Saturday, April 21, 2007

ஐஐஎம் : மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க இந்திய அரசு உத்தரவு


மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும்படி ஆறு இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐஎம்) இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் 20-042007 வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழக்கு விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை. உச்ச நீதிமன்றம் வரும் 23-04-2007 திங்கள்கிழமையன்று விசாரிக்க உள்ளது. அதுவரை நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை நிறுத்தி வைப்பதே நியாயமானதாக இருக்கும். மாணவர் சேர்க்கையை அரசு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்.

இந்த கல்வி நிறுவனங்களை நடத்துவது அரசுதான். எனவே அவற்றை நிர்வகிப்பவர்களுக்கு எப்படி நடந்துகொள்வது என்பது தெரியாமல் போகாது.

இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அவசர சட்டம் கொண்டுவர முடியாது. இது அரசமைப்புச் சட்டத் திருத்தம். இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எல்லாவித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

இப்போது புதிய நிலைமை உருவாகியுள்ளது. நீதிமன்றம் என்ன முடிவு செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய அரசுக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இடையே எந்தவித மோதல் போக்கும் இல்லை. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தே இரண்டும் செயல்படுகின்றன.

ஐஐஎம் இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்றார் அர்ஜுன் சிங்.

இதனிடையே, மத்திய அரசு அனுப்பிய புதிய கடிதத்தை அடுத்து மாணவர் சேர்க்கை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய ஐஐஎம் இயக்குநர்கள் 20-04-2007 வெள்ளிக்கிழமை நடத்த இருந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக ஐஐஎம் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு 27 சதவீத ஒதுக்கீடு அனுமதித்துச் சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து இந்த தடை உத்தரவை விலக்குவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின்கீழ் இந்த ஆண்டில் மாணவர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள போதிலும், பொது மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களின் இறுதிப்பட்டியல் ஏப்ரல் 21ஆம் நாளன்று வெளியிடப்படும் என்று ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் அறிவித்திருந்தன.

“பிரச்சினை தீர்ந்தபின் மாணவர் சேர்க்கை’’

இட ஒதுக்கீட்டு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்ட பிறகு மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று ஆமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

1 comment:

Anonymous said...

இது அநியாயம்.தலித், பழங்குடி மாணவர்களை சேர்க்க தடையேதுமில்லை.உச்ச நீதிமன்ற உத்தரவு வந்தால் இட ஒதுக்கீட்டில் வரும் ஒபிசி மாணவர்களுக்கும் சேர்க்கைப் பற்றிய கடிதங்கள் அனுப்புவோம் என்று ஐஐஎம் கள் கூறிய பின்னரும் இப்படிச் செய்திருப்பது அர்ஜுன் சிங்கின் அதிகாரத் திமிரையும், ஆணவத்தையும் காட்டுகிறது.உங்களைப் போன்ற 'மனித உரிமை' போராளிகள் அர்ஜுன் சிங் செய்தது சரி என்றுதானே கூறுகிறீர்கள். இது அதிகாரத் திமிர் என்றாலும் உங்களுக்கு அது சரியானதாகத் தோன்றும். ஏனென்றால் இட ஒதுக்கீட்டிற்காக யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம் என்பதுதானே உங்கள் வாதம்.
உங்களைப் பொருத்தவரை ஒபிசி இட ஒதுக்கீடு 100% என்றாலும் ஒகேதான்.