Showing posts with label இரங்கல். Show all posts
Showing posts with label இரங்கல். Show all posts

Friday, December 20, 2024

மூத்த வழக்கறிஞர் ஆர்.பலராமன் மறைவு: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு இரங்கல்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.12.2024) விடுக்கும் இரங்கல் குறிப்பு:

புதுச்சேரி மூத்த வழக்கறிஞர் ஆர்.பலராமன் அவர்கள் மறைவுக்கு 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

மூத்த வழக்கறிஞர் ஆர்.பலராமன் (வயது 88) நேற்று (19.12.2024) உடல்நலம்குன்றி காலமானார்.

புதுச்சேரி மூத்த  வழக்கறிஞர் ஆர்.பலராமன் அவர்கள் கற்றுத் தேர்ந்த வழக்கறிஞர் என்பதோடு பல வழக்குகளைத் திறம்பட நடத்தியவர். 

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மறைந்த எஸ்.இராஜசூர்யா அவர்கள் தலைமையில் இயங்கிய காவலர் புகார் ஆணையத்தின் (Police Complaints Authority) உறுப்பினராக இருந்து பொறுப்புடன் பணியாற்றியவர். 

காவலர் புகார் ஆணையத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பல்வேறு புகார்கள் அளித்த போது அதன் மீது பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க உரிய உத்திரவுகள் வழங்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர். 

புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்திற்குக் குறிக்கோள்கள், விதிகளை உருவாக்கிப் பதிவு செய்ய காரணமாக இருந்தவர். 

அவரது மறைவு வழக்கறிஞர் சமூகத்திற்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வழக்கறிஞர்கள் உட்பட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, May 10, 2021

நீதிநாயகம் டி.கே.பாசு காலமானார்: ஆழ்ந்த அஞ்சலியும் இரங்கலும்..

சென்ற 08.05.2021 அன்று கொல்கத்தா உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டி.கே.பாசு காலமானார். மனித உரிமையில் ஆர்வமுள்ளவர்கள் இவரது பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது.

காவல் மரணங்களைத் தடுக்க உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பின் மனுதாரர் இவர். D.K.Basu Vs State of West Bengal (AIR 1997 SC 610). புகழ்ப் பெற்ற இவ்வழக்கு “டி.கே.பாசு வழக்கு” என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

கடந்த 26.08.1986 அன்று, மேற்குவங்க சட்ட உதவிகள் அரசு சாரா அமைப்பின் செயல் தலைவர் என்ற முறையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை டி.கே.பாசு எழுதுகிறார். அதில் கொல்கத்தாவில் அதிக அளவில் காவல் மரணங்கள் நிகழ்வது குறித்து ‘தி டெலிகிராப்’ இதழ் வெளியிட்ட செய்திகளைக் குறிப்பிட்டு, இக்கடிதத்தையே ரிட் மனுவாக (பொதுநல வழக்கு) ஏற்று விசாரிக்க வேண்டுமெனக் கோருகிறார்.

மேலும், காவல் மரண வழக்குகள் முறையாக நடத்தப்படுவதில்லை, இவ்வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், இக்குற்றங்கள் “செழிக்கின்றன” எனவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். அதோடு காவல் மரணங்கள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து “custodial jurisprudence” உருவாக்கவும் கோரியிருந்தார்.

கடந்த 09.02.1987 அன்று இக்கடிதத்தை ரிட் மனுவாக ஏற்று உச்சநீதிமன்ற அபோதைய தலைமை நீதிபதி பி.என்.பகவதி அவர்கள் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதேபோல், கடந்த 29.07.1987 அன்று அலிகார் வழக்கறிஞர் அசோக்குமார் ஜொகிரி பில்கானா என்ற ஊரில் காவல் நிலையத்தில் மரணமடைந்த மகேஷ் பிகாரி என்பவர் கொல்லப்பட்டதை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதனையும் மேற்சொன்ன டி.கே.பாசு வழக்கோடு சேர்த்து விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் கடந்த 14.08.1987 அன்று கீழ்க்காணும் உத்தரவைப் பிறப்பிக்கிறது:

“ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. தற்போது இக்குற்றச்சாட்டுகளான காவல் மரணங்கள், அதாவது செய்தித்தாள்கள் குறிப்பிடுவது போல லாக்-அப் மரணங்களின் அலைவரிசையும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அணுகுவதற்கு தற்போது போதிய கட்டுமானங்கள் (machinery) இல்லை. இக்கேள்வி பல்வேறு மாநிலங்கள் உள்ளடக்கிய அகில இந்திய அளவிலானது என்பதால், இதில் பல்வேறு மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் என்ன சொல்ல விரும்புகின்றனர் என்பதையும் பார்ப்போம். அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பவும், அதேபோல், இந்திய சட்ட ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி, இதுகுறித்து உரிய ஆலோசனைகளை இன்றைய நாளில் இருந்து இரண்டு மாதத்திற்குள் அளிக்க வேண்டுவோம்.”

இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கம், ஒரிசா, அசாம், இமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா, தமிழ்நாடு, மேகாலயா, மகாராஷ்ட்ரா, மணிப்பூர், யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகியவைத் தங்களது கருத்துக்களை உறுதிமொழிப் பத்திரமாக தாக்கல் செய்தன. இந்திய சட்ட ஆணையமும் தனது ஆலோசனைகளைத் தாக்கல் செய்தன. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.எம்.சிங்கி நீதிமன்றத்திற்கு உதவ நடுநிலை அறிவுரையாளராக (Amicus Curiae) நியமிக்கப்பட்டார்.

இவ்வழக்கில், கடந்த 18.12.1997 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குல்தீப் சிங், ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான இருநீதிபதிகள் அமர்வு வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை நீதிநாயகம் ஏ.எஸ்.ஆனந்த் எழுதினார். அத்தீர்ப்பில், ஒருவரைக் கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய 10 கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. இக்கட்டளைகளைக் காவல்நிலையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், இக்கட்டளைகளைப் பின்பற்றாத காவல் அதிகாரிகள் மீது அந்தந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து தண்டனைப் பெற்றுத் தரவும் உத்தரவிடப்பட்டது.

உச்சநீதிமன்றக் கட்டளைகளில் முகாமையானவை:

1) கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2) கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

3) கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4) கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5) தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்.

6) கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7) கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைச் செய்ய வேண்டும்.

8) கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

பின்னாளில் இந்தக் கட்டளைகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலேயே சேர்க்கப்பட்டன.

இந்தத் தீர்ப்பினால் காவல் மரணங்கள் முற்றிலும் ஒழியவில்லை என்றாலும், பெருமளவில் குறைந்தன. இதற்கு வித்திட்டவர்தான் “டி.கே.பாசு வழக்குப் புகழ்” நீதிநாயகம் டி.கே.பாசு அவர்கள். நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு சிறைவாசியின் கடித்தத்தையே வழக்காக ஏற்று சிறைவாசிகளுக்கு உரிமைகள் வழங்கி தீர்ப்பு வழங்கினார். அதே போல ஒரு நீதிபதியின் கடிதத்தை வழக்காக ஏற்றவர் உச்சநீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி நீதிநாயகம் பி.என்.பகவதி.

நீதிநாயகம் டி.கே.பாசு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கொல்கத்தா மற்றும் தேசிய சட்ட உதவிகள் அமைப்பின் தலைவராக இருந்தவர். 2006-இல் இலங்கையில் ஆசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை நீதிமன்றத்தின் பார்வையாளராக இருந்து செயல்பட்டவர். ‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்’ நிதியுதவியுடன் நடந்த இந்திய அளவிலான கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான பயிற்சித் திட்டத்தின் ஆலோசகராகவும் இருந்தார். ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமைப்பின் நிறுவுநர். அனைத்துலக அளவில் பல்வேறு கருத்தரங்களில் கலந்துகொண்டு சட்டத்தின் பல்வேறு அணுகுமுறைகள் குறித்து உரையாற்றிய சட்ட வல்லநர்.

2004-இல் தில்லியில் பொடா சட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கான ‘பொது விசாரணை’ நடைபெற்றது. இதில் நீதிபதியாக (Jury) கலந்துகொள்ள வந்தார் டி.கே.பாசு. அவரை ‘தோழமை’ தேவநேயன், கோ.சுகுமாரன் ஆகிய இருவரும் விமான நிலையத்தில் வரவேற்று தங்குடத்திற்கு அனுப்பி வைத்தோம். அமைதியான குணமுடையவராக இருந்தார்.

ஒரு ஆளுமை நிறைந்த சட்ட வல்லுநரை இழந்துள்ளோம். என் ஆழ்ந்த அஞ்சலியும் இரங்கலும்.. 

Tuesday, December 25, 2018

பிரபஞ்சன் எழுத்தாளர் மட்டுமல்ல, ஒரு செயற்பாட்டாளர்!

எழுத்தாளர் பிரபஞ்சன் 21.12.2018 அன்று காலை 11.30 மணிக்குக் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் வாழ்ந்த புதுச்சேரி, பாரதி வீதி – வ.உ.சி. வீதி சந்திப்பில் உள்ள பூர்வீக வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது இறுதி நிகழ்வு 23.12.2018 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தியதோடு, அதே இடத்தில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் பேசினேன்.  

‘எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுச் செய்தி அறிந்தவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என் 28 ஆண்டுக் கால நண்பர் அவர். அவருடனான நட்புக் குறித்துப் பேசினால் பலநாள் பேச வேண்டியிருக்கும். அவர் எல்லோரும் பேசியது போல சிறந்த எழுத்தாளர், படைப்பாளி, ஆளுமை, எல்லோரையும் சமமாக பாவிப்பவர். அதுமட்டுமல்ல, அவர் ஒரு செயற்பாட்டாளரும்கூட.

மண்டல் குழுப் பரிந்துரைப்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கினார். அப்போது, புதுச்சேரியில் ‘சமூக நீதிப் பேரவை’ சார்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடுக் கேட்டுப் போராட்டம் நடத்தினோம். அப்போழுது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரா.விசுவநாதன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவரின் சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவோம். அக்கூட்டங்களுக்குத் தவறாமல் வருவார். அதோடு போராட்டத் துண்டறிக்கைகள் எழுதிக் கொடுப்பார். அதைக் கொடுத்துவிட்டு, இதில் என்ன வேண்டுமானாலும் திருத்தம் செய்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார். அப்படிப்பட்ட ஜனநாயகவாதி அவர்.

காலையில் பேசிய அ.மார்க்ஸ் குறிப்பிட்டது போல, 1994-இல் இந்து முன்னணி அமைப்பினர் மிஷன் வீதியிலுள்ள புனித ஜென்மராக்கினி ஆலையம் சிவன் கோயிலை இடித்துவிட்டுக் கட்டியது என்று பிரச்சனையை எழுப்பினர். அதை இடிக்க வேண்டுமென்றும் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது, ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் “மசூதிக்குப் பிறகு மாதா கோயிலா” என்று ஒரு வெளியீடு கொண்டு வந்தோம். அதில் மாதா கோயில் சிவன் கோயிலை இடித்துவிட்டுக் கட்டவில்லை என்பதை ஆதாரங்களோடு நிறுவினோம். அந்த வெளியீட்டை வரலாற்று அடிப்படையிலான ஆதாரங்களைக் கொண்டு பிரபஞ்சன் எழுதினார். அ.மார்க்ஸ் அதற்கொரு முன்னுரை எழுதினார். அதன்பின்னர், இந்துத்துவ சக்திகள் அந்தப் பிரச்சனையைக் கைவிட்டனர். இன்று வரையில் அந்தப் பிரச்சனையை எழுப்பவில்லை.       

பிரபஞ்சன் ‘அப்பாவின் வேஷ்டி’ என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். அதில் அவரின் அப்பா கட்டிய பட்டுச் சரிகை வேட்டி கதையின் மையப் பொருள். பிரபஞ்சனின் அப்பா சாரங்கபாணி அவர்கள் வீட்டில் விஷேச நாட்களில் அந்தக் கதர்ப் பட்டு வேட்டியை கட்டிக் கொள்வது குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார். அந்த வேட்டி பெரிய அகன்ற அலமாரியில் பத்திரமாக இருக்குமாம். விஷேச நாட்களில் அவருடைய அப்பா அதை எடுத்துக் கட்டும் அழகுக் குறித்து அழகாக எழுதியிருப்பார். சிறுவயதில் அவருக்கு அந்த வேட்டியை கட்டிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்துள்ளது. அப்பா இறந்த பிறகு, வீட்டில் நடந்த ஒரு விஷேசத்தில், அதாவது பூஜையின்போது அந்த வேட்டியைக் கட்டிக் கொண்டு பூஜை செய்ய கீழே அமர்ந்துள்ளார். அந்த வேட்டி பின்பக்கமாக கிழிந்துப் போயுள்ளது. ‘பிறகு அந்த வேட்டியை மாற்றிவிட்டு பாலியஸ்டர் வேட்டியைக் கட்டினேன், அதுதான் நமக்கு சரிப்படும்’ என்றும் எழுதியிருப்பார். அப்பாவின் வேட்டியைக் கட்ட முடியாமல் போனதையும் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருப்பார்.

பிரபஞ்சன் தன் அப்பாவின் வேட்டியைக் கட்ட முடியாமல் போனதுபோலவே அவர் புதுச்சேரி பற்றி நிறைய எழுத வேண்டுமென்று எண்ணம் ஈடேறவில்லை. ஏற்கனவே, புதுச்சேரி பற்றிப் பத்தாயிரம் பக்கங்கள் எழுதியுள்ளார். இன்னும் பத்தாயிரம் பக்கங்கள் எழுதியிருப்பார். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

பிரபஞ்சன் மறைந்த செய்திக் கிடைத்த உடனேயே ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் அவரது உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்ய வேண்டுமென்று புதுச்சேரி அரசுக்குக் கோரிக்கை வைத்தேன். அதேபோல, ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’ மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. முதல்வர் நாராயணாசாமி எல்லோருடைய கோரிக்கையையும் ஏற்று பிரபஞ்சனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடத்தப்படும் என அறிவித்து, அதனைச் செயல்படுத்தி உள்ளார். அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்தாளர் பிரபஞ்சனின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கியவாதிகள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு என் வீரவணக்கம்.’  

Monday, February 07, 2011

திராவிட இயக்க சுயமரியாதை வீரர் தம்பு. சுப்ரமணி படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் திராவிட இயக்க சுயமரியாதை வீரர் தம்பு. சுப்ரமணி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு, 05.02.2011 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில்,புதுச்சேரி, நேதாஜி நகர்-2, ரங்கநாதன் வீதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

இதற்கு கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர் ஒவியர். இரா.இராஜராஜன், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவநர் சீ.சு.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன் தொடக்கவுரை ஆற்றினார்.

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி படத்தைத் திறப்பு வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.

இதில், சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் கோ.செ.சந்திரன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா. அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மாவட்டச் செயலர் ஐ.முகம்மது சலீம், புதுவை கிறிஸ்துவர் கூட்டமைப்பின் தலைவர் சாமி ஆரோக்கியசாமி, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், பெற்றோர், ஆசிரியர்,மாணவர் நலச் சங்கத் தலைவர் மு.நாராயணசாமி, புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் பா. சரவணன் செயலாளர் பா.சரவணன், ஆகியோர் கலந்துக் கொண்டு நினைவேந்தல் உரையாற்றினர்.

முடிவில் தம்பு. சுப்ரமணியின் மகனும், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினருமான சு. காளிதாஸ் நன்றி கூற நிகழ்வு முடிவு பெற்றது.;


தம்பு.சுப்ரமணி ( 20-11-1933 - 13-01-2011 )

புதுச்சேரி உப்பளம் நேத்தாஜி நகர் 2-ல் வாழ்ந்து வந்த திராவிட இயக்க சுயமரியாதை வீரர் திரு. தம்பு. சுப்ரமணி அவர்கள் சென்ற 13-01-2011 அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைவுற்றார். இவர் உப்பளம் பகுதி மக்களால் குரு என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

இளம் பருவத்தில் தந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் மீது பற்றுக் கொண்டு இறுதிநாள் வரையில் கொள்கை மாறாமல் வாழ்ந்தவர்.

அப்போதைய திராவிடர் கழகத் தலைவர்களான பாரதிதாசன், ம. நோயேல், புதுவைச் சிவம், ஏத்துவால் ரங்கசாமி, ப. கனகலிங்கம், அவுக்கா பெருமாள், சாமிநாதன் ஆகியோரோடு நெருங்கிப் பழகி பகுத்தறிவுப் பணியாற்றியவர். அப்போதைய புதுச்சேரி திராவிடர் கழகம் தீண்டாமைக்கு எதிராகப் போராடிய வரலாறு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கோயில் நுழைவுப் போராட்டம், மாதா கோயிலில் நடுக்கட்டை உடைப்புப் போராட்டம் போன்றவை ஒடுக்கப்பட்ட மக்கçள எழுச்சிப் பெற செய்தது.

உப்பளத்தில் உருவாக்கப்பட்ட தன்மதிப்புக் கழகத்தில் இணைந்து பணியாற்றியவர். 1955-ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள அழைத்து வந்து, எத்துவால் துய் மெர்த்தேன் திடலில் (தற்போது பெரியார் போக்குவரத்து கழகப் பணிமனை) தன்மதிப்புக் கழகம் திருவள்ளுவர் விழாவை நடத்தியது. அப்போது ஈஸ்வரன் கோயில் வீதியில் இருந்த விடுதியில் தங்கியிருந்த தந்தை பெரியாரை சந்தித்து உரையாடிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர். திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இவர் பகுத்தறிவு ஏடு, விடுதலை நாளிதழ் போன்றவற்றின் தீவிர வாசகராக இருந்தார்.

தன்மதிப்புக் கழகத் தோழர்கள் எத்துவால் ரங்கசாமி, தூய்ழான் தர்மசிவம், இராமகிருட்டிணன், எழிலன், பெரம்புக்கடை பெருமாள், தொல்காப்பியர், மாணிக்கவேல் சகேர் போன்றவர்களோடு இணைந்து பகுத்தறிவு கருத்துக்களைப் பரப்பியவர்.

மூலிகை மருத்துவத்திலும் புலமைப் பெற்று விளங்கியவர். நாய் கடிக்கு இவர் கொடுத்த மருந்தால் பலர் உயிர் பிழைத்ததை அப்பகுதி மக்கள் இன்றும் நினைவு கூர்கின்றனர்.

இவருக்கு மனைவி அஞ்சலை, காளிதாஸ், கார்த்திகேயன் ஆகிய மகன்களும், விமலா, விஜயா, வினோலியா ஆகிய மகள்களும் உள்ளனர். இதில் காளிதாஸ் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்புக் குழு உறுப்பினர். திரு. தம்பு. சுப்ரமணி அவர்கள் தந்தை பெரியார் வழியில் ஆற்றிய பணிகள் என்றும் மறக்கக்கூடியவை அல்ல. காலத்தால் நிலைத்து நிற்கும் அவரது கொள்கைப் பணிகளைப் போற்றுவோம். பின்பற்றுவோம்.

Sunday, November 08, 2009

டாக்டர் கே. பாலகோபால் எழுதிய "வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்" நூல் வெளியீடு!



மனித உரிமைப் போராளி டாக்டர் கே. பாலகோபால் மறைவையொட்டி மனித உரிமைக்கான மக்கள் கழகம் மற்றும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் "வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்" என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 30.10.2009 அன்று, புக்பாயிண்டில், மாலை 7 முதல் 9.30 மணிவரை நடந்த பாலகோபால் நினைவஞ்சலி கூட்டத்தில் இந்நூல் வெளியிடப்பட்டது. இந்நூலினை பேராசிரியர் அ.மார்க்ஸ் தொகுத்தும், மொழியாக்கமும் செய்துள்ளார்.

பாலகோபால் நேர்காணல் ஒன்றும், அவர் எக்னாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லியில் எழுதிய வன்முறை குறித்த கட்டுரை மொழியாக்கமும் நூலில் இடம்பெற்றுள்ளன.

நூலினை வழக்கம் போல் "புலம்" அமைப்பினர் நேர்த்தியாக தயாரித்துள்ளனர். 48 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ. 18/-

மனித உரிமைத் தளத்தில் ஆழமான தடம் பதித்த பாலகோபால் வன்முறை பற்றி கொண்டிருந்த கருத்து முழுமையாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது. வன்முறையற்ற அவரது கருத்தும் செயல்பாடுகளும் மனித உரிமை ஆர்வலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையற்ற வழிமுறைகளையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுவதோடு, வன்முறை குறித்த ஆழமான பார்வை முன்வைக்கிறார் பாலகோபால். தற்போது அவரின் வன்முறை பற்றிய கருத்து இந்திய அளவில் மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

நூல் கிடைக்குமிடம்:

புலம்,
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
பேசி: 97898 64555.
மின்னஞ்சல்: pulam2008@gmail.com

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு,
179-அ, (மாடி), மகாத்மா காந்தி வீதி,
புதுச்சேரி - 605 001.
பேச: 98940 54640.
மின்னஞ்சல்: peoples_rights@hotmail.com

மனித உரிமைக்கான மக்கள் கழகம்,
3/5, முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர், அடையாறு,
சென்னை - 600 020.
பேசி: 94441 20582.

Monday, July 13, 2009

சிந்தாநதி மரணம்: ஆழ்ந்த இரங்கல்!

சிந்தாநதி மரணச் செய்தி மிகவும் காலதாமதமாக வந்தடைந்தது. வீடு மாறியதால் இணைய இணைப்பு கிடைக்க ஏற்பட்ட காலதாமதம், ஒரு நல்ல பதிவரின் மரணத்திற்காக கூட அழ முடியாமல் செய்துவிட்டது.

சிந்தாநதி படைப்புகளை ஓரளவுக்கு படித்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், அவர் பரந்துப் பட்டு எல்லாவற்றையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவலுடையவர். அதை நோக்கியே எழுதினார்.

அவரது இழப்பு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக வலைப்பதிவர்கள் என அனைவருக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோ.சுகுமாரன், புதுச்சேரி.

Friday, November 28, 2008

சமூக நீதிப் போராளி வி.பி.சிங் காலமானார் - இரங்கல்!



மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் காலஞ்சென்ற வி.பி.சிங் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 28-11-2008 அன்று விடுத்துள்ள குறிப்பு:

அடித்தட்டு மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சமூக நீதிப் போராளி முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதோடு, இத்தருணத்தில் அவரது பாதையில் சமூக நீதிக்குப் போராட உறுதியேற்போம்.

மன்னர் குடும்பத்தில் உயர்வகுப்பில் பிறந்தவராக இருந்தாலும் மண்டல் குழு பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி, இந்திய வரலாற்றில் சமூக நீதிக்குப் புதிய பாதையை அமைத்தவர்.

ஈழத் தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கை சென்ற இந்தியப் படையைத் திரும்பப் பெற்றதன் மூலம் ஈழத் தமிழர் நலன் காத்தவர். பொற்கோவிலுக்குள் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்காக சீக்கிய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு அம்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.

பாபர் மசூதியை இடிக்கச் சென்ற மதவாத சக்திகளூக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்து மதசார்பின்மைக் கொள்கையைக் கடைபிடித்தவர். சமூக நீதிக்காகவும், மதவாதத்திற்கு எதிராகவும் போராடியதன் விளைவாக நாட்டின் உயர் பதவியான பிரதமர் பதவியையும் ஆட்சியையும் இழந்தவர்.

இந்திய வரலாற்றில் ஒற்றை ஆட்சிமுறை என்பதை மாற்றி மத்தியில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்து கூட்டாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர். வழக்கறிஞர், கவிஞர், ஓவியர், புகைப்படக் கலைஞர் என்பவற்றை எல்லாம் தாண்டி நேர்மையான மிகச் சிறந்த அரசியல் தலைவர்.

பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சித் தொண்டர்கள் மற்றும் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர் இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.

Wednesday, January 16, 2008

அஞ்சலி: ஓவியர் ஆதிமூலம் காலமானார் - அவரது கோட்டோவியங்கள் சில..







ஓவியர் ஆதிமூலம் வரைந்த கோட்டோவியங்கள். இவை www.saffronart.com என்ற தளத்திலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு நன்றி.

ஓவியர் ஆதிமூலம் அவர்களுக்கு இரங்கல் செய்தி

Tuesday, January 15, 2008

புகழ் பெற்ற ஓவியர் கே.எம். ஆதிமூலம் காலமானார்.


தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் கே.எம்.ஆதிமூலம் (வயது:70), 15-01-2008 செவ்வாய் இரவு 7.00 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு 16-01-2008 அன்று மாலை 4.00 மணியளவில் பெசண்ட் நகர் சுடுகாட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1938-ஆம் ஆண்டு திருச்சி, துறையூர் அருகேயுள்ள கீராம்பூர் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப் பருவம் முதற் கொண்டே ஓவி்யத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். இவர் பாடத்தை விட படத்திலேயே அதிக கவனம் செலுத்தினார்.

1959-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த உடனேயே சிற்பி தனபால் தொடர்பு ஏற்பட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரில் சேர்ந்தார். 1961-66 வரை அக்கல்லூரியில் பயின்று 'டிப்ளமா' பெற்றார்.

சென்னையில் இருந்த காலகட்டத்தில் தான் ஓவியர் ஆதிமூலத்திற்கு தமிழின் நவீன இலக்கியவாதிகள் பலரோடு தொடர்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுபத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றில் அவரது ஓவியங்கள் இடம்பெற்றன.

1966-இல் காந்தியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி காந்தியாரின் பல்வேறு பரிமாணங்களைக் வெளிப்படுத்தும் வகையில் 100 ஓவியங்களை வரைந்தார். அவர் அன்றைக்கு வரைந்த காந்தியாரின் ஓவியங்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. அதன்பின்னர், தமிழ்ச் சூழலில் ஓவியர் ஆதிமூலம் வரைந்த ஓவியங்கள் வலம் வந்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

லலித் கலா அகடாமியின் தேசிய விருது, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய மாநிலங்களின் ஓவிய சங்கங்களின் உயர் விருதுகள் உள்ளிட்டு ஏராளமான விருதுகளைப் பெற்றவர். ஓவியத் துறை சார்ந்த பல்வேறு பதவிகள் வகித்தவர்.

இவரது ஓவியங்கள் பல உலகப் புகழ் பெற்றவை. இவர் துருக்கி, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஓவியக் கலையைப் பரப்பியவர்.

இவரது ஓவியங்கள் தேசிய ஓவியக் கூடம், சென்னை அருங்காட்சியம் உட்பட பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவர் ஏராளமான ஓவிய முகாம்கள், பட்டறைகள் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு தன் ஆற்றலை வெளி உலகிற்குக் காட்டியுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் வெகுமக்கள் இதழ்களான 'ஜீனியர் விகடன்,''ஆனந்த விகடன்' போன்ற இதழ்களிலும் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இது போன்ற இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளிவந்தது இவரை மேலும் பிரபலப்படுத்தியது.

வண்ண ஓவியங்களிலும், வரைகலையிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் ஓவியர் ஆதிமூலம். 'நான் துரத்தும் நிலம்' என்ற தலைப்பில் வெளிவந்த அவரது தைல வண்ண ஓவியங்கள் வண்ணத்திற்கு வண்ணம் தீட்டுயவை. அவரது கோட்டு ஓவியங்கள் மிகப் பரபலமானவை.

'நான் நேரிடையான எனது படைப்புச் சக்தியை மட்டுமே சார்ந்திருக்கிறேன். இந்த அழகின் காட்சிப்படுத்துதலை அடிப்படையாக வைத்துதான் நான் பிறரது படைப்புகளைப் புரிந்துக் கொள்ளவும், எனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறேன்' என்று அவர் படைப்பாக்கம் பற்றி கூறியது அவரது அறிவடக்கத்தைக் காட்டுகிறது.

புள்ளிகளில் தொடங்கி கோடுகளில் உருவம் பெற்ற ஓவியர் ஆதிமூலத்தின் படைப்புலகம் கவனம் பெற்றவை. அவரின் கோட்டோவியங்கள் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க இயலாதது.

இதுபற்றி, 'அந்திமழை' இணைய இதழில் வெளிவந்த அவரது நேர்காணலில், "A Line immediately breaks the space’ ஒரு வெள்ளைப் பேப்பர்ல ஒரு dot வைச்சா அது ‘A planet in the space’ன்ற மாதிரியாயிடுதுல்ல. அந்தக் கோட்டை Horizontal ஆ left to right நீட்டினா தானாகவே மேலேயிருக்கிறது ‘Space’ கீழேயிருக்கிறது ‘land’ னு ஆயிடுது. ஒரு பேப்பர்ல புள்ளி வைச்சவுடனேயே அதோட flat surface போயிடுது. ஆதி மனிதன் அவனை கோடுகளில்தான் வெளிப்படுத்தினான். குகை ஓவியங்கள். அவன் வரைந்த விலங்குகள் வேட்டைக் கருவிகள் எல்லாமே கோடுகள்தான். கோடு, கோடுகளுக்கப்புறம்தான் எழுத்து, மொழி, இலக்கியம் எல்லாம். ஓவிய வெளிப்பாடுதான் மனித நாகரிகத்தின் முதல்படி, எறும்புகள் எப்படி வரிசையா போகுதோ அது மாதிரிதான் புள்ளிகளெல்லாம் ஒன்றாகி கோடாகுது. பல வருஷங்களா communicate பண்ணுது" என்று கூறியுள்ளது புள்ளியும், கோடும் அவரை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.

ஓவியர் ஆதிமூலம் அவர்களின் இழப்பு என்பது ஓவிய சமூகத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் வெகுமக்களுக்கும் தான்.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, November 03, 2007

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை: புதுச்சேரியில் வீரவணக்க மலரஞ்சலி நிகழ்வு





இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் குண்டு வீச்சில் வீரமரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு புதுச்சேரியில் நடைபெற்றது.

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 03-11-2007 சனியன்று காலை 10 மணிக்கு, அரியாங்குப்பம்-வீராம்பட்டினம் சாலை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் இர.தந்தைபிரியன் முன்னிலை வகித்தார். செயலாளர் சு.விஜயசங்கர், பொருளாளர் வீரமோகன் உட்பட அவ்வமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு அனைவரும் ஒரு நிமிடம் மவுனமாக இருந்து அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரியைச் சேர்ந்த ஏராளமான தமிழர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய சுப.தமிழ்ச்செல்வன் அவர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசைக் கண்டித்தும், தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி உட்பட இராணுவ உதவிகள் செய்யக் கூடாது என வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

"விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள், தழைத்தோங்கும் மரமாய் எழுவோம்; வீரவணக்கம்...வீரவணக்கம்...உலகத் தமிழர் நெஞ்சில் வாழும் சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம்...; ஆதரிப்போம்... ஆதரிப்போம்... தமிழீழத்தை ஆதரிப்போம்..." என வீர முழக்கமிட்டனர்.

இந்நிகழ்வில், சதீஷ், மணி, சுந்தர்,ஞானம் (பாட்டாளி மக்கள் கட்சி), சு.பாவணன், பா.அமுதவன், பொன்முடிபால் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), சடகோபன், செல்வராஜ் (மறுமலர்ச்சி தி.மு.க.), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ), இரா.அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), சி.மூர்த்தி (புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை), பா.சக்திவேல், பா.தினகர்ராஜ், கிருட்டினமூர்த்தி (மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம்), நா.மு.தமிழ்மணி (செந்தமிழர் இயக்கம்), கு.இராம்மூர்த்தி (செம்படுகை நன்னீரகம்), பொ.தாமோதரன் (புரட்சிப்பாவலர் இலக்கியப் பாசறை), பாவல் (வெள்ளையணுக்கள் இயக்கம்) உட்பட அனைத்துக் கட்சி, இயக்கத் தலைவர்கள் கலந்துக் கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

Wednesday, August 15, 2007

தினமணியின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் காலமானார் : அஞ்சலி


அரை நூற்றாண்டு காலமாகப் பத்திரிகை துறையில் பணியாற்றிய "தினமணி"யின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் காலமாகிவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெற்குப்பை என்ற சிறிய கிராமத்தில் பிறந்த இவர், மேலைச்சிவபுரியில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தன் தொடக்கக் கல்வியைத் தொடங்கி, மதுரை தியாகராசர் கல்லூரியில் பி.ஏ. படித்தார். பி.ஏ. தேர்வு முடிவு வருவதற்கு முன்னதாகவே, தனது 22-ஆம் அகவையில் மதுரையில் கருமுத்து தியாகராச செட்டியார் நடத்திய "தமிழ்நாடு" நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்து, மதுரையிலும் சென்னையிலும் நான்கு ஆண்டுகள் செய்தியாளராகப் பணிபுரிந்தார்.

பின்னர், 1960-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரான ராம்நாத் கோயங்கா நடத்திய செய்தி நிறுவனமான "இந்தியன் நியூஸ் சர்வீசில்" இணைந்து ஓராண்டு பணியாற்றினார். 1961-இல் "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில நாளிதழில் செய்தியாளராகப் பணியில் சேர்ந்தார்.

பின்னர், "தினமணி"யின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தினமணி ஆசிரியராகப் பதவியேற்று 9 ஆண்டுகள் பணியாற்றினார். தினமணி ஆசிரியராக இருந்தபோது, சென்னை "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" உறைவிட ஆசிரியராகவும் ஓராண்டு காலம் கூடுதல் பொறுப்பு வகித்தார். 2004-இல் தனது 69-ஆம் அகவையில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்றார்.

கல்லூரிக் காலம் தொடங்கிப் பெரியார் பற்றாளரான இவர், தீவிர கடவுள் மறுப்பாளராக வாழ்ந்தார். தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளைப் புறந்தள்ளி வந்தார். தமிழ்ப் பற்றாளர். அவர் கொண்ட கொள்கைகள் அவ்வப்போது பத்திரிகையில் வெளிப்படுவதுண்டு. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நல்ல புலமை உடையவர்.

இராம.திரு.சம்பந்தம் பற்றி எனக்குப் பல்வேறு தகவல்களைக் கூறி அறிமுகப்படுத்தியவர் தற்போது பி.பி.சி. தமிழோசையின் பொறுப்பாளராக இருக்கும் மணிவண்ணன். இராம.திரு.சம்பந்தம் அவர்களுடனான என் நட்பு மிகவும் நெருக்கமானதோடு, பாசப் பிணைப்புக் கொண்டது.

2000-ஆவது ஆண்டு சந்தன வீரப்பன் பிடியிலிருந்து கன்னட நடிகர் இராஜ்குமார் மீட்கப்பட்டு, நாங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய சில நாட்களில், சென்னையில் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் மகள் அமலாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் நான் கலந்துக் கொண்டேன். அப்போது "இந்தியன் எக்ஸ்பிரஸ்" தலைமைச் செய்தியாளராக இருந்த கோலப்பன் எங்களிடம் வந்து, என்னையும், பேராசிரியர் கல்யாணியையும் (தற்போது கல்விமணி) இராம.திரு.சம்பந்தம் சந்திக்க வேண்டும் என்றுகூறி, அண்ணா சாலையில், "எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ்" வளாகத்திலிருந்த "தினமணி" அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவ்ர் "தினமணி"யின் ஆசிரியர்.

அங்கு ஆசிரியருக்கானத் தனி அறையில் நானும் கல்யாணியும் அவரைச் சந்தித்தோம். நடிகர் இராஜ்குமார் மீட்பு தொடர்பானச் செய்திகளை அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார். அப்போது இரவு 8.30 மணியிருக்கும். "பொதுவாக இந்த நேரத்தில் யாரையும் சந்திக்கமாட்டேன், வேலை பளு அதிகமாக உள்ள நேரமிது, பக்கங்களை முடிக்க வேண்டும், இருந்தாலும் உங்களைச் சந்திக்கிறேன்" என்று கூறினார். அவர் சாப்பிட கொண்டு வந்த உணவை எங்களுக்குப் பகிர்ந்தளித்தார்.

அப்போது கல்யாணி, தான் எழுதிய கிராமப்புற இடஓதுக்கீடு பற்றிய கட்டுரையை "தினமணி"யில் வெளியிட முடியுமா? என்று கேட்டு, கட்டுரையை அவரிடம் கொடுத்தார். அதைப் பார்த்த அவர் "பெரியதாக இருக்கிறது, இப்போது கட்டுரைப் பக்கத்தை இரண்டு பகுதியாகப் பிரித்துவிடோம். சுறுக்க முடியமா? சுகுமாரன் இதை "எடிட்" செய்து தாருங்கள்" என்று கூறினார். அவரது அறைக்குள் அவரது மேசையிலேயே அக்கட்டுரையை "எடிட்" செய்துக் கொடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு, "சரியாக இருக்கிறது, வெளியிடுகிறேன்" என்றுகூறி இரண்டு நாள் கழித்து வெளியிட்டார்.

பத்திரிகைத் துறையில் "பெரிய ஜாம்பாவனாக" கருதப்படும் இராம.திரு.சம்பந்தம் என்மீது நம்பிக்கை வைத்து, எனக்கு அப்பணியை அளித்தது அப்போது எனக்குப் பெருமையாக இருந்தது.

அதன்பின்னர், பல சந்தர்ப்பங்களில் அவரை நேரில் சந்தித்து உரையாடியுள்ளேன். அடிக்கடி தொலைபேசியில் அழைத்துப் பல்வேறு தகவல்கள் கூறியுள்ளேன். பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்றபின், அவரோடு ஒன்றிரண்டு முறைதான் பேச முடிந்தது. நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தபோது அவரைச் சென்று பார்க்க முடியாமல் போய்விட்டது.

14-08-2007 அன்று காலை 10 மணியளவில், "தினமணி"யின் புதுச்சேரி செய்தியாளர், அவர் இறந்துவிட்ட செய்தியைக் கூறினார். அதிர்ச்சியாக இருந்தது. இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என்று எண்ணி சென்னைக்குத் தொடர்புகொண்டேன். அவரது இரு கண்களையும் இராஜன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் அகற்றிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். அவர் தன் இரு கண்களையும் தானம் செய்துள்ளார். மேலும், தன் உடலை இராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொடையாக அளித்துள்ளார். இறந்த ஆறு மணி நேரத்திற்குள் உடலை மருத்துவமனைக்கு ஒப்படைத்துவிட வேண்டும் என்பதால் அவரது உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆகையால், அவரது உடலைப் பார்க்க முடியாமல் போய்விட்டது.

தமிழகத்தின் பல தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்கு என் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் அவரது மனைவி கண்ணாத்தாள் அவர்களுக்கும், உறவினர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் கடைசி வரையிலும் பத்திரிகையாளராகவே இருந்தார் என்பதற்குச் சான்று அவரைப் பற்றிய குறிப்பை அவரே, தனக்குப் பிடித்த கறுப்பு மையால் நல்ல ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார்.

தமிழகத்தில் பல செய்தியாளர்களை உருவாக்கிய இராம.திரு.சம்பந்தம், இளைய சமுதாயத்திற்குச் சிறந்த முன்மாதிரி. அவரது கடுமையான உழைப்பு அனைவரும் பின்பற்ற வேண்டியது.

காலம் ஒரு தலை சிறந்த பத்திரிகையாளரைக் கொண்டு சென்றுவிட்டது.

Saturday, June 30, 2007

தமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்


பகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட்டம் என தன் வாழ்நாளை தமிழ்ச் சமூகத்திற்கு ஈகம் செய்த புலவர் கு.கலியபெருமாள் 16-05-2007 அன்று நம்மை விட்டுப் பிரிந்தார். அவருக்கு எம் வீரவணக்கம்.

புலவரின் உடல் பெண்ணாடம் அருகேயுள்ள அவரது சொந்த ஊரான சௌந்தரசோழபுரத்தில் அவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் விதைக்கப்பட்டது. 22-2-1970-இல் தோழர்கள் சர்ச்சில், கணேசன், காணியப்பன் வீரமரணம் எய்திய அதே இடத்தில் புலவரின் உடல் விதைக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்விடம் `தென்னஞ்சோலை செங்களம்' என அழைக்கப்படுகிறது.

01-07-2007 ஞாயிறன்று மதியம் 3-00 மணியளவில் சௌந்தரசோழபுரம் `செங்களத்தில்' புலவர் கு.கலியபெருமாள் அவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கல்லறை கல்வெட்டு திறப்பு, படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மாலை 6 மணியளவில் பெண்ணாடம் வானொலித் திடலில் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழின உணர்வாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், அவரது குடும்பத்தினர் என பலதரப்பினர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்த உள்ளனர்.

தானும், தன் குடும்பத்தினரும் கடும் அடக்குமுறையைச் சந்தித்தும் உறுதிகுலையாமல் இறுதிவரை ஓர் போராளியாக வாழ்ந்த புலவர். கு.கலியபெருமாள் போன்ற புரட்சியாளர் தமிழகத்தில் இதுவரையில் எவரும் இருந்ததில்லை. வரும் காலங்களில் தோன்றுவதற்கான அறிகுறியும் தென்படவில்லை.

தூக்குக் கயிறு எந்நேரமும் தன் கழுத்தை இறுக்கிக் கொல்லலாம் என்ற சூழலில்கூட கொள்கையில் உறுதியாக இருந்தவர் புலவர்.

``ஓர் அடிப்படைச் சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால், என் உயிரைக் காக்க கருணை மனு கொடுக்கும் அளவுக்கு தாழ்ந்து போக முடியவில்லை...''

- புலவர் கு. கலியபெருமாள்.


தமிழகப் புரட்சியாளர்கள் அனைவரும் தங்கள் தந்தையை இழந்து நிற்கின்றனர்.

``சாவிலிருந்துதான் வாழ்வு பிறக்கிறது''

- லியோனார்ட் பெல்டியர்.


(செவ்விந்திய பழங்குடியின மக்களின் உரிமைக்காகப் போராடி 35 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் வாடிக் கொண்டிருப்பவர்.)

Sunday, February 18, 2007

திரு.சாகரன் அவர்களுக்கு இரங்கல்!

அறிமுகம் இல்லாவிட்டாலும், வலை வரலாற்றில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய தேன்கூடு வலைதிரட்டியின் நிறுவநர் திரு.சாகரன் அவர்கள், திடீரென கடந்த 11-02-2007 அன்று மாரடைப்பால் மரணமடைந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவி்த்துக் கொள்கிறேன்.

- கோ.சுகுமாரன்.