வீராம்பட்டினம், விஸ்வநாதன், மீனவர் விடுதலை வேங்கைகள்,இருதயராசு, பகுஜன் சமாஜ் கட்சி, ஜெகநாதன், கிராம பஞ்சாயத்து ஒருங்கிணைப்பு ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :

1. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசியபோது, `துறைமுகம் வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி வல்லுநர் குழு அமைத்து, மக்கள் பாதிக்கப்படுவதாக இருந்தால் நல்ல முடிவு எடுக்கப்படும்' எனக் கூறியுள்ளார். இதனை இக்கூட்டம் நிராகரிக்கிறது.

கடந்த 23-03-2007 அன்று வணிக வரித்துறை வளாகத்தில் முதல்வர் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் வல்லுநர் குழு அமைத்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கூறியபோதே அதை போராட்டக் குழுவினர் ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் அதையே சட்டமன்றத்தில் கூறியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.

ஏற்கனவே, துறைமுக விரிவாக்கம் குறித்து டில்லியுள்ள தேசிய துறைமுக மேலாண்மைக் கழகம் (சூயவiடியேட ஐளேவவைரவந டிக ஞடிசவ ஆயயேபநஅநவே (சூஐஞஆ)) அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் புதுச்சேரிக்கு இந்த துறைமுக விரிவாக்கம் தேவையற்றது, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் அரசுக்கு தாக்கல் செய்துள்ள சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் கடுமையான பாதிப்புகள் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.

உண்மைநிலை இப்படியிருக்க, மீண்டும் வல்லுநர் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்வது போராட்டத்தை திசை திருப்பி மழுங்கடிக்கும் செயல் என்பதை இக்கூட்டம் அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென இக்கூட்டம் வற்புறுத்துகிறது. நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்பை முதல்வர் அவர்கள் வெளியிட வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

2. துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்காதபோதே கடந்த பிப்ரவரி 2-ந் தேதியன்று துறைமுகத்தையும், அதையொட்டிய 153 ஏக்கர் நிலத்தையும் புதுச்சேரி அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. தற்போது வல்லுநர் குழு கருத்தறியும் வரை துறைமுக விரிவாக்கப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். துறைமுகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ள துறைமுகத்தையும் 153 ஏக்கர் நிலத்தையும் திரும்பப்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

3. துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டுவரும் தனியார் நிறுவனம் துறைமுக துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து உறுப்பினர்களும் புகார் கூறியுள்ளனர். புதுச்சேரி அரசு இது குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

பிற்பட்டோர் இடஒதுக்கீடு : உச்சநீதிமன்றத்திற்கு கண்டனம்

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது கோடான கோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். `சமூக நீதிக்கான கட்சிகள், இயக்கங்கள்' சார்பில் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த அநீதியை எதிர்த்து தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய அரசியல் கட்சியினர் தமிழகத்தில் நாளை பந்த் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதனை வரவேற்கிறோம். தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி புதுச்சேரியிலும் நாளைக்கு பந்த் போராட்டம் நடத்த வேண்டும்.

மண்டல்குழு பரிந்துரை குறித்து இந்திரா சகானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அரசியல் சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும் செயல் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சாதி ரீதியான சமூகத்தில் இடஒதுக்கீடு அவசியம் என தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற மகத்தான தலைவர்கள் கூறியுள்ளனர். சாதிய ஏற்றத்தாழ்வுகள் மறைய இடஒதுக்கீடு வழிவகுக்கும். இதுபோன்ற சமூக காரணிகள் பல இருந்தும் வெறும் சட்டரீதியாக சமூகப் பிரச்சினையை உச்சநீதிமன்றம் அணுகுவது தவறானது.

உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும். இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் கூறியுள்ளதுபோல் மத்திய அரசு இடஒதுக்கீடு குறித்து அகில இந்திய அளவில் வாக்கெடுப்பு ஒன்றை உடனடியாக நடத்த வேண்டும்.

உச்சநீதிமன்றம் விதித்த தடையால் வரும் கல்வியாண்டில் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் பறிபோகும் ஆபத்துள்ளது. இதனை எதிர்த்துப் போராடி சமூக நீதியை நிலைநாட்ட அனைத்துக் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.

புதுச்சேரி அரசு உடனடியாக அனைத்துக் கட்சி, இயக்கங்கள் கூட்டத்தைக் கூட்டி உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்க்க வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் ஒரு சிலர்தவிர அனைவருமே உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள். உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போதியளவில் நீதிபதிகளாக இல்லாதததுதான் இதுபோன்ற தீர்ப்புகள் வருவதற்குக் காரணம்.

எனவே, நீதித்துறையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் தடை விதித்து வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து 30-03-2007 அன்று மாலை 4-00 மணியளவில், பிள்ளைத்தோட்டம், பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.இளங்கோ தலைமை தாங்கினார்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தங்க.கலைமாறன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் அரசு.வணங்காமுடி, மீனவ மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரும் வீராம்பட்டினம் கவுன்சிலருமான பா.சக்திவேல், தலைவர் காங்கேயன், முன்னாள் தலைவர் விசுவநாதன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் முத்துக்கண்ணு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, மண்ணின் மைந்தர் நல உரிமைச் சங்க ஒருங்கிணைப்பாளர் இர.அபிமன்னன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, தேங்காய்த்திட்டு கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், சமூக நீதிப் போராட்டக் குழு அ.மஞ்சினி, அ.ஜோதிபிரகாசம், தமிழர் திராவிடர் கழகம் மு.அ.குப்புசாமி
உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துக் கொண்டனர்.

Sunday, April 08, 2007

துறைமுகத் திட்டம் : சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 03-04-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் அமைக்கப்பட இருந்த துணை நகர திட்டத்தைக் கைவிட்டு சட்டப் பேரவையில் அறிவித்துள்ள முதல்வர் ரங்கசாமி அவர்களை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மனதார பாராட்டுகிறேன்.

விளைநிலங்களை வீட்டுமனைகளாக்கி துணைநகரம் அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்த்துப் போராடியதற்கு வெற்றி கிடைத்துள்ளது.

இதேபோல், மக்கள் நலனுக்கு எதிரான துறைமுக விரிவாக்கத் திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலம், விமான நிலைய விரிவாக்கம் போன்றவைகளையும் கைவிட முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து தேங்காய்திட்டு மக்களும், பல்வேறு அமைப்புகளும் தீவிரமாகப் போராடி வருகின்றனர். துணைநகர திட்டத்தைக் கைவிட்ட அரசு துறைமுக விரிவாக்கத் திட்டம் பற்றி சட்டப் பேரவையில் எந்த அறிவிப்பும் செய்யாதது போராடும் மக்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலையை உண்டாக்கியுள்ளது.

02-04-2007 அன்று சட்டப்பேரவையில் துறைமுக விரிவாக்கத் திட்டம் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல் அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பதில் அளிப்பதாக இருந்தது. சட்டப்பேரவை அலுவல் பட்டியலில் இருந்தும் திடீரென எவ்வித காரணமுமின்றி துறைமுக விரிவாக்கத் திட்டம் பற்றிய கேள்விகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போடப்பட்டுள்ளன. இது பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டுவரும் தனியார் நிறுவனம் துறைமுக துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் கூறிவருகின்றன. இதுகுறித்து புதுவை அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.

இதை வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டோருக்கு விரிவான புகார் மனு ஒன்றை அனுப்ப உள்ளோம்.

அத்தியூர் விஜயா வழக்கு நிதி தர வேண்டுகோள்!

செஞ்சி வட்டம், அனந்தபுரம் அருகேயுள்ள அத்தியூரைச் சேர்ந்த பழங்குடி இருளர் பெண் விஜயாவை, ஒரு திருட்டு வழக்கில் அவரது பெரியப்பா மகன் வெள்ளையனைத் தேடிச் சென்ற புதுச்சேரி போலீசார் ஆறுபேர் கடந்த 29-7-1993 அன்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பல்வேறு போராட்டங்கள், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து தமிழக அரசு இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2-7-1997 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் புதுச்சேரி போலீசார்களான நல்லாம் கிருஷ்ணராய பாபு (உதவி ஆய்வாளர்), வி.ராஜாராம் (தலைமைக் காவலர்), ஜி.பத்மநாபன் (காவலர்), கே.முனுசாமி (காவலர்), ஜி.சுப்புராயன் (காவலர்), கே.சசிகுமார் நாயர் (தலைமைக் காவலர்) ஆகியோர் விஜயாவை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இவ்வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் சேர்க்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட விஜயாவின் வேண்டுகோளை ஏற்று விழுப்புரம் முன்னாள் - அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம். ரகுமான் ஷெரிப் அவர்கள் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கு விசாரணையின்போது காவல்துறையினர் எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை.

அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.ரகுமான் ஷெரிப், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், புதுச்சேரி கோ.சுகுமாரன், பேராசிரியர் பா.கல்யாணி ஆகியோரின் ஒத்துழைப்பாலும், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஆதரவோடும் 42 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் கடந்த 11-8-2006 அன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திரு. என். ரத்னராஜ் அவர்கள் தீர்ப்பு வழங்கினார். புதுச்சேரி போலீசார் ஆறுபேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 31,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் விஜயாவுக்கு 13 ஆண்டுகள் கழித்து நீதிகிடைத்தது அனைவருக்கும் ஆறுதல் அளித்தது.

இந்நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட புதுச்சேரி போலீசார் ஆறு பேருக்கும் கடந்த 6-11-2006 மற்றும் 8-11-2006 ஆகிய நாளிட்ட உத்தரவின்பேரில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.சி.ஆறுமுகம் ஆகியோர் பிணை வழங்கியுள்ளனர். தண்டனை வழங்கி மூன்று மாதத்திற்குள் பிணை வழங்கப்பட்டது என்பது விஜயாவுக்கு காலங்கடந்து கிடைத்த நீதியைக் கேள்விக் குறியாக்கி உள்ளது.

மேலும், பாலியல் வன்கொடுமை செய்த புதுச்சேரி போலீசார் புதுச்சேரி அரசில் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட நாள் வரை அதாவது 13 ஆண்டுகள் பணியில் இருந்து வந்தனர். மேலும், பலருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த 5-1-2007 அன்றுதான் ஆறு போலீசாரையும் பணி நீக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணையை வேகப்படுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்புப் பெற குற்றவாளிப் போலீசார் முயற்சி செய் வருவதாக அறிகிறோம். வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அவர்களின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

இச்சூழலில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள பிணையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பெண் வழக்கறிஞர்கள் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடர வேண்டியதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் மேற்கொண்டு வருகிறார். தில்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி இவ்வழக்கில் ஆஜராகி வழக்கை நடத்த உள்ளார். இதற்கான நடைமுறை செலவுத் தொகை குறைந்தபட்சம் ரூ.10,000/- தேவைப்படுகிறது. மேலும், 13 ஆண்டு காலமாக விஜயா வழக்கைப் பார்த்ததினால் பேராசிரியர் கல்யாணி அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பணம் செலவாகியுள்ளதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

அத்தியூர் விஜயாவிற்கு கிடைத்துள்ள நீதியை நிலைநாட்டவும், தொடர் சட்ட நடவடிக்கைகளுக்கும் தங்களிடம் பொருளுதவி எதிர்நோக்குகிறோம். அருள் கூர்ந்து தாங்கள் தங்களால் முடிந்தளவு நிதி அனுப்பி வைத்து விஜயாவுக்கு நீதி கிடைத்திட உதவ வேண்டுகிறோம்.


பேராசிரியர் பா.கல்யாணி
கோ.சுகுமாரன்


முகவரி: 15, முதல் மாடி, 9-ஆவது குறுக்கு வடக்கு விரிவு, ரெயின்போ நகர், புதுச்சேரி - 605 011. பேச: 98940 54640