Showing posts with label கைதிகள். Show all posts
Showing posts with label கைதிகள். Show all posts

Friday, October 25, 2013

ஒரு சிறைக் காவலரும், மரண தண்டனை ஒழிப்பும்!

1988-ல் நானும், நண்பர்களும் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலைய வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை அரசரடியில் உள்ள நடுவண் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். அப்போது சிறைவாசிகளுக்கு 15 நட்களுக்கு ஒருமுறை திரைப்படம் காண்பிப்பார்கள். சிறைவாசிகளின் இறுக்கம் நிறைந்த வாழ்வு சற்று இலகும் தருணம் அவை. எங்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

மிசா காலத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த சிட்டி பாபு போன்றவர்களை கொன்றும், எண்ணற்றவர்களைத் அடித்து உதைத்துத் துன்புறுத்தியும் புகழ்ப் பெற்ற சிறை அதிகாரி வித்யாசாகர். அவர் அப்போது சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்தார். அவர் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பு. அவர் மதுரை சிறையைப் பார்வையிட வருவதாகவும், சிறைவாசிகளின் குறைகளைக் கேட்டறிவதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது.

நாங்கள் எப்போதுமே சிறை அதிகாரிகளின் நேரடிக் பார்வையிலுள்ள ஆறாம் பிளாக் செல்லில் அடைக்கப்படிருந்தோம். அதோடு மட்டுமல்லாமல், தீவிரவாதிகள் அல்லவா? ஆகையால், சிறை அதிகாரிகள் எங்களுக்கு முடிந்தவரை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இருந்தாலும், திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எங்களுக்குள் எழுந்து, நீண்ட விவாதம் நடந்தது. திரைப்படம் பார்க்க சிறை அதிகாரிகளிடம், அதுவும் கொடூரமான மனித உரிமை மீறலை நிகழ்த்திய அதிகாரியிடம் கேட்பதா என்ற மாபெரும் விவாதம். இதற்குப் புரட்சிகர பிம்பம் இக்கோரிக்கையை எழுப்ப பெரும் தடையாக இருந்தது. நானும், சில தோழர்களும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். பின்னர் ஒரு வழியாக கோரிக்கையை எழுப்புவது என்று முடிவுக்கு வந்தோம். இதில் ஆர்வமாக இருந்த என்னிடமே அந்தப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நாளும் வந்தது. சிறை அதிகாரிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டனர். சிறைவாசிகள் ஏதாவது குறை சொல்லிவிடக் கூடாது என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். சிறைவாசிகள் வரிசையாக தங்கள் பிளாக் மற்றும் செல்லின் முன் வந்து நிற்க வேண்டும். அதிகாரிகள் வரும் போது வலது கையை உயர்த்தி நீட்ட வேண்டும். அப்போது அதிகாரி நிற்பார். அச்சமயத்தில் அவரிடம் குறைகளைக் கூற வேண்டும். இதுதான் சிறை நடைமுறை. கையை நீட்டி குறை சொன்ன சிறைவாசிகளுக்கு அந்த அதிகாரி சென்றவுடன் கடும் தண்டனை விதிக்கப்படும். சிறை காவலர்கள் அடித்து துவைத்து விடுவார்கள். அவர்களுக்கு சிறை விதிகளை தளர்த்தி அளிக்கப்டும் பீடி, சிகரெட், இன்ன பிற நிறுத்தப்படும். அவரைப் பொருத்தவரையில் மட்டும் சிறை விதிகள் கடுமையாக பின்பற்றப்படும். இதனால், பெரும்பாலும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் மட்டும் தங்களின் ‘ரெமிஷன்’ முன்விடுதலைக் குறித்து ஏதாவது கேட்பார்கள். மற்றபடி அந்த உயரதிகாரிகளின் வருகை ஒரு சடங்காகவே நடந்து முடியும். ஒழுங்காக ‘மாமூல்’ அளிக்காத சிறைகளுக்கே இதுபோன்ற உயரதிகாரிகள் வருகை இருக்கும் என்ற செய்தியும் உண்டு.

நாங்களும் எங்கள் செல்லின் முன்பு வரிசையாக நின்றிருந்தோம். சிறை அதிகாரிகளுக்கு எங்கள் மீது மரியாதை இருந்தாலும், ஒருபுறம் சந்தேகமும் எப்போதும் உண்டு. ஏதாவது சிக்கல் ஏற்படுத்திவிடுவார்கள் என்ற அச்சம்தான்.

அதிகாரிகள் புடைசூழ வித்யாசாகர் தூரத்தில் வருவதைப் பார்த்தோம். மிகக் கொடூரமான அதிகாரியை சந்திக்க நாங்களும் ஆவலுடன் இருந்தோம். எங்களுக்குப் பாதுகாப்புக்காக நிற்கும் சிறைக் காவலர்கள் கஞ்சிப் போட்டு தேய்த்த உடையின் மிடுக்குடன், மிகுந்த விரைப்புடன் நின்றிருந்தனர். மிக அருகில் வித்யாசாகர் வந்து எங்களிடம் நின்றார். வரிசையில் என்னருகில் நின்றிருந்த பொழிலனிடம் நலம் விசாரித்தார். ‘அப்பா (பாவலரேறு பெருஞ்சித்திரனார்) நலமாக இருக்கிறார்களா’ என்று கேட்டார். அவரும் பதில் அளித்தார். மிசாவில் சென்னை நடுவண் சிறையில் இருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், எம்.ஆர்.இராதா ஆகிய இருவர் மட்டுமே வித்யாசாகரின் தடிக்குத் தப்பியவர்கள் என்பது கூடுதல் தகவல். அந்த கொடூர வரண்ட உள்ளத்திற்குள் இவர்கள் இருவர் மீதும் ஏதோ ஒரு வகையில் மரியாதையும், ஈரமும் இருந்துள்ளது. எங்கள் அருகில் நின்ற அவரின் தோற்றமும், பேச்சும் எந்த வகையிலும் அவரின் கொடூர முகத்தைப் பிரதிபலிக்கவில்லை.

அடுத்து என்னருகில் வந்தவுடன் நானும், ஈகையரசன் அண்ணனும் திடீரென எங்களது கையை உயர்த்தினோம். அன்றாடம் எங்களை நலம் விசாரித்து கவனித்துக் கொள்ளும் சிறை அதிகாரிகள் முகத்தில் அதிர்ச்சி ரேகை ஓடியது. நான் ‘சார்! எங்களுக்கும் திரைப்படம் காண்பிக்க வேண்டும்’ என்றேன். ஈகை அண்ணனும் ஏதோ சொல்ல வந்தார். அதற்குள் வித்யாசாகர் ‘அலோ தெம்’ என்றார். அதாவது, இவர்களை அனுமதிக்கவும் என்று கூறினார். சிறை அதிகாரிகளுக்கு சற்று நிம்மதி அடைந்ததைக் காண முடிந்தது. தூய தமிழில் பேசுவதையே வழக்கமாக கொண்ட எங்களுக்குக் காவல்துறை, சிறைத்துறை அதிகாரிகளை ‘அய்யா’ என்ற அழைக்க மனம் வராது. அதில் ஏதோ அடிமைத்தனம் இருப்பதாக உணர்வோம். கீழ்நிலையில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரிகளை மூச்சுக்கு மூச்சு ‘அய்யா.. அய்யா’ என்று விளிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எங்களுக்கான திரைப்படம் பார்க்கும் நாளும் வந்தது. சிறைக்குள் பெரிய திரையரங்கம் ஒன்றைக் கட்டி வைத்துள்ளார்கள். சிறை நுழைவு வாயிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் சிறைவாசிகளுக்கான பிரத்தியோக திரையரங்கு உள்ளது. மாலை 6 மணிக்கு அடைப்புக் கணக்கு முடிந்து அனைவரும் பிளாக், செல்லில் அடைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு பிளாக், செல்லாக திறந்து அனைவரையும் எண்ணி வரிசையாக அனுப்புவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிறைவாசிகள் தப்பித்துச் செல்லும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளதால் கடும் பாதுகாப்பு இருக்கும். எங்களின் வரிசைக்கு அருகிலேயே சிறைக் காவலர்களும் வரிசையாக நிற்பார்கள். வரிசை நத்தைப் போல் ஊர்ந்து பொறுமையாக நகர்ந்து, நகர்ந்து திரையரங்கை அடைய ஒரு மணிநேரம்கூட ஆகும்.

திரையரங்கை நெருங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அருகில் ஒரு நீண்ட நெடிய மதில் சுவறு கொண்ட மேற்கூரை இல்லாத அறைக்குள் ஒரு சிறிய கோயில் ஒன்று தென்பட்டது. அந்த அறை பெரிய இரும்புக் கதவுப் போட்டு பூட்டப்பட்டிருந்தது. அந்தக் கதவு வழியாக அந்த திறந்த வெளி அறைக்கு செல்ல நிறைய படிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட நேரம் நின்றுக் கொண்டே இருந்ததினால் எனக்கு சற்று கால் வலி ஏற்பட்டது. நான் அந்தப் படிக்கட்டுகளின் ஒன்றில் சற்று அமர்ந்தேன். இதை தூரத்தில் இருந்துக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு நன்கு அறிமுகமான சிறைக்காவலர் ஒருவர் என்னை நோக்கி வேகமாக ஓடிவந்தார். என்னை மிகவும் கோபமாகவும், சொல்ல முடியாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். ஒரு சமயத்தில் என்னை அடிக்கவும் முற்பட்டார். ஆனால், அடிக்கவில்லை.

சிறைவாசிகள் யாருக்கும் அந்த சிறைக் காவலரைப் பிடிக்காது. கடுமைக்குப் பெயர் பெற்றவர். சின்ன தவறுக்குக்கூட சிறைவாசிகளை அடிக்க தயங்கமாட்டார். எனக்கு சிறிய வயது என்பதாலும், எந்தத் தவறும் செய்யாத போதும் அவர் என்னிடம் நடத்துக் கொண்ட விதம் மிகவும் அவமானமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சக தோழர்களுக்கும், பிற சிறைவாசிகளுக்குமே ஒன்றும் புரியவில்லை. என் கண்ணில் எவ்வளவு அடக்கியும் நீர் வழிந்து ஓடியது. என் அழுகையை நான் மறைக்க முயன்று தோல்வியுற்றேன்.

இந்த மன அழுத்தத்துடனே நான் திரையரங்கிற்குச் சென்றேன். அன்றைக்கு ‘அந்தமான் காதலி’ படம் திரையிட்டார்கள். சிவாஜி, சுஜாதா ஆகியோர் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்த படமது. எனக்குப் படம் பார்க்க மனம் ஒப்பவில்லை. எல்லோரும் ரசித்துப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் அவ்வேளையில் நான் மட்டும் அகமும், புறமும் அழுதுக் கொண்டே இருந்தேன். அந்தக் காவலர் நடந்துக் கொண்ட விதம் என்னை திரும்பத் திரும்ப நினைவில் வந்து அழுத்தியது. எப்போது படம் முடிந்து செல்லிற்கு செல்வோம் என்ற எண்ணத்திலேயே அமர்ந்திருந்தேன்.

மற்ற சிறைவாசிகள் எல்லாம் தரையில் அமர்ந்திருந்தனர். எங்களைத் தனிமையாக வைத்துப் பாதுக்காக்க வேண்டும் என்பதால், நாங்கள் மட்டும் பள்ளிக்கூட மர பெஞ்சு போன்ற பெஞ்சில் அமர்ந்துப் படம் பார்க்க வைக்கப்பட்டோம். டூரிங் தியேட்டரில் தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட் போல. திடீரெனெ படத்தை நிறுத்திவிட்டு விளக்கைப் போட்டுப் பார்ப்பார்கள். எங்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பார்கள். ஒருவழியாக படம் முடிந்தது. நாங்கள் எங்களது செல்லிற்குத் திரும்பினோம். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. சிறைக் கம்பியின் ஊடாக வெளியே மெல்லிய ‘குண்டு பல்ப்’ வெளிச்சத்தில் தெரியும் சிறைப் பகுதிகளின் நிழல் படிமங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டே கிடந்தேன். அழுகையும், அரைகுறை தூக்கமும் கலந்த அந்த இரவு என் வாழ்வில் மறக்க முடியாத சூது கவ்விய இரவு எனலாம்.

வழக்கம் போல் பொழுது விடிந்தது. தினம்தோறும் காலை 6 மணிக்கு கீழ்நிலை சிறை அதிகாரிகள் வந்து எங்களை எழுப்பி, கணக்கெடுத்துச் செல்வார்கள். அதாவது, நாங்கள் அனைவரும் உயிரோடு இருக்கிறோமா? என்று பார்த்துச் செல்வார்கள். வழக்கமாக வரும் அந்த அதிகாரியும், சிறைக் காவலர்களும் வந்து கணக்கெடுத்தார்கள். பின்னர், கதவுகளைத் திறந்து எங்களை காலைக்கடன் முடிக்கவும், குளிக்கவும் வெளியே அனுப்பினார்கள். அந்தக் குழுவில் நேற்று என்னிடம் மிக மோசமாக நடந்துக் கொண்ட சிறைக் காவலரும் இருந்தார். நான் அவசரம் அவசரமாக வெளியே வந்து நேற்று நடந்த சம்பவம் பற்றி அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் அளித்த விளக்கம் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் என் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்ச்சி அடைந்தேன். இவ்வளவு கடுமையாக நடந்துக் கொள்ளும் அந்த சிறைக் காவலருக்குள் இப்படி ஒரு மனிதாபிமானமா? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எண்ணி எண்ணிப் பெருமைப்படும் அளவுக்கு அவர் மீது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் மரியாதை கூடியது. அவர் எங்களுக்குள் மிகவும் உயர்ந்து நின்றார். எளிய மனிதர்களுக்குள் நல்ல குணங்கள் குடிக் கொண்டிருக்கும் என்பதற்கு அவரும் ஒரு நிதர்சமான சாட்சி.

அவர் சொன்ன விளக்கத்தை அப்படியே இங்குத் தருகிறேன். “தம்பி, நேத்து நான் நடந்துக் கொண்ட விதத்துக்கு நீங்க வருத்தப்பட்டிப்ருப்பீக. ஏன் எல்லாருமே வருத்தப்பட்டிருப்பீக. கொஞ்சம் வயசு தம்பி உங்களுக்கு. நீங்கள் எல்லாம் இன்னும் நிறைய வருசம் வாழனும். அந்த இடத்தில் உங்க கால் படக் கூடாது. அதான் கொஞ்ச கோவமா நடந்துகிட்டேன். போய்க் கால வேலைய முடிச்சி, குளிச்சி சாப்பிடுங்க தம்பி..” என்று கூறிவிட்டு சென்றார். அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். மெல்ல மெல்ல அந்த உருவம் என்னை விட்டு அகன்று மறைந்துச் சென்றது.

அவர் என் கால் படக் கூடாது என்று சொன்ன இடம், மரண தண்டனையை நிறைவேற்றும் “தூக்கு மேடை” இருக்கும் இடம் என்று தெரிந்த போது மனது கனத்தது. ஒப்புக்குகூட அந்த இடத்தில் எங்களைப் போன்றவர்களின் கால்கள் படக் கூடாது என்று நினைத்த, அந்த கடுமையான தோற்றம் கொண்ட மனதிற்குள் எத்தனை அழகானதொரு மனிதநேயம். சிறிய தப்புக்குக்கூட கடும் தண்டனை தரும் அந்த மனதிற்குள் மரண தண்டனைக்கு எதிரான உயரிய சிந்தனை. என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத சம்பவம் இது. அவர் மறக்க முடியாத உயிரும் கூட.  

அக்டோபர் 10: இன்று உலக மரண தண்டனை ஒழிப்பு நாள்…

Saturday, June 22, 2013

உலக இசை தினம்: துயரங்களால் வெளிப்படும் இசை!

நேற்று 'உலக இசை தினம்' என்பதைப் புதிதாக இந்த ஆண்டுதான் கேள்விப்பட்டேன். முகநூல் நண்பர்கள் பலரும் இதுகுறித்து பதிவிட்டிருந்தனர். எனக்கு இசைப் பற்றி ஓரளவுக்கு பரிச்சயம் இருந்தாலும் அதுபற்றி எதுவும் எழுதியதில்லை. நினைத்தாலே மனதை வருத்தப்பட வைக்கும் சிறைக் கைதிகள் பாடும் பாடல்கள் குறித்து நினைத்துக் கொண்டிருந்தேன். சிறையில் ஒவ்வொரு கணமும் துயரமாக நகரும். மாலை 6 மணி முதல் இரவுப் படுத்து உறங்கும் வரையிலான நேரம் நகர்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். வெளியில் சுதந்திரமாக திரிந்த நினைவுகள் துவங்கி அனைத்தும் வந்து மனதை அழுத்தும். கதவடைப்பு முடிந்து இருட்டு படரும் நேரத்தில் ஒவ்வொரு பிளாக் மற்றும் செல்களிலிருந்தும் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும். கைதிகள் தங்களுக்குத் தெரிந்த திரைப்பட பாடல்களைப் பாடுவர். பல சந்தர்ப்பங்களில் அவர்களது துயரங்கள் வெளிப்படும் வகையில் பாடல்கள் ஒத்துப் போவதும் உண்டு. நான் மதுரை சிறையில் இருந்த போது, நாங்களும் இவ்வாறு பாடுவது வழக்கம். கொள்கைப் பாடல்கள் முதல் திரைப்பட பாடல்கள் வரை அரங்கேறும். விரைப்பான கொள்கைகளைத் தாண்டி அனைவரது மனமும் கரையும். அந்த தருணத்தில் மனித மனம் எவ்வளவு நெகிழ்வானது என்பது வெளிப்படுத்தும். அன்று சிறையில் இருந்தவர்களில் தோழர்கள் பொழிலன், இளங்கோ ஆகியோர் இன்றும் சிறையில் உள்ளனர். இவர்களது துயரங்கள் மறைய அருகிலிருந்து யார் பாடுவார்கள் என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது. துயரத்தில் உழலும் மனிதருக்கு இசை அருமருந்தாவது நமக்கு கிடைத்த வரம்.

Thursday, February 03, 2011

முன்விடுதலை செய்யப்படாததால் ஆயுள் தண்டனைக் கைதி மரணம்: நீதிவிசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

காலாப்பட்டு சிறையில் 15 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி அப்பாராஜ் உரிய காலத்தில் முன்விடுதலை செய்யப்படாததால் மனமுடைந்து, உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இதற்கு அரசும், சிறை அதிகாரிகளுமே காரணம் என்பதால் இது குறித்து புதுச்சேரி அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த அப்பாராஜ் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று கடந்த 15 ஆண்டுகளாக காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்ததால் தன்னை முன்விடுதலை செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரி அரசு முக்கிய தினங்களில் 14 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 24-ம் தேதியன்று அப்பாராஜை விடுதலை செய்ய வேண்டுமென கோரி காலாப்பட்டு சிறையில் தண்டனைக் கைதிகள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். அப்போது உண்ணாவிரதம் இருந்த கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய சிறைத்துறை ஐ.ஜி., சென்ற குடியரசுத் தினத்தன்று அப்பராஜை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார். அப்போது அருகிலிருந்த சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தனிடம் அதற்கான கோப்பை முறைப்படி அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். ஆனால், மேற்சொன்ன அதிகாரி இதுதொடர்பான கோப்பை அனுப்பி வைக்காததோடு, இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.

குடியரசுத் தினத்தன்று விடுதலை ஆவோம் என்று நம்பிக்கையுடன் இருந்த அப்பாராஜ் அதிகாரிகளின் அலட்சியத்தால் விடுதலை செய்யப்படாததால் மிகவும் மனமுடைந்து மன உளைச்சலோடு இருந்துள்ளார். மேலும், 70 வயதான அவருக்கு இருதய மற்றும் காச நோய் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் மனமுடைந்து இருந்த அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இரவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1997 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசின் தலைமைச் செயலர்களுக்கும் ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளது. அதில், 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த 65 வயதைத் தாண்டிய ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளில் 7 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது. இதுவரையில் கடந்த 2008 முதல் 2010 வரையில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 1509 பேரை விடுதலை செய்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பலகட்டப் போராட்டங்கள் நடத்தியும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதில் புதுச்சேரி அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளை மதிக்காமலும், 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த அயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசு பிறப்பித்துள்ள அரசாணையை மீறியும் செயல்பட்டதன் மூலம் ஒரு உயிர் பலியாவதற்கு அரசும், சிறைத் துறையும் காரணமாக இருந்துள்ளது.

மேலும், இதற்கு முழுக் காரணமான சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அப்பாராஜ் மரணத்திற்கு அரசுதான் முழுப் பொறுப்பு என்பதால் அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லடசம் இழப்பீடு வழங்க வேண்டும்.

Wednesday, June 23, 2010

புதுச்சேரியில் 7 ஆண்டு சிறை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் - மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை

தமிழக அரசைப் பின்பற்றி புதுச்சேரி அரசும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

22.06.2010 அன்று, காலை 11 மணியளவில், புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தமிழகத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் புதுச்சேரி தலைவர் இர.அபிமன்னன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேராசிரியர் அ. மார்க்ஸ் கூறியதாவது:

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழக அரசு 10 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட கைதிகள் 500 பேரை விடுதலை செய்யப் போவதாக அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

தமிழக அரசு அண்ணா பிறந்த நாளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் 2006-ல் 472 பேரையும், 2007-ல் 190 பேரையும், 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் 1409 பேரையும், 2009-ல் 10 பேரையும் விடுதலை செய்துள்ளது.

புதுச்சேரி அரசு 1999 முதல் 2009 வரை 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் 11 பேரை மட்டுமே விடுதலை செய்துள்ளது. அதில் 8 பேர் புதுச்சேரி மத்திய சிறையிலும், 3 பேர் தமிழக சிறைகளிலும் இருந்தவர்கள். கடைசியாக ஒரு பெண் கொலை வழக்கில் தண்டனை அடைந்த, 2009-ல் 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதி செல்லிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரை விடுதலை செய்துள்ளது.

புதுச்சேரியில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 78 பேர் உள்ளனர். இதில் 43 பேர் 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரையும் புதுச்சேரி அரசு விடுதலை செய்ய வேண்டும்.

இந்திய அரசியல் சட்டம் பிரிவு 161 மாநில ஆளுநர்களுக்கும், பிரிவு 72 குடியரசுத் தலைவருக்கும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 435 மாநில அரசுக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்யும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 1999, 2003 ஆகிய ஆண்டுகளில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வழிகாட்டுதல் ஒன்றை மாநில தலைமைச் செயலர்களுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகிகளுக்கும் அனுப்பியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. புதுச்சேரி அரசு மத்திய அரசை அணுகி மேற்சொன்ன 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த 43 ஆயுள் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளர்: புதுச்சேரி சிறையில் ஆயுள் கைதிகள் உள்ளிருந்தவாறே கொலைத் திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள், அவர்களை விடுதலை செய்தால் என்ன ஆவது?

புதுச்சேரி சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவரும் கொலைக் குற்றத்தில் ஈடுபடுவதில்லை. ஒரு சிலர் மட்டுமே அவ்வாறு கொலை செய்ய தூண்டுதலாக உள்ளனர். புதுச்சேரி சிறையில் செல் போன்கள் இயங்க முடியாத வகையில் ஜாமர் கருவிப் பொறுத்த வேண்டுமென பல காலமாக கூறி வருகிறோம். அரசு அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. புதுச்சேரி போலீசாருக்கும் ஜாமர் கருவி பொறுத்துவதில் சிக்கல் இருக்கிறது. தற்போது குற்றம் நடந்தால் சிறையில் உள்ள கைதிகளின் செல் போன்களைக் கண்காணித்து குற்றவாளிகளை அடையாளம் காணுகின்றனர். அதனால், ஜாமர் கருவிப் பொறுத்துவதைப் போலீசும் விரும்பவில்லை. போலீசார் உறுதியான நடவடிக்கை எடுத்தால் சிறையிலிருந்தே நடத்தப்படும் குற்றங்களைத் தடுக்க முடியும்.

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக ஒருவருடைய நன்னடத்தை, உளவியல் ரீயான மாற்றம், குடும்பத்தினரோடு பழகும் விதம், கல்வியறிவு, மன மாற்றம், செய்த குற்றம் என பல்வற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் விடுதலை செய்கிறார்கள். வெறுமனே 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் அனைவரையும் எங்கும் விடுதலை செய்யப்படுவதில்லை.

தமிழகத்தில் அண்ணா நூற்றாண்டையொட்டி விடுதலை செய்ய்யப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் 1405 பேரில் 7 மட்டுமே திரும்பவும் சிறிய குற்றங்களில் சிறைக்கு வந்துள்ளாதாக தமிழக சிறைத் துறை ஐ.ஜி. சியாம் சுந்தர் அளித்துள்ள புள்ளி விவரம் கூறுகிறது. எனவே, சிறையில் இருந்து வெளியே வந்த அனைவரும் குற்றம் செய்வார்கள் என்பது ஏற்புடையதல்ல.


செய்தியாளர்: போலியான மனித உரிமை அமைப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? புதுச்சேரியில் மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் குழந்தைகளைக் கடத்திய பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளார்களே?

மனித உரிமை என்ற பெயரில் சிலர் தவறு செய்வதை நாங்கள் அறிவோம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஒரு சிலர் செய்வதை வைத்துக் கொண்டு தமிழக அரசு மனித உரிமை என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் போட்டுள்ளது தவறானது. உலகம் முழுவதும் மனித உரிமை 150 மேற்பட்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

செய்தியாளர்: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை எதிர்த்து சுவரொட்டி ஒட்டியவர்களை தமிழகப் போலீஸ் கைது செய்துள்ளதே?

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை எதிர்த்து சுவரொட்டி ஒட்டியவர்களை தமிழகப் போலீஸ் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. செம்மொழி மாநாட்டை ஆதரிக்க உரிமை உள்ள போது அதை எதிர்க்கும் உரிமையும் வேண்டும். சுவரொட்டி ஒட்டியவர்கள் மட்டுமல்ல திருநெல்வேலியில் எஸ்.எம்.எஸ். அனுப்பியவர்களையும் தமிழகப் போலீஸ் பிடித்துச் சென்று மிரட்டியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, March 10, 2010

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி "மகளிர் தின விழா"


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா பாரதி பூங்கா எதிரில் உள்ள வணிக அவையில் 8.3.2010 அன்று காலை 10 மணியளவில்  நடைபெற்றது. இதில் 7 ஆண்டுகள் சிறை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டது.

இக்கருத்தரங்கத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

சமூக ஆர்வலரும், கவிஞருமான மாலதி மைத்ரி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், இளைஞர் நிறுவன பொறுப்பாளர் திலகவதி ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துரை வழங்கினர்.

முடிவில் கோவை சிறையில் இருக்கும் முஸ்லீம் கைதிகளின் குடும்பத்தினர் படும் துன்பங்களை விளக்கும் "நீதியைத் தேடி" என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

சிறையில் உள்ள ஆயுள் கைதிகளின் குடும்பத்தினர் திரளாக கலந்துக் கொண்டனர். சிறைக் கைதிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க தங்கள் துயரங்களை வெளிப்படுத்தினர்.

Friday, February 12, 2010

புதுச்சேரி சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்!


புதுச்சேரி சிறைக் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் உயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி 12.02.2010 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், சுதேசிப் பஞ்சாலை அருகில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலாப்பட்டு மத்திய சிறையிலுள்ள தண்டனைக் கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறையில் தூய்மையான குடிநீர், போதிய தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, பார்வையாளர் அறையில் உறவினர்களுடன் நெருங்கிப் பேச வசதி ஆகிய அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்க வேண்டும். ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் பரோல் வழங்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதுபோல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கிராம பஞ்சாயத்து ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன் தொடக்கி வைத்தார்.      

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், பகுஜன் சமாஜ் கட்சியின் அமைப்பாளர் சி.மூர்த்தி, அகில இந்திய பார்வட் கட்சியின் பொதுச்செயலாளர் உ.முத்து, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் புரட்சிவேந்தன், மனித நேய மக்கள் கட்சியின் செயலாளர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் இர.அபிமன்னன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் அ.அப்துல் ரசாக் கான், துணைத் தலைவர் அபுபக்கர், மார்க்சிய - பெரியாரிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் திருநாவுக்கரசு, புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு அமைப்பாளர் சதீஷ் (எ) சாமிநாதன், மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கத்தின் செயலாளர் சரவணன் உட்பட பல்வேறு கட்சி, அமைப்பினர் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறைக் கைதிகளின் குடும்பத்தினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

Saturday, October 31, 2009

இலங்கையில் முகாமிற்குள் சிறைப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழுக் கூட்டம், 27.10.2009 அன்று மாலை 7 மணியளவில், கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் சூ.சின்னப்பா, சு.சாமிநாதன், பா.மார்கண்டன், கி.கண்ணன், மு.பொன்னுசாமி, ச.கோவிந்தசாமி, சு.காளிதாஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1) இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் முள் வேளி முகாமிற்குள் 3 லட்சம் தமிழர்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைக்கு எதிரான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய - தமிழக அரசுகள் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து சிறைப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை விடுவிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

2) கிராம பஞ்சாயத்துகளுக்கு அண்டை மாநிலங்களில் உள்ளது போல் அனைத்து அதிகாரங்களையும் உடனே வழங்கி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்த ஆவன செய்ய புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.

3) தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளின் போது 7 ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யபடுகின்றனர். அதே போல், வரும் டிசம்பர் 8, சோனியா காந்தி பிறந்த நாளன்று, புதுச்சேரி சிறைகளில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால், நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர் புலவர் கலியபெருமாள் மனைவி வாளாம்பாள், தனித் தமிழ்க் கழகத்தின் காப்பாளர் தேசிகன் (எ) திருநாவுக்கரசு ஆகியோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, August 29, 2008

கோவை : சிறைக் கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும் – கருத்தரங்கம்!


பதாகை...


திரளான முசுலீம் பெண்கள்...


அரங்கத்திற்குள் திரண்டிருந்த முசுலீம் மக்கள்...



அரங்கத்திற்கு வெளியே முசுலீம் மக்கள்...


மேடையில் தலைவர்கள்...


கோ.சுகுமாரன்...


மனித நீதிப் பாசறை (MNP) சார்பில் தமிழகத்தில் அண்ணா நூற்றாண்டையொட்டி ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலைச் செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என வலியுறுத்தி கோவையில் 24-08-2008 ஞாயிறன்று மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழக சிறைகளில் பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனைப் பெற்ற சிறைவாசிகள் பலர் 10 முதல் 21 ஆண்டு வரையில் விடுதலைச் செய்யப்படாமல் சிறையில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தலைவர்கள் பிறந்த நாளன்று இவ்வாறு சிறையில் உள்ள ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலை செய்வது வழக்கம். வரும் செப்டம்பர் 15 அன்று அண்ணா நூற்றாண்டு வருவதையொட்டி தமிழக அரசு ஆயுள் தண்டனைப் பெற்று 7 ஆண்டுகள் சிறையில் தண்டனை கழித்தவர்களை விடுதலைச் செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் உள்துறைச் செயலர் மற்றும் சிறைத் துறை கூடுதல் இயக்குநர் ஆகியோர் இரண்டு சுற்ற்றிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அதில் ஆயுத மற்றும் வெடி மருந்துச் சட்டப்படி தண்டனை அடைந்தவர்கள், மதக் கலவரத்தில் தண்டனை அடைந்தவர்கள், கீழ்நீதிமன்றத்தில் மரண தண்டனைப் பெற்று உயர்நீதிமன்றத்தாலோ, உச்சநீதிமன்றத்தாலோ ஆயுள் தணடனையாக குறைக்கப்பட்டவர்கள் என இந்த மூன்று வகையினருக்கு அண்ணா நூற்றாண்டில் தண்டனை குறைத்து விடுதலை செய்வது பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆயுள் சிறைவாசிகளை விடுதலைச் செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுந்துள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவால் பல்வேறு வழக்குகளிலுள்ள முசூலீம்கள் 72 பேரும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 17 ஆண்டுகள் கழித்த நளினி உட்பட நால்வரும், 21 ஆண்டுகள் கழித்த சந்தன வீரப்பனின் அண்ணன் மாதையன் உள்ளிட்ட தமிழக சிறைகளிலுள்ள ஆயுள் தணடனைச் சிறைவாசிகள் மொத்தம் 77 பேர் விடுதலை ஆகமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 72, 161 ஆகியவை தண்டனை பெற்றவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கும், அந்தந்த மாநில ஆளுநருக்கும் அதிகாரம் வழங்கியுள்ளது. இதில் பாகுபாடு காட்டுவது பிரிவு 14-க்கு முரணானது.

இது குறித்து அரியாணா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு முக்கிய தீர்ப்பு இவ்வாறு கூறுகிறது:

“கைதிகள் தணடனைக் குறைப்பைக் கோருவது அரசியல் சட்ட அடிப்படையில் உரிமை பெற்றவர்கள் அல்லர் என்ற போதிலும் தணடனைக் குறைப்பை அளிக்க வேண்டியது அரசின் சட்ட பூர்வமான கடமைகளில் ஒன்று. மாநில அரசுகள் இருக்கிற விதிகளுக்குட்பட்டு அரசியல் சட்டப் பிரிவுகள் 72 மற்றும் 161 பிரிவின் கீழ் பொது மன்னிப்பு அளிக்க விதிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். கைதிகளை வகை பிரிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்ற போதிலும், இவ்வாறு மேற்கொள்ளாப்படும் வகைப்பாடு குடிமக்களுக்கிடையே சமத்துவ உரிமையை அளிக்கும் அரசியல் சட்ட பிரிவு 14-க்கு முரணாக அமையக் கூடாது” என ஆணித்தரமாக கூறியுள்ளது.

இந்நிலையில், மனித நீதிப் பாசறை சார்பில் 24-08-2008 ஞாயிறன்று, கோவையில், சங்கமம் திருமண மண்டபத்தில், மாலை 5.45 முதல் இரவு 9.30 மணி வரையில் “சிறைக் கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும் – கருத்தரங்கம்” நடைபெற்றது.

கருத்தரங்கில் மனித நீதிப் பாசறை மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.முகமது ஷாஜகான் வரவேற்றார். மாநிலத் தலைவர் எம்.முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தமிழக மனித உரிமைக் கழக வழக்கறிஞர் பாவேந்தன், தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு (NCHRO) செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நவ்பல், மாநில செயலர் எம்.ரகமத்துல்லா, மறுமலர்ச்சி முசுலீம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக், தலித் இசுலாமிய கிறித்துவ கூட்டமைப்பு பொதுச்செயலர் ஏ.கே.முகமது அனீபா, சமூக ஆர்வலர் கோவை தங்கப்பா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலர் இ.எம்.அப்துர் ரகுமான், (அவரது பேச்சை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த சந்திரன் மொழிபெயர்த்தார்), அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், சிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் உரையாற்றினர்.

மனித நீதிப் பாசறை மாவட்ட தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்ட செயலர் எம்.ஒய்.அப்பாஸ் நன்றி கூற கருத்தரங்கம் நிறைவு பெற்றது.

கருத்தரங்கில் ஏராளமான பெண்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட மூசுலீம்கள் கலந்துக் கொண்ட்து எழுச்சியாக இருந்தது.

இந்நிகழ்ச்சியை அரும்பாடுபட்டு ஒருங்கிணைத்த “மனித நீதிப் பாசறை” அமைப்பை அனைவரும் பாராட்ட வேண்டும்.

அகில இந்திய அளவில் உருவாக்கப்பட்டுள்ள ‘அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழு’ சார்பில் சென்னையில் நடந்த அதன் தொடக்க விழாவில் பாகுபாடின்றி ஆயுள் சிறைவாசிகள அனைவரையும் விடுவிக்க கோரிக்கை எழுப்பப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

சிறைவாசிகளின் உரிமைக் குரல் முசுலீம்களின் வாக்கு வங்கியை நம்பியிருக்கும் தி.மு.க. அரசுக்கு எட்டுமா?


புகைப்படங்கள்: மனித நீதிப் பாசறை, கோவை.

மேலும் புகைப்படங்கள் பார்க்க

Thursday, July 31, 2008

ஜார்க்கண்ட் சிறைகளின் நிலைமைகளை ஆராய்ந்த அகில இந்திய உண்மை அறியும் குழு!

அகில இந்திய அளவிலான உண்மை அறியும் குழுவினர் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள சிறைகளின் நிலைமைகளைப் பற்றி நேரில் ஆய்வு செய்துள்ளனர். விரைவில் இக்குழுவினர் தமது அறிக்கையை வெளியிட உள்ளனர்.

கடந்த ஜூலை 19, 20, 21 ஆகிய நாட்களில் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பல்வேறு சிறைகளைப் பார்வையிட்டனர். சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.

இக்குழுவில் புதுச்சேரியிலிருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தமிழகத்திலிருந்து பேராசிரியர் அ.மார்க்ஸ், வழக்கறிஞர் கேசவன் ஆகியோர் இடம்பெற்றனர்.

மேலும், இக்குழுவில் எம்.கே.அசன் (முன்னாள் துணைவேந்தர், ராஞ்சி பல்கலைக்கழகம்), டாக்டர் சசி பூஷன் பதக் (மக்கள் சிவில் உரிமைக் கழகம், ராஞ்சி), பிரபாட் குமார் தெகதி (முன்னாள் நலவழித் துறை அமைச்சர், ஜார்க்கண்ட்), பேராசிரியர் மனாஸ் ஜோர்தார், தபன் தாஸ் (அரசியல் கைதிகள் விடுதலைக் குழு, மேற்குவங்கம்), டாக்டர் மிதிலேஷ் (மக்கள் சிவில் உரிமைக் கழகம், ராஞ்சி), அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழுவைச் சேர்ந்த ரோனா வில்சன் (ஜே.என்.யூ, தில்லி), ஷிவ் நந்தன் (காஷ்மீர்), மேதாப் அலாம் (ஜாமியா மில்லியா, தில்லி) உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இக்குழுவினர் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சி, அசாரிபாக், கிரிதி, லதேகர், டால்டன்கஞ்ச், கார்வா உள்ளிட்ட சிறைகளைப் பார்வையிட்டனர்.

நக்சலைட்டுகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஜார்க்கண்ட் அரசு பல அப்பாவி மக்களைப் பிடித்துச் சிறையில் அடைத்து வருகிறது. ஏறக்குறைய 1000 பேர் அரசியல் கைதிகளாக ஜார்க்கண்ட் சிறையில் வாடி வருகின்றனர். அண்மையில் கூட 170 பேர் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அடக்குமுறைச் சட்டமான குற்றவியல் திருத்த சட்டம் பிரிவு 17-ன் படி எந்தவித விசாரணையும் இல்லாமல் மாவோயிஸ்ட்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடி வருகின்றனர்.

ஜார்க்கண்டில் சிறைகள் போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், அங்கு சிறை விதிகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தனிச் சிறை இல்லாததால் பெரும் சிரமத்திற்கிடையே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றனர்.

போதிய மருத்துவ வசதியின்றி சிறைகள் உள்ளன. விசாரணைக் கைதிகள் எவ்வித விசாரணையும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் உள்ளனர். ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக அளவில் கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தேவையான அளவும், நன்கு தயாரிக்கப்பட்ட உணவும் கைதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.
கார்வா சிறையில் மூன்று கைதிகள் கடுமையாக சித்தரவதை செய்யப்பட்டு கைகளையும், கால்களையும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டறிந்த குழுவினர் சிறைக் கண்காணிபாளரிடம் இந்த மனித உரிமை மீறலை அனுமதிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்தனர்.

ஜார்க்கணட் மாநிலத்தில் தனி “சிறைக் கையேடு” கிடையாது. பிகார் மாநிலத்தின் சிறைக் கையேட்டையே பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஜார்க்கண்ட் சிறைகளைப் பார்வையிட்ட உண்மை அறியும் குழுவினர் தமது முழு அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளனர். மேலும், சிறை மேம்பாடு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கையை அனுப்பி வைக்க உள்ளனர்.

உண்மை அறியும் குழு அறிக்கை இந்திய சிறைகளின் அவலத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்.