Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Wednesday, October 06, 2021

பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் ஊழல், முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.10.2021) விடுத்துள்ள அறிக்கை:-

பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் நடந்துள்ள ஊழல், முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக இசைத்துறை உதவிப் பேராசிரியர் போஸ் என்பவரை முதல்வராக நியமித்து கலைப் பண்பாட்டுத் துறை செயலர் நெடுஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

பாரதியார் பல்கலைக்கூடம் ஏ.ஐ.சி.டி.இ. ஏற்பும், புதுவைப் பல்கலைக்கழக அங்கீகாரமும் பெற்ற அரசு கல்லூரியாகும். இக்கல்லூரிக்கு விதிகளுக்கு மாறாக முதல்வரை நியமித்ததால் ஏ.ஐ.சி.டி.இ. ஏற்பும், பல்கலைக்கழக அங்கீகாரமும் ரத்தாகும் ஆபத்துள்ளது. இதனால், மாணவர்களின் படிப்பு செல்லாததாகிவிடும்.

உதவிப் பேராசிரியர் போஸ் மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் பாடல்களைப் பாட மறுத்ததற்காகவும், உயரதிகாரிகளுக்குக் கீழ்படியாமல் ஒழுங்கீனமாக நடந்ததற்காகவும் இரண்டு முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். அவருக்கு இரண்டு எச்சரிக்கை மெமோ வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெற்ற தகவலின்படி கொரோனா காலத்தில் அனைத்து பேராசிரியர்களும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்திய போது உதவிப் பேராசிரியர்கள் போஸ், அன்னபூர்ணா இருவர் மட்டுமே நடத்தவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை.

பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது எனப் பரவலாக செய்தி அடிபடுகிறது. கலைப் பண்பாட்டுத் துறை செயலர் டில்லியில் பணியாற்றிய போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கூட நுண்கலைத் துறை, நிகழ்கலைத் துறை இரண்டையும் பிரித்து தனித்தனி முதல்வர் நியமிக்கப்பட ஆட்சி மன்ற குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மாறாக தகுதி இல்லாத, பணிமூப்பில் இளையவரான, பல்வேறு குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒருவரை முதல்வராக நியமித்தது சட்டத்திற்குப் புறம்பானது. மேலும், ஏ.ஐ.சி.டி.இ மற்றும் யு.ஜி.சி. விதிகளுக்கு முற்றிலும் ஏதிரானது.

பல்கலைக்கூடத்திற்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். பல்கலைக்கூட நுண்கலைத் துறை, நிகழ்கலைத் துறை இரண்டையும் பிரித்து தனித்தனி முதல்வர் நியமிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து புதுச்சேரி அரசுக்கும், தலைமைச் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும் பல்வேறு மனுக்கள் அனுப்பியும் சட்டவிரோதமாக முதல்வர் நியமனம் நடந்துள்ளது. அனைத்து ஆதாரங்களையும் திரட்டி மத்திய அரசுக்கும், சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளோம்.

எனவே, பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் நடந்துள்ள ஊழல், முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.


Thursday, November 04, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. பகுதி (4)

நீதித்துறையில் பெருகிவரும் ஊழலைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள நீதித்துறை தரம் மற்றும் பொறுப்பாகுதல் மசோதா பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்களைக் கொண்டிருந்தாலும், அந்த மசோதா இன்னும் நடைமுறை சாத்தியம் உள்ளதாகவும், நீதிபதிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் இடர்பாடுகள் இல்லாமலும் இருக்க வேண்டுமென சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள அபரிதமான நம்பிக்கை குறையாமல் இருக்க இந்த மசோதாவில் சட்ட வல்லுநர்கள் கூறும் அம்சங்களை உள்ளடக்கி நிறைவேற்ற மத்திய அரசு திறந்த மனதோடு செயலாற்ற வேண்டும்.

‘நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968’ போதிய அளவில் பயன் அளிக்கவில்லை என்ற காரணத்தால் தான் தற்போது மத்திய அரசு ‘நீதித்துறை தரம் மற்றும் பொறுப்பாகுதல் மசோதா 2010’ என்ற புதிய சட்ட முன்வரைவை அமைச்சரவையில் வைத்து ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த சட்டப்படி நீதிபதிகள் தங்களின் சொத்துக் கணக்கினைப் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். மேலும் ஆண்டு தோறும் தங்கள் சொத்துக் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். இவை அனைத்தும் நீதித்துறையின் அதிகாரபூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும். மேலும், நீதிபதிகள் எந்தவொரு வழக்கறிஞரோடும் நெருக்கமான உறவு வைத்துக் கொள்ள கூடாது. குறிப்பாக தான் பணியாற்றும் நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞரோடு உறவு வைத்துக் கொள்ள கூடாது.

நீதிபதிகளின் ஊழல் பற்றி விசாரிக்க ஓய்வுப் பெற்ற இந்திய தலைமை நீதிபதி ஒருவர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். இக்குழுவில், அட்டர்னி ஜெனரல், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவர் நியமிக்கும் ஒரு முக்கிய பிரமுகர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். நீதிபதிகள் மீது இந்த குழுவிடம் நேரடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். குறிப்பாக இந்திய தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மீதும் புகார் கூறலாம்.

இவ்வாறு அளிக்கப்படும் புகாரை விசாரிப்பதற்காக நீதிபதிகள் அடங்கிய தனிக் குழு ஒன்று அமைக்கப்படும். உச்சநீதிமன்ற நீதிபதி மீது புகார் என்றால் ஓய்வுப் பெற்ற இந்திய தலைமை நீதிபதி மற்றும் பணியிலிருக்கும் இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்கும். உயர்நீதிமன்ற நீதிபதி மீதான புகாரை ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பணியிலிருக்கும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்கும். இந்த விசாரணை குழு உறுப்பினர்களை அதாவது உச்சநீதிமன்ற நீதிபதிகளை இந்திய தலைமை நீதிபதியும், உயர்நீதிமன்ற நீதிபதிகளை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் நியமிப்பார்கள். தமைமை நீதிபதிகள் மீதான புகாரை உயர்மட்ட குழுவே விசாரிக்கும்.

இந்த குழுக்களுக்கு ஒரு சிவில் நீதிமன்ற அதிகாரம் இருக்கும். இக்குழு எந்தவொரு ஆவணத்தையும், சான்றுகளையும் சம்மன் அனுப்பி பெற முடியும். மேலும், புகாரின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்படும் நீதிபதி மீது குறிப்பான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய முடியும். குற்றச்சாட்டு மென்மையானதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு அறிவுரையோ அல்லது எச்சரிக்கையோ விடுக்கலாம். குற்றச்சாட்டு கடுமையானதாக இருந்தால் அவரை பணியிலிருந்து விலக அறிவுறுத்தலாம். இதற்கு நீதிபதி ஒப்புக் கொள்ளவில்லை என்றால் குடியரசுத் தலைவர் மூலம் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு (Impeachment) பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

முந்தைய சட்டத்தில் மாற்றங்கள் செய்தும், சட்ட ஆணையம் கூறிய பல கருத்துக்களை உள்ளடக்கியும் கொண்டு வரப்பட்ட இந்த புதிய சட்டத்தின்படி ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பல தடைகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். பாராளுமன்றத்தின் மூலம் குற்றசாட்டுகள் (Impeachment) பதிவு செய்து நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற பழைய முறையே இச்சட்டத்தில் இறுதி நடவடிகையாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது கடந்த காலங்களில் தோல்வி அடைந்துள்ளதையும், இதுவரையில் ஒரு நீதிபதிகூட இவ்வாறு பணிநிக்கம் செய்யப் படவில்லை என்பதையும் முன்னர் பார்த்தோம்.

பணியிலிருக்கும் நீதிபதிகளை இதுபோன்ற விசாரணைக் குழுவில் நியமிப்பது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே அதிகப்படியான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் கூடுதலாக அவர்களுக்குப் பணிச் சுமை அளிப்பது நீதிபதிகளின் வேலைத் திரனைக் குறைக்கும். விசாரணகளில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும். மார்ச் 31, 2010 கணக்குப்படி உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 717 வழக்குகள், இந்தியாவிலுள்ள 21 உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 4 கோடிக்கு மேல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏதாவது ஒரு மனித உரிமை மீறல் நடக்குமானால் உடனடியாக பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் நீதிவிசாரணை கோருவது வழக்கம். ஆனால், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் மேற்கூறிய காரணங்களைக் காட்டி அரசுகள் தட்டிக் கழிப்பது உண்டு. ஒரு சம்பவம் குறித்து விசாரிக்கவே இந்த நிலை என்றால், நீதிபதிகள் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை நுட்பமாகவும், ஆழமாகவும், பல்வேறு கோணங்களில் ஆராயவும் கவனம் செலுத்த முடியாத நிலையே உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், தன்னோடு பணியாற்றும் ஒரு நீதிபதி மீது புகார் கூறப்படுமானால் அதனை விசாரிப்பதில் உடன் பணியாற்றும் நீதிபதிக்கு நெருடல் இருக்கும். மேலும், பல சந்தர்ப்பங்களில் உடன் பணியாற்றும் நீதிபதியை விசாரணை நீதிபதிகள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. நீதிபதி பி.டி.தினகரன் ஊழல் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவில் அவரோடு பணியாற்றிய நீதிபதி சிர்புர்கர் இடம்பெற்றதற்கு எதிர்ப்புப் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அக்குழுவில் இருந்து விலகியதும் இதற்கு வலுசேர்க்கிறது.

‘ஒரு நீதிபதி செய்யும் குற்றத்தை ஒரு நீதிபதி கொண்டே விசாரிக்கலாம் என்றால் ஏன் ஒரு டக்டர் செய்யும் குற்றத்தை ஒரு டாக்டரைக் கொண்டே, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் செய்யும் குற்றத்தை ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்டே, ஒரு திருடன் செய்யும் குற்றத்தை ஒரு திருடனைக் கொண்டே விசாரிக்க கூடாது’ என்று மிகக் கோபமாக கேள்வி எழுப்பியதோடு, ‘இந்த புதிய சட்டம் மக்களிடத்தில் ஒரு பாதுகாப்பு வழிமுறை உள்ளது என்ற பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சி’ என்கிறார் சாந்தி பூஷன்.

புலன் விசாரணை அதிகாரம் கொண்ட சுயேட்சையான அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டுமென நீதித்துறையில் ஊழலுக்கு எதிராகப் போராடி வருபவர்கள் கோருவதில் நியாயம் உள்ளது. நீதித்துறைக்கு அப்பாற்பட்டவர்கள் நீதிபதிகளின் ஊழல்களை விசாரிக்க ஒப்புக் கொண்டால் அது நீதித்துறையின் சுயேட்சைத் தன்மையையும், சுதந்தரத்தையும் கேள்விக்குள்ளாக்கிவிடும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீதித்துறையில் மட்டுமல்ல இன்று அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. எளிதாக வேலையை முடிக்க லஞ்சம் கொடுப்பதுதான் வழிமுறை என்பதை மக்கள் பெரிதும் நம்புகின்றனர். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று நாம் யாராவது கூறினால் இன்றைய சூழலில் அது மிகப் பெரிய நகைச்சுவை ஆகிவிடும். சட்டத்தின் ஆட்சியை விரும்புகிறவர்கள் ஊழலை ஒருபோதும் ஆதரிக்க முடியாது. ஊழல்களினால் பாதிக்கப்படுவது அடித்தட்டில் இருக்கும் ஏழை எளிய மக்கள்தான். அதுவும் கடைசிப் புகலிடமாக உள்ள நீதித்துறையில் ஊழல் அளவிட முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

அண்மையில் வருமான வரித் துறை அதிகாரி ஒருவரின் ஊழல் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்சு, டி.எஸ்.தாக்கூர் ஆகியோர் ‘அரசு ஏன் ஊழலை சட்டபூர்மானதாக ஆக்கக் கூடாது’ என்று கிண்டலாக கேள்வி எழுபியுள்ளனர். அரசுத் துறைகளில் நிலவும் ஊழலை ஒழிக்க நீதிபதிகள் அக்கறை காட்டும் அதே வேளையில், நீதித்துறையில் நிலவும் ஊழலையும் களைய உரிய கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் இதுபோன்ற ஒரு கேள்வியை நீதித்துறையினர் மீது மக்கள் எழுப்பும் காலம் விரைவில் வரக்கூடும்.

(நிறைவுப் பெற்றது) 

நன்றி: மக்கள் உரிமை.    

Sunday, October 24, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. (3)

இந்திய தலைமை நீதிபதியின் ஊழல் பற்றிப் பார்த்தோம். ஊழல் செய்யும் நீதிபதிகளை எதிர்த்துப் போராட முடியாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருந்து வருகிறது. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் இயல்பான அச்சம். இரண்டு நீதிபதிகளை விமர்சித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாக கருதப்பட்டு, தண்டனைக் கிடைக்கும் என்ற பயம். ஆனால், நீதிபதிகளின் ஊழல்களை ஆதாரத்தோடு விமர்சித்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஊழல் நீதிபதியான பி.டி.தினகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையில் நடந்த போராட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். சில மாதங்களுக்கு முன்னர் அந்த நீதிபதியின் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பற்றி பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளிப்படுத்தாத நாளே இல்லை என்று சொல்லலாம். அதேபோல் தலித் மக்களின் உரிமைகளுக்காக அயராது போராடி வரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் 90-களில் இருந்து ஊழல் மற்றும் சாதியத்தோடு பணியாற்றிய, பணியாற்றும் நீதிபதிகள் குறித்து மிக வெளிப்படையாக துண்டறிக்கைப் போட்டு விநியோகித்தும், சுவரொட்டி அச்சிட்டு ஒட்டியும், கூட்டங்கள் நடத்தியும் செய்த பிரச்சார நடவடிக்கைகள் போதிய பயன் அளித்தன என்றே சொல்ல வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும், ஊழல் செய்யும் கீழ்நீதிமன்ற நீதிபதிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்கறை காட்டுகின்றனர். ஆனால், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அது அவ்வளவு எளிதானதல்ல என்பதை கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன.

ஊழல் செய்வது என்பது ஊழல் தடுப்புச் சட்டப்படி கைது செய்யப்படக் கூடிய (Cognizable Offence) குற்றமாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி (Criminal Procedure Code) கைது செய்யப்படக் கூடிய குற்றம் அனைத்திற்கும் முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவுச் செய்யப்பட வேண்டும். ஆனால், நீதிபதிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.வீராசாமி 1974-ல் லஞ்சம் வாங்கும் போது சி.பி.ஐ. போலீசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார். அவர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், குற்றவியல் சட்டத்திற்குப் புறம்பாக 1991-ல் உச்சநீதிமன்றம் ‘எந்த நீதிபதி மீதும் இந்திய தலைமை நீதிபதியின் அனுமதியின்றி முதல் தகவல் அறிக்கை பதியக் கூடாது’ என்று தீர்ப்பு வழங்கி ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியது. இந்த தீர்ப்புக்குப் பின்னர் இதுநாள்வரையில் எந்தவொரு நீதிபதி மீதும் வழக்குப் பதிய எந்த தலைமை நீதிபதியும் அனுமதி அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஊழல் செய்த உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 124 (4) படியும், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மூலம் அதுவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். நீதிபதியின் ஊழல் குறித்த ஆதாரங்களைப் பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் 100 பேர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழுவில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள். இக்குழு விசாரணை மேற்கொண்டு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் ஊழல் செய்த ஒரு நீதிபதி மீதும் சின்ன நடவடிக்கைகூட எடுக்க முடியவில்லை.

1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு (Impeachment) சுமத்தப்பட்டது. அவர் சண்டிகரில் தலைமை நீதிபதியாக இருந்த போது அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்தது பற்றி குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு முன் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. காங்கிரஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காததால் அவர் நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொண்டார். அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைக் காட்டி தி.மு.க. அன்று அந்த ஊழல் நீதிபதியைக் காப்பாற்றியது. வெறும் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆதரவுத் தெரிவித்தனர்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் 1993-ல் ஒரு வழக்கில் 34 லட்ச ரூபாய் பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டும் அவரை மேற்குவங்க ‘லாபி’ காப்பாற்றி வருவதாக செய்திகள் வருகின்றன. அவரை பணியிலிருந்து ராஜினாமா செய்யவும் அல்லது விருப்ப ஓய்வில் செல்லவும் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியும் அவர் அதனை மதிக்கக்கூட தயாராக இல்லை. அவர் மீது பாராளுமன்றத்தில் 58 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்த குற்றச்சாட்டின் மீது விசாரணை நிலுவையில் உள்ளது. பாராளுமன்றத்தில் நடவடிக்கையை எதிர்கொள்ளும் இரண்டாவது நீதிபதி சவுமித்ரா சென்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவருமான நீதிபதி பி.டி.தினகரன் 540 ஏக்கர் அளவுள்ள புறம்போக்கு நிலங்களையும், தலித் மக்களின் நிலங்களையும் அபகரித்த குற்றச்சாட்டு குறித்தும், அனுமதியின்றி அடுக்குமாடி வணிக வளாகம் கட்டியது உள்ளிட்ட ஏராளமான சட்டவிரோத நடவடிகைகள் பற்றியும் 75 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்த 12 குற்றச்சாட்டுகள் பற்றி பாராளுமன்ற குழு விசாரித்து வருகிறது. அவர் மீது ஆதாரங்கள் பல இருந்தும் அவரை பணிநீக்கம் செய்ய முடியவில்லை. அவருக்கு நீதித்துறை வழங்கியிருக்கும் மிகப் பெரிய தண்டனை, அவரை சிக்கிம் மாநிலத்திற்கு மாற்றல் செய்துள்ளதுதான். இன்றைக்கு தலித் நீதிபதி என்று கூறி பி.டி.தினகரன் செய்த ஊழல்களையும், நில அபகரிப்புகளையும் நியாயப்படுத்தி வரும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

இந்திய அரசியல் சட்ட மறுஆய்வுக் குழு, 2003 மார்ச் 31-ல் அரசுக்கு அளித்த அறிகையில் நீதிபதிகள் பணிநீக்கம் செய்வது பற்றிய 7-வது அத்தியாயத்தில் தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. மேலும், நீதிபதிகள் தவறு செய்வதைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. அதாவது இந்திய தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டு அதன் அறிகையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் அந்த அறிகையின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைக்காக எழு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மீது உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் ஊழல் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது. மேலும், ஊழல் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் அவர்களை வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்வதை கடுமையாக ஆட்சேபித்துள்ளது.

இந்திய அரசியல் சட்ட அவையில் ஊழல் நீதிபதிகள் மீதான நடவடிக்கை குறித்து அதிகம் விவாதம் நடந்ததாக தெரியவில்லை. ஏன்னென்றால் நீதிபதிகள் இந்தளவு ஊழல் செய்வார்கள் என்று அரசியல் சட்ட அவை உறுப்பினர்கள் கருதவில்லை போலும். அதனால்தான் பாராளுமன்ற குற்றச்சாட்டு மூலம் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் போன்ற சிக்கலான, சாத்தியமற்ற நடைமுறையை கொண்டு வந்தனர் அரசியல் சட்ட அவையினர்.

நீதிபதிகள் மீது பாராளுமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கும் முறையில் பல மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து. பாராளுமன்றத்தில் 100 உறுப்பினர்கள் கையெழுத்திட்டால்தான் ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்படுகிறது. மேலும், ஒரு சில ஊழல் நீதிபதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்காக பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் முறையை எளிதாக்கினால், அது நீதித்துறை மீது அரசியல்வாதிகள் அதிகாரம் செலுத்தும் நிலையை ஏற்படுத்திவிடும் என சில நேர்மையான நீதிபதிகள் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

நீண்ட போராட்டத்திற்குப் பின் ‘நீதிபதிகள் தரம் மற்றும் பொறுப்பாதல் மோசோதா’ பரிசீலிக்கப்பட்டு சென்ற அக்டோபர் 5-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட மசோதாவில் ஒரு சில அம்சங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அதிலுள்ள பெரும்பாலான பிரிவுகள் நீதிபதிகளின் ஊழல்களைத் தடுக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கவில்லை என சட்டவல்லுநர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனைப் பிறகுப் பார்ப்போம்.

அடுத்த இதழில் முடியும்...


நன்றி: மக்கள் உரிமை.

Thursday, October 21, 2010

ஊழல் அதிகாரி அரிகரன் பணி நீக்கம் : புதுச்சேரி அரசுக்குப் பாராட்டு!

ஊழல் அரிகரன்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்  21.10.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பாரதியார் பல்கலைக்கூடத்தின் முன்னாள் முதல்வரும், லலித் கலா மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியுமான அரிகரனை பணிநீக்கம் செய்துள்ள புதுச்சேரி அரசின் நடவடிக்கையை மனதார பாராட்டுகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1996 முதல் 1999 வரை அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தின் முதல்வராக இருந்த போது பல்வேறு ஊழல், முறைகேடுகள், கையாடல், நிர்வாக குளறுபடிகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென பல்வேறு கட்சி மற்றும் ஆதரவோடு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால், அப்போதைய அரசு அவரை பாரதியார் பல்கலைக்கூடத்தில் இருந்து லலித் கலா மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியாக நியமித்தது.

இது குறித்து அரசு அப்போது பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக இருந்த தேவநீதிதாஸ் மற்றும் கலெக்டர் ராகேஷ் சந்திரா ஆகியோர் தலைமையில் இரண்டு விசாரணைக் குழுக்களை அமைத்தது. இந்த விசாரணைக் குழூக்கள் முன்பு அரிகரன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அதிகாரி தேவநீதிதாஸ் தலைமையிலான விசாரணைக் குழு முன்பு அரிகரன் மீது சுமத்தப்பட்ட 10 குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளன. அதாவது, அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதல்வராக இருந்த போது அங்கு விரிவுரையாளராக பணியாற்றிய தனக்கு நெருக்கமான அன்னபூர்ணா என்பவருக்கு விதிமுறைகளை மீறி மருத்துவ செலவுக்காக ரூபாய் 20 ஆயிரத்து 727 வழங்கியது. விதிமுறைகளுக்கு மாறாக தினக் கூலி ஊழியரை காசாளராக நியமித்து பெரும் நிதி கையாடல் செய்தது. பாரதியார் பல்கலைக்கூட கட்டிடங்களுக்கு புதிதாக கூறை அமைத்ததிலும், பழைய கூறைகளை மாற்றியதிலும் அரசு முன் அனுமதியின்றி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு ஆகிய மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொண்டு கடந்த 14.10.2010 அன்று கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சரும், பாரதியார் பாரதியார் பல்கலைக்கூடத்தின் சேர்மனுமான மாண்புமிகு ஷாஜகான் அவர்கள் ஊழல் அதிகாரி அரிகரனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அரிகரன் வெளிநாட்டில் உள்ளதால் பணிநீக்க உத்தரவினை லாஸ்பேட்டை வாசன் நகரில் உள்ள அவரது வீட்டில் ஒட்டியும், பத்திரிகை மூலம் அறிவிக்கையாக வெளியிட்டும் உள்ளனர். காலம் கடந்த முடிவானாலும் அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இது ஊழல் செய்பவர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும் என நம்புகிறோம்.

மேலும், அரிகரன் கடந்த 2007, 2008 ஆண்டுகளில் அரசின் முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குப் பலமுறை சென்று வந்துள்ளார். அரசு ஊழியர்களின் நடத்தை விதிப்படி ஒரு அரசு ஊழியர் வெளிநாடு செல்ல அரசின் முன் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து அரசு நியமித்த ஏ.எப்.டி. பஞ்சாலையின் இணை நிர்வாக இயக்குநர் எஸ்.டி.சுந்தரேசன் முன்பு நடந்த விசாரணையில் அரிகரன் விதிகளை மீறி வெளிநாடு சென்றது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் அடிப்படையில் அரசு உடனடியாக அரிகரன் மீது கிரிமினல் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அரிகரன் லலித் கலா அகாடமியின் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்ற டிசம்பர் 1999 முதல் டிசம்பர் 2009 வரையில் எந்தவித பணியும் செய்யாமல் 30 லட்சத்து 58 ஆயிரத்து 280 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இதனால், மக்கள் வரிப் பணம் பெருமளவில் வீணாக செலவிடப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரி அரசு அவருக்கு அளித்த சம்பளத் தொகையை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் அதிகாரி அரிகரனை பணிநீக்கம் செய்ய மக்கள் உரிமைக் கூட்டமைப்பு நடத்திய பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் பங்கேற்று ஆதரவுத் தந்த பல்வேறு கட்சி மற்றும் அமைப்புத் தலைவர்களுக்கு இந்நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday, October 14, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. பகுதி (2)

1950-க்கு முன்னர் நீதித்துறையில் ஊழல் இருந்ததில்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். அப்போதெல்லாம் நீதித்துறையில் ஊழல் என்பதைப் பெரும் குற்றமாக கருதினார்கள். சிறிய தவறு நேர்ந்தாலும் நீதிபதிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்ட காலமது. 1949-ல் ‘பெடரல் நீதிமன்றங்கள்’ (Federal Courts) இருந்த போது அலகாபாத் நீதிபதியாக இருந்த சிவபிரசாத் சின்கா நீதித்துறையின் வரம்புக்கு அப்பாற்பட்டு இரண்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டதற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் ஊழல் செய்ததாக ஆதாரங்கள் நிறைய இருந்தும் நீதிபதிகள் ராமசாமி முதல் பி.டி.தினகரன் வரை யாரையும் பதவி நீக்கம் செய்ய முடியவில்லை. இதற்கு பாராளுமன்ற நடைமுறையில் உள்ள குறைபாடு ஒரு பெரும் காரணமாக இருக்கிறது.

பிரசாந்த் பூஷன் டெகல்காவிற்கு அளித்த பேட்டியில் ‘கடைசியாக இருந்த 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல்வாதிகள்’ என்று கூறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருவது குறித்துப் பார்த்தோம். இவ்வழக்கில், அவரது தந்தையார் சாந்தி பூஷன் தன்னையும் இணைத்துக் கொள்ள உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மேலும் பல தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது.

இந்திய தலைமை நீதிபதிகளாக இருந்த ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், எம்.எச்,கனியா, எல்.எம்.சர்மா, எம்.என்.வெங்கடசல்லயா, ஏ.எம்.அகமதி, ஜெ.எஸ்.வர்மா, எம்.எம்.பூஞ்சி, ஏ.எஸ்.ஆனந்த், எஸ்.பி.பருச்சா, பி.என்.கிரிபால், ஜி.பி.பட்நாயக், ராஜேந்திர பாபு, ஆர்.சி.லகோதி, வி.என்.கரே, ஒய்.கே.சபர்வால் ஆகிய 16 நீதிபதிகளில், 8 நீதிபதிகள் நிச்சயமாக ஊழல்வாதிகள், 2 நீதிபதிகள் ஊழல்வாதிகளா அல்லது ஊழலற்றவர்களா என்பதைக் கூற முடியவில்லை, 6 நீதிபதிகள் உறுதியாக நேர்மையானவர்கள் என்று கூறியதோடு அல்லாமல், இதில் யார் யார் எந்தப் பட்டியலில் வருகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு அதனை ‘சீலிட்ட உறையில்’ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் சாந்தி பூஷன்.

பிரசாந்த் பூஷன் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்திய தலைமை நீதிபதி கப்பாடியா மீது கூறும் குற்றச்சாட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நீதிபதி கப்பாடியா பணம் பெற்றுக் கொண்டு ஊழல் செய்தவராக கூறப்படாவிட்டாலும், அவர் தனக்கு வேண்டப்பட்ட கம்பெனிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார் என்பதும் ஊழலின் ஒரு பகுதி என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

பிரபலமான ‘ஸ்டெர்லைட் ஆலை’ தனது சுத்திகரிப்புத் திட்டம் ஒன்றை ஒரிசா மாநிலத்திலுள்ள லஞ்சிகார்க் என்னும் ஊரிலுள்ள வனப் பகுதியில் தொடங்க ‘வேதாந்தா அலுமினா லிட்’ என்ற தன்னுடைய துணை நிறுவனத்திற்கு மாற்றியது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், பழங்குடியின மக்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தனக்கு கீழுள்ள நிபுணர் குழு (Centrally Empowered Committee - CEC) ஒன்றை 12.05.2005-ல் அமைத்தது. இக்குழு விரிவான விசாரணை மேற்கொண்டு தனது அறிக்கையை செப்டம்பர் 2005-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில் ‘வேதாந்தா தனது சுத்திகரிப்பு திட்டத்தோடு, சுரங்கத் திட்டத்தையும் தொடங்குவதை மறைத்து சுற்றுச்சூழல் அனுமதியை முறைகேடாக பெற்றுள்ளது. இத்திட்டத்திற்காக நியம்கிரி மலைப் பகுதியில் சுத்திகரிப்பு ஆலைக்காக 58.93 ஹெக்டர் வன நிலமும், சுரங்கத்திற்காக 672.018 ஹெக்டர் வன நிலமும் தேவைப்படுகிறது. இதனால், வன நிலங்களும், காடுகளும், விலங்குகளும், நீர் நிலைகளும், அரிய வகை உயிரினங்களும் அழிந்துப் போகும். காட்டையே நம்பியிருக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிந்துப் போகும். மேலும், இத்திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அனுமதி அளித்ததன் மூலம் அளவற்ற உதவி செய்துள்ளது. பெரும் நிதி முதலீடு உடைய இத்திட்டம் குறித்து சுற்றுச்சூழல், வனம் ஆகிய கோணங்களில் தொடக்கத்திலேயே எதிர்ப்பு வந்ததால், இந்த இடத்தில் இந்த திட்டத்தைத் தொடங்குவதைக் கைவிட வேண்டும். மேலும், மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை திரும்பப் பெற வேண்டும். அதுவரையில் அங்கு எந்தப் பணியும் நடக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று தெளிவாக கூறியிருந்தது.

இந்த வழக்கு 26.10.2007-ல் உச்சநீதிமன்றத்தில் வனம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு அறிக்கைப் பற்றி எதுவும் விவாதிக்காமலும், இத்திட்டத்திற்கு அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய பழங்குடியினர் சார்பில் தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீது வாதிட அவர்களது வழக்கறிஞ்ர் சஞ்சய் பாரிக்கை அனுமதிக்காமலும் நேரிடையாக சுரங்கம் அமைப்பது தொடர்பான வரைமுறைகள் குறித்து விவாதம் நடந்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தி வரும் வேதாந்தா, ஒரிசா அரசு, மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை மற்றும் நீதிமன்றம் அமைத்த நடுநிலை விரிவுரையாளரான (Amicus Curiae) ஜீனியர் வழக்கறிஞர் உதய லலித் ஆகியோரின் வாதங்களை மட்டுமே நீதிபதிகள் செவிமடுத்தனர்.

இவ்வழக்கில் 23.11.2007 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை நீதிபதி கப்பாடியா எழுதியிருந்தார். அதில் ’வேதாந்தா அலுமினியா லிட்’ கீழுள்ள ஸ்டெர்லைட் ஆலை இத்திட்டத்தை தொடங்க விண்ணப்பிக்கலாம்’ எனக் கூறியிருந்தார். மேலும், நிபுணர் குழு சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததை ஆட்சேபித்தும், அதற்கு ஆதராவாக பல்வேறு காரணங்களையும் கூறியிருந்ததைச் சுட்டிக் காட்டிய நீதிபதி கப்படியா, ‘இன்னொரு பக்கம் லஞ்சிகார்க் பகுதியிலுள்ள பழங்குடியினர் உள்ளிட்ட உள்ளூர் மக்கள் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு ஒழுங்கான வீடுகள் இல்லை. மருத்துவமனைகள் இல்லை. பள்ளிக்கூடங்கள் இல்லை. அங்கு மக்கள் மிகவும் வறுமை நிலையில் வாழ்கின்றனர் எனபதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. இந்திய பொருளாதாரம் அண்மைக் காலமாக வளர்ந்து வருகிறது. இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இந்த இரண்டு எல்லைகளையும் கணக்கில் கொண்டு இந்த நீதிமன்றம் சுற்றுச் சூழல் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும், வளர்ச்சி (Sustainable Growth) கொள்கைகளையும் மனத்தில் கொண்டுள்ளது’ எனக் கூறி அனுமதி வழங்கியுள்ளார்.

வேதாந்தா தொழிலாளர் சட்டங்களையும், மனித உரிமைகளையும் கடைப்பிடிக்காததால் நார்வே நாட்டினால் கறுப்புப் பட்டியலில் (Black Listed) வைக்கப்பட்டுள்ள நிறுவனமாகும். கறுப்புப் பட்டியலில் உள்ளதால் வேதாந்தாவிற்கு அனுமதி அளிக்க மறுத்த நீதிமன்றம் அதன் கீழுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தான் அமைத்த நிபுணர் குழு அறிக்கையை உச்சநீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்தது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியின மக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களையும் நீதிமன்றம் பரிசீலிக்க தவறியது.

மேலும், இது தொடர்பாக அதே நீதிபதிகள் மற்றொரு உத்தரவை 8.8.2008-ல் பிறப்பித்தனர். அதில், இத்திட்டத்திற்காக நியம்கிரி மலைப் பகுதியில் சுத்திகரிப்பு ஆலைக்காக 58.93 ஹெக்டர் வன நிலத்தினையும், சுரங்கத்திற்காக 672.018 ஹெக்டர் வன நிலத்தினையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறியிருந்தனர். சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை வழங்கிய அனுமதியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பு வழங்கியது ஆச்சரியத்தை அளிக்கிறது.

இதனிடையே, நீதிபதி கப்பாடியா ஸ்டெர்லைட் ஆலையில் பங்குதாரராக இருந்தார் என்பது குறித்து பிரசாந்த் பூஷன் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார். ஆனால், இந்த வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் தவிர யாரும் இந்த வழக்கிலிருந்து நீதிபதி கப்பாடியா விலகிக் கொள்ள வேண்டுமென கோரவில்லை. இந்தியாவிலும் சரி, சர்வ தேச அளவிலும் சரி ஒரு நீதிபதி வழக்கில் தொடர்புடையவர்களோடு சிறிய அளவில் தொடர்பு இருந்தாலும் அந்த வழக்கிலிருந்து சம்பந்தப்பட்ட நீதிபதி விலகிக் கொள்வதே நெறியாகும். ஆனால், நிதிபதி கப்படியா அவ்வாறு செய்யாமல் வழக்கை நடத்தியதோடு அந்த நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது “ஊழல்” இல்லாமல் வேறு என்ன?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்றைப் பதம் பார்த்தால் போதும் என்பது போல தற்போதைய இந்திய தலைமை நீதிபதியின் நிலையே இதுவென்றால் மற்ற நீதிபதிகளின் நிலைக் குறித்து இங்குக் கூறத் தேவையில்லை.

நீதித்துறையில் அளவற்ற ஊழல் புரியும் நீதிபதிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? நீதிபதிகள் மக்களுக்குப் பொறுப்பாகுதல் குறித்து தற்போது மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள சட்டம் இவற்றைக் கட்டுப்படுத்துமா? என்பது பற்றி பிறகுப் பார்ப்போம்.


தொடரும்...

நன்றி: மக்கள் உரிமை.

Saturday, October 09, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. (1)

‘மை லாட்’ என அழைப்பதன் மூலம் கடவுளுக்குச் சமமாக கருதப்பட்ட நீதிபதிகள் ஊழல் நிறைந்தவர்களாக இருப்பது நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைத்து வருகிறது. நீதிபதிகளின் ஊழல் குறித்து வெளிப்படையாக பேசுவதையே நீதிபதிகள் குற்றம் என எண்ணுவது நீதிபதிகளின் நேர்மையை கேள்விக்குள்ளாகுகிறது.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.டி.தினகரன் புறம்போக்கு நிலங்களையும், தலித் மக்களின் நிலங்களையும் சட்டத்திற்குப் புறம்பாக அபகரித்து வைத்திருந்ததற்காகவும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் பெரும் ஊழலில் ஈடுபட்டதற்காகவும் இருவரையும் பணிநீக்கம் செய்வதற்கான நாடாளுமன்றத்தின் முன் குற்றச்சாட்டும் (Impeachment), அதன்மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது. அதேபோல், காசியாபாத்தில் நீதிபதிகள் அரசு ஊழியர்களின் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை கைடால் செய்ததும், சட்டீஸ்கரில் ஒரு நீதிபதி வீட்டின் முன்பு பையில் பல லட்சம் ரூபாய் பணம் கிடந்ததும் நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. 

நீதித்துறையின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நடந்து வரும் “நீதிமன்ற அவமதிப்பு” வழக்கு ஒட்டுமொத்த நீதித்துறையின் நீதி வழங்கும் முறையையே காலியாக்கி விடும் போல் உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர் கொண்டிருக்கும் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும் 26 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் மூத்த வழக்கறிஞர். மேலும், 1991 முதல் நீதித்துறையில் நிலவும் ஊழலுக்கு எதிராகவும், நீதிமன்ற பொறுப்புரிமைக்காகவும் (Judicial Accountability) போராடி வருபவர். இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷனின் மகன் என்பதை அறிவோம்.

பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு ஏன்? கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ல் வெளிவந்த ‘டெகல்கா’ இதழில் ‘கடைசியாக இருந்த 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல்வாதிகள். இதை எங்களால் நிரூபிக்க முடியாது. பூஞ்சி, ஆனந்த், சபர்வால் ஆகியோருக்கு எதிராக எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே அவர்களை நீக்க கோரினோம்’ என பேட்டி அளித்தது தான் காரணம்.

மேலும் அவர் ‘ஊழல் நீதிபதிகளை நீக்க பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் குற்றச்சாட்டு (Impeachment) நடைமுறை சத்தியமற்றது. அதற்கு 100 எம்.பி.க்களின் கையெழுத்து தேவைப்படுகிறது. ஆனால், இவற்றை பெற முடிவதில்லை. ஏனென்றால், பல எம்.பி.க்களின் தனிப்பட்ட அல்லது அவர்களது கட்சி சார்ந்த வழக்குகள் இந்த நீதிபதிகளின் முன்பு நிலுவையில் உள்ளன. நீதிபதி பல்லாவிற்கு எதிராக பாராளுமன்றத்தின் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பா.ஜ.க. கையெழுத்திட மறுத்துவிட்டது. அந்த நீதிபதி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானியை விடுதலை செய்தவர். அந்த நீதிபதி நொய்டாவில் ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலத்தினை வெறும் 4 லட்சம் ரூபாய்க்கு பெரும் நில வணிகர் ஒருவரிடம் வாங்கியது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. அந்த நில வணிகர் சம்பந்தப்பட்ட வழக்குகள் பல அந்த நிதிபதியின் கீழுள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன.

அடுத்து ரிலையன்ஸ் பவர் தொடர்பானது. அதாவது அவரது மகன் ரிலையன்ஸ் பவரின் வழக்கறிஞராக இருந்தார். நீதிபதி பல்லா லக்னோவில் நீதிபதியாக இருந்த போது இதுகுறித்து ஒரு தனி நீதிமன்றத்தை (Special Bench) அமைத்தார். அவர் ஒரு நீதிபதி வீட்டில் இரவு 11 மணி வரை நடந்த வழக்கு விசாரணையில் அமர்ந்துக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக தடை உத்தரவு கொடுத்தார். நாங்கள் நீதிபதி பல்லா மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை நீதிபதி சபர்வாலிடம் கேட்டோம், அவர் மறுத்துவிட்டார்.

அதேபோல், வீஜேந்தர் ஜெயின் தன் பேத்தியை தன் வீட்டில் திருமணம் செய்துக் கொடுத்த ஒருவரது வழக்கை நடத்தி அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கினார். இதுபற்றி மிக குறிப்பான புகார்கள் கொடுத்தும் இந்திய தலைமை நீதிபதி இதுகுறித்து உள்விசாரணை நடத்தவில்லை. அந்த நீதிபதிகள் அனைவரும் தலைமை நீதிபதியானார்கள். பல்லா இன்னமும் ராஜஸ்தானின் தலைமை நீதிபதியாக உள்ளார். வீஜேந்தர் ஜெயின் பஞ்சாப் மற்றும் அரியானா தலைமை நீதிபதியானார்.

நீதிபதி கப்பாடியா ஒரிசாவிலுள்ள நியம்கிரி சுரங்க குத்தகை வழக்கை தீர்மானித்தார். வேதாந்தா நார்வே அரசால் கருப்புக் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதால் அதற்கு குத்தகை கொடுக்க முடியாது என்று கூறினார். பின்னர், வேதாந்தாவின் கீழுள்ள வெளிப்படையான பட்டியலில் (Publicly Listed) உள்ள ஸ்டெர்லைட் கம்பெனிக்கு அந்த குத்தகையைக் கொடுத்தார். அது வெளிப்படையான பட்டியலில் உள்ளது ஏன் தெரியுமா, அதில் எனக்கு பங்கு உள்ளது என  நீதிபதி கப்பாடியா கூறினார். அதனால் தான் அதற்கு ஆதரவாக அவர் உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதிகள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டு வழக்கு நடத்துவதற்கு எதிராக சட்டம் உள்ளது. ஆனால், அவர்கள் அதனை சுலபமாக தாண்டிவிடுகின்றனர். நீங்கள் இதற்கு எதிராக புகார் செய்ய முடியாது, ஏனென்றல் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும்’ என நீதித்துறையில் நிலவும் எல்லையற்ற ஊழல் பற்றி மிகத் தெளிவாகவும், ஆழமாகவும் அந்த பேட்டியில் பிராசாந்த் பூஷன் கூறியிருந்தார். நீதிபதி கப்பாடியா தற்போது இந்தியாவின் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. 

டெகல்காவிற்கு அளித்த இந்த பேட்டியால் பிரசாந்த் பூஷன் தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இதற்காக ஒருவேளை அவர் தண்டிக்கப்படலாம். ஆனால், உச்சநீதிமன்றம் தனக்கு எதிராக ஒரு “பண்டோரா பாக்சை” திறந்துவிட்டது. இந்த வழக்கில், பிராசந்த் பூஷன் மற்றும் மகனைக் காப்பாற்ற அவரது தந்தையார் சாந்தி பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களில் ஆதாரத்தோடு கூறப்பட்டுள்ள நீதிபதிகளின் ஊழல்கள் “நீதித்துறையைக் கறைபடிய” செய்துள்ளது. அவற்றைப் பிறகுப் பார்ப்போம்.

தொடரும்...

நன்றி: மக்கள் உரிமை 

Wednesday, September 08, 2010

ஊழல் அதிகாரி அரிகரனைப் பாதுகாக்கும் தலைமைச் செயலக அதிகாரிகளுக்குக் கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 08.09.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

லலித் கலா அகாடமியின் அதிகாரி அரிகரனை பணி நீக்கம் செய்து அமைச்சர் கோப்பில் கையெழுத்திட்ட பின்பும், அவருக்கு பதவி நீக்க ஆணையை வழங்காமல் அவரை பாதுகாக்கும்  நோக்கோடு செயல்படும் தலைமைச் செயலக அதிகாரிகளின் போக்கை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிகிறோம்.

லலித் கலா அகாடமியின் அதிகாரி அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதல்வராக இருந்த போது செய்த ஊழல், முறைகேடு, அரசு அனுமதியின்றி வெளிநாடு சென்றது குறித்து  விசாரிக்க அரசு உயர் அதிகாரிகளான தேவநீதிதாஸ், ராகேஷ் சந்திரா மற்றும் ஏ.எப்.டி. மேலாண் இயக்குநர் எஸ்.டி. சுந்தரேசன் ஆகியோர் தலைமையில் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த விசாரணைக் குழுக்கள் முன்பு அரிகரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பலவும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

 இதனைத் தொடர்ந்து ஊழல் அதிகாரி அரிகரனை பணிநீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில், கடந்த மார்ச் 23 அன்று மாணவர்களைத் திரட்டி சட்டசபை முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். தற்போது அவரை பணிநீக்கம் செய்து கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் ஷாஜகான் உத்தரவிட்டுள்ளார். 

ஆனால், அரிகரனை பணிநீக்கம் செய்துள்ள கோப்பு தற்போது கலைப் பண்பாட்டுத் துறை செயலர் வசம் உள்ளது. அரிகரனுக்கு பணிநீக்க ஆணை வழங்குவதைத் தடுத்து, அவரை பாதுகாக்கும் வகையில் தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் செயல்படுவதாக தகவல் வந்துள்ளது. தவறு செய்த அதிகாரியைப் பாதுகாப்பது அரசு நிர்வாகத்தையே சீர்குலைத்து விடும் என அரசுக்குச் சுட்டிக்காட்டுகிறோம்.

 மேலும், அரிகரன் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லும் வகையில் அவருக்கு வெளிநாடு செல்ல தலைமைச் செயலக அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளதாகவும் தெரிகிறது. துறை நடவடிக்கையை எதிர்நோக்கி இருக்கும் அதிகாரியை வெளிநாட்டிற்குச் செல்ல அனுமதிப்பது ஊழல், முறைகேட்டிற்குத் துணைப் போவதாகும்.  

 எனவே, இதில் துணைநிலை ஆளுநர் அவர்கள் தலையிட்டு ஊழல் அதிகாரி அரிகரனுக்கு உடனடியாக பணிநீக்க ஆணையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வெளிநாடு செல்ல வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

Wednesday, June 30, 2010

புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி ஊழல் முறைகேடு: கண்டன ஆர்ப்பாட்டம்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி நடந்த மோசடியில் தொடர்புடைய இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 2-ந் தேதியன்று காலை 10 மணியளவில், பெருந்தலைவர் காமராசர் கல்வித் துறை வளாகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் சீ.சு.சாமிநாதன், பெற்றோர் ஆசிரியர் மாணவர் நலச் சங்கத் தலைவர் மு.நாராயணசாமி, புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கப் பொதுச்செயலாளர் பா.சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் புதுச்சேரியின் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.

மதிப்பெண் திருத்தி ஊழல், மோசடி செய்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முறைகேடாக தேர்வுச் செய்யப்பட்ட ஆசிரியர் நியமனப் பட்டியலை ரத்து செய்து தற்போது அவர்களுக்கு நடந்து வரும் பயிற்சி வகுப்பையும் ரத்து செய்ய வேண்டும். புதிதாக ஆசிரியர்களை முறையாகவும், வெளிப்படையாகாவும் தேர்வுச் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Thursday, June 17, 2010

மதிப்பெண்களைத் திருத்தி ஆசிரியர் நியமனத்தில் ஊழல், மோசடி: பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 16.06.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் தற்போது நடந்து முடிந்த ஒப்பந்த ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வில் மதிபெண்களைத் திருத்தி ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை சார்பில் 131 ஒப்பந்த ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 25.05.2010 அன்று இணையத் தளத்தில் வெளியிடப்பட்டன. இதன்படி பழனியம்மாள் என்பவர் பெற்ற மதிப்பெண் சதவிகிதம் 44.6203 ஆகும். காத்திருப்போர் பட்டியலில் உள்ள குமுதம் என்பவரது மதிப்பெண் சதவிகிதம் 43.7817 ஆகும். ஆனால், இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த பட்டியலுக்கு மாறாக கல்வித் துறை அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்த பட்டியலில் பலரது மதிப்பெண்கள் திருத்தப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது, மேலே கூறப்பட்டுள்ள பட்டியலின்படி பழனியம்மாள் பெற்ற மதிப்பெண் 44.6203 என்பதை 44.1203 என குறைக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குமுதம் பெற்ற மதிப்பெண் 43.7817 என்பதை 44.1817 என மதிப்பெண் கூடுதலாக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது. இதனால், நியாயப்படி பழனியம்மாளுக்கு கிடைக்க வேண்டிய ஆசிரியர் பதவி மதிப்பெண் திருத்தப்பட்டதால் தன்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்ற குமுதம் என்பவருக்கு கிடைத்துள்ளது. இதேபோல், பலருடைய மதிப்பெண்கள் திருத்தப்பட்டு வேண்டியவர்களுக்குப் பதவி அளிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பழனியம்மாள் 26.06.2010 மதியம் 2.00 மணிக்குப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடம் நேரில் சென்று புகார் கூறியுள்ளார். ஆனால், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வித் துறை இயக்குநர் இணையதளத்தில் வெளியிட்டதில் தவறு ஏற்பட்டதாக கூறி, அவசரம் அவசரமாக இணையதளத்தில் இருந்த பட்டியலை மாற்றி மதிப்பெண் திருத்தப்பட்ட புதிய பட்டியலை மதியம் 4.00 மணியளவில் வெளியிட்டுள்ளார். அதுவரையில், ஏற்கனவே முடிவு வெளியிடப்பட்ட இணையதளப் பக்கத்தை கல்வித் துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.

மேலும், இந்த மதிப்பெண் திருத்தியது குறித்து மாணவர் மற்றும் சமூக நல அமைப்புகள் கல்வித் துறை இயக்குநரிடம் எடுத்துக் கூறி ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை கோரியுள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணையை உடனடியாக வழங்கியுள்ளார். இதனால், ஆசிரியர் நியமனத்தில் ஊழல், முறைகேடு நடந்துள்ளது உறுதியாகியுள்ளது.

எனவே, புதுச்சேரி அரசு உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுப்படுத்த இதுகுறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள கல்வித் துறை இயக்குநர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதிப்பெண்களைத் திருத்தி வழங்கப்பட்ட ஆசிரியர் நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வெளிப்படையான, ஊழலற்ற முறையில் மீண்டும் தேர்வு நடத்தி ஒப்பந்த ஆசிரியர் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல், ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மக்களைத் திரட்டி போரட்டத்தில் ஈடுபட நேரிடும் என அரசை எச்சரிக்கிறோம்.

Tuesday, March 02, 2010

லலித் கலா அகாடமி அதிகாரி அரிகரனை பணி நீக்கம் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 02.03.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

லலித் கலா அகாடமி மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரி அரிகரன் அரசு அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் சென்றது தொடர்பாக அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

லலித் கலா அகாடமி மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியான அரிகரன் பாரதியார் பலகலைக்கூடத்தின் முன்னாள் முதல்வர் ஆவார். இவர் கடந்த 2007, 2008 ஆண்டுகளில் அரசின் முன் அனுமதியின்றி அமெரிக்காவிற்கு பலமுறை சென்று வந்துள்ளார். அரசு ஊழியர்களின் நடத்தை விதிப்படி ஒரு அரசு ஊழியர் வெளிநாடு செல்ல முன் அனுமதி பெற வேண்டும் எனபது கட்டாயம்.

இதுகுறித்து அரசுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட புகார்களின் அடிப்படையில் அரசு ஏ.எப்.டி. பஞ்சாலையின் இணை நிர்வாக இயக்குநர் எஸ்.டி.சுந்தரேசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணை அதிகாரி உரிய விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அண்மையில் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த விசாரணை அறிக்கையில் அரிகரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன.

மேலும், அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தின் முதல்வராக இருந்த போது பல்வேறு ஊழல், முறைகேடுகள், கையாடல், நிர்வாக குளறுபடிகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அரசு அப்போதைய உள்ளாட்சி துறை இயக்குநர் தேவநீதிதாஸ் மற்றும் கலெக்டர் ராகேஷ் சந்திரா ஆகியோர் தலைமையில் இரண்டு விசாரணைக் குழுக்களை அமைத்தது. அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளும் அவருக்கு எதிராகவே உள்ளன.

தவறிழைத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அதிகாரிகள் அவரை பாதுகாத்து வருகின்றனர். பாரதியார் பல்கலைக்கூட முதல்வராக இருந்த போது அவருக்கு எதிராக மிகப் பெரும் போராட்டம் நடத்தியதன் விளைவாகவே அவர் அங்கிருந்து மாற்றப்பட்டார். அதன்பின் அவர் லலித் கலா அகாடமியின் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்ற டிசம்பர் 1999 முதல் டிசம்பர் 2009 வரையில் எந்தவித பணியும் செய்யாத அவருக்கு அரசு 30 லட்சத்து 58 ஆயிரத்து 280 ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளது.

எனவே, புதுச்சேரி அரசு குற்றமிழைத்த அதிகாரி அரிகரனை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். இக்கோரிகையை வலியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதியன்று சட்டசபை முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.

Thursday, February 18, 2010

புதுச்சேரியில் மது தயாரிக்கும் நிறுவனம் வரி ஏய்ப்பு மூலம் ரூ. 5 கோடி மோசடி: சி.பி.ஐ விசாரணைக்கு கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 18.02.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

கூடுதல் கலால் வரி கட்டாமல் அரசை ஏமாற்றி சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட்டு உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி துணை நிலை ஆளுநருக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் இன்று மனு அளித்துள்ளோம்.
   
மும்பையைச் சேர்ந்த திலக்நகர் இன்டஸ்ட்ரீஸ் லிட் என்ற நிறுவனம் ‘மேன்ஷன் ஹவுஸ் பிராண்டி’ உள்ளிட்ட மது வகைகளை தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது. இந்த மது வகை தயாரிக்கப்படும் மொத்த அளவில் 80 சதவீதம் புதுச்சேரி உள்ளிட்ட தென் இந்தியாவில் விற்பனைச் செய்யப்படுகிறது.

இந்த நிறுவனம் கூடுதல் கலால் வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றி சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. புதுச்சேரி அரசு மக்களுக்குத் பல்வேறு திட்டங்களுக்காக செலவிடும் மொத்த தொகையில் 70 சதவீதம் கலால் வரி மூலம் ஈட்டுகிறது.
   
புதுச்சேரி அரசு மது தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு 58 சதவீத விற்பனை வரி விதித்துள்ளது. புதுச்சேரியிலுள்ள நான்கு மது தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இந்த விற்பனை செலுத்துவதில் இருந்து வரி விலக்கு அளித்துள்ளது. இதனால், பல்வேறு மது தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த தொழிற்சாலைகளில் மதுவை நிரப்பி விற்பனைச் செய்வதன் மூலம் குறுக்கு வழியில் வரி விலக்கை அனுபவித்து வருகின்றன. இதனால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
   
இந்நிலையில், புதுச்சேரி அரசு இந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட கூடுதல் கலால் வரி விதித்து அரசாணை ஒன்றை கடந்த 23.04.2007 அன்று வெளியிட்டது. அதில், பல்வேறு வரிக் கட்டண வரம்புகளை நிர்ணயித்துள்ளது. மேற்சொன்ன மது தயாரிக்கும் நிறுவனம் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. 850 முதல் ரூ. 1049-ஐ வரம்பாக வைத்து மது தயாரிப்பதாக அரசுக்கு தெரிவித்தது. இதன்படி ஒரு கேஸ் மது விற்பனைக்கு அரசுக்கு ரூ. 522 கூடுதல் கலால் வரி செலுத்தி வருகிறது. மேற்சொன்ன ரூ. 850 முதல் ரூ. 1049 வரம்பை தாண்டினால் கூடுதலாக கலால் வரி கட்ட வேண்டும்.

இந்நிலையில், இந்த வரையறுக்கப்பட்ட வரம்பை மீறி அரசை ஏமாற்றும் நோக்கத்தோடு மேற்சொன்ன நிறுவனம் மது தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த வரம்பைத் தாண்டி ரூ. 1050 முதல் ரூ. 1349 என்ற அடுத்த வரம்பு அளவுக்கு மது தயாரித்தால் ஒரு கேசுக்கு    ரூ. 99 கூடுதலாக கலால் வரி செலுத்த வேண்டும். மேற்சொன்ன மது நிறுவனத்தினர் இந்த கூடுதல் தொகையை ஆண்டு விற்பனை லாபமாக கணக்குக் காட்டி, அந்த தொகையை மது விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோரிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். இதனால், வரியாக அரசுக்குச் சேர வேண்டிய தொகை முதலாளிகளிடமே திரும்பவும் சென்றுவிடுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவனம் புதுச்சேரியில் மொத்தம் 5 லட்சம் மதுப் பாட்டில்களை விற்பனைச் செய்து, அதன் மூலம் ரூ. 300 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதன்படிப் பார்த்தால் அரசுக்கு சேர வேண்டிய கூடுதல் கலால் வரி ரூ. 5 கோடியை திட்டமிட்டு ஏமாற்றி மோசடி செய்துள்ளது. இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஒரு நிறுவனத்தின் மோசடி கணக்கே பல கோடிகளைத் தாண்டும் போது இன்னும் இதுபோல புதுச்சேரியில் உள்ள பல்வேறு மது தயாரிக்கும் நிறுவனங்களின் கணக்கைப் பார்த்தால் புதுச்சேரி அரசுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு வரும் ஆபத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது.

புதுச்சேரி அரசு பல்வேறு மக்கள் நலம் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்த நிதி பற்றக்குறையால் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், இதுபோன்ற மோசடி தொடர்ந்து பல ஆண்டுகளாக நடப்பது கடும் கண்டனத்திற்குரியதோடு, அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து இதுபோன்று வரும் காலங்களில் நடக்காமல் தடுக்க வேண்டும். 

எனவே, புதுச்சேரி அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி, மோசடிக் குற்றம் செய்துள்ள  சம்பந்தப்பட்ட மது நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவும் வேண்டிக் கொள்கிறோம்.

Tuesday, February 03, 2009

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்றது!



சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் செயல் அதிகாரியை அரசு நியமித்தது சரிதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (02.02.2009) உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரவோடு இரவாக கோயில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது.

புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு ஊழல், முறைகேடு, சட்டவிரோத செயல்கள் நடந்ததையொட்டி, கடந்த 1987ஆம் ஆண்டு தமிழக அரசு அக்கோயிலை அரசுக் கட்டுபாட்டில் கொண்டுவர செயல் அதிகாரி ஒருவரை நியமித்தது. இதை எதிர்த்து, கோயில் நிர்வாக செயலாளர் பொன் தீட்சிதர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதிகாரி நியமனத்திற்குத் தடை உத்தரவு பெற்றார்.

இந்த தடையை நீக்கக் கோரி அரசு தரப்பிலும், நெடும் போராட்டத்தை நடத்தி நடராஜர் கோயிலில் தேவாரம் பாடி வரும் சிவனடியார் ஆறுமுகசாமி தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை நீதிபதி பானுமதி முன் கடந்த 22.01.2009 அன்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் குமார், அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமசாமி, அரசு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன், சிவனடியார் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, வழக்கறிஞர் சிவப்பிரகாசம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இந்த வழக்கில் நீதிபதி ஆர்.பானுமதி நேற்று உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில் நீதிபதி கூறி இருப்பதாவது:

'சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் சரியாக வைக்கப்படவில்லை என்பதும், கோயில் நகைகள் நிறைய காணாமல் போய் உள்ளது எனவும் தெரிகிறது.

இந்து அறநிலையத் துறை சட்டப்படி ஒரு கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக அரசுக்கு தகவல் வந்தால், செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதன்படி, செயல் அதிகாரியை அரசு நியமித்துள்ளது.
தீட்சிதர்கள் கணக்கு வழக்குகளை முறையாக கவனிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளின்படி, கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடந்தால் செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, செயல் அதிகாரியை நியமித்த அரசு உத்தரவு சரிதான். மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இந்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் தாக்கல் செய்த மனுவை இந்து அறநிலையத்துறை ஆணையர் விசாரித்து தள்ளுபடி செய்தது சரியானதுதான். கோயிலில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இதை முறையாக நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அரசு கருதுவது சரியானது. எனவே, கோயிலை நிர்வகிக்க இந்து அறநிலையத் துறை ஆணையர் ஒரு வாரத்தில் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் கோயிலை நிர்வாகம் செய்ய தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி பானுமதி உத்தரவில் கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, விழுப்புரம் இணை ஆணையர் திருமகளுக்கு பேக்ஸ் மூலம் நேற்று இரவு நடராஜர் கோயிலை அரசு ஏற்பது குறித்து கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட இணை ஆணையர் திருமகள் கடலூர் உதவி ஆணையர் ஜெகன்நாதன், செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், சிதம்பரம் ஏஎஸ்பி நரேந்திர நாயர் ஆகியோருடன் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயிலில் ஆலோசனை நடத்தினார். அப்போது சிதம்பரம் கோட்டாட்சியர் ராமலிங்கம், வட்டாச்சியர் தனவந்த கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சுமார் 15 நிமிடம் நடந்த ஆலோனைக்குப் பிறகு அனைவரும் நடராஜர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்த தீட்சிதர்களிடம் கடித நகலை கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்களின் வழக்கறிஞர் சிவக்குமார், “நீதிமன்ற உத்தரவு வேண்டும். இணை ஆணையரின் கடிதத்தை ஏற்க முடியாது” என்று கூறினார். தீட்சீதர்களும் வாக்குவாதம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து “நாங்கள் தீர்ப்பு நகலை வழங்கவில்லை. கடிதத்தின் நகலைத்தான் கொடுக்கிறோம்” என்று அதிகாரிகள் கையெழுத்திட்டு கடிதத்தை கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் திருமகள் கூறுகையில், “நடராஜர் கோயில் செயல் அலுவலராக தில்லை காளியம்மன் கோயில் பொறுப்பை வகிக்கும் கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கம் போல் பூஜை நடைபெறும். தேவாரம், திருவாசகம் தொடர்ந்து பாடப்படும். அரசு என்ன உத்தரவிட்டுள்ளதோ அதன்படி எல்லாம் நடைபெறும்” என்றார்.

செயல் அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டது குறித்த அறிவிப்பு நோட்டீசை பொது தீட்சிதர்கள் செயலக அலுவலக நோட்டீசை போர்டில் அதிகாரிகள் நேற்று இரவு ஒட்டினர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததன் மூலம், பல ஆண்டுக் கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது தமிழ் ஆர்வலர்களுக்கும், பொது மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் லீலைகள் – சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை!

Thursday, December 11, 2008

புதுச்சேரி: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி விலக வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.12.2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான வருவாய்த் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உடனடியாக பதவி விலக வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி பகுதியான ஏனாமில் தனக்குச் சொந்தமான இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு சட்டத்திற்குப் புறம்பாக, முறைகேடாக அராசாங்க நிதியை ஒதுக்கியதன் மூலம் ஊழல் புரிந்துள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அவ்வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டிற்கு ஆளானவர் புதுச்சேரி அரசின் உயர்பொறுப்பில் உள்ளவர் என்பதால், வழக்கு விசாரணை நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றுமில்லாமல் போனதும் கவனிக்கத்தக்கது.

அமைச்சர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்க வேண்டிய முதலமைச்சர் வைத்திலிங்கம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை பாதுகாக்கும் நோக்கோடு அனைத்து அமைச்சர்களையும் உடன் வைத்துக் கொண்டு பேட்டியளித்தது நீதிமன்ற விசாரணையை திசை திருப்புவதோடு, ஊழலை மூடிமறைக்கும் செயலாகும்.

இந்நிலையில், வழக்கு விசாரணை நேர்மையாக, முறையாக நடைபெற வேண்டுமானால், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் பதவி விலக முன்வரவில்லை என்றால், அவரை பதவியை விட்டு நீக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களுக்கு மனு அனுப்ப உள்ளோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Sunday, June 29, 2008

புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது ஊழல் புகார்: தகவல் தர மறுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 24-06-2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கோரிய தகவல்களைத் தர மறுத்த தலைமைச் செயலக பொதுத் தகவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ஏனாமில் தனியார் கேஸ் நிறுவனம் ஒன்றுக்கு சுற்றுலா துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அனுமதி பெற்றுத் தந்துள்ளார். இது குறித்து எதிர்க்கட்சிகள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தியுள்ளன. மத்திய அரசுக்கும் புகார் மனுக்கள் அனுப்பியுள்ளன.

இந்நிலையில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி உரிய விசாரணை மேற்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டுமென தலைமைச் செயலர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஊழல் குற்ற்ச்சாட்டுகளை மூடிமறைக்க தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் முயற்சித்து வருவதாக தெரிகிறது.

ஊழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கோரியது குறித்த தகவல்களைத் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005’-ன் படி, தலைமைச் செயலக பொது தகவல் அதிகாரிக்கு (Public Information Officer) கடந்த 17-ந் தேதியன்று பதிவு அஞ்சல் மூலம் முறைப்படி விண்ணப்பித்து இருந்தோம்.

ஆனால், மேற்சொன்ன அதிகாரி விண்ணப்ப உறையை பிரித்துப் பார்த்துவிட்டு அந்த உறையை கடந்த 22-ந் தேதி திருப்பி அனுப்பியுள்ளார். இது தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

சட்டத்திற்குப் புறம்பான இந்த செயல் குறித்து தலைமைச் செயலரிடம் எழுத்து மூலம் புகார் செய்துள்ளோம். அதில், தகவல் தர மறுத்த பொதுத் தகவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளோம்.

மேலும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதான ஊழல், முறைகேடுகள் குறித்தும், புதுச்சேரி அரசு உயர் அதிகாரிகள் அதனை மூடிமறைப்பது பற்றியும் விரைவில் தில்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார் மனு அளிக்க உள்ளோம்.

Sunday, March 23, 2008

புதுச்சேரி: ஊழல் அமைச்சர்கள் சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்துக் கொள்ளக் கூடாது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 21-03-2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

நீதிமன்ற உத்தரவுப்படி ஊழல் வழக்குப் பதியப்பட்டுள்ள அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான் ஆகியோரை உடனடியாக பதவியை விட்டு நீக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

வரும் 25-ந் தேதி முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க இருக்கிற நிலையில், ஊழல் அமைச்சர்கள் இக்கூட்டத் தொடரில் கலந்துக் கொள்வது என்பது சட்டமன்ற ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் முரணானது. சட்டமன்ற கூட்டத் தொடருக்கு முன்னாள் ஊழல் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்து சட்டமன்ற மாண்பைக் காப்பாற்ற வேண்டும்.

ஊழல் அமைச்சர்கள் மீது நீதிமன்ற உத்தரவுப்படிதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் அமைச்சர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த புதுச்சேரி போலீசை அனைவரும் பாராட்டுகின்றனர். ஆனால், அமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் வழக்குப் போட்ட போலீஸ் மீது குறை சொல்வதும், ஊழலுக்கு வெளிப்படையாக துணைப் போவதும், குற்றத்தை நியாயப்படுத்துவதும் கண்டனத்திற்குரியது.

அண்மைக் காலமாக சில அமைச்சர்கள் சட்டத்திற்குப் புறம்பாகவும், சட்டமன்ற மரபுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளாட்சித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிப் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பத்திரிகைகளும் செய்தியாக வெளியிட்டுள்ளன.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியில் பேசியுள்ளது அவர் ஏற்றுக் கொண்ட ரகசியக் காப்புப் பிரமாணத்திற்கு எதிரானது. இது சட்டப்படி குற்றமாகும். இது குறித்து புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர், செயலாளர் ஆகியோரிடம் விரிவான புகார் மனு அளிக்க உள்ளோம்.

புதுச்சேரி அரசு ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆதரவாக இருப்பது குறித்து ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டவர்களுக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம்.

ஊழல் அமைச்சர்களுக்கு புதுச்சேரி அரசு ஆதரவாக இருப்பதால், இந்த அரசின் கட்டுபாட்டில் இருக்கும் போலீசார் மேற்கொள்ளும் விசாரணைக்குப் பல்வேறு வகையில் குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் வல்சராஜ் தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி போலீசார், அரசு வழக்கறிஞர் உரிய முறையில் ஆதாரங்களை முன் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது.

எனவே, அமைச்சர் வல்சராஜ், ஷாஜகான் மீதான ஊழல் வழக்கை உடனடியாக சி.பி.ஐ. விசாரணக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

புதுச்சேரி அமைச்சர் வல்சராஜ் பதவி விலக கோரி சட்டசபை முற்றுகை - 500 பேர் கைது!

demo-against-valsarajjpg.jpg

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி 13-03-2008 காலை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், மாகேயில் கூட்டுறவுத் தகவல் தொழில் நுட்ப மையத்திற்கு நிலம் வாங்கியதில் நடந்த ஊழல், முறைகேடுகள் தொடர்பாக புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் வழக்குப் புலன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அமைச்சர் இ.வல்சராஜை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், ஜனநாயக முன்னேற்றக் கழக அமைப்பாளர் பா.அழகானந்தம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, தமிழர் திராவிடர் கழகத் தலைவர் மு.அ.குப்புசாமி உள்ளிட்ட கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்துக் கொண்ட 150 பெண்கள் உட்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

Saturday, March 08, 2008

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள புதுச்சேரி அமைச்சர் வல்சராஜை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!


விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், ஜனநாயக முன்னேற்றக் கழக அமைப்பாளர் பா.அழகானந்தம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, தமிழர் திராவிடர் கழகத் தலைவர் மு.அ.குப்புசாமி உள்ளிட்ட கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் 07-03-2008 அன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு அளித்த மனு:

புதுச்சேரி மாநிலம், மாகேயில் கூட்டுறவுத் தகவல் தொழில் நுட்ப மையத்திற்கு நிலம் வாங்கியதில் நடந்த ஊழல், முறைகேடுகள் தொடர்பாக புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் வழக்குப் புலன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் இ.வல்சராஜ் தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடிப்பது என்பது வழக்கு விசாரணைக்குப் பல்வேறு வகையில் குந்தகம் விளைவிக்கும் என அஞ்சுகிறோம். அவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கு ஆவணங்களைத் திருத்தவும், சாட்சிகளைக் கலைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடைபெறாது. தார்மீக அடிப்படையிலும் அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.

எனவே, நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் இ.வல்சராஜ் தொடர்ந்து பதவியில் நீடிப்பதால், புதுச்சேரி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையின் விசாரணை முறையாகவும், நேர்மையாகவும் நடக்காது எனக் கருதுகிறோம்.

மேலும், ஊழல் அமைச்சர் இ.வல்சராஜ் ஆதரவாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வி.நாராயணசாமியும், சில அமைச்சர்களும் வெளிப்படையாகவே ஆதரவளிப்பதோடு, ஊழலுக்குத் துணைப் போவதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

எனவே, இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையால் வழக்குப் பதியப்பட்டு, வழக்கு விசாரணை நடந்துக் கொண்டிருக்கிற நேரத்தில், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள அமைச்சர் இ.வல்சராஜ் நடத்தும் கூட்டங்களில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையைப் பொறுப்பில் வைத்திருக்கும் தலைமைச் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துக் கொள்வது ஏற்புடையதாக இல்லை. குற்றம்சாட்டப்பட்டவரும், புலன் விசாரணை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறைப் பொறுப்பு வகிக்கும் அதிகாரியும் ஒன்றாக ஒரே இடத்தில் கூடிப் பேசுவது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதனால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

எனவே, இதுபோன்ற கூட்டங்களில் தலைமைச் செயலர் மற்றும் உயரதிகாரிகள் கலந்துக் கொள்வதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஊழல் அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வரும் 13-03-2008 வியாழனன்று புதுச்சேரி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.