Wednesday, December 24, 2008

அ.மார்க்ஸ் எழுதிய "கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்" நூல் வெளிவந்துவிட்டது!பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள "கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்" நூல் வெளிவந்துள்ளது. பக்கம்: 136. விலை: ரூ. 65/-

ஒரிசா, கர்நாடகா கிறிஸ்தவர்கள் மீது மதவெறி சக்திகள் நடத்திய தாக்குதல் குறித்த உண்மை அறியும் குழு அறிக்கைகள், நேரடியாக சென்று பார்த்த அனுபவங்கள், இந்திய கிறிஸ்துவம் அதை இந்துத்துவம் அதை எதிர்கொண்ட வரலாறு, மதமாற்ற தடைச் சட்டம் பற்றிய அலசல் என விரிவான ஆய்வு நூலாக அமைந்துள்ளது.

மதவாததிற்கு எதிராக சமரசமின்றி எழுதியும், போராடியும் வரும் அ.மார்க்ஸ் இந்நூலை எழுதியுள்ளார்.

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலை "புலம்" மிகச் சிறப்பாக தயாரித்து வடிவமைத்துக் கொடுத்துள்ளது. மேலும், "புலம்" மதவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக இந்நூலை பரவலாக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது.

நூல் பெற விரும்புவோர் கீழ்காணும்
முகவரியில் தொடர்புக் கொள்ளவும்:

புலம்,
72, மதுர நாயக்கன் தெரு,
சின்ன மேட்டுக் குப்பம்,
மதுரவாயில்,
சென்னை - 600 095.
பேசி: 97907 52332, 98406 03499.
மின்னஞ்சல்: pulam2008@gmail.com.

கோ.சுகுமாரன்,
179-அ, மாடி, மகாத்மா காந்தி வீதி,
புதுச்சேரி -605 001.
பேச: 98940 54640.
மின்னஞ்சல்: peoples_rights@hotmail.com

தில்லி: இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியாவின் ஆதரவைத் திரட்டிய புதுச்சேரி கட்சி - இயக்கத்தினர்!
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வேண்டும், எவ்வகையிலும் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கக் கூடாது என அரசை வலியுறுத்தவும், அகில இந்திய கட்சிகளிடம் ஆதரவுத் திரட்டவும் புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் தில்லி பயணம் மேற்கொண்டனர்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, 15.12.2008 திங்களன்று மதியம் 12.30 மணிக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்களை பாராளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், செயலர் ப.அமுதவன், மறுமலர்ச்சி தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் வ.செல்வராசு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் கோ.சுந்தரமூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயலாளர் உ.முத்து, லோக் ஜனசக்தி தலைவர் புரட்சிவேந்தன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகச் செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ ஆகியோர் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். இப்போராட்ட்த்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்தி வருகிறது.

தமிழர்களுக்கு எதிரான இந்த இனவெறி போரில் இதுவரையில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். வீடு, வாசல் இழந்து 3.5 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 9 லட்சம் தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர்.

தமிழர்கள் மீது இலங்கை அரசு இனவெறி போக்கோடு போரை தொடர்ந்து வருகிறது. ஐ.நா. அவையின் இனவெறிக்கு எதிரான பிரகடனத்தின்படி இலங்கை அரசின் போர் அப்பட்டமான இனவெறி என்பதோடு கிரிமினல் குற்றமாகும்.

இந்திய அரசு இலங்கை இனப் பிரச்சனையில் தலையிட்டு அங்கு நடைபெறும் போரை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியா இலங்கைக்கு எந்த வகையிலும் இராணுவ உதவி வழங்க கூடாது.

இலங்கைப் பிரச்சனைக்கு இராணுவ ரீதியான தீர்வுக்குப் பதிலாக அரசியல் தீர்வுக்கு இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும். இந்தியா சார்க் நாடுகளுக்குத் தலைமை வகிப்பதால், இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு கால் நூற்றாண்டு இனப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட பிரனாப் முகர்ஜி அதனை முழுமையாக படித்து பார்த்தார். பின்னர் அவர் 'இலங்கையில் மக்கள் பாதிக்கப்படுவது உண்மைதான். அரசுக்கு எல்லாம் தெரியும். இதுகுறித்து அரசு அக்கறையோடு இருக்கிறது. தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி ஒன்றும் சொல்ல இயலாது. போரை இலங்கை அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. போரினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது அரசின் கவனத்தில் உள்ளது. தாங்கள் அளித்த மனுவில் சொல்லப்பட்டவைப் பற்றி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளித்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்களுடனான சந்திப்பிற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், எம்.பி.யுமான டாக்டர் பருண் முகர்ஜி ஏற்பாடு செய்திருந்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடம் ' இலங்கைக்குச் செல்லும் திட்டம் உள்ளதா?' என டாக்டர் பருண் முகர்ஜி கேட்டார். அதற்கு அவர் ' நாம் எடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை உடனுக்குடன் எதிர் நிலை எடுக்கிறது. பொறுத்திருங்கள், பார்ப்போம்' என்று கூறினார்.

பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்கள் பி.மோகன், பெல்லார்மீன், ம.தி.மு.க. எம்.பி. சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் ஆகியோரையும் இக்குழுவினர் சந்தித்து தில்லி வந்த நோக்கத்தை விளக்கினர். அப்போது அவர்களோடு இருந்த அதிமுக ராஜசபா எம்.பி. ஒருவர் 'இக்குழுவில் எங்கள் கட்சியினர் வந்திருக்கிறார்களா?' என்று அப்பாவித்தனமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், 15.12.2008 அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலர் பிஸ்வாஸ், 16.12.2008 அன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லோக் ஜனசக்தி தலைவர் இராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இச்சந்திப்பின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ‘இந்த பிரச்சனை என் துறையின் கீழ் வரவில்லை. எனவே, இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடம் நாளை நேரில் பேசுகிறேன். எங்கள் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும்’ எனக் கூறினார்.

லோக் ஜனசக்தி தலைவர் இராம்விலாஸ் பஸ்வான் ‘தங்கள் கட்சி இது குறித்து ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும், தமிழர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்’ உறுதியளித்தார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் நீண்ட நேரம் கலந்துரையாடினார். ‘எங்கள் கட்சி நேதாஜி வழியில் வந்த புரட்சிகர கட்சி. நாங்கள் அடக்குமுறை எந்தவடிவில் இருந்தாலும் அதை எதிர்ப்போம். நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து மக்கள் போராடிய போது, மன்னருக்கு ஆதரவாக இந்திய அரசு நிலை எடுக்ககக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்தினோம். அதற்கு தீவிரமாக ஆதரவுத் திரட்டினோம். தற்போது தேர்தல் நேரம். அரசும், கட்சிகளும் தேர்தலிலேயே கவனமாக இருப்பார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து எங்கள் கட்சி தீவிரமாக வலியுறுத்தும். தமிழர்கள் பாதிக்கப்படுவது பற்றி இலங்கையில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவை திரட்ட வேண்டும். மேலும் ஜனவரி மாதம் நான் இலங்கைச் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்’ என உறுதிபட கூறினார்.

புதுச்சேரி கட்சி, இயக்கத்தினர் மேற்கொண்ட தில்லிப் பயணத்தைத் தொடர்ந்து, 18.12.2008 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், எம்.பி.யுமான சீத்தாராம் யெச்சூரி தலைமையில் தமிழக எம்.பி.க்கள் பி.மோகன், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அதில், 'இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரமான அரசியல் தீர்வுக் காண வேண்டும். இதற்கு இந்தியா தன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பேராசிரியர் இராமதாஸ், எம்.பி. தலைமையில் பா.ம.க. எம்.பி.க்கள் அகில இந்தியக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியா என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Thursday, December 11, 2008

புதுச்சேரி: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி விலக வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.12.2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான வருவாய்த் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உடனடியாக பதவி விலக வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி பகுதியான ஏனாமில் தனக்குச் சொந்தமான இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு சட்டத்திற்குப் புறம்பாக, முறைகேடாக அராசாங்க நிதியை ஒதுக்கியதன் மூலம் ஊழல் புரிந்துள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அவ்வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டிற்கு ஆளானவர் புதுச்சேரி அரசின் உயர்பொறுப்பில் உள்ளவர் என்பதால், வழக்கு விசாரணை நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றுமில்லாமல் போனதும் கவனிக்கத்தக்கது.

அமைச்சர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்க வேண்டிய முதலமைச்சர் வைத்திலிங்கம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை பாதுகாக்கும் நோக்கோடு அனைத்து அமைச்சர்களையும் உடன் வைத்துக் கொண்டு பேட்டியளித்தது நீதிமன்ற விசாரணையை திசை திருப்புவதோடு, ஊழலை மூடிமறைக்கும் செயலாகும்.

இந்நிலையில், வழக்கு விசாரணை நேர்மையாக, முறையாக நடைபெற வேண்டுமானால், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் பதவி விலக முன்வரவில்லை என்றால், அவரை பதவியை விட்டு நீக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களுக்கு மனு அனுப்ப உள்ளோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tuesday, December 09, 2008

புதுச்சேரி: தமிழக தலைவர்களை இழிவுப்படுத்திய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா உருவபொம்மை எரிப்பு!

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்திப் பேசிய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா உருவபொம்மை எரிப்புப் போராட்டம் புதுச்சேரியிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் சார்பில், 9-12-2008 செவ்வாயன்று, காலை 10.30 மணியளவில், ஒதியஞ்சாலை, அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன் தலைமைத் தாங்கினார். போராட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் ப.அமுதவன், ம.தி.மு.க. அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கபிரியேல், வ.செல்வராசு, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், அகில இந்திய பார்வர்டு பிளாக் செயலாளர் யூ.முத்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜி.சுந்தரமூர்த்தி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, லோக் ஜனசக்தி தலைவர் புரட்சிவேந்தன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, முரசொலி மாறன் பேரவைத் தலைவர் நடராசன் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

போராட்டத்தில் பல்வேறு கட்சி, இயக்கத் தோழர்கள் 250 பேர் கலந்துக் கொண்டனர். போராட்டத்தில் கீழ்காணும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன:

1) தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை கோமாளிகள் என இழிவுபடுத்திப் பேசிய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை வன்மையாக கண்டிக்கிறோம்.

2) மத்திய அரசு உடனடியாக இந்தியாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும். இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

3) இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய அரசு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

ஈழத்தமிழர் துயர் துடைக்க புதுச்சேரியில் ஓவியக் கண்காட்சி!புதுச்சேரி வி-5 குழு ஓவியர்கள் மற்றும் ஓவியக் கலைஞர்கள் சார்பில் ஈழத்தமிழர் நிவாரண நிதிக்காக வீதியோர ஓவியக் கண்காட்சி கடற்கரைச் சாலை காந்தி திடலில் இரண்டு நாட்கள் (6,7-12-2008) நடைபெற்றது.

கண்காட்சிக்கு ஓவியர் தனசேகர் தலைமைத் தாங்கினார். ஓவியர் ஸ்ரீதர் வரவேற்றார். ஓவியர்கள் எழிலரசன், திருநாவுக்கரசு, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியர்கள் கலந்துக் கொண்டு ஆதரவுத் தெரிவித்தனர்.

கண்காட்சியில் இளம் ஓவியர்கள் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். மேலும் காண்காட்சிக்கு வருவோர்களின் முகபாவங்களை ஓவியர்கள் உடனுக்குடன் வரைந்தும் அதன்மூலம் தொகை ஈட்டினர்.

ஓவிய விற்பனை மற்றும் ஓவியம் வரைந்ததின் மூலம் கிடைக்கும் நிதியை ஈழத்தமிழர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர். அத்தொகையை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.

நீர் வண்ண ஓவியங்கள் ரூ.100 முதல் நெய் வண்ண ஓவியங்கள் அதிக பட்சம் ரூ.50 ஆயிரம் வரையில் விலையுள்ள ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. குறைந்த விலை ஓவியங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர். கண்காட்சிக்கு வந்திருந்தவர்களுக்கு ஈழத் தமிழர் படும் துயரங்களை விளக்கிய துண்டறிக்கை அளித்தனர்.

இக்கண்காட்சி மூலம் ரூ50 ஆயிரம் நிதி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை வீரமோகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

புதுச்சேரி ஓவியர்களின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டினர். பல்வேறு அமைப்பினர் ஓவியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Thursday, December 04, 2008

திருக்கோணமலையில் கவிஞர் சு.வில்வரெத்தினம் - நினைவு நிகழ்வு!

எதிர்வரும் 09-12-2008 (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு திருக்கோணமலை நகரசபை மண்டபத்தில் கவிஞர் சு.வில்வரெத்தினத்தின் இரண்டாமாண்டு நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சு.வி-யின் வருகையும் வசிப்பும் திருக்கோணமலை நகரின் அக்காலகட்டத்து சமூக - வாசிப்பு - எழுத்து - நாடகத் துறையில் கணிசமானளவு பங்களிப்பினையும் அதிர்வினையும் ஏற்படுத்தியது.

அதையும் தாண்டி ஈழத்து எழுத்துத்துறையில் அன்னாரது பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து, அத்துறையில் பரிச்சயம் கொண்டவர்கள் கருதுவதை கண்டும் கேட்டும் வாசித்தும் நாம் அறியக்கூடியதாயிருக்கும்.

தனிப்பட, அவரது ஆளுமையும், பழகும் முறையும், திறந்த மனதும் அதிகமதிகம் கவர, அவரது கனிவின் இசை லயத்தில் கட்டுண்டு கிடந்தவர்களாக நம்மில் சிலர் இருந்திருப்போம்.

ஆற்றலும், ஆளுமையும், கவிதையும், தமிழும், கலையும், கனிவும், ஆன்மீகமுமாய் இன்னும் பலவுமாய் வாழ்ந்து பின் நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கி நடுவழியில் பிரிந்து சென்ற அந்தக் கவிஞனை நினைத்து திருக்கோணமலை நண்பர்கள் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள இணையவாசிகள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்...

மேலதிக தகவல்களுக்கு இதைச் சொடுக்கவும்