Sunday, November 07, 2010
பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை கள ஆய்வறிக்கை வெளியீடு - வீடியோ!
அயோத்தி பயணம் மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய பேராசிரியர் அ.மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு), கோ.சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி) ஆகியோர் 02.11.2010, மாலை 4.00 மணியளவில், சென்னையிலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை குறித்த நேரடி கள ஆய்வு - இடைக்கால அறிக்கையை வெளியிட்டனர். இதுகுறித்து த.மு.மு.க. வெளியிட்டுள்ள வீடியோ காட்சி.
Sunday, November 08, 2009
டாக்டர் கே. பாலகோபால் எழுதிய "வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்" நூல் வெளியீடு!

மனித உரிமைப் போராளி டாக்டர் கே. பாலகோபால் மறைவையொட்டி மனித உரிமைக்கான மக்கள் கழகம் மற்றும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் "வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்" என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 30.10.2009 அன்று, புக்பாயிண்டில், மாலை 7 முதல் 9.30 மணிவரை நடந்த பாலகோபால் நினைவஞ்சலி கூட்டத்தில் இந்நூல் வெளியிடப்பட்டது. இந்நூலினை பேராசிரியர் அ.மார்க்ஸ் தொகுத்தும், மொழியாக்கமும் செய்துள்ளார்.
பாலகோபால் நேர்காணல் ஒன்றும், அவர் எக்னாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லியில் எழுதிய வன்முறை குறித்த கட்டுரை மொழியாக்கமும் நூலில் இடம்பெற்றுள்ளன.
நூலினை வழக்கம் போல் "புலம்" அமைப்பினர் நேர்த்தியாக தயாரித்துள்ளனர். 48 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ. 18/-
மனித உரிமைத் தளத்தில் ஆழமான தடம் பதித்த பாலகோபால் வன்முறை பற்றி கொண்டிருந்த கருத்து முழுமையாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது. வன்முறையற்ற அவரது கருத்தும் செயல்பாடுகளும் மனித உரிமை ஆர்வலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையற்ற வழிமுறைகளையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுவதோடு, வன்முறை குறித்த ஆழமான பார்வை முன்வைக்கிறார் பாலகோபால். தற்போது அவரின் வன்முறை பற்றிய கருத்து இந்திய அளவில் மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
நூல் கிடைக்குமிடம்:
புலம்,
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
பேசி: 97898 64555.
மின்னஞ்சல்: pulam2008@gmail.com
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு,
179-அ, (மாடி), மகாத்மா காந்தி வீதி,
புதுச்சேரி - 605 001.
பேச: 98940 54640.
மின்னஞ்சல்: peoples_rights@hotmail.com
மனித உரிமைக்கான மக்கள் கழகம்,
3/5, முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர், அடையாறு,
சென்னை - 600 020.
பேசி: 94441 20582.
Friday, June 06, 2008
நேபாள தேர்தல்: ஆனந்த விகடனில் கோ.சுகுமாரன் நேர்காணல்!
நேர்காணல் கண்டவர்: மு.வி.நந்தினி.


தெளிவாக படிக்க படத்தைக் "கிளிக்" செய்து பெரிதாக்கிப் படிக்கவும்.
Tuesday, October 23, 2007
கரண் தாப்பரிடம் இருந்து தப்பியோடிய மோடி: சீழ்ப் பிடித்து நாறும் இந்துத்துவ முகம்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, 19-10-2007 அன்று, சி.என்.என்.-ஐ.பி.என். தொலைக்காட்சியில் “டெவில்ஸ் அட்வகேட்” நிகழ்ச்சியில், கரண் தாப்பருக்கு நேர்காணல் அளித்தார். நேர்காணல் தொடங்கி நான்கரை நிமிடத்திற்குள் பதிலளிக்க முடியாமல் வெளியேறினார். குஜராத்தில் முசுலீம் மக்களுக்கு எதிராக மிகப் பெரும் “இனப் படுகொலையை” நடத்திய நரேந்திர மோடி, இது குறித்த கரண் தாப்பரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறியது, அவரது “இந்துத்துவ பாசிச” கொடூர முகத்தை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்திக் காட்டியது. மேலும் அவர் “கரண் தாப்பர் பேச விரும்புவதை எல்லாம் நான் பேச விரும்பவில்லை” என்று அவேசமாக கூறிவிட்டு வெளியேறினார். “தி இந்து” பத்திரிகை 22-10-2007 அன்று வெளியிட்டுள்ள அவரது நேர்காணல்:
நான் நினைக்கிறேன் அவர்கள் மக்கள் என்று சொல்வது சரியானதல்ல. ஒன்று அல்லது இரண்டு பேர் தான் இதுபோன்ற பதங்களைப் பயன்படுத்துகின்றனர். நான் சொல்கிறேன் “கடவுள் அவர்களை அசிர்வதிப்பார்.”
இது, ஒன்று அல்லது இரண்டு பேர்களின் சதி என்று சொல்கிறீர்களா?
நான் அப்படி சொல்லவில்லை.
என்னிடம் இந்த தகவல்தான் இருக்கிறது. மக்களின் குரலும் இதுதான்.
நான் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். செப்டம்பர் 2003-இல் உச்சநீதிமன்றம் குஜராத் அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறியதே? ஏப்ரல் 2004-இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார், ஆதரவற்ற குழந்தைகளும் பெண்களும் எரிக்கப்பட்ட போது, நீங்கள் ஒரு நவீன நீரோ போல் இருந்தீர்களே என்று. உச்சநீதிமன்றம் உங்களோடு பிரச்சனை ஏற்படுத்திக் கொண்டதுபோல் தெரிகிறதே?
நான் ஒரு சிறிய வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பைப் படித்துப் பாருங்கள். அதில் எழுத்துமூலம் ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா? நான் இதுபற்றி தெரிந்து கொள்ள மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நீங்கள்சொல்வது சரி. எழுத்துமூலம் எதுவுமில்லை. அது உச்சநீதிமன்றத்தின் பார்வையாயிற்றே?
அது தீர்ப்பில் இருக்குமானால் நான் மகிழ்ச்சியாக உங்களுக்கு பதில் அளிப்பேன்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, நீதிமன்றத்தில் விமர்சித்ததுப் பற்றி கவலைப்பட தேவையில்லையா?
என் சிறிய வேண்டுகோள். தயவு செய்து தீர்ப்பைப் படித்துப் பாருங்கள். நீங்கள் குறிப்பிடும் சொற்றோடரைக் கைவிடுங்கள், மக்களுக்கு அதுபற்றி தெரிந்துக் கொள்ளட்டும்.
ஆகஸ்ட் 2004-இல் உச்சநீதிமன்றம் ஏறக்குறைய 4600-இல், 2100 வழக்குகளை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது ஏறக்குறைய 40 சதவீதம். அவர்கள் அப்படி செய்ததற்குக் காரணம் குஜராத்தில் நீதி வழங்கப்படவில்லை என்று நம்பியதால் தானே?
எனக்கு மகிழ்ச்சிதான். இறுதியாக நீதிமன்ற சட்டம் தீர்ப்பை எடுத்துக் கொள்ளட்டும்.
ஆனால், இதற்காகத்தான் உங்களை இந்தியா டூடே சிறந்த முதல்வராக அறிவித்தது, இராஜீவ் காந்தி பவுண்டேசன் சிறந்த நிர்வகிக்கப்படும் மாநிலமாக அறிவித்தது, கோடிக் கணகாணவர்கள் மோடி முசுலீம் மக்களுக்கு எதிரான மனநிலை உடையவர் என்று கூறியது. இதனால்தான் நான் கேட்கிறேன், உங்களுடைய பிம்பத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதா?
உண்மையிலேயே என் பிம்பத்திற்காக நான் ஒரு நிமிடம்கூட செலவிட்டது கிடையாது. நான் எப்போதும் என் வேலையில் “பிசியாக” இருப்பதற்கு இதுவேகூட காரணம். நான் குஜராத்திற்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன். அர்ப்பணித்துக் கொண்டவன். நான் என் பிம்பம் பற்றி சிந்தித்ததே கிடையாது. என் பிம்பத்திற்காக நான் ஒரு நிமிடம்கூட செலவிட்டது கிடையாது. குழப்பங்கள் இருக்கலாம்.
நான் சொல்கிறேன், பிரச்சனை என்னவென்று. 2002-இல் குஜராத் படுகொலைகள் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆனபின்பும், கோத்ரா பேய் உங்களைச் சுற்றி சுற்றி வருகிறது. நீங்கள் ஏன் அந்தப் பேயைத் தணிக்க முயற்சிக்கவில்லை?
நான் ஏதாவது ஆலோசனைக் கூறலாமா?
எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.
நடந்த கொலைகளுக்காக வருந்துவதாக நீங்கள் ஏன் சொல்லக் கூடாது? முசுலீம்களைப் பாதுகாக்க அரசு கூடுதலாக ஏதாவது செய்திருக்கலாம் என்று சொல்லலாமே?
திரும்பவும் சொல்லவும்...
2007-இல் நான் அதைப் பற்றிப் பேச தேவையில்லை, அதாவது நீங்கள் பேச விரும்புவதை எல்லாம்.
அனால், அதைப் பற்றி திரும்பச் சொல்லாமல், குஜராத்தின் நலனுக்கு எதிராக உள்ள பிம்பத்தைத் தொடர்ந்து நீட்டிக்க அனுமதிப்பது பற்றி நீங்கள் மக்களுக்குச் சொல்லியாக வேண்டும். அதை மாற்ற வேண்டியது உங்கள் கையில்...
மோடி ஒலிவாங்கியை (மைக்கை) நிறுத்திவிடுகிறார்.
எனக்கு ஓய்வு தேவை. எனக்கு கொஞ்சம் தண்ணீர் தேவை.
தண்ணீர்...
நட்பு தொடர வேண்டும். அவ்வளவுதான். நான் மகிழ்ச்சி அடைவேன். நீங்கள் இங்கு வந்தீர்கள். அதற்கு உங்களுக்கு என் நன்றி, மகிழ்ச்சி. நான் இந்த நேர்காணலை தொடர முடியாது. சரியா? இதெல்லாம் உங்களுடைய கருத்து, நீங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறீர்கள், தொடர்ந்து செய்கிறீர்கள். மூன்று–நான்கு கேள்விகள், நான் ரசித்தேன்.
இல்லை, கரண்.
மோடி சாப்...
கரண் நான் நட்புறவைக் தொடர விரும்புகிறேன். நீங்கள் அதை நோக்கி முயற்சி செய்யுங்கள்.
அய்யா, எந்த தவறு செய்வதைப் பற்றியும் நான் பேசவில்லை. நான் சொல்கிறேன், ஏன் நீங்கள் உங்கள் பிம்பத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது.
அதற்கு இது நேரமல்ல. அதற்கு நீங்கள் என்னை 2002-இல் சந்தித்திருக்க வேண்டும், 2003-இல் சந்தித்திருக்க வேண்டும். நான் அதை எல்லாம் செய்திருப்பேன்.
Thursday, October 11, 2007
ஈழத் தமிழர்களுக்கு மதத்தின் அடிப்படையில் உதவுவதை ஏற்க மாட்டோம் - தொல்.திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் 11-10-2007 அன்று, காலை 11.00 மணிக்கு புதுச்சேரியில், "யாத்ரி நிவாஸ்" விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஈழத் தமிழர்களுக்காக பழ.நெடுமாறன் தலைமையில் ஏற்கனவே சேகரித்த நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்றன. சேகரிக்கப்பட்ட பொருட்களைச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் கொண்டு செல்வதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
மனிதாபிமான அடிப்படையில் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வதற்கு யார் முன்வந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கும். மதத்தின் அடிப்படையில் “நாங்களும் இந்து, நீங்களும் இந்து” என்ற அடிப்படையில் உதவி செய்ய வருவதை ஏற்க முடியாது. இதை இங்குள்ள தமிழர்களும் ஏற்கமாட்டார்கள். ஈழத்தில் பட்டினி கிடக்கும் தமிழர்களும் எற்கமாட்டார்கள்.
(அண்மையில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் இல.கணேசன் ஈழத் தமிழர்களுகாக உணவுப் பொருட்கள், மருந்துகள் சேகரிக்கப் போவதாக அறிவித்தது இங்கு நினைவு கூரத்தக்கது).
திண்ணியத்தில் மனிதர்களை மலம் தின்ன வைத்த கொடுமையில் யூகங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது வேதனைக்குரியது. மேல்முறையீடு செய்ய வேண்டுமென்று தமிழக அரசிடம் வலியுறுத்துவோம்.
சேலம் அருகேயுள்ள கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோயிலில் தலித்துகள் நுழைவதற்கு ஜாதி இந்துக்கள் தடை விதித்துள்ளனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். வரும் 24-ஆம் நாளன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. தமிழக அரசு இதில் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்.
மரக்காணம் அருகே அனல் மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் பிரச்சினையில் தமிழக அரசு ஓர் ஆய்வுக் குழு அமைத்து மக்கள் கருத்தை அறிந்து முடிவு எடுத்தது. அதேபோல அனல் மின் நிலைய விவகாரத்திலும் ஆய்வுக் குழு அமைத்து மக்கள் கருத்தறிந்து முடிவு எடுக்க வேண்டும்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவில் எடுக்கும் முடிவுகளைப் பின்பற்றி அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அணுசக்தி ஒப்பந்தமானது இந்திய அரசைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாக இருக்க கூடாது. இந்திய இறையாண்மையைப் பாதிக்காத வகையில் ஒப்பந்தம் இருக்க வேண்டும். அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளை இந்தியா ஏற்க கூடாது. இதில் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பு சரிதான். நாடாளுமன்றத்திற்கு தீடீர் தேர்தல் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
பாண்டிச்சேரி மாநிலத்தைப் புதுச்சேரி மாநிலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதில் நகரத்தை மட்டும் பாண்டிச்சேரி என மீண்டும் அழைப்பது, புதுச்சேரி மாநிலத்தை மீண்டும் பாண்டிச்சேரி மாநிலம் என அழைக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும்.
கவிஞர் தமிழ்ஒளி நூல்களை அரசுடமையாக்க வேண்டும். அவருக்கு அரசு சிலை நிறுவ வேண்டும். தமிழ்ஒளி பிறந்த நாள் விழாவை சென்னை, புதுச்சேரி பகுதிகளில் கொண்டாட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
Tuesday, July 17, 2007
“ஈழப் போர்ச் சூழல் ஜாதியை மறைத்திருக்கிறது; அழித்துவிடவில்லை’’ - ஈழக் கலைஞர் சி.ஜெய்சங்கர்
சி.ஜெய்சங்கர்:மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கத் துறையில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ''மூன்றாவது கண்'' என்கிற உள்ளூர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவினை வழிநடத்தி வருகிறார். 'மூன்றாவது கண்' என தமிழிலும்,'தேர்ட் ஐ' என ஆங்கிலத்திலும் இதழ்களை நடத்துகிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். இவருடைய துணைவியார் வாசுகி ஓவியராக இருப்பதுடன், பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார்.
1965 டிசம்பரில் யாழ்பாணம் கோண்டாவில் என்கிற கிராமத்தில், அரசு ஆயுர்வேத மருத்துவரான சிவஞானம்&யோகேஸ்வரி தம்பதியருக்கு ஜெய்சங்கர் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். இதில் இருவர் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். தொடக்கக் கல்வியை கிராம பாடசாலையிலும், உயர்கல்வியை யாழ் கல்லூரியிலும் முடித்தார்.
குழந்தை மா.சண்முகலிங்கம் அவர்களை தனது முதன்மைக் ஆசானாக கருதும் இவர், யாழ்பாணத்தில் இருக்கும்போது, நிலாந்தன், செல்வி, சிவரமணி, வைதேகி, மனோகரன், வாசுகி, அருந்ததி, அகிலன், சத்யன், வில்வரத்தினம், கருணாகரன், ராமேஸ்வரன், கோபிதாஸ், கண்ணதாசன் ஆகியோருடன் இணைந்து குழுவாக நாடகம் மற்றும் கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் ‘தலித்முரசுக்கு’ அளித்த சிறப்பு பேட்டி.
ஈழம் வடக்கு, கிழக்கு என இரு பிரதேசங்களாக உள்ளன. வடகில் யாழ்பாணமும், கிழக்கில் மட்டக்களப்பும் மிக முக்கியமான பகுதிகள். இவை இப்போது எப்படி இருக்கிறது?
உலகில் எல்லா நாடுகளிலும் காணப்படுவது போன்றே இலங்கையில் வாழ்கின்ற சிங்களர், தமிழர் இடையேயும் பிரதேச ரீதியான வேறுபாடுகளும், ஒருமைப்பாடுகளும் காணப்படுகின்றன. இலங்கையில் உள்ள வடக்கு, கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களுக்கு இடையேயும் ஒத்துபோகக் கூடியதும்; வித்தியாசப்படுவதுமான பண்பாட்டு அம்சங்கள் நிலவுகின்றன. இரண்டுக்குமிடையே மொழிரீதியான ஒரு பொதுத்தன்மை காணப்படுகின்ற அதே நேரம், பிராந்திய மொழிவழக்கில் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. கிழக்கில் உள்ள மட்டகளப்பில் படுவான்கரை, எடுவான்கரை என்கிற இரு பகுதிகளுக்கும் இடையே வித்தியாசங்கள் காணமுடியும். அதே போல் யாழ்பாணத்தில் உள்ள வலிகாமம், தீவகம், வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளுக்குள்ளும் பண்பாட்டு வித்தியாசங்களை காணமுடியும். வடக்கு, கிழக்கின் பொதுத்தன்மை என்பது வித்தியாசங்களுடன் கூடியது. முக்கியமான அடிப்படையான வித்தியாசமாக இருப்பது சமூகப், பொருளாதார நிலைமைகள்தான்.
ஈழம் பற்றி சிந்திக்கும்போது, கிழக்குப் பகுதியில் குறிப்பாக மட்டகளப்பிலுள்ள படுவான்கரை என்பது முக்கியமான, பாரம்பரியமான, சமூக பண்பாட்டு மையமாக விளங்கி வருகிறது. ஆனால் கெடுவாய்ப்பாக இந்த படுவான்கரை இன்று மக்கள் புலம் பெயர்ந்த பிரதேசமாக இருந்து வருகிறது. அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து எழுவான்கரை என்ற இடத்தில் புலம்பெயர்வு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படுவான்கரை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று சொன்னால் பாரம்பரியமான உள்ளூர் அறிவுத்திறன் களஞ்சியமாக இருந்துகொண்டிருக்கிறது. நாங்கள் பலமான சமூகமாக வாழ்வதற்கான ஆதாரங்கள் பல அங்கே காணப்படுகின்றன. இன்றைய யுத்தமும், அதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற இடம்பெயர்வும், குறிப்பாக தமிழ்மக்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கின்றது. இந்த இடப்பெயர்வு அந்த மக்களை பாரம்பரிய அறிவுசார் முறையிலிருந்து அன்னியப் படுத்தியிருக்கிறது; அப்புறப்படுத்தியிருக்கிறது. உள்ளூர் அறிவுத்திறனை கொண்ட ஒரு சமூக பொருளாதார கட்டமைப்பு நோக்கில் பார்க்கும்போது, இதை ஒரு மிக மோசமான இழப்பாக பார்க்கிறோம்.
அரசியல் மொழியில் சொன்னால் வடதமிழீழம், தென் தமிழீழம் என்பது, சமூக- பண்பாட்டு-பொருளாதார ரீதியாக பொதுத்தன்மைகளும் வித்தியாசங்களும் கொண்டவை. அதே நேரம், எல்லா சமூகங்களுக்கும் உள்ளது போல் அந்தப் பிராந்தியங்களில், பிராந்தியங்களுக்கிடையில் காணப்படுகின்ற ஆதிக்க நிலைமையை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியத் தேவையாக இருக்கிறது.
ஈழத்தில் முகாம்களிலும், வெளிநாடுகளில் அகதிகளாகவும் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளை எப்படி பார்க்கிறீர்கள்?
தொடர்ச்சியான போரும், இடப்பெயர்வும் எம்மக்களின் வாழ்விடங்களை, வாழ்வாதரங்களை எல்லாம் தொலைத்துவிட்டு ஒரு அன்னியப்படுத்தப்பட்ட நிலையில் தங்கி வாழ்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. இது எங்களை மிக ஆபத்தான ஒரு சமூக, பொருளாதார நிலைக்கு இட்டுச்செல்கிறது. மேலும், தாராளமயம் மிகத்தீவிரமாக நடைமுறைபடுத்தப்படுவதற்கு, உள்ளூர் முரண்பாடும், அதன் காரணமாக எழுந்த போரும் பயன்படுத்தப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் இந்த இடப்பெயர்வு என்பது, உற்பத்தி சக்தியாக இருந்த எங்களை தங்கிவாழும் ஒரு சமூகமாக மாற்றி, குறைந்த ஊதியத் தொழிலாளர்களாக மாற்றும் நிலைமைளையும், வெறும் நுகர்வு சக்திகளாக வாழுகின்ற நிலைகளையுமே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
இன்றைய நிலையில் பெண்கள் எத்தைகய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்?
வரலாற்றுக்காலம் முழுக்க, உலகில் போரின் முதல் பலி உண்மை என்று சொல்வார்கள். அதற்கு சமமாக நாங்கள் சொல்ல வேண்டியது. போரில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிக்க உக்கிரமமாக பாதிக்கப்படுவர்கள் பெண்கள்தான். குடும்பச்சுமையைத் தாங்கி வீட்டிற்குள் குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்த பெண்கள், யுத்தம் காரணமாக இடப்பெயர்வு நிகழும் நிலையில், அவர்கள் அம்பலத்தில் வெட்டவெளியில் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். இது ஒன்றே, இந்தப் போரில் பெண்கள் நிலையை புரிந்துகொள்ள பொருத்தமாக இருக்கும். அம்பலத்தில் குடும்பத்தை நடதுதுவது என்பது பெண்களுக்கு எத்தைகயதொரு மோசமான சூழல் என்பது சிந்திக்க தெரிந்த எவருக்கும் விளங்கும். போர் நடைபெறும்போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது ஒரு வெளிப்படையான உரையாடலுக்குரியதாகவும், எதிர்ப்புக்குரியதாகவும் இருப்பது என்பதை காணமுடிகிறது. இதுமட்டுமில்லாமல் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது.
போர்சார்ந்த நடவடிக்கையால் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகின்ற அதே நேரம், சமூகத்தில் பெண்கள் அவர்கள் வாழ்கிற குடும்பத்துள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது என்கிற விஷயம் பேசாப்பொருளாக அல்லது மறந்து போகிற விடயமாக ஆகியிருப்பது என்பது கவனத்தில் கொள்ளவேண்டும், அது குறித்து ஒரு உரையாடல் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதும் மிகவும் அவசியமாகும். இது பற்றிய சிந்தனைகளில் அடிப்படை மாற்றம் தேவை என்பது மிக முக்கியமாகும்.
ஒரு சமூக விடுதலை என்பது அனைத்துவகையான ஒடுக்குமுறைகளையும், வன்முறைகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எதிர்கொள்ள வேண்டிய செயற்பாடாகவே பார்க்கவேண்டும். ஒவ்வொன்றாக தனிதனியாக அல்லது ஒன்று முந்தியது, மற்றது பிந்தியது என்று பார்ப்பதென்பது பொருந்தாது. ஏனெனில்,இத்தகைய நிலைகள் என்பது சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்ற சூழலில்,சமூகங்களால் புறத்திருந்தும், அகத்திருந்தும் நிகழ்த்தபடுகின்ற வன்முறைகள் பற்றி ஒரே நேரத்தில், ஒரே தளத்தில் நாங்கள் எதிர்கொள்ளவேண்டியது என்பதுதான் யதார்த்தமானதும், இயல்பானதும், பொருத்தமானதும் என்பதை நாங்கள் சிந்தித்து செயல்படவேண்டியுள்ளது.
இந்த வகையில் ஈழத்தில் பெண்கள் அமைப்புகள் போரினால் ஏற்படும் வன்முறைகளை எதிர்கொன்டும்; குடும்ப சமூக வன்முறைகளை எதிர்கொண்டும்; சமூகத்தின் உள்ளிருந்தும், வெளியிருந்தும் தடைகளையும் சவால்களையும் கடந்து செயற்பட்டு வருவது சாதகமானதொரு நிலைமையாகும்.
சிறுவர்கள் அங்கு இயல்பாக இருக்க முடிகிறதா? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
போரின் எதிர்காலத்தை முன்னெடுப்பவர்களாக இந்த சிறுவர்களே எல்லோராலும் முன்னிறுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, ஆக்கப்பூர்வமான சக்திக்காக உள்வாங்கப்பட வேண்டிய சிறுவர்கள், போரின் அழிப்பு செயல்பாட்டு சக்தியாக உள்வாங்கப்பட்டு முன்வைக்கப்படுவதென்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. வளர்ச்சி இல்லை என்பதற்கும் மேலாக அழிவு நடந்து கொண்டிருக்கின்றது என்பதை காண நேரிடுகிறது. இதனால் சிறுவர்களது, இளைஞர்களது உழைப்புச் சக்திகள் வீணடிக்கப்படுகிறது. இது இரட்டிப்பு பாதகமான நிலையாக காணப்படுகின்றது. சிறுவர்கள் காண்கின்ற இயல்பு வாழ்க்கை வன்முறை சார்ந்ததாக உள்ளது. எனவே அவர்களின் எதிர்கால வாழ்க்கை என்பதும் வன்முறை சார்ந்ததாகவே இருக்கும் என்பதற்கான சாத்தியப்பாடுகள்தான் காண்ப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தான நிலை.
ஏவுகனைத் தாக்குதல்கள், ராணுவ சுற்றிவளைப்புகள் என்ற சூழலில் வாழ்கிற சிறுவர்களுக்கு தங்களை ஒரு போராளிகளாக நினைத்துக்கொள்வதைத் தவிர வேறு எந்தத் தெரிவும் அவர்களுக்கு இல்லை என்பதை நாங்கள் மறுக்கமுடியாது. மேலும் இப்போதுள்ள சூழலில் நிலைமை என்னவெனில் வெறுங்கையுடன் சாதாரணமாக அவலமாகச் சாவதா அல்லது போராளியாக போரிட்டுச் சாவதா என்கிற இருவகையான சூழலுக்குள் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால்,தென்னிலங்கையின் அரசியல் நிறுவனங்கள், அதிகார மையங்கள் மத்தியில், சுற்றுலா மையங்களில் நடைபெறும் சிறுவர்களது பாலியல் தொழில் என்பது இணையதளங்களில் பிரசித்தமாயிருக்கின்ற நிலையில் அதிக கவனத்தில் கொள்ளப்படாமல் உள்ளது.
சிறுவர்கள் வடகிழக்கா அல்லது தெற்கா என்பது முக்கியமில்லை. இவர்களை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் என்பதுதான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். சிறுவர்கள் படையில் சேர்வதை தவிர்த்தல் என்பதில் நாங்கள் உண்மையில் அக்கறை உடையவர்களாக இருக்கிறோமா என்பதற்கு முதல் நிபந்தனையாக எந்தவித நிபந்தனையும் இன்றி யுத்தத்தை நிறுத்தவேண்டும். இதுதான் அடிப்படையான விடயம். அதைச் செய்வதற்கு நாம் எவருமே தயாரில்லாமல், பாதகமான நிலைமைகள் எல்லாவற்றையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் விடயத்தில் நாம் கவனமாய் இருக்கவேண்டும்.
போர்சூழல் காரணமாக ஈழத்தில் சாதிகள் ஒழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?
போர்ச்சூழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்றுவேண்டுமானால் கூறலாம். ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்லமுடியாது. மறைந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாகக் கூறினால். ராணுவம் குண்டு வீசப்போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கின்ற கோயில்தான். உயிர்பிழைக்க ஒடி கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படி நிலை வெளிபடும். ஓடி தஞ்சமடையும் போது பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும், ஊரில் முற்பட்ட முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடி, சகடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்.
இன்னொன்றையும் சொல்கிறேன். கூத்து குறித்து ஒரு அண்ணாவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பறையறிவிப்போன் குறித்து அந்த பேச்சு நீண்டது. அரசருடைய செய்திகளையும்,உத்திரவுகளையும் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்ற பணியை செய்கின்றவன் பறையறிவிப்போன். அரசன் வரவை அறிவிக்கும் கௌரவமான கட்டியகாரன் போல அரச செய்தியைச் சொல்லும் பறை அறைவோனும் கௌரமாகவே பணியாற்றுவது யதார்த்தமாக இருக்கும் என்றேன். அதற்கு அந்த அண்ணாவி, பறை அறைவோனை பாரம்பரியக் கூத்தில் உள்ளது போல் குடிகாரனாக, முடவனாக, அறிவில்லாதவனாக, கூடாத வார்த்தைகள் பேசி வருபவனாக அல்லாமல் கௌரவமான பாத்திரமாகக் கொண்டு வருவது பிரச்சினயில்லை. அது நல்லதுதான். ஆனால் அரசர் பிரதானிகளுடன் பறையறைவோன் கொலுவில் வர முடியாது. அதை ஏற்கமாட்டார்கள் என்றார். இப்படி ஒரு புதிய கருத்து எனக்கு அப்போதுதான் புரிந்தது. உரையாடல் களம் இருப்பதால்தான் இப்படி புதிது புதிதாய் புரியவும், உணரவும் முடிகிறது. பிறகு பேசினோம். கட்டாயம் நாம் அடுத்ததொரு கூத்தில் மன்னன் கொலு வரவில் பறையறிவிக்கும் பறையனை கட்டாயம் இடம் பெறச் செய்யும் வகையில் புதிய கூத்து எழுதப்பட வேண்டும். எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இதுவரையில் அத்தகையதான கூத்துப் பற்றிக் கேள்விப்படவில்லை.
விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்களின் பங்கு எந்த அளவில் உள்ளது?
எங்களின் விடுதலைப் போராட்டத்தில் கலை வடிவங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. எல்லா கலைகளும் ஆக்கப்பூர்வமாக பயன்படுதப்படுகின்றது. குறிப்பாக விடுதலை இயக்கம் சார்ந்த கலைப்படைப்புகள் ஒரு வகையாகவும், விடுதலை இயக்கம் சாராத சமூக, மக்கள் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற கலைஞர்களது ஆக்கங்கள், படைப்புகள் ஒரு வகையாகவும் என இரு தளங்களில் நாங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றோம். இதில் விடுதலை இயக்கங்களின் கலை படைப்புகள் அரசியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்தப்படுகிறது. இது இன்று மேலோங்கியுள்ளது.
கலைகளில் எவை பேசப்பட்டுள்ளன. எவை பேசப்படவில்லை என்பது பற்றி ஒரு மதிப்பீடு செய்கின்றபோது, எங்களுடைய அரசியல் சூழ்நிலையில் கலை வெளிப்பாடு எவ்வாறு நிகழ்ந்திருகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். பிரச்சார நோக்கில் பார்க்கும்போது எல்லா கலைச்சாதனங்களுமே மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கபட்டிருக்கிறது. நாடகம் என்று பார்த்தாலும் சரி, கூத்து என்று பார்த்தாலும் சரி, அரங்கு என்பது பிரச்சார நோக்கில் வீதிநாடகங்களாக, மேடைநாடகங்களாக பரவலாக மேடையேற்றப்பட்டிருக்கிறது. புலிகள் வீதிநாடகங்களை வலுவான கலையாக முன்னெடுத்திருக்கிறார்கள். அதற்கு மேலாக மேடை நாடகம் என்பதிலும் அவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்தக் கலைவடிவங்களில் எங்களுடைய பாரம்பரிய கலையம்சங்கள் பல்வேறு வழிவகைகளில் எடுத்து கையாளப்பட்டிருக்கிறது. அதில் சிற்பம், ஓவியம், கவிதை, ஆடல்கள், வாத்தியங்கள், பாடல்கள், நாடகங்கள் என எல்லா வடிவங்களும் அடங்கியுள்ளன். மக்கள் மத்தியில் தொடர்பு கொள்வதற்கு ஒரு வலுவான வழிமுறையாக இவை இனங்காணப்பட்டுள்ளன.
மூன்றாவது கண் என்கிற உள்ளூர் அறிவுத் திறன் செயற்பாட்டுக்குழுவின் மூலம் எத்தகைய பணிகளை செய்து வருகிறீர்கள்?
எமது சமூகத்தில் மக்கள் தமக்கு வசதியான, வாய்ப்புள்ள இடங்களான கோயில், வீதி, தெருச்சந்திப்பு, வீட்டு முற்றம், மரநிழல்களில் கூடிக்கதைகும் மரபு இருந்தது. இந்தச் சமயங்களில் பல்வேறு செய்திகளையும், சம்பவங்களையும், தலைப்புகளையும் அதன் சாதக பாதகங்களுடன் அலசி, ஆராயும் நிலை இருந்தது. ஆனால் இன்று இனப்பிரச்சனையும், ராணுவ நடவடிக்கைகளும் கூர்மையடைந்துள்ள நிலையில் பொதுமக்களால் கூடிக்கதைக்கும் நிலை இல்லாமல் போனது.
இப்போது வீடுகளில் முடங்கியுள்ள மக்களை தொலைக்காட்சிகள் மூளைச்சலவை செய்வதில் பெரும்பங்காற்றி வருகின்றன. தமிழ்நாட்டு திரைப்படங்கள், தொடர் நாடகங்கள் புற்றீசல்போல வீடுகளுக்குள் நுழைந்துவிட்டன. இது மக்களுக்கு இன்றுள்ள யதார்த்தின் குரூரத்தை விளங்கி கொள்ளாவிட்டாலும்; அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழியாகவும் அமைந்து காணப்படுகிறது. இத்தகைய மாய வாழ்கையில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டு, எங்களை நாங்கள் புரிந்துகொண்டு, எங்களுக்கான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கி செயல்படவும், சிந்திப்பதுமே மூன்றாவது கண் நோக்கம்.
இதற்காக அறிவுத்தளதில் நின்று பல்வேறு தளங்களில் விவாதிப்பது முக்கியமாகிறது. குறிப்பாகப் பிரதான ஒட்ட அச்சு மற்றும் இலத்திரணியல் தொடர்பு ஊடகங்கள் இந்த வேலையை செய்வதாக சொல்கிறதே தவிர செய்வதில்லை. தொடர்பு சாதனங்களான ஊடகங்கள் அனைத்தும், ஒன்று அதிகாரத்திற்கு சேவகம் செய்கின்றன. அல்லது வியாபாரத்தை மையமாகக் கொண்டு அதிகாரத்திற்கு கட்டுபட்டு இயங்குகின்றன.
தொடர்புசாதனங்களின் ஆக்கிரமிப்பு வலைபின்னலுக்கு மாற்றாக பொதுமக்கள் மத்தியில் விவாதங்களை தூண்டவல்ல அரங்குகளின் தேவை அவசியமாகிறது. அப்பொழுதுதான் செய்திகளுக்குப் பின்னால் உள்ள செய்திகளை விளங்கிக் கொள்ளவும், அது பற்றி விவாதிக்கவும் முடியும். எமக்குப் பொருத்தமான மக்கள் மையப்பட்ட விவாதக் களங்களை அரங்க அறிவுடனும், பாரம்பரிய உரையாடல் களங்களின் அனுபவத்துடனும், அறிவுத்தளத்தில் நிகழ்த்துவது முக்கியம் என்கிற உரத்த சிந்தனையும் செயற்பாடும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளன. இதற்கான அரங்குகளைத்தான் மூன்றாவது கண் முன்னெடுத்து வருகின்றது.
மேலும் இன்றைய கல்விமுறையில் மாற்றங்கள் செய்யவேண்டிய அவசியத்தேவையிலும் உள்ளோம். தொழிற்சந்தை நிலவரத்திற்கேற்ப மாணவர்களை உற்பத்தி செய்கின்றோம் என்று கல்விமான்களும், அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் சொல்கிறார்கள். அதில் பெருமை கொள்கிறார்கள். ஆனால் மாணவர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு உதாராணம் சொல்கிறேன். பல்கலைகழக உயர்கல்விக்கு தெரிவான புதுமுக மாணவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. அப்போது அந்த மாணவர்களிடம், கண்டுபிடிப்புகள்; கண்டுபிடிப்பாளர்களாக வெள்ளையர்கள் பெயர்கள் மட்டுமே பாடப்புத்தகங்களில் காணப்படுகின்றன. ஏன் நம்மவர்கள் காணப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு மாணவர்களிடமிருந்து ; அவர்கள்தான் கண்டுபிடிப்பார்கள், கண்டுபிடிக்கக் கூடியவர்கள், அவர்கள் கண்டுபிடிக்கட்டும். நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்; அவர்களுக்குதான் எல்லா வசதிகளும் உள்ளன எங்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லை மேலும் நாங்கள் சோம்பேறிகள் என்கிற பதில்கள் கிடைத்தன. கல்வித்துறையில் கற்பிக்கும் பணியை செய்துவருகின்ற நானே ஒரு கணம் அதிர்ந்து போனேன். அவர்கள்தான் கண்டுபிடிப்பார்கள், நாங்கள் சோம்பேறிகள், நாங்கள் பயன்படுத்துவோம் என்கிற இந்த பதில்களை கூறத்தான், மாணவர்களுக்கு இத்தனை ஆண்டுகளாக நாம் சொல்லித் தந்திருக்கின்றோமா?
காலனித்துவ கல்விமுறையால் இன்றைய யதார்த்தச் சூழலில் இருந்து அந்நியப்படுத்தப் பட்டுள்ளோம் இச்சூழலை உணரவைத்து அதிலிருந்து மீள வேண்டும் என்கிற உணர்வை உருவாக்கி கற்பனை, சிந்தனை, படைப்பாற்றல், செயற்றிறனுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கல்விசார்ந்தும் சில செயல்பாடுகளுக்கு மூன்றாவது கண் முன்னெடுத்து வருகின்றது.
மக்களை ஒன்று சேர்க்கவும், தங்களுக்குள் உரையாடிகொள்ளவும் தங்களது தேவைகளை தாங்களே அறிந்துகொள்ளவும், அவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வழிவகைகளை தீர்மானித்துக்கொள்ளவும், தங்களது ஆற்றல்களை அடையாளம் காணவும், வெளிபடுத்திக் கொண்டாடவும், தாழ்வுச்சிக்கல்களில் இருந்து விடுபட்டுக்கொள்ளவும், படைப்பாற்றல்கள் வெளிபடவும் கூடியக் கல்வியை, சமூகத்தை, பண்பாட்டை அறிவுத்தளத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் ‘மூன்றாவது கண்’ணின் நோக்கம்.
(தொடரும்)
நன்றி: தலித் முரசு ஜூலை 2007
Wednesday, July 11, 2007
ஆனந்த விகடனில் கோ.சுகுமாரன் நேர்காணல்
நேர்காணல் கண்டவர்: டி.அருள் எழிலன்.
புகைப்படங்கள்: கே.ராஜசேகரன்.
குறிப்பு: தெளிவாக படிக்க படத்தைக் கிளிக் செய்யவும்.



இணையதளத்தில் கோ.சுகுமாரன் நேர்காணல் குறித்த விவாதம்
Tuesday, May 16, 2006
அரசியல் அதிகாரப் போட்டியில்
அரசியல் அதிகாரப் போட்டியில் முதல் பலி சமூக மாற்றத்திற்கானப் போராட்டமே-
டாக்டர் கே. பாலகோபால்
மக்கள் யுத்தக் குழுவுக்கும், அரசுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கும், இதற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
தற்பொழுதுள்ள நிலையில் சி.பி.அய். (மாவோயிஸ்ட்) க்கும், ஆந்திரப் பிரதேச அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்தபோது, பேச்சுவார்த்தை நடந்ததாகச் சொல்லப்பட்டாலும், அதன் மூலம் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஏனெனில், பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று சந்திரபாபு (நாயுடு) வலியுறுத்தினார். இது, முற்றிலும் நடைமுறைச் சாத்தியமற்ற முன்நிபந்தனையாகும். ஏனெனில், நக்சலைட்டுகள் பொது நீரோட்டத்திற்கு வர விரும்புகிறார்கள் என்பதும், அதற்கு ஒரு மதிப்புமிக்க வழியை எதிர்பார்த்து நிற்கிறார்கள் என்பதும் யாரும் நம்பக்கூடியதாக இல்லை. அவர்கள் அப்போதும் சரி, இப்போதும் சரி, ஆயுதப் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

புரட்சிகரப் போராட்டத்திற்கும், அதற்கெதிரான அரசின் கொடூரத் தாக்குதலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் பொது மக்களின் நிலையிலிருந்துதான் அனுபவம் மிக்க பொது நல ஆர்வலர்களைக் கொண்ட "அக்கறையுள்ள குடிமக்களின் குழு', விவாதத்திற்குரிய இப்பேச்சுவார்த்தையை முன்வைத்தது. இப்பேச்சுவார்த்தைகூட, காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ராஜசேகர (ரெட்டி), தொடக்க நிலையில் எந்த முன்நிபந்தனைகளையும் வைக்காததால்தான் நடைபெற்றது. காங்கிரஸ் அரசு, நக்சலைட்டுகளுடன் முன்நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது. நக்சலைட்டுகளும் தங்கள் சார்பில் இத்தகையதொரு போர் நிறுத்தத்தை ஏற்று, பேச்சுவார்த்தைக்கென எந்த முன்நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. விவாதத்திற்குரிய ஒரே பொருள் என்னவெனில், பேச்சுவார்த்தை காலங்களில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதியை அளித்திருக்கும் நக்சலைட்டுகள், ஆயுதங்களுடன் வருவார்களா, இல்லையா என்பதே. மாவோயிஸ்டுகள் குறைந்தபட்ச அளவில்கூட ஆயுதங்களைக் கீழே வைக்க முடியாது என்பதை வலியுறுத்தினர்.
ஆனால், ஆயுதப் போராட்டத்தையே அவர்கள் கைவிட வேண்டும் என்று முன் நிபந்தனையிடும் அரசு, பேச்சுவார்த்தை மற்றும் போர் நிறுத்த காலங்களில் அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை விரும்ப வில்லை. நாங்கள் ஆயுதமேந்தத் தவறினால், எதிரிகளால் தாக்கப்படுவோம் என்று மாவோயிஸ்டுகள் அச்சப்பட்டிருந்தால், அரசு அவர்கள் தங்கள் தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒப்புக் கொண்டிருக்கும். ஆனால், மாவோயிஸ்டுகளின் ஆட்சேபனை வெறும் அடையாளத்திற்காக மட்டுமே சொல்லப்பட்டதாக இருந்தது. இத்தகையதொரு அணுகுறை, பேச்சுவார்த்தைக்குத் தடையாக இருந்திருக்க வேண்டியதில்லை.பேச்சுவார்த்தைக்கான தேவையை மாவோயிஸ்டுகளோ, அரசோ மிக உறுதியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. நக்சலைட்டுகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் உள்ள ஆளும் கட்சியினர்தான், பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தனர்.
இருப்பினும், கடந்த கால நிகழ்வுகளுக்கு எதிராக, ராஜசேகர (ரெட்டி) மிகவும் தந்திரமாக நடந்து கொண்டார். இப்பிரச்சினையில் இவருக்கு முன்பிருந்த சந்திரபாபு (நாயுடு)வின் கருத்தையே கொண்டிருந்த இவர், தான் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார். எனவே, இப்பிரச்சனையில் அவர் எதையும் சொல்லாமல், அவருடைய உள்துறை அமைச்சரே எல்லா பேச்சுவார்த்தையிலும் முன்னின்று நடத்துமாறு பார்த்துக் கொண்டார். எந்தவொரு நோக்கமற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை, ஊடகங்கள் மட்டுமே முக்கியச் செய்தியாக்கின. ஆனால், சந்திரபாபு (நாயுடு) எழுப்பிய அதே சந்தேகங்களைத்தான் ராஜசேகர (ரெட்டி)யும் எழுப்பினார்: சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, சட்டத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் போராளிகளுடன் அவர்கள் ஆயுதத்தைக் கீழே போடாத நிலையில் எப்படிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும்? அதே நேரத்தில், இப்போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கவும் காவல் துறைக்கு அனுமதியளித்து, "என்கவுன்டர்' மரணத்தையும் நடத்தத் தொடங்கினார். அதற்குப் பிறகு, பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
இதனால்தான் பெயரே தெரியாத சில குழுக்கள் தங்களை "டைகர்', "கோப்ரா' என்று சித்தரித்துக் கொண்டு, மக்கள் அமைப்புகளின் தொண்டர்களைத் தாக்கி வருகின்றனர். மாவோயிஸ்டுகளுக்கு நெருக்கமாக உள்ள ஜனநாயக சக்திகளை வெளிப்படையாகவே கொன்று வருகின்றனர். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் குழுவைச் சேர்ந்த புருஷோத்தம் மற்றும் முகமது ஆசாம் அலி என்ற இரண்டு சிவில் உரிமைப் போராளிகளை, இந்த "டைகர்'கள் முதலில் கொன்றனர் என்பது உண்மைதான். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு, பல்வேறு "கோப்ரா'க்கள் இதற்கு முன்பு இல்லாத வகையில் பரவலாக செயல்படத் தொடங்கி விட்டனர். அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததும், ஆறு மாதத்திற்குள்ளாகவே மிகப் பெருமளவுக்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக இருக்கும் ஆசியர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக அல்லது மறைமுகமாக அரசு வன்முறைக்கு எதிராகப் பேசுகின்றவர்களாக இருந்தாலும் இந்த அமைப்புகள் மிகக் கொடூரமாகக் கொன்றுள்ளன. பல்வேறு அமைப்புகளில் இருந்த தனிப்பட்ட போராளிகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த அமைப்புகளுமே இத்தகைய முகமூடி கொலைகாரர்களைக் கண்டு, தங்கள்அமைப்பைக் கலைத்து விட்டனர். மனித உரிமை அமைப்பினர் மட்டுமே செயல்பட்டு வந்தனர். இதைச் சொல்லும் போதே, அப்படி நடந்துவிடாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் ஏற்படுகிறது.
வன்முறையை அவர்களால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கேட்டால், மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிப்புக்குள்ளானவர்கள், அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக தாங்களாகவே ஆயுதமேந்தியிருக்கலாம்; எப்படி (காவல்துறை) அவர்களால் மாவோயிஸ்ட்டு வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லையோ, அதேபோல அவர்களால் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வன்முறையையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுகின்றனர். இத்தகைய கூலிப்பட்டாளங்களில் உள்ள சிலர், நக்சலைட்டுகளால் பாதிப்படைந்தவர்களாகவோ, இல்லாமலோ இருக்கலாம். ஆனால், எல்லோருமே அப்படிப்பட்டவர்கள் என்பதில் உண்மையில்லை. நம்முடைய சந்தேகம் என்னவெனில், பெரும்பான்மையான "கோப்ரா'க்களும் "டைகர்'களும் போலிஸ்காரர்கள் என்பதுதான். இன்னொரு சந்தேகம், குற்றவாளிகளாக மாறிய முன்னாள் நக்சலைட்டுகள் சிலர், முன்னாள் தோழர்களுக்கு எதிராக, போலிஸ் பாதுகாப்புடன் செயல்படுகிறார்கள் என்பதும் உண்மையே. இத்தகைய போக்குகள், மிகவும் ஆபத்தானவை; இது பல்வேறு கொடிய வன்முறையாளர்களையே உருவாக்கும். காவல் துறைக்கு காட்டிக் கொடுப்பவர்களும், தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பு கருதி, இத்தகைய கொலைக்கூட்டங்களில் சேருகிறார்கள் என்றும் மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர்.
ஒரு மனித உரிமைப் போராளியாக உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட தாக்குதல்கள் பற்றி சொல்லுங்கள்.
மனித உரிமைகளுக்காக களப்பணியாற்றுவது, எப்போதுமே ஆபத்துகள் நிறைந்தது. 1985 சூன் மாதம்தான் நான் முதல் முறையாக "அகில இந்திய வித்யார்த்தி பஷத்' ஆட்களால் வன் முறைக்கு ஆளானேன். கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள ஜக்டியல் என்ற பேருந்து நிலையத்தில், இரும்பு நாற்காலிகளாலும், ஹாக்கி மட்டைகளாலும் நான் தாக்கப்பட்டேன். இதற்குப் பழிவாங்கும் வகையில், அவர்களில் இருவர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டனர். ஆனால், இதற்கும் முன்னதாகவே "ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழக'த்தைச் சேர்ந்த கோபி ராஜண்ணா என்ற போராளி, சனவரி மாதம் இதே ஊரில் சங்பரிவார் கும்பலால் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகு அதே ஆண்டு, செப்டம்பர் 3 அன்று, ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் ராமநாதம், வாரங்கல்லில் பட்டப் பகலிலேயே கொல்லப்பட்டார். இது, காஜிப் பட்டு என்ற இடத்தின் காவல் துணை கண்காணிப்பாளரை, நக்சலைட்டுகள் (அப்போதைய மக்கள் யுத்தக் குழு) கொன்றதற்கானப் பழிவாங்கும் நடவடிக்கையாகும். நான் இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தபோது, 7.12.91 அன்று வாரங்கல்லில் நாராபிரபாகர் (ரெட்டி) யும், 7.12.86 அன்று கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள அங்குனூல் ஜபா லட்சுமணன் (ரெட்டி)யும் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவருமே ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழகப் போராளிகளாவர்.
1989 இல், நான் கம்மம் அருகில் அய்தராபாத்தை நோக்கிப் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டேன். நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட காவலர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இரண்டு இரவுகள் கண் கட்டப்பட்டு பிணைக் கைதியாக நான் வைக்கப்பட்டிருந்தேன். 1991 ஆம் ஆண்டு கம்மம் மாவட்டம் கோதகுடம் என்ற இடத்தில் மீண்டும் போலிஸ் ஏற்பாடு செய்த கிரிமினல்களால் தாக்கப்பட்டேன். என் முகத்தில் கடுமையாகத் தாக்கினார்கள். டாக்டர் ராமநாதம் என்பவர் பெயரில், நினைவு மண்டபம் எழுப்புவதற்காக நான் சேகரித்த பணத்தையெல்லாம் அவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தலித் இயக்கங்கள் பற்றி தங்களுடைய பார்வை என்ன?
ஆந்திரப் பிரதேசத்தில் 1985 இல் எழுச்சியுடன் தோன்றிய தலித் இயக்கம்தான், பார்ப்பனியத்தின் மீதான முதல் தாக்குதலாகும். இம்மாநிலத்தின் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம், தமிழ் நாட்டைப் போல வலுவாக இல்லை. இங்கு அதற்கான இடத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் ஆக்கிரமித்துக் கொண்டது. அது சில வழிகளில் ஒரு பரந்த செயல் திட்டத்தைக் கொண்டிருப்பினும், பார்ப்பனியத்தை விமர்சிப்பதில் அது பலவீனமுடனேயே இருக்கிறது. ஒரு துடிப்பான பகுத்தறிவு நாத்திக இயக்கம் இருந்தாலும், அது சூத்திரர்களில் மேலடுக்கில் உள்ள சாதியினரால் நடத்தப்படுகிறது. எனவே, அது பார்ப்பனியத்தை எதிர்ப்பதில் சில எல்லைகளைக் கொண்டிருக்கிறது. "கம்மா' மற்றும் "ரெட்டி' சாதிகளைக் கொண்ட இவ்வியக்கம், கொள்கையளவில் வர்ணாசிரம தர்மக் கோட்பாட்டை விமர்சிக்கிறது. ஆனால், தங்களைப் பார்ப்பனர்களுக்கு ஏற்புடையவர்களாகவும், அதே நேரத்தில் சூத்திரர்களிலேயே ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு சமத்துவத்தை, உரிமைகளை மறுப்பவர்களாகவுமே உள்ளனர். பஞ்சமர்கள் என்று வந்து விட்டால், இதைவிட மோசமாக நடந்து கொள்கின்றனர்.
இதற்கும் மேலாக, பகுத்தறிவு இயக்கத்தில் இருந்த கணிசமான பிரிவினர் மார்க்சிஸ்டுகளாக இருப்பது, பார்ப்பனியத்தை விமர்சிப்பதற்குத் தடையாக இருக்கிறது. மார்க்சியத்தின் கருதுகோள்களான அடித்தளம், மேல்கட்டுமானம், வர்க்கப் போராட்டம் போன்றவை, பார்ப்பனியத்தை எதிர்கொள்ளும் திறனற்றவையாக உள்ளன. பார்ப்பனியத்தை, அது முன்வைக்கும் வாழ்க்கை முறையை அதனளவிலேயே ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டும். புலே, அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சிந்தனைகளில் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், பார்ப்பனிய எதிர்ப்பு என்பதில் அவர்களுடைய வழிமுறை மிகச் சிறப்பாக இருந்தது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
17.7.1985 அன்று கரம்சேடு என்ற இடத்தில் "கம்மா' சாதியினரால் தலித் மக்கள் கொல்லப்பட்டபோதுதான் "ஆந்திரப் பிரதேச தலித் மகாசபா' என்ற தலித் இயக்கம் தோன்றியது. அதற்குப் பிறகுதான், ஒரு சிறு குழுவிற்குள் முடங்கியிருந்த அம்பேத்கரின் சிந்தனைகள், ஒரு மாபெரும் அரசியல் கொள்கையாக மாறியது. எண்பதுகளின் பிற்பகுதியில் மிகப் பிரபலமாக இருந்த "தலித் மகாசபா', தொண்ணூறுகளின் தொடக்கம்வரை ஆற்றலுடனேயே செயல்பட்டது. தலித் மக்களின் அன்றாட நடைமுறைப் பிரச்சினைகளையொட்டி அவர்களை ஒருங்கிணைக்காததாலும், கொள்கைத் தளர்ச்சியினாலும்தான் அது படிப்படியாக சரிவை சந்தித்தது. முற்போக்கு அமைப்புகளின் அடிப்படைகளைத் தகர்க்கும் பலவீனங்கள், தலித் அமைப்புகளையும் விட்டுவைக்கவில்லை என்பது வியப்புக்குரிய ஒன்றல்ல.
எல்லா முற்போக்கு இயக்கங்களைப் போலவே தலித் இயக்கத்திலும் ஊழல், சுயநலம், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரைப் போல, எல்லா போராட்டங்களுக்கும் மத்தியில் சுகங்களை அனுபவிப்பது போன்றவையும் ஒரு காரணம். கொள்கை அளவில் அரசு அதிகாரம் என்ற மாயையின் பின்னால் தொடர்ந்து செல்வது, முக்கியத் தடையாக இருக்கிறது. தலித் சிந்தனையாளர்கள் தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் ஒருங்கிணைப்பை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி அரசியல் அதிகாரத்தைப் பெற்றுவிடலாம் என்று கணக்குப் போடுவது, மிகச் சாதாரணமாகிவிட்டது. இதனால் சமூக மாற்றத்திற்கானப் போராட்டம்தான் முதலில் பலியாகிறது. சீர்திருத்தம் அல்லது புரட்சி என்று எப்படி அழைத்தாலும் அதுதான் புலே, பெரியார் மற்றும் அம்பேத்கர் காண விரும்பியதாகும்.
- பேட்டி அடுத்த இதழிலும்...
நன்றி: தலித முரசு
Wednesday, April 19, 2006
ஆக்கப்பூர்வமான வன்முறை என்று ஒன்றில்லை
நேர்காணல் : கோ. சுகுமாரன்டாக்டர் கே. பாலகோபால், இந்திய அளவில் புகழ்பெற்ற மனித உரிமைப் போராளிகளில் குறிப்பிடத்தகுந்தவர். இவர் ‘ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் குழு'வின் பொதுச் செயலாளராக இருந்தவர். தற்பொழுது ‘மனித உரிமைக் கழக'த்தின் பொதுச் செயலாளராக செயல்படுகிறார். ஆந்திராவில் வெகு மக்கள் ஆதரவுடன் 18 மாவட்டங்களில் இவ்வமைப்பு செயல்படுகிறது. மனித உரிமை அமைப்புகள் மக்கள் இயக்கமாக செயல்பட முடியாது; சிறிய குழுவாகத்தான் இருக்க முடியும் என்பதை செயலளவில் மாற்றியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.
1994 இல் கர்னூலில் நடைபெற்ற ‘ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் குழு'வின் மாநில மாநாட்டில் இவரது அறிக்கை, 18 மணி நேரம் விவாதிக்கப்பட்டது. அரசு வன்முறையும், தனி அமைப்பு வன்முறையும் எதிர்க்கப்பட வேண்டும் என்ற இவரது கருத்துகள், அப்போது நீண்ட விவாதத்திற்குள்ளானது. இதன் தொடர்ச்சியாக, மேற்குறிப்பிட்ட நக்சலைட் ஆதரவு மனித உரிமை அமைப்பிலிருந்து விலகி, தனி அமைப்பு உருவாக்க வேண்டிய நிலைக்கு இவர் தள்ளப்பட்டார். ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றிவரும் இவர், செயல்தளத்தில் மட்டுமல்லாது எழுத்துத் தளத்திலும் பங்களிப்பு செலுத்தி வருகிறார். காவல் துறையின் அதிகாரம் மேலோங்கி இருக்கும் ஆந்திராவில், உயிருக்கு அச்சுறுத்தலுள்ள சூழலில் இவருடைய துணிவான மனித உரிமை செயல்பாடு, பலராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.
தங்களுடைய குடும்பப் பின்னணி, சமூகப் பின்னணி...என்னுடைய குடும்பம், ஆந்திரப் பிரதேசத்தின் ராயல்சீமா பகுதியைச் சேர்ந்தது. இப்பகுதி கடுமையான வறட்சிக்கும், ‘குழு' வன்முறைக்கும் புகழ் பெற்ற இடம். என்னுடைய அம்மாவின் தந்தை, பார்ப்பனிய மரபுவழிச் சடங்குகளில் தேர்ந்த பயிற்சி பெற்றவர். இவர் மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவருக்கு அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள அக்கிரகாரத்தில் பங்கு இருந்தது. இப்பகுதி, ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதிகளைப் போல மிகவும் வறண்டு காணப்பட்டது. என்னுடைய தந்தையின் குடும்பம், கடப்பாவில் உள்ள நகர்ப்புறத்தைச் சேர்ந்த கீழ் நடுத்தர வர்க்கமான பார்ப்பனக் குடும்பம். என் தந்தை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கிளை மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். எனது தாய் 14 முறை கருவுற்றுப் பதினோரு குழந்தைகளைப் பெற்றார்; அதில் மூவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். என்னுடைய தாய் எங்கள் எட்டு பேருடைய (4 சகோதரர்கள், 4 சகோதரிகள்) வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தினார்.
என்னுடைய தந்தை ஒரு சராசரி ஆணாகவே இருந்தார். அவருடைய ஒரே கடமை, எங்களுக்குப் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களைச் செலுத்துவது தவிர வேறில்லை என்று நம்பிக் கொண்டிருந்தார். அதுகூட அந்தக் காலத்தில் நகராட்சிப் பள்ளிகளிலும், அரசுக் கல்லூரிகளிலும் எங்களுக்கு நல்ல முறையிலும், இலவசமாகவுமே கற்றுக் கொடுக்கப்பட்டது. என்னுடைய தந்தைக்கு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுதல் வந்ததால், மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் நான் படிக்க நேர்ந்தது. என்னுடைய அறிவியல் இளங்கலைப் படிப்பை திருப்பதியில் படித்து 1972 இல் பட்டம் பெற்றேன். என்னுடைய அறிவியல் முதுநிலைப் படிப்பையும், கணிதவியலில் முனைவர் பட்டத்திற்கானப் படிப்பையும், தெலுங்கானா பகுதி வாரங்கல்லில் உள்ள’முஜினல் பொறியியல் கல்லூரி'யில் (தற்பொழுது அது ‘தேசியத் தொழில்நுட்ப நிறுவனம்' என்று அழைக்கப்படுகிறது) படித்தேன். வாரங்கல் பகுதி, 1946 - 57 காலகட்டத்தில் தெலுங்கானாவின் விவசாயிகள் எழுச்சிப் போராட்டத்திற்குப் பெயர் பெற்ற இடமாகும். 1970 களின் மத்தியில் இவ்வியக்கம், சிறீகாகுளத்திலிருந்து தெலுங்கானாவிற்கு மாறியதிலிருந்து இன்னும் பல வழிகளில் குறிப்பாக, நக்சலைட் இயக்கத்திற்கு மய்யமான இடமாக அது விளங்குகிறது.
நீங்கள் ஒரு மனித உரிமைப் போராளியாக எவ்வாறு பணியாற்றத் தொடங்கினீர்கள்?
நான் முதன் முதலில் வாரங்கல்லில்தான் நக்சலைட்டு இயக்கத்துடன் தொடர்பு கொண்டேன். அதற்கு முன்பு, திருப்பதியில் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, கணிதம் இயற்பியல் வேதியியல் ஆகிய வகுப்புகளைத் தவிர்த்துவிட்டு, பெரும்பாலான கல்லூரி நாட்களை சிறீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகத்தில்தான் செலவழித்து வந்தேன். வரலாறு, தத்துவம், ஆங்கில இலக்கியம், மனோதத்துவம், தர்க்கவியல் மற்றும் வானவியல் குறித்து நிறையப் படித்தேன். நான் வெகு விரைவில் பெர்ட்ரண்ட்ரசல் மற்றும் அவருடைய இடதுசாரி சிந்தனைகளின் பால் ஈர்க்கப்பட்டேன். எனவே, அப்போது எனக்கு கம்யூனிஸ்ட்டுகள் மனதளவில் நல்லவர்களாகவும், சிந்தனை அளவில் இறுக்கமானவர்களாகவும் பட்டார்கள்.
நான் வாரங்கல்லில் இருந்தபோதுதான் நக்சலைட் இயக்கத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. இதற்கு முஜினல் பொறியியல் கல்லூரி, ஒரு மய்ய இடமாக அமைந்தது. 1975 சூனில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது, சுராபனானி ஜனார்த்தனன் என்ற நக்சலைட் போராளிதான் முதல் முறையாகக் கொல்லப்பட்டவர். அவர் இக்கல்லூரியின் மாணவர். மற்றொருவர் செருகு ராஜ்குமார். இவர் தற்பொழுது சி.பி. அய். (மாவோயிஸ்ட்) இன் மய்யக் குழு உறுப்பினராக இருக்கிறார். ராஜ்குமார் அடிக்கடி என்னிடம் அரசியல் பேசுவார். ஆனால், கம்யூனிஸ்டுகள் உள்ளத்தால் நல்லவர்கள்; அவர்களுடைய தத்துவம் பலமற்றது என்ற என்னுடைய சிந்தனையில் எந்த மாற்றம் ஏற்படவில்லை. பெர்ட்ரண்ட் ரசலிடமிருந்து பெற்ற ஆய்வு அணுகுறையின் அடிப்படையில், என்னால் ‘நெருக்கடி நிலையை'ப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம்.
கம்யூனிஸ்டுகளிடம் இதற்கு விடை இருப்பதாக எனக்குத் தோன்றியது. இருப்பினும், முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்சியம் குறித்த நூல்கள், எனக்குச் சிறிதும் உதவவில்லை. நான் தற்செயலாக டி.டி. கோசாம்பியைப் படிக்க நேர்ந்தபோதுதான் மார்க்சியத்தின் சாரத்தைப் புரிந்து கொண்டேன். அதன்பிறகுதான் நான் ‘மூலதனம்' மூன்று தொகுப்புகளையும் படித்தேன். இருப்பினும், கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், ஒரு போராளியாக மாறுவேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அங்குள்ள ‘இந்திய புள்ளியியல் நிறுவனத்தில்' கணிதத்தில் முனைவர் பட்டத்திற்கான உயர் ஆய்வை மேற்கொள்ள, 1978 இல் டெல்லிக்குச் சென்றேன்.
அங்கு சென்ற ஒன்றரை ஆண்டுகளிலேயே என்னால் அந்தப் பாடத்தின் தன்மையையும், அதில் ஆய்வு செய்பவர்களின் திறமையையும், செயல்பாட்டையும் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் படிப்பு மீது எனக்கிருந்த ஈர்ப்பு குறைந்ததால், கணிதவியல் ஆராய்ச்சியாளராக மாறுவதைவிட ஒரு போராளியாக மாறுவது என்று முடிவு செய்தேன். என்னுடைய ஆய்வு முடியும் முன்பே நான் மீண்டும் வாரங்கலுக்கே வந்துவிட்டேன். எனக்கு ‘ககாட்டியா பல்கலைக் கழக'த்தில் உள்ள கணிதவியல் துறையில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. நான் அப்போது ‘இயக்கத்திற்காகப் பணியாற்ற' முடிவு செய்தேன். நான் இயக்கம் என்று குறிப்பிடுவது ‘நக்சலைட் இயக்கம்'.
அந்தக் காலகட்டத்தில், ஆந்திர மாநிலத்தில் சிவில் உரிமைகளுக்காகப் பணியாற்றுவது என்பது, மிகவும் மரியாதைக்குரிய ஒன்றாகப் புரிந்து கொள்ளப்பட்டது. அதிலும் குறிப்பாக அறிவுஜீவிகள் நக்சலைட் இயக்கத்திற்கு வேலை செய்வது என்பது, மிகுந்த மரியாதையுடன் பார்க்கப்பட்டது. இந்த வகையில்தான் நான் ஒரு மனித உரிமைப் போராளியாக மாறினேன். மற்றபடி மனித உரிமைகளை முற்றாகப் புரிந்து கொண்டு நான் மாறவில்லை. அறிவாளிகள் நக்சலைட்டுகளுக்குச் செய்யக்கூடிய ஒரே உதவி என்ற முறையில், ‘ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழக'த்தினர் நச்சலைட்டுகளுக்கு உதவி செய்தனர். நான் 1983ஆம் ஆண்டே இவ்வமைப்பின் பொதுச் செயலாளரானேன். இதன் பின்னணியில் மிகச் சாதாரணமான காரணங்களே இருந்தன. இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்புடைய அமைப்புகளில் இப்படிதான் நடக்கும்.
இன்று, என்னைப் பொறுத்த வரையில், மனித உரிமை அமைப்புகளில் இருக்கும் என்னுடைய சகப் போராளிகளைப் பொறுத்தவரையில், ஓர் ஆரோக்கியமான முழுமையான மனித உரிமை இயக்கம் என்ற அளவில் எங்களுடைய தொடக்கம் சிறப்பானதாக இல்லை. இதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. எனினும், நாங்கள் அரசுக்கும் நக்சலைட் இயக்கத்திற்கும் இடையில் பணியாற்றுவது அப்போதும் இப்போதும் பயனுள்ளதாக இருப்பதாகவே உணர்கிறோம். ஆனால், இது தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கக் கூடாது. இத்தகைய செயல்பாடுகள் அரிதாகவும், உரிமைகள் பற்றிய இருவிதமான விழிப்புணர்வுகளும் கலந்ததாக இருந்தது.
ஒரு மனிதனின் உரிமையை அரசு பறிக்கக்கூடாது என்ற விடுதலைச் சிந்தனை ஒரு புறம், புரட்சி செய்வதற்கான உரிமை வேண்டும் என்ற சிந்தனை மறுபுறம். இது எங்கு போய் முடியும் என்றால், ஒரு தனி மனிதனை எந்த விதத்திலும் மதிக்காத ஓர் அரசை அமைப்பதில் போய் முடியும். மனித உரிமைக் கோட்பாடு என்பது, தனி மனிதனின் உரிமைகளை முழுமையாக அங்கீகரிப்பதாக இருக்கிறது. அதே சமயத்தில் ஒரு மேம்பட்ட சமூகத்தைத் தீவிரமான வழிகளில் முன்னெடுப்பதையும் அங்கீகரிக்கிறது. ஆனால், அரசு எந்திரத்திற்கு எதிராக தனி மனிதனின் உரிமைகளை நிலைநிறுத்துவது என்பது மட்டும் தனி மனிதனின் எல்லாவித உரிமைகளையும் செயல்படுத்துவது என்பதாக அமையாது. மேம்பட்ட சமூகம் என்பது, எல்லா அம்சங்களிலும் இப்போதிருக்கும் சமூகத்தைவிட உரிமைகளை மதிப்பதாக அமைய வேண்டும். உண்மையில், மனித உரிமைக் கோட்பாடு என்பது மேற்குறிப்பிட்ட இரு அம்சங்களை மட்டுமே சார்ந்தது அல்ல. அது மனிதர்கள் அனைவரையும் சமமாகப் பார்க்கிறது. அவர்களுக்கான தகுதிகளையும் வாய்ப்புகளையும் சமமான அளவில் பகிர்ந்தளிக்கிறது. இந்தக் கருத்துதான் இந்தியாவில் புத்தன் காலத்திலிருந்தே, பார்ப்பன சமூகத்திற்கும் நாகரிகத்திற்கும் எதிராக, மனித உரிமைக் கோட்பாடு என்பதற்கான உண்மையான அர்த்தத்தையும் உயிர்ப்பையும் தந்திருக்கிறது.
மக்கள் யுத்தக் குழுவின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்துச் சொல்லுங்கள்.
மக்கள் யுத்தக் குழுவின் (தற்பொழுது சி.பி.அய். மாவோயிஸ்ட் என்று அழைக்கப்படுகிறது) தொடக்கத்தை, அவர்களின் எழுத்துக்களிலிருந்தே கொள்ள முடியும். எனக்கு இது பற்றி குறைந்த அளவே தெரியும். ஏனெனில், அதைத் தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. நக்சலைட் இயக்கத்திற்கான என்னுடைய ஆதரவு, பெருமளவு அதனுடைய சமூகத் தாக்கத்தால் ஏற்பட்டதுதான். இந்தப் பொருளில், நக்சலைட் இயக்கத்தின் (மக்கள் யுத்தக் குழு மட்டும் அல்ல) தோற்றம், கிராமத்தில் உள்ள ‘ரயத்' கூலி சங்கத்தை (விவசாயத் தொழிலாளர் சங்கம்) அடிப்படையாகக் கொண்டிருந்தது. இத்தகைய சங்கங்கள், பன்கத் தன்மை வாய்ந்த போராட்டத்தின் கருவாக இருந்தன: நிலத்திற்கானப் போராட்டம், கூலி உயர்வுக்கானப் போராட்டம், கொத்தடிமை முறைக்கு எதிரானப் போராட்டம், ஏழை / தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கும் நிலச்சுவான்தார்களுக்கு எதிரானப் போராட்டம், தீண்டாமைக்கு எதிரானப் போராட்டம், தங்களுக்குள் ஏற்படும் சண்டைகளை நிலச்சுவான்தார்களின் பஞ்சாயத்தால் தீர்த்துக் கொள்வதற்குப் பதில் மக்கள் தாங்களாகவே தீர்த்துக் கொள்வது போன்றவற்றை இந்தச் சங்கங்கள் முன்னெடுத்தன.
இத்தகைய செயல்பாடுகளே நக்சலைட் இயக்கத்தின் உயரிய நோக்கமாக இருந்தது. கிராமத்தில் நிலவும் சமூக உறவுகளைத் தலைகீழாக மாற்றுவது என்பதுதான் அதனுடைய அடிப்படையான நோக்கமாக இருந்தது. கணக்கிடக்கூடிய அளவில் நிலப்பங்கீட்டில் பெருமளவு மாற்றங்கள் இல்லை எனினும், கூலி உயர்வு கிடைத்தது; கொத்தடிமை முறை முழுமையாக ஒழிந்தது. கிராமத்தில் நிலவிய அதிகார உறவுகள், முன்பு எப்போதும் இல்லாத வகையில் மாறிவிட்டது.
நக்சலைட் இயக்கத்தின் ‘வளர்ச்சி' குறித்து ஒருவர் பேச வேண்டும் எனில், பின்வரும் மய்யப்புள்ளிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ரயத்' கூலி சங்கத்தின் வெற்றிகரமானப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு பயன்படுத்திய கடும் ஒடுக்குறை; நக்சலைட்டுகளின் வன்முறை வடிவங்கள் குறிப்பாக மக்கள் யுத்தக் குழுவின் வன்முறை வழிமுறைகள்; இதற்கு எதிராக மேலும் அதிகமான வன்முறையை அரசு ஏவியது; இதற்கெதிராக மேலும் வன்முறையைக் கடைப்பிடித்த மக்கள் யுத்தக் குழு என ஒன்றிலிருந்து மற்றொன்றாகச் சுழன்று வந்தது. கட்சி ஒரு முழுமையான புரட்சிகர இயக்கமாக முதிர்ச்சி அடைந்து விட்டது என்று அவர்களுடைய வெளியீடுகள் குறிப்பிடலாம். ஆனால், இது விவாதத்திற்குட்பட்டது.
ஓர் உண்மையான மக்கள் இயக்கத்தின் சீரழிவுக்கு, ஓரளவு பயிற்சி பெற்ற போராளிகள் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி ஓடிவிடும் தன்மைக்கு யார் முழு காரணமாக இருந்தாலும், குறிப்பாக மக்கள் யுத்தக் குழுவின் புரட்சிகர இயக்கச் செயல்பாடுகளில் வெகுமக்களுடைய பங்களிப்பு என்பது, பெருமளவில் குறைந்து விட்டது. இயக்கத்தின் மய்யமான சங்கத்தில் இருந்துதான் ஆயுதமேந்திய குழுக்கள் தேர்வு செய்யப்பட்டனர். காவல் துறை மற்றும் அரசின் பிற நிறுவனங்களுக்கு எதிராகத் தோன்றிய கெரில்லா போராட்டம், கிராமங்களின் சமூக, பொருளாதாரப் போராட்டங்களுக்கு மாற்றாக அமைந்தது. சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்களாகவே கையிலெடுத்துப் போராடுவதற்குப் பதில், அவை ஆயுதக் குழுக்களாலேயே கையிலெடுக்கப்பட்டன. முன்பு ஒரு போராட்டம் செய்திருக்கக்கூடிய விஷயத்தை நக்சலைட்டுகளால் கிராமத்தில் ஒட்டப்படும் ஒரு சுவரொட்டியே சாதிக்கக்கூடிய அளவுக்கு நிலைமை மாறியிருந்தது. ஆனால், மறுபுறம் மக்கள் யுத்தக் குழு, ராணுவ ரீதியாக மேலும் மேலும் தேர்ந்து விளங்கியது. காவல் துறை அதிகாரிகளே அவர்களுடைய ஆற்றலைப் பார்த்து வியக்குமளவுக்கு மாறியது.
இன்றையச் சூழலில், ஆயுதப் போராட்டம், மனித உரிமைகள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றிற்கு இடையிலான பிரச்சினைகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
ஒரு மனித உரிமை இயக்கத்திற்கு உள்ளார்ந்த மாண்புகள் இருக்கின்றன. உடலுழைப்பற்ற வர்க்கம் செய்யக்கூடிய ஒரு புரட்சியாக இதைப் பார்க்க முடியாது. ஆயுதப் போராட்டம் என்பது எப்பொழுதுமே சிக்கலுக்குரியது. ஓர் உண்மையான மனித உரிமைப் போராளி, ஒருபோதும் வன்முறையை ஆதரிக்க முடியாது. வன்முறையில் ஈடுபடுகின்றவர்கள் ஒருபோதும் மனித உரிமைப் போராளிகளாக இருக்க முடியாது. வன்முறைதான் பல நேரங்களில் நீதி கிடைக்க வழி செய்கிறது என்றும், வன்முறையை ஆதரிப்பவர்கள் சொல்வது போல் உலகில் பெறப்பட்ட அனைத்து வெற்றிகளுக்கும் வன்முறைதான் காரணம் என்பதும் உண்மையல்ல. பல ஆண்டுகளாகவே இந்த சிக்கலைப் பற்றி நாங்கள் மிகத் தீவிரமாக விவாதித்து வந்திருக்கிறோம். எங்களால் ஒரு தீர்வுக்கும் வர முடிந்தது பல பிரச்சினைகளும் சிரமங்களும் இருக்கத்தான் செய்தன ஆனால் பல வழிகளிலும் நடைமுறையில் அனைத்து அம்சங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வாக அது இருந்தது.
சமூகத்தின் கட்டுமானத்தில் எண்ணற்ற வன்முறைகள் நிலவும்போது வறியவர்களை பலம் பொருந்தியவர்கள் தாக்குவது, பசி, வறுமை, கல்வியின்மை, திட்டமிடப்பட்ட பாகுபாடுகள், தீண்டாமை முதலியன... இருப்பினும், அனைத்துவகை அரசியல் வன்முறையையும் கண்டிப்பது என்பது சரியல்ல. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையை ஆதரிப்பவர்கள் அல்ல; ஆனால், சமூகம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதைப் ‘புரிந்து கொள்ள' வலியுறுத்துவது ஒருவகையான ஆதரவை வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இது வன்முறையை ஆதரிப்பதைத் தடுக்கிறது (இதுதான் மரண தண்டனைக்கு எதிரான முக்கியமான வாதம்).
இருப்பினும், நாம் முழுமையற்ற ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். இந்நிலையில் நாம் வெறும் அரசியல் வழிமுறைகளை மட்டுமே கோர முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் எனில், மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையை ஆதரிப்பதில்லை. ஆனால் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் ஆகியோருக்கு ஆதரவான அரசியல் வன்முறையின் பின்னணியை இந்தச் சமூகம் புரிந்து கொள்ள வலியுறுத்துகின்றனர். வன்முறையைத் தூண்டும் இந்நிலையை மாற்ற அவர்கள் முயலுகின்றனர். அதே நேரத்தில், அவர்கள் அனைத்து வகை அறியாமைகளையும், அநீதிகளையும் புரட்சியாளர்களின் வன்முறையையும் கண்டிக்கின்றனர். இந்தப் புரிதலில்கூட மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். என்னைப் பொறுத்த அளவில், 25 ஆண்டுகளாக, விடுதலைக்காகத் தொடர்ச்சியான, திட்டமிட்ட வன்முறையை அருகில் இருந்து பார்த்து வருகின்றவன் என்ற வகையில் வன்முறை என்பது சில நேரங்களில் ஒரு தேவையான தீமை. ஆனால், அது தேவைப்பட்டாலும் ஒரு தீமையே!
ஆக்கப்பூர்வமான முறையில் வன்முறையைப் பயன்படுத்துவது பற்றி இடதுசாரி அறிவுஜீவிகள் பேசுவதை அடிக்கடி கேட்க முடிகிறது. ஆக்கப்பூர்வமான வன்முறை என்று ஒன்று கிடையாது என்பது என்னுடைய உறுதியான கருத்து. அனைத்து வன்முறையும் அழிவைத் தருபவைதான். அழிவு என்பதற்குப் பல பயன்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். இப்படிப்பட்ட ஒரு அழிவுக்கு தற்போதைய சூழலில் ஒரு தேவை இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், இருக்கும் மாற்று வழிகள் இதைவிட மேலும் அழிவுகளைத் தருபவைகளாக இருக்கின்றன. வன்முறையைத் தவிர்ப்பது என்பது, நம்மீது நிகழ்த்தப்படும் நியாயமற்ற வன்முறையை ஒத்துக் கொள்வதாகக்கூட முடிந்து விடலாம். இந்த நிலையில், வன்முறையைத் தவிர வேறு வழியில்லை. எப்படி இருந்தாலும், வன்முறை என்பது அடிப்படையிலேயே மனிதத் தன்மையற்றது. இந்தக் காரணத்தை மட்டும் முன்வைத்து வன்முறையை நாம் முழுமையாகத் தவிர்ப்பது என்பது, தற்கால சமூகச் சூழலில் சாத்தியமில்லை.-
பேட்டி அடுத்த இதழிலும்...
நன்றி: தலித்முரசு