Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Wednesday, October 09, 2024

சிபிஎஸ்இ 127 அரசுப் பள்ளிகளில் 126 பள்ளிகளுக்கு இணைப்பு அங்கீகாரம்: 1 பள்ளியின் நிலை குறித்து கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும்!

 


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.10.2024) விடுத்துள்ள அறிக்கை:

சிபிஎஸ்இ 127 அரசுப் பள்ளிகளில் 126 பள்ளிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் 1 பள்ளியின் நிலை குறித்து கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 10.09.2024 நாளிட்டு முதலமைச்சர் ரங்கசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், புதுச்சேரியில் உள்ள 127 அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இ முறைக்கு மாற்றி இணைப்பு (Affiliation) வழங்க வேண்டுமென முதலமைச்சர் கடந்த 29.12.2022 அன்று கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து சிபிஎஸ்இ உடன் கலந்தாலோசித்து பரிசீலித்ததில் 127 அரசுப் பள்ளிகளுக்கு இணைப்புக் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 127 பள்ளிகளில் 126 பள்ளிகள் பரிசீலிக்கப்பட்டு சிபிஎஸ்இ முறைக்கு மாற்றி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 பள்ளிக்கு முழுமையற்ற விண்ணப்பம் சமர்பித்ததால் சிபிஎஸ்இ இணைப்பு வழங்க முடியவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை சிபிஎஸ்இ-க்கு 10, 12ஆம் வகுப்புகளுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு பெற உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தோம். ஆனால், இதுவரையில் மேற்சொன்ன தேர்வுக் கட்டணம் செலுத்தியது குறித்து பள்ளிக் கல்வித்துறை உரிய விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில், சிபிஎஸ்இ இணைப்புப் பெறாத அந்த 1 பள்ளி எது? அப்பள்ளியின் நிலை என்ன? இந்தாண்டு அப்பள்ளியில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத முடியுமா? சிபிஎஸ்இ இணைப்புப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.

கல்வித்துறையில் சிபிஎஸ்இ விவகாரங்களைக் கவனிக்கும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் போதிய நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தால் இதுபோன்ற அவல நிலை ஏற்படுகிறது. இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசோ செயலற்று இருக்கிறது. இதனால், பாதிக்கப்பட போவது மாணவர்கள்தான் என்பதைப் புதுச்சேரி அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

Sunday, September 29, 2024

சிபிஎஸ்இ தேர்வுக் கட்டண நிதி ஒதுக்கீடு குறித்து கல்வித்துறை உண்மைக்கு மாறான அறிக்கை: முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!


 மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!! 

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.09.2024) வெளியிட்ட அறிக்கை:

சிபிஎஸ்இ 10, 12ஆவது வகுப்புத் தேர்வுக் கட்டண நிதி ஒதுக்கீடு குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிட்டுள்ளதால், இதுகுறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

சிபிஎஸ்இ 10, 12ஆவது தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென கடந்த 26.09.2024 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தோம். இது செய்தியாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறியதோடு, செய்தி வெளியிட்ட பத்திரிகைகளை மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் சிபிஎஸ்இ 04.10.2024 அன்றைக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று 04.09.2024 நாளிட்ட சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நிதித்துறையின் பட்ஜெட் அதிகாரியால் பட்ஜெட் மதிப்பீடு 26.09.2024 அன்று வழங்கப்பட்டுள்ளது. செலவீனங்கள் ஒப்புதல் பெற பரிசீலனையில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

அதாவது 04.09.2024 நாளிட்ட சிபிஎஸ்இ அனுப்பிய சுற்றறிக்கைக் கிடைத்தவுடன் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலதாமதமாக கடைசி நேரத்தில் நடவடிக்கை எடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், நிதி ஒதுக்கீடு இன்னமும் செய்யவில்லை பரிசீலனையில்தான் உள்ளது எனவும் கூறியுள்ளார். நிதி ஒதுக்கீடு குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்னமும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு கோப்புக்கு ஒப்புதல் பெற்று தேர்வுக் கட்டணம் செலுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

மேலும், அந்த அறிக்கையில் செய்தி வெளியிட்ட பத்திரிகைகளை மிரட்டும் தொனியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் அவலங்களையும் செயலற்ற போக்கையும் செய்தியாக வெளியிட்டால், அதைச் சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகியின் செயலாகும். அதைவிடுத்து உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்காத பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் பத்திரிகைகளை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. மேலும், இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.

எனவே, இது குறித்து முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Sunday, June 06, 2021

+2 தேர்வு முற்றிலும் ரத்து: கிராமப்புற மாணவர்களுக்கு அநீதியானது!

தமிழ்நாடு அரசின் +2 தேர்வு ரத்து என்ற அறிவிப்பு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்தானது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு (NEET, JEE) மூலம் உயர்கல்விச் சேர்க்கை நடத்தாமல் இருக்கவும் முடியாது. மத்திய பாஜக அரசு இதில் உறுதியாக இருக்கிறது. கல்வி மத்திய பட்டியலில் இருப்பதால் மாநில அரசு தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது.

நீட் நுழைவுத் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீண்ட காலம் ஆகும். அதன் பின் தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையின் மீது கொள்கை முடிவெடுத்து செயல்படுத்த இன்னும் காலதாமதம் ஏற்படும். இதுவொரு வகையில் நீட்டை தடுக்க சட்ட ரீதியாக எடுக்கும் முயற்சியாக கருதினாலும், அது உடனே நடக்கக்கூடிய சாத்தியக்கூறு இல்லை.

நுழைவுத் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவித்தார் பிரதமர் மோடி என்ற கல்வியாளர்களின் கருத்தும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு +2 தேர்வை ரத்து செய்திருப்பது ஏற்புடையதல்ல. நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே சேர்க்கை நடக்குமானால் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் நிலைக் கவலைக்குரியதாகும். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு ஓரளவுக்குப் பயனளித்தாலும் அது போதுமானதல்ல.

மதிப்பெண் போடுவதில் நிறைய குளறுபடிகள், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. அரசிடம் மதிப்பெண் போடுவது பற்றி ஒரு தெளிவான கொள்கை இதுவரையில் இல்லை. இதில் அரசுக்குப் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் வரும். பள்ளிகளிடம் மதிப்பெண் போடும் பணியை ஒப்படைத்தால், அதில் சமநிலை இருக்க வாய்ப்பில்லை. இது மேலும் மாணவர்களின் கல்வியையும் மனநிலையையும் பாதிக்கக்கூடும்.

கல்வியாளர்கள் கூறுவது போல தேர்வு வைத்து, அதன் அடிப்படையில் உயர்கல்விச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். குறைந்த பாடத் திட்டத்துடனும், நேரம் குறைத்தும் தேர்வு நடத்தி இருக்கலாம். அதிக தேர்வு மையங்களை உருவாக்கி, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தி இருக்கலாம். விடைத்தாள் திருத்தம்கூட சற்று தாராளமாக திருத்தி இருக்கலாம்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டதற்கு 60% பேர் தேர்வு நடத்த வேண்டுமென கூறியுள்ளனர். அதேபோல், அகரம் அமைப்பு சார்பில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600 மாணவர்களிடம் கருத்துக் கேட்டதற்குத் தேர்வு நடத்த வேண்டுமென 67% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த 600 மாணவர்களும் அகரம் அமைப்பிடம் கல்வி நிதியுதவிக் கேட்டு விண்ணப்பித்த ஏழை, எளிய மாணவர்கள். அதோடு, இதுகுறித்து தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தேர்வு நடத்த வேண்டுமென பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

தற்போதைய முடிவு மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள கூடாது என்று தமிழ்நாடு அரசு எடுத்த முடிவாகவே தெரிகிறது. மேலும், இம்முடிவு தனியார் பள்ளிகள் போன்ற மேல்தட்டினர் பயிலும் பள்ளிகளுக்கு உவப்பாகவும் வாய்ப்பாகவும் அமையும். நுழைவுத் தேர்வு என்ற ஒற்றை இலக்கில் மாணவர்களைத் தயார்படுத்தி உயர்கல்வியைக் கைப்பற்றும் சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிகளின் நோக்கத்திற்கு வலுசேர்ப்பதாகும்.

ஏற்கனவே கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விநிலை மிகவும் பின்தங்கிய நிலையியே உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இம்முடிவு கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும் பாதகமாகவே அமையும்.

இந்தச் சூழ்நிலையில், கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியில் குறைந்தது 25% இடஒதுக்கீடு கோருவது சரியானதாக இருக்கும் எனப் பேராசிரியர் பிரபா.கல்விமணி கூறினார். இந்த இடஒதுக்கீடு நிதியுதவி பெரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றார். இத்தேர்வு ரத்து அறிவிப்பு எப்படி கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்குத் தடையாக இருக்கும் என்பதை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கவலையுடன் விளக்கினார்.

கிராமப்புற ஏழை, எளிய, அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் காக்க நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது. இதுகுறித்து அனைத்து கட்சிகளும் ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

Monday, May 16, 2011

புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்கைக்கு மருத்துவ கவுன்சில் தடை: கண்டனம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 05.05.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், மருத்துவ கருவிகள் போதுமான அளவு இல்லாத காரணத்தை சுட்டிக்காட்டி இந்த கல்வி ஆண்டின் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு புதுச்சேரி அரசு பொறுப்பேற்பதுடன், இதுகுறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை உடனே வெளியிட வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலர், புதுவை பல்கலைக்கழகப் பதிவாளர், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் இணைச் செயலாளர் டாக்டர் தவீந்தர் குமார் 11.04.2011 தேதியிட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் 2011 – 2012 கல்வி ஆண்டிற்கான இரண்டாவது அணி எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதி அளிப்பதற்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா மற்றும் போதுமான ஆசிரியர்கள் உள்ளனரா என்பது குறித்து அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மதிப்பீட்டுக் குழு கடந்த 2011, பிப்ரவரி 18, 19 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தது.

இக்குழு தாக்கல் செய்த மதிப்பீட்டு அறிக்கையை ஏற்று மருத்துவ கவுன்சிலின் ஆட்சிமன்ற குழு அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், மருத்துவ கருவிகள் போதுமான அளவு இல்லாத காரணங்களாலும், மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற குறைபாடுகள், கருத்துக்கள் அடிப்படையிலும் 2011 – 2012 கல்வி ஆண்டிற்கான இரண்டாவது அணி எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் இந்த உத்தரவால் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டிற்கான 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. இதனால், அரசு மருத்துவ கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராவோம் என மாணவர்கள் கண்ட கனவு நிறைவேறாமல் தகர்ந்துள்ளது. 

மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் புதுச்சேரி அரசு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், போதிய ஆசிரியர்கள் நியமனம் போன்ற மருத்துவ கவுன்சில் சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த காரணத்தால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசு ஒதுக்கீடான 50 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களைக்கூட வழங்காமல் மாணவர்களை ஏமாற்றி வருகின்றன. தனியார் மருத்துவ கல்லூரிகளை நிர்பந்தித்து 50 சதவீத இடங்களைப் பெற அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெற வேண்டியுள்ளது. இதனால், ஏழை, எளிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் தனியார் மருத்துவ கல்லூரிகள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க புதுச்சேரி அரசே வழிவகுத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அரசு மருத்துவ கல்லூரியை வளர்ச்சி அடைய செய்யாமல் முடக்கி, ஒரு கட்டத்தில் மூடிவிட புதுச்சேரி அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் காரைக்காலில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரி ஒன்று தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே தொடங்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரியை மேம்படுத்தவே முடியாத இவர்கள் புதிதாக மருத்துவ கல்லூரி தொடங்குவோம் எனக் கூறுவது மக்களை ஏமாற்றுவதாகும்.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக அரசு மருத்துவ கல்லுரியில் இந்த ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியை பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் மாணவர்கள், பொதுமக்களை ஒன்றுதிரட்டி அரசை எதிர்த்துப் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.

இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டி அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

Wednesday, November 17, 2010

தமிழ்ப் பாடத்தை நீக்கியதைக் கண்டித்து மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநோன்பு போராட்டம்!

தலைவர்களுடன் பேச்சுவார்த்தை...
புதுச்சேரி, தாகூர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரப் பாடப் பிரிவில் தமிழ் பாடத்தைக் கட்டாயப் பாடமாக அறிவிக்க கோரி புதுச்சேரி தாகூர் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் 11.11.2010 வியாழக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தை நடத்தினர். இறுதியில், புதுச்சேரி பல்கலைகழகப் பதிவாளர் உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை 12.11.2010 மதியம் முடித்துக் கொண்டனர். 

புதுச்சேரி தாகூர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரப் பாடப் பிரிவில் தமிழ்ப் பாடம் நீக்கப்பட்டதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதால், தமிழ் பாடம் விருப்பப் பாடமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்ப் பாடத்தை கட்டாயப் பாடமாக அறிவிக்க கோரி தாகூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநோன்பில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்தப் போராட்டத்தைப் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புத் தலைவர்கள் ஆதரித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வாழ்த்தினர்.

பின்னர், இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் பாபு ராவ் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளர் லோகநாதன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கட்சி, அமைப்புத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாரா கலைநாதன், பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தராமன், ம.தி.மு.க. மாநில அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலாளர் பாவாணன், செயலாளர் ப.அமுதவன், மீனவர் விடுதலை வேங்கைகள் மாநில அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழறிஞர் மா.லெ.தங்கப்பா,  தனித்தமிழ் இயக்கத் தலைவர் தமிழ்மல்லன், கலை இலக்கியப் பெருமன்ற தலைவர் எல்லை.சிவக்குமார், செயலாளர் பொறியாளர் தேவதாஸ், மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கச் செயலாளர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாராயணசாமி,  புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவநர் சதீஷ் (எ) சாமிநாதன், முற்போக்கு மாணவர் கழகத் தலைவர் கெளதம பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில், பல்கலைக்கழகப் பதிவாளர் லோகநாதன் கடந்த காலத்தில் இருந்தது போலவே தமிழ் ஒரு பாடமாக முதலாண்டு, இரண்டாமாண்டு பொருளதாரப் பிரிவில் தொடரும் என உறுதியளித்தார். அதனை எழுத்து மூலம் கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உண்ணாநோன்பை முடித்துக் கொண்டனர்.

இப்போராட்டத்தை புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவநர் சதீஷ் (எ) சாமிநாதன் ஒழுங்கமைத்தும், இரவுப் பகல் பாராமல் மாணவர்களோடு இருந்தும் வெற்றிக்குப் பாடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Thursday, October 21, 2010

ஊழல் அதிகாரி அரிகரன் பணி நீக்கம் : புதுச்சேரி அரசுக்குப் பாராட்டு!

ஊழல் அரிகரன்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்  21.10.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பாரதியார் பல்கலைக்கூடத்தின் முன்னாள் முதல்வரும், லலித் கலா மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியுமான அரிகரனை பணிநீக்கம் செய்துள்ள புதுச்சேரி அரசின் நடவடிக்கையை மனதார பாராட்டுகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1996 முதல் 1999 வரை அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தின் முதல்வராக இருந்த போது பல்வேறு ஊழல், முறைகேடுகள், கையாடல், நிர்வாக குளறுபடிகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென பல்வேறு கட்சி மற்றும் ஆதரவோடு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால், அப்போதைய அரசு அவரை பாரதியார் பல்கலைக்கூடத்தில் இருந்து லலித் கலா மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியாக நியமித்தது.

இது குறித்து அரசு அப்போது பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக இருந்த தேவநீதிதாஸ் மற்றும் கலெக்டர் ராகேஷ் சந்திரா ஆகியோர் தலைமையில் இரண்டு விசாரணைக் குழுக்களை அமைத்தது. இந்த விசாரணைக் குழூக்கள் முன்பு அரிகரன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அதிகாரி தேவநீதிதாஸ் தலைமையிலான விசாரணைக் குழு முன்பு அரிகரன் மீது சுமத்தப்பட்ட 10 குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளன. அதாவது, அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதல்வராக இருந்த போது அங்கு விரிவுரையாளராக பணியாற்றிய தனக்கு நெருக்கமான அன்னபூர்ணா என்பவருக்கு விதிமுறைகளை மீறி மருத்துவ செலவுக்காக ரூபாய் 20 ஆயிரத்து 727 வழங்கியது. விதிமுறைகளுக்கு மாறாக தினக் கூலி ஊழியரை காசாளராக நியமித்து பெரும் நிதி கையாடல் செய்தது. பாரதியார் பல்கலைக்கூட கட்டிடங்களுக்கு புதிதாக கூறை அமைத்ததிலும், பழைய கூறைகளை மாற்றியதிலும் அரசு முன் அனுமதியின்றி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு ஆகிய மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொண்டு கடந்த 14.10.2010 அன்று கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சரும், பாரதியார் பாரதியார் பல்கலைக்கூடத்தின் சேர்மனுமான மாண்புமிகு ஷாஜகான் அவர்கள் ஊழல் அதிகாரி அரிகரனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அரிகரன் வெளிநாட்டில் உள்ளதால் பணிநீக்க உத்தரவினை லாஸ்பேட்டை வாசன் நகரில் உள்ள அவரது வீட்டில் ஒட்டியும், பத்திரிகை மூலம் அறிவிக்கையாக வெளியிட்டும் உள்ளனர். காலம் கடந்த முடிவானாலும் அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இது ஊழல் செய்பவர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும் என நம்புகிறோம்.

மேலும், அரிகரன் கடந்த 2007, 2008 ஆண்டுகளில் அரசின் முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குப் பலமுறை சென்று வந்துள்ளார். அரசு ஊழியர்களின் நடத்தை விதிப்படி ஒரு அரசு ஊழியர் வெளிநாடு செல்ல அரசின் முன் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து அரசு நியமித்த ஏ.எப்.டி. பஞ்சாலையின் இணை நிர்வாக இயக்குநர் எஸ்.டி.சுந்தரேசன் முன்பு நடந்த விசாரணையில் அரிகரன் விதிகளை மீறி வெளிநாடு சென்றது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் அடிப்படையில் அரசு உடனடியாக அரிகரன் மீது கிரிமினல் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அரிகரன் லலித் கலா அகாடமியின் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்ற டிசம்பர் 1999 முதல் டிசம்பர் 2009 வரையில் எந்தவித பணியும் செய்யாமல் 30 லட்சத்து 58 ஆயிரத்து 280 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இதனால், மக்கள் வரிப் பணம் பெருமளவில் வீணாக செலவிடப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரி அரசு அவருக்கு அளித்த சம்பளத் தொகையை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் அதிகாரி அரிகரனை பணிநீக்கம் செய்ய மக்கள் உரிமைக் கூட்டமைப்பு நடத்திய பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் பங்கேற்று ஆதரவுத் தந்த பல்வேறு கட்சி மற்றும் அமைப்புத் தலைவர்களுக்கு இந்நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, November 19, 2008

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்க கூடாது!



மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 19-11-2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைத்தால் தற்போது மாநில அளவில் செயல்படுத்தப்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக ரீதியான இடஒதுக்கீடு பறிபோகும் என்பதால், மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவக் கல்லூரியை தங்களுக்குள் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக காங்கிரஸ் அரசு மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு புதுச்சேரியின் அனைத்து அரசியல் கட்சியினர், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 13 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியில் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் 27 சதவித இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் இந்த இடஒதுக்கீடு தற்போது முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. மேலும், மத்திய அரசில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தனி இடஒதுக்கீடு கிடையாது.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைத்தால் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள சமூக ரீதியான இடஒதுக்கீடு பறிபோகும். இது மக்கள் தொகையில் 70 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

தற்போது புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 4 கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறியுள்ளன. இதனால், புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் கொஞ்சம் கொஞ்மாக குறைந்து தற்போது புதுச்சேரி மாணவர்களுக்கு இடமில்லை என்றாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினரிடம் மாணவர்களுக்கு இடம் கேட்டு புதுச்சேரி அரசு கெஞ்சும் நிலைதான் உள்ளது.

கல்வி வணிகமாகிவிட்டதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடையாக குறைந்தது 25 லட்ச ரூபாய் பணம் கொடுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்வி கிடைக்கும் சூழல் உள்ளது. ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி என்றால் புதுச்சேரிக்கு 150 இடங்கள் கிடைக்கும். இதனால், புதுச்சேரியைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் குறைந்த கட்டணம் செலுத்தி மருத்துவம் பயில முடியும்.

எனவே, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று, வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்களைச் சேர்த்து கல்லூரியை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், புதுச்சேரி மாணவர்களையும், பொதுமக்களையும் திரட்டி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என அரசை எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.