
மண்டபம் அகதிகள் முகாமில் ஒரு வயதில் விட்டுச்சென்ற மகளை 17 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த இலங்கைத் தமிழ்ப் பெண்.
அகதிகள் வருகை
இலங்கையில் இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நடந்து வருவதால் உயிருக்குப் பயந்து அப்பாவித் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். தற்போது அங்கு பதட்டம் அதிகரித்து உள்ளதால் தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் இராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் அகதி முகாமுக்கு வந்தார். அவர் விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து மண்டபம் வந்தார். தனது பெயரைப் பதிவு செய்த பினனர் முகாமுக்குள் நுழைந்த அந்த பெண் தரிஷினி எங்கே? தரிஷினி எங்கே? என்று தேடினார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு..
அங்கு இருந்த உறவினர் ஒருவர் அந்த இளம் பெண்ணை லட்சுமி முன் கொண்டு வந்து நிறுத்தினார். அவர்கள் இருவரும் கட்டித்தழுவிக் கொண்டனர். ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அவர்கள் யாரும் அல்ல 17 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த தாய்-மகள் தான். ஒரு வயதில் பிரிந்த தன் மகளை 17 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்த லட்சுமி எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தார்.
அவர் தன் மகளை ஏன் பிரிந்தார்?
"இலங்கையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு நான் என் மகள் தர்ஷினி (வயது 18)யுடன் அகதியாக மண்டபம் வந்தேன். அப்போது அவளுக்கு ஒரு வயது தான்.
குடும்ப வறுமை
குடும்ப வறுமை காரணமாக கடந்த 1995ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைக்குச் செல்ல திட்டமிட்டேன். இதற்காக குழந்தையை மண்டபம் முகாமில் இருந்த உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் இலங்கை சென்றேன். அங்கு ஒரு முகவாண்மை மூலம் சவுதி அரேபியா நாட்டில் பணிப்பெண் வேலையில் சேர்ந்தேன்.
எனது மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவளின் எதிர்காலத்துக்குப் பணம் சேர்க்க வேண்டும் என்ற அக்கறையால் நான் சவுதி அரேபியாவில் இருந்து இங்கு வரவில்லை. தற்போது என் விசா முடிந்து விட்டதால் அந்த நாட்டில் இருந்து மும்பை வழியாக சென்னை வந்தேன். எனது மகளை 17 ஆண்டுகள் கழித்துச் சந்தித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
தாயும் மகளும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கண்ணீர் சிந்தியது காண்பவர் கண்களை கலங்கச் செய்தது.
பாலியல் வன்கொடுமை செய்துக் கொலை
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராஜ்குமார், தன் மனைவி மேனகா, தாய் சாந்தகுணதேவி ஆகியோருடன் விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கள் பெயரைப் பதிவு செய்ய வந்தனர்.
அவர்கள் இலங்கையில் சிங்கள இராணுவத்தினரின் அடாவடித்தனம் பற்றிக் கூறினார்கள்.
தன் கண் முன்னால் தனது சகோதரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மேனகா கண்ணீர் மல்க கூறினார்:
“எனது கணவர் ராஜ்குமார். நாங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இலங்கையில் சிங்கள இராணுவத்தின் அடாவடித்தனம் சொல்லி முடியாது. எல்லா தமிழர்களையும் எதிரியாகவே கருதுகின்றனர். தமிழ்ப் பெண்களைக் காமக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்.
எனக்கு சாந்தி என்ற அக்காள் இருந்தாள். அவளை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு என் கண் எதிரிலேயே சிங்கள இராணுவத்தினர் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதோடு அவர்கள் வெறியாட்டம் நின்றுவிடவில்லை. கற்பை இழந்த அவளைக் கொன்று பிணத்தையும் தீ வைத்துக் கொளுத்தி விட்டார்கள். இந்த சம்பவம் என் மனதை கடுமையாகப் பாதித்தது. அதன்பின் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை. மன நிம்மதிக்காகவே நாங்கள் குடும்பத்தோடு இங்கு வந்துள்ளோம்“ என்று தேம்பி தேம்பி அழுதார்.
மேனகாவின் கணவர் ராஜ்குமார்
“நான் மேனகாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவளது சகோதரி சிங்கள இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்த சம்பவத்தை நேரில் பார்த்த பின்னர் அவள் பிரம்மை பிடித்தவள் போல் காணப்பட்டாள். வாழ்க்கையில் ஒரு பிடிதரம் இல்லாமல் காணப்பட்டாள். இதனால் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. மனைவியின் மன அமைதிக்காக இங்கு வந்து விட்டோம். என் வயதான தாயையும் உடன் அழைத்து வந்துள்ளேன் என்றார்.
ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இவையே சாட்சி.
6 comments:
நீங்கள் பார்த்ததுண்டா?
தமிழ்ச் சந்தேக நபரின் வாய்க்குள் பாம்பின் தலையை புகுத்திவிட்டு அதன் வாலில் தீயால் சுடுவார்கள்.
நாயின் மலத்தை வாய்க்குள் அடைவார்கள்.
உயிரோடு தமிழனின் தலையில் மின் கருவியால் துளை போட்டுக் கொல்வார்கள்.
ஆண், பெண் உறுப்புக்குள் மின்சாரம் செலுத்துவார்கள்.
அவர்கள் ஏன் உங்கள் வருகின்றார்கள் என இப்போது புரிகிறதா?
பதிவுக்கு நன்றி.
தமது உறவுகள் எங்கே, இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்றே தெரியாமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் இருக்கிறார்கள்.
இப் பெண் பாக்கியசாலி. தனது மகளை மீண்டும் சந்தித்துக் கொண்டார்.
மனதை மிகவும் நெகிழ வைத்த பதிவு.
இதுபோன்ற கொடுமைகள் இன்னும் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றன.
இதை தடுக்க என்ன செய்யப் போகிறோம்?
:(
ச்சே! என்னென்ன கொடுமைகள்!
பதிவுக்கு நன்றி, இப்படி ஏராளம் குடும்பங்களின் பின்னால் கதைகள் உண்டு ;-(
மிகவும் கொடூரமான செயல்கள்.
இது போன்ற மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்ட காட்டுமிராண்டி செயல்களின் செய்திகளை கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து கேட்டும், படித்தும் வருவதால் மேலும் இன்றைய ஊடக வசதிகளால் உலகில் எந்த மூலையில் இது போன்ற அநியாயங்கள் நடந்தாலும் உடனுக்குடன் நமக்கு வந்தடைவதால், நம்மை அறியாமலேயே நம் மனம் இதையெல்லாம் முக்கிய பிரச்சினையாக கருதாமல், ஏதோ ஒரு இனத்தவருடைய சாதாரண அன்றாட சகஜ வாழ்க்கை பிரச்சினையாக ஆகிவிட்ட மாதிரி போன்ற பிம்பத்தை உருவாக்கி விட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்திய தமிழக (உலக)மக்களின் மனம் மரத்துப் போய்விட்டது.
டிவின் டவர்கள் இடிந்து விழுந்தபோது இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் அதை இடைவிடாமல் பரப்பி மக்களின் பரிதாபத்தை, மனதை பறித்தனர்.
அந்த அளவுக்கு அண்டைய நாடான இலங்கையில் சக இனத்தவர்களான தமிழர்கள் பிரச்சினைகளில் மக்கள் மற்றும் ஊடகங்கள் நாட்டம் கொள்ளாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
இச்சண்டைகளுக்கு சதா மேலும் மேலும் எண்ணை ஊற்றி தொடர்ந்து எரிய வைக்க பாகிஸ்தான், சீனா மேலும் சில தளவாட விற்பனை செய்யும் அடாவடி நாடுகள்.
உலக அரங்கில் காஷ்மீர பிரச்சினைகளுக்கு கொடுக்கும் முக்கியத்வம் இதற்கு கிடைக்காமல் போனது ஏமாற்றமே. காஷ்மீர பிரச்சினையில், இசுலாமியம் கலந்திருப்பதால், அனைத்து அந்நிய நாடுகளுக்கும் அக்கறை பிறக்கிறது.
இலங்கையில் நடக்கும் கட்டுக்கடங்காத அனைத்து மனித உரிமை மீரல் பிரச்சினைகளால் இந்தியா வெட்கித் தலை குனியவேண்டும்.
அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு அடிமையாவதற்கு அலையும் வேகம் இலங்கை போன்ற அண்டை நாடுகளின் ஸ்திரத்தன்மைக்காக பாடுபடுவதில் இல்லாமல் போனது மிகவும் வருந்தத்தக்கது.
போராளிகள் தங்களது எதிரிகள் என கருதும் போராளிகளிடம்தான் சண்டை போட்டு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இப்படி அப்பாவி பொது மக்களை வதை செய்வது உண்மையான போராளிகளின் நேர்மையான செயல்கள் ஆகாது. இவையெல்லாம் இவர்களின் பலவீணத்தையே காட்டுகிறது.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
Post a Comment