Showing posts with label உச்சநீதிமன்றம். Show all posts
Showing posts with label உச்சநீதிமன்றம். Show all posts

Wednesday, April 14, 2021

மேலவளவு தலித்துகள் படுகொலை வழக்கு: அதிமுக, திமுகவும் ஒரே நிலைதான் எடுத்தன...

கர்ணன் படச் சர்ச்சைக் குறித்து பலரும் பேசி வருகின்றனர். 1995 என்பதற்குப் பதிலாக 1997 என்று கொடியன்குளம் சம்பவம் நடந்த காலத்தை மாற்றி சொல்லியுள்ளது தவறுதான். 1991 – 1996 ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி. 1996 – 2001 வரை கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, அதனைத் திருத்திவிடுவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாக செய்தி வந்துள்ளது.

இந்தத் தவறை வைத்துக் கொண்டு ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டும்தான் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நடந்தது போலவும், திமுக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் பலரும் எழுதியுள்ளனர். மனுஷ்யபுத்திரன் தீக்குளித்துவிடுவார் போல. ஆனால், அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறின என்பதுதான் உண்மை.

1996-இல் மேலவளவில் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 6 தலித்துகள் அப்பகுதியிலுள்ள ஆதிக்கச் சாதியினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த முருகேசன் தலையை வெட்டி வீசினர் சாதி வெறியர்கள். முருகேசன் திமுகவைச் சேர்ந்தவர்.

இச்சம்பவம் நடந்த நாள் முதலே வழக்கறிஞர் பொ.இரத்தினம், உடன் பல்வேறு வழக்கறிஞர்கள் குழுவாகப் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிக் கிடைக்கப் பாடுபட்டனர். அம்மக்களுக்குச் சட்ட ரீதியாக உதவிகள் செய்தனர்.

இவ்வழக்கில் 41 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை உயர்நீதின்ற உத்தரவின் அடிப்படையில் சேலத்திற்கு மாற்றப்பட்டு நடந்தது. விசாரணை முடிந்து 27.06.2001 அன்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஏ.ஆர்.இராமலிங்கம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மீதமுள்ள 24 பேரையும் விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென அரசு வழக்கறிஞர் (அதிமுக) அரசுக்கு அறிக்கை அளித்தும், அபோதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.

தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் அனைவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், என்.பால்வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு 19.04.2006 அன்று தீர்ப்பு வழங்கியது.

அத்தீர்ப்பில் விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், மீதமுள்ளவர்களுக்குப் போதிய ஆதாரங்கள் இருந்தும் அரசு மேல்முறையீடு செய்யாத காரணத்தால் தண்டிக்க முடியவில்லை எனத் தீர்ப்பில் நிதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

“52 …. we have concluded that there is enough material to hold against all the accused. But, unfortunately, the State has not preferred appeal against the acquittal of the remaining accused”

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென அப்போதைய திமுக அரசுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பிலும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், திமுக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. முதல்வர் கருணாநிதி தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வார்கள், அதில் பார்த்துக் கொள்ளலாம் எனக்கூறி மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.சிர்புர்க்கர், தீபக் வர்மா ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 22.10.2009 அன்று குற்றவாளிகள் 17 பேரின் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. விடுதலை செயப்பட்ட 24 பேருக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யாததால் உச்சநீதிமன்றமும் இவர்களுக்குத் தண்டனை வழங்கவில்லை.

அதிமுக, திமுக என இரண்டு அரசுகளும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டன. இதனால், மீதமுள்ள 24 கொடும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டனர்.

தலித்துகளின் வழக்குகளில் அதிமுக, திமுக இரண்டுமே ஆதிக்கச் சாதிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றை விட்டு ஒன்றை நியாயப்படுத்துவது சரியல்ல.

மேலவளவு தலித்துகள் படுகொலை வழக்கில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது. அதுகுறித்து விரிவாக எழுத வேண்டும்.

Saturday, April 16, 2011

டாக்டர் பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை: மனித உரிமை அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 16.04.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதை வரவேற்பதோடு, இது மனித உரிமை அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி என்பதை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடித்தட்டு மக்களுக்காக சேவை புரிந்து வந்த டாக்டர் பினாயக் சென் மீது சட்டிஸ்கர் மாநில காவல்துறை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் எனக் கூறி தேசதுரோக குற்றச்சாட்டில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் மீதான வழக்கு விசாரணை ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து முடிந்து அவருக்கு கடந்த டிசம்பர் 24ந் தேதியன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வன்முறையிலும், சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளின் மீதும் நம்பிக்கையற்ற பினாயக் சென்னிற்கு அயுள் தண்டனை விதிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்ததோடு, உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியா முழுவதும் இத்தீர்ப்பை எதிர்த்து கண்டன கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

புதுச்சேரியிலும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜனவரி 2ந் தேதியன்று கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பினாயக் சென் மீதான வழக்கைத் திரும்பப் பெறவும், அவருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தற்போது பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும், மவோயிஸ்டுகளை ஆதாரிப்பது குற்றமல்ல எனவும் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இக்கருத்து பினாயக் சென் சட்டிஸ்கர் மாநில காவல்துறையால் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டதை உறுதி செய்கிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு காலம் கடந்தாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் தேசதுரோக சட்டப் பிரிவான (Sedition) இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ பிரிவை பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. வெள்ளையர்களை எதிர்த்து சுதந்திரத்திற்கு போராடியவர்கள் மீது ஏவப்பட்ட இந்த சட்டப் பிரிவு இன்றைக்கும் தேவையா என்ற விவாதம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் கருத்தை தொடர்ந்து மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தேசதுரோக சட்டப் பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இது மனித உரிமை ஆர்வலர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

எனவே, தேசதுரோக சட்டப் பிரிவை உடனடியாக நீக்கவும், இந்தியா முழுவதும் தேசதுரோக குற்றச்சாட்டில் சிறைகளில் உள்ளவர்களின் மீதான வழக்குகளை மறுபரீசிலனை செய்து, அவர்களை விடுதலை செய்யவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

Wednesday, March 02, 2011

அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி: நீதி விசாரணைக்கு கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 02.03.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பணி நிரந்தரம் செய்ய கோரி மறியல் போராட்டம் நடத்திய அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் மீது போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது தன்வந்தரி நகர் போலீசார் அவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஏராளமான பெண்கள் உட்பட ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும், பெண் ஊழியர்களை ஆண் போலீஸ் அதிகாரிகள் மானபங்கப்படுத்தும் நோக்கத்தோடு தொடக் கூடாத இடத்தில் தொட்டு அப்புறப்படுத்தியுள்ளனர். பெண் போலீசார் இருந்தும் இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் நடந்துள்ளது தவறானது. இந்த போலீஸ் அத்துமீறலுக்கு பத்திரிகைகளில் வெளிவந்துள்ள புகைப்படங்களே சாட்சியமாக அமைந்துள்ளன.

அண்மைக் காலமாக புதுச்சேரி போலீசார் தேவையில்லாமல் 144 தடை உத்தரவு போட்டு வருகின்றனர். மக்களிடம் செல்வாக்கு குறைந்து வரும் காங்கிரஸ் அரசு மக்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்க காவல்துறையை பயன்படுத்துவது தவறான போக்காகும். இதற்கு காவல்துறை உடன்படுவது சட்டப்படி குற்றமாகும்.

காவல்துறை அரசியல் குறுக்கீடு இல்லாமல் சுயேட்சையாக செயல்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் பல தீர்ப்பளித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2010 மார்ச் 3-ந் தேதியன்று மாநில பாதுகாப்பு ஆணையம் (State Security Commission) ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இதில் புதுச்சேரி சார்பில் தலைமைச் செயலர் உறுப்பினராக உள்ளார். இந்த ஆணையம் இதுகுறித்து விசாரித்து தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம், மகளிர் ஆணையம், மாநில பாதுகாப்பு ஆணையம் மற்றும் புதுச்சேரி அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு விரிவான புகார் மனு அனுப்ப உள்ளோம். மேலும், புதுச்சேரி அரசு இதுகுறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Monday, December 06, 2010

டிசம்பர் 6 - பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி இடிக்கப்ப்பட்ட டிசம்பர் 6 அன்று, புதுச்சேரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் காலை 10 மணியளவில், சுதேசி பஞ்சாலை அருகில் கண்டன தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளர் புதுமடம் அணிஸ் தலைமைத் தாங்கினர். மாவட்ட துணைத் தலைவர் ஹாபீஸ் முஹம்மது புஹாரி தொடக்கவுரை ஆற்றினார். மாவட்ட தலைவர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரஹமத்துல்லா, மாவட்ட செயலாளர் ஒய்.பலுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முஹம்மது சலீம், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பளார் கோ.அ.ஜெகன்நாதன், சிங்காரவேலர் முன்னேற்ற கழகத்
தலைவர் கோ.செ.சந்திரன், புதுவை கிருஸ்துவர் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துரை உரையாற்றினர்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் கண்டன உரையாற்றினார்.

முடிவில் தமுமுக மாவட்ட பொருளாளர் ஜெ.காஜா கமால் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கீழ்காணும் கோரிகைகள் முன்வைக்கப்பட்டன:

1. பாபர் மசூதி நிலம் தொடர்பான அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும்.

2. ரெபரேலி நீதிமன்றத்தில் நடக்கும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும்.

3. பாபர் மசூதி இடிக்கப்பது குறித்த லிபரான் ஆணையம் விசாரித்து குற்றம்சாட்டிய அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday, November 04, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. பகுதி (4)

நீதித்துறையில் பெருகிவரும் ஊழலைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள நீதித்துறை தரம் மற்றும் பொறுப்பாகுதல் மசோதா பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்களைக் கொண்டிருந்தாலும், அந்த மசோதா இன்னும் நடைமுறை சாத்தியம் உள்ளதாகவும், நீதிபதிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் இடர்பாடுகள் இல்லாமலும் இருக்க வேண்டுமென சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள அபரிதமான நம்பிக்கை குறையாமல் இருக்க இந்த மசோதாவில் சட்ட வல்லுநர்கள் கூறும் அம்சங்களை உள்ளடக்கி நிறைவேற்ற மத்திய அரசு திறந்த மனதோடு செயலாற்ற வேண்டும்.

‘நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968’ போதிய அளவில் பயன் அளிக்கவில்லை என்ற காரணத்தால் தான் தற்போது மத்திய அரசு ‘நீதித்துறை தரம் மற்றும் பொறுப்பாகுதல் மசோதா 2010’ என்ற புதிய சட்ட முன்வரைவை அமைச்சரவையில் வைத்து ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த சட்டப்படி நீதிபதிகள் தங்களின் சொத்துக் கணக்கினைப் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். மேலும் ஆண்டு தோறும் தங்கள் சொத்துக் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். இவை அனைத்தும் நீதித்துறையின் அதிகாரபூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும். மேலும், நீதிபதிகள் எந்தவொரு வழக்கறிஞரோடும் நெருக்கமான உறவு வைத்துக் கொள்ள கூடாது. குறிப்பாக தான் பணியாற்றும் நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞரோடு உறவு வைத்துக் கொள்ள கூடாது.

நீதிபதிகளின் ஊழல் பற்றி விசாரிக்க ஓய்வுப் பெற்ற இந்திய தலைமை நீதிபதி ஒருவர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். இக்குழுவில், அட்டர்னி ஜெனரல், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவர் நியமிக்கும் ஒரு முக்கிய பிரமுகர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். நீதிபதிகள் மீது இந்த குழுவிடம் நேரடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். குறிப்பாக இந்திய தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மீதும் புகார் கூறலாம்.

இவ்வாறு அளிக்கப்படும் புகாரை விசாரிப்பதற்காக நீதிபதிகள் அடங்கிய தனிக் குழு ஒன்று அமைக்கப்படும். உச்சநீதிமன்ற நீதிபதி மீது புகார் என்றால் ஓய்வுப் பெற்ற இந்திய தலைமை நீதிபதி மற்றும் பணியிலிருக்கும் இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்கும். உயர்நீதிமன்ற நீதிபதி மீதான புகாரை ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பணியிலிருக்கும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்கும். இந்த விசாரணை குழு உறுப்பினர்களை அதாவது உச்சநீதிமன்ற நீதிபதிகளை இந்திய தலைமை நீதிபதியும், உயர்நீதிமன்ற நீதிபதிகளை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் நியமிப்பார்கள். தமைமை நீதிபதிகள் மீதான புகாரை உயர்மட்ட குழுவே விசாரிக்கும்.

இந்த குழுக்களுக்கு ஒரு சிவில் நீதிமன்ற அதிகாரம் இருக்கும். இக்குழு எந்தவொரு ஆவணத்தையும், சான்றுகளையும் சம்மன் அனுப்பி பெற முடியும். மேலும், புகாரின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்படும் நீதிபதி மீது குறிப்பான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய முடியும். குற்றச்சாட்டு மென்மையானதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு அறிவுரையோ அல்லது எச்சரிக்கையோ விடுக்கலாம். குற்றச்சாட்டு கடுமையானதாக இருந்தால் அவரை பணியிலிருந்து விலக அறிவுறுத்தலாம். இதற்கு நீதிபதி ஒப்புக் கொள்ளவில்லை என்றால் குடியரசுத் தலைவர் மூலம் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு (Impeachment) பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

முந்தைய சட்டத்தில் மாற்றங்கள் செய்தும், சட்ட ஆணையம் கூறிய பல கருத்துக்களை உள்ளடக்கியும் கொண்டு வரப்பட்ட இந்த புதிய சட்டத்தின்படி ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பல தடைகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். பாராளுமன்றத்தின் மூலம் குற்றசாட்டுகள் (Impeachment) பதிவு செய்து நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற பழைய முறையே இச்சட்டத்தில் இறுதி நடவடிகையாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது கடந்த காலங்களில் தோல்வி அடைந்துள்ளதையும், இதுவரையில் ஒரு நீதிபதிகூட இவ்வாறு பணிநிக்கம் செய்யப் படவில்லை என்பதையும் முன்னர் பார்த்தோம்.

பணியிலிருக்கும் நீதிபதிகளை இதுபோன்ற விசாரணைக் குழுவில் நியமிப்பது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே அதிகப்படியான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் கூடுதலாக அவர்களுக்குப் பணிச் சுமை அளிப்பது நீதிபதிகளின் வேலைத் திரனைக் குறைக்கும். விசாரணகளில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும். மார்ச் 31, 2010 கணக்குப்படி உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 717 வழக்குகள், இந்தியாவிலுள்ள 21 உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 4 கோடிக்கு மேல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏதாவது ஒரு மனித உரிமை மீறல் நடக்குமானால் உடனடியாக பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் நீதிவிசாரணை கோருவது வழக்கம். ஆனால், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் மேற்கூறிய காரணங்களைக் காட்டி அரசுகள் தட்டிக் கழிப்பது உண்டு. ஒரு சம்பவம் குறித்து விசாரிக்கவே இந்த நிலை என்றால், நீதிபதிகள் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை நுட்பமாகவும், ஆழமாகவும், பல்வேறு கோணங்களில் ஆராயவும் கவனம் செலுத்த முடியாத நிலையே உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், தன்னோடு பணியாற்றும் ஒரு நீதிபதி மீது புகார் கூறப்படுமானால் அதனை விசாரிப்பதில் உடன் பணியாற்றும் நீதிபதிக்கு நெருடல் இருக்கும். மேலும், பல சந்தர்ப்பங்களில் உடன் பணியாற்றும் நீதிபதியை விசாரணை நீதிபதிகள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. நீதிபதி பி.டி.தினகரன் ஊழல் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவில் அவரோடு பணியாற்றிய நீதிபதி சிர்புர்கர் இடம்பெற்றதற்கு எதிர்ப்புப் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அக்குழுவில் இருந்து விலகியதும் இதற்கு வலுசேர்க்கிறது.

‘ஒரு நீதிபதி செய்யும் குற்றத்தை ஒரு நீதிபதி கொண்டே விசாரிக்கலாம் என்றால் ஏன் ஒரு டக்டர் செய்யும் குற்றத்தை ஒரு டாக்டரைக் கொண்டே, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் செய்யும் குற்றத்தை ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்டே, ஒரு திருடன் செய்யும் குற்றத்தை ஒரு திருடனைக் கொண்டே விசாரிக்க கூடாது’ என்று மிகக் கோபமாக கேள்வி எழுப்பியதோடு, ‘இந்த புதிய சட்டம் மக்களிடத்தில் ஒரு பாதுகாப்பு வழிமுறை உள்ளது என்ற பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சி’ என்கிறார் சாந்தி பூஷன்.

புலன் விசாரணை அதிகாரம் கொண்ட சுயேட்சையான அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டுமென நீதித்துறையில் ஊழலுக்கு எதிராகப் போராடி வருபவர்கள் கோருவதில் நியாயம் உள்ளது. நீதித்துறைக்கு அப்பாற்பட்டவர்கள் நீதிபதிகளின் ஊழல்களை விசாரிக்க ஒப்புக் கொண்டால் அது நீதித்துறையின் சுயேட்சைத் தன்மையையும், சுதந்தரத்தையும் கேள்விக்குள்ளாக்கிவிடும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீதித்துறையில் மட்டுமல்ல இன்று அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. எளிதாக வேலையை முடிக்க லஞ்சம் கொடுப்பதுதான் வழிமுறை என்பதை மக்கள் பெரிதும் நம்புகின்றனர். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று நாம் யாராவது கூறினால் இன்றைய சூழலில் அது மிகப் பெரிய நகைச்சுவை ஆகிவிடும். சட்டத்தின் ஆட்சியை விரும்புகிறவர்கள் ஊழலை ஒருபோதும் ஆதரிக்க முடியாது. ஊழல்களினால் பாதிக்கப்படுவது அடித்தட்டில் இருக்கும் ஏழை எளிய மக்கள்தான். அதுவும் கடைசிப் புகலிடமாக உள்ள நீதித்துறையில் ஊழல் அளவிட முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

அண்மையில் வருமான வரித் துறை அதிகாரி ஒருவரின் ஊழல் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்சு, டி.எஸ்.தாக்கூர் ஆகியோர் ‘அரசு ஏன் ஊழலை சட்டபூர்மானதாக ஆக்கக் கூடாது’ என்று கிண்டலாக கேள்வி எழுபியுள்ளனர். அரசுத் துறைகளில் நிலவும் ஊழலை ஒழிக்க நீதிபதிகள் அக்கறை காட்டும் அதே வேளையில், நீதித்துறையில் நிலவும் ஊழலையும் களைய உரிய கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் இதுபோன்ற ஒரு கேள்வியை நீதித்துறையினர் மீது மக்கள் எழுப்பும் காலம் விரைவில் வரக்கூடும்.

(நிறைவுப் பெற்றது) 

நன்றி: மக்கள் உரிமை.    

Sunday, October 24, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. (3)

இந்திய தலைமை நீதிபதியின் ஊழல் பற்றிப் பார்த்தோம். ஊழல் செய்யும் நீதிபதிகளை எதிர்த்துப் போராட முடியாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருந்து வருகிறது. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் இயல்பான அச்சம். இரண்டு நீதிபதிகளை விமர்சித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாக கருதப்பட்டு, தண்டனைக் கிடைக்கும் என்ற பயம். ஆனால், நீதிபதிகளின் ஊழல்களை ஆதாரத்தோடு விமர்சித்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஊழல் நீதிபதியான பி.டி.தினகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையில் நடந்த போராட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். சில மாதங்களுக்கு முன்னர் அந்த நீதிபதியின் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பற்றி பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளிப்படுத்தாத நாளே இல்லை என்று சொல்லலாம். அதேபோல் தலித் மக்களின் உரிமைகளுக்காக அயராது போராடி வரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் 90-களில் இருந்து ஊழல் மற்றும் சாதியத்தோடு பணியாற்றிய, பணியாற்றும் நீதிபதிகள் குறித்து மிக வெளிப்படையாக துண்டறிக்கைப் போட்டு விநியோகித்தும், சுவரொட்டி அச்சிட்டு ஒட்டியும், கூட்டங்கள் நடத்தியும் செய்த பிரச்சார நடவடிக்கைகள் போதிய பயன் அளித்தன என்றே சொல்ல வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும், ஊழல் செய்யும் கீழ்நீதிமன்ற நீதிபதிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்கறை காட்டுகின்றனர். ஆனால், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அது அவ்வளவு எளிதானதல்ல என்பதை கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன.

ஊழல் செய்வது என்பது ஊழல் தடுப்புச் சட்டப்படி கைது செய்யப்படக் கூடிய (Cognizable Offence) குற்றமாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி (Criminal Procedure Code) கைது செய்யப்படக் கூடிய குற்றம் அனைத்திற்கும் முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவுச் செய்யப்பட வேண்டும். ஆனால், நீதிபதிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.வீராசாமி 1974-ல் லஞ்சம் வாங்கும் போது சி.பி.ஐ. போலீசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார். அவர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், குற்றவியல் சட்டத்திற்குப் புறம்பாக 1991-ல் உச்சநீதிமன்றம் ‘எந்த நீதிபதி மீதும் இந்திய தலைமை நீதிபதியின் அனுமதியின்றி முதல் தகவல் அறிக்கை பதியக் கூடாது’ என்று தீர்ப்பு வழங்கி ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியது. இந்த தீர்ப்புக்குப் பின்னர் இதுநாள்வரையில் எந்தவொரு நீதிபதி மீதும் வழக்குப் பதிய எந்த தலைமை நீதிபதியும் அனுமதி அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஊழல் செய்த உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 124 (4) படியும், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மூலம் அதுவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். நீதிபதியின் ஊழல் குறித்த ஆதாரங்களைப் பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் 100 பேர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழுவில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள். இக்குழு விசாரணை மேற்கொண்டு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் ஊழல் செய்த ஒரு நீதிபதி மீதும் சின்ன நடவடிக்கைகூட எடுக்க முடியவில்லை.

1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு (Impeachment) சுமத்தப்பட்டது. அவர் சண்டிகரில் தலைமை நீதிபதியாக இருந்த போது அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்தது பற்றி குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு முன் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. காங்கிரஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காததால் அவர் நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொண்டார். அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைக் காட்டி தி.மு.க. அன்று அந்த ஊழல் நீதிபதியைக் காப்பாற்றியது. வெறும் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆதரவுத் தெரிவித்தனர்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் 1993-ல் ஒரு வழக்கில் 34 லட்ச ரூபாய் பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டும் அவரை மேற்குவங்க ‘லாபி’ காப்பாற்றி வருவதாக செய்திகள் வருகின்றன. அவரை பணியிலிருந்து ராஜினாமா செய்யவும் அல்லது விருப்ப ஓய்வில் செல்லவும் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியும் அவர் அதனை மதிக்கக்கூட தயாராக இல்லை. அவர் மீது பாராளுமன்றத்தில் 58 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்த குற்றச்சாட்டின் மீது விசாரணை நிலுவையில் உள்ளது. பாராளுமன்றத்தில் நடவடிக்கையை எதிர்கொள்ளும் இரண்டாவது நீதிபதி சவுமித்ரா சென்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவருமான நீதிபதி பி.டி.தினகரன் 540 ஏக்கர் அளவுள்ள புறம்போக்கு நிலங்களையும், தலித் மக்களின் நிலங்களையும் அபகரித்த குற்றச்சாட்டு குறித்தும், அனுமதியின்றி அடுக்குமாடி வணிக வளாகம் கட்டியது உள்ளிட்ட ஏராளமான சட்டவிரோத நடவடிகைகள் பற்றியும் 75 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்த 12 குற்றச்சாட்டுகள் பற்றி பாராளுமன்ற குழு விசாரித்து வருகிறது. அவர் மீது ஆதாரங்கள் பல இருந்தும் அவரை பணிநீக்கம் செய்ய முடியவில்லை. அவருக்கு நீதித்துறை வழங்கியிருக்கும் மிகப் பெரிய தண்டனை, அவரை சிக்கிம் மாநிலத்திற்கு மாற்றல் செய்துள்ளதுதான். இன்றைக்கு தலித் நீதிபதி என்று கூறி பி.டி.தினகரன் செய்த ஊழல்களையும், நில அபகரிப்புகளையும் நியாயப்படுத்தி வரும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

இந்திய அரசியல் சட்ட மறுஆய்வுக் குழு, 2003 மார்ச் 31-ல் அரசுக்கு அளித்த அறிகையில் நீதிபதிகள் பணிநீக்கம் செய்வது பற்றிய 7-வது அத்தியாயத்தில் தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. மேலும், நீதிபதிகள் தவறு செய்வதைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. அதாவது இந்திய தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டு அதன் அறிகையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் அந்த அறிகையின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைக்காக எழு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மீது உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் ஊழல் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது. மேலும், ஊழல் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் அவர்களை வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்வதை கடுமையாக ஆட்சேபித்துள்ளது.

இந்திய அரசியல் சட்ட அவையில் ஊழல் நீதிபதிகள் மீதான நடவடிக்கை குறித்து அதிகம் விவாதம் நடந்ததாக தெரியவில்லை. ஏன்னென்றால் நீதிபதிகள் இந்தளவு ஊழல் செய்வார்கள் என்று அரசியல் சட்ட அவை உறுப்பினர்கள் கருதவில்லை போலும். அதனால்தான் பாராளுமன்ற குற்றச்சாட்டு மூலம் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் போன்ற சிக்கலான, சாத்தியமற்ற நடைமுறையை கொண்டு வந்தனர் அரசியல் சட்ட அவையினர்.

நீதிபதிகள் மீது பாராளுமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கும் முறையில் பல மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து. பாராளுமன்றத்தில் 100 உறுப்பினர்கள் கையெழுத்திட்டால்தான் ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்படுகிறது. மேலும், ஒரு சில ஊழல் நீதிபதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்காக பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் முறையை எளிதாக்கினால், அது நீதித்துறை மீது அரசியல்வாதிகள் அதிகாரம் செலுத்தும் நிலையை ஏற்படுத்திவிடும் என சில நேர்மையான நீதிபதிகள் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

நீண்ட போராட்டத்திற்குப் பின் ‘நீதிபதிகள் தரம் மற்றும் பொறுப்பாதல் மோசோதா’ பரிசீலிக்கப்பட்டு சென்ற அக்டோபர் 5-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட மசோதாவில் ஒரு சில அம்சங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அதிலுள்ள பெரும்பாலான பிரிவுகள் நீதிபதிகளின் ஊழல்களைத் தடுக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கவில்லை என சட்டவல்லுநர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனைப் பிறகுப் பார்ப்போம்.

அடுத்த இதழில் முடியும்...


நன்றி: மக்கள் உரிமை.

Thursday, October 14, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. பகுதி (2)

1950-க்கு முன்னர் நீதித்துறையில் ஊழல் இருந்ததில்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். அப்போதெல்லாம் நீதித்துறையில் ஊழல் என்பதைப் பெரும் குற்றமாக கருதினார்கள். சிறிய தவறு நேர்ந்தாலும் நீதிபதிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்ட காலமது. 1949-ல் ‘பெடரல் நீதிமன்றங்கள்’ (Federal Courts) இருந்த போது அலகாபாத் நீதிபதியாக இருந்த சிவபிரசாத் சின்கா நீதித்துறையின் வரம்புக்கு அப்பாற்பட்டு இரண்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டதற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் ஊழல் செய்ததாக ஆதாரங்கள் நிறைய இருந்தும் நீதிபதிகள் ராமசாமி முதல் பி.டி.தினகரன் வரை யாரையும் பதவி நீக்கம் செய்ய முடியவில்லை. இதற்கு பாராளுமன்ற நடைமுறையில் உள்ள குறைபாடு ஒரு பெரும் காரணமாக இருக்கிறது.

பிரசாந்த் பூஷன் டெகல்காவிற்கு அளித்த பேட்டியில் ‘கடைசியாக இருந்த 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல்வாதிகள்’ என்று கூறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருவது குறித்துப் பார்த்தோம். இவ்வழக்கில், அவரது தந்தையார் சாந்தி பூஷன் தன்னையும் இணைத்துக் கொள்ள உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மேலும் பல தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது.

இந்திய தலைமை நீதிபதிகளாக இருந்த ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், எம்.எச்,கனியா, எல்.எம்.சர்மா, எம்.என்.வெங்கடசல்லயா, ஏ.எம்.அகமதி, ஜெ.எஸ்.வர்மா, எம்.எம்.பூஞ்சி, ஏ.எஸ்.ஆனந்த், எஸ்.பி.பருச்சா, பி.என்.கிரிபால், ஜி.பி.பட்நாயக், ராஜேந்திர பாபு, ஆர்.சி.லகோதி, வி.என்.கரே, ஒய்.கே.சபர்வால் ஆகிய 16 நீதிபதிகளில், 8 நீதிபதிகள் நிச்சயமாக ஊழல்வாதிகள், 2 நீதிபதிகள் ஊழல்வாதிகளா அல்லது ஊழலற்றவர்களா என்பதைக் கூற முடியவில்லை, 6 நீதிபதிகள் உறுதியாக நேர்மையானவர்கள் என்று கூறியதோடு அல்லாமல், இதில் யார் யார் எந்தப் பட்டியலில் வருகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு அதனை ‘சீலிட்ட உறையில்’ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் சாந்தி பூஷன்.

பிரசாந்த் பூஷன் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்திய தலைமை நீதிபதி கப்பாடியா மீது கூறும் குற்றச்சாட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நீதிபதி கப்பாடியா பணம் பெற்றுக் கொண்டு ஊழல் செய்தவராக கூறப்படாவிட்டாலும், அவர் தனக்கு வேண்டப்பட்ட கம்பெனிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார் என்பதும் ஊழலின் ஒரு பகுதி என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

பிரபலமான ‘ஸ்டெர்லைட் ஆலை’ தனது சுத்திகரிப்புத் திட்டம் ஒன்றை ஒரிசா மாநிலத்திலுள்ள லஞ்சிகார்க் என்னும் ஊரிலுள்ள வனப் பகுதியில் தொடங்க ‘வேதாந்தா அலுமினா லிட்’ என்ற தன்னுடைய துணை நிறுவனத்திற்கு மாற்றியது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், பழங்குடியின மக்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தனக்கு கீழுள்ள நிபுணர் குழு (Centrally Empowered Committee - CEC) ஒன்றை 12.05.2005-ல் அமைத்தது. இக்குழு விரிவான விசாரணை மேற்கொண்டு தனது அறிக்கையை செப்டம்பர் 2005-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில் ‘வேதாந்தா தனது சுத்திகரிப்பு திட்டத்தோடு, சுரங்கத் திட்டத்தையும் தொடங்குவதை மறைத்து சுற்றுச்சூழல் அனுமதியை முறைகேடாக பெற்றுள்ளது. இத்திட்டத்திற்காக நியம்கிரி மலைப் பகுதியில் சுத்திகரிப்பு ஆலைக்காக 58.93 ஹெக்டர் வன நிலமும், சுரங்கத்திற்காக 672.018 ஹெக்டர் வன நிலமும் தேவைப்படுகிறது. இதனால், வன நிலங்களும், காடுகளும், விலங்குகளும், நீர் நிலைகளும், அரிய வகை உயிரினங்களும் அழிந்துப் போகும். காட்டையே நம்பியிருக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிந்துப் போகும். மேலும், இத்திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அனுமதி அளித்ததன் மூலம் அளவற்ற உதவி செய்துள்ளது. பெரும் நிதி முதலீடு உடைய இத்திட்டம் குறித்து சுற்றுச்சூழல், வனம் ஆகிய கோணங்களில் தொடக்கத்திலேயே எதிர்ப்பு வந்ததால், இந்த இடத்தில் இந்த திட்டத்தைத் தொடங்குவதைக் கைவிட வேண்டும். மேலும், மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை திரும்பப் பெற வேண்டும். அதுவரையில் அங்கு எந்தப் பணியும் நடக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று தெளிவாக கூறியிருந்தது.

இந்த வழக்கு 26.10.2007-ல் உச்சநீதிமன்றத்தில் வனம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு அறிக்கைப் பற்றி எதுவும் விவாதிக்காமலும், இத்திட்டத்திற்கு அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய பழங்குடியினர் சார்பில் தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீது வாதிட அவர்களது வழக்கறிஞ்ர் சஞ்சய் பாரிக்கை அனுமதிக்காமலும் நேரிடையாக சுரங்கம் அமைப்பது தொடர்பான வரைமுறைகள் குறித்து விவாதம் நடந்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தி வரும் வேதாந்தா, ஒரிசா அரசு, மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை மற்றும் நீதிமன்றம் அமைத்த நடுநிலை விரிவுரையாளரான (Amicus Curiae) ஜீனியர் வழக்கறிஞர் உதய லலித் ஆகியோரின் வாதங்களை மட்டுமே நீதிபதிகள் செவிமடுத்தனர்.

இவ்வழக்கில் 23.11.2007 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை நீதிபதி கப்பாடியா எழுதியிருந்தார். அதில் ’வேதாந்தா அலுமினியா லிட்’ கீழுள்ள ஸ்டெர்லைட் ஆலை இத்திட்டத்தை தொடங்க விண்ணப்பிக்கலாம்’ எனக் கூறியிருந்தார். மேலும், நிபுணர் குழு சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததை ஆட்சேபித்தும், அதற்கு ஆதராவாக பல்வேறு காரணங்களையும் கூறியிருந்ததைச் சுட்டிக் காட்டிய நீதிபதி கப்படியா, ‘இன்னொரு பக்கம் லஞ்சிகார்க் பகுதியிலுள்ள பழங்குடியினர் உள்ளிட்ட உள்ளூர் மக்கள் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு ஒழுங்கான வீடுகள் இல்லை. மருத்துவமனைகள் இல்லை. பள்ளிக்கூடங்கள் இல்லை. அங்கு மக்கள் மிகவும் வறுமை நிலையில் வாழ்கின்றனர் எனபதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. இந்திய பொருளாதாரம் அண்மைக் காலமாக வளர்ந்து வருகிறது. இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இந்த இரண்டு எல்லைகளையும் கணக்கில் கொண்டு இந்த நீதிமன்றம் சுற்றுச் சூழல் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும், வளர்ச்சி (Sustainable Growth) கொள்கைகளையும் மனத்தில் கொண்டுள்ளது’ எனக் கூறி அனுமதி வழங்கியுள்ளார்.

வேதாந்தா தொழிலாளர் சட்டங்களையும், மனித உரிமைகளையும் கடைப்பிடிக்காததால் நார்வே நாட்டினால் கறுப்புப் பட்டியலில் (Black Listed) வைக்கப்பட்டுள்ள நிறுவனமாகும். கறுப்புப் பட்டியலில் உள்ளதால் வேதாந்தாவிற்கு அனுமதி அளிக்க மறுத்த நீதிமன்றம் அதன் கீழுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தான் அமைத்த நிபுணர் குழு அறிக்கையை உச்சநீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்தது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியின மக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களையும் நீதிமன்றம் பரிசீலிக்க தவறியது.

மேலும், இது தொடர்பாக அதே நீதிபதிகள் மற்றொரு உத்தரவை 8.8.2008-ல் பிறப்பித்தனர். அதில், இத்திட்டத்திற்காக நியம்கிரி மலைப் பகுதியில் சுத்திகரிப்பு ஆலைக்காக 58.93 ஹெக்டர் வன நிலத்தினையும், சுரங்கத்திற்காக 672.018 ஹெக்டர் வன நிலத்தினையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறியிருந்தனர். சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை வழங்கிய அனுமதியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பு வழங்கியது ஆச்சரியத்தை அளிக்கிறது.

இதனிடையே, நீதிபதி கப்பாடியா ஸ்டெர்லைட் ஆலையில் பங்குதாரராக இருந்தார் என்பது குறித்து பிரசாந்த் பூஷன் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார். ஆனால், இந்த வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் தவிர யாரும் இந்த வழக்கிலிருந்து நீதிபதி கப்பாடியா விலகிக் கொள்ள வேண்டுமென கோரவில்லை. இந்தியாவிலும் சரி, சர்வ தேச அளவிலும் சரி ஒரு நீதிபதி வழக்கில் தொடர்புடையவர்களோடு சிறிய அளவில் தொடர்பு இருந்தாலும் அந்த வழக்கிலிருந்து சம்பந்தப்பட்ட நீதிபதி விலகிக் கொள்வதே நெறியாகும். ஆனால், நிதிபதி கப்படியா அவ்வாறு செய்யாமல் வழக்கை நடத்தியதோடு அந்த நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது “ஊழல்” இல்லாமல் வேறு என்ன?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்றைப் பதம் பார்த்தால் போதும் என்பது போல தற்போதைய இந்திய தலைமை நீதிபதியின் நிலையே இதுவென்றால் மற்ற நீதிபதிகளின் நிலைக் குறித்து இங்குக் கூறத் தேவையில்லை.

நீதித்துறையில் அளவற்ற ஊழல் புரியும் நீதிபதிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? நீதிபதிகள் மக்களுக்குப் பொறுப்பாகுதல் குறித்து தற்போது மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள சட்டம் இவற்றைக் கட்டுப்படுத்துமா? என்பது பற்றி பிறகுப் பார்ப்போம்.


தொடரும்...

நன்றி: மக்கள் உரிமை.

வி.ஆர்.கிருஷ்ணய்யர் - மனித உரிமை ஆர்வலர்கள் சந்திப்பு!

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் - கோ.சுகுமாரன்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 14.10.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யரை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் கேரளா மாநிலம் கொச்சினில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர் உலக அளவில் புகழ் பெற்ற நீதிபதியாவார். உச்சநீதிமன்றத்தில் அவர் நீதிபதியாக இருந்த போது வழங்கிய தீர்ப்புகள் அடித்தள மக்கள் நலன் நோக்கிலும், மனித உரிமையை உயர்த்திப் பிடிப்பதாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் சட்டத்தை மறுஉருவாக்கம் செய்தும், மேலும் செழுமைப்படுத்தியும் அவர் வழங்கிய தீர்ப்புகள் இன்றும் சாதனையாக போற்றப்படுகிறது. அவரது ஈடு இணையற்ற பணியைப் பாராட்டி கொச்சினில் உள்ள சட்டப் படிப்புக்கான தேசிய பல்கலைக்கழகம் (National University of Advanced Studies – NUALS) நேற்றைய தினம் (13.10.2010) அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவருக்கு இப்பட்டத்தினை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் வழங்கியுள்ளார்.

மதுரையிலுள்ள சோக்கோ அறக்கட்டளையின் தலைவர் மகபூப் பாட்சா, உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், வழக்கறிஞர்கள் ஜின்னா, லெனின், வெங்கடேஷ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் நேற்றைய தினம் கொச்சினில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம்.

வரும் நவம்பர் 1-ம் தேதியன்று 96-வது வயதில் அடியெடுத்து வைக்கும் அவர் சோர்வின்றி தொய்வில்லாமல் செயலாற்றுவது ஊக்கமளிப்பதாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழியில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இளைஞர்கள் சீரழிந்து வரும் வேளையில், சட்டப்படியான வழிமுறையில் நிறைய சாதிக்க இடமுண்டு என்ற நம்பிக்கையை அவருடனான சந்திப்பு தந்தது.

குறிப்பு: இந்த சந்திப்பு பற்றி இன்னும் விரிவாக எழுத உள்ளேன். 

Saturday, October 09, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. (1)

‘மை லாட்’ என அழைப்பதன் மூலம் கடவுளுக்குச் சமமாக கருதப்பட்ட நீதிபதிகள் ஊழல் நிறைந்தவர்களாக இருப்பது நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைத்து வருகிறது. நீதிபதிகளின் ஊழல் குறித்து வெளிப்படையாக பேசுவதையே நீதிபதிகள் குற்றம் என எண்ணுவது நீதிபதிகளின் நேர்மையை கேள்விக்குள்ளாகுகிறது.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.டி.தினகரன் புறம்போக்கு நிலங்களையும், தலித் மக்களின் நிலங்களையும் சட்டத்திற்குப் புறம்பாக அபகரித்து வைத்திருந்ததற்காகவும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் பெரும் ஊழலில் ஈடுபட்டதற்காகவும் இருவரையும் பணிநீக்கம் செய்வதற்கான நாடாளுமன்றத்தின் முன் குற்றச்சாட்டும் (Impeachment), அதன்மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது. அதேபோல், காசியாபாத்தில் நீதிபதிகள் அரசு ஊழியர்களின் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை கைடால் செய்ததும், சட்டீஸ்கரில் ஒரு நீதிபதி வீட்டின் முன்பு பையில் பல லட்சம் ரூபாய் பணம் கிடந்ததும் நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. 

நீதித்துறையின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நடந்து வரும் “நீதிமன்ற அவமதிப்பு” வழக்கு ஒட்டுமொத்த நீதித்துறையின் நீதி வழங்கும் முறையையே காலியாக்கி விடும் போல் உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர் கொண்டிருக்கும் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும் 26 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் மூத்த வழக்கறிஞர். மேலும், 1991 முதல் நீதித்துறையில் நிலவும் ஊழலுக்கு எதிராகவும், நீதிமன்ற பொறுப்புரிமைக்காகவும் (Judicial Accountability) போராடி வருபவர். இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷனின் மகன் என்பதை அறிவோம்.

பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு ஏன்? கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ல் வெளிவந்த ‘டெகல்கா’ இதழில் ‘கடைசியாக இருந்த 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல்வாதிகள். இதை எங்களால் நிரூபிக்க முடியாது. பூஞ்சி, ஆனந்த், சபர்வால் ஆகியோருக்கு எதிராக எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே அவர்களை நீக்க கோரினோம்’ என பேட்டி அளித்தது தான் காரணம்.

மேலும் அவர் ‘ஊழல் நீதிபதிகளை நீக்க பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் குற்றச்சாட்டு (Impeachment) நடைமுறை சத்தியமற்றது. அதற்கு 100 எம்.பி.க்களின் கையெழுத்து தேவைப்படுகிறது. ஆனால், இவற்றை பெற முடிவதில்லை. ஏனென்றால், பல எம்.பி.க்களின் தனிப்பட்ட அல்லது அவர்களது கட்சி சார்ந்த வழக்குகள் இந்த நீதிபதிகளின் முன்பு நிலுவையில் உள்ளன. நீதிபதி பல்லாவிற்கு எதிராக பாராளுமன்றத்தின் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பா.ஜ.க. கையெழுத்திட மறுத்துவிட்டது. அந்த நீதிபதி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானியை விடுதலை செய்தவர். அந்த நீதிபதி நொய்டாவில் ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலத்தினை வெறும் 4 லட்சம் ரூபாய்க்கு பெரும் நில வணிகர் ஒருவரிடம் வாங்கியது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. அந்த நில வணிகர் சம்பந்தப்பட்ட வழக்குகள் பல அந்த நிதிபதியின் கீழுள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன.

அடுத்து ரிலையன்ஸ் பவர் தொடர்பானது. அதாவது அவரது மகன் ரிலையன்ஸ் பவரின் வழக்கறிஞராக இருந்தார். நீதிபதி பல்லா லக்னோவில் நீதிபதியாக இருந்த போது இதுகுறித்து ஒரு தனி நீதிமன்றத்தை (Special Bench) அமைத்தார். அவர் ஒரு நீதிபதி வீட்டில் இரவு 11 மணி வரை நடந்த வழக்கு விசாரணையில் அமர்ந்துக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக தடை உத்தரவு கொடுத்தார். நாங்கள் நீதிபதி பல்லா மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை நீதிபதி சபர்வாலிடம் கேட்டோம், அவர் மறுத்துவிட்டார்.

அதேபோல், வீஜேந்தர் ஜெயின் தன் பேத்தியை தன் வீட்டில் திருமணம் செய்துக் கொடுத்த ஒருவரது வழக்கை நடத்தி அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கினார். இதுபற்றி மிக குறிப்பான புகார்கள் கொடுத்தும் இந்திய தலைமை நீதிபதி இதுகுறித்து உள்விசாரணை நடத்தவில்லை. அந்த நீதிபதிகள் அனைவரும் தலைமை நீதிபதியானார்கள். பல்லா இன்னமும் ராஜஸ்தானின் தலைமை நீதிபதியாக உள்ளார். வீஜேந்தர் ஜெயின் பஞ்சாப் மற்றும் அரியானா தலைமை நீதிபதியானார்.

நீதிபதி கப்பாடியா ஒரிசாவிலுள்ள நியம்கிரி சுரங்க குத்தகை வழக்கை தீர்மானித்தார். வேதாந்தா நார்வே அரசால் கருப்புக் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதால் அதற்கு குத்தகை கொடுக்க முடியாது என்று கூறினார். பின்னர், வேதாந்தாவின் கீழுள்ள வெளிப்படையான பட்டியலில் (Publicly Listed) உள்ள ஸ்டெர்லைட் கம்பெனிக்கு அந்த குத்தகையைக் கொடுத்தார். அது வெளிப்படையான பட்டியலில் உள்ளது ஏன் தெரியுமா, அதில் எனக்கு பங்கு உள்ளது என  நீதிபதி கப்பாடியா கூறினார். அதனால் தான் அதற்கு ஆதரவாக அவர் உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதிகள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டு வழக்கு நடத்துவதற்கு எதிராக சட்டம் உள்ளது. ஆனால், அவர்கள் அதனை சுலபமாக தாண்டிவிடுகின்றனர். நீங்கள் இதற்கு எதிராக புகார் செய்ய முடியாது, ஏனென்றல் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும்’ என நீதித்துறையில் நிலவும் எல்லையற்ற ஊழல் பற்றி மிகத் தெளிவாகவும், ஆழமாகவும் அந்த பேட்டியில் பிராசாந்த் பூஷன் கூறியிருந்தார். நீதிபதி கப்பாடியா தற்போது இந்தியாவின் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. 

டெகல்காவிற்கு அளித்த இந்த பேட்டியால் பிரசாந்த் பூஷன் தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இதற்காக ஒருவேளை அவர் தண்டிக்கப்படலாம். ஆனால், உச்சநீதிமன்றம் தனக்கு எதிராக ஒரு “பண்டோரா பாக்சை” திறந்துவிட்டது. இந்த வழக்கில், பிராசந்த் பூஷன் மற்றும் மகனைக் காப்பாற்ற அவரது தந்தையார் சாந்தி பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களில் ஆதாரத்தோடு கூறப்பட்டுள்ள நீதிபதிகளின் ஊழல்கள் “நீதித்துறையைக் கறைபடிய” செய்துள்ளது. அவற்றைப் பிறகுப் பார்ப்போம்.

தொடரும்...

நன்றி: மக்கள் உரிமை 

Saturday, October 02, 2010

மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்த கருத்தரங்கம்!


வீரபாண்டியன்...


ஆரூண்...


பேராசிரியர் ஜவாகிருல்லா...



கோ. சுகுமாரன்...


அருணன்...


சுதர்சன நாச்சியப்பன்...



தேவநேயன்...


பங்கேற்றோர்...
----------------------------------------------------------------------------------------------------

‘மதச்சார்பற்றோர் மாமன்றம், தமிழ்நாடு’ மற்றும் ‘பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையம் (IDCR)’, லயோலா கல்லூரி ஆகியவை சார்பில் சென்னையில், 18.09.2010 அன்று மாலை 5.30 முதல் 8.30 மணி வரையில், லயோலா கல்லூரி, லாரன்ஸ் அரங்கில் “இந்தியாவும் மதச்சார்பின்மையும்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம் மதச்சார்பின்மை குறித்து ஆழமான விவாதத்தைத் தூண்டும் விதமாக அமைந்தது.

‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ மதச்சார்பின்மையை வலியுறுத்தியும், மதவெறி சக்திகளை அம்பலப்படுத்தியும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் 11.12.2008-ல் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும், குஜராத், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறையைக் கட்டவிழுத்து ஆயிரக்கணக்கான சிறுபானமையினர் பலியாக்கிய மத வெறியர்களுக்கு எதிராகப் போராடி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக் கிடைக்க சமரசமின்றி பாடுபட்டு வருபவருமான திஸ்தா செட்டில்வாட் அவர்களை அழைத்து வந்து சென்னையில் மிகப் பெரிய கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. மதச்சார்பின்மையை வலியுறுத்துவது எளிதான செயல் இல்லை என்பதை நாம் அறிவோம். இந்த சவால் நிறைந்த பணியை ‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ சமரசமின்றி செய்து வருகிறது. அரசியல் விமர்சகரும், சமூக செயல்பாட்டாளருமான வீரபாண்டியன் இந்த அமைப்பிற்கு நிறுவனராக இருந்து செயலாற்றி வருகிறார்.

“இந்தியாவும் மதச்சார்பின்மையும்” கருத்தரங்கத்திற்கு வரவேற்புரையும், இணைப்புரையும் வழங்கிய மதச்சார்பற்றோர் மாமன்றத்தின் நிறுவனர் வீரபண்டியன் ‘நான் பெரும்பாலும் இதுபோன்ற மதச்சார்பற்ற நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர்களிடையே நிறைய பேசியிருக்கிறேன். மதத்தின் பெயரால் வன்முறை என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த அமைப்பின் லோகோவாக நாங்கள் மகாத்மா காந்தியை வைத்திருக்கிறோம். காரணம் அவர் மதச்சார்பின்மைக்காக தன் உயிரை கொடுத்தவர். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை அவருக்குத்தான் கிடைத்தது. அவரை தான் ‘முகமது காந்தி’ என்று முஸ்லிம்கள் அழைத்தார்கள். அந்த அளவுக்கு அவர் மதச்சார்பின்மைக்காக உழைத்திருக்கிறார். மதச்சார்பின்மைக்காகப் போராடும் ஒரு அமைப்பு அவரை லோகோவாக வைத்திருப்பதற்கு முழுப் பொறுத்தமானவர் அவர். மனிதநேயத்தை விரும்புகிறவர்கள் மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். மதத்தின் பெயரால் வேறுபாடுகளை உருவாக்கி அரசியல் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள கூடாது என்பதோடு அவற்றை நாம் நிராகரிக்க வேண்டும்’ என்று அழுத்தமாகப் பேசினார். பேச்சாளர்களைப் பேச அழைத்த போது இடையிடையே அவர்களைப் பற்றிய குறிப்புகளை வழங்கியது பார்வையாளர்களைக் கவர்ந்த்து.

கருத்தரங்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநரும், லயோலா கல்லூரி செயலர் – தாளாளருமான முனைவர் ஜோ.ஆரூண், ‘உலகப் பார்வையில் இந்திய மதச்சார்பின்மை’ என்ற தலைப்பில் பேசினார். அவர் ‘மதச்சார்பற்றோர் மாமன்றம் போன்ற அமைப்புகளோடு சேர்ந்துப் பணியாற்றுவது சரியெனப்பட்டதால் தான் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடக்கும் இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டோம். மனிதர்களைப் பிரித்து மோதல் ஏற்படுத்துவதில் மனித நேயம் தோல்வி அடைகிறது. உலக நாடுகளில் மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராமல் இருப்பது. இந்தியவைப் பொறுத்தவரையில் அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதுதான் மதச்சார்பின்மையாக உள்ளது. இந்த கொள்கையில் நாம் உறுதியாக இருப்போமானால் நமக்குள் எந்தவித பிரச்சனையும் எழாது’ என்றார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாகிருல்லா தலைமைத் தாங்கிப் பேசியதாவது ‘மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராது இருப்பது என்பதோடு, எல்லா மதத்தையும் சமமாக பாவிப்பதாகும். இந்தியாவை ஆட்சி புரிந்த முந்தைய மன்னர்கள் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்கட்டாக இருந்தனர். மகாராஷ்டிராவில் இன்றைக்கு சிவசேனை போன்ற மத சக்திகள் தங்கள் அடையாளமாக முன்னிறுத்தும் சிவாஜி மதவெறியர் அன்று. அவரது ஆட்சிக் காலாத்தில் அவரது படையில் நிறைய முஸ்லிம்கள் உயர் பதவியில் அமர்த்தப்பட்டனர். அவர் தான் சார்ந்த மதத்தைத் தாண்டி முஸ்லிம்களுக்குப் பள்ளிவாசல் கட்டிக் கொடுத்துள்ளார். அவரை இன்று மதத்தின் குறியீடாக வைத்து மகாராஷ்டிராவில் அரசியல் நடந்து வருகிறது. அதேபோல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர் அவுரங்கசிப் தன் ஆட்சிக் காலத்தில் தன் ஆட்சிப்பரப்பில் கோயில்கள் கட்டிக் கொடுத்துள்ளார். எந்த மதத்தின் மீதும் அவர் வெறுப்பை உமிழ்ந்ததில்லை. இப்படி நம்முடைய முன்னோர்கள் மதச்சார்பின்மையை உறுதியாக பின்பற்றி வாழ்ந்துள்ளனர். என்ன விலைக் கொடுத்தாவது மதச்சார்பின்மையை நாம் கடைப்பிடித்திட வேண்டும். மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம்’ என்றார்.

‘குஜராத் – என்ன நடக்கிறது?’ என்ற தலைப்பில் பேசிய புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், ‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்கள் தான் செய்தனர் எனக் கூறி, 3000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையின முஸ்லிம்களைக் கொலை செய்துள்ளனர் இந்து மதவெறியர்கள். பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். கோடிக்கணக்கான மதிப்புடைய உடைமைகளைச் சேதப்படுத்தி உள்ளனர். கோத்ரா ரயில் எரிப்பு முஸ்லிம்கள் செய்ததல்ல. கரசேவர்கள் ரயில் நிலையத்தில் இருந்த ஒரு முஸ்லிம் இளம் பெண்ணைத் தூக்கிச் சென்றதுதான் அனைத்திற்கும் காரணம். இதனை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் ஈமெயில் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளனர். அதற்காக அவர்கள் மிரட்டப்பட்டனர். ரயில் எரிப்பு குறித்த தடய அறிவியல் துறை அறிக்கை ரயில் பெட்டி உள்ளிருந்து எரிக்கப்பட்டதாக கூறுகிறது. தற்போது ஒரு என்கவுன்டர் வழக்கில் குஜராத் முதல்வர் மோடி நள்ளிரவு வரை விசாரிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலையீடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலகான் குண்டு வெடிப்பில் கைது செய்யபாட்டுள்ள மதவெறியர்களுக்கு ஆதராவாக பேசும் மத்திய அரசு, ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறித்து பேச முடியாது எனக் கூறுவது இரட்டை அளவுகோல் ஆகும்’ என்றார்.

‘காவிமயமும் கோட்சேக்களும்’ என்ற தலைப்பில் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அருணன் ‘காந்தியைக் கொன்ற கோட்சே உள்ளிடவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. காந்தி கொலை வழக்கில் தங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், சாவர்கருக்கும் தொடர்பில்லை என்று கூறியவர்கள், தீர்ப்பு சொல்லப்பட்ட நேரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சாவர்க்கர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். “காவி புனிதமானது தான்” ஆனால், அந்த காவியை அணிந்தவர்கள் புனிதமானவர்களாக இல்லை. சங்கராச்சாரியாரை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு அலைந்துக் கொண்டிருக்கிறார். தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களுடைய அலுவலகத்திற்கே குண்டு வைத்துக் கொண்டு, அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடலாம் எனத் திட்டமிட்டனர். நல்ல வேளையாக அது கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைக்கு காவித் தீவிராவாதம் என்றவுடன் பதறுகிறார்கள். முஸ்லிம் தீவிரவாதம் எனக் கூறி ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்தியவர்கள், கலங்கப்படுத்தியவர்கள் இப்போது இந்த வார்த்தையைப் பார்த்து அச்சப்படுகிறார்கள். இந்த கருத்தரங்கம் நடக்கும் இந்த நேரம் மிகவும் முக்கியமானது. பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பாக நடந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் நேரம். மதச்சார்பின்மை பற்றி நாம் மத நம்பிக்கை உள்ளவர்களிடத்திலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்றார்.

‘இந்திய மதச்சார்பின்மையும், நமது கடமையும்’ என்ற தலைப்பில் நிறைவுரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் ‘நமது இந்திய அரசியல் சாசனம் எந்த மதத்தையும் கடைபிடிக்க, அதனை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி அழைக்க உரிமை வழங்கியுள்ளது. கங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினரையும் சமமாக கருதுகிறது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் மத, சாதி, இன அடையாளம் எதையும் பார்க்காத பொதுவான கட்சியாகும். இதனால் இந்த கட்சி இன்றைக்கும் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய கட்சியாக திகழ்கிறது. எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி இந்திய அரசியல் சட்டத்தில் ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை சேர்த்தார். எமர்ஜென்சி காலத்தில் நடந்த நல்லதுகளில் இதுவும் ஒன்று. சிறுபான்மை மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் அரணாக இருக்கும், இருக்கிறது. நீதிபதி ராஜேந்திர சச்சார், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் கமிஷன்கள் அமைத்து சிறுபான்மை மக்களின் நிலைக் குறித்து அறிந்து அவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ராஷ்ட்ரிய சுயம் சேவக் போன்ற அமைப்புகளை நாம் புறக்கணிக்க வேண்டும். அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு இடம் கொடுக்க கூடாது’ என்றார்.

நிறைவாக நன்றி கூறிய தோழமை இயக்குநர் தேவநேயன் ‘அனைவருக்கும் நன்றி கூறியதோடு, இந்த கருத்தரங்கில் அறிவுஜீவிகளை அழைப்பதைவிட களத்தில் இருந்து போராடுபவர்களை அழைத்துள்ளோம். அதுதான் இந்த கருத்தரங்கின் சிறப்பு’ என்றார்.

Friday, September 17, 2010

புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பெண் தற்கொலை: நீதி விசாரணை நடத்த கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 17.09.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பானுமதி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

 புதுச்சேரி ஞானப்பிரகாசம் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் விஜயகுமார் என்பவர் பெத்துச்செட்டிப்பேட்டையை சேர்ந்த மோகன்ராஜின் மகள் சுகன்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவே இருவரும் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதுகுறித்து நேற்று (16.09.2010) லாஸ்பேட்டை போலீசார் இருவீட்டாரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சமரசம் செய்துள்ளனர்.

அப்போது தன் மகன் விஜயகுமாரின் மீது கோபம் கொண்ட பானுமதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன் மகனைத் தாக்க முயன்றுள்ளார். அப்போது போலீசார் அவரை தடுத்துள்ளனர். அதன்பின்னர் அவர் அந்த கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டு காவல்நிலையத்திற்கு உள்ளேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை போலீசார் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவுடன் அவர் இறந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தைப் போலீசார் மூடிமறைக்கும் விதமாக பானுமதி காவல்நிலையத்திற்கு வெளியே சென்று தற்கொலை செய்துக் கொண்டதாக வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். எங்களது விசாரணையில் பானுமதி காவல்நிலையத்தில் தான் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது உறுதியாகிறது. சம்பவம் நடந்த பின்னர் உயர்அதிகாரிகளின் நேரடி ஆலோசனைப்படி காவல்நிலையத்தில் படிந்திருந்த ரத்தக் கறைகளைப் கழுவி போலீசார் தடயங்களை அழித்துள்ளனர். இதனைப் பொதுமக்களும், சம்பவத்தைக் கேள்விப்பட்டு அங்கு சென்ற சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும் பார்த்துள்ளனர்.

 காவல்நிலையத்தின் உள்ளே நடந்த சம்பவம் என்பதால் இது சந்தேகத்திற்கு இடமின்றி காவல்நிலைய மரணம் தான். உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் சுட்டிகாட்டியுள்ளது போல் காவல்நிலையத்திற்கு உள்ளே போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட பின்னால் எந்த சம்பவம் நடந்தாலும் அதற்குப் போலீசார்தான் முழுப் பொறுப்பு. ஆனால், பட்டப்பகலில் பலர் முன்னிலையில் நடந்த சம்பவத்தைப் போலீசார் மூடிமறைப்பது தவறிழைத்த போலீசாரை காப்பாற்றும் நோக்கம் கொண்டதாகும்.


 திருமணம் போன்ற பெண்கள் தொடர்புடைய விவாகரங்களை விசாரிக்க அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் இருக்கும்போது லாஸ்பேட்டை போலீசார் இந்த காதல் திருமணப் பிரச்சனையை விசாரித்ததே அடிப்படையில் தவறானது.

 நடந்த உண்மைச் சம்பவத்தை வெளியே சொல்லக் கூடாது என இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ள இறந்தவரின் குடும்பத்தினரையும், பெண் வீட்டுக் குடுமபத்தினரையும் போலீசார் மிரட்டுள்ளதாகவும் தெரிகிறது.         

எனவே, இதுகுறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 174-ன் படி சந்தேக மரணம் எனப் போடப்பட்டுள்ள வழக்கைப் பிரிவு 176 (1-A)-ன் படி காவல்நிலைய மரணம் என மாற்றி பதிவு செய்ய வேண்டும். மேலும், மேற்சொன்ன சட்டப் பிரிவில் கூறியுள்ளது போல் நீதித்துறை நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பிரேத பரிசோதனையை மருத்துவர்கள் அடங்கிய குழு மூலமும், வீடியோவில் பதிவுச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இதுகுறித்து, துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் (சட்டம்–ஒழுங்கு) உள்ளிட்டவர்களுக்கு விரிவான அறிக்கை ஒன்றை அனுப்ப உள்ளோம்.

Friday, September 03, 2010

கடலூர் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் குறவர் இன இளைஞர் அடித்துக் கொலை: போலீசாரை கைது செய்ய கோரிக்கை!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம். நிஜாமுதீன்,  தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் பெ. கிருஷ்ணமூர்த்தி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கடலூர் பொறுப்பாளர் இரா. பாபு, மக்கள் கண்காணிப்பகம் பொறுப்பாளர் ஆ. ஜெயராமன் ஆகியோர் 03.09.2010 அன்று கட்லூரில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் குறவர் வகுப்பைச் சேர்ந்த ரவி என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு, சம்பவத்தோடு தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவுச் செய்து, உடனடியாக அனைவரையும் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.

நடந்த சம்பவத்தின் சுருக்கம்:

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், தாண்டவன்குப்பம் கிராமத்தில் வசித்து வந்த குறவர் வகுப்பைச் சேர்ந்த ரவி (வயது: 38), த/பெ. கலியன் என்பவரை, கடந்த 16.08.2010 அன்று இரவு 1.00 மணியளவில், கடலூர் மாவட்ட போலீசார் சுமார் 7 பேர், அவரை அடித்து உதைத்து, ஒரு டாடா சுமோ காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த அவருடைய மனைவி கஸ்தூரி (வயது: 30) எதற்காக என் கணவரை இழுத்துச் செல்கிறீர்கள் எனக் போலீசாரிடம் கேட்டதற்கு அவரை தகாத வார்த்தைகள் கூறி மிரட்டியதோடு, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கலியையும், மேலும் பீரோவில் இருந்த நகைகள், பன்றி விற்று வைத்திருந்த ரூ. 40 ஆயிரத்தையும் திருடிச் சென்றுள்ளனர். போலீசார் அனைவரும் சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்துள்ளனர். மேலும், மேற்சொன்ன ரவியை எங்குக் கொண்டு செல்கிறோம் என்பதைப் பற்றிய தகவல் எதையும் போலீசார் தெரிவிக்கவில்லை.     

 இந்நிலையில், 17.08.2010 அன்று இரவு சுமார் 1.00 மணியளவில், தாண்டவன்குப்பத்தில் உள்ள ரவியின் வீட்டிற்கு சுமார் 7 போலீசார் சென்றுள்ளனர். அதில் ஒரு போலீஸ்காரர் தவிர அனைவரும் சீருடை இல்லாமல் இருந்துள்ளனர். அங்கு இருந்த ரவியின் மனைவி கஸ்தூரியிடம் உன் வீட்டுக்காரரை ஒப்படைக்க வேண்டும், இந்த தாளில் கையெழுத்துப் போடு என்று கேட்டு மிரட்டுயுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவரை தகாத வார்த்தைகள் கூறி முதுகில் குத்தியுள்ளனர். போலீசுக்குப் பயந்துக் கொண்டு கஸ்தூரி அந்த தாளில் கையெழுத்துப் போட்டுள்ளார். மேலும், அந்த போலீசார் கஸ்தூரியிடம் மறுநாள் காலை கடலூருக்கு வந்து அவரது கணவர் பாடியைப் பெற்றுக் கொள்ளவும் எனத் தெரிவித்துள்ளனர். பின்னர், கஸ்தூரி 19.08.2010 அன்று சென்னை சென்று தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத்தினர் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட ஆலோசனை செய்துவிட்டு கடலூர் திரும்பியுள்ளார். 

 20.08.2010 அன்று கடலூர் அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, தன் கணவரது உடல் ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்து முடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்வதற்கு முன்னர் தன் கணவரது உடலைப் பார்ப்பதற்குக்கூட போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர், அன்றைய தினம் மாலையே தனது கணவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பரிந்தல் என்ற கிராமத்தில் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

 இதனிடையே, 18.08.2010 அன்று மாலை 3.30 மணியளவில், சாத்திப்பட்டு கிராமத்தில் உள்ள முந்திரிதோப்பில் போலீஸ் காவலில் இருந்து மேற்சொன்ன ரவி தப்பி ஓடும் போது தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார் என காடாம்புலியூர் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்றை போலீசார் பதிவுச் செய்துள்ளனர். குற்ற எண். 351/10 குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 176 (1-A). பாதிக்கப்பட்ட ரவியின் மனைவி தன் கணவரைப் போலீசார் அடித்துக் கொலை செய்துவிட்டனர் எனப் புகார் அளித்துள்ளார். தற்போது பண்ரூட்டி நீதித்துறை நடுவர் எண். 2-ன் நீதிபதி ஈஸ்வரன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

எமது விசாரணையில் தெரிய வந்த உண்மைகள் / பார்வைகள்:

விழுப்புரம் மாவட்டம், திருநாவலூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விழுப்புரம் – கடலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தலைமையில் ஒரு போலீஸ் விசாரணைக் குழு ஒன்றை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மாசானமுத்து அமைத்துள்ளார். இக்குழுவில் கடலூர் மாவட்டத்தில் இருந்து பண்ரூட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் உள்ளிட்ட பல போலீசார் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவில் உள்ள மேற்சொன்ன போலீசார் தான் மேற்சொன்ன ரவியை அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்று நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்கிச் சித்த்ரவதைச் செய்துள்ளனர். சித்தரவதைத் தாங்க முடியாமல் மேற்சொன்ன ரவி காவல் நிலையத்திலேயே இறந்துப் போய் உள்ளார். மேலும், ரவியின் உடம்பில் பல் இடங்களில் காயம் இருந்துள்ளதை அவரது உறவினர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் பார்த்துள்ளனர்.

மேற்சொன்ன கொள்ளை சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ரவியின் தம்பி 1) கெடிலத்தைச் சேர்ந்த ரமேஷ் (32), த/பெ. கலியன், அவரது உறவினர்களான 2) சுந்தரமூர்த்தி (30), த/பெ. கலியபெருமாள், 3) வடக்கு இருப்பைச் சேர்ந்த ஜெயராமன் (35) த/பெ. முனுசாமி, 4) பாலா (25) த/பெ. முனுசாமி, 5) காட்டுக்கூடலூரைச் சேர்ந்த கொளஞ்சி (30) த/பெ. மாயவன், 6) நெய்வேலி 1-ஆம் பிளாக்கைச் சேர்ந்த விஜயக்குமார் (23), த/பெ. ராமலிங்கம், 7) ராமலிங்கம் (60) த/பெ. குப்பன், 8) புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த ஆனந்தஓளி (24) த/பெ. மாயவன் ஆகியோரையும் மேற்சொன்ன போலீசார் பிடித்துச் சென்று நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வைத்திருந்துள்ளனர். ரவியை போலீஸ் காவல் வைத்து அடித்துச் சித்தரவதைச் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்சொன்ன அனைவருமே நேரடியாக பார்த்துள்ளனர். இந்த காவல்நிலைய மரணத்திற்கு மேற்சொன்ன இவர்கள் அனைவருமே கண்ணுற்ற சாட்சிகள் ஆவர். தற்போது இந்த 8 பேர் மீதும் போலீசார் பொய் வழக்குப் போட்டு அனைவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

ரவியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய டி. கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 11 கட்டளைகளில் ஒன்றைக்கூட போலீசார் பின்பற்றவில்லை. 

மேற்சொன்னவற்றின் அடிப்படையில் பார்த்தால் பண்ரூட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம்  உள்ளிட்ட 10 போலீசார் தான் இந்த காவல் நிலைய கொலைக்குக் காரணமானவர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது.

குற்றமிழைத்த போலீசார் தங்கள் மீதான சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த 22.08.2010 அன்று இளவனாசூர் கோட்டையைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவி திலகவதியின் கணவர் சேனாதிபதி மூலம் போலீசார் பரிந்தலில் உள்ள கொல்லப்பட்ட ரவியின் அண்ணன் தண்டபாணியிடம் ரூ. 2 லட்சம் கொடுத்துவிடுகிறோம், இத்தோடு இந்த பிரச்சனையை விட்டுவிடுங்கள் எனக் கூறி பேரம் பேசியுள்ளனர். இதுகுறித்து, பண்ரூட்டி நீதித்துறை நடுவர் விசாரணையின் போது தண்டபாணி புகார் கூறியுள்ளார். 

அதோடு மட்டுமல்லாது, பண்ரூட்டி நீதித்துறை நடுவர் விசாரணையை சீர்குலைக்கும் வேலையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொல்லப்பட்ட ரவியின் மனைவி கஸ்தூரிக்கு பண்ரூட்டி நீதித்துறை நடுவரிடம் இருந்து 25.08.2010 அன்று மதியம் 3.00 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பாணை வந்துள்ளது. இந்நிலையில், 24.08.2010 அன்று இரவு காடாம்புலியூர் போலீசார் ஒருவர் மேற்சொன்ன கஸ்தூரியை தொலைபேசியில் அழைத்து பண்ரூட்டி நீதிமன்றத்திற்கு விடுமுறை. விசாரணை வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணைக்கு வர வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

அதேபோல், 28.08.2010 அன்று மேற்சொன்ன இளவனாசூர் கோட்டையை சேர்ந்த சேனாதிபதியுடன் இரண்டு போலீசார் பரிந்தலில் உள்ள ரவியின் அண்ணன் தண்டபாணியின் வீட்டிற்குச் சென்று ரூ. 2 லட்சம் தருவதாக மீண்டும் அவரிடம் பேரம் பேசியுள்ளனர்.

மேலும், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் இந்த வழக்கின் கண்ணுற்ற சாட்சிகளில் ஒருவரான கொல்லப்பட்ட ரவியின் தம்பி ரமேஷை போலீசார் சிறையில் மனு எதுவும் போடாமல் சட்டவிரோதமாக சந்தித்து, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது, நீதிபதி முன்பு சாட்சியம் அளிக்கக் கூடாது என  மிரட்டியுள்ளனர்.

ரவியை காவல்நிலையத்தில் அடித்து சித்தரவதை செய்துக் கொலை செய்த போலீசார் மீது எந்த ஒரு சிறு நடவடிக்கையும் இதுநாள் வரையில் எடுக்காததுதான் குற்றமிழைத்த போலீசார் இதுபோன்று சாட்சியங்களை அழிப்பதும், சாட்சிகளை மிரட்டுவதும் என தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்படுவதற்குக் காரணம்.  
      

எமது கோரிக்கைகள்:

1)    ரவியை அடித்துச் சித்தரவதை செய்து கொலை செய்த பண்ரூட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் உள்ளிட்ட 10 போலீசார் மீதும் கொலை வழக்குப் பதிவுச் செய்து கைது செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவுக்கு உடனடியாக மாற்ற வேண்டும். 

2)    குற்றமிழைத்த போலீசார் தங்கள் பதவியைப் பயன்படுத்தி சாட்சியங்களை அழிப்பதும், சாட்சிகளை மிரட்டுவதும் தடுக்கப்பட உடனடியாக மேற்சொன்ன போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் மீது துறை விசாரணைக்கு உத்தரவிட்டு அனைவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

3)    பாதிக்கப்பட்ட ரவியின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது பிள்ளகளின் படிப்புச் செலவை அரசு ஏற்க வேண்டும்.

4)    ரவி கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சிகள் அனைவருக்கும் உரிய பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். பொய் வழக்கில் சிறையில் உள்ள ரவியின் உறவினர்களான இந்த வழக்கின் கண்ணுற்ற சாட்சிகள் 8 பேர் மீதான வழக்கைத் திரும்ப்ப் பெற்று, அனைவரையும் உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும்.

5)    குற்றவாளிகளை அடையாளம் காணும் பொருட்டு சிறையிலிருக்கும் கண்ணுற்ற சாட்சிகளைக் கொண்டு உடனடியாக அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும்.

6)    திருட்டு வழக்குகளில் போலீசார் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இருளர், குறவர் போன்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக பாவித்து விசாரணைக்கு அழைத்துச் செல்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சமூகத்தையே குற்றவாளியாக கருதுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

7)    ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய டி. கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 11 கட்டளைகளைப் போலீசார் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளர் சந்திப்பின் போது, கொலை செய்யப்பட்ட ரவியின் மனைவி கஸ்தூரி மற்றும் அவரது நான்கு பிள்ளைகளும் உடன் இருந்தனர். 

Monday, August 23, 2010

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத் தீர்மானங்கள்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் 22.08.2010 ஞாயிறன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 1.00 மணி வரையில் வணிக அவையில் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் புதுச்சேரி நகரம் மற்றும் கிராம அளவில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு தலைவர் கோ. அ. ஜெகன்நாதன் கலந்துக் கொண்டார். 

கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1)     இந்திய அரசியல் சாசனத்திற்கும், மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பிற்கும் எதிராக உள்ள பிராந்திய இடஒதுக்கீட்டை முற்றிலுமாக ரத்து செய்ய புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், மாணவர்களையும், பொதுமக்களையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிவரும் என புதுச்சேரி அரசுக்கு எச்சரிக்கிறோம்.  

2)     புதுச்சேரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்று, இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கையை நடத்த புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3)     புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கும், மீனவர்களுக்கும் தலா 2 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துள்ள புதுச்சேரி அரசுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், முஸ்லிம்களும், மீனவர்களும் இந்த கல்வி ஆண்டிலேயே இடஒதுக்கீட்டின் பயனை அடையும் வகையில் உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.

4)     துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில் புதுச்சேரி அரசு துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், இத்திட்டத்தை எதிர்த்து அனுப்பப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த சிறப்புத் தணிக்கைக் குழுவின் விசாரணை அறிக்கையை உள்துறை அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தில் நடந்த ஏராளமான குறைபாடுகள், முறைகேடுகள், ஊழல்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

5)     புதுச்சேரியில் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு உரிய நிதி, அலுவலகம், பணியாள், நலத் திட்ட விண்ணப்பங்கள் உள்ளிட்ட அதிகாரங்கள் கேட்டு நீண்ட காலமாகப் போராடும் பஞ்சாயத்துத் தலைவர்களின் கோரிக்கையை தொடர்ந்துப் புறக்கணித்து வரும் புதுச்சேரி அரசைக் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரி அரசு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.   

6)     புதுச்சேரி கல்வித் துறை சார்பில் தேர்வுச் செய்யப்பட்ட ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தப்பட்டு ஊழல் நடந்துள்ளது பற்றி ஆதாரத்துடன் புகார் செய்தும், பல்வேறு கட்டப் போராட்டம் நடத்தியும் புதுச்சேரி அரசு இதுவரையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சுந்தரவடிவேலு உள்ளிட்ட அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரி அரசு இதுகுறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

7)     புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்படும் புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, புகார் கூறப்படும் அதிகாரிகளுக்கே அப்புகாரை அனுப்பி வைத்து கருத்து கேட்பது முற்றிலும் தவறான போக்காகும். எனவே, புதுச்சேரி மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட துணை நிலை ஆளுநர் தவறு செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஊழல், முறைகேடற்ற நிர்வாகத்தை உருவாக்க வேண்டும்.

8)     1989-ஆம் ஆண்டு முதல் மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டு வரும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாடு வரும் 2011 ஜனவரி மாதம் புதுச்சேரியில் நடத்தப்படும். இம்மாநாட்டில், அகில இந்திய அளவிலான மனித உரிமை ஆர்வலர்கள், முன்னாள் நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்துறை அறிஞர்களை அழைப்பது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

9)     மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயல்பாடுகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல “குரல்” என்ற பெயரில் ஒரு செய்தி மடலைத் தொடர்ந்து நடத்துவது எனக் இக்கூட்டம் முடிவுச் செய்கிறது.

10)    மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து ஆதரவுத் தந்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியத் தெரிவித்துக் கொள்கிறது. 

Thursday, October 22, 2009

மேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

மதுரை, மேலூர் அருகேயுள்ள மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த 30.06.1996 அன்று ஆதிக்கச் சாதி வெறியர்களால் பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டனர். தலித் ஒருவர் தங்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவராக வருவதா என்ற ஆதிக்க எண்ணத்தில் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றினர் ஆதிக்கச் சாதியினர். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர் போராட்டத்தின் விளைவாக குற்றவாளிகள் 17 பேருக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

இத்தீர்ப்பை எதிர்த்து, குற்றாவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம், என்.பால் வசந்தகுமார் ஆகியோர் கடந்த 19.04.2006 அன்று குற்றவாளிகளுக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டதையும் உறுதி செய்தனர்.

குற்றவாளிகள் இத்தீர்ப்பையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் வி.எஸ்.சிர்புக்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இவ்வழக்கில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கனகராஜ் ஆஜரானார். வழக்கு விசாரணை கடந்த 23.09.2009 அன்று முடிவு பெற்று தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வி.எஸ்.சிர்புக்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் 17 பேருக்கும் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமையில் அக்கறையுடைய அனைவர் மத்தியிலும் இந்த தீர்ப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதி வெறிக்கு இந்த தீர்ப்பு சம்மட்டி அடிக் கொடுத்துள்ளது.

தொடக்கம் முதல் இந்த வழக்கில் சட்ட ரீதியாகவும், தொடர் இயக்கம் மூலம் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிக் கிடைக்க போராடிய வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களையும், அவரோடு துணை நின்ற அனைவரையும் பாராட்ட வேண்டும். இந்த வழக்கில் அவருக்கு துணையாக இருந்து பங்களித்தமைக்கு நான் பெரிதும் மகிழ்கிறேன்.

இவ்வழக்கை வைத்து அரசியல் செய்த தலித் கட்சி, ஒரு கட்டத்தில் இவ்வழக்கு பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல் போன நிலையிலும், வழக்கறிஞர் பொ.இரத்தினம் போன்றவர்கள் விடாது போராடி நீதியை நிலை நிறுத்தியதை மனதார பாராட்டுகிறேன்.

Saturday, July 11, 2009

தொடரும் மரணங்கள் - பாதுகாப்பற்ற சிறை: கைதி எனும் மனிதனைப் பாதுகாப்போம்!

புதுச்சேரி மத்திய சிறையில் தொடரும் மரணங்களால் அங்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அண்மையில் நடந்த பழங்குடியின இளைஞர் மரணம் சாட்சியாக விளங்குகிறது.

திண்டிவனத்தைச் சேர்ந்த பழங்குடியின குறவர் வகுப்பைச் சேர்ந்த சரவணன் கடந்த 23-ந் தேதியன்று சந்தேக வழக்கில் ஒதியஞ்சாலை போலீசாரால் கைது செய்யப்பட்டு காலாபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு வலிப்பு நோய் வந்ததாக கூறி சிறைக் காவலர்கள் 25-ந் தேதியன்று காலை 8.30 மணிக்கு அவரை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அன்றைய தினம் இரவு 10.55 மணிக்கு சரவணன் இறந்து போனார்.

சரவணன் மரணம் சந்தேகத்திற்குரியது என்று அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் 27-ந் தேதியன்று மருத்துவமனை சவக் கிடங்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவுக்கு காரணமான சிறைத்துறையினர், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். இப்போராட்டத்திற்குப் பல்வேறு அமைப்புகள் ஆதரவுத் தெரிவித்தன.

சரவணன் மரணம் குறித்த சந்தேகங்கள், மர்மங்கள் குறித்து பார்ப்பதற்கு முன், கடந்த சில அண்டுகளாக சிறையில் நடந்த தற்கொலைகள், மரணங்கள் பற்றி குறிப்பிடுவது அவசியம். 3.5.2005: சிறைச்சாலை நகரத்தின் மையப் பகுதியான நேரு வீதியிலிருந்த போது வெளியிலிருந்து வீசப்பட்ட பாக்கெட்டில் இருந்த விஷச் சாராயத்தை அருந்திய கைதிகள் அலி, ஜெகன், பெரியய்யா அகியோர் மரணமடைந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து அப்போது எதிர்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் போராடின. சிறையில் இருந்த வேறு கைதிகளைக் கொல்ல நடந்த சதி என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையொட்டி அரசு உடனடியாக ஓய்வுப் பெற்ற மாவட்ட நீதிபதி வேணுகோபால் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தது.

இக்கமிஷன் அறிக்கை தாக்கல் செய்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. அறிக்கை சட்டமன்றத்தின் முன் விவாதத்திற்கு வைக்கப்பட்டு அதன்மீது நடவடிக்கை எதுவும் எடுக்க அரசு முயலவில்லை. குற்றவாளிகளைக் காப்பாற்றவே அரசு இவ்வழக்கை மூடிமறைத்துள்ளது. சிறையில் இறந்த கைதிகள் குடும்பத்தினருக்கு இதுவரையில் குறைந்தபட்ச நிவாரணம்கூட வழங்கப்படவில்லை.

புதுச்சேரி அரசு கண்துடைப்பிற்காக சிறைக்கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட சில சிறை வார்டர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது. ஆனால், ஒரு சில நாட்களிலேயே பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். இன்றைய நாள் வரை இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

4.5.2007: ராம்மூர்த்தி (வயது: 31), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவர், மனைவியை விவாகரத்து செய்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவின்படி மனைவிக்கு வழங்க வேண்டிய தொகை ரூ. 20 ஆயிரத்தை வழங்கததால் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஓரிரு தினங்களிலேயே சிறையின் இரண்டாவது மாடியில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த வழக்கு தற்கொலை வழக்காகப் பதியப்பட்டு முடிக்கப்பட்டது.

21.4.2008: 1999-இல் தன் அண்ணன் மனைவியான பார்வதி என்ற இளம் பெண்ணை பாலியியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி கொலை செய்த கமல் ஷா ஆயுள் தண்டனைப் பெற்று காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு மிகவும் பிரபலமான வழக்கு என்பதை அறிவோம்.

கைதி கமல் ஷா திடீரென ஸ்பூனால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார் என சிறைத் துறை கூறியது. ஆனால், இதை யாரும் நம்ப தயாராக இல்லை. கமல் ஷா கொல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதுவும் புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகேயுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது விட்டை அபகரிக்கும் நோக்கத்தோடு இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற பேச்சு அடிப்பட்டது. ஆனால், இந்த கோணத்தில் வழக்கை போலீசார் விசாரிக்கவில்லை.

6.6.2009: கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனைப் பெற்று காலாப்பட்டு புதிய சிறையில் இருந்த அரியாங்குப்பத்தைச் சேர்ந்த முருகன் (வயது: 31) உயர்நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்படும் என யாரோ சொன்னதை நம்பி, மனமுடைந்து சிறையிலுள்ள கண்காணிப்பு டவரில் ஏறி துண்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.

நேரு வீதியிலிருந்த பழைய சிறை போதிய இடவசதி இல்லாததால் இதுபோன்ற சம்பங்கள் நடக்கின்றன என்று அப்போதைய சிறைத் துறை ஐ.ஜி. வாசுதேவ ராவ் கூறியதை பொய்யாக்கியது இச்சம்பவம். இதிலும் இரண்டு வார்டர்களை தற்காலிக பணிநிக்கம் செய்ததோடு நடவடிக்கை முடிக்கப்பட்டது. வார்டர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு ஒரு அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது தனிக்கதை.

கைதிகள் கமல் ஷா முருகன், ஆகியோரின் மரணம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுப் பெற்ற மாவட்ட நீதிபதி வீரநாத் ராவ் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அரசு அமைத்தது. கமல் ஷா தற்கொலை பற்றிய விசாரணை அறிக்கை கடந்த 23.1.2009 அன்று தாக்கல் செய்யப்பட்டும், இதுவரையில் அதன்மீது நடவடிக்கை இல்லை.

இதெல்லாம், புதுச்சேரி சிறையில் கடந்த காலங்களில் நடந்த அவலங்களின் தொகுப்பு. மேலே குறிப்பிட்ட எந்த வழக்கிலும் இதுநாள் வரையில் சிறைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட கைதிகளின் குடும்பத்தினருக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

கடந்த கால நிலையே இதுவென்றால் அண்மையில் பழங்குடியின இளைஞர் மரணத்திற்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொதுமகளிடம் துளியும் இல்லை என்பதை அரசு உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சரவணனின் உடலைப் பார்த்த போது, அவரது காது, மூக்கு, வாய் வழியாக ரத்தம் கசிந்திருந்தது. உடல் எங்கும் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. ஒரு பல் உடைந்திருந்தது. இவற்றை எல்லாம் பார்க்கும் போது சரவணன் வலிப்பு வந்து இறந்த்தாக கூறுவது நம்பும்படி இல்லை. அவர் கடுமையான சித்தரவதையை அனுபவித்து இறந்ததாகவே கருத வேண்டியுள்ளது.

மேலும், அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா? ஒன்றுமில்லை. அவர் மீது ஒதியஞ்சாலை போலீசார் சந்தேக வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளனர். அவரைப் பார்க்கும் போது சந்தேகப்படும்படி இருந்ததால் இந்த வழக்குப் போட்டதாக போலீசார் கூறுகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே அவரது மரணம். மிகவும் வறுமை நிலையில் உள்ள பழங்குடியின குறவர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பார்ப்பதற்கு சந்தேகப்படும்படி இருக்கிறார் என்று போலீசார் சொல்வது அவர்களது சமூக பார்வையில் உள்ள குறைப்பாட்டையே காட்டுகிறது.

ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 11 கட்டளைகள் இவரைக் கைது செய்யும் போதும் பின்பற்றப்படவில்லை. கைது செய்த போது தகவல் தராத போலீசார் இறந்த போது வீடு தேடி வந்து தகவல் சொன்னதாக அவரது மனைவி தெரிவித்தார்.

இதுபோன்ற மரணங்கள் நிகழும் போது சிறைத் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை. இதனாலேயே இதுபோன்ற சம்பங்கள் தொடர்கின்றன. கைதி ஒருவர் சிறையில் இருப்பது என்பது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தான் என்பதால் அது ‘நீதிமன்ற காவல்’ ஆகும். அதாவது சிறைக் கைதிகளின் உயிருக்கு முழுப் பொறுப்பு நிதிமன்றமாகும். ஆனால், நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. இது தொடருமானால், மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதே நம்பிக்கை போய்விடும் ஆபத்துள்ளது.

தற்போது அமைந்துள்ள காலாப்பட்டு சிறை பல ஏக்கர் அளவுக் கொண்ட பெரிய சிறை. இதனை நிர்வகிக்க தற்போதைய ஊழியர் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போதைய ஊழியர் எண்ணிக்கையில் ஒரு சிறைத் துணைக் கண்காணிப்பாளர், இரண்டு உதவி சிறைக் கண்காணிப்பாளர், 10 வார்டர்கள் பதவிகள் நிரப்பபடாமல் உள்ளன. இதனால், கைதிகளை கண்காணிப்பதில் மிகுந்த சிரமம் இருப்பதாக கூறுகின்றனர் வார்டர்கள்.

‘குற்றத்தை வெறு குற்றவாளிகளை வெறுக்காதே’ என்று காந்தி கூறியதை இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்கோ, குற்றவாளிக்கோ இவ்வாறு அநீதி இழைக்கப்படும்போது அனைவரும் அமைதியாக இருப்பது மிகப் பெரும் மனித உரிமை மீறலுக்கு மறைமுகமாக துணைப் போவதாகும். மெளனத்தைக் கலைந்து, உயர்ந்து நிற்கும் மதில் சுவற்றுக்குள் இருக்கும் சிறைக் கம்பிகளுக்குள் அடைப்பட்டிருக்கும் ‘கைதி’ எனும் மனிதனுக்கும் எதிராக குரல் கொடுப்போம் வாருங்கள்.

1934-இல் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களால் தொடங்கப்பட்டு தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரிவினரால் நடத்தப்படும் "சுதந்தரம்" இதழில் வெளியானது.

Saturday, March 07, 2009

சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்முறை: நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கை (ஆங்கில வடிவம்)

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 19-ஆம் நாளன்று வழக்கறிஞர்கள் மீது தமிழகப் போலீசார் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சென்னை வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு விசாரணை மேற்கொண்டு கடந்த 4-ஆம் நாளன்று விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்திற்குத் தாக்கல் செய்தது. இந்நிலையில், மேற்சொன்ன வழக்கு விசாரணை 6-ஆம் நாளன்று விசாரணக்கு வந்தது. அப்போது, நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கை முழு விவரம் தெரிய வந்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையை வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக நிரகரித்துள்ளனர்.

நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கையைப் படிக்க கீழே கண்ட சுட்டியைச் சொடுக்கவும்.


நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கை (ஆங்கில வடிவம்).

Wednesday, January 16, 2008

ஜல்லிக்கட்டுக் காளைகள் மைதானத்திற்குள் நடந்துதான் வர வேண்டும் - உச்சநீதிமன்றம் நிபந்தனை


புகைப்படம்: கோ.சுகுமாரன்
(2007-இல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது எடுத்தப் படம்)


ஜல்லிக்கட்டுக் காளைகள் மைதானத்திற்குள் நடந்துதான் வர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்து உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் விழாவையொட்டி ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் வழக்கம். இதில் காளைகளைக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு கடந்த 11-01-2008 அன்று தடை விதித்தது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தடையை மீறி பல கிராமங்களில் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன. பல இடங்களில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடந்தன. அரசியல் கட்சிகள் ஜல்லிக்கட்டு நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தன.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 15-01-2008அன்று பொங்கல் விழா கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தடையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு 15-01-2008 அன்று தலைமை நீதிபதி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது 400 ஆண்டு காலமாக பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதற்குத் தடை விதிப்பதால் மக்களின் மத உணர்வைப் பாதிக்கும் என்று அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தடையை நீக்காவிட்டால் சட்டம்- ஒழுங்கு நிலைப் பாதிக்கப்படும். தடையை மீறி வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடத்த சில கிராமங்களில் மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என்று உளவுத்துறை தகவல் தெரிவித்து இருப்பதையும் தமிழக அரசு சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத உணர்வு பற்றிய பிரச்சினையை இழுத்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ஆர்.வி. ரவிந்திரன், ஜே.எம். பச்சால் ஆகியோரை கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் கூறுகையில், "11-ஆம் நாளன்று வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி (தடையை நீக்க) தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மத உணர்வை தமிழக அரசு இழுப்பது ஏன் என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இன்னொரு வழக்கில்
(சேது சமுத்திரத் திட்ட வழக்கு) அவர்களது (தமிழக அரசு) நிலை என்ன என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இன்னொரு வழக்கு என்ன என்பதை நாங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை'' என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளின் பேரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தீர்ப்பு கூறியது. அவை:

1) ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் நல்ல உடல் நிலையில் தான் உள்ளன என்று கால்நடைத்துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும்.

2) காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

3) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

4) காளைகளை ஓட ஓட துரத்தக் கூடாது. அவை மைதானத்துக்கு நடந்து தான் வர வேண்டும்.

5) காளைகள், பார்வையாளர்கள் காயமடைவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

6) ஜல்லிக்கட்டு நடத்துவோர் 3 நாட்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

7) விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டை மேற்பார்வையிட அனுமதிக்க வேண்டும்.

8) ஜல்லிக்கட்டு நடந்த பின் 2 வாரங்களில் ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டை எதிர்த்து வெளிநாட்டுப் பெண் போராட்டம்:

இதற்கிடையே இன்று (16-01-2008) கோவையில் வெளிநாட்டு பெண் ஒருவர் காந்தி சிலையின் கண்களை கறுப்பு துணியால் மூடியபடி ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கோரி முழக்கமிட்டுப் போராட்டம் நடத்தினார்.

'பீட்டா' விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டுப் பெண் காந்தி பூங்காவிற்குச் சென்று காந்தி சிலையின் கண்கள் மீது கறுப்புத் துணியைக் கட்டி விட்டு, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்குமாறு முழக்கமிட்டுச் சென்று விட்டார்.

இது குறித்து காலதாமதமாக கேள்விப்பட்ட போலீசார் அங்கு ஓடி வந்தனர். அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்குப் பலத்தப் போலீசு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tuesday, January 15, 2008

ஜல்லிக்கட்டுக்குத் தடை நீக்கம் - உச்சநீதிமன்றம் உத்தரவு


தமிழ்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கி இன்று (15-01-2008) உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்டு இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகக் கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி காளைகளை விரட்டுப் பிடிக்கும் ஜல்லிக்கட்டு பல காலமாக நடைபெற்று வருகிறது.

மிருக வதை எதிர்ப்புச் சங்கம் சார்பில் தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் 'விலங்குகளைத் துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது' எனக் கூறி கடந்த 11-01-2008 அன்று ஜல்லிக்கட்டிற்குத் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவாட்டம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு, பதட்டம் ஏற்பட்டது. அலங்காநல்லூர், பாலமேடு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடக்கும் என அறிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் மக்கள் ஜல்லிக்கட்டை நடத்தும் விதமாக தங்கள் காளைகளை அவிழ்த்து விட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இத்தடையை நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு உடனடியாக சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்நிலையில், முதல்வர் கருணாநிதி தடையை நீக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பொதுத்துறைச் செயலாளர் ஜோதிஜெகராஜன், உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட், மதுரை ஆட்சியர் ஜவகர், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தில்லிக்குச் சென்றனர்.

நேற்று (14-01-2008) விடுமுறை நாள் என்பதால், உச்சநீதிமன்ற பதிவாளர் நிராஜ் பரத்வாஜை அவரது இல்லத்தில் சந்தித்தனர். 'தமிழகம் முழுவதும் 15-ஆம் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மறுநாள் ஜல்லிக்கட்டு நடத்த பாலமேட்டிலும், அடுத்த நாளில் நடத்த அலங்காநல்லூரிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. விழாவுக்கு ஓரிரு நாளே இருப்பதால் மறுஆய்வு மனுவை உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும்' என்று பதிவாளரிடம் குழுவினர் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, மறு ஆய்வு மனுவை ஏற்றுக் கொண்ட பதிவாளர் அதனை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். இம்மனு மீதான விசாரணை 15-01-2008 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இம்மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இன்று நண்பகலில் தொடங்கிய இந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் கோபாலசுப்பிரமணியம் வாதிட்டார். அப்போது ஜல்லிக்கட்டு நடப்பதை தமிழக அரசு கண்காணிக்கும் என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.

இதனை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக கடந்த சில நாட்களாக நிலவிய பதற்றம் தணிந்தது. அலங்காநல்லூர், பாலமேடு கிராமம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.