Monday, November 23, 2015

மழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்

கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து வந்தேன். மழைக்கு இதுவரையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். பல இடங்களில் வீடு இருந்ததற்கான அடையாளமே இல்லாமல், மண் குவியலுக்குள் வாழ்ந்த குடும்பங்களின் வாழ்க்கைச் சுவடுகள் மூழ்கிப் போயிருந்த துயரத்தைக் காண முடிந்தது. நெய்வேலி அருகேயுள்ள பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 10 பேர் பலியாகி உள்ளனர். நாங்கள் சென்ற போது லட்சுமி என்ற பெண்ணின் உடல் கிடைத்தது. ஓடைக் கரையோரம் வீடுகளில் குடியிருந்ததால் வெள்ளம் மிக எளிதாக இவர்களை அள்ளிச் சென்றுள்ளது. இடிந்த வீட்டின் முன்பு தாய் தன் பிள்ளைகளின் சான்றிதழ்களைக் காய வைத்த காட்சி மனதை வாட்டியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீரை வெளியேற்றியதாலும் கடும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்து மண் மேடாக காட்சியளிக்கின்றன. அந்நிலங்களைத் திருத்தி மீண்டும் விவசாயம் செய்ய நீண்ட காலமாகும். சொந்த நாட்டிலேயே மக்கள் பள்ளிக்கூடங்களில் அகதிகளாக உள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சியினர், சில தொண்டு நிறுவனத்தினர் சற்று ஆறுதல் தரும்படி நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். தமிழக அரசும் இயன்றளவு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இவை அனைத்தும் அம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவாது. நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்து வந்த முந்திரிக்காட்டு மக்கள் வரிசையாக நின்று, தட்டு ஏந்தி உணவு வாங்கிச் சென்று உண்ட காட்சி துயரத்தின் உச்சம். நாம் மழையை சபிக்க முடியாது. அது இயற்கையின் வரம். ஆனால், எதுபற்றியும் கவலைப்படாமல் ஆளுகின்ற, ஆண்ட அரசுகளை நினைத்தால் கடும் கோபம் வருகிறது. எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமலும், நீர் ஓட வேண்டிய வாய்க்கால், ஓடை, இயற்கைத் நீர்த்தேக்கங்களான குட்டை, குளம், ஏரி ஆகியற்றை இல்லாமல் செய்ததும் என அரசின் திட்டமிட்ட இயற்கை அழிப்பே இந்த பேரிடருக்குக் காரணம். இதை வைத்துக் கொண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அரங்கேற்றும் அரசியல் ஆபாசத்தின் உச்சம் எனலாம். இந்நேரத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த தாக்குதல் குறித்த அந்நாட்டு கட்சிகள், ஊடகங்களின் அனுகுமுறையை நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு நாகரீகமாக அதை எதிர்க் கொண்டார்கள். தமிழகம் இன்னும் சீரழியும் நிலை வருமோ என அஞ்சுகிறேன்.

புகைப்படம்: இயக்குநர் தங்கர்பச்சான்


Monday, January 26, 2015

தங்கர்பச்சான் தாய் இறப்பு: ஒரு கிராமத்தின் சாவு அது!

என் அன்பு நண்பர் இயக்குநர், ஒளிஓவியர் தங்கரபச்சானின் தாயார் இலட்சுமி அம்மாள் இறப்புக்குச் சென்று வந்தோம், நான், ஜெகன்நாதன், பிரேம்ராஜ், கடலூர் பாபு ஆகியோர் சென்றிருந்தோம். கடலூர் மாவட்டம், பண்ரூட்டி அருகே நடுவீரப்பட்டு என்ற ஊருக்குப் பக்கத்து ஊர் பத்திரக்கோட்டை கிராமம். மிகவும் பின்தங்கிய பகுதி, பண்ரூட்டி இராமச்சந்திரன் அமைச்சராக இருந்த போது இப்பகுதிகளுக்குச சாலைப் போட்டு, பேருந்து இயக்கியுள்ளார். 'அழகி' திரைப்படம் வெளியான போது தங்கர்பச்சான் பாராட்டு விழாவிற்குச் சென்ற போது அவரது தாயரை பார்த்தேன். ஒரு நல்ல கிராமத்து அழகிய பாட்டி அவர். அதன்பின் அந்த ஊருக்குச் செல்ல வாய்ப்பில்லாமல் போனது. தற்போது அவரது உயிரற்ற உடலைக் காணச் செல்ல வேண்டியதாகிவிட்டது. உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு வந்து, தங்கர்பச்சான் இருக்கைக்கு அருகில் அமர்ந்தோம். என்னை அவரது அண்ணன்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு நெருக்கமானவர்களிடம் என்னைப் பற்றிக் கூறிய வண்ணம் இருந்தார். அவர் என் மீது வைத்திருக்கும் அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு அது. அவர்களது மிகப்பெரிய பூர்வ வீடு இடிக்கப்பட்டு பக்கத்தில் புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வூரில் இவர்களைப் பெரியவீட்டுக்காரர்கள் என்று அழைப்பார்கள். ஒரு சிறிய கூரை வீட்டில் அவரது தாயார் இறுதிக் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்துள்ளார். 'பூர்வீக வீடு இடிக்கப்பட்டது அம்மாவுக்கு மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கு. எட்டு பிள்ளைகளும் இங்குதான் பிறந்தோம். ஐந்து நாட்களாக அம்மாவுடன் இருந்தேன். அவர் மூச்சுவிடும் வரை இருந்தேன். அவர் இல்லாமல் தனித்து விடப்பட்டது போல் உணர்றேன். என்ன சொல்றதுன்னு தெரியல' என்று தன் தாங்க முடியாத சோகத்தைப் பகிர்ந்துக் கொண்டார். அப்போது தாரை, தப்பட்டை, மேளம் முழங்கிட, பட்டாசு வெடிச்சத்தம், அதிர்வேட்டு கேட்டிட ஆண்களும், பெண்களுமாக ஒரு பெரும் கூட்டம் தலையில் அரிசி சிப்பம், கையில் ஆளுயர பூ மாலைகள், சீர் வரிசைகள் சகிதமாக வந்தது. வந்தவர்கள் உடலுக்கு மாலைகளை அணிவித்து துக்கத்தைப் பகிர்ந்துக் கொண்டனர். வந்த பெண்கள் அங்கிருந்த பெண்களோடு அமர்ந்து கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்து அழுது தீர்த்தனர். கிராமத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் காட்சி இது.'அம்மாவின் சொந்த ஊரான சிலம்பநாதன்பேட்டை உறவுக்கார ஜனங்க. இதுபோல 184 ஊரில இருந்து உறவுக்காரக் குடும்பங்கள் வரனும். சாவு எடுக்க சாயந்தரம் 6 மணிக்கு மேலாகும்' என்றார் தங்கர்பச்சான். மக்கள் வரிசை வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தினர். தங்கர்பச்சானுக்கு வேண்டிய முக்கிய பிரமுகர்களும் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். ஒருபுறம் பட்டாசு, வேட்டு என கலைக்கட்டியது சாவு. 'இரவு வந்த மச்சான் ஒருத்தன் பட்டாசு வெடிக்காதேன்னு சொன்னதற்கு கோவிச்சுக்கிட்டுப் போயிட்டான், பேசி சமாதானப்படுத்தி கூட்டிக்கிட்டு வர வேண்டியதா போச்சு' என்றார் தங்கர்பச்சான். 91 வயது வரை வாழ்ந்த தாயின் சாவிற்கு செம்மண் படிந்த, தலைக்காய்ந்த சாதாரண மக்கள் முதல் பல தரப்பினரும் வந்து துக்கத்தில் பங்கேற்றது நெகிழ்ச்சியாக இருந்தது. அழுதவர்கள் உண்மையாக அழுதார்கள். கிராமமே திரண்டு சாவு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு உயிரோட்டமான சாவின் இறுதி நிகழ்வைக் காண முடிந்தது. முன்னொரு காலத்தில் முந்திரிக்காட்டு தீவிர அரசியல் அரசையும், காவல்துறையையும் கலங்கடித்தது தனித்த வரலாறு. ஒரு வீரஞ்செரிந்த வரலாற்றுக்குச் சொந்தமான முந்திரிக்காட்டு எளிய மக்களின் வாழ்வைக் கண்டுவந்த திருப்தியோடு ஊர் திரும்பினேன்.

Thursday, September 11, 2014

'உலகத் தற்கொலைத் தடுப்புத் தினம்': ஒரு நினைவுக் குறிப்பு!திருவாரூரைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டுப் பாதுகாப்புத் தேடி புதுச்சேரிக்கு வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வழக்கம் போல் பெண் வீட்டில் எதிர்ப்பு. இருவரையும் கண்டுப்பிடித்து நீதிமன்றத்தை அனுகி அப்பெண்ணைப் பிரித்து ஒரு காப்பகத்தில் தங்க வைத்துவிட்டனர். இப்பிரச்சனையில் தலையிட்டு ஏதாவது செய்யுங்கள் என்று வழக்கறிஞர் சிவ.இராஜேந்திரன் கேட்டார். புதுச்சேரியில் ஏதாவது வேலை நடக்க வேண்டுமென்றால் அவருக்கு என் ஞாபகம் மட்டுமே வரும். அப்போது அவரும் புறப்பட்டு இங்கு வந்துவிட்டார்.

நான் இவ்வழக்கை நடத்திய நீதிபதி என் பள்ளித் தோழர் என்பதால், அவரை நீதிமன்றத்தில், மதிய இடைவேளியின் போது சந்தித்து உண்மை நிலையை எடுத்து விளக்கினேன். அவர் உடனே அப்பெண் யாருடன் செல்ல விரும்புகிறார் என்பதை விசாரித்து, அவருடன் உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

நான், சிவ.இராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் அப்பெண் தங்கியிருந்த ரெட்டியார்பாளையத்தில் உள்ள காப்பகத்திற்குச் சென்றோம். காவல்துறையினர் அப்பெண்ணை விசாரித்தனர். அப்போது அப்பெண் தான் தன் கணவருடன் செல்ல விரும்புவதாக உறுதியாக சொன்னார். அதைப் பதிவுச் செய்துக் கையெழுத்து வாங்கிய காவல்துறையினர் அப்பெண்ணை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர். அப்போது அங்கிருந்த அப்பெண்ணின் தந்தையார் எங்களை நோக்கி மண்ணை அள்ளி வீசி 'உங்களுக்குக் கேரளா போய் சூனியம் வைக்கிறேன்' என்று ஆவேசமாக கத்தினார். காவல்துறையினர் அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் அந்தப் பையன் ஒருமுறை என்னிடம் செல்லில் பேசினார். தான் நன்றாக இருப்பதாகவும், ஒருமுறை வீட்டிற்கு வந்து உணவு உண்டுவிட்டுச் செல்லுங்கள் என அன்போடு கேட்டுக் கொண்டார். அது ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகை நேரம். அவர் கிறிஸ்துவர் என்பதால் விருந்துக்கு அழைத்தார் என நினைக்கிறேன். என்னால் செல்ல முடியாமல் போய்விட்டது. சென்ற ஆண்டு இன்னொரு காதல் ஜோடி பிரச்சனைத் தொடர்பாக சிவ.இராஜேந்திரன் புதுச்சேரிக்கு வந்தார். அப்போது ஊரக எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து அப்பிரச்சனைக்குத் தீர்வுக் கண்டோம். வழக்கறிஞர் சிவ.இராஜேந்திரன் இதுபோன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட காதல் திருமணங்களை நடத்தியவர்.  அதுகுறித்து பிறகு எழுதுகிறேன். அப்போது அங்கு அந்தப் பையன் வந்திருந்தார். சற்று சதைப் பிடித்திருந்தது. என்னுடன் ஒரு சில மணிநேரம் இருந்திருப்பார். அப்போதும் என்னை விருந்துக்கு வீட்டிற்கு அழைத்தார். நான் வழக்கம் போல் மெல்லிய சிரிப்புடன் சரி என்றேன். நான் இதுபோன்ற விருந்து, கொண்டாட்ங்களில் இருந்து விலகி இருப்பவன் என்பதை என்னுடன் மிக நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் மட்டுமே அறிவர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் வழக்கறிஞர் சிவ.இராஜேந்திரன் அவர்களிடமிருந்து செல்போனில் அழைப்பு. நான் கொஞ்சம் வேலையாக இருந்ததால், அவரது அழைப்பை ஏற்காமல், பிறகுப் பேசலாம் என்று இருந்தேன். விடாமல் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தார். அவசரமாக அழைக்கிறார் என்பதை உணர்ந்து செல்போனை எடுத்தேன். ‘சுகு, நம்ம ஜேம்ஸ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டிக் கொண்டு செத்துவிட்டதாக சொல்கிறார்கள். நான் சென்னையிலிருந்து அங்கு வந்துக் கொண்டிருக்கிறேன். எஸ்.ஐ.யிடம் பேசினேன். வீட்டுக் கதவுப் பூட்டி இருப்பதால் நான் வந்தப் பிறகு திறக்கவும் என்று சொல்லிவிட்டேன். நீங்களும் தயாராக இருங்கள்’ என்று கூறி முடித்தார்.

எனக்குப் பழைய நினைவுகள் எல்லாம் ஓடின. அவர் ஒன்றும் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவுக்குக் கோழை அல்ல. என்ன நடந்தது என்ற குழப்பம் ஒருபுறம். மறுபுறம் நம்மை அறியாமலேயே நம்மில் புகுந்திருக்கும் சந்தேகம், விசாரணை என்ற அனுகுமுறை. நானும் எஸ்.ஐ.யிடம் குடும்பத்தினரும், வழக்கறிஞரும் வந்தப் பின்னர் வீட்டின் கதவைத் திறக்கவும் என்று சொன்னேன். அவர் நீங்கள் யாரும் வராமல் எதையும் செய்யமாட்டேன் என்று உறுதிக் கூறினார்.

நான், சிவ.இராஜேந்திரன், இறந்தவரின் குடும்பத்தினர், அவரது மனைவி, அவரது உறவினர்கள் மற்றும் ஊரார் முன்னிலையில் கதவை உடைத்துப் பார்த்தோம். இறந்தவர்களின் குடும்பத்தினர் பெண்ணின் வீட்டார் கொலை செய்துவிட்டனர் என்று குற்றஞ்சாட்டினர். அவ்வீட்டின் முன்னரே இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் அளவுக்கு பிரச்சனை எழுத்தது. அப்பெண்ணின் தந்தையார் மிகவும் பரிதாபமாக செய்வதறியாது நின்றுக் கொண்டிருந்தார். நான் தான் சூனியம் வைக்க வேண்டிய நபர் என்பது அப்போது அவர் நினைவில் இல்லை. நிலைமையை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தூக்கு மாட்டி உடல் தொங்கிக் கொண்டுடிருந்த படுக்கை அறைக்குள் சென்றோம். பிணம் அழுகிய துர்நாற்றம் மெல்லியதாக வீசியது. அந்த அறையின் மின்விளக்கு எரியவில்லை. பெரிய அளவிலான ‘டார்ச் லைட்’ முலம் உடலைப் பார்த்தோம். காவல்துறையினருடன் நாங்களும் புலன் விசாரணை மேற்கொண்டோம். தூக்கு மாட்டிக் கொண்டால் என்னென்ன தடயங்கள் இருக்குமோ அத்தனையும் இருந்தன. கழுத்தில் கயிறு இறுகி லேசாக கழுத்து எலும்பு உடைந்து தலைச் சாய்ந்திருந்தது. நாக்கு வெளியே தள்ளிக் கொண்டு பல் இறுகக் காணப்பட்டது. இரண்டு கை விரல்கள் இறுகி மூடிக் கொண்டிருந்தன. ஆண்குறியில் இருந்து விந்தும், மல வாயில் இருந்து மலமும் வெளியேறி இருந்தது. நானும், சிவ.இராஜேந்திரன் அவர்களும் தற்கொலைதான் என்ற முடிவுக்கு வந்தோம். காவல்துறையினரும் தற்கொலைதான் என முடிவுக்கு வந்து உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். உடல் அரசுப் பொது மருத்துவமனை சவக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டது.

காவல்துறையினர் என்னைப் புகார் எழுதச் சொல்லி முழு விசாரணைக்கும் என்னைப் பயன்படுத்திக் கொண்டனர். என்னை வைத்தே எல்லா வேலையும் முடித்துக் கொண்டால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அல்லவா? அங்கு மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்தது. பிணத்தை எந்த ஊரில் அடக்கும் செய்வது என்று இருதரப்பினரிடையே மீண்டும் சிக்கல். இறந்தவரின் மனைவியும், அவரது தந்தையாரும் இங்கேயே அடக்கம் செய்யலாம் என்கின்றனர். இறந்தவரின் குடும்பத்தினர் கிறிஸ்துவ முறைப்படி திருவாரூரில் அடக்கம் செய்ய வேண்டும் என்றனர். மறுநாள் ஒருவழியாக பிரேதப் பரிசோதனை முடித்து உடலை அமரர் ஊர்தியில் ஏற்றி அனுப்பி வைத்தேன். இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினேன். இருதரப்பினரும் தங்களுக்குள் நிலவிய பகமை உணர்வை மறந்து அந்த அமரர் ஊர்தியிலேயே திருவாரூர் பயணமாயினர்.

நான் கடமையை செய்யும் அரசு ஊழியர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளாதவன். ஆனால், பிணவரையில் நாறிப் போய் அழுகிய பிணங்களைத் தூய்மைச் செய்து, சதைகளை அறுத்து, வயிற்றைப் பிளந்து, மண்டை ஓட்டை உடைத்து, பிரேதப் பரிசோதனை செய்ய தடய அறிவியல் மருத்துவர்களுக்கு உதவிச் செய்யும் ஊழியர்களுக்கு எதாவது பணம் கொடுத்துவிட்டு வருவேன். அவர்கள் மது அருந்தாமல் இத்தொழிலில் ஈடுபட முடியாது. அவர்களது நிலைமைகளைத் தொடர்ந்து கவனித்து வருவதால், அவர்களுக்குப் பணம் கொடுக்காமல் வரமாட்டேன். பலர் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்ததும் உண்டு. அன்றைக்கும் இறந்தவரின் உறவினர்களிடம் சொல்லி பணம் வாங்கிக் கொடுத்துவிட்டுதான் வந்தேன். ஊருக்குக் கிளம்பும் முன் இறந்தவரின் தாயார் என்னிடம் தனியாக வந்து ரகசியமாக ‘தங்களுக்குப்  பணம் தருகிறேன், பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார். நான் அப்போதிருந்த மனநிலையில் பதில் ஏதும் கூறாமல் செய்கையிலேயே வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவ்விடத்தில் இருந்து நகர்ந்தேன். நான் என் நேர்மையைப் பறைசாற்றும் நேரம் அதுவல்ல என்பதால் அமைதியாக இருந்தேன்.

கதவை உடைத்துப் பிணத்தை இறக்கிய கனம்முதல் பிரேதப் பரிசோதனை முடித்து உடல் வண்டியில் ஏற்றும் வரையில் அனைத்தையும் ஒருவிதப் பதற்றத்துடன் கவனித்துக் கொண்டிருந்த அப்பெண்ணின் தந்தையார் ஊருக்குக் கிளம்பும் போது ‘நீங்கள் யார் என்று தெரிகிறது. நடந்தது நடந்துப் போச்சு, உங்க உதவியை மறக்கமாட்டேன்’ என்று கண் கலங்கக் கூறினார். அவர் சூனியம் வைக்க விட்ட சாபம் அத்தருணத்தில் நினைவில் நிழலாடியது. அன்று தூற்றிய வாய் இன்று நன்றி சொல்கிறது என்று எண்ணிக் கொண்டே அங்கிருந்துப் புறப்பட்டேன். மனித மனம் பற்றிய புரிதல் அறிய கால இடைவேளி தேவைப்படுவதை உணர்ந்தேன்.

காவல்துறையினரும், நாங்களும் தேடிய தற்கொலைக் குறிப்பு எதுவும் அங்குக் கிடைக்கவில்லை. தற்கொலையின் காரணம் முழுமையாக அறிய முடியவில்லை. தன் காதல் மனைவி சண்டைப் போட்டுக் கொண்டு ஊருக்குச் சென்றதுதான் காரணம் எனச் சொன்னார்கள். தற்கொலை செய்துக் கொள்பவர்களின் மனநிலைப் பற்றி நிறைய கற்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு வழக்கு என்ற  அனுகும் மனநிலையும், சக மனிதனின் மரணம் என்ற அவல மனநிலையும் மாறி மாறி உணர்த்தும் நிலை யாருக்கும் வரக் கூடாதது. என்ன செய்வது, நான் தேர்வுச் செய்துக் கொண்ட வாழ்க்கை இதுபோன்ற துயரத்தைச் சுமந்தே வாழப் பழக்கப்படுத்திவிட்டது.

Sunday, April 06, 2014

கச்சத்தீவுப் பயணம் (1): கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோயில் உருவாக்கம்!


சென்ற மார்ச் முதல் வாரத்தில் சென்னையிலிருந்து நண்பர் தேவநேயன் கைப்பேசிக்கு அழைத்தார். ‘நாம் இருவரும் ஒன்றாக வெளியூர் சென்று வெகு நாட்களாகிறது. கச்சத்தீவுக்குச் செல்வோமா? பேராசிரியர் (எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர்) அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். உங்களின் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அட்ரஸ் புரூப் மற்றும் போட்டோ ஐ.டி. நகல்கள் அனுப்பி வையுங்கள். நான் விண்ணப்பத்தை மின்னஞ்சலில் அனுப்புகிறேன். அதைப் பூர்த்தி செய்து அனுப்பி வையுங்கள்’ என்று கூறினார். அதன்படியே அனுப்பியும் வைத்தார். நானும் அவர் சொன்னபடி விண்ணப்பத்தையும், ஆவணங்களையும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு கூரியரில் அனுப்பி வைத்தேன். கச்சத்தீவுக்கு முதல் முறையாக செல்வது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

நமக்குச் சொந்தமான கச்சத்தீவு மீட்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை தமிழ்நாட்டில் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. 1974ல் மத்தியில் இந்திரா காந்தி, தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியின் போது, இந்திய அரசுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு முழுவதுமாக தாரை வார்க்கப்பட்டது. இதைக் கண்டித்தும், கச்சத்தீவை மீட்பது ஒவ்வொரு தமிழனின் கடமை என்றும் ஈழப் பிரச்சனைக் குறித்த கூட்டங்களிலும், போராட்டங்களிலும் நான் எழுச்ச்சியுடன் முழங்கியது நினைவுக்கு வந்தது.    

இலங்கையில் சிங்கள அரசு இனவெறியோடு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அக்காலத்தில், அதாவது 1983ம் ஆண்டு முதல் கச்சத்தீவுக்கு மக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. 1983 வரையில், அங்குள்ள புனித அந்தோணியார் கோயிலுக்குத் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை மார்ச் மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்குச் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பின்னர் 2001 முதல் ஆண்டிற்கு இருநாட்கள் மட்டுமே திருவிழா நடைபெற்றது. இனப் பிரச்சனை உக்கிரத்தில் இருந்த 1984 முதல் 2001 வரையில் இலங்கை அரசாங்கம் கச்சத்தீவுக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. 2002ல் சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்ற போது 2002, 2003, 2004 ஆகிய மூன்று ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று மீண்டும் அந்தோணியார் கோயில் திருவிழாவை நடத்தினர். அதாவது இந்த மூன்று ஆண்டுகளும் இலங்கை அரசு தமிழக மக்கள் உட்பட யாரையும் தீவுக்குள் அனுமதிக்கவில்லை. இதன் மூலம் தமிழக மக்கள் கச்சத்தீவுக்குச் சென்று வழிபடும் உரிமையை சிங்கள அரசு தொடர்ந்து மறுத்தது சிங்கள அரசின் இத்தடையை மீறி இராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மீனவ மக்கள் கச்சத்தீவுச் சென்று திருவிழாவை நடத்தினர். இதன் மூலம் தங்களின் உரிமையை நிலைநாட்டியுள்ளனர். இந்த உரிமையைப் பெற்றுத் தந்ததன் பின்னணியில் அப்போதைய பாம்பன் பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகள் இருந்துள்ளார் என்பது போராட்ட வரலாறு. அவரின் முயற்சியாலும், ஊக்கத்தாலும்தான் இராமேஸ்வரம் பகுதி மீனவ மக்கள் தடையை மீறி கச்சத்தீவுச் சென்றனர். இப்போராட்ட வரலாறு குறித்துப் பின்னர் விரிவாக எழுதுகிறேன். 2003க்குப் பின்னர் கச்சத்தீவில் திருவிழாவும் நடைபெறவில்லை. அங்கு எவரையும் சிங்கள அரசு அனுமதிக்கவுமில்லை. 

இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்று 2009க்குப் பின் அங்கு நிலைமை சீரானப் பிறகு 2010 முதல் மீண்டும் தொடங்கி கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா நடைபெற்று வருகிறது. இருநாட்டு மக்களும் இயல்பாக பெரும் கெடுபிடிகளின்றி ஆண்டுதோறும் அங்குச் சென்று புனித அந்தோணியாரை வழிபட்டு வருகின்றனர். அனுமதியின்றி கச்சத்தீவு சென்று திருவிழா நடத்திய பிற்பாடு, இலங்கை அரசாங்கம் தமிழக மீனவர்களும், பொதுமக்களும் ஆண்டுதோறும் கச்சத்தீவுக்குச் சென்று வருவதை ஒழுங்குப்படுத்தியது. கச்சத்தீவு செல்வோர் முறைப்படி இராமநாதபுரம் மாவட்டம், வேர்கோடு பங்குத்தந்தை மூலம் தமிழக அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசுப் பயணிகளின் பின்னணிப் பற்றிக் காவல்துறை, மத்திய/மாநில உளவுத்துறை மூலம் ஆய்வுச் செய்து பின்னர் முறைப்படி அனுமதி அளிக்கும். இன்றுவரையில் இம்முறைக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.     

ஓரிரு நாட்கள் கழித்து தேவநேயன் மீண்டும் பேசினார். ‘கச்சத்தீவுக்குச் செல்ல நமக்கு சிறப்பு அனுமதிக் கிடைத்துவிட்டது. நான், நீங்கள், என் அண்ணன் தாமஸ் ஆகியோர் செல்கிறோம். வரும் மார்ச் 15 அன்று  இராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து காலையில் படகு மூலம் செல்கிறோம், மாலையில் அந்தோணியார் திருவிழா தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கோயிலில் கொடியேற்றம். பிறகு சிலுவைப் பாதை ஊர்வலம். இரவு அங்குத் தங்குகிறோம். 16 அன்று காலையில் திருப்பலிப் பூசை, வழிபாடு முடிந்த பின்னர் அங்கிருந்துப் புறப்படுகிறோம். நாம் 13 அன்று இரவுப் புறப்பட்டு 14 காலையில் இராமேஸ்வரம் சென்றடைகிறோம். அன்று பகலில் இராமேஸ்வரம் பகுதிகளைச் சுற்றிப் பார்ப்போம். இரவுத் தங்கிவிட்டு காலையில் கச்சத்தீவுப் புறப்படுகிறோம்’ என்று ஒரு ஆசிரியர் மாணவருக்குச் சொல்வது போல் சொன்னதோடு, பயணத்திற்குத் தேவையானவற்றை பட்டியலிட்டு எடுத்துக் கொள்ள சொன்னார். மேலும், எவை எல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் பட்டியலிட்டார். நானும் சரி என்று சொல்லிவிட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தேன். கச்சத்தீவுப் பற்றி ஓரளவுக்கு அறிந்திருந்தாலும், அங்கு ஏன், யாரால் அந்தோணியார் கோயில் கட்டப்பட்டது. அத்திருவிழாவின் சிறப்புகள் என்ன என்பது குறித்த விவரங்களை அறிந்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவலும் கூடியது. அதுகுறித்த தேடுதலும் தொடங்கியது.  

கச்சத்தீவு இராமேஸ்வரம் தீவுலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கையிலுள்ள நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக்ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைத்துள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரம், இலங்கை நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து 45 நிமிடங்கள் பயணம் செய்தால் கச்சத்தீவை சென்றடையலாம். சுமார் இரண்டரை சதுர கி.மீ. சுற்றளவுக் கொண்ட மணற் திட்டாக (Sand Dune) உள்ள அழகிய தீவிது. இருநாட்டு மீனவர்களும் கடலில் இயற்கைச் சீற்றத்தினாலோ அல்லது கடற் கொள்ளையர்களாலோ ஆபத்து ஏற்பட்டால், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இறைவனிடம் வேண்டுவது வழக்கம். மேலும், கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் போது பெருமளவில் மீன்கள் படுதலுக்காகவும் வேண்டுதல் செய்வது வழக்கம். கடலில் ஆபத்து நேர்வதிலிருந்து தங்களை இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில், சென்ற நூற்றாண்டில் கச்சத்தீவில் ஒரு சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயத்தைச் சீனிக்குப்பன் படையாட்சி என்பவர் நிறுவியுள்ளார். அதுகுறித்த வரலாற்றுக் குறிப்புகளைப் பார்ப்போம்.

'1913இல் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுப் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பாலை தீவிலும் 1895இல் புனித அந்தோனியர் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் இக்கடற்பரப்பில் மீன் பிடித்தலுக்காகச் சென்ற கரையோர மீனவர்கள் கடலில் அடிக்கடி தாம் சந்திக்கும் ஆபத்துக்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும், தொழில் முயற்சிகள் நல்லமுறையில் கைகூட வேண்டுமென்று கருதி “பாதுகாவலராக” புனித அந்தோனியார் சொரூபம் ஒன்றை வைத்து சிறிய ஆலயம் ஒன்றைக் கட்டியிருக்க வேண்டும் என சொல்லப்படுகின்றது. ‘இந்தக் கோவிலை நம்புதாளை என்ற சிற்றூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கட்டினார். அவர் சென்ற படகு புயலில் சிக்கியபோது அவர் அந்தோனியாரை வேண்டிக் கொண்டார். அதன் காரணமாக அவர் புயல் அபாயத்திலிருந்து தப்பியதாகவும் அதனால் அவர் அந்தக் கோயிலைக் கட்டினார்” (பி. நாராயணன் 1983) என்றும் கூறப்படுகின்றது. “இராமாயணபுரத்தின் 1972 வர்த்தமானப்படி இத்திருவிழாவின்போது இராமேஸ்வரத்துக்கு அண்மையிலுள்ள தங்கச்சி மடத்திலிருந்து ஒரு கத்தோலிக்கக் குருவானவர் கச்சதீவுக்குப் போய் அங்கு கிருவிருந்து நடத்துவார். இந்தத் தேவாலயம் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவரான சீனிக்குப்பன் படையாட்சியால் கட்டப்பட்டது (ஏ. சூசை ஆனந்தன் 1994)’ என்று ‘கச்சத்தீவு: அன்றும் இன்றும்’ என்ற நூலில் யாழ். பல்கலைக்கழகப் புவியியற்றுறை விரிவுரையாளர் ஏ. சூசை ஆனந்தன் கூறியுள்ளார். 

‘1939-ஆம் ஆண்டில், இராமநாதபுர மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாழையைச் சார்ந்த மீனவர், சீனிக்குப்பன் என்பவர் கச்சத்தீவில் அந்தோணியார் கோவிலை எழுப்பினார். அவரைத் தொடர்ந்து இராமேசுவரம் ஓலைகுடா மீனவக் கிராமத்தைச் சார்ந்த அந்தோணிப்பிள்ளை எனும் மீனவர் அக்கோவிலுக்கு ஓடுகள் வேய்ந்தார் (2:1:1951). புனித அந்தோணியார், ஏசுவின் சீடர்களில் ஒருவர். இவரே, கச்சத்தீவின் காப்புக் கடவுள்; பரவர் குல பாதுகாவலர் எனக் கொண்டனர், வணங்கி வந்தனர். 1972இல் இந்திய அரசு வெளியிட்ட அரசிதழ் ஆணையின்படி, இராமநாதபுரம் அருகிலுள்ள தங்கச்சி மடத்திலுள்ள கத்தோலிக்கப் பாதிரியார் பொடேல் (பிரஞ்சுக்காரர்) அந்தோணியார் திருவிழாக் காலங்களில் கச்சத்தீவுக்குச் செல்வார். வழிபாடு நடத்துவார். அன்று கச்சத்தீவில் அந்தோணியார் விழாவும், பண்ட மாற்று வணிகமும் அரசியல் தலையீடு இல்லாமல் நடந்தது. கோவில் கண்காணிப்பு யாழ்ப்பாண கிறித்தவத் திருச்சபையிடமே இருந்தது’ என்று ‘வரலாற்றில் கச்சத்தீவு’ என்ற நூலில் உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன் கூறியுள்ளார். இதுதான் கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோயில் கட்டப்பட்ட வரலாற்று சுருக்கம்.

கச்சத்தீவுக்குப் பயணத்திற்காக இராமேஸ்வரம் செல்லும் நாளும் வந்தது. மார்ச் 13 அன்று இரவு 11.45 மணிக்கு சரியான நேரத்திற்கு விழுப்புரம் ரயில் நிலையத்திற்குப் பாண்டியன் விரைவு வண்டி வந்தது. நான் ஏற வேண்டிய பெட்டியின் கதவருகே நின்றுக் கொண்டு என்னை வரவேற்றார் தேவநேயன். அவர் கொண்டு வந்தப் புட்டியிலிருந்த சிறிதளவு தண்ணீரை குடித்து விட்டு எனக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் படுத்துக் கொண்டேன். ரயில் தனக்கேயுரிய ‘தடக் தடக் தடக்’ சத்தத்துடன் வேகமாக ஓடியது. என் சிந்தனையும் அதனுடனேயே ஓடிக் கொண்டிருந்தது.   

பயணம் தொடரும்...

Thursday, November 21, 2013

சிறு சலனத்தையும் ஏற்படுத்தாத ஒரு போலீஸ் அதிகாரியின் மரணம்!

1988-இல் நாங்கள் எல்லாம் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலைய வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சட்டவிரோதக் காவலில் பல நாட்கள் வைக்கப்பட்டிருந்த நேரம். விசாரணை என்ற பெயரில் எந்த வசதியும் இல்லாத, சிறிய அளவிலான, ஒரு இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தோம். நாங்கள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக கண் விழித்துப் பார்த்துக் கொள்ள அறைக்குள் ஒரு காவலரும், வெளியே பல காவலர்களும் காவலுக்கு இருப்பர். அவர்களுக்கு தூக்கம் வந்து கண் அயரும் போது திடீரென விழித்துப் பார்ப்பார்கள். அந்த எரிச்சலான நேரத்தில் யாராவது நாங்கள் கண் விழித்திருப்பது தெரிந்தால் அவ்வளவுதான். கடுமையாக தாக்குவார்கள். நாங்கள் அவர்கள் பிடியிலிருந்து தப்பிக்கவே விழித்திருப்பதாக எண்ணிக் கொண்டு அவ்வாறு செய்வார்கள். அது எப்போதாவது நடக்கும் என்பதால் அதை நாங்கள் தாங்கிக் கொள்வோம். அந்த நேரத்தில் நாங்கள் மனதிற்குள் கெட்ட வார்த்தைகளில் அவர்களைத் திட்டித் தீர்ப்போம்.

அதுபோன்ற ஒரு இரவில் ஒரு மணி இருக்கும்.  திடீரென யாரோ பதட்டமாக அறைக் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே வருவது போன்று உணர்ந்தோம். நாங்கள் காவலில் இருந்த நாட்களில் இரவு நேரங்களில் நன்றாக தூங்கியதே கிடையாது. அப்போது எதிரே, நல்ல சிவப்பு நிறத்தில், உயரமான ஒரு போலீஸ் அதிகாரிக்கு இருக்க வேண்டிய லட்சணத்துடன் டீக்காக உடை அணிந்து ஒருவர் வந்து எங்கள் அருகில் நின்றார். அவர் எங்களை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரி என்பதைப் புரிந்துக் கொண்டோம். அவர் கையில் தோட்டா நிரம்பிய நவீன வகைக் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. சினிமாவில் வருவது போல விராலால் அந்தத் துப்பாக்கியை சுற்றிக் கொண்டே இருந்தார். அவரோடு வந்த கீழ்நிலை காவலர்கள் தங்களின் காலால் படுத்துக் கொண்டு இருந்த எங்களை எட்டி உதைத்து எழுப்பினார். நாங்கள் பதட்டத்துடன் எழுந்தோம்,

“டேய்.. இந்தப் பள்ளிப் பசங்களும், பறைப் பசங்களும் சேர்ந்துக்கிட்டு தமிழ்நாட்டை விடுதலைப் பண்ணப் போறீங்களாடா” என்று தொடங்கி எழுத முடியாத சொற்களால் எங்களைத் திட்டித் தீர்த்தார் அந்த போலீஸ் அதிகாரி. அதன்பின்னர் எங்களில் ஒவ்வொருவராக அழைத்துப் பெயர் ஊரைக் கேட்டுக் கடுமையாக தாக்கிச் சித்திரவதை செய்தார். “முந்திரிக்காட்டில் வைத்து உங்களை என்கவுன்டர் செய்துவிடுவேன்” என்று மிரட்டினார். தொடர்ந்துப் பல மணி நேரம் எங்களுக்கு வித விதமாக சித்திரவதைகள் நடந்தன. கொள்கை என்று ஒன்று இல்லை என்றால் அந்தச் சித்திரவதைகளை எங்களால் தாங்கிக் கொண்டுடிருந்திருக்க முடியாது. அந்தத் தருணங்களை இன்று நினைத்தாலும் மனதில் ஏதோ ஒரு அச்சம், பதற்றம் ஏற்படும். அன்று நாங்கள் அனுபவித்த சித்திரவதைகளைப் பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகக் கூறுகிறேன்.

பின்னர் அந்த போலீஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி என்பதைப் பின்னர் அறிந்துக் கொண்டோம். திருச்சி சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டரான அவர் திருச்சி, கடலூர், விழுப்புரம் என இந்த மாவட்டங்களில் தமிழரசன் தோற்றுவித்து வழிநடத்திய “தமிழ்நாடு விடுதலைப் படை” என்ற தலைமறைவு அமைப்பினரை வேட்டையாடுவதையே குறிக்கோளாக கொண்டுக் கொலை வெறியுடன் செயல்பட்டவர்களில் முக்கியமனவர் என்று தெரிந்துக் கொண்டோம். மூளையே இல்லாமல் சித்திரவதை என்ற கொடிய அனுகுமுறையை மட்டுமே அறிந்தவர் அவர். தீவிர சிந்தனையுடைய, செயல்பாடுடைய அமைப்புகளில் உள்ளவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என எம்-எல் இயக்கத்தினரை ஒடுக்கவே அவர் பணிக்கப்பட்டு, அதனை அவர் செவ்வனே செய்துக் கொண்டிருந்தார், அப்போதெல்லாம் மனித உரிமைகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத காலம். எத்தனையோ தோழர்கள் சித்திரவதைக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு, உயிரிழந்ததும் உண்டு. இந்த அடக்குமுறைகளை யாரும் கேள்விக் கேட்க முடியாத சூழல் இருந்த காலம்.                    

1987, செப்டம்பர் 1-இல் தோழர் தமிழரசன் உள்ளிட்ட நான்கு பேரை, பொன்பரப்பி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட போது சுட்டுக் கொன்றதன் பின்னணியில் செயல்பட்டதில் மிக முக்கியமானவர். அப்பழியை பொதுமக்கள் மீது போட்டுத் திசைத் திருப்பியதை அனைவரும் அறிவர். அப்போது தமிழரசனை கொல்ல தமிழக அரசு ஒரு கோடி செலவு செய்தது என்றால் பாருங்கள். தமிழரசனை கொன்றதில் முக்கியமானவர் தான் இந்த இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி. அவரின் சித்திரவதைகள் எங்களுக்கு எந்தளவுக்குக் மறக்க முடியாது என்பதற்குச் சான்று, பழனிச்சாமி என்ற பெயரைக் கேட்டாலே அவர் ஞாபகம்தான் வரும்.

திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில் எங்கள் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் சாட்சி சொல்ல வந்த போது அவரை மீண்டும் சந்தித்தோம். அப்போது அவர் தோழர் பொழிலனை பேச அழைத்த போது, அவர் எங்களைப் பார்த்து அடிக்கடி சொல்லும் ஒரு கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தி திட்டியதை மறக்க முடியாது. அதன் பின்னர், இடைப்பட்ட காலத்தில் திருச்சி ராம்ஜி நகரில் உள்ள ‘கேப்மாரி” சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்துச் சென்று, இதேபோல் சித்திரவதைச் செய்து கொன்றுவிட்டதாக புகார் எழுந்தது. அதன்பின்னர், சில காலம் மனநிலை பிழன்று திரிந்ததாகவும் கேள்விப்பட்டேன். பிறகு டி.எஸ்.பி. பதவி உயர்வுப் பெற்று பணியில் இருந்ததாகவும் கூறினார்கள்.

நேற்றைய தினம் காலையில் ஒரு நண்பர் கைபேசியில் அழைத்து இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி இறந்துப் போய்விட்டார் என்றும், அவரது உடல் இறுதி சடங்கிற்காக குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள அவரது சொந்த கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். எனக்கு வருத்தப்படுவதா, மகிழ்ச்சி அடைவதா என்ற ஊசலாட்டம் எழுந்தது. ஒருவரது மரணம் நமக்கு இப்படி ஒரு ஊசலாட்டத்தைத் தந்துள்ளதை எண்ணியபடியே இருந்தேன். அதற்குக் காரணம் மக்களின் விடுதலைக்குப் பாடுபட்ட எண்ணற்ற தோழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியவர் என்பதுதான். அந்த தோழர்களின் வழிமுறையில் நமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் என்பது என்றும் போற்றப்பட வேண்டியது.

சுருக்கமாகச் சொல்லப் போனால், திருச்சி – கடலூர் மாவட்ட எல்லையில் வெள்ளாற்று கரையிலுள்ள கிராமங்களிலும், முந்திரிக்காடுகளிலும் இவர் செய்த சித்திரவதையால் கதறிய கதறல்கள் இன்றுகூட கேட்கக்கூடும். அவை மார்க்சிய – லெனினிய தத்துவத்தை ஏற்றுச் செயல்பட்ட எண்ணற்ற தோழர்களின் வெளிவுலகிற்குத் தெரியாத, பதிவுச் செய்யப்படாத வரலாற்றின் கதறல்களின் எதிரொலிகள்.

இப்போது உங்களுக்குப் புரியும் இந்தக் கொடிய போலீஸ் அதிகாரியின் மரணம் ஏன் என்னுள் எந்தவித சிறு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்று...              

Friday, October 25, 2013

ஒரு சிறைக் காவலரும், மரண தண்டனை ஒழிப்பும்!

1988-ல் நானும், நண்பர்களும் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலைய வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை அரசரடியில் உள்ள நடுவண் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். அப்போது சிறைவாசிகளுக்கு 15 நட்களுக்கு ஒருமுறை திரைப்படம் காண்பிப்பார்கள். சிறைவாசிகளின் இறுக்கம் நிறைந்த வாழ்வு சற்று இலகும் தருணம் அவை. எங்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

மிசா காலத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த சிட்டி பாபு போன்றவர்களை கொன்றும், எண்ணற்றவர்களைத் அடித்து உதைத்துத் துன்புறுத்தியும் புகழ்ப் பெற்ற சிறை அதிகாரி வித்யாசாகர். அவர் அப்போது சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்தார். அவர் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பு. அவர் மதுரை சிறையைப் பார்வையிட வருவதாகவும், சிறைவாசிகளின் குறைகளைக் கேட்டறிவதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது.

நாங்கள் எப்போதுமே சிறை அதிகாரிகளின் நேரடிக் பார்வையிலுள்ள ஆறாம் பிளாக் செல்லில் அடைக்கப்படிருந்தோம். அதோடு மட்டுமல்லாமல், தீவிரவாதிகள் அல்லவா? ஆகையால், சிறை அதிகாரிகள் எங்களுக்கு முடிந்தவரை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இருந்தாலும், திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எங்களுக்குள் எழுந்து, நீண்ட விவாதம் நடந்தது. திரைப்படம் பார்க்க சிறை அதிகாரிகளிடம், அதுவும் கொடூரமான மனித உரிமை மீறலை நிகழ்த்திய அதிகாரியிடம் கேட்பதா என்ற மாபெரும் விவாதம். இதற்குப் புரட்சிகர பிம்பம் இக்கோரிக்கையை எழுப்ப பெரும் தடையாக இருந்தது. நானும், சில தோழர்களும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். பின்னர் ஒரு வழியாக கோரிக்கையை எழுப்புவது என்று முடிவுக்கு வந்தோம். இதில் ஆர்வமாக இருந்த என்னிடமே அந்தப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நாளும் வந்தது. சிறை அதிகாரிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டனர். சிறைவாசிகள் ஏதாவது குறை சொல்லிவிடக் கூடாது என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். சிறைவாசிகள் வரிசையாக தங்கள் பிளாக் மற்றும் செல்லின் முன் வந்து நிற்க வேண்டும். அதிகாரிகள் வரும் போது வலது கையை உயர்த்தி நீட்ட வேண்டும். அப்போது அதிகாரி நிற்பார். அச்சமயத்தில் அவரிடம் குறைகளைக் கூற வேண்டும். இதுதான் சிறை நடைமுறை. கையை நீட்டி குறை சொன்ன சிறைவாசிகளுக்கு அந்த அதிகாரி சென்றவுடன் கடும் தண்டனை விதிக்கப்படும். சிறை காவலர்கள் அடித்து துவைத்து விடுவார்கள். அவர்களுக்கு சிறை விதிகளை தளர்த்தி அளிக்கப்டும் பீடி, சிகரெட், இன்ன பிற நிறுத்தப்படும். அவரைப் பொருத்தவரையில் மட்டும் சிறை விதிகள் கடுமையாக பின்பற்றப்படும். இதனால், பெரும்பாலும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் மட்டும் தங்களின் ‘ரெமிஷன்’ முன்விடுதலைக் குறித்து ஏதாவது கேட்பார்கள். மற்றபடி அந்த உயரதிகாரிகளின் வருகை ஒரு சடங்காகவே நடந்து முடியும். ஒழுங்காக ‘மாமூல்’ அளிக்காத சிறைகளுக்கே இதுபோன்ற உயரதிகாரிகள் வருகை இருக்கும் என்ற செய்தியும் உண்டு.

நாங்களும் எங்கள் செல்லின் முன்பு வரிசையாக நின்றிருந்தோம். சிறை அதிகாரிகளுக்கு எங்கள் மீது மரியாதை இருந்தாலும், ஒருபுறம் சந்தேகமும் எப்போதும் உண்டு. ஏதாவது சிக்கல் ஏற்படுத்திவிடுவார்கள் என்ற அச்சம்தான்.

அதிகாரிகள் புடைசூழ வித்யாசாகர் தூரத்தில் வருவதைப் பார்த்தோம். மிகக் கொடூரமான அதிகாரியை சந்திக்க நாங்களும் ஆவலுடன் இருந்தோம். எங்களுக்குப் பாதுகாப்புக்காக நிற்கும் சிறைக் காவலர்கள் கஞ்சிப் போட்டு தேய்த்த உடையின் மிடுக்குடன், மிகுந்த விரைப்புடன் நின்றிருந்தனர். மிக அருகில் வித்யாசாகர் வந்து எங்களிடம் நின்றார். வரிசையில் என்னருகில் நின்றிருந்த பொழிலனிடம் நலம் விசாரித்தார். ‘அப்பா (பாவலரேறு பெருஞ்சித்திரனார்) நலமாக இருக்கிறார்களா’ என்று கேட்டார். அவரும் பதில் அளித்தார். மிசாவில் சென்னை நடுவண் சிறையில் இருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், எம்.ஆர்.இராதா ஆகிய இருவர் மட்டுமே வித்யாசாகரின் தடிக்குத் தப்பியவர்கள் என்பது கூடுதல் தகவல். அந்த கொடூர வரண்ட உள்ளத்திற்குள் இவர்கள் இருவர் மீதும் ஏதோ ஒரு வகையில் மரியாதையும், ஈரமும் இருந்துள்ளது. எங்கள் அருகில் நின்ற அவரின் தோற்றமும், பேச்சும் எந்த வகையிலும் அவரின் கொடூர முகத்தைப் பிரதிபலிக்கவில்லை.

அடுத்து என்னருகில் வந்தவுடன் நானும், ஈகையரசன் அண்ணனும் திடீரென எங்களது கையை உயர்த்தினோம். அன்றாடம் எங்களை நலம் விசாரித்து கவனித்துக் கொள்ளும் சிறை அதிகாரிகள் முகத்தில் அதிர்ச்சி ரேகை ஓடியது. நான் ‘சார்! எங்களுக்கும் திரைப்படம் காண்பிக்க வேண்டும்’ என்றேன். ஈகை அண்ணனும் ஏதோ சொல்ல வந்தார். அதற்குள் வித்யாசாகர் ‘அலோ தெம்’ என்றார். அதாவது, இவர்களை அனுமதிக்கவும் என்று கூறினார். சிறை அதிகாரிகளுக்கு சற்று நிம்மதி அடைந்ததைக் காண முடிந்தது. தூய தமிழில் பேசுவதையே வழக்கமாக கொண்ட எங்களுக்குக் காவல்துறை, சிறைத்துறை அதிகாரிகளை ‘அய்யா’ என்ற அழைக்க மனம் வராது. அதில் ஏதோ அடிமைத்தனம் இருப்பதாக உணர்வோம். கீழ்நிலையில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரிகளை மூச்சுக்கு மூச்சு ‘அய்யா.. அய்யா’ என்று விளிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எங்களுக்கான திரைப்படம் பார்க்கும் நாளும் வந்தது. சிறைக்குள் பெரிய திரையரங்கம் ஒன்றைக் கட்டி வைத்துள்ளார்கள். சிறை நுழைவு வாயிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் சிறைவாசிகளுக்கான பிரத்தியோக திரையரங்கு உள்ளது. மாலை 6 மணிக்கு அடைப்புக் கணக்கு முடிந்து அனைவரும் பிளாக், செல்லில் அடைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு பிளாக், செல்லாக திறந்து அனைவரையும் எண்ணி வரிசையாக அனுப்புவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிறைவாசிகள் தப்பித்துச் செல்லும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளதால் கடும் பாதுகாப்பு இருக்கும். எங்களின் வரிசைக்கு அருகிலேயே சிறைக் காவலர்களும் வரிசையாக நிற்பார்கள். வரிசை நத்தைப் போல் ஊர்ந்து பொறுமையாக நகர்ந்து, நகர்ந்து திரையரங்கை அடைய ஒரு மணிநேரம்கூட ஆகும்.

திரையரங்கை நெருங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அருகில் ஒரு நீண்ட நெடிய மதில் சுவறு கொண்ட மேற்கூரை இல்லாத அறைக்குள் ஒரு சிறிய கோயில் ஒன்று தென்பட்டது. அந்த அறை பெரிய இரும்புக் கதவுப் போட்டு பூட்டப்பட்டிருந்தது. அந்தக் கதவு வழியாக அந்த திறந்த வெளி அறைக்கு செல்ல நிறைய படிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட நேரம் நின்றுக் கொண்டே இருந்ததினால் எனக்கு சற்று கால் வலி ஏற்பட்டது. நான் அந்தப் படிக்கட்டுகளின் ஒன்றில் சற்று அமர்ந்தேன். இதை தூரத்தில் இருந்துக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு நன்கு அறிமுகமான சிறைக்காவலர் ஒருவர் என்னை நோக்கி வேகமாக ஓடிவந்தார். என்னை மிகவும் கோபமாகவும், சொல்ல முடியாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். ஒரு சமயத்தில் என்னை அடிக்கவும் முற்பட்டார். ஆனால், அடிக்கவில்லை.

சிறைவாசிகள் யாருக்கும் அந்த சிறைக் காவலரைப் பிடிக்காது. கடுமைக்குப் பெயர் பெற்றவர். சின்ன தவறுக்குக்கூட சிறைவாசிகளை அடிக்க தயங்கமாட்டார். எனக்கு சிறிய வயது என்பதாலும், எந்தத் தவறும் செய்யாத போதும் அவர் என்னிடம் நடத்துக் கொண்ட விதம் மிகவும் அவமானமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சக தோழர்களுக்கும், பிற சிறைவாசிகளுக்குமே ஒன்றும் புரியவில்லை. என் கண்ணில் எவ்வளவு அடக்கியும் நீர் வழிந்து ஓடியது. என் அழுகையை நான் மறைக்க முயன்று தோல்வியுற்றேன்.

இந்த மன அழுத்தத்துடனே நான் திரையரங்கிற்குச் சென்றேன். அன்றைக்கு ‘அந்தமான் காதலி’ படம் திரையிட்டார்கள். சிவாஜி, சுஜாதா ஆகியோர் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்த படமது. எனக்குப் படம் பார்க்க மனம் ஒப்பவில்லை. எல்லோரும் ரசித்துப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் அவ்வேளையில் நான் மட்டும் அகமும், புறமும் அழுதுக் கொண்டே இருந்தேன். அந்தக் காவலர் நடந்துக் கொண்ட விதம் என்னை திரும்பத் திரும்ப நினைவில் வந்து அழுத்தியது. எப்போது படம் முடிந்து செல்லிற்கு செல்வோம் என்ற எண்ணத்திலேயே அமர்ந்திருந்தேன்.

மற்ற சிறைவாசிகள் எல்லாம் தரையில் அமர்ந்திருந்தனர். எங்களைத் தனிமையாக வைத்துப் பாதுக்காக்க வேண்டும் என்பதால், நாங்கள் மட்டும் பள்ளிக்கூட மர பெஞ்சு போன்ற பெஞ்சில் அமர்ந்துப் படம் பார்க்க வைக்கப்பட்டோம். டூரிங் தியேட்டரில் தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட் போல. திடீரெனெ படத்தை நிறுத்திவிட்டு விளக்கைப் போட்டுப் பார்ப்பார்கள். எங்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பார்கள். ஒருவழியாக படம் முடிந்தது. நாங்கள் எங்களது செல்லிற்குத் திரும்பினோம். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. சிறைக் கம்பியின் ஊடாக வெளியே மெல்லிய ‘குண்டு பல்ப்’ வெளிச்சத்தில் தெரியும் சிறைப் பகுதிகளின் நிழல் படிமங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டே கிடந்தேன். அழுகையும், அரைகுறை தூக்கமும் கலந்த அந்த இரவு என் வாழ்வில் மறக்க முடியாத சூது கவ்விய இரவு எனலாம்.

வழக்கம் போல் பொழுது விடிந்தது. தினம்தோறும் காலை 6 மணிக்கு கீழ்நிலை சிறை அதிகாரிகள் வந்து எங்களை எழுப்பி, கணக்கெடுத்துச் செல்வார்கள். அதாவது, நாங்கள் அனைவரும் உயிரோடு இருக்கிறோமா? என்று பார்த்துச் செல்வார்கள். வழக்கமாக வரும் அந்த அதிகாரியும், சிறைக் காவலர்களும் வந்து கணக்கெடுத்தார்கள். பின்னர், கதவுகளைத் திறந்து எங்களை காலைக்கடன் முடிக்கவும், குளிக்கவும் வெளியே அனுப்பினார்கள். அந்தக் குழுவில் நேற்று என்னிடம் மிக மோசமாக நடந்துக் கொண்ட சிறைக் காவலரும் இருந்தார். நான் அவசரம் அவசரமாக வெளியே வந்து நேற்று நடந்த சம்பவம் பற்றி அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் அளித்த விளக்கம் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் என் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்ச்சி அடைந்தேன். இவ்வளவு கடுமையாக நடந்துக் கொள்ளும் அந்த சிறைக் காவலருக்குள் இப்படி ஒரு மனிதாபிமானமா? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எண்ணி எண்ணிப் பெருமைப்படும் அளவுக்கு அவர் மீது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் மரியாதை கூடியது. அவர் எங்களுக்குள் மிகவும் உயர்ந்து நின்றார். எளிய மனிதர்களுக்குள் நல்ல குணங்கள் குடிக் கொண்டிருக்கும் என்பதற்கு அவரும் ஒரு நிதர்சமான சாட்சி.

அவர் சொன்ன விளக்கத்தை அப்படியே இங்குத் தருகிறேன். “தம்பி, நேத்து நான் நடந்துக் கொண்ட விதத்துக்கு நீங்க வருத்தப்பட்டிப்ருப்பீக. ஏன் எல்லாருமே வருத்தப்பட்டிருப்பீக. கொஞ்சம் வயசு தம்பி உங்களுக்கு. நீங்கள் எல்லாம் இன்னும் நிறைய வருசம் வாழனும். அந்த இடத்தில் உங்க கால் படக் கூடாது. அதான் கொஞ்ச கோவமா நடந்துகிட்டேன். போய்க் கால வேலைய முடிச்சி, குளிச்சி சாப்பிடுங்க தம்பி..” என்று கூறிவிட்டு சென்றார். அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். மெல்ல மெல்ல அந்த உருவம் என்னை விட்டு அகன்று மறைந்துச் சென்றது.

அவர் என் கால் படக் கூடாது என்று சொன்ன இடம், மரண தண்டனையை நிறைவேற்றும் “தூக்கு மேடை” இருக்கும் இடம் என்று தெரிந்த போது மனது கனத்தது. ஒப்புக்குகூட அந்த இடத்தில் எங்களைப் போன்றவர்களின் கால்கள் படக் கூடாது என்று நினைத்த, அந்த கடுமையான தோற்றம் கொண்ட மனதிற்குள் எத்தனை அழகானதொரு மனிதநேயம். சிறிய தப்புக்குக்கூட கடும் தண்டனை தரும் அந்த மனதிற்குள் மரண தண்டனைக்கு எதிரான உயரிய சிந்தனை. என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத சம்பவம் இது. அவர் மறக்க முடியாத உயிரும் கூட.  

அக்டோபர் 10: இன்று உலக மரண தண்டனை ஒழிப்பு நாள்…