Saturday, October 27, 2007

தேங்காய்த்திட்டு இளைஞர் கொலைச் சம்பவம்: துணை ஆட்சியர் விசாரணை


கொலை செய்யப்பட்டவரின் தாயார்
சூடாமணி, தம்பி செல்வமணி.


புதுச்சேரி தேங்காய்த்திட்டு இளைஞர் கொலைச் சம்பவம் குறித்து துணை ஆட்சியர் விஜய்குமார் பிதிரி 26-10-2007 அன்று விசாரணை நடத்தினார்.

தேங்காய்த்திட்டில் கொலை செய்யப்பட்ட பாலா (எ) தெய்வசிகாமணியின் வழக்கை சந்தேக மரணம் என்ற பிரிவில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து இதே பகுதியைச் சேர்ந்த ஜான்பால் (23), சுரேஷ் (21), முருகேசன் (23) ஆகியோர் பாலாவைக் கொலை செய்ததாக புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதன்பின்னர், இவ் வழக்கை கொலை வழக்காக முதலியார்பேட்டை போலீசார் மாற்றினர். கொலையை மூடிமறைத்து, கொலையாளிகளைக் காப்பாற்றிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி தலைமைச் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன் புகார் மனு கொடுத்தார்.

இதுபோல் ஆட்சியர் க.தேவநீதிதாசிடமும் கடந்த 15-ஆம் நாளன்று புகார் மனு அளித்தார். கடந்த 18-ஆம் நாளன்று கொலை செய்யப்பட்ட பாலாவின் தாய் சூடாமணி ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

இப் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தும்படி துணை ஆட்சியர் விஜய்குமார் பிதிரிக்கு ஆட்சியர் க.தேவநீதிதாஸ் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து விஜய்குமார் பிதிரி மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், சூடாமணி மற்றும் பாலாவின் சகோதரர் செல்வமணி ஆகியோரிடம் ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினார். அவர்களிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டன.

இறந்தது பாலா தானா என்பதை உறுதி செய்ய சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும், கொலையை மூடிமறைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்குமூலம் அளித்தனர்.

விசாரணையின்போது வட்டாட்சியர் அசோகன் உடன் இருந்தார்.

முதலியார்பேட்டை ஆய்வாளர் ரவிக்குமார், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் உட்பட மேலும் பலரிடம் விசாரணை மேற்கொண்டு, அதன்பின்னர் ஆட்சியரிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யப்படும் தெரிகிறது.

தேங்காய்திட்டு கவுன்சிலர் பாஸ்கரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், செயலாளர் சு.விசயசங்கர், சமூக நீதிப் போராட்டக் குழு பாகூர் மஞ்சினி உட்பட ஏராளமானவர்கள் வந்திருந்தனர்.

Thursday, October 25, 2007

பத்திரிகையாளர் ஞானிக்கு தமிழக எழுத்தாளர்கள் கண்டனம் - ஒலி வடிவம்

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியைக் கொச்சைப்படுத்தி, ஆனந்த விகடனில், பத்திரிகையாளர் ஞானி "விருப்பப்படி இருக்க விடுங்கள்" என்ற தலைப்பில் எழுதியதை அனைத்துத் தரபினரும் கண்டித்துள்ளனர்.

இதனிடையே, ஞானியின் அநாகரீகமான எழுத்தைக் கண்டித்து, தமிழகத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி கண்டனக் கூட்டம் நடத்தியுள்ளனர். 'தீம்புனல்' சார்பில் சென்னை வாணி மகாலில் 20.10.07 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் ஆரம்பித்து இரவு 10 மணிவரையிலும் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கவிஞர் இளையபாரதி வரவேற்று பேசினார். கவிஞர் தமிழச்சி முகவுரை ஆற்றினார். பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கவிஞர் அறிவுமதி, கவிஞர் கரிகாலன், பேராசிரியர் அ.மார்க்ஸ், கவிஞர் சல்மா, எழுத்தாளர் இமயம், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், பேராசிரியர் வீ.அரசு, தாமரை ஆசிரியர் சி.மகேந்திரன், பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ். மணி, கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் பிரபஞசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இறையன்பன் குத்தூஸ் சிறப்புப் பாடல் பாடினார்.

கூட்டத்தில் பேசிய அனைவரும் ஞானியின் பார்ப்பன சார்பை கடுமையாக கண்டித்தனர். ஞானியின் கட்டுரையை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகையையும் கண்டித்தனர்.

சேது சமுத்திரத் திட்டத்தை முன்வைத்து இந்து மதவெறிக் கும்பல்கள் ‘இராமர் பாலம்’ பிரச்சனையைக் கிளப்பி அரசியல் லாபம் தேட முயற்சி செய்கின்றன. இதை எதிர்ப்பதில் கருணாநிதி உறுதியாக இருப்பதைக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவரும் பாராட்டிப் பேசினர்.

மதவெறிக் கும்பல்களின் கொட்டத்தை எதிர்த்துவரும் கருணாநிதிக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். மதவெறியை முறியடிக்க தமிழக மக்கள் கருணாநிதியின் பக்கம் நிற்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

கருணாநிதியின் கருத்துக்கள், செயல்பாடுகள் மீது கடும் விமர்சனம் கொண்ட தமிழக எழுத்தாளர்கள் பலரும் ஒன்றுகூடி இக்கூட்டம் நடத்தியதும், மதவாதத்திற்கு எதிராக பேசிவரும் கருணாநிதியை இந்நேரத்தில் ஆதரிப்பதும் பாராட்டப்பட வேண்டியது.

இக்கூட்டத்தில் பேசியவர்களின் பேச்சைக் கேட்க
கீழ்காணும் வலைப்பூவின் முகவரியைக் "கிளிக்" செய்யவும்:

எண்ணங்கள்

தில்லி போலிமோதல் வழக்கு: துணை ஆணையர் உட்பட 10 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

தில்லியில் போலி மோதலில் (போலி என்கவுன்ட்டர்) அரியாணாவைச் சேர்ந்த இரு வணிகர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், காவல் துறை துணை ஆணையர், தலைமைக் காவலர்கள் உள்பட 10 போலீசாருக்கு தில்லி நீதிமன்றம் 24-10-2007 அன்று ஆயுள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இவ் வழக்கு குறித்த விவரம்:

அரியாணாவைச் சேர்ந்த வணிகர்கள் பிரதீப் கோயல், ஜகஜித் சிங் ஆகியோர் ஒரு காரில் தில்லி 'கன்னாட் பிளேஸ்' பகுதியில் சென்றுகொண்டு இருந்தனர்.

அப்போது, காவல் துறை துணை ஆணையர் எஸ்.எஸ். ரதி தலைமையிலான போலீசுப் படை அவர்களை வாகனத்தில் விரட்டிச் சென்றது. 'கன்னாட் பிளேஸ்' பகுதியில் வணிகர்களது காரை வழிமறித்து, துப்பாக்கியால் கண்மூடித்தனமாக அவர்கள் மீது போலீசார் சுட்டனர். அதில் அந்த வணிகர்கள் இருவரும் பலியானார்கள்.

ஆனால், போலீசாரால் தேடப்பட்டுவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த யாசீனும் அவரது கூட்டாளியும்தான் அந்த காரில் தப்பிச் செல்கின்றனர் என்று நினைத்து அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், தவறுதலாக வணிகர்கள் இறந்துவிட்டனர் என்றும் விசாரணையில் போலீசார் கூறினர். இச் சம்பவம் 1997, மார்ச் 31-ல் நடந்தது.

அந்த வழக்கில் மத்தியப் புலனாய்வுப் பிரிவினர் (சி.பி.ஐ.) புலனாய்வை மேற்கொண்டனர். துணை ஆணையர் எஸ்.எஸ். ரதி, ஆய்வாளர் அனில் குமார், உதவி ஆய்வாளர் அசோக் ராணா, தலைமைக் காவலர்கள் சிவகுமார், தேஜ்பால் சிங், மகாவீர் சிங், காவலர்கள் சுமேர் சிங், சுபாஷ் சந்த், சுநீல் குமார், கோத்தாரி ராம் ஆகியோர் மீது சிபிஐ போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

தில்லி கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் குமார் வழக்கை விசாரித்து, துணை ஆணையர் உள்பட 10 பேருமே குற்றவாளிகள் என்று அக்டோபர் 16-ல் தீர்ப்பளித்தார். அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை 24-10-2007 அன்று அறிவித்தார்.

அப்பாவி வணிகர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த காவல் துறை துணை ஆணையர் எஸ்.எஸ். ரதி, ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி அறிவித்தார் .

முன்னதாக, நீதிமன்றத்தில் வாதிட்ட சிபிஐ வழக்கறிஞர், "இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமைக் காவலர் மகாவீர் சிங், காவலர் கோத்தாரி ராம் ஆகியோரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குத்தான் வணிகர்கள் பலியாகியுள்ளனர். அப் போலீசுப் படைக்குத் தலைமை வகித்துச் சென்றவர் துணை ஆணையர் ரதி. எனவே அவர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார். மக்களின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டியவர்களே அப்பாவிகள் மீது 34 ரவுண்டுகள் சுட்டுள்ளனர். அவர்களது குற்றம் கடுமையானது என்றார் சக்சேனா.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு கோரினர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட துணை ஆணையர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

Tuesday, October 23, 2007

கரண் தாப்பரிடம் இருந்து தப்பியோடிய மோடி: சீழ்ப் பிடித்து நாறும் இந்துத்துவ முகம்


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, 19-10-2007 அன்று, சி.என்.என்.-ஐ.பி.என். தொலைக்காட்சியில் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில், கரண் தாப்பருக்கு நேர்காணல் அளித்தார். நேர்காணல் தொடங்கி நான்கரை நிமிடத்திற்குள் பதிலளிக்க முடியாமல் வெளியேறினார். குஜராத்தில் முசுலீம் மக்களுக்கு எதிராக மிகப் பெரும் இனப் படுகொலையை நடத்திய நரேந்திர மோடி, இது குறித்த கரண் தாப்பரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறியது, அவரது இந்துத்துவ பாசிச கொடூர முகத்தை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்திக் காட்டியது. மேலும் அவர் கரண் தாப்பர் பேச விரும்புவதை எல்லாம் நான் பேச விரும்பவில்லை என்று அவேசமாக கூறிவிட்டு வெளியேறினார். தி இந்து பத்திரிகை 22-10-2007 அன்று வெளியிட்டுள்ள அவரது நேர்காணல்:

திரு.நரேந்திர மோடி, உங்களைப் பற்றியதிலிருந்து தொடங்குவோம். இந்த ஆறு ஆண்டுகளும் நீங்கள் குஜராத்தின் முதல்வராக இருக்கிறீர்கள். இராஜீவ் காந்தி பவுண்டேசன் குஜராத் மாநிலத்தை சிறந்த நிர்வகிகப்படும் மாநிலமாக அறிவித்துள்ளது. இந்தியா டூடே இரண்டு சந்தர்ப்பங்களில் உங்களைச் சிறந்த முதல்வராக அறிவித்தது. இதற்கெல்லாம் அப்பால் மக்கள் உங்களை மாபெரும் கொலைக்காரர் என்று அழைக்கின்றனர். மேலும் முசுலீம்களுக்கு எதிரான மனிநிலை உடையவர் என்றும் கூறுகின்றனர். இதனால், உங்களுடைய பிம்பம் பாதிக்கவில்லையா?

நான் நினைக்கிறேன் அவர்கள் மக்கள் என்று சொல்வது சரியானதல்ல. ஒன்று அல்லது இரண்டு பேர் தான் இதுபோன்ற பதங்களைப் பயன்படுத்துகின்றனர். நான் சொல்கிறேன் கடவுள் அவர்களை அசிர்வதிப்பார்.

இது, ஒன்று அல்லது இரண்டு பேர்களின் சதி என்று சொல்கிறீர்களா?

நான் அப்படி சொல்லவில்லை.

அனால், நீங்கள் ஒன்று அல்லது இரண்டு பேர் தான் என்று சொல்கிறீர்களா?

என்னிடம் இந்த தகவல்தான் இருக்கிறது. மக்களின் குரலும் இதுதான்.

நான் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். செப்டம்பர் 2003-இல் உச்சநீதிமன்றம் குஜராத் அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறியதே? ஏப்ரல் 2004-இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார், ஆதரவற்ற குழந்தைகளும் பெண்களும் எரிக்கப்பட்ட போது, நீங்கள் ஒரு நவீன நீரோ போல் இருந்தீர்களே என்று. உச்சநீதிமன்றம் உங்களோடு பிரச்சனை ஏற்படுத்திக் கொண்டதுபோல் தெரிகிறதே?

நான் ஒரு சிறிய வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பைப் படித்துப் பாருங்கள். அதில் எழுத்துமூலம் ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா? நான் இதுபற்றி தெரிந்து கொள்ள மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நீங்கள்சொல்வது சரி. எழுத்துமூலம் எதுவுமில்லை. அது உச்சநீதிமன்றத்தின் பார்வையாயிற்றே?

அது தீர்ப்பில் இருக்குமானால் நான் மகிழ்ச்சியாக உங்களுக்கு பதில் அளிப்பேன்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, நீதிமன்றத்தில் விமர்சித்ததுப் பற்றி கவலைப்பட தேவையில்லையா?

என் சிறிய வேண்டுகோள். தயவு செய்து தீர்ப்பைப் படித்துப் பாருங்கள். நீங்கள் குறிப்பிடும் சொற்றோடரைக் கைவிடுங்கள், மக்களுக்கு அதுபற்றி தெரிந்துக் கொள்ளட்டும்.

ஆகஸ்ட் 2004-இல் உச்சநீதிமன்றம் ஏறக்குறைய 4600-இல், 2100 வழக்குகளை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது ஏறக்குறைய 40 சதவீதம். அவர்கள் அப்படி செய்ததற்குக் காரணம் குஜராத்தில் நீதி வழங்கப்படவில்லை என்று நம்பியதால் தானே?

எனக்கு மகிழ்ச்சிதான். இறுதியாக நீதிமன்ற சட்டம் தீர்ப்பை எடுத்துக் கொள்ளட்டும்.

ஆனால், இதற்காகத்தான் உங்களை இந்தியா டூடே சிறந்த முதல்வராக அறிவித்தது, இராஜீவ் காந்தி பவுண்டேசன் சிறந்த நிர்வகிக்கப்படும் மாநிலமாக அறிவித்தது, கோடிக் கணகாணவர்கள் மோடி முசுலீம் மக்களுக்கு எதிரான மனநிலை உடையவர் என்று கூறியது. இதனால்தான் நான் கேட்கிறேன், உங்களுடைய பிம்பத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதா?

உண்மையிலேயே என் பிம்பத்திற்காக நான் ஒரு நிமிடம்கூட செலவிட்டது கிடையாது. நான் எப்போதும் என் வேலையில் பிசியாக இருப்பதற்கு இதுவேகூட காரணம். நான் குஜராத்திற்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன். அர்ப்பணித்துக் கொண்டவன். நான் என் பிம்பம் பற்றி சிந்தித்ததே கிடையாது. என் பிம்பத்திற்காக நான் ஒரு நிமிடம்கூட செலவிட்டது கிடையாது. குழப்பங்கள் இருக்கலாம்.

நான் சொல்கிறேன், பிரச்சனை என்னவென்று. 2002-இல் குஜராத் படுகொலைகள் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆனபின்பும், கோத்ரா பேய் உங்களைச் சுற்றி சுற்றி வருகிறது. நீங்கள் ஏன் அந்தப் பேயைத் தணிக்க முயற்சிக்கவில்லை?

இதை கரண் தாப்பர் போன்ற பத்திரிகையாளர்களுக்கு விட்டுவிடுகிறேன். அவர்கள் அனுபவிக்கட்டும்.

நான் ஏதாவது ஆலோசனைக் கூறலாமா?

எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.

நடந்த கொலைகளுக்காக வருந்துவதாக நீங்கள் ஏன் சொல்லக் கூடாது? முசுலீம்களைப் பாதுகாக்க அரசு கூடுதலாக ஏதாவது செய்திருக்கலாம் என்று சொல்லலாமே?

நான் என்ன சொல்ல வேண்டுமென்பதை அந்த நேரத்திலேயே சொல்லிவிட்டேன். நீங்கள் என்னுடைய அறிக்கைகளில் தேடிப் பார்க்கலாம்.

திரும்பவும் சொல்லவும்...

2007-இல் நான் அதைப் பற்றிப் பேச தேவையில்லை, அதாவது நீங்கள் பேச விரும்புவதை எல்லாம்.

அனால், அதைப் பற்றி திரும்பச் சொல்லாமல், குஜராத்தின் நலனுக்கு எதிராக உள்ள பிம்பத்தைத் தொடர்ந்து நீட்டிக்க அனுமதிப்பது பற்றி நீங்கள் மக்களுக்குச் சொல்லியாக வேண்டும். அதை மாற்ற வேண்டியது உங்கள் கையில்...

மோடி ஒலிவாங்கியை (மைக்கை) நிறுத்திவிடுகிறார்.

எனக்கு ஓய்வு தேவை. எனக்கு கொஞ்சம் தண்ணீர் தேவை.

தண்ணீர்...

நட்பு தொடர வேண்டும். அவ்வளவுதான். நான் மகிழ்ச்சி அடைவேன். நீங்கள் இங்கு வந்தீர்கள். அதற்கு உங்களுக்கு என் நன்றி, மகிழ்ச்சி. நான் இந்த நேர்காணலை தொடர முடியாது. சரியா? இதெல்லாம் உங்களுடைய கருத்து, நீங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறீர்கள், தொடர்ந்து செய்கிறீர்கள். மூன்றுநான்கு கேள்விகள், நான் ரசித்தேன்.

இல்லை, கரண்.

மோடி சாப்...

கரண் நான் நட்புறவைக் தொடர விரும்புகிறேன். நீங்கள் அதை நோக்கி முயற்சி செய்யுங்கள்.

அய்யா, எந்த தவறு செய்வதைப் பற்றியும் நான் பேசவில்லை. நான் சொல்கிறேன், ஏன் நீங்கள் உங்கள் பிம்பத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது.

அதற்கு இது நேரமல்ல. அதற்கு நீங்கள் என்னை 2002-இல் சந்தித்திருக்க வேண்டும், 2003-இல் சந்தித்திருக்க வேண்டும். நான் அதை எல்லாம் செய்திருப்பேன்.

புதுச்சேரியில் கொலையை மூடிமறைத்த போலீசைக் கண்டித்து சுவரொட்டி


புதுச்சேரி தேங்காய்த்திட்டு இளைஞர் பாலா (எ) தெய்வசிகாமணி கொலை செய்யப்பட்ட வழக்கை மூடிமறைத்து கொலையாளிகளைக் காப்பற்றிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, பெரியார் திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம், இராவணன் பகுத்தறிவு இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ள செய்தியை தினகரன், மாலை மலர் ஆகிய பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

விரிவான தகவல்:

போலீஸ் மீது அளிக்கப்பட்ட புகார்

Wednesday, October 17, 2007

தில்லி போலிமோதல் வழக்கு: உதவி காவல் ஆணையர் உட்பட 10 பொலிசார் குற்றவாளிகள் - நீதிமன்றம் அறிவிப்பு

தில்லியில் 1997ம் ஆண்டு அப்பாவி வணிகர்கள் இரண்டு பேரை போலி மோதலில் சுட்டுக் கொன்ற வழக்கில் உதவி காவல் ஆணையர் உட்பட 10 போலீசாரும் குற்றவாளிகள் என அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உதவி காவல் ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் மீதான தண்டனை வரும் 24ம் நாளன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

தில்லியில் 1997ம் ஆண்டு மார்ச் 31ம் நாளன்று கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஸ்டேட்ஸ்மேன் ஹவுஸ் என்ற கட்டடத்தின் அருகே ஒரு போலி மோதல் (என்கவுன்டர்) சம்பவம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்கள் உதவி காவல் ஆணையர் ரதி, காவல் ஆய்வாளர் அனில் குமார், உதவி ஆய்வாளர் அசோக் ராணா, தலைமைக் காவலர்கள் சிவ்குமார், தேஜ்பால் சிங், மகாவீர் சிங், காவலர்கள் சுமேர் சிங், சுபாஷ் சந்த், சுனில் குமார் மற்றும் கோத்தாரி ராம்.

அன்றைய தினம் மாலை செய்தியாளர்களை அழைத்து பிரபலமான தாதாக்கள் இருவரை சுட்டுக் கொன்று விட்டதாக இந்த போலீஸ் குழுவினர் பரபரப்பு பேட்டியும் அளித்தனர்.

ஆனால், நடந்த விவகாரமே வேறு. போலீஸ் போலி மோதலில் இறந்தது அப்பாவி வணிகர்கள் பிரதீப் கோயல் மற்றும் ஜக்ஜித் சிங் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இருவரும் தில்லியின் கிழக்குப் பகுதியில் இருந்து கன்னாட் பிளேஸ் பகுதிக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது தான் இந்த கொடூர சம்பவம் நடந்து முடிந்தது.

கொல்லப்பட்டவர்கள் தாதாக்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இறந்தவர்களின் உறவினர்களும், போலி மோதல் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பத்திரிகையாளரும் உண்மையை வெளிக் கொண்டு வந்தனர்.

இந்தியா முழுவதுமுள்ள மனித உரிமை அமைப்புகள் இச்சம்பவத்தைக் கண்டித்தன. மேலும், ஒரு சுயேட்சையான அமைப்பு மூலம் விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கோரின. பல்வேறு போராட்டங்கள் நடத்தின.

பின்னர் இந்த சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை - சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு உதவி காவல் ஆணையர் ரதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 1997ம் ஆண்டு ஜூலையில் குற்றமிழைத்த 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக அப்போதைய தில்லி காவல் ஆணையர் நிகில் குமார் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது பிகாரில் உள்ள அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

குற்றமிழைத்த போலிசார் தரப்பில் `த்திரப்பிரதேச தாதா யாசீனும், அவது உதவியாளரும் காரில் வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து செயல்பட்டு அந்த காரை சுற்றி வளைத்தோம். ஆனால், காரில் இருப்பவர்கள் எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால், தற்காப்புக்காக நாங்கள் திருப்பிச் சுட நேரிட்டது. அதில் இருவர் இறந்து விட்டனர்' என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தோதாக, ணிகர்கள் இருவர் வந்த காரில் ஒரு துப்பாக்கியும், சில தோட்டாக்களும் அவர்களால் போடப்பட்டு இருந்தன. ஆனால், இந்த தகவல் பொய் என்பதை சி.பி.ஐ., நிரூபித்தது. அந்த துப்பாக்கியால் யாரும் சுடவேயில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பதவி உயர்வு வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் அவசரத்தில் செயல்பட்டு அப்பாவிகள் இருவரை சுட்டுக் கொன்று விட்டனர் என்று சி.பி.ஐ., தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த பரபரப்பான வழக்கின் விசாரணை தில்லி அமர்வு நீதீமன்றத்தில் நடைபெற்றது. கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் குமார் விசாரணை செய்தார். இரு தரப்பு வாதங்கள் முடிந்து இந்த வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 8ம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

16-10-2007 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்ரத்தி குற்றமிழைத்த போலிசார் ஆஜராகி இருந்தனர். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 10 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி வினோத் குமார் அறிவித்தார். `உங்கள் மீதான குற்றச்சாட்டு அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன' என்று 10 பேரையும் பார்த்து நீதிபதி அறிவித்தார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவு (கொலை), 307 (கொலை முயற்சி), 201 ( தடயங்களை அழித்தல்), 193 (தவறான சாட்சியங்களை அளித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் 10 போலீசாரும் குற்றம் புரிந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மிக அதிகபட்ச தண்டனை கூட அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி காவல் ஆணையர் ரதி, காவல் ஆய்வாளர் அனில் குமார் ஆகியோருக்கு வரும் 24ம் நாளன்று தண்டனை அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி வினோத் குமார் தெரிவித்தார்.

மேலும், துப்பாக்கி தோட்டா குறித்து தவறான தகவலை தந்த தடய அறிவியல் துறை நிபுணர் ரூப் சிங் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தார்.

பத்து ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது தில்லி போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பை பாதிக்கப்பட்ட ணிகர்களின் உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

Monday, October 15, 2007

புதுச்சேரியில் கொலையை மூடிமறைத்த போலீசார்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

புதுச்சேரி, தேங்காய்த்திட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கை, மத்திய புலனாய்வுத் துறை - சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், 15-10-2007 அன்று, தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர், ஐ.ஜி., முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் (சட்டம்-ஒழுங்கு), காவல் கண்காணிப்பாளர் (தெற்கு) ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி, தேங்காய்த்திட்டு பால்நிலைய வீதியைச் சேர்ந்த பாலா (எ) தெய்வசிகாமணி, வயது: 29, த/பெ. கண்ணன் என்ற இளைஞர் கடந்த 26-09-2007 அன்று தேங்காய்த்திட்டில், கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். பின்னர் கொலையாளிகள் அவரது பிணத்தை தேங்காய்த்திட்டு அருகேயுள்ள ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனிடையே, கடந்த 30-09-2007 அன்று அவரது பிணம் தேங்காய்த்திட்டு ஆற்றோரம் கரை ஒதுங்கியுள்ளது. அப்போது கொலை செய்யப்பட்டவரின் வயிற்று பகுதியில் குடல் வெளியே சரிந்து கிடந்துள்ளது. மேலும் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன. குறிப்பாக முகத்தில் கத்தியால் குத்தியதால் ஏராளமான காயங்கள் இருந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடனடியாக முதல் தகவல் அறிக்கைப் (குற்ற எண்.308/07. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174.)பதிவு செய்தனர். அதாவது, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174-இன்படி சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர், பிரேதத்தை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன்பின்னர், அனாதை பிணம் என்று கூறி பிரேதத்தை சந்நியாசித் தோப்புச் சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.

இதனிடையே, மேற்சொன்ன பாலா (எ) தெய்வசிகாமணியைக் கொலை செய்த கொலையாளிகளாக கருதப்படும் தேங்காய்த்திடைச் சேர்ந்த (1) ஜான்பால் த/பெ. அருளானந்து, (2) முருகேசன், த/பெ. மாரிமுத்து, (3) சுரேஷ் த/பெ. எட்டியான் ஆகியோர் கடந்த 10-10-2007 அன்று, ஒரு வழக்கறிஞர் மூலம் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைய முயற்சி செய்துள்ளனர்.

அப்போதுதான், முதலியார்பேட்டை போலீசாருக்கு கொலைக் குற்றவாளிகள் உண்மையை வெளியே சொன்னது தெரிய வந்துள்ளது. இனிமேல் தாமதித்தால் தாங்கள் சட்டத்தின்பிடியில் மாட்டிக்கொள்வோம் என்று கருதிய முதலியார்பேட்டை போலீசார் உடனடியாக வழக்கை கடந்த 11-10-2007 அன்று அவசர அவசரமாக கொலை வழக்காக மாற்றியுள்ளனர். ஆனால், இவ்வளவு நடந்த பின்பும் போலீசார் கொலையாளிகள் யாரென்று தெரிந்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவில்லை. தலைமறைவாக இருந்த கொலையாளிகள் கடந்த 12-10-2007 அன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

சாதாரண மனிதன் ஒருவன் பார்த்தாலே கொலை என்று தெரியக் கூடிய ஒரு வழக்கை முதலியார்பேட்டை போலீசார் சந்தேக மரணம் என்று கூறி வழக்குப் போட்டுள்ளனர். முதலியார்பேட்டை போலீசார் குற்றவாளியைக் காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டுள்ளனர். இது இந்திய தண்டனைச் சட்டப்படி கடும் குற்றமாகும்.

கொலை செய்யப்பட்டவர், கொலையாளிகள் என அனைவரும் தேங்காய்த்திட்டைச் சேர்ந்தவர்களகாக இருந்தும் போலீசார் சரியாக விசாரணை மேற்கொள்ளாமல், அனாதை பிணம் எனக் கூறி பிரேதத்தைப் புதைத்துள்ளானர். போலீசார் பிரேதத்தோடு சேர்த்து உண்மைகளையும் புதைத்துவிட்டனர்.

அனாதை பிணம் என்றாலும் அதனை அடக்கம் செய்வதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அதனைக்கூட போலீசார் பின்பற்றவில்லை. குறைந்தபட்சம் பத்திரிகைளில் புகைப்படம்கூட வெளியிடவில்லை. இதனால், மகனை இழந்த குடும்பத்தினர் தங்கள் மகன் உயிரோடு இருப்பதாகவே எண்ணி இருந்துள்ளனர்.

போலீசார் அனாதை பிணம் என்று கூறியதால் அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் முறையாக பிரேத பரிசோதனை செய்திருக்க வாய்ப்பில்லை. மேலும், கொலைக்கான ஆதாரங்களை சரியாக பதிவு செய்திருக்கவும் வாய்ப்பில்லை. இதனால், சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளவார்கள்.

முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள தேங்காய்த்திட்டு நிலைமையே இதுவென்றால், இன்னும் தூரமாக இருக்கும் கிராமங்களில் என்ன நடந்தாலும் போலீசார் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. இது முதலியார்பேட்டை காவல் வட்டத்தில் சட்டமற்ற தன்மை (Lawlessness) நிலவுவதையே உணர்த்துகிறது.

கொலை போன்ற வழக்குகளை காவல் ஆய்வாளர்கள் தான் விசாரிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரையில் முதலியார்பேட்டை ஆய்வாளர் திரு.ரவிக்குமார் சம்பவ இடத்திற்கே செல்லவில்லை. இதன்மூலம் அவர்
சட்டப்படி செய்ய வேண்டிய தன் கடமையிலிருந்து தவறியுள்ளார். மேலும் தன் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் வழக்கை உரிய வகையில் விசாரிக்க தடை போட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், அண்மைக் காலமாக புதுச்சேரியில் கொலைகள் பெருகி வருவது பெரும் சர்ச்சையாகி வருகிறது. இதனால், தங்கள் எல்லைக்குள் கொலை நடந்தால் உயர் அதிகாரிகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதால், முதலியார்பேட்டை போலீசார் இக்கொலையை மூடிமறைத்துள்ளனர் என்பது கூடுதல் காரணம் என்று கருதுகிறோம்.

எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் இக்கோரிக்கைளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுகிறோம்.


(அ) மேற்சொன்ன பாலா (எ) தெய்வசிகாமணி கொலை வழக்கை உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.

(ஆ) புதைக்கப்பட்ட பிணத்தைத் தோண்டி எடுத்து ஜிப்மர் மருத்துவர்கள் குழு மூலம் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

(இ) கொலையை முறையாக விசாரிக்காமல் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, கொலையை மூடிமறைத்து, கொலையாளிகளைக் காப்பாற்ற முயற்சி செய்த முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ரவிக்குமார் மற்றும் போலீசார் மீது உரிய வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அனைவரையும் காலதாமதமின்றி உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

(ஈ) தங்கள் மகன் கொலை செய்யப்பட்ட தகவல்கூட தெரியாமல், இறுதி சடங்குகள்கூட செய்ய முடியாமல், அனாதையாக புதைக்கப்பட்டதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

(உ) முதலியார்பேட்டை போலீசார் வழக்கு ஆவணங்களை அழிக்கவும், திருத்தவும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இந்த வழக்கு ஆவணங்களை ஐ.ஜி. அவர்கள் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பாதுகாக்க வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Thursday, October 11, 2007

ஈழத் தமிழர்களுக்கு மதத்தின் அடிப்படையில் உதவுவதை ஏற்க மாட்டோம் - தொல்.திருமாவளவன்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் 11-10-2007 அன்று, காலை 11.00 மணிக்கு புதுச்சேரியில், "யாத்ரி நிவாஸ்" விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஈழத் தமிழர்களுக்காக பழ.நெடுமாறன் தலைமையில் ஏற்கனவே சேகரித்த நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்றன. சேகரிக்கப்பட்ட பொருட்களைச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் கொண்டு செல்வதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

மனிதாபிமான அடிப்படையில் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வதற்கு யார் முன்வந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கும். மதத்தின் அடிப்படையில் நாங்களும் இந்து, நீங்களும் இந்து என்ற அடிப்படையில் உதவி செய்ய வருவதை ஏற்க முடியாது. இதை இங்குள்ள தமிழர்களும் ஏற்கமாட்டார்கள். ஈழத்தில் பட்டினி கிடக்கும் தமிழர்களும் எற்கமாட்டார்கள்.

(அண்மையில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் இல.கணேசன் ஈழத் தமிழர்களுகாக உணவுப் பொருட்கள், மருந்துகள் சேகரிக்கப் போவதாக அறிவித்தது இங்கு நினைவு கூரத்தக்கது).

திண்ணியத்தில் மனிதர்களை மலம் தின்ன வைத்த கொடுமையில் யூகங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது வேதனைக்குரியது. மேல்முறையீடு செய்ய வேண்டுமென்று தமிழக அரசிடம் வலியுறுத்துவோம்.

சேலம் அருகேயுள்ள கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோயிலில் தலித்துகள் நுழைவதற்கு ஜாதி இந்துக்கள் தடை விதித்துள்ளனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். வரும் 24-ஆம் நாளன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. தமிழக அரசு இதில் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்.

மரக்காணம் அருகே அனல் மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் பிரச்சினையில் தமிழக அரசு ஓர் ஆய்வுக் குழு அமைத்து மக்கள் கருத்தை அறிந்து முடிவு எடுத்தது. அதேபோல அனல் மின் நிலைய விவகாரத்திலும் ஆய்வுக் குழு அமைத்து மக்கள் கருத்தறிந்து முடிவு எடுக்க வேண்டும்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவில் எடுக்கும் முடிவுகளைப் பின்பற்றி அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அணுசக்தி ஒப்பந்தமானது இந்திய அரசைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாக இருக்க கூடாது. இந்திய இறையாண்மையைப் பாதிக்காத வகையில் ஒப்பந்தம் இருக்க வேண்டும். அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளை இந்தியா ஏற்க கூடாது. இதில் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பு சரிதான். நாடாளுமன்றத்திற்கு தீடீர் தேர்தல் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

பாண்டிச்சேரி மாநிலத்தைப் புதுச்சேரி மாநிலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதில் நகரத்தை மட்டும் பாண்டிச்சேரி என மீண்டும் அழைப்பது, புதுச்சேரி மாநிலத்தை மீண்டும் பாண்டிச்சேரி மாநிலம் என அழைக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும்.

கவிஞர் தமிழ்ஒளி நூல்களை அரசுடமையாக்க வேண்டும். அவருக்கு அரசு சிலை நிறுவ வேண்டும். தமிழ்ஒளி பிறந்த நாள் விழாவை சென்னை, புதுச்சேரி பகுதிகளில் கொண்டாட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

வாச்சாத்தி வழக்கு: தருமபுரி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு


தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தியில் போலீஸ் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு இழப்பீடு தராவிட்டால் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

1992-ஆம் ஆண்டு வாச்சாத்தி கிராமத்தில் போலீசாரும், வனத்துறையினரும் பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தினர்.

பழங்குடியினரின் வீடுகள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. பலர் படுகாயம் அடைந்தனர். பழங்குடியினப் பெண்கள் 18 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.

இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சிகள், சமுதாய இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் இதைக் கண்டித்ததோடு அத்துமீறிய போலிசார், வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரினர்.

இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிடப்பட்டது. இச்சம்பத்தை விசாரித்த சி.பி.ஐ., 155 வனத்துறையினர், 108 போலீசார், 6 வருவாய் துறையினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட 475 பேருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் இழப்பீடு ஏதும் வழங்கப்படவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி பழங்குடியினர் சங்கத்தின் தலைவர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யா, என்.பால் வசந்தகுமார் ஆகியோர் இவ்வழக்கை விசாரித்தனர். பலமுறை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, 10-10-2007 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட 75 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பலமுறை நாங்கள் சொன்னபிறகும், இழப்பீடு தொகை பழங்குடியின மக்களுக்குத் தரப்படவில்லை. இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் செயல்படும்விதம் திருப்திகரமாக இல்லை.

இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு உதவ, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் வரும் நவம்பர் 5-ஆம் நாளன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இழப்பீடு தராததற்கு சரியான காரணத்தை அவர்கள் சொல்லாவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் பட்டியலை ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும்

என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tuesday, October 09, 2007

பிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு




















மாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் "கிளிக்" செய்யவும்.


பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்பில் “முதலாவது தலித் மாநாடு” வரும் அக்டோபர் 20, 21 ஆகிய இரு நாள்கள் பிரான்சில் நடைபெற உள்ளது.

20-10-2007 முதல் நாளன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 வரை நடைபெறும் கருத்தரங்கில், வரவேற்புரையும் அறிமுகமும் தேவதாசன்.

ஜோவே போல் அரங்கில் ‘தீண்டாமை ஒடுக்குமுறையும் எதிர்ப்புப் போராட்டங்களும்’ - யோகரட்ணம், பரராஜசிங்கம் (ஜெர்மனி), எம்.சி.சுப்பிரமணியம் அரங்கில் ‘தமிழ்த் தேசியமும் தலித்தியமும்’ – அருந்ததி, இராகவன் (இலண்டன்), ‘சர்வதேசப் பார்வையில் சாதியம்’ – அசுரா, புதிய மாதவி (இந்தியா), அரவிந்து, ‘இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தலித்தியம்’ – கற்சுறா (கனடா), தேவா (ஜெர்மனி), புதுமைலோலன் (சுவிஸ்) ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

21-10-2007 இரண்டாம் நாளன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கி மதியம் 2.30 வரை நடைபெறும் கருத்தரங்கில் முதல் நாள் அமர்வுகள் பற்றிய விமர்சனங்கள், தலித் அரசியலின் எதிர்காலம் குறித்துக் கலந்துரையாடல். இவ்வரங்கை நெறிப்படுத்துதல் விஜி.

எஸ்.ரி.என். நாகரட்ணம் அரங்கில் ‘தலித்துகளின் பொருளாதார மேம்பாடு’ – பகவத்சிங் (ஜெர்மனி), சோமசுந்தரம் (ஜெர்மனி), நடராஜா (ஆஸ்திரேலியா), டேனியல் அரங்கு: இலங்கை அரசியல் தீர்வுத் திட்டமும் தலித்துகளும் – எம்.ஆர்.ஸ்டாலின், சிவகுருநாதன் (கனடா), பஷீர் (இலண்டன்) ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

மதியம் 2.00 மணிக்கு கலை நிகழ்ச்சி. முடிவில் சுந்தரலிங்கம் நன்றியுரையாற்ற மாநாடு நிறைவு பெறுகிறது.

உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இம்மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாநாட்டிற்கு பிரான்சில் செயல்பட்டு வரும்
அய்ரோப்பா பெரியார் விழிப்புணர்வு இயக்கம் தனது வாழ்த்துக்களையும், தார்மீக ஆதரவையும் தெரிவித்துள்ளது.

நிகழிடம்:
SALLE RENCONTRE, Rue Jean Froncois Chalgrin, 95140 Garges Les Gonesse, France.

தொடர்புகளுக்கு:
E-mail: vadu.world@hotmail.fr
Telephone: 0661803690, 0660368804.