
ஐஸ்வர்யா-அபிஷேக் ஆகியோரின் திருமணத்தையொட்டி நூற்றுக்கணக்கான அரவானிகளை மும்பை போலீசார் 20-04-2007 வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனர். மனித உரிமையில் அக்கறையுள்ள அனைவரும் இதைக் கண்டிக்க வேண்டும்.
வட இந்திய கலாச்சாரப்படி பொதுவாக பண்டிகை, விழா, திருமண நிகழ்ச்சி போன்றவற்றில் அரவானிகள் கலந்துகொண்டு ஆடிப் பாடி, பணம் பெறுவது வழக்கம். அவ்வாறு வரும் அரவானிகளுக்கு உரிய மரியாதை தந்து உபசரிக்கும் வழக்கமும் வட மாநிலங்களில் உண்டு.
ஆனால், மிகுந்த கெடுபிடியுடன் நடைபெற்ற ஐஸ்வர்யா-அபிஷேக் பச்சன் திருமண விழாவில் அரவானிகள் எவரையும் உள்ளே விடக்கூடாது என்பதில் மும்பை போலீசார் உறுதியாக இருந்தனர். மும்பையிலுள்ள நூற்றுக்கணக்கான அரவானிகள் திருமணம் நடைபெறும் அமிதாப் பச்சன் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று ஆடிப்பாடி தங்கள் அன்பை வெளிப்படுத்த நினைத்திருந்தனர்.
மிக முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இத்திருமண நிகழ்ச்சிக்கு அரவானிகள் பெருமளவில் குவிந்துவிட்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறி வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே மும்பை நகரில் உள்ள நூற்றுக்கணக்கான அரவானிகளை போலீசார் பிடித்து சிறைக்காவலில் வைத்தனர்.
இப்பணியில் பெண் போலீசார் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைபிடிக்கப்பட்ட அரவானிகள் அனைவரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் விடுவிக்கப்படுவார்கள் என்று மும்பை போலீசார் தெரிவித்தனர்.
அரவானிகள் தங்களையும் சக மனிதர்களாக பாவிக்க வேண்டும் என்று பல காலமாக கோரி வருகின்றனர். இதற்கென அவர்களிடையே பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இச்சூழலில் ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணத்தையொட்டி மும்பைப் போலீசார் இதுபோன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். அரவானிகளை பாகுபாடின்றி நடத்துவதும், அவர்களை இச்சமூகத்தின் அங்கமாக பார்ப்பதும் அவசியம். அது தான் மனிதர்களுக்கு அழகு.
1 comment:
மேன்மக்களுக்காகவே செயல்படும் அதிகார அமைப்பில் விளிம்புநிலை மனிதர்கள் மிதிக்கப்படுவது தான் நடக்கிறது. திருநங்கைகளை மனிதர்களாக நடத்தாத வன்கொடுமையை கண்டிக்கிறேன்.
அபிசேக், ஐஸ்வர்யாராய் திருமண கூச்சலில் இந்த அநீதியை வெகுஜன ஊடகங்கள் மறைத்துவிட்டன.
Post a Comment