Tuesday, December 25, 2018

பிரபஞ்சன் எழுத்தாளர் மட்டுமல்ல, ஒரு செயற்பாட்டாளர்!

எழுத்தாளர் பிரபஞ்சன் 21.12.2018 அன்று காலை 11.30 மணிக்குக் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் வாழ்ந்த புதுச்சேரி, பாரதி வீதி – வ.உ.சி. வீதி சந்திப்பில் உள்ள பூர்வீக வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது இறுதி நிகழ்வு 23.12.2018 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தியதோடு, அதே இடத்தில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் பேசினேன்.  

‘எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுச் செய்தி அறிந்தவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என் 28 ஆண்டுக் கால நண்பர் அவர். அவருடனான நட்புக் குறித்துப் பேசினால் பலநாள் பேச வேண்டியிருக்கும். அவர் எல்லோரும் பேசியது போல சிறந்த எழுத்தாளர், படைப்பாளி, ஆளுமை, எல்லோரையும் சமமாக பாவிப்பவர். அதுமட்டுமல்ல, அவர் ஒரு செயற்பாட்டாளரும்கூட.

மண்டல் குழுப் பரிந்துரைப்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கினார். அப்போது, புதுச்சேரியில் ‘சமூக நீதிப் பேரவை’ சார்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடுக் கேட்டுப் போராட்டம் நடத்தினோம். அப்போழுது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரா.விசுவநாதன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவரின் சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவோம். அக்கூட்டங்களுக்குத் தவறாமல் வருவார். அதோடு போராட்டத் துண்டறிக்கைகள் எழுதிக் கொடுப்பார். அதைக் கொடுத்துவிட்டு, இதில் என்ன வேண்டுமானாலும் திருத்தம் செய்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார். அப்படிப்பட்ட ஜனநாயகவாதி அவர்.

காலையில் பேசிய அ.மார்க்ஸ் குறிப்பிட்டது போல, 1994-இல் இந்து முன்னணி அமைப்பினர் மிஷன் வீதியிலுள்ள புனித ஜென்மராக்கினி ஆலையம் சிவன் கோயிலை இடித்துவிட்டுக் கட்டியது என்று பிரச்சனையை எழுப்பினர். அதை இடிக்க வேண்டுமென்றும் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது, ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் “மசூதிக்குப் பிறகு மாதா கோயிலா” என்று ஒரு வெளியீடு கொண்டு வந்தோம். அதில் மாதா கோயில் சிவன் கோயிலை இடித்துவிட்டுக் கட்டவில்லை என்பதை ஆதாரங்களோடு நிறுவினோம். அந்த வெளியீட்டை வரலாற்று அடிப்படையிலான ஆதாரங்களைக் கொண்டு பிரபஞ்சன் எழுதினார். அ.மார்க்ஸ் அதற்கொரு முன்னுரை எழுதினார். அதன்பின்னர், இந்துத்துவ சக்திகள் அந்தப் பிரச்சனையைக் கைவிட்டனர். இன்று வரையில் அந்தப் பிரச்சனையை எழுப்பவில்லை.       

பிரபஞ்சன் ‘அப்பாவின் வேஷ்டி’ என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். அதில் அவரின் அப்பா கட்டிய பட்டுச் சரிகை வேட்டி கதையின் மையப் பொருள். பிரபஞ்சனின் அப்பா சாரங்கபாணி அவர்கள் வீட்டில் விஷேச நாட்களில் அந்தக் கதர்ப் பட்டு வேட்டியை கட்டிக் கொள்வது குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார். அந்த வேட்டி பெரிய அகன்ற அலமாரியில் பத்திரமாக இருக்குமாம். விஷேச நாட்களில் அவருடைய அப்பா அதை எடுத்துக் கட்டும் அழகுக் குறித்து அழகாக எழுதியிருப்பார். சிறுவயதில் அவருக்கு அந்த வேட்டியை கட்டிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்துள்ளது. அப்பா இறந்த பிறகு, வீட்டில் நடந்த ஒரு விஷேசத்தில், அதாவது பூஜையின்போது அந்த வேட்டியைக் கட்டிக் கொண்டு பூஜை செய்ய கீழே அமர்ந்துள்ளார். அந்த வேட்டி பின்பக்கமாக கிழிந்துப் போயுள்ளது. ‘பிறகு அந்த வேட்டியை மாற்றிவிட்டு பாலியஸ்டர் வேட்டியைக் கட்டினேன், அதுதான் நமக்கு சரிப்படும்’ என்றும் எழுதியிருப்பார். அப்பாவின் வேட்டியைக் கட்ட முடியாமல் போனதையும் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருப்பார்.

பிரபஞ்சன் தன் அப்பாவின் வேட்டியைக் கட்ட முடியாமல் போனதுபோலவே அவர் புதுச்சேரி பற்றி நிறைய எழுத வேண்டுமென்று எண்ணம் ஈடேறவில்லை. ஏற்கனவே, புதுச்சேரி பற்றிப் பத்தாயிரம் பக்கங்கள் எழுதியுள்ளார். இன்னும் பத்தாயிரம் பக்கங்கள் எழுதியிருப்பார். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

பிரபஞ்சன் மறைந்த செய்திக் கிடைத்த உடனேயே ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் அவரது உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்ய வேண்டுமென்று புதுச்சேரி அரசுக்குக் கோரிக்கை வைத்தேன். அதேபோல, ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’ மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. முதல்வர் நாராயணாசாமி எல்லோருடைய கோரிக்கையையும் ஏற்று பிரபஞ்சனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடத்தப்படும் என அறிவித்து, அதனைச் செயல்படுத்தி உள்ளார். அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்தாளர் பிரபஞ்சனின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கியவாதிகள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு என் வீரவணக்கம்.’