Showing posts with label தலித். Show all posts
Showing posts with label தலித். Show all posts

Tuesday, October 23, 2012

குறைந்த மதிப்பெண் எடுத்ததைக் காரணம் காட்டி கல்விக் கடன் மறுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!


வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, கர்நாடகா, கோலார் மாவட்டத்திலுள்ள நூரி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ரூ. 3.15 லட்சம் கல்விக் கடன் வேண்டி பஞ்சாப் நேஷனல் வங்கியில் விண்ணப்பம் செய்துள்ளார். அந்த வங்கி அவர் பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளதைக் காரணம் காட்டி அவருக்கு கல்விக் கடன் வழங்காமல் மறுத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் 'பள்ளிக்கூடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளதைக் காரணம் காட்டி வங்கி கல்விக்கடன் வழங்க மறுக்கக் கூடாது. இதுகுறித்த வங்கியின் சுற்றறிக்கையில் எங்கும் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கடன் வழங்கக் கூடாது எனக் குறிப்பிடப்படவில்லை.

மத்திய அரசு பொருளாதாரத்தில் பலவீனமானவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ரூ. 4 லட்சம் வரை வழங்கப்படும் கடன்களுக்கு முன்றாவது நபரின் கேரன்டி தேவையில்லை. எனவே, அந்த வங்கி கல்விக் கடனை நான்கு வாரத்திற்குள் வழங்க வேண்டும்' எனத் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால், நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் 'அம்பேத்கர் மெட்ரிகுலேஷன் தேர்வில் 750க்கு 287 மதிப்பெண் தான் எடுத்துள்ளார். அதனால்தான் அவருடைய படிப்பிற்கு பரோடா மன்னர் பொறுப்பேற்றுக் கொண்டார்' எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு!

Monday, July 05, 2010

உத்தபுரம் (மதுரை), டொம்புச்சேரி, பெரியகுளம் (தேனி) ஆகிய பகுதிகளில் தொடரும் சாதி வெறியும் அரசின் அலட்சியமும்!

உண்மை அறியும் குழு அறிக்கை

கீழே கையொப்பமிட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களாகிய நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரு ஊர்களுக்கும் நேற்று (ஜுலை 4, 2010) சென்று மக்களைச் சந்தித்தோம். தொடர்புடைய காவல் நிலையங்களுக்குச் சென்று வழக்கு விவரங்களையும் அறிந்து கொண்டோம்.

உத்தபுரத்தைப் பொறுத்தமட்டில் சுவர் இடிக்கப்பட்டது தொடங்கி இதுவரை மும்முறை அங்குச் சென்று வந்துள்ளோம். தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டு சுமார் ஒன்றரையாண்டு ஆன பின்னும் கூட இன்றும் அவ்வழியே தாழ்த்தப்பட்டவர்களின் (பள்ளர்), வாகனப் போக்குவரத்தை ஆதிக்கச் சாதியினர் (பிள்ளைமார்கள்) அனுமதிக்கவில்லை. “உத்தமபுரம் என்கிற பெயர்ப் பலகையுடன் வளைவு அமைத்து அதில் வாகனங்கள் சென்று வர ஏற்பாடு செய்யப்படும்” என முதல்வர் கருணாநிதி வாக்களித்திருந்தும் கூட இதுதான் இன்றைய நிலை. சென்ற சில நாட்களுக்கு முன் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு சிலர் ஒரு ஆட்டோவில் போலீஸ் துணையுடன் ஒரே ஒரு முறை சென்று வந்ததையே பெரிய ‘சாதனை’யாகச் சொல்லக் கூடிய அளவுக்கு அங்கே நிலைமை மோசமாக உள்ளது. அரசு எந்த வகையிலும் நிலமையைச் சீர் செய்து 1) உடைந்த சுவர் வழியே வாகனப் போக்குவரத்தை ஏற்படுத்தவோ 2) பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள கோயில் அருகிலுள்ள ஆல மரத்தைச் சுற்றி வந்து பள்ளர்கள் முளைப் பாறி எடுக்கும் நிலையை மீண்டும் ஏற்படுத்தவோ 3) பேருந்து நிறுத்தத்தில் ‘ஷெல்ட்டர்’ ஒன்றைக் கட்டவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மாறாக சர்ச்சைக்குரிய கோயிலில் பிள்ளைமார்கள் மட்டும் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் திரு. டி.கே.ரங்கராஜன் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் இதற்கு வழங்கிய ரூ. 3.5 லட்சத்தைச் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

'ஷெல்ட்டர்’ கட்டும் முயற்சியை இப்படி முறியடித்ததோடு பள்ளர்கள் பேருந்திற்காக காத்திருக்கும் போது அமரக் கூடிய சாக்கடையை ஒட்டிய கட்டைச் சுவரின் மீது சென்ற சில நாட்களுக்கு முன் (ஜீன் 17) சாக்கடையை வாரி கொட்ட பிள்ளைமார்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தங்கள் பகுதியில் வந்தடையும் அந்தச் சாக்கடைக்கு உரிய வடிகால் அமைத்துத் தர வேண்டும் என்பது பள்ளர்களின் கோரிக்கையாக இருந்த போதும், காவல்துறையின் பார்வையிலேயே இப்படி நடந்துள்ளது. பள்ளர்கள் மத்தியில் பிளவு ஒன்றையும் காவல்துறையினர் திட்டமிட்டு உருவாக்கி மாரிமுத்து என்ற அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் பிள்ளைமார்களுமாக அதைச் செய்துள்ளனர். பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் புஷ்பம் குடும்பத்தினரை திட்டமிட்டு காவல்துறையினர் பள்ளர்களிடமிருந்துப் பிரித்து எதிராக நிறுத்தியுள்ளனர். இதன்மூலம் இரு சாதிகளிடையேயான பிரச்சினையை பள்ளர்களுக்கு இடையிலான பிரச்சனைப் போல முன்வைக்கின்றனர். எழுமலை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் இந்த தோரணையிலேயே எங்களிடம் பேசினார்.

உட்காரும் கட்டைச் சுவர் மீது போடப்பட்ட சாக்கடையை அள்ள வேண்டும் என பள்ளர்கள் திரண்டு வந்து கேட்டபோது காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுத்து காலம் தாழ்த்தியுள்ளது. இதனால், பிரச்சனை முற்றி இரு தரப்பிலும் கற்கள் வீச உடனடியாக எழுமலை காவல்நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் பள்ளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளது. ஈஸ்வரன் (தலையில் 20 தையல்), சங்கரலிங்கம் (கையில் காயம்), ராமன் (இடது கையில் முறிவு) உள்ளிட்ட சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். அடுத்த நாள் அழகம்மாள் என்ற பெண் உட்பட பொன்னையா, சங்கரலிங்கம், பெ. ராமராஜ், நாகராஜ், தங்கராசு, கணேசன், குருசாமி, முனியாண்டி, சுந்தரராஜ், நாகராஜ், தங்கராசு, மணி ஆகியோர் பள்ளர்கள் தரப்பிலும், பிள்ளமார்கள் தரப்பில் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலைக் கண்டித்து ஜீன் 21 அன்று மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டுள்ளது. அன்றுதான் பாலபாரதியுடன் பள்ளர்கள் சிலர் ஆட்டோவில் உடைக்கப்பட்ட சுவர் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்ட நிகழ்வு நடந்தது. இதை ஒரு பெரிய சாதனையாக எழுமலை காவல் ஆய்வாளர் குறிப்பிட்டார். 

     சென்ற வாரத்தில் (ஜூன் 28) பள்ளர் தரப்பில் கைது செயப்பட்டவர்கள் பிணை பெற்று விடுதலையாகி வந்த கையோடு பழைய வழக்கொன்றைக் காரணம் காட்டி சிறை வாசலிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறையின் அப்பட்டமான சார்புத் தன்மையை இது வெளிப்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகத்தின் ஆசியுடன் இது நிகழ்ந்துள்ளது. இந்திய அளவில் கவனம் ஈர்க்கப்பட்ட ஒரு பிரச்சனையில் தமிழக அரசு இப்படி மெத்தனம் காட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிள்ளைமார்கள் மத்தியில் அரசு ஆதரவு அளித்த தெம்புடன் கூடிய சாதிவெறி அதிகரித்துள்ளதையும் நாங்கள் நேரில் கண்டோம்.

     தேனி நகரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் குச்சனூர் முருகன் கோயில் செல்லும் வழியில் அமைந்துள்ள டொம்புச்சேரி என்னும் ஊரில் சுடுகாட்டுப் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. பிள்ளைமார்கள், கள்ளர்கள், செட்டியார்கள், பள்ளர்கள், அருந்ததியர்கள், பறையர்கள் ஆகியோர் வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளர்களுக்கு என ஊருக்கு வெளியே சித்தவங்கி ஓடை என்னுமிடத்தில் 3 ஏக்கர் நிலத்தில் சுடுகாடு ஒன்றை அரசு அமைத்துள்ளது. எனினும் அங்கு சென்று வர முறையாக சாலை வசதி ஏதும் செய்யப்படவில்லை. எனவே, பள்ளர்கள் ஊருக்குக் கிழக்கே சுடுகாட்டிலேயே பிணங்களைப் புதைத்து வந்துள்ளனர். அங்கு பிணங்களை எரிக்கும் வழக்கமில்லை.

இந்நிலையில் கடந்த ஜீன் 23 அன்று பள்ளர் சமூகப் பெண் ஒருவரை மணந்து அவர்களோடு ஒருவராக வாழ்ந்து வந்த கதிர்வேல் பண்டியன் என்ற கவுண்டர் ஒருவர் இறந்து போனார். அவரது பிணத்தைப் புதிய சுடுகாட்டில் எரிப்பதற்கு, தற்போது அங்கு செல்வதற்கு உள்ள ஒரே வழியான பேச்சியம்மன் கோயில் சாலை வழியாக, சவ ஊர்தி ஒன்றில் வைத்து எடுத்துச் செல்ல பள்ளர் சமூகத்தினர் முயன்றுள்ளனர். கோயிலை விரிவாக்கி கட்டியுள்ளதால் அவ்வழியே எடுத்துச் செல்லக்கூடாது எனத் தேவர்கள் தடுத்துள்ளனர். வேண்டுமானால் தங்கள் தெரு வழியே கொண்டு செல்லலாம் என அவர்களில் ஒரு சிலர் கூறியுள்ளனர். வேறு சிலர் தடுத்துள்ளனர். பள்ளர் குடியிருப்பின் இறுதியில் உள்ள பள்ளர் சாவடியில் சில மணி நேரம் பிணம் கிடந்துள்ளது. பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாத நிலையில் தேவர் தரப்பிலிருந்து கல் வீச்சு தொடங்கியுள்ளது. பள்ளர் சாவடி கல்வீச்சில் சிதைந்துள்ளதையும் அவர்கள் வீட்டுக் கதவுகள் சில உடைந்துள்ளதையும், அவர்களில் சிலர் காயம்பட்டுள்ளதையும் நாங்கள் நேரில் பார்த்தோம். பள்ளர்கள் தரப்பிலிருந்தும் ஒரு சிலர் கல் வீசித் தாக்கினாலும் தேவர் தரப்பில் பெரிய சேதம் இல்லை. இதற்கிடையில் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் முத்துச்சாமி, துணைக் காவல் கண்காணிப்பாளர் அன்வர்ஷா ஆகியோர் தலைமையில் ஒரு போலீஸ் படை வந்து இறந்தவரது பிள்ளைகளின் ஒப்புதலின்றி பிணத்தை எடுத்துச் சென்றுள்ளது.

தனது தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய போலீஸ் அனுமதிக்கவில்லை எனவும், பிணத்தை என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை எனவும், இறுதிச் சடங்குக் கூட செய்ய இயலாமல் போனது ஆறாத துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் அவரது மகன் ராஜா கூறினார். கல்லடி சம்பவம் நடைபெற்ற போது அங்கிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் கலாராணி என்பவர் சாதி உணர்வுடன் தேவர்களைத் தூண்டி விட்டதாக பள்ளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது பள்ளர்கள் தரப்பில் 11 பேரும், தேவர்கள் தரப்பில் 11 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அப்பட்டமான தீண்டாமை உணர்வுடன் பள்ளர்கள் தாக்கப்பட்ட போதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படாமல் ஒரே குற்ற எண்ணின் கீழ் (930/2010) பி.சி.பட்டி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. ஒரே குற்ற எண்ணின் கீழ் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 148, 336, 427, 332 மற்றும் பொதுச் சொத்து சேதம் விளைவிப்புச் சட்டப் பிரிவு 36 ஆகியவற்றின் கீழ் தாக்கியவர்கள், தாக்கப்பட்டவர்கள் என இருசாரார் மீதும் காவல்துறை வழக்குப் போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

நாங்கள் ஊருக்குச் சென்று ஒன்றிய தலைவர் திருமதி. பஞ்சவர்ணம் உட்பட எல்லா தரப்பினரையும் சந்தித்துப் பேசினோம். பிள்ளைமார்கள், தேவர்கள், செட்டியார்கள் முதலிய ஆதிக்கச் சாதியினர் ஒரு பக்கமாகவும், பள்ளர், பறையர், அருந்ததியர் ஒரு பக்கமாகவும் செங்குத்தாக பிரிந்துக் கிடப்பதை எங்களால் காண முடிந்தது.

மூன்று நாட்களுக்கு முன்பு (ஜீலை 2) சமதானக் கூட்டம் ஒன்றை ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் நடத்தியுள்ளனர். அடுத்த 40 நாட்களுக்குள் பள்ளர்கள் தமது பிணங்களை எடுத்துச் செல்ல ஏதுவாக பொதுச் சுடுகாட்டை நோக்கி தனிப் பாதை அமைத்துத் தருவதாக நிர்வாகம் வாக்குறுதி அளித்ததை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனினும் கைது செய்யப்பட்ட யாரும் விடுதலை செய்யப்படவில்லை. பள்ளர்கள் தரப்பில் நிலவிய அச்சத்தின் விளைவாக சம்பவத்தையொட்டி சில நாட்கள் அனைவரும் ஊரை விட்டு ஒடித் தலைமறைவாகி இருந்துள்ளனர்.

பொதுவாக தேனி, போடி, தேவாரம், எழுமலை முதலான பகுதிகளில் தலித்துகளுக்கு எதிரான சாதி வெறித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வருவாய் மற்றும் காவல்துறையினர் இதற்குத் துணை போய் வருகின்றனர். பெரியகுளத்தில் கடந்த ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் பிறந்த நாளில் மாலை போடுவதற்காக தாரைத் தப்பட்டைகளுடன் ஊர்வலம் சென்று சிலை முன் கூடியிருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரை நிகழ்ச்சியை நிறுத்துமாறு தேவையின்றி போலீசார் கூறியுள்ளனர். அதையொட்டி விளைந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. சாமிதுரைவேல், வடைகரை காவல்நிலைய ஆய்வாளர் சீராளன் ஆகியோர் இதைச் செய்துள்ளனர்.  யாரும் காயமடையாத போதும் தலித் மக்களில் 15 பேர் கைது செய்யப்பட்டதும், இன்று வரை அவர்கள் நிபந்தனைப் பிணையிலேயே அவதியுறுவதும் அதனால் அப்பகுதியில் அச்சம் சூழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்றார் அப்பகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் திரு. பிச்சை.

எமது பரிந்துரைகள்:

1)இந்திய அளவில் கவனம் பெற்ற உத்தபுரத்தில் பிரச்சனை சிறிதளவுக் கூட தீர்க்கப்படவில்லை. அங்குத் தொடர்ந்து தீண்டாமை நிலவுவதையும், மாவட்ட நிர்வாகம் அதற்குத் துணை போவதையும், தமிழக அரசு மவுனமாக ஆதரவளிப்பதையும் வன்மையாக்க் கண்டிக்கிறோம். தீண்டாமைச் சுவர் முழுமையாக இடிக்கப்பட்டு அவ்வழியே தடையற்ற போக்குவரத்தை ஏற்படுத்துதல், திரு. டி.கே.ரங்கராஜன், எம்.பி. அளித்த ரூ. 5 லடசத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக ‘ஷெல்ட்டர்’ அமைத்தல், ஆல மரத்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ள சுவரை இடித்தல் முதலான நடவடிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2)போடி, தேனி, தேவாரம், எழுமலை முதலான பகுதிகளில் தீண்டாமை ஒதுக்கமும், சாதி உணர்வும் மிகுந்துள்ளதை அரசுக் கவனம் கொள்ள வேண்டும். இப்பகுதியில் வருவாய் மற்றும் காவல்துறைகளில் ஆதிக்கச் சாதிகள் அல்லாத அதிகாரிகள் அதிக அளவில் பணி அமர்த்தப்பட வேண்டும். போதிய அளவில் தலித் அதிகாரிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளவாறு ஊர் தோறும் குழுக்கள் அமைத்து தீண்டாமை இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

3)டொம்புச்சேரியில் மாவட்ட நிர்வாகம் வாக்களித்தபடி போர்க்கால துரிதத்துடன் புதிய சுடுகாட்டுப் பாதை அமைக்கப்பட வேண்டும். கதிர்வேல் பாண்டியன் குடும்பத்தாரை அவரது இறுதிச் சடங்குகள் செய்யவிடாமல் தடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது உடலுக்கு என்ன நேர்ந்தது என்பது விளக்கப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஏன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும். வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு சிறையில் உள்ளோர் விடுதலைச் செய்யப்பட வேண்டும். தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு, பள்ளர்களின் உடைக்கப்பட்ட ஊர்ச் சாவடி திருத்தி அமைக்கப்படுதல் ஆகியவற்றையும் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

4)பெரியகுளத்தில் சென்ற ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற தேவையற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டு, வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

5)சுடுகாடு மற்றும் சுடுகாட்டுப் பாதை தொடர்பான பிரச்சனைகள் தமிழகமெங்கும் உள்ளன. இம்மாதிரியான இடங்களில் இரண்டு மூன்று போலீஸ் வேன்களை நிறுத்தி வைத்தால் போதும் என்கிற ரீதியில் இதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாகக் கையாள்வதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுகுறித்து ஆராய்ந்து பொதுவான கொள்கை முடிவு எடுக்க நீதித்துறையினர், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.


அ. மார்க்ஸ், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.

கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.

வழக்கறிஞர் ரஜினி, மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), மதுரை.

பேரா. சே. கோச்சடை, மக்கள் கல்வி இயக்கம், காரைக்குடி.

விடுதலை வீரன், ஆதித் தமிழர் பேரவை, மதுரை.

வழக்கறிஞர் எம். ஃபரக்கத்துல்லா, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (NCHRO), திண்டுக்கல்.

மு. சிவகுருநாதன், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.

கு. பழனிச்சாமி, மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), மதுரை.


தொடர்புக்கு:

அ. மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை – 600020.செல்: 9444120582.

Friday, April 02, 2010

சென்னை கவின் கலைக் கல்லூரியில் சாதி வெறி: உண்மை அறியும் குழு அறிக்கை!

சென்னை நகரின் பழம் பெருமை மிக்க கவின் கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராடுவது, அதைத் தொடர்ந்து காலவரையறையின்றி அக்கல்லூரி மூடப்பட்டுள்ளது ஆகியவற்றைக் கண்டு கவலையுற்ற சமூக அக்கறை மிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கீழக்கண்ட உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்தனர்.

உறுப்பினர்கள் :
  
1) பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்.
2) முனைவர் பா. சிவக்குமார், முன்னாள் முதல்வர், அரசு கல்லூரி.
3) பேரா.மு. திருமாவளவன், முன்னைப் பொறுப்பு முதல்வர், அரசு கல்லூரி.
4) கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.
5) அயன்புரம் இராசேந்திரன், பொறியாளர், தென்னிந்திய ரயில்வே.
6) குட்டி ரேவதி, கவிஞர்.
7) உதயம் மனோகரன், வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
8) முருகன், வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
9) சுகுமாரன், தொழிலாளர் ஒற்றுமை முன்னணி, சென்னை.
10) வெங்கட், ஆய்வு மாணவர், எம்.ஐ.டி.எஸ், சென்னை.

இக்குழுவினர் நடந்த நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிதல், கல்லூரி சுமுகமாக இயங்குவதற்குரிய பரிந்துரைகளை பொறுப்பானவர்களுக்குச் செய்தல் ஆகிய நோக்கங்களுடன் சென்ற ஏப்ரல் 30, 31 தினங்களில் போராடும் மாணவர்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், தற்போது பொறுப்பு முதல்வராக உள்ள திரு வ. ஜெயபால் ஆகியோரைச் சந்தித்தனர். கலை பண்பாட்டுத் துறைச் செயலர் திரு. வே. இறையன்பு இ.ஆ.ப. மற்றும் கலை பண்பாட்டுத் துறை ஆணையர் திரு. மணி, காவல்துறை உதவி ஆணையர் திரு. அசோக்குமார், முன்னாள் பொறுப்பு முதல்வர் திரு மனோகர் நடராஜ் ஆகியோருடன் விரிவாக உரையாடி தேவையான விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பழமை வாய்ந்த இக்கவின் கலைக் கல்லூரி தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் இவ் அரசு கல்லூரிகளில் ஒன்று. மற்றது கும்பகோணத்தில் செயல்படுகிறது. நான்காண்டு பட்டப்படிப்பு (பி.எஃப்.ஏ.) மற்றும் இரண்டாண்டு பட்டமேற்படிப்பு (எம்.எஃப்.ஏ) ஆகிய பட்டப் படிப்புகள் இங்கு சொல்லித் தரப்படுகின்றன. சுமார் 620 மாணவர்கள் இங்கு பயில்கின்றனர். பெரும்பாலும் ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களே இதில் பயில்கின்றனர். சுமார் 80 சதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். பிற அரசு கலைக் கல்லூரிகள், மருத்துவ / பொறியியல் கல்லூரிகளுக்குத் தரப்படுகிற எந்தவித முக்கியத்துவம் மற்றும் அக்கறை எதுவும் காட்டப்படாமல் இரண்டாம் பட்சமாகவே இக்கல்லூரிகளை தமிழக அரசு நீண்ட நாட்களாக அணுகிச் செயல்பட்டு வருகிறது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர், எமது குழு உறுப்பினர் முனைவர் சிவக்குமார் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக இருந்தபோதுதான், மாணவர் போராட்டம் ஒன்றின் பின்னணியில், இக் கல்லூரியில் வழங்கப்பட்டு வந்த சான்றிதழ் ‘பட்டயம்’ என்கிற நிலையிலிருந்து ‘பட்டம்’ என்கிற நிலைக்கு மாற்றப்பட்டது. இன்று வரை AICTE அல்லது UGC ஏற்பு எதுவும் இக்கல்லூரிகளுக்கு உள்ளதாகத் தெரியவில்லை. இக்கல்லூரியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி, பணியமர்த்தல் முதலானவற்றில் அகமதாபாத்திலுள்ள NID நிறுவனத்தின் தரங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை.

மாணவர்களிடம் பேசியவற்றிலிருந்தும், நாங்கள் விசாரித்து அறிந்தவற்றிலிருந்தும் வெளிப்படையாகத் தெரிகிற வேறு சில குறைபாடுகள்:

1. பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாயினும் மாணவ, மாணவியர்க்கு விடுதிகள் ஏதுமில்லை. தரமணியில் இருந்த விடுதி இன்று மூடப்பட்டு புத்தகக் கிடங்காக மாற்றப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்று அறைகள் மட்டும் திறந்து விடப்பட்ட போதும் இப்போது அவையும் செயல்படுவதில்லை. மாணவர்கள் விடுதியில் இல்லாததால் அவர்கள் வெளியூர்களைச் சேர்நத்வர்களாயினும் உள்ளூர் மாணவர்களாகவே (day scholars) கருதப்படுவதால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான முழு உதவித் தொகையையும் பெற இயலுவதில்லை. மாணவிகளில் சிலருக்கு இசைக் கல்லூரி விடுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வசதியற்ற ஒரு மாணவர்க் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி கல்லூரிக்கு வந்து செல்வதைக் கேள்விப்பட்டு எமது குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

2. மிகப் பெரிய அளவில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. சுமார் 25 பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தப் பணியமர்த்தலில் சீரான அளவுகோல்கள் ஏதும் கடைபிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. முதல்வர் மற்றும் நிர்வாகத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே தேர்வுகள் மற்றும் பணி நீக்கங்கள் செய்யப்படுவதாகத் தெரிகிறது. துகிலியல், சுடுமண்துறை, காட்சித் தொடர்பு வடிவமைப்பு, சிற்பத்துறை, வண்ணக்கலை, பதிப்போவியத்துறை எனப் பல துறைகள் உள்ளபோதும் குறிப்பிட்ட துறையில் பயிற்சி பெறாத ஆசிரியர்களை அத்துறைக்கு நியமிக்கும் போக்கு உள்ளது.

3. கவின் கலைப் பயிற்சி என்பதால் வெறுமனே பாடப் புத்தகங்கள், வகுப்பறை என்பதாகவன்றி சூளை, க்ளெய்ன், ஜக்கார்ட் மெஷின் வெல்டிங் மற்றும் டிரில்லிங் மெஷின் ஆகியவை தவிர களிமண், பாக்ஸ் போர்ட், ஷீட்மெடல், சிங்க் ப்ளேட் ஆகிய பொருட்களும் தேவைப்படுகின்றன. இந்த எந்திரங்கள் பல இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் பயன்படாமல் உள்ளன. தவிரவும் போதிய அளவு கச்சாப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஒப்பந்த ‘ஆர்டர்’களை எடுத்துப் பயன்பெறும் சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கான இவற்றைச் சொந்த லாபத்திற்குப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. வேண்டிய மாணவர்களுக்குப் கொடுப்பது வேண்டாதவர்களைப் புறக்கணிப்பது முதலான குற்றச்சாட்டுகளும் உண்டு.

4. ஆசிரியர் பற்றாக்குறை, எந்திரங்கள் செயல்பாடின்மை, கச்சாப் பொருடகள் பற்றாக்குறை ஆகியவற்றின் விளைவாக வகுப்புகள் ஒழுங்காக நடைபெறுவதில்லை. ஆசிரியர்கள் சொந்த ஒப்பந்த வேலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாலும் வகுப்புகள் சரியாக நடைபெறுவதில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

5. கல்லூரிக்குப் போதிய ‘டாய்லட்’ முதலிய வசதிகள் கிடையாது. இரவு நேரத்தில் கல்லூரி வளாகத்தில் தங்கி வேலை செய்ய மாணவர்கள் அனுமதிக்கப்படுவதாக அறிகிறோம். ஆனால், அவர்களை மேற்பார்வையிட ஆசிரியர்கள் யாருக்கும் பணி ஒதுக்கப்படுவதில்லை.

6. இரு கல்லூரிகளிலும் உள்ள ஆசிரியர்களின் முறைப்படுத்தப்பட்ட பணி மூப்புப் பட்டியல் ஏதும் தயாரிககப்பட்டுள்ளதாகவும் தெரியவில்லை. இன்று நேர்ந்துள்ள சிக்கலுக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.

7. மாணவர்கள் சிறப்பாக ஏதும் திட்டங்கள் (projects) மேற்கொண்டு செயல்படும்போது அவர்களுக்கான கச்சாப்பொருள் மற்றும் பிற உதவிகள் செய்வதற்கு முறையான நெறிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதாகவும் தெரியவில்லை. இதுவும் இன்று எழுந்துள்ள சிக்கலுக்குக் காரணமாக உள்ளது.

மாணவர்கள் முன் வைக்கக் கூடிய மேலும் சில குற்றச்சாட்டுகளாவன:

1. இக்கல்லூரியில் நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்கிற பயிற்சி வகுப்புளை சில ஆசிரியர்கள் நடத்துகின்றனர். இவ்வாறு நடப்பதை எமது குழுவினரும் உறுதி செய்து கொண்டனர். தற்போது பிரச்சினைக்குக் காரணமாகியுள்ள ஆசிரியர் திரு. மனோகர் நடராஜ் இத்தகைய வகுப்பை நடத்துவதாகவும், இக்கல்லூரியில் சேர வேண்டுமானால் அவ் வகுப்பில் படிப்பது மறைமுகமாகக் கட்டாயமாக்கப்படுகிறது எனவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

2. முறையான வருகைப் பதிவு செய்வதில்லை. வருகைப் பதிவேடு ஒழுங்காகப் பராமரிக்கப்படுவதில்லை. மாணவர்களைப் பழிவாங்க இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

3. வகுப்புகளை ஒழுங்காக நடத்தாமலும், பயிற்சிகளே அளிக்கப்படாமலும் மாணவர்கள் தேர்வுக்கு அனுப்பப்படுகின்றனர். பிற படிப்புகளைப்போல ஏதோ புத்தகங்களைப் படித்துத் தேர்வு எழுதுவதுபோல இங்கு சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து முறையிட்டால், ‘‘நீங்கள் தேர்வுகளுக்கு வாருங்கள். நாங்கள் உங்களுக்கு அதிக மதிப்பெண்களுடன் ‘பாஸ் போடுகிறோம்’ எனச் சொல்வதாகவும் மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிப்ரவரி 26 தேதிய நிகழ்வு

இந்தப் பின்னணியில் நடைபெற்ற ஒரு நிகழவே இன்றைய பிரச்சினைகளுக்கும், கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டுள்ளமைக்கும் காரணமாகியுள்ளது.

சசிகுமார் என்பவர் முதலாமாண்டு பட்ட மேற்படிப்பு மாணவர். தமிழக அரசு நடத்தவுள்ள செம்மொழி மாநாட்டில் 1330 குறள்களையும் சசிகுமார் சிற்பங்களாக ஆக்கிக் காட்சிப்படுத்தும் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளார். இனவெறியர்களால் யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டதை நினைவிற் கொண்டு, தீயாற் சுட இயலாதவாறு தமிழ் இலக்கியங்களைச் சுடுமண் சிற்பங்களாக ஆக்குதல் என்பதான ஒரு கருத்தமைவுடன் இந்தப் பணியைத் துவங்கியதாக அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

இப்படியான ஒரு திட்டத்திற்கு எவ்வித முன் அனுமதியும் அவர் கல்லூரி நிர்வாகத்திடமோ இல்லை செம்மொழி மாநாட்டுக் குழுவிடமோ அனுமதி பெறவில்லை என்கிறார் கலை பண்பாட்டுத் துணை ஆணையர் மணி. ஆனாலும், பொறுப்பு முதல்வர் மனோகர் நடராஜிடம் தான் வாய்மொழி அனுமதி பெற்றதாக சசிகுமார் கூறுகிறார்.

ஏற்கனவே இருந்த முதல்வர் ஓய்வு பெற்றதை ஒட்டி இந்தக் கல்வி ஆண்டு தொடக்கத்தில் மனோகர் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டள்ளார். இவரைக் காட்டிலும் பணி மூப்புடையவர்கள் இருந்த போதிலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இவர் முதல்வராக்கப்பட்டுள்ளதாக போராடுகிற மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பிற்படுத்தப்பட்ட சாதி ஒன்றைச் சேர்ந்த இவர், தலித் மாணவர்களை இழிவாக நடத்துகிற வழக்கம் கொண்டவர் எனவும் குற்றச்சாட்டுகள் உண்டு. 2004-ம் ஆண்டில் இவர் இவ்வாறு ஒரு தலித் மாணவரை சாதி, குறிப்பிட்டுப் பேசியதை ஒட்டி எஸ்.எப்.ஐ. மாணவர்கள் போராடியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.கே.மகேந்திரன் இது குறித்து சட்டமன்றத்தில் பேசி உள்ளதையும் நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். இதை ஒட்டி மனோகரன் குடந்தைக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு, பின் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இங்கு மீண்டும் இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.

இவர் பணி ஏற்றவுடன் குமார், நடராசன், சுரேந்திரன், சிங்காரம் ஆகிய நான்கு பகுதி நேர ஆசிரியர்களும் நிதி பற்றாக்குறையைக் காட்டி பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். இந்த நான்கு ஆசிரியர்களும் தலித்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆசிரியரல்லாத பணியாளர்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவர் குடந்தைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பின் அந்த ஆணை ரத்து செய்யப்பட்டது எனவும் பாதிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர். எனினும் தற்காலிக பொறுப்பு முதல்வர் ஜெயபாலிடம் இது பற்றிக் கேட்டபோது அத்தகைய உள்நோக்கம் ஏதுமில்லை. நிதிப் பற்றாக்குறைதான் பணி நீக்கத்திற்குக் காரணம். சுரேந்திரன் எம்.எஃப்.ஏ. சேர்ந்ததால் தொடர்ந்து அவர் பகுதி நேர ஆசிரியராக இருக்க இயலாது. ஊழியர்களை இடமாற்றம் செய்ய நேர்ந்தது நிர்வாகக் காரணங்களுக்காகத் தான், பின் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதை ரத்து செய்தோம் என்றார்.

இப்படியான ஒரு சூழலில்தான் சசிகுமார் தனது குறள் சுடுமண் சிற்பப் பணியைத் தொடங்குகிறார். தேவையான களிமண்ணை மனோகரனின் ஒப்புதலுடன் கொண்டுவந்து கல்லூரி வளாகத்தில் இறக்குகிறார். தான் இதற்கு ஒப்புதல் அளிக்க இயலாது எனவும் உரிய தொகையை உடனடியாக வழங்க இயலாது எனவும் மனோகரன் கூறியுள்ளார். வண்டிக் கூலியை உடனடியாகக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த சசிகுமார் மாணவர்களிடம் ரூ. 5, 10 எனச் சேகரித்து வண்டிக்காரரை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில் சசிகுமாரின் நடவடிக்கைகள் சரியில்லை என ‘டிசம்பர் 12, 2010’ என்கிற தேதியிட்டு எச்சரிக்கைக் கடிதம் ஒன்று அவர் வீட்டிற்கு கல்லூரியிலிருந்து அனுப்பப்படுகிறது. தொலைபேசியிலும் பெற்றோர்கள் எச்சரிக்கப்படுகின்றனர். கலக்கமடைந்த பெற்றோர்கள் சசிகுமாரைத் திட்டியுள்ளனர்.

மனரீதியாகப் பாதிக்கப்பட்ட சசிகுமார் சென்ற பிப்ரவரி 26 அன்று வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வரது கார் கண்ணாடியை (wind screen) உடைத்துவிட்டு ஓடியுள்ளார். இந்தத் தவறை அவர் ஏற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

எனினும் இது குறித்து தற்போதைய பொறுப்பு முதல்வர் கூறுவது : ‘‘பிப்ரவரி 16-ந் தேதி அன்றே அம் மாணவன் கல்லுரிக் கட்டிடத்தில் ஒரு கண்ணாடியை உடைத்தார். நாங்கள் புகார் ஏதும் செய்யவில்லை. 19-ம் தேதி அன்று களிமண்ணுக்காக ரூ.1600 அவருக்கு அளிக்கப்பட்டுவிட்டது. அடுத்த நாள் தேர்வுக் கட்டணம் கட்ட கடைசி நாள் என அம்மாணவர் கூறியதை ஒட்டி அன்று அப்பணத்தைத் தந்தோம். எனினும் 26-ந் தேதி அம்மாணவன் கார் கண்ணாடியை உடைத்தான்.

பணம் கொடுக்கப்பட்ட பின்னும் ஏன் அப்படி நடந்து கொண்டாய் என நாங்கள் வினவியபோது, ‘செய்த குறள் பலகைகளைச் சுடுவதற்கு சூளை இல்லை என்பதால் சொந்தமாக ரூ.4200 செலவு செய்து சூளை ஒன்று கட்டினேன். அந்தப் பணம் தரப்படவில்லை. தவிரவும் வீட்டுக்கு போனில் மிரட்டியதால் ஏற்பட்ட மனப் பாதிப்பினால் அப்படி நேர்ந்துவிட்டது’ என்று பதிலளித்தார்.

ஆசிரியர் மனோகரன் பெரியமேடு காவல் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் ஒன்றை அளித்தார். கூடவே அவரைத் தூண்டிவிட்டதாக 2-ம் ஆண்டு பட்ட மேற்படிப்பு பயிலும் எஸ்வந்திரன் நான்காம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் கமலஹாசன் என்கிற இரு தலித் மாணவர்கள் மீதும் புகாரளித்தார்.

காவல்துறை உதவி ஆணையர் அசோக்குமார், ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் இக்குற்றச்சாட்டை விசாரித்துள்ளனர். தற்போது வேறொரு வழக்கில் கொலையாளிக்கு உதவியதாக தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் முருசேன் மனோகரனது சாதியைச் சேர்நதவர் எனச் சொல்லப்படுகிறது. எஸ்வந்திரனின் தம்பி ஆனந்தகுமார் அதே கல்லூரியில் நான்காமாண்டு பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டுள்ளார். அவரைப் பிடித்து சாதி சொல்லித் திட்டி அடித்த முருசேன் அவரைக் கொண்டே அவரது அண்ணன் எஸ்வந்திரனை இரவு 1.30 மணி அளவில் கைது செய்து இருவரையும் கடுமையாக அடித்து சாதி குறிப்பிட்டு இழிவாகப் பேசி இரவு முழுவதும் சங்கிலியால் பிணைத்து காவல் நிலையத்தில் வைத்துள்ளார். ‘‘தேவர் காரோட கண்ணாடியை உடைத்தவன்’’ என முருகேசன் இவர்களைப் பற்றி மற்றவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாங்கள் காவல்துறை உதவி ஆணையர் அசோக்குமார் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியபொழுது, முதல்வரின் காரை கொடூரமாக தாக்கியது குறித்து அளித்த புகாரில் எஸ்வந்த், கமலஹாசன் ஆகியோர் தூண்டிவிட்டதாகக் கூறப்பட்டிருந்ததாலேயே அவர்களைத் தேட நேர்ந்தது எனவும் யாரையும் சங்கிலியால் பிணைத்து வைப்பது தமக்கு வழக்கமில்லை எனவும் மாணவர்களின் குற்றச்சாட்டை மறுத்தார்.

அடுத்த நாள் காலை 11.00 மணிக்கு ‘‘கார் கண்ணணடியை உடைத்தவரைக் காட்டிக் கொடுத்தேன்’’ என எழுதி வாங்கிக் கொண்டு ஆனந்தகுமாரை விடுதலை செய்துள்ளனர். எஸ்வந்திரன் ‘ரிமான்ட்’ செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ளார். சசிகுமார், கமலஹாசன் ஆகிய இருவரும் முன் ஜாமினில் வெளி வந்துள்ளனர்.

எஸ்வந்தரனும், ஆனந்தகுமாரும் பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதை நாங்கள் நேரில் கண்டோம். எஸ்வந்திரன் தமிழக அளவில் ஒரு முக்கியமான சிற்பக் கலைஞர். அவரும் கமலஹாசனும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் குணம் உள்ளவர்கள் என்பதாலும், சில போராட்டங்களை ஏற்கனவே முன்னெடுத்திருந்ததால் மனோகரின் கோபத்திற்கு ஆளாகியிருந்துள்ளனர். மனோகரன் கல்லூரி வளாகத்திலிருந்த ஒரு சிலையை மையமாக வைத்து ஒரு இந்து கோயிலை கட்டியதற்காகத் தான் எதிர்ப்பு தெரிவித்ததற்காகவே தன் பெயரை குற்றச்சாட்டில் சேர்த்தார் என்கிறார் கமலஹாசன். வளாகத்திற்குள் பழைய கிணறு ஒன்றை தூர்க்கும் முயற்சியையும் இவர் எதிர்த்துள்ளார் இதுவும் மனோகரின் கோபத்திற்கு காரணமாகியுள்ளது. தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டவுடன் ‘‘பறப் பசங்களா’’ எனச் சொல்லி மனோகர் கடுமையாகப் பேசினார் என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எஸ்வந்திரன் இக்கல்லூரி மாணவராயினும் சில சிற்பப் பணிகளை மேற்கொண்டுள்ளதால் தற்போதைய பிரச்சினைகளில் தொடர்பில்லாது உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நாங்கள் மனோகரிடம் கேட்டபோது ஒரு சதம் கூட இதில் உண்மையில்லை என மறுத்தார். தனிப் பயிற்சி நடத்துவது பற்றிக் கேட்டபோது பதவி உயர்வு பெற்றபின் கடந்த 2 ஆண்டுகளாக நடத்துவதில்லை எனவும், எனினும் தனது மாணவர்கள் சிலர் அவ்வாறு நடத்துகின்றனர் எனவும் கூறினார்.

வழக்குரைஞர்கள் மற்றும் சமூக நீதியில் அக்கறையுள்ள சிலரின் ஆலோசனைகளின்படி இவ்வாறு சாதி சொல்லித் தாக்கியதற்காகவும் பொய் வழக்கு போட்டதற்காகவும் புகார் ஒன்றை பாதிக்கப்பட்ட மாணவர்கள் காவல்துறைக்குத் தந்துள்ளனர். எனினும் அவை ஏற்றுக் கொள்ளப்படாததோடு எந்த நடவடிக்கையும் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்த உதவி ஆணையர் அசோக்குமார் அவர்களிடம் கேட்டபோது ஆனந்தகுமார் முதலில் கொடுத்த மனுவில் அதுகுறித்துப் பேசியது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை எனவும் பிறகு அளித்த மனுவிலேயே அதைக் கூறியுள்ளதாகவும், இந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முகாந்தர(prama fecie)சான்றுகள் இல்லை எனவும் கூறினார். மாணவர்கள் கதவை தாழிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியபோது காவல்துறை மிகவும் மனிதாபிமானத்தோடு நடந்து கொணடதாகவும் குறிப்பிட்டார்.

கல்விப் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் திரும்பும்வரை காத்திருந்த மாணவர்கள் சென்ற மார்ச் 22 அன்று முதல் வழக்குகளைத் திரும்பப் பெறுதல், மனோகர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் முதலான கோரிக்கைகளைமுன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினர். இதற்கிடையில் மனோகர் பொறுப்பு முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கலைப் பண்பாட்டுத் துறை உதவி இயக்குனர் ஜெயபால் பொறுப்பு முதல்வராக்கப்பட்டுள்ளார். இவர் நுண்கலைத் துறையைச் சார்ந்தவரல்ல. நிர்வாகத் துறையைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கியவுடன் பெரிய அளவில் காவல்துறையினர் கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். இரவில் மாணவிகள் அனுப்பப்பட்டு கதவு பூட்டப்பட்டது. பேச்சு வார்த்தையில் முடிவேதும் ஏற்படவில்லை 23-ந் தேதி மாலை 6 மணி வாக்கில் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

போராட்டம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு நேரு ஸ்டேடியம் அருகிலுள்ள திடல் ஒன்றுக்கு அழைத்தச் செல்லப்பட்டு இரவு 9 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
தற்போது கல்லூரி மூடிக் கிடக்கிறது.

எமது பார்வைகள்

1. கலை பண்பாட்டுத்துறைச் செயலரும் புகழ்பெற்ற எழுத்தாளரும்தான் வே. இறையன்பு அவர்களைத் தொடர்புக் கொண்டு பேசியபொழுத தான் பதவி ஏற்றபின் 1.86 கோடி ரூபாய் இக்கல்லூரிக்கென ஒதுக்கி ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பல்வேறு குறைபாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருவதாகக் கூறினார். க்ளெய்ன், மெடல் கேஸ்டிங், கம்ப்யூட்டர்கள், சூளை முதலியன தொடர்பாக வேலைகள் நடந்துள்ளதைப் பொறுப்பு முதல்வரும் குறிப்பிட்டார். மாணவர்கள் தன் கருத்துகளை ஏற்கவில்லை எனவும், இது முதல்வர் கருணாநிதி அவர்களின் துறையைச் சார்ந்ததால் விசாரணை மேற்கொள்ள ஒரு நபர் கமிஷன் ஒன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறினார். கல்லூரியைத் திறப்பது தாமதமாகக் கூடாது என நாங்கள் கேட்டுக் கொண்டபோது சற்று நிலைமை சீரானவுடன் கல்லூரியைத் திறப்பதில் தடையில்லை என்றார். மிகவும் விரிவாக எல்லாவற்றையும் விளக்கிக் கூறினார்.

2. பொறுப்பு முதல்வரும், ஆணையர் திரு மணியும்கூட எங்களிடம் மிகப் பொறுமையாக நாங்கள் முன் வைத்த ஐயங்களுக்கெல்லாம் விளக்கமளித்தனர். எனினும் சில ஐயங்களுக்கு உரிய விளக்கங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.

அவை:

(i) பொதுவாக அரசுத் துறைகளில் பணி மூப்பு அடிப்படையிலேயே பொறுப்புகள் அளிக்கப்படும். பணி மூப்புடைய வேறு சிலர் இருக்கையில் ஏன் மனோகருக்குப் பொறுப்பு முதல்வர் பதவி அளிக்கப்பட்டது? மற்றவர்கள் மீது புகார்கள் இருந்தன என்றார் ஜெயபால். மனோகர் மீதும் புகார்கள் இருந்து சட்டமன்றம் வரை அது பேசப்பட்டது குறித்து பதிலில்லை.

(ii) எந்த அடிப்படையில் ஒரு சில பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் பணியில் தொடர அனுமதிக்கப்படவில்லை என்பதும் தெளிவாகவில்லை. சுரேந்திரன் என்பவர் எம்.எஃப்.ஐ. சேர்ந்துவிட்டதால் பணியில் தொடர இயலாது என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எம்.எஃப்.ஐயில் சேரவே இல்லை.

(iii) மனோகர் சாதி சொல்லித் திட்டியது, தனிப் பயிற்சி நடத்துவது குறித்து எதுவும் தமக்குத் தெரியாது என்று நிர்வாகத் தரப்பில் கூறுப்பட்டது.

(iv) விடுதி மூடப்பட்டதற்குக் காரணமாக மாணவர்களின் நடத்தை சரியில்லை எனக் கூறப்பட்டது. தவறுகள் இல்லாமல் கண்காணிக்கப்படுதல், முறையான வார்டன் ஒருவரை நியமித்தல் - முதல்வர் என்கிற வகையில்தான் பிரச்சினைகள் சமாளிக்கபட வேண்டுமே ஒழிய அதற்காக விடுதியையே மூடுவது எப்படி?

3. மாணவர் சசிகுமார், தான் முதல்வரின் கார் கண்£டியை உடைத்ததை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், ஆசிரியர்களும் நிர்வாகமும்தான் எந்தத் தவறையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எமது குழுவில் மூவர் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு கல்லூரிகளில் முதல்வர் மற்றும் பேராசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். கல்லுரிக் கதவுகளை உடைத்தால், ஆசிரியர்களைத் தாக்குதல், ஆசிரியர்களில் வாகனங்களை உடைத்தல், மாணவர்களுக்கிடையே மோதல் முதலான பல சம்பவங்களை நாங்கள் சந்தித்துள்ளோம். மாணவர்களின் தவறுகளையும், குற்றங்களையும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை போல அணுகுதல் அவசியம். பொருளியல் ரீதியாகப் பார்த்தால் ஆசிரியருக்கு ஏற்பட்டது கார் கண்ணாடி சேதமானது மட்டுமே. வழக்கு தொடர்ந்து தண்டிக்கப்பட்டால் அந்த மாணவனின் வாழ்வே பாழாகிவிடும் என்கிற உணர்வு ஆசிரியர்களுக்கு வேண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக கல்லூரி நிர்வாகக்குழு, ஆசிரியர்கள் கூட்டம் முதலியவற்றைக் கூட்டி விவாதித்து, அம் மாணவனை தற்காலிக நீக்கம் செய்து, விசாரணைக்குழு அமைத்து, குற்றத்திற்குப் பொருத்தமான அபராதம் முதலான தண்டனை அளித்து, எச்சரிக்கை செய்து பிரச்சினையை முடிப்பதே வழக்கம். இங்கோ உடனடியாக போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட குரோதத்துடன் ஆசிரியர் மாணவர்களைச் சாதி சொல்லித் திட்டியுள்ளார். தொடர்பில்லாத இரு தலித் மாணவர்களையும் புகாரில் இணைத்துள்ளார். அடுத்து நான்கு நாட்கள் கழித்தே (மார்ச் 1) இது தொடர்பாககக் கல்லூரியில் கூடி விவாதிக்கப்பட்டுள்ளது. முதல்வரும் நிர்வாகமும் பொறுப்புடன் நடந்து கொண்டிருந்தால் இந்த அளவிற்குப் பிரச்சினை முற்றியிருக்காது.

4. மாணவர்கள் போராடுவதை ஒழுக்கக் குறைவாகக் கருத வேண்டியதில்லை. போராட்ட காலங்களில் பேசப்படும் சொற்களையும் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனால், அத்தகைய போக்கு நிர்வாகத்திடம் உள்ளது.

5. சசிகுமார் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம் இது போன்ற மாணவ முயற்சிகள் குறித்த ஒரே சீரான அணுகுமுறை இல்லாததே காரணம்.

எமது பரிந்துரைகள்

1. அகமதாபாத்திலுள்ள NID (தேசிய வரைகலை நிறுவனம்) போல பெருமைமிகு நிறுவனமாக வளர்ந்திருக்க வேண்டிய கல்லூரி இது. மாற்றாந்தாய் அணுகல் முறையுடன் அரசு நடந்து கொண்டு வந்துள்ளதே இன்றைய பிரச்சினைகளுக்குக் காரணம். கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளில் அக்ககறையுள்ள முதல்வர் கலைஞர் மற்றும் நாடறிந்த எழுத்தாளரும் நிர்வாகியுமான இறையன்பு ஆகியோரின் துறையைச் சார்ந்த இந் நிறுவனம் போதிய நிதி ஒதுக்கீடுச் செய்யப்பட்டு, ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைகள் நீக்கப்பட்டு இந்திய அளவில் தரமான ஒரு நுண்கலைப் பல்கலைக் கழகமாக மாற்றப்பட வேண்டும்.

2. NID முதலான நிறுவனங்களின் தரநிர்ணயம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, இருக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி வரன்முறைப் படுத்தப்பட்டு, எல்லோருக்கும் ழிமிஞி ஆசிரியர்களுக்குச் சமமான ஊதியம் முதலியன வழங்கப்பட வேண்டும்.

3. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி மாணவர் விடுதி திறக்கப்பட வேண்டும். கல்லூரிக்குள் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

4. மூடிக்கிடக்கும் கல்லூரி உடனடியாகத் திறக்கப்பட வேண்டும்.

5. பிப்ரவரி 26ந்தேதி நிகழ்ச்சி தொடர்பாக மாணவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படவேண்டும்.

6. கண்ணாடி உடைப்பில் தொடர்பில்லாத தலித் மாணவர்களைச் சாதி சொல்லித் திட்டி, சங்கிலியால் பிணைத்து அடித்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் மீதான மாணவர்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட வேண்டும். கல்லூரி நிர்வாகம் இதற்கு ஆவன செய்ய வேண்டும்.

7. சமீபத்திய பிரச்சினைகள் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் ஒன்று நியமிக்கப்பட உள்ளதை வரவேற்கிறோம். அந்த ஆணையத்தின் விசாரணை எல்லை கீழக்கண்டவற்றை உள்ளடக்க வேண்டும்.

(i)26-ந் தேதி நிகழ்வை நோக்கிப் படிப்படியாக இட்டுச் சென்ற சூழல் அடையாளம் காணப்படுதல்.

(ii) பணி மூப்பு புறக்கணிக்கப்பட்ட மனோகர் பொறுப்பு முதல்வராக்கப்படுதலின் பின்னணி.

(iii) கண்ணாடி உடைப்பில் தொடர்பில்லாத மாணவர்கள் மீது புகார் சொல்லப்பட்டது மற்றும் அவர்கள் இத்தனை மூர்க்கமாக நடத்தப்பட்டது ஆகியவற்றிற்குப் பின்புலம் ஏதும் இருந்ததா எனக் காணுதல்.

(iv) மனோகர் மீது 2004-ல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், தொடர்ந்து அவர் அத்தகைய உணர்வுடன் செயல்பட்டார் என மாணவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆராய்தல்.
குறிப்பாக கார் கண்ணாடி உடைக்கப்பட்ட அன்று அவர் சாதி சொல்லித் திட்டியது குறித்த புகாரில் கையொப்பமிட்டுள்ள மாணவர்கள் விசாரிக்கப்படுதல்.

(v) பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தல் மற்றும் சமீபத்தில் செய்யப்பட்ட பணி நீக்கங்களில் பின்னணி ஏதும் உள்ளதா என ஆராய்தல்.

(vi) ஆசிரியர்கள் தனிப்பயிற்சி நடத்துதல், ஒப்பந்தப் பணிகளை எடுத்தச் செயல்படுத்துதல் ஆகியன எந்த அளவிற்கும் கல்விப் பணிகளைப் பாதிக்கின்றன என்பது குறித்து ஆராய்தல்.

(vii) ஆசிரியர்களுக்கிடையே உள்ள குழு மனப்பான்மை மாணவர்களின் கல்வியைப் பாதித்தல் குறித்து ஆராய்தல்.

8. தனிநபர் ஆணையம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் குற்றமிழைத்தவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும்.

9. தனிநபர் ஆணையம் அமைக்கும் போது அந்த நபர் சமூக நீதியில் அக்கறை உள்ளவராகவும் நடுநிலையோடு இருப்பவராகவும் இருப்பது அவசியம்.

Thursday, October 22, 2009

மேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

மதுரை, மேலூர் அருகேயுள்ள மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த 30.06.1996 அன்று ஆதிக்கச் சாதி வெறியர்களால் பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டனர். தலித் ஒருவர் தங்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவராக வருவதா என்ற ஆதிக்க எண்ணத்தில் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றினர் ஆதிக்கச் சாதியினர். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர் போராட்டத்தின் விளைவாக குற்றவாளிகள் 17 பேருக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

இத்தீர்ப்பை எதிர்த்து, குற்றாவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம், என்.பால் வசந்தகுமார் ஆகியோர் கடந்த 19.04.2006 அன்று குற்றவாளிகளுக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டதையும் உறுதி செய்தனர்.

குற்றவாளிகள் இத்தீர்ப்பையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் வி.எஸ்.சிர்புக்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இவ்வழக்கில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கனகராஜ் ஆஜரானார். வழக்கு விசாரணை கடந்த 23.09.2009 அன்று முடிவு பெற்று தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வி.எஸ்.சிர்புக்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் 17 பேருக்கும் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமையில் அக்கறையுடைய அனைவர் மத்தியிலும் இந்த தீர்ப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதி வெறிக்கு இந்த தீர்ப்பு சம்மட்டி அடிக் கொடுத்துள்ளது.

தொடக்கம் முதல் இந்த வழக்கில் சட்ட ரீதியாகவும், தொடர் இயக்கம் மூலம் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிக் கிடைக்க போராடிய வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களையும், அவரோடு துணை நின்ற அனைவரையும் பாராட்ட வேண்டும். இந்த வழக்கில் அவருக்கு துணையாக இருந்து பங்களித்தமைக்கு நான் பெரிதும் மகிழ்கிறேன்.

இவ்வழக்கை வைத்து அரசியல் செய்த தலித் கட்சி, ஒரு கட்டத்தில் இவ்வழக்கு பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல் போன நிலையிலும், வழக்கறிஞர் பொ.இரத்தினம் போன்றவர்கள் விடாது போராடி நீதியை நிலை நிறுத்தியதை மனதார பாராட்டுகிறேன்.

Tuesday, January 20, 2009

ஜனவரி 25-இல் மேலவளவில் "ஆதிக்க ஒழிப்பு சமத்துவ விழா"










சமத்துவப் போராளிகள் அமைப்பு சார்பில் மதுரை அருகேயுள்ள மேலவளவில் "ஆதிக்க ஒழிப்பு சமத்துவ விழா" நடைபெற உள்ளது. இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

வரும் 25.01.2009 ஞாயிறன்று, காலை 10 மணி முதல் மதியம் 3.30 வரை, மேலவளவு தலித் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நடைபெறும் விழாவிற்கு வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமை தாங்குகிறார்.

மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த 30.06.1996 அன்று ஆதிக்கச் சாதி வெறியர்களால் பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டனர். தலித் ஒருவர் தங்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவராக வருவதா என்ற ஆதிக்க எண்ணத்தில் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றினர் ஆதிக்கச் சாதியினர். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர் போராட்டத்தின் விளைவாக குற்றவாளிகள் 17 பேருக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதனை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தற்போது இவ்வழக்கு குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாதி ஆதிக்க வெறிக்குப் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவரது குடும்பத்தினர், சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராடி வருபவர்கள் என பல்தரப்பினரும் ஒன்று திரளும் விழா நடைபெற உள்ளது.

காலையில், புரட்சியாளர் அம்பேத்கர் பெயர்ப் பலகையைத் தோழர் ப.பாரதி திறந்து வைக்கின்றார்.

மேலவளவு படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விடுதலைப் போராளிகளின் உருவப் படங்கள் வழங்கப்பட உள்ளன. கார்ல் மார்க்ஸ் படத்தினைத் தோழர் லெனின் (தமிழ்நாடு இளைஞர் பெருமன்றம்), அம்பேத்கர் படத்தினை வழக்கறிஞர் பானுமதி, தந்தை பெரியார் படத்தினை வழக்கறிஞர் தஞ்சை இராமமூர்த்தி ஆகியோர் வழங்குகின்றனர்.

தன் மகனுக்கு அம்பேத்கர் என பெயரிட்டுள்ள தலித் அல்லாத குடுபத்தினரை தோழர் தி.மு.உமர்பாரூக் (நீலப் புலிகள் இயக்கம்), கீழ்வெண்மனியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தோழர்களைத் தோழர் பி.சம்பத் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), ஈரோட்டிலுள்ள சாதி மறுப்பு திருமணப் பாதுகாப்பு இயக்கத்தினை வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் அறிமுகப்படுத்துகின்றனர்.

மேலவளவு மக்களுக்கானப் பொது நூலகத்திற்குப் புத்தகங்களை பேராசிரியர் அ.மார்க்ஸ், எழுத்தாளர் யாக்கன், வழக்கறிஞர்கள் ஜெகதீஸ், லஜபதிராய், ஜெயசீலன் ஆகியோர் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் ப.மலைச்சாமியிடம் வழங்குகின்றனர்.

விழாவில் பங்கேற்போருக்கு தியாகி இமானுவேல் பேரவை தலைவர் பூ.சந்திரபோசு, தோழர் தமிழரசி, வழக்கறிஞர்கள் சு.க.மணி, பாலமுருகன், தங்கவேல், வனஜா, விஜயேந்திரன், திலகேஸ்வரன், அழகுமணி, கதிர்வேல், சத்தியசந்திரன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்கின்றனர்.

தமிழக அளவில் சாதி மறுப்புத் திருமணம் செய்து சவால்களைச் சந்திப்போரை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோ.சுகுமாரன் அறிமுகம் செய்து வைக்கிறார்.

விழாவில் அருட்திரு பாக்கியநாதன், தோழர்கள் ஜேம்ஸ், புதுவை சுப்பையா ஆகியோர் எழுச்சிப் பாடல்களைப் பாடுகிறார்கள்.

விழா முடிவில் மாட்டுக்கறி உணவை இழிவுப்படுத்தியுள்ள சதியை உடைக்கும் விதமாக அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு விருந்து அளிக்கப்படும் என விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

சாதி ஆதிக்கத்திற்கு எதிரான இந்த விழாவில் பங்கேற்க அனைவரையும் அழைக்கின்றோம்.

தொடர்புக்கு:

வழக்கறிஞர் பொ.இரத்தினம் - 94434 58118.
வழக்கறிஞர் கு.ஞா.பகத்சிங் - 94439 17588.

Saturday, November 29, 2008

உத்தபுரத்தில் தீண்டாமைச் சுவர் : உண்மை அறியும் குழு அறிக்கை!


புகைப்படம்: கோ.சுகுமாரன்.
மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் (பேரையூர் தாலுகா) 18 ஆண்டு காலமாக இருந்த தீண்டாமைச் சுவர் மே 6-ந் தேதியே இடிக்கப்பட்டபோதும் தொடர்ந்து அங்கு பிரச்சினை இருந்து வருவதையும், கடந்த அக்டோபர் 1-தேதி ‘பிள்ளைமார்’ மற்றும் ‘குடும்பமார்’ (தலித்கள்) ஆகிய இருதரப்பினருக்கும் ...மேலும்

Wednesday, November 26, 2008

சட்டக் கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை!

கல்வியாளர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் இம்மோதல் நடைபெற்றுள்ளமை சமூக ஆர்வலர்களின் கூடுதல் ...மேலும்

Wednesday, August 13, 2008

தலித் மக்கள் சுதந்தரத்தை மீட்டெடுப்போம் - கருத்துப் பட்டறை

அழைப்பிதழைப் பெரிதாக்கிப் படிக்க படத்தைச் சொடுக்கவும்.



Sunday, March 23, 2008

நாம் ஒன்று சேர்வதை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் - கோவை இராமகிருட்டிணன் பேச்சு.

உடுமலையில் 5.3.2008 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் பேசியதாவது:

சாதி ஒழிப்பு கூட்டியக்கம் கோபி நம்பியூரிலே மாரியப்பனுக்கு திருமண மண்டபம் தர மறுத்ததில் தொடங்கிய இந்த கூட்டியக்கம் பேரெழுச்சியோடு இன்றைக்கு சாளரப்பட்டி அருந்ததிய மக்களுக்காகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை இங்கு நடத்துகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்திலே தலைவர் அதியமான் சொன்னது போல தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா தலித் இயக்கங்களையும், சுய மரியாதை இயக்கங்களையும் மனித உரிமை இயக்கங்களையும் ஒன்றிணைத்து இன்றைக்கு ஒன்றுபட்டு விட்டோம்; ஒன்றுபட்டு விட்டோம் என்கிற குரலோடு இங்கே கூடியிருக்கிறோம்.

சாளரப்பட்டிக் கலவரம் தாக்குதல் கொடூரமான நிலையில் நடந்திருக்கின்றது. அந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் அங்கே ஆதிக்கச் சாதியினராக இருப்பவர்கள் பத்து தேனீர் கடைகளிலே தனிக் குவளைகள் இருக்கின்றதென்று நீண்டகாலமாக காவல்துறைக்கு புகார் செய்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது அவர்கள் பத்துக் கடைகளையும் மூடி விடுவோம் என்று மூடி விட்ட நிலையிலே இரண்டு கடைகள் மட்டும் அதிலே அங்கு இருக்கக்கூடிய ஆதிக்க சாதியிலே வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் இரண்டு கடைகளை திறந்தபோது இன்றைக்குத் தாக்குதல் நடத்திய எட்டு கடைக்காரர்களும் அந்த ஊர் மக்களும், ஆதிக்கச் சாதியினரும் அந்த இரண்டு தேனீர் கடைகளையும் தாக்கியிருக்கிறார்கள்.

அந்த தாக்குதல் நடத்திய போது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்குமேயானால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திலே அன்றைக்கே அப்போதே நடவடிக்கை எடுத்திருக்குமானால் இவ்வளவு பெரிய, நூற்றுக்கணக்கான அருந்ததிய மக்கள் - 80 வயது வேலம்மாள் முதல் 5 வயது சிறுவன் வரைக்கும் தாக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். அப்போதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்குதல் நடந்த போதும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதை நான் சொல்லவில்லை. காவல்துறையே பத்திரிகைக்கு செய்தி கொடுத்து இருக்கிறது. நாங்கள் குறைவானவர்கள் இருந்தோம், ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்லுகிறார்கள் என்றால், அப்போது காவல்துறை ஒப்புக் கொள்கிறது. அங்கு தாக்குதல் நடந்தது உண்மை. நாங்கள் அங்கு ஒன்றும் செய்ய முடியவில்லையென்று சொல்கின்றார்கள். ஏன் இவர்கள் 20 பேர் இருந்தால், அங்கே தாக்குதலை சமாளிக்க முடியாதா? டி.எஸ்.பி.க்கு எதற்காக துப்பாக்கி தரப்பட்டிருக்கிறது? காவல்துறை ஆய்வாளருக்கு எதற்காக துப்பாக்கி தரப்பட்டிருக்கிறது? ஒரு சந்தேகம். ஏன் என்று சொன்னால், தமிழ்நாட்டில் அதுவும் கோவை மாவட்ட மக்களுக்கு மிகுந்த சந்தேகம் வந்துவிட்டது. இனி அந்தத் துப்பாக்கிகள் அவர்களுக்கு தரப்படுமா? அல்லது சந்தனக் கடத்தல்காரர்கள் கத்தியைக் காட்டிய உடனே தரக்கூடிய காவல்துறை ஆயிற்றே! இவர்களுக்கு எதற்குத் துப்பாக்கி என்று பறித்துக் கொள்வார்களா என்ற நிலை இருக்கிறது. அங்கே 20 பேர் பார்த்துக் கொண்டு இருந்தோம் என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

அதே நேரத்திலே பொய்யான வழக்குகள் ஆதித் தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் மீது. என்னவென்று கேட்டால் கோயிலுக்குள் நுழைய முயன்றதால் என்று சொல்லிப் பொய்யாக பதிவுச் செய்து, இந்தத் தாக்குதல் தொடங்கியதற்கு இவர்கள் காரணம் என்பதுபோல ஒரு பொய்யான காரணத்தை காவல்துறையே உருவாக்கி பத்திரிகையிலே செய்திகள் தருகிறார்கள்.

அதோடு மட்டுமல்ல, இங்கேயுள்ள காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், அவர் வீட்டிலே, அவர் சமூகத்திலே அவர் என்ன சாதியினராக வேண்டுமானாலும் இருக்கலாம். காவல்துறையிலேயும் அவர்கள் வீட்டிலே என்ன சாதியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவர்கள் காக்கிச் சட்டை போட்ட பின்னால் அவர்கள் மக்கள் நலப் பணியாளர்கள். அவர்களுக்குள் சாதி இருக்கக் கூடாது. ஆனால், அந்த துணைக் கண்காணிப்பாளர், நான் இந்த சாதி தான் என்று குறிப்பிட்டுச் சொல்லி, இங்கே தன்னை அடையாளப் படுத்துகிறார். அதனுடைய விளைவு, இதே உடுமலையிலேயே அந்த துணைக் கண்காணிப்பாளர் ஈசுவரன் அவர்கள் வந்த பின்னால் துங்காவி, அனுப்பட்டி, வல்லக்குண்டாபுரம், கொங்கல் நகரம், சாளையூர், தும்பலப்பட்டி - ஐந்து கிராமங்களிலே இதே போல தாக்குதல்கள் தலித்துக்கள் மீது நடந்திருக்கிறது. அந்த அய்ந்து கிராம நிகழ்ச்சிகளிலும் இதே நிலையை அவர் கையில் எடுத்து நியாயம் வழங்கவில்லை. தலித்துக்களை முடக்கி அவர் உயர்சாதியினருக்கு துணைப் போயிருக்கின்றார். ஆகவே, அரசு உடனடியாக அந்த துணைக் கண்காணிப்பாளரை இங்கிருந்து மாற்ற வேண்டும். இன்னும் சொல்லப் போனால், எந்த ஆதிக்கச் சாதிகள் அதிகமாக இருக்கிறார்களோ அந்த பகுதியிலே அவர்கள் சார்ந்த அதிகாரிகளை நியமிக்கக் கூடாது. நியமித்தால் அவர்கள் சாதிக்குத்தான் துணைப் போகின்றார்கள். அதனால் தான் இந்த முழக்கத்திலே அதை மய்யமாக வைக்கப்பட்டது.

அதேபோல, அந்த பள்ளியிலே தலைமையாசிரியர் - பள்ளியைப் போய் தாக்கப் போகின்றார்கள். என்ன கொடுமை என்று சொன்னால், சாதிவெறி தாண்டவம், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை எவ்வளவு கூர்மைப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், அந்த சாளரப்பட்டிப் பள்ளியிலே தாக்குதலுக்குப் போனவர்கள், அதே பள்ளியிலே ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற தலித் மாணவனை அடிக்கப் போயிருக்கின்றார்கள். பேனாவை கத்தியாகப் பயன்படுத்திக் கொண்டு, “உன்னையெல்லாம் இதிலே குத்த வேண்டும்” என்று சொல்லி தாக்குதலுக்குப் போயிருக்கிறார்கள். பத்து வயது, பனிரெண்டு வயது சிறுவர்களெல்லாம், அவர்களுக்கு உண்மையாக உள்ளத்துக்குள் இருந்திருக்காது - பெரியவர்கள் செய்வதைப் பார்த்து அவர்கள் செய்திருக்க முடியும். ஆனால், அங்கு என்ன நிகழ்ந்திருக்கிறது என்று சொன்னால், தலைமையாசிரியர் அங்கே இவர்கள் தாக்கப் போகின்றபோது இப்போது வேண்டாம், நான் மணியடித்து விடுகிறேன்; அவர்கள் வெளியே வந்த பின்னால் தாக்குதல் நடத்துங்கள் என்று வழிவகை செய்திருக்கிறார.

இப்படி பள்ளிக்கூடம் தாக்கப்பட்டிருக்கிறது. அவர் (தலைமையாசிரியர்) அந்த குழந்தைகளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். அந்தப் பள்ளியிலே நூற்றுக்கணக்கான தலித் மாணவர்கள் இன்றைக்கு வரைக்கும் அச்ச உணர்வோடு படிக்க முடியாத, படிக்கப் போக முடியாத சூழல் இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு நாம் இங்கே கடலென கூடியிருக்கின்ற அனைத்து அமைப்புகளும் ஒன்றுபட்டு இருக்கிறோம். பெரிய மகிழ்ச்சி. நாம் ஒன்று சேருவதை யார் தீர்மானிக்கிறார்கள் என்றால் எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள். இந்த ஒற்றுமை தமிழ்நாடு முழுவதும் மலர வேண்டும்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடினார்; எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டேன் என்று. இப்போது நாம் பாடுவோம். எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தலித்துகள் ஒன்றாதல் கண்டே என்று நாம் புதிய கவிதை பாட வேண்டும். இந்த ஒற்றுமை மலர வேண்டும். சாளரப்பட்டில் தாக்க வந்த அந்த ஆதிக்கச் சாதிகள் யாரென்று பார்க்கவில்லை. அத்தனை பேரும் திரண்டு வந்தார்கள். நாம் நம் மக்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? அதற்கு இந்த ஒற்றுமை வேண்டும். ஒன்றுபடுவோம்! ஒன்றுபடுவோம்!

பெரியார் இயக்கத்தின் நோக்கம் - இதுதான்!

இன்றைக்கு வடக்கும் மேற்கும் இணைந்திருக்கிறது. பிரிந்திருந்த நம்மையெல்லாம் ஆதிக்கச் சாதி எதிரிகள் ஒன்றுபடுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆயிரங்கோடி நன்றிகள். இதற்காக 80 வயது பாட்டி வேலம்மாள் இரத்தம் சிந்தியிருக்கின்றார். 5 வயது விக்னேஷ் இரத்தம் சிந்தியிருக்கின்றார். அவர்கள் சிந்திய இரத்தம் நம்மை இன்றைக்கு ஒன்றுபடுத்தியிருக்கின்றது. ஒற்றுமையில் பெரியார் கண்ட, பெரியார் இயக்கத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது.


நன்றி: பெரியார் முழக்கம்.

Saturday, June 16, 2007

அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரிக்கை : ரவிக்குமார் எம்.எல்.ஏ. எதிர்ப்பு



Ravikumar MLA on Arunthathiar Reservation - BBC - Tamilosai - 12-6-2007
Ravikumar MLA on A...
Hosted by eSnips

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 18 விழுக்காடு இடஒதுக்கீட்டில் அருந்ததிய இன மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

12-6-2007 அன்று சென்னையில் பல்வேறு அருந்ததிய இன மக்களின் இயக்கங்களை ஒருங்கிணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் பேரணி ஒன்றை நடத்தியது. இதில் தமிழகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான அருந்ததியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என். வரதராஜன் தலைமையிலான குழு தமிழக முதல்வர் கருணாநிதியை கோட்டையிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தது.

அம்மனுவில், பாதாளச் சாக்கடை, துப்புரவுப் பணியை நவீனப்படுத்த வேண்டும்; அருந்ததியர் குறித்த முழுமையான கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர் கருணாநிதி, அருந்ததியர் பற்றிய கணக்கெடுப்பு நடத்த ஒரு குழு அமைக்கப்படும்; மற்ற கோரிக்கைகளையும் அரசு பரிசீலிக்கும் என உறுதியளித்துள்ளார்.

இப்பேரணியில் கலந்து கொண்ட ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் `தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கின்ற அருந்ததிய இன மக்களுக்குத் தாழ்த்தப்பட்டோருக்கான 18 சதவீத மொத்த இடஒதுக்கீட்டில், மூன்றில் ஒரு பங்கான 6 சதவீதத்தை வழங்க வேண்டும்' என்றார்.

தாழ்த்தப்பட்ட மக்களில் அடித்தட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உழன்றுவரும் அருந்ததியர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவதுதான் இயற்கை நீதி, சமூக நீதி. தமிழகத்திலுள்ள பல அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் பல காலமாக இக்கோரிக்கையை எழுப்பி வருகின்றன. இந்தச் சூழலில், ஆளும் திமுக கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அருந்ததியர்களின் கோரிக்கையை முன்னெடுத்திருப்பது ஒரு முக்கிய திருப்பம் எனலாம்.

இதனிடையே, தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த தலித் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், அருந்ததிய இன மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இலண்டன் பி.பி.சி. தமிழோசை வானொலிக்கு அளித்த நேர்காணலில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நேர்காணலில் கூறியதாவது :

’அருந்ததியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆந்திர பிரதேசத்தில் முதன்முதலில் எழுப்பப்பட்டது. தெலுங்கு தேசக் கட்சி ஆட்சியில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது உள்ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றினார். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்ககான இடஒதுக்கீட்டை இப்படி பிரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஆந்திர பிரதேசத்தின் அந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டது. இப்போது இதே கோரிக்கையை இங்கே எழுப்புகிறார்கள். இடஒதுக்கீடு என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் முழுமையான தீர்வாகாது. இடஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களில் 10 விழுக்காட்டினர் மட்டும்தான் பயன்பெற முடியும். மொத்த இடஒதுக்கீட்டில் தனியார் துறை, அரசு ஒதுக்கீடு என இடஒதுக்கீடு பூர்த்தி செய்யப்பட்டாலும்கூட அது அந்த சமூகத்தைச் சேர்ந்த 10 விழுக்காட்டு மக்களுக்கே பயன் அளிக்கக் கூடியதாகும். ஆக, இடஒதுக்கீடு என்பதிலேயே முழுமையான ஒரு தீர்வைக் கண்டுவிடலாம் என்ற தவறான கண்ணோட்டத்தில்தான் உள்ஒதுக்கீடு கோரிக்கைகள் முன் வைக்கப்படுவதாக நான் கருதுகிறேன்’
என்று கூறியுள்ளார்.

அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை எதிர்ப்பதன் மூலம் சாதிப் படிநிலையில் கடைகோடியில் இருக்கும் அருந்ததிய இன மக்களுக்கு தன் ஆதரவு இல்லை என்பதையே ரவிக்குமார் தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும், தாழ்த்தப்பட்ட மக்களில் கீழ்நிலையிலுள்ள அருந்ததி இன மக்கள் முன்னேற்றம் அடைவதால் தன்னுடைய சமூக மக்களுக்கான இடங்கள் பறிபோகும் என்ற அச்சத்தை அவர் இப்படி வெளிப்படுத்தி உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து ரவிக்குமார் இப்படி அருந்ததிய இன மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது பல்வேறு அய்யங்களுக்கு வழிவகுத்துள்ளன. ஒட்டுமொத்த தலித்துகளுக்கானக் கட்சி என கூறிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், இதுபற்றிய மறுப்போ அல்லது அருந்ததிய இன மக்களுக்கான உள்ஒதுக்கீடு பற்றியோ இதுவரையில் எதுவும் கூறாமல் இருப்பது, ரவிக்குமாரின் கருத்தை ஆதரிக்கிறாரா என எண்ணத் தோன்றுகிறது. இது குறித்து அவர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ரவிக்குமார் அருந்ததியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதல் முறையல்ல. 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளிவந்த `காலச்சுவடு' என்ற பார்ப்பன - இந்துத்துவ இதழில், ’இறந்த உதடுகள் ஒன்று கூடும் பொழுது’ என்ற தலைப்பில் புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெரூடா நூற்றாண்டையொட்டி, அவரைப் பற்றி எழுதிய குறிப்பு ஒன்றில் இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

’நெரூடா கொழும்பில் வசித்த பங்களா மிகப்பெரியது. அதன் கழிவறை வெளியே தனியே அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கழிவறையை யார் சுத்தம் செய்கிறார்கள் என்பது நெரூடாவுக்கு தெரியாது. ஒருநாள் அது யாரென்பது நெரூடாவுக்குத் தெரியவந்தது. ''இலங்கையில் நான் இதுவரை சந்தித்திராத அழகி. ஒரு சிலையைப் போல இருந்தாள். அவள் ஒரு தமிழ்ப்பெண், பறையர் சாதியை சேர்ந்தவள். அவள் சிவப்பும் பொன்நிறமும் கொண்ட மட்டரகமான புடவையை உடுத்தியிருந்தாள். கைகளில் கனமான வளையல்கள். அவளது மூக்கின் இரு புறமும் இரண்டு சிறிய சிவப்பு மூக்குத்திகள் மின்னிக்கொண்டிருந்தன. அவை வெறும் கண்ணாடிகள்தான் என்ற போதிலும் அவளது முகத்தில் ரத்தினங்களாய் மின்னிக்கொண்டிருந்தன.''

அவளை வசியப்படுத்த நெரூடா பலவித முயற்சிகளைச் செய்கிறார். எதற்கும் பலனில்லை. ''ஒரு நாள் நேராகச் சென்று அவளது கையைப் பிடித்தேன், கண்களைப் பார்த்தேன். அவளோடு பேச என்னிடம் மொழியும் இல்லை. சிறு புன்னகை கூட இன்றி அவள் படுக்கையறைக்கு வந்தாள்.'' ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்னிந்தியச் சிற்பத்தைப் போல அவள் இருந்ததாக நெரூடா வர்ணிக்கிறார். ''அவளைப் புணர்ந்தது ஒரு சிலையைப் புணர்ந்ததுபோல் இருந்தது. கடைசிவரை அவளது கண்கள் திறந்தபடியே இருந்தன. அவளிடமிருந்து ஒரு எதிர்வினையும் இல்லை.''

பறையர் என நெரூடா குறிப்பிட்டிருப்பது அக்காலத்தில் (1929) கொழும்பில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த சக்கிலிய வகுப்பினரைத்தான். நெரூடாவின் வர்ணனையைப் படிக்கும்போது ஏறத்தாழ நெரூடா அந்தப் பெண்ணைக் கற்பழித்தார் என்றே சொல்லத் தோன்றுகிறது.’


பாப்லோ நெரூடா உறவு கொண்டது பறையர் வகுப்பைச் சேர்ந்த பெண் அல்ல, அவள் சக்கிலியர் வகுப்பைச் சேர்ந்தவள் என குறிப்பிட்டதின் பின்னணி எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான். ரவிக்குமார் இவ்வாறு எழுதியதற்கு அப்போது பலதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாப்லோ நெரூடா உறவு கொண்டது, ரவிக்குமார் சொற்களில் கூறினால் கற்பழித்தது ஒரு தலித் பெண் என எடுத்துக் கொள்ளாமல் அவள் அருந்ததிய இனப் பெண் எனக் குறிப்பிட்டுச் சொன்னதின் உள்ளீடு நுண்ணிய சாதி ஆதிக்க வெளிப்பாடு; அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் வலியுறுத்திய சாதி ஒழிப்புக்கு முரணானது; தலித் விடுதலைக்கு எதிரானது.

ரவிக்குமார் அவரது பேச்சிலும், எழுத்திலும் தொடர்ந்து வலியுறுத்திய ஒன்றை அவருக்கு தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.

`எவன் ஒருவன் தான் பிறந்த சாதிக்கு துரோகம் இழைக்கிறானோ, அவனே சாதியை ஒழிக்க முடியும்.’