Thursday, July 31, 2008

ஜார்க்கண்ட் சிறைகளின் நிலைமைகளை ஆராய்ந்த அகில இந்திய உண்மை அறியும் குழு!

அகில இந்திய அளவிலான உண்மை அறியும் குழுவினர் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள சிறைகளின் நிலைமைகளைப் பற்றி நேரில் ஆய்வு செய்துள்ளனர். விரைவில் இக்குழுவினர் தமது அறிக்கையை வெளியிட உள்ளனர்.

கடந்த ஜூலை 19, 20, 21 ஆகிய நாட்களில் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பல்வேறு சிறைகளைப் பார்வையிட்டனர். சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.

இக்குழுவில் புதுச்சேரியிலிருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தமிழகத்திலிருந்து பேராசிரியர் அ.மார்க்ஸ், வழக்கறிஞர் கேசவன் ஆகியோர் இடம்பெற்றனர்.

மேலும், இக்குழுவில் எம்.கே.அசன் (முன்னாள் துணைவேந்தர், ராஞ்சி பல்கலைக்கழகம்), டாக்டர் சசி பூஷன் பதக் (மக்கள் சிவில் உரிமைக் கழகம், ராஞ்சி), பிரபாட் குமார் தெகதி (முன்னாள் நலவழித் துறை அமைச்சர், ஜார்க்கண்ட்), பேராசிரியர் மனாஸ் ஜோர்தார், தபன் தாஸ் (அரசியல் கைதிகள் விடுதலைக் குழு, மேற்குவங்கம்), டாக்டர் மிதிலேஷ் (மக்கள் சிவில் உரிமைக் கழகம், ராஞ்சி), அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழுவைச் சேர்ந்த ரோனா வில்சன் (ஜே.என்.யூ, தில்லி), ஷிவ் நந்தன் (காஷ்மீர்), மேதாப் அலாம் (ஜாமியா மில்லியா, தில்லி) உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இக்குழுவினர் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சி, அசாரிபாக், கிரிதி, லதேகர், டால்டன்கஞ்ச், கார்வா உள்ளிட்ட சிறைகளைப் பார்வையிட்டனர்.

நக்சலைட்டுகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஜார்க்கண்ட் அரசு பல அப்பாவி மக்களைப் பிடித்துச் சிறையில் அடைத்து வருகிறது. ஏறக்குறைய 1000 பேர் அரசியல் கைதிகளாக ஜார்க்கண்ட் சிறையில் வாடி வருகின்றனர். அண்மையில் கூட 170 பேர் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அடக்குமுறைச் சட்டமான குற்றவியல் திருத்த சட்டம் பிரிவு 17-ன் படி எந்தவித விசாரணையும் இல்லாமல் மாவோயிஸ்ட்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடி வருகின்றனர்.

ஜார்க்கண்டில் சிறைகள் போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், அங்கு சிறை விதிகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தனிச் சிறை இல்லாததால் பெரும் சிரமத்திற்கிடையே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றனர்.

போதிய மருத்துவ வசதியின்றி சிறைகள் உள்ளன. விசாரணைக் கைதிகள் எவ்வித விசாரணையும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் உள்ளனர். ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக அளவில் கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தேவையான அளவும், நன்கு தயாரிக்கப்பட்ட உணவும் கைதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.
கார்வா சிறையில் மூன்று கைதிகள் கடுமையாக சித்தரவதை செய்யப்பட்டு கைகளையும், கால்களையும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டறிந்த குழுவினர் சிறைக் கண்காணிபாளரிடம் இந்த மனித உரிமை மீறலை அனுமதிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்தனர்.

ஜார்க்கணட் மாநிலத்தில் தனி “சிறைக் கையேடு” கிடையாது. பிகார் மாநிலத்தின் சிறைக் கையேட்டையே பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஜார்க்கண்ட் சிறைகளைப் பார்வையிட்ட உண்மை அறியும் குழுவினர் தமது முழு அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளனர். மேலும், சிறை மேம்பாடு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கையை அனுப்பி வைக்க உள்ளனர்.

உண்மை அறியும் குழு அறிக்கை இந்திய சிறைகளின் அவலத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்.

Wednesday, July 16, 2008

புதுச்சேரி அண்ணா திடலைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது - கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 11-07-2008 அன்று வெளியிட்ட அறிக்கை:

தனியார் பங்கேற்புடன் விளையாட்டுத் திடல் அமைக்க முடிவு செய்திருப்பதன் மூலம் பாரம்பரியம் மிக்க அண்ணா திடலைத் தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சிப்பதைக் கைவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரியின் மையப் பகுதியில் உள்ள அண்ணா திடலில் விளையாட்டுத் திடல் அமைக்க ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி அளிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு அந்த தொண்டு நிறுவனத்தோடு விரைவில் ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

நகரத்திற்கு அருகேயே பல நவீன வசதிகள் கொண்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் ஒன்று இருக்கும் போது, பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டங்கள் நடைபெற்ற வரலாற்று சிறப்புடைய அண்ணா திடலில் இன்னொரு விளையாட்டுத் திடல் தேவையா?

வ.உ.சி., வீரமாமுனிவர், திரு.வி.க. அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் வேறு நிகழ்ச்சிகள் இல்லாத போது அண்ணா திடலில் விளயாடலாம் என கடந்த 02.09.2006 அன்று புதுச்சேரி நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி மாணவர்கள் அத்திடலைப் பயன்படுத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் செலவு செய்து விளையாட்டுத் திடல் அமைத்தால் பிற்காலத்தில் இத்திடலைப் பயன்படுத்தும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க நேரிடும். இதனால், அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் நலன் பாதிக்கப்படும்.

நகராட்சியில் ஒரு திட்ட்த்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் முதலில் அத்திட்ட வரைவை நகரமன்ற கூட்டத்தில் வைத்து உறுப்பினர்களின் கருத்தறிந்து முடிவு செய்ய வேண்டும். அதைவிடுத்து, முடிவு செய்து அறிவித்துவிட்டு, நகரமன்ற ஒப்புதலுக்கு வைப்பதாக கூறுவது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்.

புதுச்சேரி நகராட்சி சட்டம் மற்றும் விதிகளின்படி அரசு அதிகாரிகள் இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியாது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநர் தான் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியும். மேலும், வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட வேண்டுமென்றால் மத்திய அரசு உள்துறையின் முன் அனுமதி பெற வேண்டும்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுவது கண்டனத்திற்குரியது. இது குறித்து அரசு விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட விதிமுறைகளுக்கு எதிராக, மாணவர்களின் நலன் பாதிக்கும் வகையில் தேவையில்லாமல் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தை கைவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.