Showing posts with label சமூக நீதி. Show all posts
Showing posts with label சமூக நீதி. Show all posts

Wednesday, November 17, 2010

புதுச்சேரியில் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு பேரணி!

பழங்குடியின மக்கள் பேரணி...
புதுச்சேரியில் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பினர், வேலைவாய்ப்பில் முறையான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10.11.2010  புதன்கிழமையன்று பேரணி நடத்தினர்.

பேரணி சுதேசி பஞ்சாலை அருகிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சட்டப் பேரவையை அடைந்தது. பின்னர் கோரிக்கை மனுவை, சட்டப் பேரவையில் உள்ள சமூக நலத்துறை அமைச்சர் அலுவலகத்தில், அமைச்சர் மு.கந்தசாமி அவர்களிடம் அளித்தனர்.

மனு விவரம்: புதுச்சேரியிலுள்ள பழங்குடியினரை அட்டவணை பழங்குடி என அங்கீரிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் என வரையறை செய்துள்ள நிலையில், வேலைவாய்ப்பில் முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் அவர்களுக்கான தனி நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினருக்கு இலவச மனைப்பட்டாவுடன் கூடிய தொகுப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும். அவர்கள் வாழும் பகுதியில் குடிநீர், மின்வசதி மற்றும் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் கந்தசாமி மனுவை பெற்றுக்கொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். புதுச்சேரி மாநில பழங்குடியின கூட்டமைப்பு தலைவர் கே.ராம்குமார் தலைமைத் தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் சுந்தர், ஏ.மனோகரன், எஸ்.புருஷோத்தமன், எம்.ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு தலைவர் பொன்னுரங்கம், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சியின் பொதுச்செயலர் உ.முத்து, புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவநர் சதீஷ் (எ) சாமிநாதன், கிறிஸ்துவர் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

Tuesday, April 13, 2010

பழங்குடியின மக்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு அரசாணை: புதுச்சேரி அரசுக்கு நன்றி!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 13.04.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பழங்குடியின மக்களை ‘பிற்படுத்தப்பட்ட பழங்குடி’ என வகைப்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டுள்ள புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனதார பாராட்டுகிறோம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்திய பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், பழங்குடியின மக்களுக்கு ‘அட்டவணை பழங்குடி’ (Scheduled Tribe - ST) என அங்கீகாரம் பெறுவதற்கு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி அம்மக்களுக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட 1989-ம் ஆண்டு முதல் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் கிடைக்கப் தொடர்ந்துப் போராடியதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

 பழங்குடியின மக்களுக்காக அர்ப்பணிப்போடு தொடர் போராட்டம் நடத்தி, வெற்றி கண்டுள்ள பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு தலைவர் திரு. ராம்குமார் அவர்களுக்கு எங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 இதேபோல், புதுச்சேரி அரசு முஸ்லிம்களுக்கும், மீனவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு அளித்து அரசாணையை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வெளியிட வேண்டும் என் வலியுறுத்துகிறோம். 

Friday, April 02, 2010

சென்னை கவின் கலைக் கல்லூரியில் சாதி வெறி: உண்மை அறியும் குழு அறிக்கை!

சென்னை நகரின் பழம் பெருமை மிக்க கவின் கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராடுவது, அதைத் தொடர்ந்து காலவரையறையின்றி அக்கல்லூரி மூடப்பட்டுள்ளது ஆகியவற்றைக் கண்டு கவலையுற்ற சமூக அக்கறை மிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கீழக்கண்ட உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்தனர்.

உறுப்பினர்கள் :
  
1) பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்.
2) முனைவர் பா. சிவக்குமார், முன்னாள் முதல்வர், அரசு கல்லூரி.
3) பேரா.மு. திருமாவளவன், முன்னைப் பொறுப்பு முதல்வர், அரசு கல்லூரி.
4) கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.
5) அயன்புரம் இராசேந்திரன், பொறியாளர், தென்னிந்திய ரயில்வே.
6) குட்டி ரேவதி, கவிஞர்.
7) உதயம் மனோகரன், வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
8) முருகன், வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
9) சுகுமாரன், தொழிலாளர் ஒற்றுமை முன்னணி, சென்னை.
10) வெங்கட், ஆய்வு மாணவர், எம்.ஐ.டி.எஸ், சென்னை.

இக்குழுவினர் நடந்த நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிதல், கல்லூரி சுமுகமாக இயங்குவதற்குரிய பரிந்துரைகளை பொறுப்பானவர்களுக்குச் செய்தல் ஆகிய நோக்கங்களுடன் சென்ற ஏப்ரல் 30, 31 தினங்களில் போராடும் மாணவர்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், தற்போது பொறுப்பு முதல்வராக உள்ள திரு வ. ஜெயபால் ஆகியோரைச் சந்தித்தனர். கலை பண்பாட்டுத் துறைச் செயலர் திரு. வே. இறையன்பு இ.ஆ.ப. மற்றும் கலை பண்பாட்டுத் துறை ஆணையர் திரு. மணி, காவல்துறை உதவி ஆணையர் திரு. அசோக்குமார், முன்னாள் பொறுப்பு முதல்வர் திரு மனோகர் நடராஜ் ஆகியோருடன் விரிவாக உரையாடி தேவையான விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பழமை வாய்ந்த இக்கவின் கலைக் கல்லூரி தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் இவ் அரசு கல்லூரிகளில் ஒன்று. மற்றது கும்பகோணத்தில் செயல்படுகிறது. நான்காண்டு பட்டப்படிப்பு (பி.எஃப்.ஏ.) மற்றும் இரண்டாண்டு பட்டமேற்படிப்பு (எம்.எஃப்.ஏ) ஆகிய பட்டப் படிப்புகள் இங்கு சொல்லித் தரப்படுகின்றன. சுமார் 620 மாணவர்கள் இங்கு பயில்கின்றனர். பெரும்பாலும் ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களே இதில் பயில்கின்றனர். சுமார் 80 சதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். பிற அரசு கலைக் கல்லூரிகள், மருத்துவ / பொறியியல் கல்லூரிகளுக்குத் தரப்படுகிற எந்தவித முக்கியத்துவம் மற்றும் அக்கறை எதுவும் காட்டப்படாமல் இரண்டாம் பட்சமாகவே இக்கல்லூரிகளை தமிழக அரசு நீண்ட நாட்களாக அணுகிச் செயல்பட்டு வருகிறது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர், எமது குழு உறுப்பினர் முனைவர் சிவக்குமார் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக இருந்தபோதுதான், மாணவர் போராட்டம் ஒன்றின் பின்னணியில், இக் கல்லூரியில் வழங்கப்பட்டு வந்த சான்றிதழ் ‘பட்டயம்’ என்கிற நிலையிலிருந்து ‘பட்டம்’ என்கிற நிலைக்கு மாற்றப்பட்டது. இன்று வரை AICTE அல்லது UGC ஏற்பு எதுவும் இக்கல்லூரிகளுக்கு உள்ளதாகத் தெரியவில்லை. இக்கல்லூரியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி, பணியமர்த்தல் முதலானவற்றில் அகமதாபாத்திலுள்ள NID நிறுவனத்தின் தரங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை.

மாணவர்களிடம் பேசியவற்றிலிருந்தும், நாங்கள் விசாரித்து அறிந்தவற்றிலிருந்தும் வெளிப்படையாகத் தெரிகிற வேறு சில குறைபாடுகள்:

1. பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாயினும் மாணவ, மாணவியர்க்கு விடுதிகள் ஏதுமில்லை. தரமணியில் இருந்த விடுதி இன்று மூடப்பட்டு புத்தகக் கிடங்காக மாற்றப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்று அறைகள் மட்டும் திறந்து விடப்பட்ட போதும் இப்போது அவையும் செயல்படுவதில்லை. மாணவர்கள் விடுதியில் இல்லாததால் அவர்கள் வெளியூர்களைச் சேர்நத்வர்களாயினும் உள்ளூர் மாணவர்களாகவே (day scholars) கருதப்படுவதால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான முழு உதவித் தொகையையும் பெற இயலுவதில்லை. மாணவிகளில் சிலருக்கு இசைக் கல்லூரி விடுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வசதியற்ற ஒரு மாணவர்க் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி கல்லூரிக்கு வந்து செல்வதைக் கேள்விப்பட்டு எமது குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

2. மிகப் பெரிய அளவில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. சுமார் 25 பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தப் பணியமர்த்தலில் சீரான அளவுகோல்கள் ஏதும் கடைபிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. முதல்வர் மற்றும் நிர்வாகத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே தேர்வுகள் மற்றும் பணி நீக்கங்கள் செய்யப்படுவதாகத் தெரிகிறது. துகிலியல், சுடுமண்துறை, காட்சித் தொடர்பு வடிவமைப்பு, சிற்பத்துறை, வண்ணக்கலை, பதிப்போவியத்துறை எனப் பல துறைகள் உள்ளபோதும் குறிப்பிட்ட துறையில் பயிற்சி பெறாத ஆசிரியர்களை அத்துறைக்கு நியமிக்கும் போக்கு உள்ளது.

3. கவின் கலைப் பயிற்சி என்பதால் வெறுமனே பாடப் புத்தகங்கள், வகுப்பறை என்பதாகவன்றி சூளை, க்ளெய்ன், ஜக்கார்ட் மெஷின் வெல்டிங் மற்றும் டிரில்லிங் மெஷின் ஆகியவை தவிர களிமண், பாக்ஸ் போர்ட், ஷீட்மெடல், சிங்க் ப்ளேட் ஆகிய பொருட்களும் தேவைப்படுகின்றன. இந்த எந்திரங்கள் பல இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் பயன்படாமல் உள்ளன. தவிரவும் போதிய அளவு கச்சாப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஒப்பந்த ‘ஆர்டர்’களை எடுத்துப் பயன்பெறும் சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கான இவற்றைச் சொந்த லாபத்திற்குப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. வேண்டிய மாணவர்களுக்குப் கொடுப்பது வேண்டாதவர்களைப் புறக்கணிப்பது முதலான குற்றச்சாட்டுகளும் உண்டு.

4. ஆசிரியர் பற்றாக்குறை, எந்திரங்கள் செயல்பாடின்மை, கச்சாப் பொருடகள் பற்றாக்குறை ஆகியவற்றின் விளைவாக வகுப்புகள் ஒழுங்காக நடைபெறுவதில்லை. ஆசிரியர்கள் சொந்த ஒப்பந்த வேலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாலும் வகுப்புகள் சரியாக நடைபெறுவதில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

5. கல்லூரிக்குப் போதிய ‘டாய்லட்’ முதலிய வசதிகள் கிடையாது. இரவு நேரத்தில் கல்லூரி வளாகத்தில் தங்கி வேலை செய்ய மாணவர்கள் அனுமதிக்கப்படுவதாக அறிகிறோம். ஆனால், அவர்களை மேற்பார்வையிட ஆசிரியர்கள் யாருக்கும் பணி ஒதுக்கப்படுவதில்லை.

6. இரு கல்லூரிகளிலும் உள்ள ஆசிரியர்களின் முறைப்படுத்தப்பட்ட பணி மூப்புப் பட்டியல் ஏதும் தயாரிககப்பட்டுள்ளதாகவும் தெரியவில்லை. இன்று நேர்ந்துள்ள சிக்கலுக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.

7. மாணவர்கள் சிறப்பாக ஏதும் திட்டங்கள் (projects) மேற்கொண்டு செயல்படும்போது அவர்களுக்கான கச்சாப்பொருள் மற்றும் பிற உதவிகள் செய்வதற்கு முறையான நெறிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதாகவும் தெரியவில்லை. இதுவும் இன்று எழுந்துள்ள சிக்கலுக்குக் காரணமாக உள்ளது.

மாணவர்கள் முன் வைக்கக் கூடிய மேலும் சில குற்றச்சாட்டுகளாவன:

1. இக்கல்லூரியில் நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்கிற பயிற்சி வகுப்புளை சில ஆசிரியர்கள் நடத்துகின்றனர். இவ்வாறு நடப்பதை எமது குழுவினரும் உறுதி செய்து கொண்டனர். தற்போது பிரச்சினைக்குக் காரணமாகியுள்ள ஆசிரியர் திரு. மனோகர் நடராஜ் இத்தகைய வகுப்பை நடத்துவதாகவும், இக்கல்லூரியில் சேர வேண்டுமானால் அவ் வகுப்பில் படிப்பது மறைமுகமாகக் கட்டாயமாக்கப்படுகிறது எனவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

2. முறையான வருகைப் பதிவு செய்வதில்லை. வருகைப் பதிவேடு ஒழுங்காகப் பராமரிக்கப்படுவதில்லை. மாணவர்களைப் பழிவாங்க இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

3. வகுப்புகளை ஒழுங்காக நடத்தாமலும், பயிற்சிகளே அளிக்கப்படாமலும் மாணவர்கள் தேர்வுக்கு அனுப்பப்படுகின்றனர். பிற படிப்புகளைப்போல ஏதோ புத்தகங்களைப் படித்துத் தேர்வு எழுதுவதுபோல இங்கு சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து முறையிட்டால், ‘‘நீங்கள் தேர்வுகளுக்கு வாருங்கள். நாங்கள் உங்களுக்கு அதிக மதிப்பெண்களுடன் ‘பாஸ் போடுகிறோம்’ எனச் சொல்வதாகவும் மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிப்ரவரி 26 தேதிய நிகழ்வு

இந்தப் பின்னணியில் நடைபெற்ற ஒரு நிகழவே இன்றைய பிரச்சினைகளுக்கும், கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டுள்ளமைக்கும் காரணமாகியுள்ளது.

சசிகுமார் என்பவர் முதலாமாண்டு பட்ட மேற்படிப்பு மாணவர். தமிழக அரசு நடத்தவுள்ள செம்மொழி மாநாட்டில் 1330 குறள்களையும் சசிகுமார் சிற்பங்களாக ஆக்கிக் காட்சிப்படுத்தும் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளார். இனவெறியர்களால் யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டதை நினைவிற் கொண்டு, தீயாற் சுட இயலாதவாறு தமிழ் இலக்கியங்களைச் சுடுமண் சிற்பங்களாக ஆக்குதல் என்பதான ஒரு கருத்தமைவுடன் இந்தப் பணியைத் துவங்கியதாக அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

இப்படியான ஒரு திட்டத்திற்கு எவ்வித முன் அனுமதியும் அவர் கல்லூரி நிர்வாகத்திடமோ இல்லை செம்மொழி மாநாட்டுக் குழுவிடமோ அனுமதி பெறவில்லை என்கிறார் கலை பண்பாட்டுத் துணை ஆணையர் மணி. ஆனாலும், பொறுப்பு முதல்வர் மனோகர் நடராஜிடம் தான் வாய்மொழி அனுமதி பெற்றதாக சசிகுமார் கூறுகிறார்.

ஏற்கனவே இருந்த முதல்வர் ஓய்வு பெற்றதை ஒட்டி இந்தக் கல்வி ஆண்டு தொடக்கத்தில் மனோகர் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டள்ளார். இவரைக் காட்டிலும் பணி மூப்புடையவர்கள் இருந்த போதிலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இவர் முதல்வராக்கப்பட்டுள்ளதாக போராடுகிற மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பிற்படுத்தப்பட்ட சாதி ஒன்றைச் சேர்ந்த இவர், தலித் மாணவர்களை இழிவாக நடத்துகிற வழக்கம் கொண்டவர் எனவும் குற்றச்சாட்டுகள் உண்டு. 2004-ம் ஆண்டில் இவர் இவ்வாறு ஒரு தலித் மாணவரை சாதி, குறிப்பிட்டுப் பேசியதை ஒட்டி எஸ்.எப்.ஐ. மாணவர்கள் போராடியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.கே.மகேந்திரன் இது குறித்து சட்டமன்றத்தில் பேசி உள்ளதையும் நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். இதை ஒட்டி மனோகரன் குடந்தைக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு, பின் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இங்கு மீண்டும் இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.

இவர் பணி ஏற்றவுடன் குமார், நடராசன், சுரேந்திரன், சிங்காரம் ஆகிய நான்கு பகுதி நேர ஆசிரியர்களும் நிதி பற்றாக்குறையைக் காட்டி பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். இந்த நான்கு ஆசிரியர்களும் தலித்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆசிரியரல்லாத பணியாளர்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவர் குடந்தைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பின் அந்த ஆணை ரத்து செய்யப்பட்டது எனவும் பாதிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர். எனினும் தற்காலிக பொறுப்பு முதல்வர் ஜெயபாலிடம் இது பற்றிக் கேட்டபோது அத்தகைய உள்நோக்கம் ஏதுமில்லை. நிதிப் பற்றாக்குறைதான் பணி நீக்கத்திற்குக் காரணம். சுரேந்திரன் எம்.எஃப்.ஏ. சேர்ந்ததால் தொடர்ந்து அவர் பகுதி நேர ஆசிரியராக இருக்க இயலாது. ஊழியர்களை இடமாற்றம் செய்ய நேர்ந்தது நிர்வாகக் காரணங்களுக்காகத் தான், பின் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதை ரத்து செய்தோம் என்றார்.

இப்படியான ஒரு சூழலில்தான் சசிகுமார் தனது குறள் சுடுமண் சிற்பப் பணியைத் தொடங்குகிறார். தேவையான களிமண்ணை மனோகரனின் ஒப்புதலுடன் கொண்டுவந்து கல்லூரி வளாகத்தில் இறக்குகிறார். தான் இதற்கு ஒப்புதல் அளிக்க இயலாது எனவும் உரிய தொகையை உடனடியாக வழங்க இயலாது எனவும் மனோகரன் கூறியுள்ளார். வண்டிக் கூலியை உடனடியாகக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த சசிகுமார் மாணவர்களிடம் ரூ. 5, 10 எனச் சேகரித்து வண்டிக்காரரை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில் சசிகுமாரின் நடவடிக்கைகள் சரியில்லை என ‘டிசம்பர் 12, 2010’ என்கிற தேதியிட்டு எச்சரிக்கைக் கடிதம் ஒன்று அவர் வீட்டிற்கு கல்லூரியிலிருந்து அனுப்பப்படுகிறது. தொலைபேசியிலும் பெற்றோர்கள் எச்சரிக்கப்படுகின்றனர். கலக்கமடைந்த பெற்றோர்கள் சசிகுமாரைத் திட்டியுள்ளனர்.

மனரீதியாகப் பாதிக்கப்பட்ட சசிகுமார் சென்ற பிப்ரவரி 26 அன்று வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வரது கார் கண்ணாடியை (wind screen) உடைத்துவிட்டு ஓடியுள்ளார். இந்தத் தவறை அவர் ஏற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

எனினும் இது குறித்து தற்போதைய பொறுப்பு முதல்வர் கூறுவது : ‘‘பிப்ரவரி 16-ந் தேதி அன்றே அம் மாணவன் கல்லுரிக் கட்டிடத்தில் ஒரு கண்ணாடியை உடைத்தார். நாங்கள் புகார் ஏதும் செய்யவில்லை. 19-ம் தேதி அன்று களிமண்ணுக்காக ரூ.1600 அவருக்கு அளிக்கப்பட்டுவிட்டது. அடுத்த நாள் தேர்வுக் கட்டணம் கட்ட கடைசி நாள் என அம்மாணவர் கூறியதை ஒட்டி அன்று அப்பணத்தைத் தந்தோம். எனினும் 26-ந் தேதி அம்மாணவன் கார் கண்ணாடியை உடைத்தான்.

பணம் கொடுக்கப்பட்ட பின்னும் ஏன் அப்படி நடந்து கொண்டாய் என நாங்கள் வினவியபோது, ‘செய்த குறள் பலகைகளைச் சுடுவதற்கு சூளை இல்லை என்பதால் சொந்தமாக ரூ.4200 செலவு செய்து சூளை ஒன்று கட்டினேன். அந்தப் பணம் தரப்படவில்லை. தவிரவும் வீட்டுக்கு போனில் மிரட்டியதால் ஏற்பட்ட மனப் பாதிப்பினால் அப்படி நேர்ந்துவிட்டது’ என்று பதிலளித்தார்.

ஆசிரியர் மனோகரன் பெரியமேடு காவல் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் ஒன்றை அளித்தார். கூடவே அவரைத் தூண்டிவிட்டதாக 2-ம் ஆண்டு பட்ட மேற்படிப்பு பயிலும் எஸ்வந்திரன் நான்காம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் கமலஹாசன் என்கிற இரு தலித் மாணவர்கள் மீதும் புகாரளித்தார்.

காவல்துறை உதவி ஆணையர் அசோக்குமார், ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் இக்குற்றச்சாட்டை விசாரித்துள்ளனர். தற்போது வேறொரு வழக்கில் கொலையாளிக்கு உதவியதாக தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் முருசேன் மனோகரனது சாதியைச் சேர்நதவர் எனச் சொல்லப்படுகிறது. எஸ்வந்திரனின் தம்பி ஆனந்தகுமார் அதே கல்லூரியில் நான்காமாண்டு பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டுள்ளார். அவரைப் பிடித்து சாதி சொல்லித் திட்டி அடித்த முருசேன் அவரைக் கொண்டே அவரது அண்ணன் எஸ்வந்திரனை இரவு 1.30 மணி அளவில் கைது செய்து இருவரையும் கடுமையாக அடித்து சாதி குறிப்பிட்டு இழிவாகப் பேசி இரவு முழுவதும் சங்கிலியால் பிணைத்து காவல் நிலையத்தில் வைத்துள்ளார். ‘‘தேவர் காரோட கண்ணாடியை உடைத்தவன்’’ என முருகேசன் இவர்களைப் பற்றி மற்றவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாங்கள் காவல்துறை உதவி ஆணையர் அசோக்குமார் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியபொழுது, முதல்வரின் காரை கொடூரமாக தாக்கியது குறித்து அளித்த புகாரில் எஸ்வந்த், கமலஹாசன் ஆகியோர் தூண்டிவிட்டதாகக் கூறப்பட்டிருந்ததாலேயே அவர்களைத் தேட நேர்ந்தது எனவும் யாரையும் சங்கிலியால் பிணைத்து வைப்பது தமக்கு வழக்கமில்லை எனவும் மாணவர்களின் குற்றச்சாட்டை மறுத்தார்.

அடுத்த நாள் காலை 11.00 மணிக்கு ‘‘கார் கண்ணணடியை உடைத்தவரைக் காட்டிக் கொடுத்தேன்’’ என எழுதி வாங்கிக் கொண்டு ஆனந்தகுமாரை விடுதலை செய்துள்ளனர். எஸ்வந்திரன் ‘ரிமான்ட்’ செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ளார். சசிகுமார், கமலஹாசன் ஆகிய இருவரும் முன் ஜாமினில் வெளி வந்துள்ளனர்.

எஸ்வந்தரனும், ஆனந்தகுமாரும் பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதை நாங்கள் நேரில் கண்டோம். எஸ்வந்திரன் தமிழக அளவில் ஒரு முக்கியமான சிற்பக் கலைஞர். அவரும் கமலஹாசனும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் குணம் உள்ளவர்கள் என்பதாலும், சில போராட்டங்களை ஏற்கனவே முன்னெடுத்திருந்ததால் மனோகரின் கோபத்திற்கு ஆளாகியிருந்துள்ளனர். மனோகரன் கல்லூரி வளாகத்திலிருந்த ஒரு சிலையை மையமாக வைத்து ஒரு இந்து கோயிலை கட்டியதற்காகத் தான் எதிர்ப்பு தெரிவித்ததற்காகவே தன் பெயரை குற்றச்சாட்டில் சேர்த்தார் என்கிறார் கமலஹாசன். வளாகத்திற்குள் பழைய கிணறு ஒன்றை தூர்க்கும் முயற்சியையும் இவர் எதிர்த்துள்ளார் இதுவும் மனோகரின் கோபத்திற்கு காரணமாகியுள்ளது. தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டவுடன் ‘‘பறப் பசங்களா’’ எனச் சொல்லி மனோகர் கடுமையாகப் பேசினார் என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எஸ்வந்திரன் இக்கல்லூரி மாணவராயினும் சில சிற்பப் பணிகளை மேற்கொண்டுள்ளதால் தற்போதைய பிரச்சினைகளில் தொடர்பில்லாது உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நாங்கள் மனோகரிடம் கேட்டபோது ஒரு சதம் கூட இதில் உண்மையில்லை என மறுத்தார். தனிப் பயிற்சி நடத்துவது பற்றிக் கேட்டபோது பதவி உயர்வு பெற்றபின் கடந்த 2 ஆண்டுகளாக நடத்துவதில்லை எனவும், எனினும் தனது மாணவர்கள் சிலர் அவ்வாறு நடத்துகின்றனர் எனவும் கூறினார்.

வழக்குரைஞர்கள் மற்றும் சமூக நீதியில் அக்கறையுள்ள சிலரின் ஆலோசனைகளின்படி இவ்வாறு சாதி சொல்லித் தாக்கியதற்காகவும் பொய் வழக்கு போட்டதற்காகவும் புகார் ஒன்றை பாதிக்கப்பட்ட மாணவர்கள் காவல்துறைக்குத் தந்துள்ளனர். எனினும் அவை ஏற்றுக் கொள்ளப்படாததோடு எந்த நடவடிக்கையும் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்த உதவி ஆணையர் அசோக்குமார் அவர்களிடம் கேட்டபோது ஆனந்தகுமார் முதலில் கொடுத்த மனுவில் அதுகுறித்துப் பேசியது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை எனவும் பிறகு அளித்த மனுவிலேயே அதைக் கூறியுள்ளதாகவும், இந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முகாந்தர(prama fecie)சான்றுகள் இல்லை எனவும் கூறினார். மாணவர்கள் கதவை தாழிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியபோது காவல்துறை மிகவும் மனிதாபிமானத்தோடு நடந்து கொணடதாகவும் குறிப்பிட்டார்.

கல்விப் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் திரும்பும்வரை காத்திருந்த மாணவர்கள் சென்ற மார்ச் 22 அன்று முதல் வழக்குகளைத் திரும்பப் பெறுதல், மனோகர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் முதலான கோரிக்கைகளைமுன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினர். இதற்கிடையில் மனோகர் பொறுப்பு முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கலைப் பண்பாட்டுத் துறை உதவி இயக்குனர் ஜெயபால் பொறுப்பு முதல்வராக்கப்பட்டுள்ளார். இவர் நுண்கலைத் துறையைச் சார்ந்தவரல்ல. நிர்வாகத் துறையைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கியவுடன் பெரிய அளவில் காவல்துறையினர் கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். இரவில் மாணவிகள் அனுப்பப்பட்டு கதவு பூட்டப்பட்டது. பேச்சு வார்த்தையில் முடிவேதும் ஏற்படவில்லை 23-ந் தேதி மாலை 6 மணி வாக்கில் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

போராட்டம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு நேரு ஸ்டேடியம் அருகிலுள்ள திடல் ஒன்றுக்கு அழைத்தச் செல்லப்பட்டு இரவு 9 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
தற்போது கல்லூரி மூடிக் கிடக்கிறது.

எமது பார்வைகள்

1. கலை பண்பாட்டுத்துறைச் செயலரும் புகழ்பெற்ற எழுத்தாளரும்தான் வே. இறையன்பு அவர்களைத் தொடர்புக் கொண்டு பேசியபொழுத தான் பதவி ஏற்றபின் 1.86 கோடி ரூபாய் இக்கல்லூரிக்கென ஒதுக்கி ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பல்வேறு குறைபாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருவதாகக் கூறினார். க்ளெய்ன், மெடல் கேஸ்டிங், கம்ப்யூட்டர்கள், சூளை முதலியன தொடர்பாக வேலைகள் நடந்துள்ளதைப் பொறுப்பு முதல்வரும் குறிப்பிட்டார். மாணவர்கள் தன் கருத்துகளை ஏற்கவில்லை எனவும், இது முதல்வர் கருணாநிதி அவர்களின் துறையைச் சார்ந்ததால் விசாரணை மேற்கொள்ள ஒரு நபர் கமிஷன் ஒன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறினார். கல்லூரியைத் திறப்பது தாமதமாகக் கூடாது என நாங்கள் கேட்டுக் கொண்டபோது சற்று நிலைமை சீரானவுடன் கல்லூரியைத் திறப்பதில் தடையில்லை என்றார். மிகவும் விரிவாக எல்லாவற்றையும் விளக்கிக் கூறினார்.

2. பொறுப்பு முதல்வரும், ஆணையர் திரு மணியும்கூட எங்களிடம் மிகப் பொறுமையாக நாங்கள் முன் வைத்த ஐயங்களுக்கெல்லாம் விளக்கமளித்தனர். எனினும் சில ஐயங்களுக்கு உரிய விளக்கங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.

அவை:

(i) பொதுவாக அரசுத் துறைகளில் பணி மூப்பு அடிப்படையிலேயே பொறுப்புகள் அளிக்கப்படும். பணி மூப்புடைய வேறு சிலர் இருக்கையில் ஏன் மனோகருக்குப் பொறுப்பு முதல்வர் பதவி அளிக்கப்பட்டது? மற்றவர்கள் மீது புகார்கள் இருந்தன என்றார் ஜெயபால். மனோகர் மீதும் புகார்கள் இருந்து சட்டமன்றம் வரை அது பேசப்பட்டது குறித்து பதிலில்லை.

(ii) எந்த அடிப்படையில் ஒரு சில பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் பணியில் தொடர அனுமதிக்கப்படவில்லை என்பதும் தெளிவாகவில்லை. சுரேந்திரன் என்பவர் எம்.எஃப்.ஐ. சேர்ந்துவிட்டதால் பணியில் தொடர இயலாது என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எம்.எஃப்.ஐயில் சேரவே இல்லை.

(iii) மனோகர் சாதி சொல்லித் திட்டியது, தனிப் பயிற்சி நடத்துவது குறித்து எதுவும் தமக்குத் தெரியாது என்று நிர்வாகத் தரப்பில் கூறுப்பட்டது.

(iv) விடுதி மூடப்பட்டதற்குக் காரணமாக மாணவர்களின் நடத்தை சரியில்லை எனக் கூறப்பட்டது. தவறுகள் இல்லாமல் கண்காணிக்கப்படுதல், முறையான வார்டன் ஒருவரை நியமித்தல் - முதல்வர் என்கிற வகையில்தான் பிரச்சினைகள் சமாளிக்கபட வேண்டுமே ஒழிய அதற்காக விடுதியையே மூடுவது எப்படி?

3. மாணவர் சசிகுமார், தான் முதல்வரின் கார் கண்£டியை உடைத்ததை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், ஆசிரியர்களும் நிர்வாகமும்தான் எந்தத் தவறையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எமது குழுவில் மூவர் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு கல்லூரிகளில் முதல்வர் மற்றும் பேராசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். கல்லுரிக் கதவுகளை உடைத்தால், ஆசிரியர்களைத் தாக்குதல், ஆசிரியர்களில் வாகனங்களை உடைத்தல், மாணவர்களுக்கிடையே மோதல் முதலான பல சம்பவங்களை நாங்கள் சந்தித்துள்ளோம். மாணவர்களின் தவறுகளையும், குற்றங்களையும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை போல அணுகுதல் அவசியம். பொருளியல் ரீதியாகப் பார்த்தால் ஆசிரியருக்கு ஏற்பட்டது கார் கண்ணாடி சேதமானது மட்டுமே. வழக்கு தொடர்ந்து தண்டிக்கப்பட்டால் அந்த மாணவனின் வாழ்வே பாழாகிவிடும் என்கிற உணர்வு ஆசிரியர்களுக்கு வேண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக கல்லூரி நிர்வாகக்குழு, ஆசிரியர்கள் கூட்டம் முதலியவற்றைக் கூட்டி விவாதித்து, அம் மாணவனை தற்காலிக நீக்கம் செய்து, விசாரணைக்குழு அமைத்து, குற்றத்திற்குப் பொருத்தமான அபராதம் முதலான தண்டனை அளித்து, எச்சரிக்கை செய்து பிரச்சினையை முடிப்பதே வழக்கம். இங்கோ உடனடியாக போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட குரோதத்துடன் ஆசிரியர் மாணவர்களைச் சாதி சொல்லித் திட்டியுள்ளார். தொடர்பில்லாத இரு தலித் மாணவர்களையும் புகாரில் இணைத்துள்ளார். அடுத்து நான்கு நாட்கள் கழித்தே (மார்ச் 1) இது தொடர்பாககக் கல்லூரியில் கூடி விவாதிக்கப்பட்டுள்ளது. முதல்வரும் நிர்வாகமும் பொறுப்புடன் நடந்து கொண்டிருந்தால் இந்த அளவிற்குப் பிரச்சினை முற்றியிருக்காது.

4. மாணவர்கள் போராடுவதை ஒழுக்கக் குறைவாகக் கருத வேண்டியதில்லை. போராட்ட காலங்களில் பேசப்படும் சொற்களையும் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனால், அத்தகைய போக்கு நிர்வாகத்திடம் உள்ளது.

5. சசிகுமார் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம் இது போன்ற மாணவ முயற்சிகள் குறித்த ஒரே சீரான அணுகுமுறை இல்லாததே காரணம்.

எமது பரிந்துரைகள்

1. அகமதாபாத்திலுள்ள NID (தேசிய வரைகலை நிறுவனம்) போல பெருமைமிகு நிறுவனமாக வளர்ந்திருக்க வேண்டிய கல்லூரி இது. மாற்றாந்தாய் அணுகல் முறையுடன் அரசு நடந்து கொண்டு வந்துள்ளதே இன்றைய பிரச்சினைகளுக்குக் காரணம். கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளில் அக்ககறையுள்ள முதல்வர் கலைஞர் மற்றும் நாடறிந்த எழுத்தாளரும் நிர்வாகியுமான இறையன்பு ஆகியோரின் துறையைச் சார்ந்த இந் நிறுவனம் போதிய நிதி ஒதுக்கீடுச் செய்யப்பட்டு, ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைகள் நீக்கப்பட்டு இந்திய அளவில் தரமான ஒரு நுண்கலைப் பல்கலைக் கழகமாக மாற்றப்பட வேண்டும்.

2. NID முதலான நிறுவனங்களின் தரநிர்ணயம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, இருக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி வரன்முறைப் படுத்தப்பட்டு, எல்லோருக்கும் ழிமிஞி ஆசிரியர்களுக்குச் சமமான ஊதியம் முதலியன வழங்கப்பட வேண்டும்.

3. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி மாணவர் விடுதி திறக்கப்பட வேண்டும். கல்லூரிக்குள் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

4. மூடிக்கிடக்கும் கல்லூரி உடனடியாகத் திறக்கப்பட வேண்டும்.

5. பிப்ரவரி 26ந்தேதி நிகழ்ச்சி தொடர்பாக மாணவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படவேண்டும்.

6. கண்ணாடி உடைப்பில் தொடர்பில்லாத தலித் மாணவர்களைச் சாதி சொல்லித் திட்டி, சங்கிலியால் பிணைத்து அடித்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் மீதான மாணவர்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட வேண்டும். கல்லூரி நிர்வாகம் இதற்கு ஆவன செய்ய வேண்டும்.

7. சமீபத்திய பிரச்சினைகள் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் ஒன்று நியமிக்கப்பட உள்ளதை வரவேற்கிறோம். அந்த ஆணையத்தின் விசாரணை எல்லை கீழக்கண்டவற்றை உள்ளடக்க வேண்டும்.

(i)26-ந் தேதி நிகழ்வை நோக்கிப் படிப்படியாக இட்டுச் சென்ற சூழல் அடையாளம் காணப்படுதல்.

(ii) பணி மூப்பு புறக்கணிக்கப்பட்ட மனோகர் பொறுப்பு முதல்வராக்கப்படுதலின் பின்னணி.

(iii) கண்ணாடி உடைப்பில் தொடர்பில்லாத மாணவர்கள் மீது புகார் சொல்லப்பட்டது மற்றும் அவர்கள் இத்தனை மூர்க்கமாக நடத்தப்பட்டது ஆகியவற்றிற்குப் பின்புலம் ஏதும் இருந்ததா எனக் காணுதல்.

(iv) மனோகர் மீது 2004-ல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், தொடர்ந்து அவர் அத்தகைய உணர்வுடன் செயல்பட்டார் என மாணவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆராய்தல்.
குறிப்பாக கார் கண்ணாடி உடைக்கப்பட்ட அன்று அவர் சாதி சொல்லித் திட்டியது குறித்த புகாரில் கையொப்பமிட்டுள்ள மாணவர்கள் விசாரிக்கப்படுதல்.

(v) பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தல் மற்றும் சமீபத்தில் செய்யப்பட்ட பணி நீக்கங்களில் பின்னணி ஏதும் உள்ளதா என ஆராய்தல்.

(vi) ஆசிரியர்கள் தனிப்பயிற்சி நடத்துதல், ஒப்பந்தப் பணிகளை எடுத்தச் செயல்படுத்துதல் ஆகியன எந்த அளவிற்கும் கல்விப் பணிகளைப் பாதிக்கின்றன என்பது குறித்து ஆராய்தல்.

(vii) ஆசிரியர்களுக்கிடையே உள்ள குழு மனப்பான்மை மாணவர்களின் கல்வியைப் பாதித்தல் குறித்து ஆராய்தல்.

8. தனிநபர் ஆணையம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் குற்றமிழைத்தவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும்.

9. தனிநபர் ஆணையம் அமைக்கும் போது அந்த நபர் சமூக நீதியில் அக்கறை உள்ளவராகவும் நடுநிலையோடு இருப்பவராகவும் இருப்பது அவசியம்.

Thursday, March 11, 2010

மகளிர் இடஒதுக்கீடு: சமூக அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.03.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

உலக மகளிர் தினத்தில் பெண்களுக்குப் பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனதார வரவேற்கிறோம்.

சமூகத்தில் சம பாதியாக உள்ள பெண்களுக்கு அதிகாரத்தில் இடமளிப்பது அவசியம். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளித்திடும் வகையில் மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில் இந்த இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளித்து சமூக நீதியைக் காத்திட வேண்டும். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இடஒதுக்கீட்டில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகத்தின் முதல்வர் கருணாநிதி மற்றும் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் ஆகியோர் சமூகத்தின் அடித்தளத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு சமநீதி கிடைக்க இந்த கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Friday, November 28, 2008

சமூக நீதிப் போராளி வி.பி.சிங் காலமானார் - இரங்கல்!



மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் காலஞ்சென்ற வி.பி.சிங் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 28-11-2008 அன்று விடுத்துள்ள குறிப்பு:

அடித்தட்டு மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சமூக நீதிப் போராளி முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதோடு, இத்தருணத்தில் அவரது பாதையில் சமூக நீதிக்குப் போராட உறுதியேற்போம்.

மன்னர் குடும்பத்தில் உயர்வகுப்பில் பிறந்தவராக இருந்தாலும் மண்டல் குழு பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி, இந்திய வரலாற்றில் சமூக நீதிக்குப் புதிய பாதையை அமைத்தவர்.

ஈழத் தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கை சென்ற இந்தியப் படையைத் திரும்பப் பெற்றதன் மூலம் ஈழத் தமிழர் நலன் காத்தவர். பொற்கோவிலுக்குள் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்காக சீக்கிய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு அம்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.

பாபர் மசூதியை இடிக்கச் சென்ற மதவாத சக்திகளூக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்து மதசார்பின்மைக் கொள்கையைக் கடைபிடித்தவர். சமூக நீதிக்காகவும், மதவாதத்திற்கு எதிராகவும் போராடியதன் விளைவாக நாட்டின் உயர் பதவியான பிரதமர் பதவியையும் ஆட்சியையும் இழந்தவர்.

இந்திய வரலாற்றில் ஒற்றை ஆட்சிமுறை என்பதை மாற்றி மத்தியில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்து கூட்டாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர். வழக்கறிஞர், கவிஞர், ஓவியர், புகைப்படக் கலைஞர் என்பவற்றை எல்லாம் தாண்டி நேர்மையான மிகச் சிறந்த அரசியல் தலைவர்.

பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சித் தொண்டர்கள் மற்றும் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர் இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.

Wednesday, November 19, 2008

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்க கூடாது!



மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 19-11-2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைத்தால் தற்போது மாநில அளவில் செயல்படுத்தப்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக ரீதியான இடஒதுக்கீடு பறிபோகும் என்பதால், மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவக் கல்லூரியை தங்களுக்குள் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக காங்கிரஸ் அரசு மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு புதுச்சேரியின் அனைத்து அரசியல் கட்சியினர், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 13 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியில் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் 27 சதவித இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் இந்த இடஒதுக்கீடு தற்போது முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. மேலும், மத்திய அரசில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தனி இடஒதுக்கீடு கிடையாது.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைத்தால் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள சமூக ரீதியான இடஒதுக்கீடு பறிபோகும். இது மக்கள் தொகையில் 70 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

தற்போது புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 4 கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறியுள்ளன. இதனால், புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் கொஞ்சம் கொஞ்மாக குறைந்து தற்போது புதுச்சேரி மாணவர்களுக்கு இடமில்லை என்றாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினரிடம் மாணவர்களுக்கு இடம் கேட்டு புதுச்சேரி அரசு கெஞ்சும் நிலைதான் உள்ளது.

கல்வி வணிகமாகிவிட்டதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடையாக குறைந்தது 25 லட்ச ரூபாய் பணம் கொடுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்வி கிடைக்கும் சூழல் உள்ளது. ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி என்றால் புதுச்சேரிக்கு 150 இடங்கள் கிடைக்கும். இதனால், புதுச்சேரியைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் குறைந்த கட்டணம் செலுத்தி மருத்துவம் பயில முடியும்.

எனவே, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று, வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்களைச் சேர்த்து கல்லூரியை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், புதுச்சேரி மாணவர்களையும், பொதுமக்களையும் திரட்டி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என அரசை எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Thursday, April 26, 2007

பிற்படுத்தப்பட்ட மாணவர்களை தீர்ப்புக்குப் பிறகு சேர்க்க முடிவு - அர்ஜுன் சிங்

மத்திய அரசின் உயர் கல்விக்கூடமான ஐ.ஐ.எம்.களில் (இந்திய மேலாண்மையியல் கல்வி நிறுவனம்) பொதுப்பிரிவு இடங்களை வழக்கம்போல நிரப்புவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு சேர்ப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த மனித வளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் தில்லியில் செய்தியாளர்களை 25-04-2007 புதன்கிழமை சந்தித்தபோது இதைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு 27% இடங்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்குவது என்ற தங்கள் முடிவில் மத்திய அரசு உறுதியாக இருந்ததால், இந்த வழக்கு விசாரணையை மே 8-ஆம் நாளே எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் 24-04-2007 செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

எனவே, பொதுப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களை மேலும் காக்க வைக்காமல் அவர்களுக்கான சேர்க்கையை முடித்துவிட்டு, தீர்ப்பு வந்ததும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களைச் சேர்க்கலாம் என்று மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது.


பிரதமர் மன்மோகன்சிங் கருத்து:


27% இட ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு வராதவரை, பொதுப்பிரிவு சேர்க்கையை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கூட்டு முடிவை மத்திய அமைச்சரவை ஏற்கெனவே எடுத்ததால், சேர்க்கையைத் தொடரலாம் என்ற முடிவையும் அங்கேயே எடுத்துவிடலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அர்ஜுன் சிங் அதை ஏற்றார். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் (சி.சி.பி.ஏ.) இருப்பதால் முடிவை அங்கே எடுப்பது சரியாக இருக்கும் என்ற கருத்து ஏற்கப்பட்டது என்றார் அர்ஜுன் சிங்.

மனிதவளத் துறைக்கும் சட்ட அமைச்சகத்துக்கும் இடஒதுக்கீட்டு வழக்கு குறித்துக் கருத்து வேறுபாடு ஏதும் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இல்லவே இல்லை, உச்ச நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்த மனுவை இரு அமைச்சகங்களும் கலந்துப் பேசித்தான் தயாரித்தன என்று அவர் பதில் அளித்தார்.

27% ஒதுக்கீடு குறித்து மே 8-ஆம் நாள்தான் விசாரணை நடைபெறப் போகிறது என்னும்போது பொதுப்பிரிவு மாணவர்கள் சேர்க்கைக் குறித்து இப்போது ஏன் முடிவெடுக்கப் பார்க்கிறீர்கள் என்று கேட்டனர்.

மாணவர்கள் நலன் கருதித்தான் இந்த முடிவை எடுக்கிறோம் என்று பதில் அளித்தார் அர்ஜுன் சிங்.

பொருளாதார அளவுகோள் (கிரீமிலேயர்):

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உயர் வருவாய்ப் பிரிவினரை விலக்கிவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முன்னர் கூறியிருந்த யோசனை மீண்டும் பரிசீலிக்கப்படுமா என்று கேட்டதற்கு, இதை உயர் நிலையில் விவாதித்தோம்; இம்முறை இதில் இந்த விஷயத்தைச் சேர்க்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம் என்று பதில் அளித்தார் அர்ஜுன் சிங்.


தோழமைக் கட்சிகள் நெருக்குதலா?


இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் மே 8-இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்வரை ஐ.ஐ.எம்.களில் மாணவர்களைச் சேர்க்கக்கூடாது என்று தோழமைக் கட்சிகளிடமிருந்து நெருக்குதல் ஏதேனும் வந்ததா என்று கேட்டனர். இல்லை என்று அர்ஜுன் சிங் பதில் அளித்தார்.

Wednesday, April 25, 2007

பிற்படுத்தப்பட்டோர் 27% இடஒதுக்கீட்டிற்குத் தடை: மே 8-இல் விசாரணை

மத்திய அரசின் ஐஐஎம், ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக் காலத் தடை மீதான விசாரணை மே 8-ஆம் நாள் நடைபெறும். இதற்கான ஆணையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பிறப்பித்தார்.

இந்த மனு மீதான விசாரணையை முன்னதாகவே நடத்துமாறு 24-04-2007 செவ்வாய்க்கிழமை மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், அரசு வழக்கறிஞர் மிலன் குமார் பானர்ஜி ஆஜராகி மனு மீதான விசாரணையை முன்னதாகவே நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் 8-ஆம் நாளன்று நடைபெறும் என்று பெஞ்ச் உத்தரவிட்டது.

இதற்கு முன்னதாக இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 3-ஆம் வாரத்தில் நடைபெறும் என்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சத இடஒதுக்கீடு தொடர்பாக ஓராண்டுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் மற்றொரு பெஞ்ச் இடைக் காலத் தடை விதித்தது.

இதையடுத்து உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு விதித்துள்ள தடையை விலக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் அரிஜித் பசாயத், எல்.எஸ். பான்டா அடங்கிய பெஞ்ச் 23-04-2007 திங்கள்கிழமை நிராகரித்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அரசு சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஏற்கப்பட்டது.

"இந்தியாவின் தலைமை நீதிபதி என்ற முறையில் இந்த மனு மீதான விசாரணையை முன்னதாகவே நடத்துமாறு உத்தரவிடவும் அதற்கான நாளைக் குறிப்பிடவும் தனக்கு சிறப்புரிமை உள்ளது என்றும் இது நீதிமன்றத்தின் கண்ணியத்தை மீறிய செயலாகாது’’ என்றும் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இந்திய நிறுவனம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் வகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 9 பேருக்கு அந்நிறுவனத்தில் சேர்வதற்கான அனுமதிக் கடிதத்தை அனுப்பியுள்ளதையும் மத்திய அரசு எடுத்துக்காட்டியது.

இதனிடையே சென்னை, தில்லியில் உள்ள ஐஐடி, இரண்டு ஆண்டுக்கான எம்.பி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதையும் மத்திய அரசு தெரிவித்தது.

Tuesday, April 24, 2007

பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு : தடை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு விதித்துள்ள தடையை விலக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் 23-04-2007 திங்கள்கிழமை நிராகரித்தது. இதனால், 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டில் செயல்படுத்துவது என மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் கோரிக்கை மீது நீதிபதிகள் அரிஜித் பசாயத், எல்.எஸ்.பான்டா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது. எனினும், இந்த பிரச்சினையை அரசமைப்புச் சட்ட பெஞ்சின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வேறொரு நாளில் பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒன்றரை மணி நேரம் வாக்குவாதம் நடந்தது. மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் ஜி.இ.வாகனவதி ஆஜரானார்.

’இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும். இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதால் பொதுப்பிரிவில் உள்ள மாணவர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகாது' என்றார்.

’மார்ச் 29-ஆம் நாள் உத்தரவை மாற்றும்படி விடுத்துள்ளது கோரிக்கைதான் மறு ஆய்வு மனு அல்ல. உச்ச நீதிமன்றத்தின் சட்டப்பிரிவு 145-ன் படி இந்த விசயத்தில் உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தை அரசமைப்புச் சட்ட பெஞ்சுக்கு அனுப்பவேண்டும்'என்றும் வாகனவதி குறிப்பிட்டார்.

இது தொடர்பாக நீதிபதிகள் குறிப்பிடுகையில், ’இந்த விவகாரத்தை அரசமைப்புச் சட்ட பெஞ்ச் பரிசீலனைக்கு அனுப்புவது பற்றி பிறகு பரிசீலிக்கப்படும். இந்த ஆண்டை பொருத்தமட்டில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இறுதியானதுதான். இது இடைக்கால தீர்ப்பு என மத்திய அரசு விளக்கம் தருவது சரியானதல்ல'என்றனர்.

’இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் உள்ள துணைப் பிரிவின்படி ஏதோ ஒரு காரணத்துக்காக எந்தவொரு மத்திய கல்வி நிறுவனத்திலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் விதிவிலக்கு அளிக்க வழி உள்ளது. இப்படி மத்திய அரசே இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு தர அதிகாரம் எடுத்துக் கொண்டுள்ளபோது நீதிமன்றம் மட்டும் தடை விதிக்கக்கூடாது என்பது ஏன்?

57 ஆண்டுகளாக பொறுமை காத்தீர்கள். இன்னும் ஒரு ஆண்டு காலத்துக்கு ஏன் பொறுமையாக இருக்க முடியாது'என்றார் நீதிபதி பசாயத்.

ஒரு சந்தர்ப்பத்தில் இந்திரா சகானி மற்றும் நாகராஜ் வழக்கைக் குறிப்பிட்டுப் பேசிய வாகனவதி, ’இந்த வழக்குகளில் இடஒதுக்கீட்டுச் சலுகைக்கு ஆதரவாக தீர்ப்பு தரப்பட்டுள்ளது' என்றார்.

அது பற்றிக் குறிப்பிட்ட நீதிபதிகள், ’தேவைப்படும்போது மட்டும் தமக்கு பொருத்தமான சில தீர்ப்புகளை முன்வைப்பது கூடாது. இந்த இரு வழக்குகளிலும் வசதி படைத்தோருக்கு ஒதுக்கீடு சலுகை வழங்குவது கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதை அமல்படுத்த மத்திய அரசு விரும்பவில்லையே' என்று தெரிவித்தனர்.

இதுபற்றி வாதிட்ட வாகனவதி, ’வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு சலுகைகள் தொடர்பாகத்தான் வசதி படைத்தோர் என்ற கொள்கையை அரசமைப்புச் சட்ட பெஞ்ச் உருவாக்கியுள்ளது. கல்வி தொடர்பாக இது பொருந்தாது' என்றார்.

இந்த வாதத்தில் திருப்தி அடையாத நீதிபதிகள், ’பின்தங்கியவர்களுக்கு சலுகை தரவேண்டும் என்று உண்மையில் கருதினால் அவர்களுக்குத்தான் முன்னுரிமை தரவேண்டும். சமூக ரீதியில் பின்தங்கியவர்களைவிட பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு தருவதுதான் தேவையானது'என்றும் தெரிவித்தனர்.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுதாரர்களில் ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரீஷ் சால்வே வாதிடுகையில், ’அரசு நிர்ணயித்துள்ள 27 சதவீத இட ஒதுக்கீடு, அரசமைப்புச் சட்டத்தின் 29-ஆவது பிரிவை மீறுவதாகும். இந்தப் பிரிவு, இனம், மதம், ஆண், பெண் என்ற பாலின அடிப்படையில் பொதுமக்களைப் பேதப்படுத்தி பார்க்க அனுமதிக்கவில்லை'என்றார்.

நாட்டின் 60 கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையில் உச்சநீதிமன்றம் தொடர்ந்து தலையிடுவது நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும். சமூக நீதியில் அக்கறை உள்ளோர் இந்த அநீதியைக் கண்டிக்க வேண்டும்.

மத்திய அரசு உடனடியாக பாராளுமன்ற இரு அவைகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Saturday, April 21, 2007

ஐஐஎம் : மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க இந்திய அரசு உத்தரவு


மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும்படி ஆறு இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐஎம்) இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் 20-042007 வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழக்கு விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை. உச்ச நீதிமன்றம் வரும் 23-04-2007 திங்கள்கிழமையன்று விசாரிக்க உள்ளது. அதுவரை நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை நிறுத்தி வைப்பதே நியாயமானதாக இருக்கும். மாணவர் சேர்க்கையை அரசு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்.

இந்த கல்வி நிறுவனங்களை நடத்துவது அரசுதான். எனவே அவற்றை நிர்வகிப்பவர்களுக்கு எப்படி நடந்துகொள்வது என்பது தெரியாமல் போகாது.

இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அவசர சட்டம் கொண்டுவர முடியாது. இது அரசமைப்புச் சட்டத் திருத்தம். இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எல்லாவித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

இப்போது புதிய நிலைமை உருவாகியுள்ளது. நீதிமன்றம் என்ன முடிவு செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய அரசுக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இடையே எந்தவித மோதல் போக்கும் இல்லை. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தே இரண்டும் செயல்படுகின்றன.

ஐஐஎம் இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்றார் அர்ஜுன் சிங்.

இதனிடையே, மத்திய அரசு அனுப்பிய புதிய கடிதத்தை அடுத்து மாணவர் சேர்க்கை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய ஐஐஎம் இயக்குநர்கள் 20-04-2007 வெள்ளிக்கிழமை நடத்த இருந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக ஐஐஎம் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு 27 சதவீத ஒதுக்கீடு அனுமதித்துச் சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து இந்த தடை உத்தரவை விலக்குவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின்கீழ் இந்த ஆண்டில் மாணவர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள போதிலும், பொது மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களின் இறுதிப்பட்டியல் ஏப்ரல் 21ஆம் நாளன்று வெளியிடப்படும் என்று ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் அறிவித்திருந்தன.

“பிரச்சினை தீர்ந்தபின் மாணவர் சேர்க்கை’’

இட ஒதுக்கீட்டு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்ட பிறகு மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று ஆமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

Tuesday, April 17, 2007

27% இடஒதுக்கீடு : தடையை நீக்க உச்சநீதிமன்றத்தில் அரசு மனு

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரும் மனுவை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரியுள்ளது.

ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். உட்பட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு வரும் கல்வியாண்டு முதல் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள்,1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் எத்தனை சதவீதம் என்பதை தீர்மானிக்க முடியாது. அதை முடிவு செய்யாதவரை 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, அனைத்து கட்சிகளுடனும் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மனிதவள மேம்பாடு, சட்டம் ஆகிய அமைச்சகங்களின் ஆலோசனையை பெற்று, இடஒதுக்கீடு தடையை நீக்க கோரும் மனுவை மத்திய அரசு தயாரித்தது.

இந்நிலையில், மாணவர் சேர்க்கையை இந்த மாதம் 21ஆம் நாளன்று இறுதி செய்யப் போவதாக ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் அறிவித்தன. இதனால், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடையை உடனே நீக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது.

இந்த நிலையில், தடையை நீக்க கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.இ.வாகன்வதி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஆகியோர், நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையிலான பெஞ்ச் முன் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எல்லாவற்றையும் ஆலோசித்த பின்தான் அரசு முடிவு செய்தது. சமூக ரீதியாக மட்டுமின்றி பொருளாதாரம், கல்வி ஆகியவற்றிலும் பின்தங்கியுள்ள மக்கள், பொதுப் பிரிவினரை போல் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த அரசு முடிவு செய்தது.

இடஒதுக்கீட்டிலிருந்து கிரீமிலேயரை நீக்க வேண்டும் என்ற ஆலோசனையையும் ஏற்க முடியாது. இந்திய சமூக வாழ்க்கை, சாதி அடிப்படையில் அமைந்துள்ளதை மறுக்க முடியாது. அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், சமூகத்தின் மேல்தட்டு மக்களால் கடும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கும், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கும் வேறுபாடு உள்ளது. கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர்களை நீக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. கடந்த 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க எடுக்கப்பட்ட முடிவிலும் தவறில்லை.

மேலும், இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளளன.

இடஒதுக்கீடு தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்த மண்டல் கமிஷன், நாட்டில் 52 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது. மண்டல் கமிஷன் அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் எந்த தவறும் இல்லை.

கடந்த மாதம் 29ஆம் நாளன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவால், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தடையை நீக்கவிட்டால், நாட்டில் சாதிப் பிரிவினை, ஆதிக்கச் சக்திகள் ஆகியவற்றால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விடும். அதனால், கடந்த 29ஆம் நாளன்று விதிக்கப்பட்ட தடையை உத்தரவு என்று கூறாமல் அரசுக்கு அறிவுரை என்று கூறப்பட்டால் சரியாக இருக்கும்.

மேலும், ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இந்த மாதம் 21ஆம் நாளுக்குள் மாணவர் சேர்க்கையை முடிவு செய்ய இருப்பதால் இந்த மனு மீதான விசாரணையை உடன் நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமாக பல கேள்விகள் அடங்கியுள்ளது. அதனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி அரிஜித் பசாயத் கூறுகையில், கடந்த மாதம் 29ஆம் நாளன்று இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் கொண்ட பெஞ்சிடம்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
இடஒதுக்கீட்டுக்கு கடந்த மாதம் 29ஆம் நாளன்று நீதிபதிகள் அரிஜித் பசாயத், லோகேஸ்வர் சிங் பாந்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச்தான் தடை விதித்தது. ஆனால், பசாயத்தும் பாந்தாவும் சேர்ந்து உடனடியாக எந்த வழக்கையும் விசாரிக்கப் போவதில்லை. அதனால், மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கால தாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கில் இந்த பிரச்னையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

--

Monday, April 09, 2007

பிற்பட்டோர் இடஒதுக்கீடு : உச்சநீதிமன்றத்திற்கு கண்டனம்

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது கோடான கோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். `சமூக நீதிக்கான கட்சிகள், இயக்கங்கள்' சார்பில் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த அநீதியை எதிர்த்து தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய அரசியல் கட்சியினர் தமிழகத்தில் நாளை பந்த் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதனை வரவேற்கிறோம். தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி புதுச்சேரியிலும் நாளைக்கு பந்த் போராட்டம் நடத்த வேண்டும்.

மண்டல்குழு பரிந்துரை குறித்து இந்திரா சகானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அரசியல் சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும் செயல் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சாதி ரீதியான சமூகத்தில் இடஒதுக்கீடு அவசியம் என தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற மகத்தான தலைவர்கள் கூறியுள்ளனர். சாதிய ஏற்றத்தாழ்வுகள் மறைய இடஒதுக்கீடு வழிவகுக்கும். இதுபோன்ற சமூக காரணிகள் பல இருந்தும் வெறும் சட்டரீதியாக சமூகப் பிரச்சினையை உச்சநீதிமன்றம் அணுகுவது தவறானது.

உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும். இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் கூறியுள்ளதுபோல் மத்திய அரசு இடஒதுக்கீடு குறித்து அகில இந்திய அளவில் வாக்கெடுப்பு ஒன்றை உடனடியாக நடத்த வேண்டும்.

உச்சநீதிமன்றம் விதித்த தடையால் வரும் கல்வியாண்டில் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் பறிபோகும் ஆபத்துள்ளது. இதனை எதிர்த்துப் போராடி சமூக நீதியை நிலைநாட்ட அனைத்துக் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.

புதுச்சேரி அரசு உடனடியாக அனைத்துக் கட்சி, இயக்கங்கள் கூட்டத்தைக் கூட்டி உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்க்க வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் ஒரு சிலர்தவிர அனைவருமே உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள். உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போதியளவில் நீதிபதிகளாக இல்லாதததுதான் இதுபோன்ற தீர்ப்புகள் வருவதற்குக் காரணம்.

எனவே, நீதித்துறையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் தடை விதித்து வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து 30-03-2007 அன்று மாலை 4-00 மணியளவில், பிள்ளைத்தோட்டம், பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.இளங்கோ தலைமை தாங்கினார்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தங்க.கலைமாறன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் அரசு.வணங்காமுடி, மீனவ மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரும் வீராம்பட்டினம் கவுன்சிலருமான பா.சக்திவேல், தலைவர் காங்கேயன், முன்னாள் தலைவர் விசுவநாதன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் முத்துக்கண்ணு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, மண்ணின் மைந்தர் நல உரிமைச் சங்க ஒருங்கிணைப்பாளர் இர.அபிமன்னன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, தேங்காய்த்திட்டு கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், சமூக நீதிப் போராட்டக் குழு அ.மஞ்சினி, அ.ஜோதிபிரகாசம், தமிழர் திராவிடர் கழகம் மு.அ.குப்புசாமி
உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துக் கொண்டனர்.

Wednesday, October 25, 2006

இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தின் அத்துமீறல்கள்

இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய நிர்வாகவியல் கழகம் (ஐ.ஐ.எம்.), இந்திய தொழில் நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.), மத்திய பல்கலைக் கழகங்கள், மருத்துவ கல்லூரிகள் போன்ற மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவே காலம் கடந்த முயற்சி என்றும், இந்த கல்வியாண்டு முதலே இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டுமெனப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதனிடையே, பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில், இடைக்கால உத்தரவு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதாவது, “நாடாளுமன்ற நிலைக்குழு அளிக்கும் அறிக்கையின் நகலை, மூடி முத்திரையிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்“ என்று கூறியது.

இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்தன. இடஒதுக்கீட்டுச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதித்து, ஏற்றுக் கொள்ளப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பின் நடைமுறைக்கு வரும். இதற்கு முன்பாகவே உச்சநீதிமன்றம் தலையிடுவது, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். “நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பில் உச்சநீதிமன்றம் அத்துமீறி தலையிடுவதாக“ சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி வெளிப்படையாகவே கண்டித்தார்.

இதன் பின்னர், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் போதும்“ என உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மாற்றியது.

இடஒதுக்கீடு குறித்த அரசியல் சட்ட 77,81,82,85-ஆவது சட்ட திருத்தங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டு அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது. வசதி வாய்ப்புடன் வாழும் எஸ்.சி.,எஸ்.டி. உயர் வருவாய்ப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது“ என அரசியல் சட்ட பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

“உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை மிகவும் பிற்போக்கானது. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் இது. இதை மாற்றவில்லை என்றால், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்ற நோக்கத்தையே இது தகர்த்துவிடும். இடஒதுக்கீட்டுக் கொள்கையையும் அதன் செயலாக்கத்தையும் மறுவரையறை செய்திருப்பதன் மூலம், நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் அத்துமீறி நுழைந்துள்ளது.

இடஒதுக்கீடு எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்பதை, வேறுபாடற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டியது கொள்கை வகுப்பாளர்களே தவிர, உச்சநீதிமன்றம் அல்ல“ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு கடுமையாக சாடியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு “இத்தகைய முக்கிய பிரச்சனையில் உச்சநீதிமன்றம் கருத்தைக் கூறுவதற்கு முன் சமூக எதார்த்தத்தைக் கவனத்தில் கொள்ளாதது துரதிருஷ்டவசமானது“ என்று கூறியுள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு (நாயுடு) “எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு இப்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

“ஒன்பதாவது அட்டவணையில் கடந்த 12 ஆண்டுகளாக இடம்பெற்றுள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதே அரசியல் சட்ட விரோதம்“ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்துள்ளார்.

இடஒதுக்கீடு குறித்து நீதிமன்றங்களின் நிலை எப்போதும் பிற்போக்கானதாகவே இருந்து வருகிறது. மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில், உச்சநீதிமன்ற 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச், 1993-இல் வழங்கிய தீர்ப்பிலேயே சமூக நீதிக்கு வேட்டு வைக்கப்பட்டது. மொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது, “கிரிமி லேயர்“ எனும் பொருளாதார அளவுகோல் பின்பற்றப்பட வேண்டும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது என தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் சமூக நீதிக்கு எதிராகவே உள்ளன. இதனால், பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஆணைகள் சமூக நீதிக் கோட்பாட்டையே சிதைத்துவிடும். கற்றுத் தேர்ந்த நீதிபதிகள் மத்தியில் சமூக நீதிக்கு எதிரான கருத்து வலுவாக உள்ளது. இதற்குக் காரணம், நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் “உயர் வகுப்பைச்“ சேர்ந்தவர்களாக இருப்பதே.

அடித்தள மக்களிலிருந்து சமூக நீதியில் அக்கறைக் கொண்ட நீதிபதிகள், கீழ்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நியமிக்கப்பட வேண்டும். நீதித்துறையில் இடஒதுக்கீடு கோரிய போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.

இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ள பின்னடைவை சீர்செய்ய நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டித் தீர்வு காணப்பட வேண்டும். இடஒதுக்கீட்டிற்கு வழிகாட்டியாகத் திகழும் தமிழகம் விழித்தெழ வேண்டும். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த அநீதியை எதிர்த்துப் போராட வேண்டியது உடனடி அவசியம். தந்தைப் பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் ஏற்றிய சமூக நீதித் தீயை அணையாமல் காத்திடும் பொறுப்பு நமக்குள்ளது. இல்லையேல், வரலாறு நம்மை மன்னிக்காது.