Showing posts with label நில அபகரிப்பு. Show all posts
Showing posts with label நில அபகரிப்பு. Show all posts

Friday, June 12, 2009

ரூ. 10 கோடி மதிப்புள்ள வீட்டை அபகரிக்க கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 12.06.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி நகரத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அபகரிக்கும் நோக்கத்தோடு மெக்கானிக் ஒருவரை கொலை செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென அரசை வற்புறுத்துகிறோம்.

புதுச்சேரியில் கடந்த 98-ம் ஆண்டு வீடு, நிலம் அபகரிக்கும் செயல் வெளிச்சத்திற்கு வந்தது. வீடு, நிலம் அபகரிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து போராடியதன் விளைவாக இச்செயல் தற்காலிகமாக நின்று போனது.

ஆனால், தற்போது மீண்டும் வீடு, நிலம் அபகரிக்கும் குற்றம் தலைத் தூக்கியுள்ளது. வீடு, நிலம் அபகரிக்கும் கும்பல் கொலை செய்யும் அளவிற்கு துணிந்ததற்குப் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்காததே காரணம்.

தற்போது இக்கொலை வழக்கில் முக்கிய குற்றாவாளிகளைக் காப்பாற்றும் நோக்கத்தோடு அப்பாவிகள் சிலரை போலீசார் பிடித்து வைத்துள்ளதாக தெரிகிறது. இக்கொலைக்குப் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, இக்கொலை வழக்கை சி.பிஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம். அண்மைக் காலமாக சி.பி.ஐ. பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது புதுச்சேரி மக்களிடையே சி.பி.ஐ. மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், வீடு, நிலம் அபகரிக்கும் திட்டத்தோடு நடந்த இக்கொலை குறித்து ஆதாரங்களைத் திரட்டி மத்திய உள்துறைக்கும், சி.பி.ஐ. உயர் அதிகாரிகளுக்கும் மனு அளிக்க உள்ளோம்.

Saturday, February 03, 2007

புதுவையில் நில அபகரிப்பு : வழக்குப் பதி்வு

புதுவையில் நடந்த நில அபகரிப்பு குறித்து லாசுப்பேட்டை போலீ்சார் வழக்குப் பதிவு செய்தனர். நில அபகரிப்பில் ஈடுபட்ட செல்வராஜுலு செட்டி அறக்கட்டளையின் தலைவர் எச்.பி.என். ஷெட்டி, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் எம்.எஸ். மருதுபாண்டியன், அரசம்மாள், அய்யப்பன் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 471 (போலியான ஆவணத்தை உண்மையெனக் கூறி ஏமாற்றுதல்), 511 (அதற்குண்டான தண்டனை) மற்றும் 34 (கூட்டுச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

வழக்குப் பதியப்பட்டதைத் தொடர்ந்து, 23-01-2007 அன்று, பாண்டிச்சேரி வழக்கறி்ஞர்கள் சங்கப் போதுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், வழக்கறிஞர் மருதுபாண்டியன் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும், சிவில் வழக்குகளில் போலீசு தலையிடக் கூடாது, வழக்குப் போட்ட போலீசு அதிகாரிகள் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும், வழக்கறிஞர் மீது புகார் அளித்தவர் மேல் வழக்குப் போட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் போடப்பட்டன.

இக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வது எனவும் முடிவு செய்தனர்.

Friday, February 02, 2007

புதுவையில் மீண்டும் நில அபகரிப்பு

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 11-01-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:

புதுவை கிருஷ்ணா நகரில் உள்ள நிலத்தினை அபகரிக்க முயற்சித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரது நிலத்தினைப் போலிப் பத்திரம் தயாரித்து அபகரிக்க சிலர் முயற்சித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 24-11-2006 அன்று ஆளுநர், முதல்வர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினருக்கும் புகார் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த காலங்களில் வீடு, நிலம் அபகரிக்கப்பட்டபோது புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தடுத்தது போல், குற்றமிழைத்தவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

வீடு, நிலம் அபகரிப்பதைத் தடுக்கும் வகையில் பத்திரப் பதிவில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த பின்பும் வீடு, நிலம் அபகரிக்கப்பவர்களுக்கு உடந்தையாக போலி பத்திரங்களைப் பதிவு செய்யும் பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது நடந்துள்ள ஆக்கிரமிப்பு முயற்சிக்கு அதிகாரத்தில் உள்ள ஒருவர் துணைபுரிவதாக அறிகிறோம். இது கண்டனத்திற்குரியது. மீண்டும் தலைதூக்கும் வீடு, நிலம் அபகரிப்பைத் தடுக்க புதுச்சேரி அரசு குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

இது குறித்து ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், ஐ.ஜி. உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம்.