Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Tuesday, June 22, 2021

இலங்கையில் சீனா துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.06.2021) விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை அம்பாந்தோட்டை பகுதியில் சீன அரசு துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்திய பெருங்கடலில் சூயஸ் கால்வாய் அருகேயுள்ள மலாக்கா நீரிணைப்புக்கு அருகில் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது. இத்துறைமுகத்தை சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு 1.12 மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. இத்துறைமுகம் 4500 எண்ணெய் கப்பல்கள் உட்பட 36 ஆயிரம் கப்பல்களைக் கையாளும் வசதி உடையது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டியுள்ள 269 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தி, அதில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக சீனாவுக்கு வழங்கிட இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் சீனா கடற்படைத்தளம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் அமையுமானால், அது இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். சீனா இலங்கைக் கடற்பகுதியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதால் தமிழகத்திற்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இறுதிப் போரின் போது ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு சீனா இராணுவ ரீதியாக பெருமளவில் உதவியது. தற்போது தமிழகம் அருகில் சீன துறைமுகம் அமைவது தமிழகத்தின் நலனுக்கு எதிரானது.

இச்சூழலில் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட தமிழ்நாட்டின் பகுதியான கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மீனவர்களின் நலனைக் காக்கவும், தமிழ்நாட்டின் மீதான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் உதவும்.

எனவே, இலங்கை அம்பாந்தோட்டை பகுதியில் சீன அரசு துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

Sunday, June 06, 2021

+2 தேர்வு முற்றிலும் ரத்து: கிராமப்புற மாணவர்களுக்கு அநீதியானது!

தமிழ்நாடு அரசின் +2 தேர்வு ரத்து என்ற அறிவிப்பு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்தானது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு (NEET, JEE) மூலம் உயர்கல்விச் சேர்க்கை நடத்தாமல் இருக்கவும் முடியாது. மத்திய பாஜக அரசு இதில் உறுதியாக இருக்கிறது. கல்வி மத்திய பட்டியலில் இருப்பதால் மாநில அரசு தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது.

நீட் நுழைவுத் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீண்ட காலம் ஆகும். அதன் பின் தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையின் மீது கொள்கை முடிவெடுத்து செயல்படுத்த இன்னும் காலதாமதம் ஏற்படும். இதுவொரு வகையில் நீட்டை தடுக்க சட்ட ரீதியாக எடுக்கும் முயற்சியாக கருதினாலும், அது உடனே நடக்கக்கூடிய சாத்தியக்கூறு இல்லை.

நுழைவுத் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவித்தார் பிரதமர் மோடி என்ற கல்வியாளர்களின் கருத்தும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு +2 தேர்வை ரத்து செய்திருப்பது ஏற்புடையதல்ல. நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே சேர்க்கை நடக்குமானால் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் நிலைக் கவலைக்குரியதாகும். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு ஓரளவுக்குப் பயனளித்தாலும் அது போதுமானதல்ல.

மதிப்பெண் போடுவதில் நிறைய குளறுபடிகள், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. அரசிடம் மதிப்பெண் போடுவது பற்றி ஒரு தெளிவான கொள்கை இதுவரையில் இல்லை. இதில் அரசுக்குப் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் வரும். பள்ளிகளிடம் மதிப்பெண் போடும் பணியை ஒப்படைத்தால், அதில் சமநிலை இருக்க வாய்ப்பில்லை. இது மேலும் மாணவர்களின் கல்வியையும் மனநிலையையும் பாதிக்கக்கூடும்.

கல்வியாளர்கள் கூறுவது போல தேர்வு வைத்து, அதன் அடிப்படையில் உயர்கல்விச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். குறைந்த பாடத் திட்டத்துடனும், நேரம் குறைத்தும் தேர்வு நடத்தி இருக்கலாம். அதிக தேர்வு மையங்களை உருவாக்கி, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தி இருக்கலாம். விடைத்தாள் திருத்தம்கூட சற்று தாராளமாக திருத்தி இருக்கலாம்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டதற்கு 60% பேர் தேர்வு நடத்த வேண்டுமென கூறியுள்ளனர். அதேபோல், அகரம் அமைப்பு சார்பில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600 மாணவர்களிடம் கருத்துக் கேட்டதற்குத் தேர்வு நடத்த வேண்டுமென 67% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த 600 மாணவர்களும் அகரம் அமைப்பிடம் கல்வி நிதியுதவிக் கேட்டு விண்ணப்பித்த ஏழை, எளிய மாணவர்கள். அதோடு, இதுகுறித்து தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தேர்வு நடத்த வேண்டுமென பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

தற்போதைய முடிவு மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள கூடாது என்று தமிழ்நாடு அரசு எடுத்த முடிவாகவே தெரிகிறது. மேலும், இம்முடிவு தனியார் பள்ளிகள் போன்ற மேல்தட்டினர் பயிலும் பள்ளிகளுக்கு உவப்பாகவும் வாய்ப்பாகவும் அமையும். நுழைவுத் தேர்வு என்ற ஒற்றை இலக்கில் மாணவர்களைத் தயார்படுத்தி உயர்கல்வியைக் கைப்பற்றும் சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிகளின் நோக்கத்திற்கு வலுசேர்ப்பதாகும்.

ஏற்கனவே கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விநிலை மிகவும் பின்தங்கிய நிலையியே உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இம்முடிவு கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும் பாதகமாகவே அமையும்.

இந்தச் சூழ்நிலையில், கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியில் குறைந்தது 25% இடஒதுக்கீடு கோருவது சரியானதாக இருக்கும் எனப் பேராசிரியர் பிரபா.கல்விமணி கூறினார். இந்த இடஒதுக்கீடு நிதியுதவி பெரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றார். இத்தேர்வு ரத்து அறிவிப்பு எப்படி கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்குத் தடையாக இருக்கும் என்பதை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கவலையுடன் விளக்கினார்.

கிராமப்புற ஏழை, எளிய, அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் காக்க நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது. இதுகுறித்து அனைத்து கட்சிகளும் ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

Sunday, May 09, 2021

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமனம்: வாழ்த்துகள்!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக (Advocate General) மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

1995-இல் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு எதிராக குற்றப் புகார் ஒன்றைத் தயாரித்தற்காக ரவுடிகளால் தாக்கப்பட்டார்.

2002-இல் திமுகவின் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் தமிழக அரசின் அரசு வழக்கறிஞராக (State Public Prosecutor) பணியாற்றி உள்ளார்.

கற்றுத் தேர்ந்த திறமையான வழக்கறிஞர். மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் அவர்களின் ஜீனியர். பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி உள்ளார். நீதித்துறை அகாடமியில் (Judicial Academy) புதுதாக பணியில் சேரும் நீதிபதிகளுக்குச் சட்ட வகுப்புகள் எடுக்கும் நிபுணர்களில் ஒருவர். மேலும், அனைத்துலக அளவிலும் பல்வேறு கருத்தரங்களில் கலந்துகொண்டு உரையாற்றி உள்ளார்.

2000-இல் இவருடன் நேரடியாக பழக்கம் ஏற்பட்டது. சந்தன வீரப்பன் கன்னட நடிகர் இராஜ்குமாரை கடத்தி வைத்திக் கொண்டு வைத்த கோரிக்கைகள் பல. அதில் மைசூர் நடுவண் சிறையில் ஒன்பதரை ஆண்டுகளுக்கும் மேலாக தடா சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த 12 பெண்கள் உட்பட 124 தமிழர்களின் விடுதலைக் கோரிக்கை முக்கியமானது. வீரப்பனுக்கு உதவியதாக போடப்பட்ட பொய் வழக்கில் விசாரணை இன்றி சிறையில் வாடினர்.

வீரப்பன் கோரிக்கையை ஏற்று 124 தடா சிறைவாசிகளைப் பிணையில் விடுதலை செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து வீரப்பனால் கொல்லப்பட்ட அதிரடிப்படை காவல் உதவி ஆய்வாளர் ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தடா சிறைவாசிகள் 124 பேர், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த சிறைவாசிகள் 5 பேர் என யாரையும் விடுதலை செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சிக்கலான இச்சூழலில் மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் அவர்களிடத்தில் அய்யா பழ.நெடுமாறன் உடன் சென்று விவாதித்தோம். வழக்கு விசாரணையை நடத்தி அனைவரையும் விடுதலை செய்ய யாரும் தடை செய்ய முடியாது எனக் கூறினார். அதோடு, தனி நீதிமன்றம் அமைத்து விரைந்து வழக்கை முடிக்கலாம் (Speedy trial) எனக் கூறி உச்சநீதிமன்றத்தின் 8 தீர்ப்புகளை நகலெடுத்துக் கொடுத்தார்.

இந்த முடிவோடு பழ.நெடுமாறன், கல்யாணி, கோ.சுகுமாரன் ஆகிய நாங்கள் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களைக் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். முன்னதாக எத்தனை மாதத்தில் மைசூர் தடா வழக்கை முடிக்கக் கேட்கலாம் என பழ.நெடுமாறன் அய்யா கேட்ட போது ஒரு மாதத்தில் முடிக்கக் கேட்போம் என்று சொன்னேன். அதேபோல், முதலமைச்சரிடம் கேட்டோம். அவர் சரியென ஒப்புக் கொண்டார். ‘நான் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களிடம் பேசுகிறேன். நீங்களும் அவரிடம் சொல்லுங்கள்’ என்றார். அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக முதலமைச்சர். பின்னர், நான் பெங்களூர் சென்று முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களைச் சந்த்திதேன். அவரும் இம்முடிவுக்கு ஒப்புக் கொண்டார்.

இதுபோன்று வீரப்பன் வைத்த கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வுக் கண்டு, அதை இரு மாநில முதலமைச்சர்களிடம் எடுத்துக் கூறி உறுதிமொழிப் பெற்றோம். வீரப்பனிடம் இத்தீர்வுகளை எடுத்துக்கூறி, அவற்றை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று உறுதியளித்தோம். இதனை ஏற்றுதான் வீரப்பன் கன்னட நடிகர் இராஜ்குமாரை விடுவித்தார்.

ஏற்கனவே தடா வழக்குகளைத் தமிழ்நாடு பழங்குடிகள் மக்கள் சங்கம், மக்கள் கண்காணிப்பகம், சோகோ அறக்கட்டளை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் வழக்கறிஞர்கள் நடத்தி வந்தனர். எங்களது கோரிக்கையை ஏற்று கர்நாடக அரசு தடா வழக்கை விரைந்து முடிக்க அமர்வு நீதிபதி கிருஷ்ணப்பா (இவருக்கு Conviction Krishnappa என்ற அடைமொழி உண்டு) தலைமையில் தனி நீதிமன்றம் ஒன்றை (Special Court) மைசூரில் அமைத்தது. அதாவது இவர் தண்டனை அளிக்கும் மனநிலையுள்ள நீதிபதி.

மேற்சொன்ன அமைப்புகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் (ஆந்திரா), வேணுகோபால் (மைசூர்), வின்சென்ட் (மதுரை) உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வழக்கை நடத்தினர். பழ.நெடுமாறன் கூடுதலாக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இவ்வழக்கில் ஆஜராகி நடத்தினால் நல்லது என்று முடிவெடுத்தார். அதன் அடிப்படையில், இவ்வழக்கில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார்.

சென்னையில் இருந்து மைசூருக்கு அழைத்துச் சென்று வரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் சென்னையில் அதிகாலை சதாப்தி அதிவிரைவு தொடர் வண்டியில் புறப்படுவோம். சென்னை – மைசூர் 7 மணிநேரம் பயணம். மூத்த வழக்கறிஞர் என்று பாராமல் அவரிடம் வழக்குக் குறித்து கேள்விகள் கேட்பேன். அவர் நிதானமாக எல்லாவற்றுக்கும் பதில் சொல்வார்.

தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு இரண்டே மாதத்தில் வழக்கு முடிந்தது. தடா வழக்கில் இருந்து 108 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 4 பேருக்கு வாழ்நாள் சிறை. மீதமுள்ளவர்களுக்குக் குறைந்த ஆண்டுகள் தண்டனை. அவர்கள் ஒன்பதரை ஆண்டுகள் சிறையில் கழித்ததால் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்தில் இருந்ததும், தடா சிறைவாசிகள் விடுதலையாகி எங்களுக்கு நன்றி சொன்னதும் மறக்க முடியாத தருணம்.

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான், ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள் மிகுந்த துயரத்துடன் சிறையில் வாடிய அப்பாவி தமிழர்களின் விடுதலைக்கு வித்திட்டது.

இந்நினைவுகளுடன் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.