Sunday, April 22, 2007

வாச்சாத்தி : பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இழப்பீடு - உயர்நீதிமன்றம்

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில், 1992-ஆம் ஆண்டு வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த 18 மலைவாழ் பெண்களை, வனத்துறை அதிகாரிகளும், போலீசாரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். மலைவாழ் மக்களின் வீடுகளையும் சூறையாடினர்.

இச்சம்பவம் தொடர்பாக, சுமார் 269 போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி, கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில், 1996-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும், 425 மலைவாழ் மக்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, மலைவாழ் மக்கள் நலச் சங்கத் தலைவர் சண்முகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, சி.பி.ஐ.யும் அரசும் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் முகோபாத்யா, தனபாலன் ஆகியோர் முன்பு 20-04-2007 சனியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் உதவி சொலிசிடர் ஜெனரல் பி.வில்சன் ஆஜரானார். மலைவாழ் மக்கள் சார்பாக வழக்கறிஞர் வைகை ஆஜராகி, “சட்டப்படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பே, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், இதுவரை அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இழப்பீடு தொகையை வழங்க, அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், “கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை, விரைவாக முடிக்க உத்தரவிடுகிறோம். பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு, இழப்பீடு எவ்வளவு தர வேண்டும் என்று, அரசு ஒரு வாரத்தில் கணக்கிட்டு, அதை 6 வாரத்துக்குள் தர வேண்டும். வழக்கு விசாரணையை, ஜூன் 8-ஆம் நாளுக்கு தள்ளி வைக்கிறோம். அன்று, இழப்பீடு வழங்கியதற்கான அறிக்கையை, அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

1 comment:

thiru said...

காலம்கடந்து வருகிற தீர்ப்பு. ம்ம்ம் பலர் வாச்சாத்தி கொடுமைகளை மறந்திருப்பார்கள். தமிழக அரசியலை புரட்டிய சம்பவங்களில் வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை ஒன்று. வழக்கு பற்றிய விபரங்களை அறியத்தந்தமைக்கு நன்றி!