Tuesday, September 30, 2008

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த தடை - கண்டனம்!

புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் அரசு.வணங்காமுடி (விடுதலைச் சிறுத்தைகள்), இரா.மங்கையர்செல்வன் (மீனவர் விடுதலை வேங்கைகள்), லோகு.அய்யப்பன் (பெரியார் தி.க), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), தங்க.கலைமாறன் (பகுஜன் சமாஜ் கட்சி), இரா.அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), பா.சக்திவேல் (மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம்), சி.மூர்த்தி (புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை), ந.மு.தமிழ்மணி (செந்தமிழர் இயக்கம்), பார்த்திபன் (செம்படுகை நன்னீரகம்), பாவல் (வெள்ளையணுக்கள் இயக்கம்) ஆகியோர் 30-09-2008 அன்று விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு தார்மீக அடிப்படையில் ஆதரவளித்து பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிப்பதின் மூலம் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளும் காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

பெரியார் தி.க. சார்பில் கடந்த 29-09-2008 அன்று சாரம், ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளரிடம் முறைப்படி அனுமதி கோரப்பட்டது. இதில், பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் கலந்துக் கொண்டு உரையாற்ற இருந்தனர். ஆனால், இதற்கு திடீரென அனுமதி மறுத்து காவல்துறையினர் கடிதம் அளித்துள்ளனர். காங்கிரஸ் அரசின் இந்தப் போக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரானது.

கடந்த 28-11-2007 அன்று பெரியார் தி.க. சார்பில் அரியாங்குப்பத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற இருந்த பொதுக்கூட்டம் காவல்துறையால் தடை செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில், 28-07-2008 அன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், கருத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்படக் கூடாது எனக் கூறி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டனர். இதன் பின்னரும் மீண்டும் தற்போது ஆர்பாட்டத்தைத் தடை செய்துள்ளது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.

இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழிக்க சிங்கள அரசுத் திட்டமிட்டு இராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து குண்டு வீசி தமிழர்களை அழித்து வருகிறது. இந்த தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்து வருவதோடு, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பி வெளிப்படையாக உதவுகிறது.

இந்திய அரசின் ஈழத் தமிழர் விரோத நடவடிக்கையை தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. தமிழர்களிடம் இருந்து பெறப்படும் வரிப் பணத்தில் வாங்கப்படும் ஆயுதங்களைத் தமிழர்களை அழிக்கப் பயன்படுத்துவது, தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் எனக் குற்றசாட்டி வருகின்றன.

புதுச்சேரி காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர் பிரச்சனையில் தன்னுடைய நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் செல்வாக்கு இழந்து வரும் புதுச்சேரி காங்கிரஸ் இது போன்ற தமிழர் விரோத நடவடிக்கையினால் வரும் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.

புதுச்சேரி காங்கிரஸ் அரசின் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான போக்கைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் சார்பில், வரும் 06-10-2008 திங்களன்று, காலை 10 மணிக்கு, சாரம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் - முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Tuesday, September 23, 2008

அத்தியூர் விஜயா வழக்கில் புதுச்சேரி போலீசார் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு!


பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைபாளார் பேராசிரியர் பிரபா.கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் 22-09-2008 அன்று பகல் 12.00 மணியளவில், புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

அத்தியூர் விஜயா பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் புதுச்சேரி போலீசார் ஆறு பேர் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

விழுப்புரம் வட்டம், செஞ்சி அருகே உள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயா. இவர் பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு (29.7.1993) ஒரு திருட்டு வழக்கில் வெள்ளையன் என்பவரைத் தேடிச் சென்ற புதுச்சேரி போலீசார் ஆறு பேர், வெள்ளையனின் உறவினரான விஜயாவை கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக புகார் எழுந்தது. அப்போது விஜயாவுக்கு வயது 17.

இது தொடர்பாக முதலில் விசாரணை நடத்திய அப்போதைய திண்டிவனம் சார் ஆட்சியர் ஜவகர் இ.ஆ.ப. உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்படி புகாரில் முகாந்திரம் உள்ளது எனக் கண்டறிந்தனர். இதனையடுத்து அனந்தபுரம் காவல் நிலையத்தில் புதுச்சேரி போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கா.நி.கு. எண். 276/1993.

செஞ்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் இரா.செல்வராஜ் தலைமையில், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த வ.சு.சம்பந்தம், பேராசிரியர் பிரபா.கல்விமணி, சகோதரி லூசினா உள்ளிட்டோர் அடங்கிய உண்மை அறியும் குழு இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தது. மேற்படி பாலியல் வன்புணர்ச்சி சம்பவத்தை உறுதிசெய்து 29.9.1993 அன்று புதுச்சேரியில் அறிக்கை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து அப்போதைய விழுப்புரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.ஜெகதீசன் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அவர் விரிவான விசாரணை மேற்கொண்டு 7.2.1994 அன்று தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், விஜயா பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியதை உறுதி செய்ததோடு, விஜயாவுக்கு கருணைத் தொகை வழங்கவும் சிபாரிசு செய்தார்.

இவ்விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, 31.8.94 அன்று அத்தியூர் விஜயா வழக்கை சி.பி.சி.ஐ.டி. புலன் விசாரணைக்கு மாற்றியும், விஜயாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.25000/- கருணைத் தொகையும் வழங்கிட உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது.

பாதிக்கப்பட்ட விஜயாவுக்கு நீதிக் கிடைக்க தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் குற்றமிழைத்த போலீசாரை கைது செய்யக் கோரி 4.1.1995-இல் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்ற மாபெரும் பேரணி, மறியல் நடைபெற்றது.

இவ்வழக்கினை புலன் விசாரணை செய்த விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் கோ.அரிகிருஷ்ணன், புதுச்சேரி போலீசாரான நல்லாம் கிருஷ்ணராய பாபு (அப்போது உதவி ஆய்வாளர்), கே.சசிகுமார் நாயர், வி.இராஜாராம் (இருவரும் அப்போது தலைமைக் காவலர்கள்), ஜெ.பத்மநாபன், கே.முனுசாமி, ஜீ.சுப்புராயன் (அப்போது காவலர்கள்) ஆகிய ஆறு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அதில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376 (பாலியல் வன்புணர்ச்சி), 333 (கடத்தல்) உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் 19.4.1999 அன்று அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மேற்படி வழக்கில் எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மேற்படி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விஜயாவுக்கு புதுச்சேரி அரசு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியது.

மேலும், தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரணை மேற்கொண்டு விஜயா பாலியல் வன்புணர்ச்சியை உறுதி செய்து 6.5.1999 அன்று அறிக்கை தாக்கல் செய்தது.

விஜயாவின் கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் எம்.ஆர். ஷெரீப்-பை அரசு சிறப்பு வழக்கறிஞராக 21.1.2002-இல் நியமித்தார்.

இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 6.7.2004 முதல் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்றது. பாதிக்கப்பட்ட விஜயா, விஜயாவின் உறவினார்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என 42 பேர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.

இவ்வழக்கு விசாரணை முடிந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி என்.இரத்தினராஜ், 11.8.2006 அன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால், புதுச்சேரி போலீசார் ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பினை தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாது இந்திய அளவில் மனித உரிமை அமைப்பினர் வரவேற்றனர்.

இத்தீர்ப்பானை எதிர்த்து புதுச்சேரி போலீசார் ஆறு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆயுள் தண்டனை பெற்ற புதுச்சேரி போலீசார் 6.11.2006 அன்று, அதாவது தண்டனைப் பெற்று மூன்றே மாதத்திற்குள் பிணை வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். பிணையில் வெளிவந்த காவலர் முனுசாமி விபத்தில் இறந்து போனார்.

புதுச்சேரி போலீசாரின் மேல் முறையீட்டு மனுவின் மீது இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் முன்பு 19.9.2008 அன்று நடந்தது. புதுச்சேரி போலீசாருக்காக தமிழக அரசின் முன்னாள் அரசு வழக்கறிஞர்களான சண்முகசுந்தரம், ஐ.சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜரானார்கள். விஜயாவுக்காக அரசு தரப்பில் தமிழக அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், பாதிக்கப்பட்ட விஜயா தரப்பில் வழக்கறிஞர் கீதா ஆகியோர் ஆஜரானார்கள்.

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கற்றுத் தேர்ந்த மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கு நடத்தவில்லை. பாதிக்கப்பட்ட விஜயாவிற்கு நீதிக் கிடைக்க போதிய அக்கறை செலுத்தவில்லை.

இவ்வழக்கை 19.9.2008 அன்று முற்பகல் விசாரணை செய்து முடித்த நீதிபதி சொக்கலிங்கம், நீதிபதி வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் தீர்ப்பை அன்று மாலையே வழங்கியது. பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஆறு புதுச்சேரி போலீசாரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு நாடெங்குமுள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கு மிகவும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்தது.

திண்டிவனம் சார் ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரி, சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர், தேசிய மனித உரிமை ஆணையம் என அனைவரும் விஜயா பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட்தை உறுதி செய்துள்ள போது சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது.

இன்று இந்தியா முழுவதும், குறிப்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 26 நீதிபதிகள், மேற்குவங்க உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் என பல நீதிபதிகள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம், நீதித்துறையின் கண்ணியத்தை குறைத்து வருகிற வேளையில், அடித்தட்டிலுள்ள பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்த அத்தியூர் விஜயாவிற்கு நீதிக் கிடைக்காதது மக்களிடையே மேலும் நீதித்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும்.

எனவே, இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழக அரசை வற்புறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட விஜயா சார்பிலும் தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தில் அனுபவம் நிறைந்த மூத்த வழக்கறிஞர்களை வைத்து மேல் முறையீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

அப்போது அத்தியூர் விஜயா, அவரது தாயார் தங்கம்மாள் உடன் இருந்தனர்.