Monday, July 05, 2010

உத்தபுரம் (மதுரை), டொம்புச்சேரி, பெரியகுளம் (தேனி) ஆகிய பகுதிகளில் தொடரும் சாதி வெறியும் அரசின் அலட்சியமும்!

உண்மை அறியும் குழு அறிக்கை

கீழே கையொப்பமிட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களாகிய நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரு ஊர்களுக்கும் நேற்று (ஜுலை 4, 2010) சென்று மக்களைச் சந்தித்தோம். தொடர்புடைய காவல் நிலையங்களுக்குச் சென்று வழக்கு விவரங்களையும் அறிந்து கொண்டோம்.

உத்தபுரத்தைப் பொறுத்தமட்டில் சுவர் இடிக்கப்பட்டது தொடங்கி இதுவரை மும்முறை அங்குச் சென்று வந்துள்ளோம். தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டு சுமார் ஒன்றரையாண்டு ஆன பின்னும் கூட இன்றும் அவ்வழியே தாழ்த்தப்பட்டவர்களின் (பள்ளர்), வாகனப் போக்குவரத்தை ஆதிக்கச் சாதியினர் (பிள்ளைமார்கள்) அனுமதிக்கவில்லை. “உத்தமபுரம் என்கிற பெயர்ப் பலகையுடன் வளைவு அமைத்து அதில் வாகனங்கள் சென்று வர ஏற்பாடு செய்யப்படும்” என முதல்வர் கருணாநிதி வாக்களித்திருந்தும் கூட இதுதான் இன்றைய நிலை. சென்ற சில நாட்களுக்கு முன் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு சிலர் ஒரு ஆட்டோவில் போலீஸ் துணையுடன் ஒரே ஒரு முறை சென்று வந்ததையே பெரிய ‘சாதனை’யாகச் சொல்லக் கூடிய அளவுக்கு அங்கே நிலைமை மோசமாக உள்ளது. அரசு எந்த வகையிலும் நிலமையைச் சீர் செய்து 1) உடைந்த சுவர் வழியே வாகனப் போக்குவரத்தை ஏற்படுத்தவோ 2) பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள கோயில் அருகிலுள்ள ஆல மரத்தைச் சுற்றி வந்து பள்ளர்கள் முளைப் பாறி எடுக்கும் நிலையை மீண்டும் ஏற்படுத்தவோ 3) பேருந்து நிறுத்தத்தில் ‘ஷெல்ட்டர்’ ஒன்றைக் கட்டவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மாறாக சர்ச்சைக்குரிய கோயிலில் பிள்ளைமார்கள் மட்டும் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் திரு. டி.கே.ரங்கராஜன் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் இதற்கு வழங்கிய ரூ. 3.5 லட்சத்தைச் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

'ஷெல்ட்டர்’ கட்டும் முயற்சியை இப்படி முறியடித்ததோடு பள்ளர்கள் பேருந்திற்காக காத்திருக்கும் போது அமரக் கூடிய சாக்கடையை ஒட்டிய கட்டைச் சுவரின் மீது சென்ற சில நாட்களுக்கு முன் (ஜீன் 17) சாக்கடையை வாரி கொட்ட பிள்ளைமார்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தங்கள் பகுதியில் வந்தடையும் அந்தச் சாக்கடைக்கு உரிய வடிகால் அமைத்துத் தர வேண்டும் என்பது பள்ளர்களின் கோரிக்கையாக இருந்த போதும், காவல்துறையின் பார்வையிலேயே இப்படி நடந்துள்ளது. பள்ளர்கள் மத்தியில் பிளவு ஒன்றையும் காவல்துறையினர் திட்டமிட்டு உருவாக்கி மாரிமுத்து என்ற அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் பிள்ளைமார்களுமாக அதைச் செய்துள்ளனர். பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் புஷ்பம் குடும்பத்தினரை திட்டமிட்டு காவல்துறையினர் பள்ளர்களிடமிருந்துப் பிரித்து எதிராக நிறுத்தியுள்ளனர். இதன்மூலம் இரு சாதிகளிடையேயான பிரச்சினையை பள்ளர்களுக்கு இடையிலான பிரச்சனைப் போல முன்வைக்கின்றனர். எழுமலை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் இந்த தோரணையிலேயே எங்களிடம் பேசினார்.

உட்காரும் கட்டைச் சுவர் மீது போடப்பட்ட சாக்கடையை அள்ள வேண்டும் என பள்ளர்கள் திரண்டு வந்து கேட்டபோது காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுத்து காலம் தாழ்த்தியுள்ளது. இதனால், பிரச்சனை முற்றி இரு தரப்பிலும் கற்கள் வீச உடனடியாக எழுமலை காவல்நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் பள்ளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளது. ஈஸ்வரன் (தலையில் 20 தையல்), சங்கரலிங்கம் (கையில் காயம்), ராமன் (இடது கையில் முறிவு) உள்ளிட்ட சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். அடுத்த நாள் அழகம்மாள் என்ற பெண் உட்பட பொன்னையா, சங்கரலிங்கம், பெ. ராமராஜ், நாகராஜ், தங்கராசு, கணேசன், குருசாமி, முனியாண்டி, சுந்தரராஜ், நாகராஜ், தங்கராசு, மணி ஆகியோர் பள்ளர்கள் தரப்பிலும், பிள்ளமார்கள் தரப்பில் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலைக் கண்டித்து ஜீன் 21 அன்று மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டுள்ளது. அன்றுதான் பாலபாரதியுடன் பள்ளர்கள் சிலர் ஆட்டோவில் உடைக்கப்பட்ட சுவர் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்ட நிகழ்வு நடந்தது. இதை ஒரு பெரிய சாதனையாக எழுமலை காவல் ஆய்வாளர் குறிப்பிட்டார். 

     சென்ற வாரத்தில் (ஜூன் 28) பள்ளர் தரப்பில் கைது செயப்பட்டவர்கள் பிணை பெற்று விடுதலையாகி வந்த கையோடு பழைய வழக்கொன்றைக் காரணம் காட்டி சிறை வாசலிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறையின் அப்பட்டமான சார்புத் தன்மையை இது வெளிப்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகத்தின் ஆசியுடன் இது நிகழ்ந்துள்ளது. இந்திய அளவில் கவனம் ஈர்க்கப்பட்ட ஒரு பிரச்சனையில் தமிழக அரசு இப்படி மெத்தனம் காட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிள்ளைமார்கள் மத்தியில் அரசு ஆதரவு அளித்த தெம்புடன் கூடிய சாதிவெறி அதிகரித்துள்ளதையும் நாங்கள் நேரில் கண்டோம்.

     தேனி நகரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் குச்சனூர் முருகன் கோயில் செல்லும் வழியில் அமைந்துள்ள டொம்புச்சேரி என்னும் ஊரில் சுடுகாட்டுப் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. பிள்ளைமார்கள், கள்ளர்கள், செட்டியார்கள், பள்ளர்கள், அருந்ததியர்கள், பறையர்கள் ஆகியோர் வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளர்களுக்கு என ஊருக்கு வெளியே சித்தவங்கி ஓடை என்னுமிடத்தில் 3 ஏக்கர் நிலத்தில் சுடுகாடு ஒன்றை அரசு அமைத்துள்ளது. எனினும் அங்கு சென்று வர முறையாக சாலை வசதி ஏதும் செய்யப்படவில்லை. எனவே, பள்ளர்கள் ஊருக்குக் கிழக்கே சுடுகாட்டிலேயே பிணங்களைப் புதைத்து வந்துள்ளனர். அங்கு பிணங்களை எரிக்கும் வழக்கமில்லை.

இந்நிலையில் கடந்த ஜீன் 23 அன்று பள்ளர் சமூகப் பெண் ஒருவரை மணந்து அவர்களோடு ஒருவராக வாழ்ந்து வந்த கதிர்வேல் பண்டியன் என்ற கவுண்டர் ஒருவர் இறந்து போனார். அவரது பிணத்தைப் புதிய சுடுகாட்டில் எரிப்பதற்கு, தற்போது அங்கு செல்வதற்கு உள்ள ஒரே வழியான பேச்சியம்மன் கோயில் சாலை வழியாக, சவ ஊர்தி ஒன்றில் வைத்து எடுத்துச் செல்ல பள்ளர் சமூகத்தினர் முயன்றுள்ளனர். கோயிலை விரிவாக்கி கட்டியுள்ளதால் அவ்வழியே எடுத்துச் செல்லக்கூடாது எனத் தேவர்கள் தடுத்துள்ளனர். வேண்டுமானால் தங்கள் தெரு வழியே கொண்டு செல்லலாம் என அவர்களில் ஒரு சிலர் கூறியுள்ளனர். வேறு சிலர் தடுத்துள்ளனர். பள்ளர் குடியிருப்பின் இறுதியில் உள்ள பள்ளர் சாவடியில் சில மணி நேரம் பிணம் கிடந்துள்ளது. பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாத நிலையில் தேவர் தரப்பிலிருந்து கல் வீச்சு தொடங்கியுள்ளது. பள்ளர் சாவடி கல்வீச்சில் சிதைந்துள்ளதையும் அவர்கள் வீட்டுக் கதவுகள் சில உடைந்துள்ளதையும், அவர்களில் சிலர் காயம்பட்டுள்ளதையும் நாங்கள் நேரில் பார்த்தோம். பள்ளர்கள் தரப்பிலிருந்தும் ஒரு சிலர் கல் வீசித் தாக்கினாலும் தேவர் தரப்பில் பெரிய சேதம் இல்லை. இதற்கிடையில் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் முத்துச்சாமி, துணைக் காவல் கண்காணிப்பாளர் அன்வர்ஷா ஆகியோர் தலைமையில் ஒரு போலீஸ் படை வந்து இறந்தவரது பிள்ளைகளின் ஒப்புதலின்றி பிணத்தை எடுத்துச் சென்றுள்ளது.

தனது தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய போலீஸ் அனுமதிக்கவில்லை எனவும், பிணத்தை என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை எனவும், இறுதிச் சடங்குக் கூட செய்ய இயலாமல் போனது ஆறாத துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் அவரது மகன் ராஜா கூறினார். கல்லடி சம்பவம் நடைபெற்ற போது அங்கிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் கலாராணி என்பவர் சாதி உணர்வுடன் தேவர்களைத் தூண்டி விட்டதாக பள்ளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது பள்ளர்கள் தரப்பில் 11 பேரும், தேவர்கள் தரப்பில் 11 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அப்பட்டமான தீண்டாமை உணர்வுடன் பள்ளர்கள் தாக்கப்பட்ட போதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படாமல் ஒரே குற்ற எண்ணின் கீழ் (930/2010) பி.சி.பட்டி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. ஒரே குற்ற எண்ணின் கீழ் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 148, 336, 427, 332 மற்றும் பொதுச் சொத்து சேதம் விளைவிப்புச் சட்டப் பிரிவு 36 ஆகியவற்றின் கீழ் தாக்கியவர்கள், தாக்கப்பட்டவர்கள் என இருசாரார் மீதும் காவல்துறை வழக்குப் போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

நாங்கள் ஊருக்குச் சென்று ஒன்றிய தலைவர் திருமதி. பஞ்சவர்ணம் உட்பட எல்லா தரப்பினரையும் சந்தித்துப் பேசினோம். பிள்ளைமார்கள், தேவர்கள், செட்டியார்கள் முதலிய ஆதிக்கச் சாதியினர் ஒரு பக்கமாகவும், பள்ளர், பறையர், அருந்ததியர் ஒரு பக்கமாகவும் செங்குத்தாக பிரிந்துக் கிடப்பதை எங்களால் காண முடிந்தது.

மூன்று நாட்களுக்கு முன்பு (ஜீலை 2) சமதானக் கூட்டம் ஒன்றை ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் நடத்தியுள்ளனர். அடுத்த 40 நாட்களுக்குள் பள்ளர்கள் தமது பிணங்களை எடுத்துச் செல்ல ஏதுவாக பொதுச் சுடுகாட்டை நோக்கி தனிப் பாதை அமைத்துத் தருவதாக நிர்வாகம் வாக்குறுதி அளித்ததை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனினும் கைது செய்யப்பட்ட யாரும் விடுதலை செய்யப்படவில்லை. பள்ளர்கள் தரப்பில் நிலவிய அச்சத்தின் விளைவாக சம்பவத்தையொட்டி சில நாட்கள் அனைவரும் ஊரை விட்டு ஒடித் தலைமறைவாகி இருந்துள்ளனர்.

பொதுவாக தேனி, போடி, தேவாரம், எழுமலை முதலான பகுதிகளில் தலித்துகளுக்கு எதிரான சாதி வெறித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வருவாய் மற்றும் காவல்துறையினர் இதற்குத் துணை போய் வருகின்றனர். பெரியகுளத்தில் கடந்த ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் பிறந்த நாளில் மாலை போடுவதற்காக தாரைத் தப்பட்டைகளுடன் ஊர்வலம் சென்று சிலை முன் கூடியிருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரை நிகழ்ச்சியை நிறுத்துமாறு தேவையின்றி போலீசார் கூறியுள்ளனர். அதையொட்டி விளைந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. சாமிதுரைவேல், வடைகரை காவல்நிலைய ஆய்வாளர் சீராளன் ஆகியோர் இதைச் செய்துள்ளனர்.  யாரும் காயமடையாத போதும் தலித் மக்களில் 15 பேர் கைது செய்யப்பட்டதும், இன்று வரை அவர்கள் நிபந்தனைப் பிணையிலேயே அவதியுறுவதும் அதனால் அப்பகுதியில் அச்சம் சூழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்றார் அப்பகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் திரு. பிச்சை.

எமது பரிந்துரைகள்:

1)இந்திய அளவில் கவனம் பெற்ற உத்தபுரத்தில் பிரச்சனை சிறிதளவுக் கூட தீர்க்கப்படவில்லை. அங்குத் தொடர்ந்து தீண்டாமை நிலவுவதையும், மாவட்ட நிர்வாகம் அதற்குத் துணை போவதையும், தமிழக அரசு மவுனமாக ஆதரவளிப்பதையும் வன்மையாக்க் கண்டிக்கிறோம். தீண்டாமைச் சுவர் முழுமையாக இடிக்கப்பட்டு அவ்வழியே தடையற்ற போக்குவரத்தை ஏற்படுத்துதல், திரு. டி.கே.ரங்கராஜன், எம்.பி. அளித்த ரூ. 5 லடசத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக ‘ஷெல்ட்டர்’ அமைத்தல், ஆல மரத்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ள சுவரை இடித்தல் முதலான நடவடிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2)போடி, தேனி, தேவாரம், எழுமலை முதலான பகுதிகளில் தீண்டாமை ஒதுக்கமும், சாதி உணர்வும் மிகுந்துள்ளதை அரசுக் கவனம் கொள்ள வேண்டும். இப்பகுதியில் வருவாய் மற்றும் காவல்துறைகளில் ஆதிக்கச் சாதிகள் அல்லாத அதிகாரிகள் அதிக அளவில் பணி அமர்த்தப்பட வேண்டும். போதிய அளவில் தலித் அதிகாரிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளவாறு ஊர் தோறும் குழுக்கள் அமைத்து தீண்டாமை இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

3)டொம்புச்சேரியில் மாவட்ட நிர்வாகம் வாக்களித்தபடி போர்க்கால துரிதத்துடன் புதிய சுடுகாட்டுப் பாதை அமைக்கப்பட வேண்டும். கதிர்வேல் பாண்டியன் குடும்பத்தாரை அவரது இறுதிச் சடங்குகள் செய்யவிடாமல் தடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது உடலுக்கு என்ன நேர்ந்தது என்பது விளக்கப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஏன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும். வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு சிறையில் உள்ளோர் விடுதலைச் செய்யப்பட வேண்டும். தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு, பள்ளர்களின் உடைக்கப்பட்ட ஊர்ச் சாவடி திருத்தி அமைக்கப்படுதல் ஆகியவற்றையும் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

4)பெரியகுளத்தில் சென்ற ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற தேவையற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டு, வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

5)சுடுகாடு மற்றும் சுடுகாட்டுப் பாதை தொடர்பான பிரச்சனைகள் தமிழகமெங்கும் உள்ளன. இம்மாதிரியான இடங்களில் இரண்டு மூன்று போலீஸ் வேன்களை நிறுத்தி வைத்தால் போதும் என்கிற ரீதியில் இதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாகக் கையாள்வதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுகுறித்து ஆராய்ந்து பொதுவான கொள்கை முடிவு எடுக்க நீதித்துறையினர், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.


அ. மார்க்ஸ், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.

கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.

வழக்கறிஞர் ரஜினி, மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), மதுரை.

பேரா. சே. கோச்சடை, மக்கள் கல்வி இயக்கம், காரைக்குடி.

விடுதலை வீரன், ஆதித் தமிழர் பேரவை, மதுரை.

வழக்கறிஞர் எம். ஃபரக்கத்துல்லா, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (NCHRO), திண்டுக்கல்.

மு. சிவகுருநாதன், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.

கு. பழனிச்சாமி, மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), மதுரை.


தொடர்புக்கு:

அ. மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை – 600020.செல்: 9444120582.

Saturday, July 03, 2010

நுண்கலைக் கல்லூரி மாணவர் சசிகுமார் தற்கொலை: அதிகாரத்துவம் பொறுப்பேற்க வேண்டும் - அ. மார்க்ஸ்

நுண்கலைக் கல்லூரி மாணவர் சசிகுமாரின் மரணம் அவரை அறிந்த எல்லொருக்கும் மிக்க மனவருத்தத்தை அளிக்கிறது. மாணவர் போரட்டம் குறித்த உண்மையறியும் குழுவில் பங்கேற்ற வகையில் அவரை இரண்டு முறை பார்த்துள்ளேன். போராடுகிற மாணவர்கள் சிலர் என்னைச் சந்திக்க வந்தபொழுது அவர் இல்லை. அடுத்த நாள் நான் மற்றும் பேராசிரியர்கள் சிவகுமார், திருமாவளவன், கவிஞர் குட்டி ரேவதி, அயன்புரம் ராசேந்திரன், வழகுரைஞர் முருகன், பிரேமா, ரேவதி முதலானோர் கல்லூரி வளாகத்திற்குச் சென்ற போதுதான் அவரை முதலில் பார்த்தேன். அடுத்தநாள் பத்திரிகையாளர் சந்திப்பிற்கும் வந்திருந்தார். இரு சந்தர்ப்பங்களிலும் அவர் கண்களில் ஒரு பதற்றத்தையும் உடலில் ஒரு படபடப்பையும் கண்டது இன்னும் என் நினைவில் நிற்கிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தான் காரணமாகிப் போனோமோ என்கிற குற்ற உணர்வும், உலகச் செம்மொழி மாநாட்டில் 1330 குறள்களையும் சுடுமண் சிற்பங்களாகக் காட்சிப்படுத்தும் தன் லட்சியம் கைகூடாமலேயே போய்விடுமோ என்கிற பரிதவிப்பும் கூடவே அவர் முகத்தில் அப்பட்டமாக வெளளிப்பட்டது.

 ”உங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத்தான் திரும்பப் பெற முடியாது என்கிறார்கள். ஆனால் அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை, கவலைப்படாதீர்கள்” என்றேன். “ இதெல்லாம் ரொம்பச் சாதாரணமான வழக்கு. எளிதாகச் சமாளித்து விடலாம். ஒண்ணும் அலட்டிக்காதீங்க.” என்று சுகுமாரனும் ஆறுதல் சொன்னார். சசிகுமாரின் கண்களில் தெரிந்த பதட்டம் கூடியதே தவிர குறையவில்லை.

ஒன்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்தப் பிரச்சினையில் மாணவர்கள் தாங்கள் செய்த தவறை ஒத்துக் கொள்கிறார்கள். மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருந்தார்கள். ஆனால் கல்லூரி நிர்வாகம், ஒரு ஆசிரியருக்குள்ள எந்தத் தகுதியும் இல்லாத பொறுப்பு முதல்வர் மனோகரன், கலை பண்பாட்டுத் துறைச் செயலாளர் இறையன்பு அய்.ஏ.எஸ் ஆகியோர்தான் தம் தவறுகளை ஏற்க மறுத்தார்கள், மறுக்கிறார்கள். இந்த முரணை எங்கள் அறிக்கையிலும் சுட்டிக்காட்டி இருந்தோம். இத்தனைக்கும் மாணவர்கள் செய்த தவறுகள் பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திலும் நம் பிள்ளைகள் செய்யக் கூடியவைதான். ஆனால் நிர்வாகம் செய்த தவறுகளோ அதிகாரத்துவத்தின் அத்தனை குரூரங்களையும் உள்ளடக்கியவை. பொறுப்பு முதல்வரின் கார் கண்ணாடியை சசிகுமார் உடைக்க நேர்ந்த நிகழ்வுக்கு முந்தைய சம்பவத் தொடர்ச்சியை எங்கள் அறிக்கையில் பாருங்கள். சாதனை புரியும் துடிப்புடன் இருந்த ஒரு இளம் கலைஞன்  எப்படி அந்த நிலைக்குத் தள்ளப்பட்டான் என்பது விளங்கும்.

நான் 37 ஆண்டு காலம் அரசு கல்லூரிகளில் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளேன். இதில் கடைசிப் பத்தாண்டுகள் தவிர்த்து ஏனைய காலங்களில் கிராமப்புற கல்லூரிகளில்தான் ஆசிரியராக இருந்தேன். நமது கிராமப்புற கல்லூரிகள் என்பன முழுக்க முழுக்க கிராமங்களின் பிரதிபலிப்பாகவே இருக்கும். சாதி, ஊர் என கிராமங்களில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் அங்கிருக்கும். இதைவிடப் பெரிய கலவரங்கள், சண்டைகளை எல்லாம் நான் பார்த்துள்ளேன். இரண்டாம் முறை நான் தஞ்சை சரபோசி கல்லூரியில் பணி செய்தபோது ஒரு மாணவன் முதல்வரை கத்தியால் குத்திவிட்டான். ஆசிரியருடைய ’பைக்கை’ உடைப்பது, கார் கண்ணாடியை உடைப்பது எனப் பல சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். இப்படியாகச் சேதம் விளைவிப்பது, சிறு கலவரங்கள் முதலான நிகழ்வுகளை நாங்கள் எப்படி எதிர் கொள்வோம் என்றால், அந்த மாணவனை ‘சஸ்பெண்ட்’ செய்வோம்; பொதுவாக உள்ள இரண்டு ஆசிரியர்களை வைத்து ஒரு ‘என்கொயரி கமிஷன்’ அமைப்போம்; பெரிய பிரச்ச்சினையாக இருந்து கல்லூரி மூடி இருந்தால் ஒரு வாரத்தில் திறப்போம். ரொம்பப் பெரிய பிரச்சினையாக இருந்தால் படிப்படியாக ஏழெட்டு நாட்களில் திறப்போம். மாணவன் செய்த தவறின் அளவைப் பொறுத்து ஒரு சிறிய அபராதம் விதித்து, தேவையானால் ஒரு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, அல்லது பெற்றோரில் ஒருவரை அழைத்து எச்சரித்து மாணவனை மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொள்வோம். பிரச்சினை முடிந்துவிடும். பெரிய பிரச்சினைகளின் போது கல்லூரி கவுன்சில் அல்லது ஆசிரியர் கூட்டம் போட்டு விவாதிப்போம்.

ஆனால் இங்கு என்ன நடந்தது? உடனடியாக முதல்வரின் கார் கண்ணாடியை உடைத்த சசிகுமார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கண்ணாடியை உடைத்ததுடன் சம்பந்தமில்லாத இரு மாணவர்கள்மீதும் (இருவரும் தலித்துகள்) புகார் கொடுக்கப்பட்டது. முதல்வருக்கு அவ்விரு மாணவர்கள்மீது முன் விரோதம் உண்டு. சாதி உணர்வும் இதில் ஒரு பங்கு வகித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த  மாணவர்களில் ஒருவரும் அவரது சகோதரரான இன்னொரு மாணவரும் முதல்வருக்கு வேண்டிய, அவரது சாதிக்காரர் எனச் சொல்லப்படுகிற ஒரு போலீஸ் அதிகாரியால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டனர். சம்பந்தமில்லாத அவ்விரு மாணவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவரின் சகோதரரிடம் எழுதி வாங்கிக்கொள்ளப்பட்டது. சசிகுமார் உட்பட மூன்று மாணவர்களும் பிணை பெற்று வெளியே வர வேண்டியதாயிற்று. இன்னிலையில்தான் சுமார் ஒரு மாதம் கழித்து, சுற்றுலா சென்ற மாணவர்களெல்லாம் திரும்பி வந்தபின் மாணவர்கள் வேலை நிறுத்தம், உள்ளிருப்புப்போராட்டம் முதலியவற்றை தொடங்கினர்.

தமிழகத்திலுள்ள இரு நுண்கலைக் கல்லூரிகளும் மாநில அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் வருகின்றன. இத்துறையின் இயக்குனர் இறையன்பு ஒரு அய்.ஏ.எஸ் அதிகாரியான போதிலும் ஒரு எழுத்தாளர், சமூக அக்கறை உள்ளவர் என்கிற வகையில் மனிதாபிமானத்துடன் இப்பிரச்சினையை அணுகி விரைவாகத் தீர்ப்பார் என்றுதான் நாங்கள் நம்பினோம். எங்கள் அறிக்கை பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் தொட்டு அமைந்தது. ஒரளவு முழுமையாகவும் இருந்தது. நண்பர் எனச் சொல்லத்ததக்க அளவிற்கு நெருக்கமில்லையாயினும் இறையன்புவை அறிவேன். பரஸ்பரம் இருவருக்கும் மற்றவர்மீது மரியாதை உண்டு. எங்கள் அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்ததோடு இது தொடர்பாகக் குறைந்தது நான்கு முறையாவது அவரோடு பேச நேரிட்டது. இரண்டு விஷயங்களை நான் அவரிடம் வற்புறுத்தினேன். சசிகுமார் உள்ளிட்ட மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுங்கள்; கல்லூரியை விரைவாகத் திறவுங்கள் என்பவைதான் அவை. பொறுப்பு முதல்வர் மனோகரன் மீதான விசாரணை உள்ளிட்ட பிற பரிந்துரைகளை விரிவாக அறிக்கையில் சொல்லியிருந்தோம்.

என்னுடைய இரு வேண்டுகோளுக்கும் சாதகமான பதில் இறையன்புவிடமிருந்து வரவில்லை. வழக்குகளை திரும்பப் பெறுகிற அம்சத்தில், குறிப்பாக சசிகுமார்மீதான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ளதால் ஒன்றும் செய்ய இயலாது என்கிற ரீதியில் பதில் இருந்தது. கல்லூரியைத் திறப்பதிலும் அவருக்கு உடன்பாடில்லை. கல்லூரியைத் திறந்தால் மீண்டும் மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் என்கிற அச்சம் அவருக்கிருந்தது. ஆனால் நிலைமை அதுவல்ல. மாணவர்கள் கல்லூரியைத் திறக்கவே விரும்பினார்கள். கல்லூரி மூடிக்கிடப்பதை எந்த மாணவர்களும் விரும்பமாட்டார்கள். அப்படியே வேலை நிறுத்தம் செய்தால்தான் என்ன, கல்லூரியை மறுபடி சிறிது காலம் மூடினால் போச்சு. இப்படியான பிரச்சினைக்கெல்லாம் மூன்று மாத காலமெல்லாம் கல்லூரியை மூடி வைத்திருப்பதெல்லாம் ரொம்ப அநியாயம். என்னுடய ஆசிரிய அனுபவத்தில் இப்படி நான் அறிந்ததில்லை. கல்லூரியைப் பத்து நாளைக்குள் திறந்திருந்தால் ஒன்றும் நடந்திருக்கப் போவதில்லை. நிலைமை சுமுகமாகியிருந்திருக்கும். சசிக்குமாரை இப்படி அநியயமாக இழந்திருக்கமாட்டோம்.

இறையன்பு இதைப் புரிந்துகொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க ஒரு அதிகாரியாக (bureaucrat), அதிகாரத்துவ அணுகல் முறையுடனேயே இப்பிரச்சினையை அணுகினார். கல்லூரி முதல்வர் பொறுப்பில் ஆசிரியரல்லாத ஒருவரை நியமித்தார். (இதுவும் நான் அறிந்திராத ஒன்று.) கல்லூரியை இறுக மூடிவிட்டு ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்துவிட்டு ஒய்ந்தார். போராட்டத்தினூடாக மாணவர்கள் தன்னைப் பற்றிப் பேசிய சில பேச்சுக்களை ரொம்பவும் ‘பர்சனலாக’ எடுத்துக்கொண்டு கோபப்பட்டார். (மாணவர்கள் அவரது சாதி குறித்து தவறாக ஒரு அவதூறை சொன்னது உண்மைதான்.) போராட்டங்களின்போது ஒருமையில் பேசுவது, ஒழியச் சாபமிடுவது. கொடும்பாவி கொளுத்துவது எல்லாம் வழக்கம்தான். முதலமைச்சர், பிரதமர் யாரும் இதற்குத் தப்புவதில்லை. போராட்டம் முடிந்தால் எல்லாம் மறந்துவிடும். ஒழியச் சொன்னவர்களுக்கே சால்வை போர்த்தி நன்றி தெரிவிப்பதும் உண்டு. அரசியல்வாதிகளால் இதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதிகாரி ஒருவரால் இதைப் புரிந்து கொள்ள இயலாமற் போனதில் வியப்பில்லை.

கல்லூரிக்குள் நடக்கிற பிரச்சினைகளை குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினையைப் போல் கையாளவேண்டும். பிள்ளைகள் தவறு செய்யும்போது ஒரு தந்தை எப்படி அணுகுவாரோ அப்படி நிர்வாகம் அணுக வேண்டும். எந்தத் தந்தையாவது கண்ணாடியை உடைத்ததற்காகப் போலீசில் புகார் கொடுப்பாரா? கண்ணாடியின் விலை பத்தாயிரம் ரூபாய் இருக்குமா? ஆனால் இன்று கொடுத்த விலையின் மதிப்பு…..? இரங்கல் கூட்டத்தில் சசிகுமாரின் அன்னை அன்று அழுத காட்சி இன்னும் நெஞ்சைப் பதற வைக்கிறது. அந்தத் தாயின் கண்ணீருக்கு அதிகாரம் என்ன பதிலைச் சொல்லப்போகிறது? நாம்தான் என்ன பதிலைச் சொல்லப்போகிறோம்?

ஒன்றைச் சொல்லி முடிப்பது அவசியம். சசிகுமாரின் மரணத்தில் ஏதோ ஒரு வகையில் நமக்கும் ஒரு பங்கிருக்கத்தான் செய்கிறது. அவரின் பதட்டம், கலைஞனுக்கெ உரித்தான அங்கீகார ஏக்கம், அவருக்கிருந்த குற்ற உணர்வு இவற்றை நாம் கவனம் கொண்டிருக்க வேண்டும். செம்மொழி மாநாடு நெருங்க நெருங்க தனது கனவு நனவாகப் போவதில்லை என்கிற உண்மை அவருக்கு உறைக்கத் தொடங்கியது. அந்த நேரத்தில் நாம் அவரைத் தனியே விட்டிருக்கக் கூடாது. போராட்டம் என்பது வெறுமனே போராடுவது மட்டுமல்ல. ’சாலிடாரிட்டி’ அதன் பிரிக்க இயலாத அங்கம். போராட்டத்தினூடாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாம் தனிமைப்படவில்லை என்பதை உணர்கிறார்கள். இந்த வாய்ப்பை ஏதோ ஒரு வகையில் சசிகுமாருக்கு நாம்  அளிக்கத் தவறினோமா?

நுண் கலைக் கல்லூரிகள் இரண்டும் ஆணி வேர் முதல் உச்சங் கொழுந்து வரை அழுகிக் கிடக்கிறது. 150 ஆண்டு காலப் பழமை மிகு இந் நிறுவனம் ஒழுங்கு செய்யப்பட்டுத் இந்திய அளவிலுள்ள இதர நுண்கலைக் கல்வி நிறுவனங்களைப் போல தரம் உயர்த்தப்பட வேண்டும். எங்கள் அறிக்கையில் இந்த நோக்கிலும் சில பரிந்துரைகளைச் செய்துள்ளோம்.

சசிகுமாரின் நினைவாக, அவரது இறுதி லட்சியமாக இருந்த திருக்குறளைச் சுடுமண் சிற்பங்களக வடிக்கும் திட்டத்தை நிறைவேற்ற முனைவோம்.

சென்னை கவின் கலைக் கல்லூரியில் சாதி வெறி: உண்மை அறியும் குழு அறிக்கை!