Showing posts with label கொலை. Show all posts
Showing posts with label கொலை. Show all posts

Wednesday, March 13, 2024

சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து படுகொலை: விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.03.2024) விடுத்துள்ள அறிக்கை:

ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை உடனே தூக்கிலிடுங்கள், என்கவுன்டர் செய்யுங்கள், எங்களிடம் ஒப்படையுங்கள் போன்ற கருத்துகள் பேசப்படுகின்றன. ஆனால், இது நிலவுகிற சட்டப்படி செய்ய முடியாதவை.

சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் முதலமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்து முறையிட்டதால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ரூபாய் 20 இலட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. தற்போது முதல்கட்டமாக 7 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    

இக்கொடூரச் சம்பவத்திற்குக் கஞ்சா முக்கிய காரணமாக உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைத் தடுப்பதில் அரசு படுதொல்வி அடைந்துள்ளது. பள்ளிகளில் தாராளமாகப் போதைப் பொருள் புழங்குகிறது. இதைத் தடுக்கக் கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதைப் பொருட்களைத் தடுக்கக் காவல்துறை, கல்வித்துறை போன்ற தொடர்புடைய துறைகள் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

போதைப் பொருட்கள் தமிழகம் வழியாக புதுச்சேரிக்கு வருவதாகத் தெரிகிறது. இதைத் தடுக்கத் தமிழக அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்கவில்லை என்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வைத் தடுக்க முடியாது.

போதைப் பொருள் தடுக்க உருவாக்கப்பட்ட காவல்துறைத் தனிப் பிரிவுக்கு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்கும் முடிவு சரியானது. இப்பிரிவின் செயல்பாடுகளை நேரடியாக டி.ஜி.பி., மேற்பார்வையிட்டு உரிய ஆலோசனைகள் வழங்கிக் கண்காணிக்க வேண்டும்.

இக்கொடிய குற்றத்திற்குப் போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்தாதது, காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காணாமல் போன சிறுமியை நான்கு நாட்களாக கண்டுபிடிக்காதது என அரசின் அலட்சியமே முக்கிய காரணமாகும். இதற்கு அரசே முழுப் பொறுப்பேற்க (Vicariously liable) வேண்டும்.

குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைப் பெற்றுத் தருவதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக, ஜனநாயக இயக்கங்கள் துணைநிற்பதோடு, கடமையாக கருதிச் செயல்படும்.

எனவே, புதுச்சேரி அரசு இவ்வழக்கில் விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அறிவித்தபடி நிவாரணம் முழுவதையும் உடனே வழங்க வேண்டும்.


Tuesday, July 20, 2021

சேலம் முருகேசன் காவல்துறையினரால் கொலை: வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்!

சேலம் முருகேசன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து இன்று (20.07.2021) தமிழக முதலமைச்சர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:-

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி சார்பில் கடந்த 16.07.2021 அன்று சேலம் அருகேயுள்ள இடையப்பட்டி சிற்றூருக்குச் சென்று காவல்துறையால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து வந்ததின் அடிப்படையில் இக்கோரிக்கைகளைத் தாங்கள் உடனே நிறைவேற்ற வேண்டி இம்மனுவைச் சமர்ப்பிகின்றோம்.

சேலம் மாவட்டம், இடையப்பட்டி சிற்றூரைச் சேர்ந்த முருகேசன் (வயது 47) த/பெ. ஆறுமுகம் (மறைவு) என்பவர் கடந்த 22.06.2021 அன்று ஏதாப்பூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவரால் பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையின் போது அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டு ஏதாப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றமிழைத்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குற்றமிழைத்த காவல் அதிகாரி ஏதாப்பூர் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவ்வழக்கை அக்காவல் நிலைய காவல்துறையினர் விசாரித்தால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயமும் நீதியும் கிடைக்காது. எனவே, இவ்வழக்கை உடனடியாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மேலும், இக்கொலை நடந்த போது சம்பவ இடத்தில் இருந்த மூன்று காவலர்களையும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்க வேண்டும்.

தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 10 இலட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. ஆனால், பட்டப்பகலில் சீருடை அணிந்த காவல்துறையினரால் எவ்விதக் குற்றமும் செய்யாத அப்பாவி ஒருவரைக் கொலை செய்தது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மேலும், இந்திய அரசியல் சட்டப்படி இக்கொலைக்குத் தமிழக அரசுக்கு முழுப் பொறுப்பு (Vicarious liability) உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசுக் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியான அரசு வேலை வழங்க வேண்டும். கொல்லப்பட்ட முருகேசனின் மூன்று பிள்ளைகளான கல்லூரியில் முதலாண்டு பட்டப் படிப்புப் படிக்கும் ஜெயபிரியா (18), +2 படிக்கும் ஜெயபிருந்தா (17), 8ஆம் வகுப்பு படிக்கும் கவிப்பிரியன் (13) ஆகியோரது படிப்புச் செலவையும் அரசே ஏற்க வேண்டும்.

மனித உரிமைகளைக் காக்க வேண்டி இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

Saturday, June 12, 2021

52 நாட்களாக நீதி வேண்டி பிணவறையில் உயிரற்ற உடல்..

 திருநெல்வேலி மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ (வயது 27). சட்டக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர். சென்ற 11.04.2021 அன்று இவர் உட்பட நான்கு பேர் மீது களக்காடு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் இவர்களைப் பாளையம்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றியுள்ளனர்.

சென்ற 22.04.2021 அன்று சிறையில் முத்துமனோ (27), சந்திரசேகர் (22), கண்ணன் (23), மாதவன் (19) ஆகியோர் மீது சிறைவாசிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் நால்வரும் படுகாயம் அடைந்தனர். அனைவரும் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முத்து மனோ திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்துபோனார்.

இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலைய போலீசார் சிறைவாசிகளான ஜேக்கப் (29), மாடசாமி (25), ராம் (எ) ராமமூர்த்தி (24), மகாராஜா (28), சந்தான மாரிமுத்து (எ) கொக்கி குமார், கந்தசாமி (22) ஆகியோர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இக்கொலைக்குப் பின்னணியாக இருந்த சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அப்போழுது 6 சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜெயிலர் பரசுராமன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைவாசிகள் சாதி அடிப்படையிலேயே அடைத்து வைத்துள்ளனர். சமூகத்தில் எப்படி சாதியப் பாகுபாடும், மோதல்களும் உள்ளது போல், சிறைச்சாலைகளிலும் இந்நிலையே உள்ளது. முத்து மனோ உள்ளிட்ட நால்வரை விசாரணை சிறைவாசிகள் பிளாக்கில் அடைத்து வைக்காமல், தண்டனை சிறைவாசிகள் உள்ள ‘ஏ’ பிளாக்கில் அடைத்துள்ளனர். இதில் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த குற்றவாளிகளை அடைத்து வைத்துள்ளனர். இதனால்தான், முத்து மனோ உள்ளிட்ட நால்வர் மீதான தாக்குதல் எளிதாகியுள்ளது. இத்தாக்குதலுக்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் சாதியமும் ஒரு காரணமாக உள்ளது. இதற்குப் பின்னால் காவல்துறையினர் சிறைத்துறையினர் என பலரின் பெரும் சதித்திட்டம் இருப்பதாகவே தெரிகிறது.

இந்நிலையில், கீழ்காணும் கேள்விகள் எழுகிறது.

1) ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் இருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றியது ஏன்?

2) பாளையங்கோட்டை சிறையில் விசாரணை சிறைவாசிகள் பிளாக்கில் அடைக்காமல், தண்டனைச் சிறைவாசிகள் ‘ஏ’ பிளாக்கில் அடைத்தது ஏன்?

3) முத்து மனோ உள்ளிட்ட நால்வர் பாளையங்கோட்டை சிறைக்கு வருவது ‘ஏ’ பிளாக்கில் இருந்த சிறைவாசிகளுக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி?

4) சிறையில் கல்லால் தாக்கிக் கொலை செய்யும் அளவுக்கு பெரிய கற்கள் இருந்தது எப்படி?

5) முத்து மனோ உடலில் 28 காயங்கள் உள்ளதால் கற்களால் தாக்கியதால் இறந்தாரா? அல்லது வேறு ஆயுதங்களால் தாக்கினார்களா?

இக்கொலை நடந்த நாள் முதல் வாகைக்குளம் மக்கள் நீதிக் கேட்டுப் போராடி வருகின்றனர். முத்து மனோ உடற்கூறாய்வு முடிந்து 52 நாட்கள் ஆகியும் உடலைப் பெற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து உறுதியாக போராடி வருகின்றனர். முத்து மனோவின் தந்தையார் பாவனாசம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் இக்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும். நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

இந்நிலையில், இக்கொலை வழக்கின் புலன்விசாரணை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் சிறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அரசுப் பணி வழங்க வேண்டும் என்பதுதான் போராடும் வாகைக்குளம் மக்கள், சமூக இயக்கங்களின் கோரிக்கைகள்.

போராடும் மக்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசும், காவல்துறையும் உடனே நிறைவேற்ற வேண்டும்.

முத்து மனோவின் உயிரற்ற உடல் 52 நாட்களாக நீதி வேண்டி பிணவறையில் காத்துக் கிடக்கிறது.