Showing posts with label மீனவர்கள். Show all posts
Showing posts with label மீனவர்கள். Show all posts

Tuesday, January 06, 2026

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 11 பேரை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசி ஆளுநர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.01.2026) விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 11 பேரை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசி துணைநிலை ஆளுநர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம் காசாக்குடிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ராஜா (39), காசாக்குடிமேடு, காரைக்கால்மேடு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஜான்சினா (18), சந்திரநாத் (35), செல்வமணி (58), முருகன் (34), பிரதீப் (39), சக்திவேல் (34), ரஞ்சித் (37), வேலாயுதம் (50), மதியழகன் (43), மோகன்ராஜ் (51) ஆகியோர் கடந்த 29.12.2025 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கடந்த 02.01.2026 அன்று இவர்கள் கோடியக்கரைக்குத் தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராஜா உள்ளிட்ட மீனவர்கள் 11 பேரையும் கைது செய்துள்ளனர். படகையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் இவர்களைக் காங்கேசம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அதேபோல், இலங்கைக் கடற்படையினர் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 9 பேரை கைது செய்து, அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 73 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 751 படகுகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கைக் கடற்படை புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனால் மீனவர்களும், சிறைப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் பெரும் துயரத்திற்கு உள்ளாகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 11 பேரை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசி துணைநிலை ஆளுநர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், செயலர், துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளோம்.

Tuesday, April 13, 2010

பழங்குடியின மக்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு அரசாணை: புதுச்சேரி அரசுக்கு நன்றி!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 13.04.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பழங்குடியின மக்களை ‘பிற்படுத்தப்பட்ட பழங்குடி’ என வகைப்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டுள்ள புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனதார பாராட்டுகிறோம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்திய பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், பழங்குடியின மக்களுக்கு ‘அட்டவணை பழங்குடி’ (Scheduled Tribe - ST) என அங்கீகாரம் பெறுவதற்கு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி அம்மக்களுக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட 1989-ம் ஆண்டு முதல் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் கிடைக்கப் தொடர்ந்துப் போராடியதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

 பழங்குடியின மக்களுக்காக அர்ப்பணிப்போடு தொடர் போராட்டம் நடத்தி, வெற்றி கண்டுள்ள பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு தலைவர் திரு. ராம்குமார் அவர்களுக்கு எங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 இதேபோல், புதுச்சேரி அரசு முஸ்லிம்களுக்கும், மீனவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு அளித்து அரசாணையை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வெளியிட வேண்டும் என் வலியுறுத்துகிறோம். 

Friday, November 21, 2008

தமிழக - புதுச்சேரி மீனவர்கள் சிங்கள கடற்படையால் கடத்தப்பட்டுச் சிறை: கண்டன ஆர்ப்பாட்டம்!







கடந்த 17-11-2008 அன்று தமிழகத்தைச்சேர்ந்த ஜெகதாபட்டினம் அருகே மீன் பிடிக்கச் சென்ற புதுச்சேரி பகுதி காரைக்கால் மீனவர்கள் 15 பேர் உட்பட 28 மீனவர்களைச் சிங்கள கடற்படை கடத்திச் சென்று இலங்கை சிறையில் அடைத்துள்ளது.

இதனைக் கண்டித்து புதுச்சேரியிலுள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் இன்று (19-11-2008, வெள்ளி) காலை 10 முதல் 2.00 மணிவரையில், பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் சு.பாவாணன் தலைமைத் தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், இரா.மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள், லோகு.அய்யப்பன், தலைவர், பெரியார் தி.க., கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தங்க.கலைமாறன், தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி, முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன், அமைப்பாளர், வ.செல்வராஜ், பொறுப்புக் குழு உறுப்பினர், ம.தி.மு.க., சி.மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, ந.மு.தமிழ்மணி, அமைப்பளர், செந்தமிழர் இயக்கம்,
இரா.அழகிரி, தலைவர், தமிழர் தேசிய இயக்கம், எஸ்.யூ.முத்து, தலைவர், பார்வர்டு பிளாக் கட்சி, தி.சஞ்சீவி, தலைவர், இராஷ்டிரிய ஜனதா தளம், நடராசன், முரசொலி பேரவை, ச.ஆனந்தகுமார், புதுவைக் குயில் பாசறை, கஜேந்திரன், தலைவர், பசுமை பாரதம் ஆகிய கட்சி, இயக்கத் தலைவர்கள் கலந்துக் கொண்டு கணடன் உரையாற்றினர்.

இலங்கை கடற்படையால் கடத்தப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

காரைக்கால் பகுதி கிளிங்சல்மேட்டைச் சேர்ந்த திருமுருகன், தமிழ்மணி, குமார், சக்திவேல், நாகராஜ், காரைக்கால் மேட்டைச் சேர்ந்த பன்னீர், ராஜ், சுப்பிரமணியன், முருகவேல், காசாக்குடிமேட்டைச் சேர்ந்த சிவவடிவேல், சின்னையன், செல்வகுமார், கார்த்திக் ஆகியோர் இலங்கை கடற்படையால் கடத்தப்பட்டு தற்போது் இலங்கைச் சிறையில் வாடி வருகின்றனர்.